ஏகாதசி உரைகளின் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் நண்பர்களின் அருமையான உழைப்பால் சிறப்பாக நடந்தேறியது.
வந்தேமாதரத்துடன் நிகழ்ச்சி தொடங்கிற்று. ஜடாயு அவர்கள் பாடினார். பின்னர் வித்யா மந்திர் குழந்தைகள் விநாயகரகவல் பாடினர். நான்கு குழந்தைகள் பார்க்காமலே பாடினர். ஆனந்தமாக இருந்தது.
பின்னர் ஜே.சி.குமரப்பாவின் நீடித்த பொருளாதாரம் குறித்து அறம் அறக்கட்டளையின் சிவக்குமார் பேசினார். மகாத்மா காந்தியை சந்தித்து குமரப்பா அடைந்த மாற்றத்திலிருந்து ஆரம்பித்து – நம் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு பார்வையைக் குறித்த அடிப்படை கேள்விகளுடன் அவரது உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது. அவருக்கு தாம் பேசியது சிறப்பான பேச்சாக இல்லையோ என்கிற ஐயம் இருந்தது. உண்மையில் தேவையற்ற ஐயம். அவரது உரை முழுக்க குமரப்பாவின் கோட்பாடுகளுடன் நிற்காது அந்த கோட்பாடுகளை திருப்பூரின் வரலாற்றுப்பாதையிலிருந்தும், இன்றைய தொழில்-பொருளாதாரச் சூழலிலிருந்தும், தம் சொந்த அனுபவங்களிலிருந்தும் இணைத்து பேசியமை ஒரு சராசரி உரையாக இல்லாமல் சாராம்சமும் இதயமும் இணைந்த சிறப்பானதோர் உரையாக அமைந்தது.
பின்னர் ஜடாயு அவர்கள் இக்கோட்பாட்டினை மின்னணு யுகத்தின் சவால்களுடன் பொருத்தி ஒரு காட்சியைக் காட்டினார். வருங்கால-வந்து கொண்டிருக்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் குமரப்பாவின் கோட்பாடுகளை இணைக்க வேண்டியதிலுள்ள சவால்களையும் தேவைகளையும் கோடிட்டுக் காட்டியது அவரது எதிர்வினை.






அதன் பின்னர் நான் பேசினேன். விநாயகர் அகவல் குறித்து. பேச வேண்டி நினைத்திருந்தவற்றை முழுமையாக பேசவில்லை. மேடை உரைகள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டது. எனவே எண்ணிய அனைத்தையும் பேசவில்லை. பக்தி யோக சாதனை ஆகிய இரண்டு பாதைகளும் எல்லை கிழித்து பிரித்துவிட முடியாதவை. என்ற போதிலும் திருமந்திரத்தில் யோக-தந்திர சாதனைகளில் உள்ள முக்கியத்துவமும் இதர திருமுறைகளில் பக்திக்கு உள்ள முக்கியத்துவமும் அவை இரண்டு முழுக்க வெவ்வேறான பாதைகள் என்பது போல காட்சி மயக்கமொன்றை ஏற்படுத்துகின்றன. விநாயகர் அகவல் இந்த மயக்கத்தை இல்லாமலாக்குவதுடன் இரண்டையும் ஆற்றலுடனும் அழகுடனும் இனிமையுடனும் இணைக்க முடியும் என்பதைக் காட்டி அதன் பின்னர் அருணகிரிநாதர், தாயுமானவர், பாரதி வரை ஏற்பட்ட இணைவு இனிமைக்கு பிள்ளையார் சுழியாகவும் மிகச்சிறந்த பூரணமாகவும் அமைந்துள்ளது. இதை மையப்படுத்தியே பேசினேன்.
அறம் அறக்கட்டளையின் நாராயணன் எப்போதும் இனிமையானவர்; ஹரி எப்போதும் நகைச்சுவை ததும்ப இருப்பவர். இருவருமே முகத்தில் காட்டும் இனிமையும் புன்முறுவலும் அவர்கள் செய்யும் வேலைகளின் பளுவை நம்மை அறியவிடாமல் செய்துவிடும். சிவக்குமார் கடுமையான சோதிக்கும் சூழலிலும் தமது பங்களிப்பை முழுமையாக நல்கினார்.
கொங்கு ராமகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், கவின், முகில் -இன்னும் விட்டுப்போன நண்பர்கள்– எல்லோரும் ஒவ்வொரு விஷயத்திலும் சிரத்தை எடுத்துக் கொண்டு உழைத்தார்கள். இவர்களெல்லாம் இளைஞர்கள் கடுமையாக எதிர்பார்ப்பின்றி சுயநலமின்றி உழைப்பவர்கள் வீ த லீடர்ஸ் அமைப்புக்கு மாறிவிட்டதாக அறிந்தேன்.
இயற்பியலிலும் கவிதையிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் வளரும் அருமையான ரோபாட்டிக்ஸ் வல்லுனர் அத்துடன் ஆழமான கவிஞர் கார்த்திக். முதன் முறையாக சந்தித்தேன். அற்புதமான கவிதைகளை எழுதுகிறார். பெரும் உயரங்களை அடைவார். அவரை சந்தித்தது அடுத்த தலைமுறையின் மீது மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியது.
முந்தைய நாள் வித்யா மந்திர் மாணவர்களுடன் கலந்துரையாடல் இருந்தது, பின்னர் ஞாயிறு காலையில் சில ஜென் z இளைஞர்களுடன் தொல்லியல் அறிஞர் ராமச்சந்திரன், ஜடாயு, ஓகை நடராஜன் ஆகியோர் கலந்துரையாடல் செய்தோம். கடவுள் நம்பிக்கை குறித்து பேச்சு வந்த போது மாணவி ஒருவர் ‘யங் ஷெல்டன்’ தொடரில் soft anthropic principle காட்டப்படும் தொடரை சுட்டி கடவுளின் இருப்பைக் குறித்து கூறினார். நெற்றி நிறைய திருநீறுடன் இருந்த அந்த மாணவி இதை சொன்னது பெருமிதமாகவே இருந்தது. மற்ற மாணவர்களில் ’முருகன் முப்பாட்டன்’ போன்ற கருத்தாக்கங்களின் செல்வாக்கை பார்க்க முடிந்தது. அதனை உரையாடலின் முடிவில் அவர்கள் மாற்றிக்கொண்ட போதிலும் செய்ய வேண்டிய பணி கோரி நிற்கும் கடும் உழைப்பும் அவசியமும் நாம் நினைப்பதை விட தீவிரமானது.
மறுநாள் சிவக்குமார் அவர் கண்டடைந்திருந்த ஒரு பழம் – பெரும் கற்கால மையம் ஒன்றை பார்வையிட ராமச்சந்திரன் அவர்களை அழைத்திருந்தார். திருப்பூரிலிலிருந்து அவினாசி தாண்டி ஒரு தனிமையான இடம். அனைவரும் அங்கே சென்றோம். கல் வட்டங்கள். அங்கே இருந்த பல சில்லுகள் கல்துண்டுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அலசி சிறுகுழந்தையின் உற்சாகத்துடன் ராமச்சந்திரன் இளைஞர்களை வழிப்படுத்தியது காண காண சந்தோஷமளிக்கும் காட்சி. அதே உற்சாகத்துடன் அங்கே ஓகை நடராஜனும் இயங்கிக் கொண்டிருந்தார். அந்த இளைஞர்களுக்கு செயல்முறை வகுப்பாகவே அந்த முழு காலையும் மதியமும் இருந்தன.
மூன்று நாட்களும் நண்பர்களுடன், இளைஞர்களுடன், நல்லோருடன் என மிகுந்த ஆனந்தத்துடன் கழிந்தன. அடுத்த ஆண்டின் ஏகாதசி உரைகளுக்காக இப்போதே காத்திருக்க வைத்தது திருப்பூர்காரர்களின் அன்பு.
இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
