ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்

தமிழாக்கம்: எஸ். ராமன்

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம். 

தொடர்ச்சி.. 

ஒரு நெருக்கடியின் பின்னணி  

1. நெருக்கடிக்கு முன் தெரிந்த அறிகுறிகள்

    (I, சருக்கங்கள் 19-77)

தசரதரின் அரசவைக்கு விஸ்வாமித்திரர் வருகை தந்த அன்றே இராவணனுடனான இராமரின் மோதல் மறைமுகமாகத் துவங்கிவிட்டது எனலாம். ஏற்கனவே பிரும்ம ரிஷியாக அறியப்பட்டிருந்த விஸ்வாமித்திரர், தான் செய்துகொண்டிருந்த யாகம் ஒன்றை முடிக்கும் தருவாயில் இருந்தார். ஆனால் அரக்கர்களும் தாடகையின் மகன்களுமான மாரீசனும், சுபாஹுவும் கண்ணுக்குத் தெரியாதபடி, மறைவில் இருந்து ஹோம குண்டத்தைத் தொடர்ந்து அசுத்தம் செய்துகொண்டே இருந்ததால் அவர் யாகத்தை முடிக்க முடியாது திண்டாடிக்கொண்டு இருந்தார். அவருடைய தவ வலிமையாலேயே விஸ்வாமித்திரர் அவர்களை ஒழித்துக்கட்டி, அந்த இடைஞ்சலையும் தவிர்த்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்தால் அதன் விளைவாகத் தன் தவ வலிமை குறைந்துவிடும் என்ற காரணத்தால் அந்த முயற்சியில் அவர் தானே இறங்கவில்லை. (ஒரு மனிதன் சாதாரண நிலையில் இருந்து தன் தவ வலிமையால் முனிவராகிப் பல சக்திகளைப் பெற்றிருக்கும்போது, கோபம் அடைந்தாலோ அல்லது சாபம் கொடுத்தாலோ அவரது சக்தி குறைந்து போய்விடும்.) அந்தக் காரணத்தால்தான் அவர் மற்றவர்களின் உதவியை நாடினார்.

rama_lakshmana_with_vishwamitraராமர் மஹாவிஷ்ணுவே என்று நன்கு அறிந்த விஸ்வாமித்திரர், அவரது உதவியால் தனது யாகம் தடையின்றி நடைபெறுவதற்காக தசரதரிடம் அனுமதி கோர வந்தார். தனது மகனின் தெய்வீகப் பின்னணியை அறியாத தசரதரும், மற்றெந்தப் பெற்றோர்களுக்கு வரும் அச்சம் போலவே, இளம் வயது இராமனால் எப்படி அரக்கர்களிடம் போரிட முடியும் என்று பயந்து, அந்த ஆபத்தான செயலைத் தவிர்க்க முயன்றார். அதனால் ராமனுக்குப் பதிலாகத் தானே தன் வீரர்களுடன் வந்து போரிடுவதாகச் சொன்னார். அதைக் கேட்டு ஏமாற்றம் அடைந்த விஸ்வாமித்திரர் அங்கிருந்து கிளம்பிப் போவதற்கு எத்தனித்தார். ஆனால் அதற்குள் வசிஷ்ட மகாமுனியின் தலையீட்டால் தசரதர் தயக்கத்துடனேயே விஸ்வாமித்திரரின் வேண்டுகோளுக்குச் சம்மதம் தெரிவித்தார். விஸ்வாமித்திரர் ராமனின் உதவியை மட்டுமே கேட்டிருந்தாலும், ராமனை விட்டுப் பிரியாத லக்ஷ்மணன் தானும் அவர்களுடன் வருவதாகச் சொன்னான்.

அயோத்தியில் இருந்து “சித்தாஸ்ரமம்” என்று பெயரிடப்பட்டிருந்த தனது ஆஸ்ரமத்திற்கு அவ்விரண்டு இளவரசர்களையும் விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்படிப் போகும் வழியிலேயே அவ்விருவருக்கும் அவர் பல்வகை ஆயுதங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டும்,  ஆயுதப் பயிற்சி கொடுத்துக்கொண்டும் சென்றார். அரக்கியான தாடகையால் சதாசர்வ காலமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த, மனிதர்களின் புழக்கமே இல்லாது போன ஒரு நிலத்தை அவர்கள் வந்தடைந்தார்கள். அப்போது வானில் திடீரென்று வெளிப்பட்ட தாடகையை விஸ்வாமித்திரர் கூறியபடி ராமர் மாய்த்தார். பின் சித்தாஸ்ரமம் வந்தடைந்த அவர்கள் இரவில் நன்கு ஒய்வு எடுத்துக்கொண்டனர். காலையில் ராம-லக்ஷ்மணர்கள் காவலுக்கு நிற்க, விஸ்வாமித்திரர் தனது யாக காரியங்களைத் தொடங்கினார். எப்போதும் போலவே மாரீசனும், சுபாஹுவும் அக்னிக் குண்டத்தில் மாமிசம், ரத்தம், மற்றும் கழிவுப் பொருட்களை வீச முயன்றனர். அப்போது ராமர் தொடுத்த அம்பினால் சுபாஹு அடிபட்டுச் சாக, மாரீசனுக்கு விழுந்த அடியோ அவனைத் தூக்கித் தூரத்தில் உள்ள கடலில் வீசியது. அப்போது மாரீசன் ஒரு மறக்க முடியாத தண்டனையுடன் மட்டும் உயிர் தப்பியதே தெய்வத்தின் திட்டம் போலத்தான் இருக்கிறது. ஏனென்றால், அவனது மனம் ஒப்பாவிட்டாலும், வரவிருக்கும் நிகழ்ச்சியான சீதையை அபகரிக்கும் ராவணனுடைய திட்டத்தில் அவனுக்கும் ஒரு பங்கு வரவிருக்கிறது.

இவை தவிர முனிவர் விசுவாமித்திரருடன் ராம-லக்ஷ்மணர்கள் இருந்த சமயம் அகல்யையின் சாப விமோசனம், ஜனகரின் அவையில் சிவ தனுசு முறிவு, தசரதரும் மற்றவர்களும் கலந்து கொள்ள மிதிலையில் நான்கு இளவரசர்களுக்கும் நடந்த திருமணங்கள், அதன்பின் அவர்கள் அனைவரும்  அயோத்திக்குத் திரும்புதல் என்ற வேறு பல நிகழ்வுகளும் நடந்தேறின. அப்படி அயோத்தி வரும் வழியில்தான் பரசுராமர் ராமருக்குச் சவால் விடுவதும், ராமரை மஹாவிஷ்ணுவே என்றறிந்தபின் அவரிடம் தணிந்து போவதும், அதன்பின் தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொள்வதும் என்பனவெல்லாம் நடக்கின்றன.

2. நெருக்கடி நிலையின் வளர்ச்சி

    (II, சருக்கங்கள் 1-119)

தனக்கு வயது கூடிக்கொண்டிருப்பதை திடீரென்று ஒருநாள் உணர்ந்து கவலை கொண்ட தசரதர், இராமரைத் தன் அரியணைக்கு அடுத்த வாரிசாக ஆக்கும் நோக்கத்தில் அவருடைய முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது பரத, சத்ருக்னர்கள் தங்கள் மாமனின் நாடான கேகயத்திற்குச் சென்றிருந்தனர். தசரதர் அவையில் குழுமியிருந்த சிற்றரசர்கள், வசிஷ்ட மகாமுனி, அமைச்சர் சுமந்திரர், மற்றும் பல முக்கியப் பிரமுகர்களைக் கலந்தாலோசித்தார். அனைவரும் தசரதரின் விழா ஏற்பாட்டினை ஆதரித்துப் பேசினார்கள். தடபுடலான ஏற்பாடுகள் அனைத்தும் உடனடியாகச் செய்யப்பட்டன. தசரதரும் ராமரிடம் தனது யோசனையைத் தெரிவித்தார். பரதனும், சத்ருக்னனும் ஊரில் இல்லாத போது தசரதர் ஏன் இப்படி அவசரப்படுகிறார்? பரத-சத்ருக்னர்களை வரவழைக்கவோ, அல்லது அவர்களுக்காகக் காத்திருக்கவோ அறிவில் சிறந்த வசிஷ்டரும், சுமந்திரரும் தசரதரிடம் ஏன் அறிவுறுத்தவில்லை?

ஒரு வீட்டில் ஒரு விசேஷம் நடக்கப்போகிறது என்றால் வீட்டில் உள்ள அனைவரையும் தவிர மற்ற உற்றார், உறவினர்களுடன் நண்பர்களும் அதற்கு இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் தலைவர் விரும்புவதுதான் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம். ராமனுக்குத் தசரதர் மனத்தில் ஒரு தனி இடம் உண்டு என்றாலும், நாட்கள் கழிந்துப் பிறந்ததால் அவருக்கு நான்கு மகன்கள் மீதுமே மிக்க வாஞ்சை உண்டு. அதேபோல மற்ற மூன்று சகோதர்களுக்கும் ராமர் பெருந்தன்மை கொண்டவர், அனைவர்க்கும் மூத்தவர் என்று மதிப்பும், மரியாதையும் அவர் மீது நிறையவே உண்டு. இவ்வளவு இருந்தும் அவசரம் அவசரமாக விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்ததென்றால் அதை நாம் ராமராக அவதரித்துள்ள இறைவனின் லீலையாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்க முடியும். அப்போதுதானே ஒரு நெருக்கடி உண்டாகி, தான் வனவாசம் சென்று, ராவணனை வதைப்பதற்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கமுடியும்.

பரதனும், சத்ருக்னனும் அன்று அயோத்தியில் இருந்திருந்தால், ராமர் அரியணை ஏறுவதற்கான விழாவில் தடைகள் எதுவும் வந்திருக்க முடியாது. கைகேயி உட்பட அனைவருமே அதனை வெகு விமரிசையாகக் கொண்டாடியிருப்பார்கள்; அதனால் ராமரும், சீதையும் அயோத்தியிலேயே சுகமாகத் தங்கியிருந்திருப்பார்கள். அதாவது ராமாவதாரத்தின் நோக்கமே பாழ்பட்டிருக்கும். அதனால் ராமராகிய இறைவன் வேறு மாதிரி அமையவே விருப்பம் கொண்டார் எனலாம். உலகில் ஒன்று நடக்கவேண்டும் என்று இறைவனால் விதிக்கப்பட்டிருந்தால் நாம் அனைவருமே அந்த இறைவனின் கைப்பாவைகளாக ஆகிவிடுவோம். பின்னர் வரும் நிகழ்ச்சியில் கைகேயி மேல் கோபம் கொண்ட லக்ஷ்மணனை சமாதானப்படுத்தும்போது ராமர், எவரும் எதிர்பார்க்காதபடி கைகேயி கேட்ட வரங்களின் பின்னால், இறைவனின் திருவிளையாடல் இருக்கிறது என்பார் ( II, 22, 15-30). அதே நியாயப்படி பார்த்தால் கைகேயியைத் தூண்டிவிட்ட மந்திரையையும் குறை சொல்ல முடியாது என்பதுதான் ராமரின் பார்வையாக இருக்க முடியும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் தசரதரின் ஏற்பாடுகளுக்குப் பின் தொடரும் நிகழ்ச்சிகளை சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த நிகழ்வுகளை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.

Dasaratha and kaikeyeeதடபுடலாக நடந்து கொண்டிருந்த பட்டாபிஷேக ஏற்பாடுகளின் விவரங்களை கைகேயியின் பணிப்பெண்ணான மந்திரை மற்றெவரையும் போலக் கவனிக்கிறாள். ஆனால் அதன் பிரம்மாண்ட அளவைக் கண்டதும் அவள் மனதில் பொறாமை உணர்வு பொங்கி எழவே, தனது எஜமானியான கைகேயிடம் அனைத்தையும் எடுத்துச் சொல்லி விழாவைத் தடுத்து நிறுத்துவதற்காகச் செல்கிறாள். கைகேயி தனது இயல்புப்படி குற்றமற்றவள்தான். பரதனை அவளுக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு ராமரையும் பிடிக்கும்; சொல்லப்போனால் சிறிது அதிகமாகவே கூடப் பிடிக்கும். அதே போல ராமருக்கும் தன் தாயான கௌசல்யாவிடம் எவ்வளவு மரியாதையும், மதிப்பும் உண்டோ அந்த அளவு கைகேயி மற்றும் சுமத்திரை மேலும் உண்டு. ஆனால் மற்றவரின் துர்போதனையைத் தவிர்க்கும் அளவிற்கு வேண்டிய மனவலிமை கைகேயிக்கு இல்லாதிருந்ததுதான் ஆபத்தாய் முடிந்தது. ஆரம்பத்தில் அவள் மந்திரையின் போதனைகளை மறுத்து ஒதுக்கினாலும், மந்திரை தூபம் போடப்போட அவளது தகாத வார்த்தைகளுக்கு கைகேயி அடிமையாகிவிட்டாள். மந்திரை அப்போது சாமர்த்தியமாக, முன்பொருமுறை தசரதர் அரக்கர்களுடன் போரிட்டபோது கைகேயி தைரியமாகத் தானே முன்னின்று அவரைக் காப்பாற்றிய சமயம், அவர் அவளுக்குக் கொடுத்த இரண்டு வரங்களை நினைவூட்டினாள்.

அப்போது அவர் கைகேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, எப்போது வேண்டுமானாலும் கைகேயி விரும்பியபடி இரண்டு கோரிக்கைகளை அவள் வைக்க, அவரும் அதை மறுக்காது நிறைவேற்ற வேண்டும். அதை மந்திரை எடுத்துச் சொல்லி, அதன்படி அவளுடைய மகன் பரதன் இளவரசனாக முடிசூட்டப்பட வேண்டும், (அதற்கு இடைஞ்சல் இல்லாதபடி இருக்க) பதினான்கு வருடங்களுக்கு ராமன் வனவாசம் செல்வதற்கு ஆணையிடப்பட வேண்டும் என்று கைகேயி தசரதரிடம் கேட்க வேண்டும் என்று அறிவுரை சொன்னாள். அதைக் கேட்டு மனம் மாறிய கைகேயி, விழா தொடர்பான ஆரவாரங்களில் பங்கு கொள்ளாமல் வருத்தம் தோய்ந்த முகத்துடன் ஓரிடம் ஒதுங்கி அமர்ந்துவிட்டாள். அவ்வாறு அவள் இருப்பதைப் பார்த்த தசரதர் அவளுக்கு என்னவாயிற்று என்று வினவினார். அதற்கு அவள் தனது இரண்டு கோரிக்கைகளையும் அவரிடம் கூறி, அதற்கு அவர் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கவே கோபம், வேதனை, மற்றும் துயரத்துடன் தசரதர் பித்துப் பிடித்தவர் போலானார். (கைகேயியைத் திருமணம் செய்துகொள்ளும் போது, அவர்களுக்குப் பிறக்கப்போகும் மகனே தனக்குப் பின் அரியணை ஏறுவான் என்று அவளுடைய தந்தையிடம் தசரதர் வாக்குக் கொடுத்ததாக பின்னர் ராமரே கூறுகிறார் – II, 107, 3).

தான் முன்பு கொடுத்த வாக்குகளாலேயே தனது கைகள் கட்டப்பட்டுக் கிடக்கும் தசரதரைப் பார்த்து நமக்கு இரக்கம்தான் வருகிறது. அந்த நிலையில் இடிந்துபோய் உட்கார்ந்திருந்த தசரதருக்குக் கைகொடுக்கும் வண்ணம், தன் சித்தி கைகேயியின் இரண்டு கோரிக்கைகளையும் தான் நிறைவேற்றுவதாக ராமர் சொல்கிறார். அந்தச் சமயத்தில் எந்த மனிதராலுமே எளிதில் இருக்க இயலாதபடி உள்ளும் புறமும் அமைதி தவழும் இன்முகத்துடன் இராமர் காணப்பட்டார். விதியின் வலிக்கு அவரே உள்ளானபோதும், தன் தந்தை, தாய் மட்டும் அல்லாது, அவருக்கு வரவிருக்கும் இன்னலைக் கேள்விப்பட்டு அதற்காக எவருடனும் சண்டை கூடப் போடத் தயாராக இருந்த, லக்ஷ்மணனையும் சமாதானப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார் ராமர். அதையும்விடக் கொடுமையானது என்னவென்றால் ராமரின் வனவாசத் துன்பத்தில் தனக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டு சீதை பிடிவாதமாக இருந்ததுதான். பிறவியில் இருந்தே ராமருடன் இணைபிரியாதிருந்த லக்ஷ்மணன் தானும் அவருடன் காட்டிற்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். இவ்வாறாக நாட்டில் உள்ள அனைவருக்கும் அங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாமல் இருந்துகொண்டிருக்க, விஷ்ணுவோ தன் அவதாரத் திருவிளையாடலின் அடுத்த கட்டத்திற்கு விரைந்து கொண்டிருந்தார்.

மக்கள் புடைசூழ சீதா, ராம-லக்ஷ்மணர்களை ஒரு ரதத்தில் ஏற்றி, கங்கை நதியின் வடக்குக் கரையில் இருந்த ஸ்ருங்கிவீரபுரத்திற்கு சுமந்திரர் அழைத்துக்கொண்டு போனார். அனைவரும் அன்றிரவு அங்கேயே தங்கினார்கள். மறுநாள் அதிகாலையில், மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போதே, சுமந்திரர் அயோத்திக்குத் திரும்பிவிட, ராம-லக்ஷ்மணர்கள் குகனின் படகில் ஏறி கங்கையின் மறுகரை சேர்ந்து பரத்வாஜ மகாமுனியின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். அன்று இரவு அங்கேயே தங்கிய அவர்கள் மறுநாள் காலை, முனிவரின் அனுமதியையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு. அங்கிருந்து தெற்காகச் சென்று தண்டகாரண்ய வனப்பகுதியில் பிரயாகை அருகில் இருந்ததாகச் சொல்லப்படும் சித்திரகூட மலைச்சாரலை சென்றடைந்தனர். (தக்ஷிணப் பகுதியின் வடக்கே நர்மதை ஆற்றில் தொடங்கி தெற்கே கிருஷ்ணா நதிவரை தண்டகாரண்ய வனம் பரந்து விரிந்து இருந்தது).

சீதா ராம-லக்ஷ்மணர்கள் வனப்பகுதிக்குள் புகுந்துவிட்டதை சுமந்திரர் தசரதரிடம் கூறியபோது, முன்பொருமுறை எவ்வாறு ஓர் அப்பாவிச் சிறுவனைத் தான் அறியாமல் கொன்றுவிட்ட பாவச் செயலினால், தானும் அவர்களைப் போலவே புத்திரர்களைக் காண இயலாத சோகத்திலேயே இறக்கவேண்டும் என்று வனத்தில் வாழும் அவனது கண்ணிழந்த அபலைப் பெற்றோர்கள் தனக்கு இட்ட சாபத்தைக் கூறினார். அதைக் கூறிய பின் அடக்க முடியாத துக்கத்தால் அவர் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும்போதே உயிர் துறந்தார். இளவரசர்களும் அங்கு இல்லாது, அரசனும் காலமானதால் அரியணையில் எவரும் இல்லாத நிலையில் பரத-சத்ருக்னர்கள் அயோத்திக்கு உடனே திரும்பி வருவதற்கு வசிஷ்டர் ஏற்பாடு செய்தார். அங்கு திரும்பிய பரதன் இறந்துபோன தந்தைக்கான ஈமக் கடன்களை முடித்துவிட்டு, அங்கு நடந்த தொடர் நிகழ்வுகளின் சோகத்தில் மூழ்கி அரியணை ஏற மறுத்தான். ராமரை எப்படியும் திருப்பி அழைத்து வருவதாகச் சூளுரைத்துவிட்டு, துயரமுற்ற மக்கள் பலரையும் அழைத்துக்கொண்டு பரதன் வனத்திற்குச் சென்றான். இவ்வாறான தனது மகன் பரதனின் உண்மை உணர்வைப் புரிந்துகொண்ட கைகேயியும் தனது இயல்பான நற்குணங்களைத் திரும்பப் பெற்றாள். அதனால் ராமரைத் திரும்ப அழைத்து வர பரதனுடன் சென்றுகொண்டிருந்த கௌசல்யை, சுமத்திரையுடன் கூட அவளும் தானாகவே சேர்ந்துகொண்டாள்.

rama_in_the_forest

அவ்வாறு பரதனுடன் சென்ற மக்கள் பரத்வாஜ முனிவரது ஆஸ்ரமத்தில் இரவு தங்கிவிட்டு, பின்பு சித்திரகூடத்திற்குச் சென்று ராமரைச் சந்தித்தார்கள். அயோத்தி திரும்பி வந்து அரசாள பரதன் ராமரை மன்றாடிக் கேட்டுக்கொண்டான். தந்தை கைகேயிக்குக் கொடுத்த வாக்கையும், அவர்களது திருமணத்திற்கு முன்பு அவளது தந்தைக்கு அவர் கொடுத்த வாக்கையும் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து, அயோத்தி திரும்ப வேண்டும் என்ற பரதனது கோரிக்கையை ராமர் நிராகரித்தார். இறுதியில் ராமரது பாதுகைகளைப் பரதன் பெற்றுக்கொண்டு, அதைச் சிம்மாசனத்தில் இருத்தி தான் ராமரது பிரதிநிதியாய் மட்டும் இருந்து, அயோத்திக்கு வெளியில் இருக்கும் நந்திகிராமத்தில் தங்கி, நாட்டை ஆள்வதற்கு ஒப்புக்கொண்டு காட்டில் இருந்து திரும்பினான். பரதன் உட்பட அனைவரும் சென்றபின் ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் மூவரும் தண்டகாரண்ய வனத்தின் உள்ளே அதன் அடர்ந்த பகுதிக்குச் சென்றார்கள்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *