ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்

தமிழாக்கம்: எஸ். ராமன்

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம். 

தொடர்ச்சி.. 

3. நெருக்கடியின் உச்சக்கட்டம்

    (III, சருக்கங்கள் 1-66)

அயோத்தியில் இருந்து வரக்கூடிய மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவே சித்திரக்கூடத்தில் இருந்து ராமர் கிளம்பினார் என்று வெளியுலகத்திற்குச் சொல்லப்பட்டாலும், ராவணனை அழிக்கும் திட்டத்தைத் தொடர வேண்டும் என்பதே உண்மைக் காரணம் என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சிறிது சிறிதாக தெற்கு நோக்கியே போய்க்கொண்டு இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக நடந்த நிகழ்வுகளும் ராமரின் பயணங்கள் அவ்வாறு தொடர்ந்ததற்குக் காரணமாக அமைந்தன.

சித்திரக்கூடத்தில் ராமர் இருந்தபோது, அரக்கர்களின் கொட்டம் தாங்காமல் அங்குள்ள ரிஷிகள் அந்த இடத்தை விட்டு வேறிடத்திற்குப் போய்க்கொண்டிருந்தனர். அதைக் கவனித்து அறிந்த ராமர் அவர்களது பாதுகாப்பிற்காக அந்த அரக்கர்களை வதைப்பதற்கு முடிவு செய்தார். நமக்கு எந்தத் தொந்திரவும் கொடுக்காத அரக்கர்களை நாம் ஏன் அழிக்க வேண்டும் என்று சீதை ராமரை அப்போது கேட்டாள். முனிவர்களைக் காப்பது அரச குலத்தில் வந்துள்ள தன் கடமை என்றே அதற்கு ராமர் பதில் சொன்னார். அவ்வாறு அவர் ஆற்றிய கடமைகள் அவரைத் தெற்கே உள்ள பஞ்சாபசர ஏரி எல்லைக்குக் கொண்டு சென்றது. அதனால் சீதையும், லக்ஷ்மணனும் அவருடன் அங்கு சென்றார்கள். அந்தப் பயணத்தில் ராமரது தரிசனத்திற்காகவே காத்திருந்த பல ரிஷிகளைக் கண்டு அவர்களுக்கு மோக்ஷமும் அருளினார். அப்போது ராம-லக்ஷ்மணர்கள் அகஸ்திய முனிவரைத் தரிசித்ததும் அல்லாமல், அவரிடம் இருந்து பல தெய்வீகச் சக்தி மிகுந்த ஆயுதங்களும் கிடைக்கப் பெற்றார்கள்.

rama1அகஸ்திய முனிவரின் அறிவுரைப்படியே அவர்கள் தண்டகாரண்ய வனத்திற்கு மேலும் தெற்கில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடிக்குக் குடிபெயர்ந்தனர். லக்ஷ்மணன் எழுப்பிய நல்லதொரு குடிலில் வசித்த அவர்கள் அங்கு நீண்ட காலம் தங்கியிருந்தார்கள். பஞ்சவடிக்குப் போய்த் தங்குவதற்கு அறிவுரை கொடுத்த அகஸ்தியர், அந்த இடத்தில் நடக்கும் அரக்கர்களின் கொட்டத்தைப் பற்றி அப்போதே அவர்களுக்குச் சொல்லி எச்சரித்திருந்தார். அங்கு ராமரைத் தரிசித்த ஜடாயுவும் அதேபோல எச்சரிக்கை செய்திருந்தார். காரனும், தூஷணனும் வசித்த ஜனஸ்தான வனப்பகுதி அதே காட்டில் பஞ்சவடியில் இருந்து வெகு தொலைவில் இல்லை. அந்தத் தகவல்களை எல்லாம் ராமர் விரும்பி வரவேற்றது போலத்தான் தெரிந்தது.

பஞ்சவடியில் அவர்கள் இருந்தபோதுதான் காரன், மற்றும் தூஷணனின் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டிருந்த ராவணனின் தங்கையான சூர்ப்பனகை ராம-லக்ஷ்மணர்களைப் பார்க்க நேர்ந்தது. ராமருடைய அழகால் ஈர்க்கப்பட்ட சூர்ப்பனகை அவரை மயக்கிக் கவரப் பார்க்கிறாள். அவளது ஆசைக்குச் சீதை ஓர் இடையூறாக இருப்பதைப் பார்த்துவிட்டு சீதையைக் கொல்வதற்குப் பாய்கிறாள். அதைத் தடுக்கக் குறுக்கிடும் லக்ஷ்மணன் சூர்ப்பனகையின் மூக்கையும், காதையும் அறுத்து அவளை மூளியாக்குகிறான். அவள் உடனே காரனின் துணையை நாடுகிறாள். அவனும் தனது பதினான்காயிரம் வீரர்கள் கொண்ட பெருஞ்சேனையுடன் ராமரோடு போரிடச் செல்கிறான். ஆனால் ராமரோ தனியாளாக நின்று காரனையும், அவனது சேனையையும் நிர்மூலமாக்குகிறார். அதைக்கண்ட சூர்ப்பனகை ராவணனிடம் தங்களுக்கு நேர்ந்ததைச் சொல்லி முறையிடும்போது, அவனுக்குப் பெண்கள் மேல் இருக்கும் காமத்தைத் தூண்டும் வகையில், சீதையின் அழகைப் பற்றி விவரமாகச் சொல்கிறாள்.

அதில் மயங்கிய ராவணன் சீதையை அபகரிக்கத் திட்டமிடுகிறான். அவன் மாரீசனை ஓர் அழகிய தங்க மானாக உருவெடுத்து, அதனால் சீதையை மயக்கி, அவள் கேட்பதால் மானைப் பிடிக்க வரும் ராமனை அலைக்கழித்து, வெகுதூரம் இழுத்துப்போகச் சொல்கிறான். ஏற்கனவே ராமரிடம் அடிவாங்கி அனுபவப்பட்ட மாரீசன், அதை விவரித்து ராவணனது எண்ணத்தைக் கைவிடச் சொல்கிறான். அதைக் கேட்கப் பிடிக்காத ராவணன் அவனைக் கொன்று விடுவதாக மிரட்டவே, தான் ராமரின் கையால் சாவதையே மாரீசன் விரும்புகிறான். தெய்வ சங்கல்பத்திற்கு ஏற்ப ராவணனது திட்டம் சரியாக நிறைவேறுகிறது. அவர்கள் தங்கிய குடிலில் இருந்து வெகு தொலைவிற்கு ராமரும், லக்ஷ்மணனும் மாரீசனால் இழுத்துச் செல்லப்படவே, முதலில் ஒரு சந்நியாசி போலத் தோன்றி வந்தாலும், பின்பு தன் சுய உருவத்தைக் காட்டிய ராவணன் சீதையின் கூந்தலைப் பிடித்து இழுத்து அவளை அபகரித்துச் சென்றுவிடுகிறான்.

முன்பு ராவணனுக்கு வேதவதி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கி விட்டது என்பது அப்போது உறுதியாயிற்று. சீதையுடன் ராவணன் பறந்து போகும் வழியில் ஜடாயு அவனை எதிர்க்கவே, ராவணனால் பலமாகத் தாக்கப்பட்ட ஜடாயு குற்றுயிரும், குலையுயிருமாகக் கீழே சாய்கிறார். மேலும் பறந்து போகும் போது கீழே ஒரு மலையுச்சியில் ஐந்து வானரங்களைப் பார்த்த சீதை, ராமரிடம் அவை சேரும் என்று எண்ணி, தனது அணிகலன்கள் பலவற்றை அவர்களை நோக்கி வீசி எறிகிறாள். இலங்கையை அடைந்த ராவணன், அரக்கிகள் காவல் காத்து நிற்கும் நந்தவனம் ஒன்றில் சீதையை சிறை வைக்கிறான்.

சீதை தனியே விடப்பட்டிருந்ததால், மாய மானை உயிருடன் பிடிக்க முடியாத ராம-லக்ஷ்மணர்கள் இருவரும் அவசரமாகக் குடிலுக்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சீதையை அங்கே காணாததால் எப்போதுமே அனுபவித்திராத துயரத்தில் மூழ்கினார்கள். சீதைக்கு என்ன ஆகியிருக்கும் என்று தெரியாததால் அவர்கள் அவளை நாலாபுறமும் அலைந்து தேடினார்கள். அப்போது ராமர் அடைந்த கவலையும், வருத்தமும் அவரை இயற்கையின் மேலேயே மிகுந்த கோபம் கொள்ளச் செய்ய, அவரை லக்ஷ்மணன் ஆசுவாசப்படுத்தி, நல்வார்த்தைகள் கூறி அமைதிகொள்ளச் செய்கிறான். போகும் வழியில் காணப்படும் மலைக் குன்றுகளையும், நதி ஓடைகளையும் “சீதை எங்கே? எங்கே?” என்று ராமர் கேட்டுக்கொண்டே போக, அவைகளுக்கு ராவணன் மேல் இருந்த அச்சத்தால் அவை எல்லாமே மௌனம் சாதித்தன. அவ்வாறு அவர் மான்களின் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவே அவை யாவும் ராமருக்கு உதவி செய்வது போல, எல்லாமே வானத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துக்கொண்டே, தெற்கு நோக்கிப் பாய்ந்தோடின. அதிலிருந்து சீதை வான் வழியே, தென்திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் என்று லக்ஷ்மணன் புரிந்துகொண்டான். அதனால் அவர்கள் இருவரும் தென்திசை நோக்கிச் சென்று சீதையைத் தேடுவது என்று முடிவு செய்தார்கள்.

நெருக்கடி நிலையின் முடிவு

சீதையின் அபகரிப்போடு ராமாயண நிகழ்வுகளில் உள்ள நெருக்கடி நிலைமை ஓர் உச்சக்கட்டம் அடைகிறது. அந்த நிலை துயரத்துடன் கூடிய ஓர் எதிர்பார்ப்போடு சிறிது காலத்திற்குத் தொடர்கிறது. அதன் பின் சீதையைத் தேடும் படலத்தில் ஒரு விறுவிறுப்பு காணப்பட்டு, அந்த நிலை அவளைக் கண்டடைவதில் வந்து முடிகிறது. அதன் தொடராக ராவணனின் சாவில் முடியும் போர் மூள்வதும், அதன் விளைவாகச் சீதை மீட்கப்படுவதும், இறுதியில் ராமருடன் அனைவரும் அயோத்தி திரும்புவதுமாக நிகழ்வுகள் வரிசையாக நடக்கின்றன. அதாவது ஆரண்ய காண்டம் முடிவுறும் சமயம் தொடங்கிய நெருக்கடி நிலை, கிஷ்கிந்தா மற்றும் சுந்தர காண்டங்களில் வளர்ந்து, யுத்த காண்டத்தில் முடிகிறது.

1. சீதையைத் தேடும் படலம்

     (III, சருக்கங்கள் 67-75; IV, சருக்கங்கள் 1-67)

rama-lakshmana-jatayu-thailand

ராமரும், லக்ஷ்மணனும் சீதையைத் தேடிக்கொண்டு இருக்கும்போது ஜடாயுவைச் சந்திக்கின்றனர். அப்போது ஜடாயுவின் காயங்கள் ஆழமாக இருந்து உடல்நிலை மிக மோசமாக இருந்தாலும், ராமரிடம் சீதையைப் பற்றித் தகவல் சொல்வதற்கென்றே அவரது உடலில் உயிர் தங்கியிருந்தது. ராவணன் செய்த அனைத்தையும் ஜடாயு ராமருக்குச் சொன்னார். ராமர் அவரை நெஞ்சுருக ஆரத்தழுவிய பின்னரே ஜடாயுவின் உயிர் பிரிந்தது. இறுதி மரியாதைகளுடன் ஜடாயுவின் பூதவுடலை ராம-லக்ஷ்மணர்கள் தகனம் செய்த பின்னர், தங்களது தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தனர்.

அப்படிச் செல்லும்போது அவர்கள் அரக்கன் கபந்தனின் கைப்பிடிக்குள் சிக்கிக் கொண்டனர். அதனால் லக்ஷ்மணன் அவனது கைகளை வெட்டிவிட்டான். அப்போது கபந்தன் தன் உடலை எரித்துவிடுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டான். அவர்களும் அதன்படி உடலை எரியூட்டவே அந்த இடத்தில் இருந்து ஒரு காந்தர்வனின் உருவம் வெளிப்பட்டது. அவ்வாறு வந்த காந்தர்வன் அவர்களை துங்கபத்திரை நதியின் அருகில் இருக்கும் ரிஷ்யமுக மலையில் வசித்துக் கொண்டிருக்கும் சுக்ரீவனின் உதவியைக் கோருமாறு அறிவுறுத்தினான்.

மாதங்க முனிவரின் சாபத்தினால் அந்த இடத்திற்கு வாலி புக முடியாதபடியால், வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் ரிஷ்யமுக மலையில் தஞ்சம் புகுந்திருந்தான். காந்தர்வன் சொன்னபடி அவர்கள் அங்கு போய்க்கொண்டிருக்கும்போது வழியில், மாதங்க முனிவரின் சிஷ்யையும், மாபெரும் தபஸ்வினியும் ஆன சபரி என்பவளை ராம-லக்ஷ்மணர்கள் சந்தித்தார்கள். சபரி அவர்களைத் தன் குடிலுக்கு அழைத்துச்சென்று, நல்ல பழங்களாகப் பொறுக்கியெடுத்து அவைகளை மிகுந்த வாஞ்சையுடன் அளித்தாள். தன் குரு தனக்கு வாக்களித்தது போலவே, ராமரது வடிவில் இறைவனைக் கண்ட சபரி அன்று அவருக்காகக் காத்திருந்து அவர் அருளாலேயே பின்னர் மோட்சம் அடைந்தாள். அங்கிருந்து சென்ற ராம-லக்ஷ்மணர்கள் ரிஷ்யமுக மலையடிவாரத்தில் இருந்த பம்பை ஏரி அருகே வந்தடைந்தார்கள்.

அந்த அழகிய பம்பை ஏரியின் வனப்பைப் பார்த்ததுமே ராமருக்குச் சீதையின் ஞாபகம் வரவே அவருடைய துயரம் அதிகரித்தது. மலையின் உச்சிப்பகுதியில் இருந்து அவர்களைப் பார்த்த சுக்ரீவன், மற்றும் அவனது மந்திரிகளுக்கு புதிதாக வந்திருப்பவர்கள் ஒருவேளை வாலியின் ஒற்றர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வந்தது. அதனால் சுக்ரீவன் ஹனுமனை அவர்களிடம் விசாரணை செய்வதற்கு அனுப்பி வைத்தான். அனுமனும் ஒரு சந்நியாசி வேஷத்தில் அவர்களை அணுகி அவர்களிடம் இதமாகப் பேசியது ராமரை வெகுவாகக் கவர்ந்தது. ராமர் சைகை செய்யவே லக்ஷ்மணன் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அவர்களுக்கு நேர்ந்துள்ள நிலைமையை முழுவதுமாக விளக்கினான். தன் பங்கிற்கு அனுமனும் சுக்ரீவனின் கதை முழுதையும் சொன்னபின் தனது சுய உருவத்திற்கு வந்தார். பின்பு ராம-லக்ஷ்மணர்களைத் தன் தோளில் ஏற்றிக்கொண்டு ஹனுமன் சுக்ரீவனிடம் வந்து அவர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களைப் பற்றி அறிந்துகொண்ட சுக்ரீவன் ராவணனால் தூக்கிச் செல்லப்படும்போது சீதை அவர்களைப் பார்த்து எறிந்த நகைகளைக் கொண்டுவந்து காட்டினான்.

சீதையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் தாங்கள் உதவி செய்வதாக சுக்ரீவன் கூறவும், வாலியைக் கொன்று கிஷ்கிந்தை அரியணையில் சுக்ரீவனை அமர்த்துவதாக ராமரும் வாக்கு கொடுக்கிறார். அதன்படி சுக்ரீவன் சவால் விட, அவர்களிடையே நடந்த முதல் வாலி-சுக்ரீவன் சண்டையில், ராமரால் எது சுக்ரீவன் என்று அடையாளம் காண முடியாது போனது. அவ்வாறு அடையாளம் காட்டுவதற்காக ஒரு மாலை அணிந்துகொண்டு சுக்ரீவன் அடுத்த சண்டையில் இறங்கவே, நேரம் பார்த்து ராமர் மறைவில் இருந்து தாக்கி வாலியை வதம் செய்தார். அடிபட்டு விழுந்த வாலி வெகு நேரம் ராமருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின், இறுதியில் தான் செய்த அட்டூழியங்கள் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுகொண்டு ராமரிடம் மன்னிப்பு கேட்கிறான்.

இந்தக் கட்டத்தில் இரண்டு கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. சுக்ரீவனை விட வாலி வலிமை படைத்தவன் என்று இருந்தாலும், வாலியை விடுத்து சுக்ரீவனைத் தனது கூட்டாளியாக ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்? மற்ற கரடிகள், குரங்குகள் போல வாலி, சுக்ரீவன் இருவருமே ராமரின் உதவிக்காக இறைவனால் உருவாக்கப்பட்டிருந்தபோதும், வாலியின் நடத்தை எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தது. முதலில் அவன் தனது தம்பியை நாட்டிலிருந்து விரட்டிவிட்டதும் அல்லாமல், அவனது மனைவியையும் தனதாக்கிய பாவத்தைச் செய்தான். நேர்மையின் சிகரமாகிய ராமர் அம்மாதிரி குணமுடையோர்களிடம் சகவாசம் வைத்துக்கொள்ள மாட்டார். இரண்டாவதாக ராமரின் எதிரியான ராவணனிடமே வாலி ஓர் ஒப்பந்த உடன்படிக்கை செய்துகொண்டிருந்தான்.

meets_sugriv2. ராமர் ஏன் வாலியை மறைந்திருந்து தாக்கினார்? ராமர் நேருக்கு நேர் மோதியிருந்தால் வாலி அவரிடம் தஞ்சம் அடைந்திருக்கக்கூடும். அவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களைத் தண்டிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அப்படியானால் வாலி செய்த தவறுகளுக்கு அவனுக்கு எப்படி தண்டனை வழங்க முடியும்? இது தவிர, இது போன்ற நிகழ்வுகள் இறைவனின் திருவிளையாடல் என்பதால் அதன் உட்பொருளை யார்தான் அறிய முடியும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

வாலியின் மறைவுக்குப் பிறகு சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாகவும், அங்கதன் இளவரசனாகவும் முடிசூட்டப்பட்டார்கள். சீதையைத் தேடும் முயற்சிகள் முதலில் மழைக்காலத் தொந்திரவுகளாலும், பின்பு சுக்ரீவனின் சிற்றின்பக் கொண்டாட்டங்களினாலும் தொய்வு கண்டன. இறுதியாக நான்கு திசைகளிலும் தேடுவதற்காக நான்கு குழுக்கள் புறப்பட்டன. அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கிச் சென்ற குழுவில் அனுமனும் இருந்தார். அந்தக் குழு ஒரு மலைக்குகைக்கு வந்து சேர்ந்தது. அங்கு அவர்கள் ஜடாயுவின் அண்ணனான சம்பாதி என்ற கழுகைச் சந்தித்தார்கள். சம்பாதிக்கு அவர்கள் பணியில் உதவி செய்ய ஆசை இருந்தது. அது ஒரு முறை சூரியனுக்கு அருகில் பறக்கவே அதன் இறக்கைகள் பொசுங்கிப் போய்விட்டன. ஆனால் அப்போது அங்கிருந்த வானரர்கள் கூறிய ராமர் கதையைக் கேட்டதும், முன்பு ஒரு ரிஷி சொன்னது போல, அதற்குப் புதிய இறக்கைகள் முளைத்தன. அதைக்கொண்டு சம்பாதி உயரப் பறந்து பார்த்ததில் அதன் கழுகுக் கண்ணிற்கு சீதை இலங்கையில் அசோக வனத்தில் இருப்பது தென்பட்டது. உடனே அவர்கள் அங்கிருந்து சீதையைச் சந்திக்க அனுமனை அனுப்பலாம் என்று தீர்மானிக்கிறார்கள். அந்தத் தென்கடலோரப் பகுதியில் இருந்த மகேந்திர மலையுச்சியில் இருந்து தாவி இலங்கைக்கு அனுமன் பறந்து சென்றார்.

(தொடரும்)

2 Replies to “ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *