ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்

தமிழாக்கம்: எஸ். ராமன்

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம். 

தொடர்ச்சி.. 

ராமரின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்ததும் அதற்கு வந்திருந்த அனைவரும் அவரவரது பணியிடத்திற்குத் திரும்பவே, ராம ராஜ்ய பரிபாலனம் துவங்கியது. மக்களின் வாழ்வாதார நிலைகளை அறிந்துகொள்ளவும், தனது ஆட்சியைப் பற்றி அவர்களின் கருத்தினைத் தெரிந்துகொள்ளவும் ராமர் தனது சேவகர்களை அதற்கான பணிகளில் ஈடுபடுத்தினார். அவ்வாறு செய்வது மக்களுக்கான நல்ல சேவை என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ராவணனுடைய பாதுகாப்பில் இருந்த சீதையை ராமர் திரும்பவும் அழைத்து  வந்ததைப் பற்றி ராமரிடம் மக்கள் குறை காண்பதாக ஒரு நாள் பணியை முடித்துத் திரும்பிய சேவகன் ராமரிடம் தயக்கத்தோடு கூறினான். அவன் கூறியதைப் பற்றி நன்கு சிந்தித்த ராமர் தனது முடிவு மிகுந்த வேதனை தருவதாக இருந்தாலும், அந்தச் சமயம் சீதை கருவுற்றிருந்தாள் என்றாலும் அவளைப் பிரிவதாகத் தீர்மானித்தார். சீதையைக் காட்டிற்கு அழைத்துச் சென்று தமஸா நதிக்கரையில் வால்மீகி முனிவரின் குடிலுக்கு அருகில் இறக்கிவிட்டு நாடு திரும்பி வருமாறு, கண்ணீரால் தன் கண்கள் குளமாக நிரம்பியிருந்த ராமர் லக்ஷ்மணனிடம் கட்டளை இடுகிறார். அதைக் கேட்ட லக்ஷ்மணனின் இதயம் சுக்குநூறாக வெடித்தது. ஆனாலும் ஆணையை நிறைவேற்ற அவன் தனது சக்தியை எல்லாம் திரட்ட வேண்டிய இக்கட்டில் இருந்தான். சுமந்திரர் தேரை ஓட்ட, முனிவர்களின் பத்தினிகளை சீதைக்குக் காட்டப்போவதாக ஒரு சப்பைக் காரணத்தைச் சொல்லிக்கொண்டு, லக்ஷ்மணன் அவளைக் காட்டிற்கு அழைத்துச் சென்றான். சேரவேண்டிய இடம் சேர்ந்ததும், கண்ணீர் பொங்க ராமரின் ஆணையைச் சொல்ல முடியாமல் சீதையிடம் சொல்லி, அவளை வலம் வந்து வணங்கி, மனம் சோர்ந்தவனாய்த் தேருக்குத் திரும்பி வந்தான்.

அயோத்தி திரும்பும் வழியில் லக்ஷ்மணன் அங்கு நடந்ததை சுமந்திரரிடம் சொல்லிப் புலம்பும்போது, துர்வாச முனிவர் தசரதரிடம் இவ்வாறு நடக்கப் போவதை வெகு காலம் முன்பாகவே சொன்னதாக சுமந்திரர் லக்ஷ்மணனிடம் கூறினார். அது மட்டும் அல்லாது ராமர் தன் சகோதரர்களையும் ஒரு கட்டத்தில் துறந்து, அயோத்தியின் ஆட்சிப் பொறுப்பைத் தன் மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸ்ரீ வைகுண்டம் திரும்புவார் என்றும் முனிவர் முன்கூட்டியே கூறியிருந்தார். காட்டில் இருந்து திரும்பிய லக்ஷ்மணன் அவரது ஆணை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ராமரிடம் கூற, தனக்கு எவ்வளவுதான் வேதனையாக இருக்கிறது என்றாலும் ஓர் அரசன் மக்களுக்கு வேண்டியதை அவசியம் செய்யவேண்டும் என்று ராமர் அவனிடம் கூறினார். அவர் சொன்னதன் உட்கருத்தை ஆழ்ந்து நோக்கினால் நடந்ததற்கு அவர் கொடுத்த நன்னிலை விளக்கம் மட்டுமல்ல அது என்பது புரியும்.

ராமரும், சீதையும் முறையே மகாவிஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மி தான் என்பதை நாம் மறக்கலாகாது. அவர்கள் அவதாரம் எடுத்து வந்ததன் நோக்கம் நிறைவேறியதும், அவர்கள் தங்களது முந்தைய இடத்திற்கும், தொழிலுக்கும் செல்லவேண்டும் என்பதுதான் நியதி. அவர்கள் அதை எப்படிச்  செய்யவேண்டும் என்று நினைப்பது அவர்களது விருப்பம். அவர்களது செயலை நியாயப்படுத்திப் பார்ப்பது நமக்கு ஒரு வேண்டாத வேலை. அவ்வாறான இறைவனின் வழிகளைப் புரிந்துகொள்வதும் நம்மால் இயலாத காரியம். அவை இறைவனின் லீலா வினோதங்கள் என்பதால் நமக்கு அவரிடம் பக்தி அதிகரிக்கவே செய்யும். அதனால் ராமர் சீதையைக் கைவிடுவதை நாம் அவர்கள் நம்மை விட்டுப்போகும் திட்டத்தின் முதல் காட்சியாகவே கருத வேண்டும். இந்தக் கருத்தை விளக்குவது போலவே இனி வரப்போகும் நிகழ்வுகளும் அமைந்திருக்கின்றன.

sita_with_lava_kushaசீதை காட்டிற்கு அனுப்பப்பட்டு வெகு நாட்கள் கடந்த பின் அவளுக்கு லவ-குசர்கள் பிறக்கின்றார்கள். அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில், வால்மீகி முனிவரால் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவதில் தேர்ச்சி பெறுகிறார்கள். அந்தச் சமயத்தில், சமூகத்தையே பாதிக்கும் அளவிற்கான பாவச்செயல்கள் நிகழ்ந்ததைக் குறிப்பது போல, சில அசம்பாவிதங்கள் அயோத்தியில் நிகழ்கின்றன. அவைகளின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கான பரிகாரமாக ராஜசூய யாகம் ஒன்றை நடத்துவதற்கு ராமர் தீர்மானிக்கிறார். அந்த யாகத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட வால்மீகி முனிவர், லவ-குசர்களை அரசவைக்கு அனுப்பி, அங்கிருந்தோர் முன்பாக, அவர்கள் ராமாயணத்தைப் பாடுவதற்கு ஏற்பாடு செய்கிறார். தினந்தோறும் பாடப்பட்ட அதை ராமர் மிகவும் மனமகிழ்ந்து, ரசித்துக் கேட்பார். ஒருநாள் லவ-குசர்கள் தனது புதல்வர்களே என்று அறிந்துகொண்ட ராமர், வால்மீகிக்குச் செய்தி அனுப்பி சீதையையும் அழைத்து வரச் சொல்கிறார்.

அங்கு சீதை அழைத்து வரப்பட்டதும், சீதை குற்றமற்றவள் என்பதைத் தான் நன்கு அறிந்திருந்தாலும், அங்கிருந்தோர் அனைவரும் அறியும் வண்ணம் சீதை அதை நிரூபிக்க வேண்டும் என்று ராமர் கூறுகிறார். ராமருடைய அந்த வேண்டுகோள் சீதைக்கு இன்னுமொரு முறை வேதனை தருவதாக அமைந்தது. மற்றவர்களுடைய குண விசேஷங்களைப் பற்றி எந்தவொரு அவதூறுப் பேச்சும் ஒரு பாவச்செயலே என்ற மக்களுக்கான நீதி ஒன்றே அவ்வாறு அவர் கூறியதில் இருந்தது. ஆனாலும் சீதைக்கோ தான் புறப்படும் வேளை வந்துவிட்டது என்று தெரிந்தது போல இருந்தது. ராமர் விடுத்த வேண்டுகோளுக்கு சீதையின் பதில் அவளுடைய மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. ராமர் கேட்டதற்கு நேரிடையான பதில்  சொல்லாமல், ராமருடன் தான் வாழ்நாள் முழுதும் கொண்டிருந்த அன்பில் எந்த மாசு, மருவும் இல்லை என்பதே உண்மை என்பதால் தன்னை ஈன்ற பூமாதேவியே தன்னை அவள் கரங்களில் தாங்கிக் கொள்ளட்டும் என்று சீதை பிரார்த்தனை செய்கிறாள். மூன்று வரிகளில் உள்ள அந்த சீதையின் வேண்டுதல் (VII, 97,15-17) ராமாயணத்திலேயே எவருடைய மனதையும் உருக்கி மிகுந்த இரக்கம் கொள்ள வைக்கக்கூடிய வரிகள்:

எவ்வாறு என் மனதில் ராமரைத் தவிர வேறெவரும் இல்லை என்பது உண்மையோ
அவ்வாறே மாதவி தேவி எனக்கு வழி கொடுத்து என்னை ஏற்கட்டும்.

எவ்வாறு என் சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும் நான் ராமரை வணங்குவது உண்மையோ
அவ்வாறே மாதவி தேவி எனக்கு வழி கொடுத்து என்னை ஏற்கட்டும்.

எவ்வாறு என் உள்ளார்ந்து நான் ராமரைத் தவிர வேறெவரையும் அறியாது இருப்பது உண்மையோ
அவ்வாறே மாதவி தேவி எனக்கு வழி கொடுத்து என்னை ஏற்கட்டும்.

தான் அவ்வாறு இருப்பது “உண்மை என்றால்” (if = யதி) என்பதில் வரக்கூடிய ஒரு சந்தேகத்திற்குக் கூட இடம் கொடுக்காது, தான் அவ்வாறு இருப்பது “உண்மை என்பதால்” (just as = யதா) என்ற நிச்சயத் தன்மையுடன் கூடிய தொனியே அதில் தெரிகிறது. இவ்வாறாக சீதை வேண்டுவதை வால்மீகி மிக அழகாக சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.

சீதையின் வேண்டுதலுடன் கூடிய கதறலைக் கேட்ட பூமாதேவி பூமியைப் பிளந்து வெளியே வந்து, அழகிய சிம்மாசனத்தில் தானும் அமர்ந்து, சீதையை ஏற்றுத் தன் மடியில் அமர்த்திகொண்டு மீண்டும் உள்ளே போக, பூமியின் பிளவும் மூடிக்கொள்கிறது. அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டு களித்த மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்து சீதையைப் போற்றுகின்றனர்.

சீதையைத் தாங்கிக் கொள்ளும் பூமாதேவி (ரவிவர்மா ஓவியம்)
சீதையைத் தாங்கிக் கொள்ளும் பூமாதேவி (ரவிவர்மா ஓவியம்)

சீதை அவ்வாறு பிரிந்து சென்றதும் ராமர் முதலில் கண் கலங்கி, கண்ணீர் விட்டு அழுதபின், அந்தப் பிரிவினையைத் தாங்கிக்கொள்ள முடியாததால் மிகுந்த கோபமும் கொள்கிறார். அங்கு பிளந்த பூமி மறுபடியும் சீதையைத் திருப்பிக்கொடுக்கவில்ல என்றால் பூமியையே அழித்து விடுவேன் என்றும் எச்சரிக்கிறார். அப்போது அனைத்துக் கடவுளர்களும், பிரம்மனுடன் சேர்ந்து வந்து ராமரிடம் அவர் மஹாவிஷ்ணுவின் அவதாரம்தான் என்ற உண்மையை நினைவில் கொள்ளச்சொல்லி வேண்டிக்கொண்டும், அவர் ஸ்ரீ வைகுண்டம் வந்து சேரும் வரை சீதை பூமாதேவியின் பாதுகாப்பில் இருந்து பின் அவரிடம் மஹாலக்ஷ்மியாகத் திரும்பி வருவாள் என்பதையும்  உறுதிப்படுத்தினார்கள். மேலும் அவ்வாறு நடக்கப்போவதை வால்மீகி தன் ஞானக் கண்ணால் கண்டு அதை உத்தர காண்டத்தில் ஏற்கனவே எழுதிவைத்துள்ளார் என்றும் பிரம்மன் அப்போது கூறுகிறார். அதை லவ-குசர்களுக்கும் எடுத்துச் சொல்வதற்கு வால்மீகியை பிரம்மன் கேட்டுக்கொண்டார் (VII, 98, 27).

துயரமான அச்சூழ்நிலையிலும் ராமர் தனது அரச கடமைகளில் கருத்தாக இருந்து, ஆயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்டு வந்தார். அவரது மூன்று தாய்மார்களும் தங்களது முதுமைக் காலத்தில் இறைவனடி சேர்ந்தார்கள். காலாகாலத்தில் பிரம்மன் மற்றும் தேவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட யமன் ஒரு துறவி வேடத்தில் வந்து ராமரிடம் தனியே உரையாட அனுமதி வேண்டுகிறான். அவனுக்கு உள்ளே வர அனுமதி கிடைத்ததும், வேறு யாரும் தங்களது உரையாடலில் குறுக்கிடக் கூடாது என்றும் அவன் வேண்டுகிறான். அப்போது யமன் தனது சுய உருவத்தை ராமரிடம் காட்டிவிட்டு, அவரது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதால் இனி அவர் தனது இடம் திரும்பும் சமயம் நெருங்கிவிட்டது என்று கூறுகிறான். ராமரும் அதை ஒத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் சமயம், ராமரைச் சந்திப்பதற்காக அங்கு துர்வாச முனிவர் வருகிறார்.

ஏற்கனவே உள்ளே இருப்பவர் தன் வேலையை முடித்துக்கொண்டு போகும் வரை காத்திருக்கும்படி லக்ஷ்மணன் துர்வாசரிடம் கேட்டுக்கொள்கிறான். அதைக் கேட்டதும் துர்வாசர் கோபம் கொண்டெழுந்து லக்ஷ்மணன், அவன் சகோதரர்கள் மற்றும் எல்லோரையும் சபித்துவிடுவதாக மிரட்டுகிறார். அப்போது எவரையும் உள்ளே விட்டால் அரசர் என்ற முறையில் ராமரது தண்டனைக்கு ஆளாகுவோம் என்று அறிந்திருந்தாலும், துர்வாசரது சாபத்திற்குப் பாத்திரம் ஆவதைவிட ராமரது தண்டனையே மேல் என்று நினைத்து லக்ஷ்மணன் அவரை உள்ளேபோக அனுமதிக்கிறான். துர்வாசர் உள்ளே வருவதைப் பார்த்ததும் யமன் அங்கிருந்து அவசரமாக வெளியேறிவிடுகிறான். பின் துர்வாசரும் அங்கிருந்து சென்றதும், லக்ஷ்மணனுக்கு சாவு என்பதே தண்டனை என்றறிந்த ராமர் மிகவும் வேதனைப்படுகிறார். அந்த இக்கட்டைச் சமாளிக்க இறப்புக்கு மாற்றாக நாடு கடத்தலாம் என்று வசிஷ்டர் கூறவே, லக்ஷ்மணனும் ராமரிடம் தனக்கு உண்டான பொறுப்பு முடித்துவிட்டது என்பதையும், தான் புறப்படவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையும் உணர்ந்து, எந்தச் சலனமும் இல்லாமல் தண்டனையை ஏற்கிறான். அதன்படி அவன் சரயு நதி நீருக்குள் புகவே, இறைவர்களும், தேவர்களும் மற்றெல்லோருமாக மலர் தூவி லக்ஷ்மணனை வரவேற்று மேலுலகிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

லக்ஷ்மணனின் புறப்பாட்டிற்குப் பின்னர் ராமரும் இப்பூவுலகை விட்டுப் புறப்படத் தீர்மானிக்கிறார். தனது ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்து லவ-குசர்களை ஆளுக்கு ஒன்றாக அரியணையில் அமர்த்துகிறார். அவர்களின் அரசாட்சிக்குத் துணையாக இருந்து உதவுமாறு சத்ருக்னனிடம் சொல்லிவிட்டு, பரதன் மேலும் மற்றவர்கள் உடனிருக்க ராமர் சரயு நதிப் பிரவாகத்தில் இறங்குகிறார். அவ்வாறு இறங்கியதும் மகாவிஷ்ணுவாகவே மாறி ஸ்ரீ வைகுண்டத்தை அடைகிறார்.

தான் புறப்படும் முன்பாக, இந்த உலகம் உள்ளளவும் (அதாவது பிரளயம் வரும் வரை) அனுமன் இருந்து அனைவருக்கும் ராமரை பக்தியுடன் துதிக்கும் வழியைப் போதிக்க வேண்டும் என்று அனுமனிடம் ராமர் சொல்லிவிட்டே போயிருக்கிறார். அதே போல கலியுகம் முடியும் வரை ஜாம்பவான் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் ராமர் சொல்கிறார். (பின் வரும் கிருஷ்ணாவதாரத்தில் ஜாம்பவானுக்கும் ஒரு பொறுப்பு வருகிறது.) பிரம்மன் முதற்கொண்டு மேலுலகவாசிகள் அனைவருமே இவ்வாறாக ராமர் வைகுண்டம் திரும்பியதை மனமார வரவேற்றனர்.

நூலை முடிக்கும் முன்பாக, ராமாயணத்தில் ஒரு சோக இழை ஓடுவதன் ஆன்மிக மகத்துவத்தை இப்போது நாம் அலசிப் பார்க்கலாம். உண்மையில் எல்லாவிதமான ரசங்களும் ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்றாலும், மற்றவைகளை விட சோக ரசம் முதன்மையாக இருக்கிறது. அதனாலேயே ராமாயணத்தின் இலக்கணத்தை ஆராய்ந்து உரை எழுதியவர்கள் அதில் கருணா ரசம் மிகுதியாகக் காணப்படுகிறது என்பார்கள். ஆனால் ராமாயணத்தை ஓர் இலக்கியக் கலைப் படைப்பாக மட்டுமே காண்பது சரியான பார்வையாக இருக்க முடியாது. அதை மோக்ஷத்தைத் தர உதவும் ஆன்மிகத்தைப் போதிக்கும் சமய நூலாகவே பார்க்கவேண்டும். அதில் பரவலாகக் காணப்படும் சோகத்திற்கு ஓர் ஆன்மிக முக்கியத்துவம் இருக்கிறது.

உலகியல் விஷயங்களுக்காக இறைவனை வேண்டுகின்ற வழியான “காமிய பக்தி” மூலம் ஒருவன் கேட்பது அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் கூட, அதற்கும் தூய உள்ளம் தேவை. உலகை ஒட்டிய விஷயங்களுக்கே அப்படி என்றால் உலக இன்பத்தைத் துறந்து, ஆன்மிக விஷயமான மோக்ஷத்தை நாடும் பக்தனுக்கு எத்தகைய அளவிற்குத் தூய உள்ளம் (சித்த சுத்தி) இருக்க வேண்டும் என்பதை நாம் ஊகித்து அறிந்து கொள்ளலாம். அத்தகைய உள்ளத்தை ஒருவன் பெறுவதற்கு அவனது வாழ்வில் சோகம் என்பது அவனுக்குத் துணை நின்று கை கொடுக்கிறது. வாழ்வில் மற்ற ரசங்களைக் காட்டிலும் சோக ரசமே ஒருவனை உய்விக்கத் துணை நிற்கிறது. நூலைப் படிக்கும் ஒவ்வொருவனையும், முதல் பக்கத்தில் இருந்து இறுதிப் பக்கம் வரை சோக ரசத்தில் தோய்த்தெடுத்து, ஒரு தூய பக்தனாக மாற்றும் வலிமை கொண்டது ராமாயணக் காவியம். மற்ற எல்லா அவதாரங்களைப் பற்றிய நூல்களை விட ராமரைப் பற்றிய இந்த நூல் அதனாலேயே ஒரு தனிப் பெரும் மகத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

எனது பின்னுரை:

தங்கத்தில் உள்ள மாசு, மருவை நீக்குவதற்கு அதை நெருப்பில் காய்ச்சிப் புடம் போடுவது போல, வாழ்வில் ஒருவன் அனுபவிக்கும் சோகமே அவனைப் புடம் போட்டு சொக்கத் தங்கமாக ஆக்கத் துணையாக இருக்கிறது என்பதை ராமாயணத்தைப் பற்றிய அலசலில் இருந்து நாம் அறிந்துகொண்டோம். சோகம் ஒன்றே மனிதனைச் சிந்திக்க வைக்கிறது. மற்ற ரசங்களினால் வருவதை நாம் உடனே அனுபவிக்கத் தொடங்கி விடுகிறோம் என்பதால் நமக்கு அதனால் அனுபவங்கள் கிடைக்கின்றன என்பது உண்மையே. ஆனாலும் அந்த அனுபவங்கள் கூட ஒரு கட்டத்தில் நம்மை சோகத்தில் கொண்டு சேர்க்கும் வாய்ப்பு நிறையவே உள்ளது. மற்ற ரசங்களில் பொதுவாகக் காணமுடியாது, சோகம் வரும்போது மட்டும் காணப்படும் “அது ஏன், எப்படி, எதனால் வந்தது?” என்ற ஆராய்ச்சிகளும், “அது தவிர்க்கக் கூடியதா அல்லது தவிர்க்க முடியாததா” என்ற கேள்விகளும் நம்முள் பிறக்கும். தவிர்க்க முடிந்தது என்றால் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாதது என்றால் இறைவனிடம் முறையிடுவது போன்ற செய்கைகளுக்கு, தொடக்கத்தில் தோன்றிய நமது சோகத்தைப் பற்றிய சிந்தனை கொண்டு செல்லும்.

ஆன்மிக சிந்தனை உள்ளவன் ஏற்கனவே சத்வ குணத்தை உடையவனாக இருக்கிறான். அவனது அனுபவங்களே அவனை நல்வழி நடத்திச் செல்லும். ரஜோ குணம் படைத்த, உலகியல் விவகாரங்களே முதன்மையாகக் கருதி அவைகளில் ஈடுபடும் ஒருவனுக்கு இவ்வுலக அனுபவங்களே அவனை ஒருநாள் சோகத்தில் கொண்டு சேர்த்து அவனை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். தமோ குணம் கொண்டு ஏதும் செய்யாது சோம்பித் திரியும் ஒருவனுக்கும் அடிப்படை வசதிகள் கூட கிட்டாத சோகமே அவனுக்கு ஒருநாள் பாடமாக வந்தமையும். இந்த மூன்று குணங்களையும் வெவ்வேறு கலவைகளில் கொண்டவனே ஒரு சாதாரண மனிதன். அவனுக்கு எந்த வகையிலாவது சோகம் வந்தே தீரும். அப்படிப்பட்டவன் உய்வதற்கு ராமாயணம் போன்ற நல்ல சமய நூல்கள் தவறாது கைகொடுக்கும். அவ்வளவு தன்மைகள் பொருந்திய ஒரு நூல் பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்டு, இன்றும் பலரால் படிக்கப்பட்டு, அதனால் வாழ்வை வளமாக்க உதவும் ஒரு கருவியாக இருக்கிறது என்பதே நமது பாரத தேசத்தின் பெருமைகளில் ஒன்று.

நன்றியுரை:

இந்த நூலைத் தமிழாக்கம் செய்வதற்கான உரிமையை பேராசிரியர் வீழிநாதனிடம் கேட்க அவர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அவர் அன்று ஊரில் இல்லாததால், அவருடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கு அவர் இல்லத்தினர் ஏற்பாடு செய்தார்கள். நான் என் விருப்பத்தைச் சொன்னதுமே அவர் மிகவும் மகிழ்ந்து “இதற்கு உரிமையா? அதைத் தர எனக்கு ஆணை இடுங்கள்” என்று மிகவும் பெருந்தன்மையுடன் கூறினார். மேலும் அவர் அப்போது சொன்னது: “ஸ்ரீ ராமபிரானைப் பற்றிப் பேராசிரியர் ராமச்சந்திரன் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்கிறேன் என்று ராமன் ஆகிய நீங்கள் கேட்கிறீர்கள். நான் இப்போதுதான் ராம நாம ஜெபம் முடித்தேன்; சொல்லிவைத்தது போல என் தொலைபேசி மணியும் அடித்தது. அவன் அருளால் எல்லாம் நன்றாகவே நடக்கும்” என்று வாழ்த்தினார். பேராசிரியர் வீழிநாதனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஸ்ரீ ராமபிரானைப் பற்றிய எனது முதல் தமிழாக்கத்தின் முதல் பகுதி தமிழ்ஹிந்து இணைய தளத்தில் வெளியிடப்பட்டதும் ஒரு ராம நவமி அன்றுதான் (1.4.2012). அதனுடைய புத்தக வடிவின் அட்டைப் படம் வடிவமைக்கப்பட்டு எனக்குக் கிடைத்தது மறு வருடம் ராம நவமி சமயம் (21.4.2013) அன்றுதான். இந்தத் தொடரின் இறுதிப் பகுதியை இன்று எழுதி முடிக்கிறேன் – நேற்றுதான் ராம நவமி (9.4.2014) நன்னாள். பேராசிரியரின் வாழ்த்துக்கள் என்றும் நின்று நிலைக்கட்டும்.

(முற்றும்)

2 Replies to “ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)”

 1. மதிப்பிற்குரிய ஸ்ரீ ராமன்
  மிகவும் உருக்கமாக உத்தரகாண்டம் விவரிக்கப்பட்டுள்ளது. ராமபிரானின் வைகுண்டாரோஹணமும் அதற்கு முந்தைய நிகழ்வுகளும் சொல்லொணா சோகரசம் ததும்பும் நிகழ்வுகள். இங்கு காணப்படும் சோகரசம் என்ற காவ்ய லக்ஷணம் சார்ந்த விவரணைகள் …………சாரமான விஷயம் தான்………… என்றாலும் சாரோத்தமமான விஷயமான…………….. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்………… மோக்ஷோபாயமான க்ரந்தம் என்பதனைப் பகிர்ந்தமை இந்த வ்யாசத் தொடரை அருமையாக நிறைவு செய்கிறது.

  தங்களுடைய முயற்சி திருவினையானதற்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  நாம கீர்த்தனம் பரந்து நாடெலாம் செழிக்கவும்
  வேறிலாத அன்பு பொங்கி வீடெலாம் விளங்கவும்
  ஞான தீபம் ஏற்றி எங்கும் நாம கீதம் பாடுவோம்
  தர்ம சக்தி வாழ்க என்று சந்ததம் கொண்டாடுவோம்.

  ஸ்ரீ ராமஜெயம்.

 2. வணக்கம், அமர காவியமான ராமாயணத்தில் வரும் கருத்துக்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் வாழ்வின் வழிகாட்டிகள்.

  1. கல்வி

  2. புகழ்

  3. வலி

  4. வெற்றி

  5. நன் மக்கள்

  6. பொன்

  7. தானியங்கள்

  8. நல்லூழ்

  9. நுகர்ச்சி

  10. அறிவு

  11. அழகு

  12. பொறுமை

  13. இளமை

  14. துணிவு

  15. நோயின்மை

  16. வாழ்நாள்

  இவை அனைத்தும் வெளிபடுத்தும் இதிகாசம் “இராமாயணம்”.
  ஒரு முறை கேட்டாலோ, பார்த்தாலோ மற்றும் பாராயணம் செய்தாலோ, மனிதனிக்கு தேவையான ஆறு அறிவும் கிடைத்துவிடும்.

  பி. பிரகாசம்
  சமுக ஆர்வலர்
  9943723800,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *