நான் அடிக்கடி திரைப்படத்தைப் பார்ப்பவனும் இல்லை, அதைப் பற்றிய விமர்சனங்கள் இதுவரை எழுதியவனும் இல்லை. அப்படி இருந்தும் இந்தப் படம் இந்தியாவில் வெளியிடப்படும் முன்பே பார்க்கும் வாய்ப்புப் பெற்றவன் ஆனதால், உடனே நம் மக்களுக்கு எனது கருத்தைத் தெரிவித்தால் நல்லது என்று நினைத்ததால் இதை எழுதுகிறேன்.
கதையின் முக்கிய அம்சம் ஒன்றே. இளங்காதலர்கள் இருவர் தங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கழிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்குக் கல்யாணம் செய்துகொண்டு, அதனால் வரும் பிள்ளைகள், பள்ளிக்கூடங்கள், வியாதிகள் போன்ற குடும்ப பாரங்களைச் சுமக்க வேண்டியிருக்கும் கட்டாயம் பிடிக்கவில்லை. அதனால் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்து, எப்போது ஒரு வேளை ஒவ்வொருவரும் தனியாக வேறிடம் போக வேண்டியிருந்தால் அப்போது அப்படிப் போகவும், கூட இருப்பவரைப் பிடிக்காது போனால் உடனே பிரிந்துவிடவும் தீர்மானிக்கின்றனர். அப்படி வாழ்ந்தால் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று வேறு நினைக்கின்றனர். அவ்வாறு இருக்கும் சமயம், அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒட்டுக் குடித்தனத்தில் இருக்கும் வயோதிக தம்பதிகளில் ஒருவருக்கு “அல்ஷ்மையர்” எனப்படும் மறதி வியாதி வரவே, அவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து, தமக்கும் ஒரு வேளை அப்படி வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, கல்யாணம் செய்துகொண்டு சாதாரண வாழ்க்கையையே வாழ்வது என்று முடிவு செய்கின்றனர்.
இதைப் பற்றிப் பலரும் அளித்த விமரிசனத்தில் ஒருவர் (Bosskey போன்ற பலர்) “இது மணிரத்தினம் மீண்டும் எழுகிறார்” என்கிறார். இன்னொருவரோ (tamiltalkies.net), ஒரு கலைக் கண்காட்சியில் சீலையால் மறைத்து வைக்கப்பட்ட ஓவியத்தை “இது மகாத்மா காந்தி சமாதானத்திற்காக ஒரு புறாவைப் பறக்கவிட்டுப் போய்விட, அதை மறைந்திருந்த ஒரு வேடன் சுட்டுக் கொன்ற காட்சி” என்று விளக்கியதும், சீலையைத் திறந்த பார்வையாளர்கள் எதுவுமே இல்லாத ஒரேயொரு வெள்ளைத்தாளைப் பார்க்க, ஓவியன் “ஆமாம், காந்தி புறாவைப் பறக்கவிட்டுப் போய்விட்டார்; வேடன் மறைந்திருப்பவன் தானே; புறாவும் செத்துப் போய்விட்டது” என்று சொன்னதை எடுத்துச்சொல்லி, அதைப்போல ஒரு வெள்ளைத் தாளைப் பார்த்து விட்டுத் தன் எண்ணங்களால் தன் மனத்தை நிரப்பிக் கொள்பவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம் என்று கூறுகிறார். நான் அந்த இரண்டாமவர் கூற்றை ஆதரிக்கிறேன்.
கதை ஒன்று இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அது எப்படி முடிகிறது? அன்பால் தொடர்ந்து நிரப்பப்பட வேண்டிய ஒரு தாம்பத்திய வாழ்க்கையை ஒரு வயோதிகப் பார்வை எனும் பயத்தால் தொடங்க வைக்கிறது. முன்பெல்லாம் “பயபக்தி” என்பார்களே. அதுதான் இது. பக்தியால் ஒருவனை இறைவழி கொண்டுவர முடியாதவர்கள், பாமரர்களை பயத்தால் அந்த வழிக்குக் கொண்டுவந்த ஒரு புராதானக் கதையாகத் தான் இது இருக்கிறது. அதாவது பார்வையாளர்களை அறிவு மிக்கவர்களாக ஆக்குவதற்குப் பதிலாக பயத்தால் பணியச் செய்தவர்களாக ஆக்குகிறது; அறிவால் தனக்கு ஏற்படும் ஒவ்வொரு உலக அனுபவத்தையும் ஆய்ந்து அறிந்து வாழ்க்கையின் பயனை அறிந்துகொள்ளும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகிறது. பணிய வேண்டும், அவ்வளவுதானே! அது பக்தியாகிய அன்பால் இருந்தால் என்ன, பயத்தால் விளைந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் என்கிறீர்களா? எந்த அனுபவத்தின் விளைவாலும் அறிவு வளரவேண்டும் என்பதே வாழ்க்கையின் தத்துவம் என்பதே உண்மை என்பதால், எந்த வழி நல்லது என்பதை நீங்களே தெளிந்துகொள்ளுங்கள்.
சரி, கதை எப்படித்தான் தொடங்குகிறது? காலம் மாறுகிறது; அதனால் பழைய வழக்கங்களைக் கை விடுதல் நல்லது என்பதையே வலியுறுத்துவது போலத் தொடங்குகிறது. காலப் போக்கில் பல வேண்டாத வழக்கங்கள் வந்திருக்கலாம்; அதனால் எதையும் மேம்போக்காகப் பார்க்காமல் உள்ளாய்ந்து பார்த்து, அவைகளின் பின்புலத்தில் உள்ள நல்ல கருத்துக்களை மேற்கொண்டு வாழ்வதே வாழ்க்கை என்பது எங்கேயும் வலியுறுத்திச் சொன்னது போலவே எனக்குத் தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் காம லீலைகள்தான்; ஏதேனும் ஒரு விதமான பசியைத் தணித்துக்கொள்ளும் வேகம்தான்.
கதை அம்சம் ஒன்றையே சொல்கிறீர்களே, மற்றதெல்லாம் என்னாச்சு என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான் என்னால் தர முடியும். முதலுக்கே மோசம் என்றால், மேற்கொண்டு நான் எதைப் பற்றி எழுதுவது? பொழுதுபோக்கு என்று போவோர்களும் முதலில் மனிதர்களாக இருக்க வேண்டும். மிருகங்களாக இருக்கலாம் என்றால் காடென்ன, நாடென்ன?
இப்படித்தான் வாழவேண்டும் என்பதைச் சொல்லாமல், எப்படியும் வாழலாம் என்னும் வெள்ளைத்தாள் அன்பர்கள் மட்டுமே இதை ரசிக்கவும் முடியும்; போற்றவும் முடியும்.
கட்டுரையாசிரியர் எஸ்.ராமன் ஐ.ஐ.டியில் கணினித் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மீகம், தத்துவம் குறித்த தொடர்களை தமிழ்ஹிந்து இணையதளத்தில் எழுதியிருக்கிறார்.
நல்லவேளையா இம்மாதிரிப் படமெல்லாம் பார்க்கும் வாய்ப்பை நான் பெறவில்லை. 🙂 பொதுவாகத் தமிழ்ப்படங்களே மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, மேக்கப், வசனங்கள், ஆடை அலங்காரங்கள் என்றே இருக்கின்றன. மணிரத்னம் அதில் விதி விலக்கு அல்ல. ஓரிரு நல்ல படங்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் சற்றும் ஏற்க முடியாத கதையமைப்பாகவே அவர் எடுக்கும் படங்கள் இருக்கின்றன.
ஒ ! அப்போ ஐயா எஸ்.ராமன், அவர்கள் மௌஸ் பிடிப்பவர் அல்லர் !
மணிரத்னம் படங்கள் தொழில்நுட்பரீதியில் வேண்டுமானால் பேசப்படலாமேவொழிய கதையளவில் எல்லாம் புதுமையொன்றுமில்லை என்பது விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். தளபதி கர்ணன்,துரியோதனன் கதையின் தர்ஜுமா(கல்கி பாணியில் சொன்னால்) மௌனராகம் அவரின் சொந்தக் கற்பனையல்ல, மகேந்த்ரனின் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” யின் அப்பட்ட தழுவல். அவர் ஒன்றும் trend setter” அல்ல.குறைந்த அளவு வசனம் என்ற அளவில் அவரைப் பாராட்டலாம். மற்றபடி ஸ்ரீதர், பாலச்சந்தர் அளவுக்கு அவரை வைத்து எண்ண இயலாது.
திரு. ராகவேந்திரனின் “…ஐயா எஸ்.ராமன், அவர்கள் மௌஸ் பிடிப்பவர் அல்லர் !” என்பதற்கு என் விளக்கம்.
என்னைப் பற்றிச் சொல்லும்போது “கணிதத் துறை” என்று தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டனர். “கணினித் துறை” என்பதே சரி என்பதை தமிழ் இந்து ஆசிரியக் குழுவினருக்குக் கூறிவிட்டேன். அதனால் “மௌஸ்” கூடும் என்பதால் அல்ல. திருத்தம் கூடிய விரைவில் நடக்கும்.
திரு ராமன், திரு ரங்கநாதன் இருவரும் சொல்லியிருப்பது மிகச் சரி. தகுதிக்கு மீறி பாராட்டப்படுகிறார் இயக்குனர் மணிரத்தினம் என்பதே எனது கருத்தும். அவரது ‘நாயகன்’, ‘திருடா திருடா’, ‘அஞ்சலி’, ‘மௌன ராகம்’, ‘ரோஜா’, ‘தளபதி’, ‘ராவணன்’ ஆகிய படங்கள் எல்லாமே, ஒன்று, பிற நாட்டுப்படங்களிலிருந்து அல்லது முந்தைய தமிழ்ப்படங்களிலிருந்து அல்லது நமது நாட்டுப் புராணங்களிலிருந்து சுடப்பட்டவைதான். தொழில்நுட்ப ரீதியாக வேண்டுமானால் அவை நேர்த்தியாக இருக்கலாம். அது ஜிகினா சுற்றப்பட்ட இனிப்புப்பண்டங்கள் போல! அவர் படங்களின் ஒரே சிறப்பு, வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மேடை நாடகங்கள் போல் ஆக்காமல், திரைமொழியை நன்கு புரிந்துகொண்டு, காட்சிகள் மூலமும் நடிகர்களின் முக பாவங்கள், நடிப்புத்திறமை ஆகியவை மூலமும் கதை சொல்வது மட்டுமே. அவர் ஒரிஜினலாக படமெடுத்திருந்தால், இந்நேரம் உலகப்புகழ் பெற்றிருப்பார்.
அரந்தை மணியன்.
வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாக பார்ப்பவன் திருமணம் செய்துகொண்டு சமுதாயத்தில் வாழலாம் திருமண சம்பந்தம் இல்லா வாழ்க்கைக்கு உகந்த இடம் நாடு அல்ல காடு அதாவது பற்று அற்ற வாழ்வு
இதோ வலைத் தளத்தில் சுட்டது:
“தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் அலை பாயுதே
தாலி கட்டாமல் ஊருக்குத் தெரிய வாழ்ந்தால் OK கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணைக் கடத்திக்கொண்டு போனால் ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என்று சிந்தித்தால் கடல்
ஸ்கூல் பொண்ணுக்குத் தாலி கட்டினால் நாயகன்
ஒரு மனைவிக்குத் தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் வாழ்ந்தால் அக்னி நட்சத்திரம்
ஒரு பெண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் ரோஜா
இன்னொருத்தர் மனைவிக்குத் தாலி கட்டினால் தளபதி
தாலி கட்டுவதற்கு முன்னால் குழந்தையைத் தத்தெடுத்தால்
தீவிரவாதிக்குத் தாலி கட்டினால் உயிரே
ரத்னம் டா… மணி ரத்னம் டா …
திருத்தம்:
“…தாலி கட்டுவதற்கு முன்னால் குழந்தையைத் தத்தெடுத்தால் கன்னத்தில் முத்தமிட்டால் ..”
மலையாளத் திரையுலகத்தினரிடமிருந்து தமிழ் திரையுலகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய. அங்கேயும் ஷகீலா ரசிகர்கள் உண்டு. மசாலாத் திரைப்படங்கள் உண்டு. ஆனால் அவற்றின் தாக்கம் வெகு நாள் நீடிப்பதில்லை. திரைக்கதையை உருவாக்கும்போது பல இயக்குநர்கள் அவற்றின் விவாதத்தில் பங்குபெற்று நேர்த்தியாக உருவம் கொடுக்கிறார்கள். இங்கு அவ்வாறில்லை. யாரும் சொல்லாத கதை என்று பல இயக்குநர்கள் தம்பட்டம் அடித்துவிட்டு ஆங்கிலப்படங்களை திருடுகிறார்கள். மண்ணின் மணத்தோடு இங்கு கதைசொல்ல யாரும் துணிவதில்லை. மறைந்த லோகிததாஸின் திரைக்கதையில் உருவான பரதம் எனும் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது, இயக்கியது சிபி மலயில். மணிச்சித்ரதாழ் நேர்த்தியான படமாய் உருவானது பாசிலுடன் பல இயக்குநர்கள் கதைமைப்பில் பங்கு பெற்றதுதான். 80 முதல் 90களின் இறுதிவரை சிறந்த கதையமைப்புள்ள படங்கள் அங்கு வெளிவந்தன. சமூகப்பொறுப்புணர்வுடன் பல படங்கள், அரசியல் பின்னணியில், குடும்ப உறவுகள்/சிக்கல்கள் என சிறந்த படங்கள் உருவாகி வெற்றியும் பெற்றன. தமிழகத்தில் பொருளாதாரக் குறிக்கோள் மட்டுமே திரைக்கலை என்றானது. பாசில், சத்யன் அந்திக்காட், சிபி மலயில், லோகித தாஸ், துளசி தாஸ், அநில்குமார் என பல திறமை வாய்ந்த இயக்குநர்கள் அங்குள்ளனர். திரைக்கதாசிரியர்கள் மதிக்கப்படுகின்றனர். மம்முட்டி, மோஹன்லால் போன்றோர் வெகுஜனப் படங்களில் நடித்தாலும் கலைத்தன்மை வாய்ந்த படங்களிலும் சிறந்து விளங்குகின்றனர். இங்கு அவ்வாறில்லை என்பது நிதர்சனமான உண்மை. கதையம் சம் உள்ள படங்கள் தமிழில் 80களின் இறுதியோடு முடிந்துவிட்டது. பல இளம் இயக்குநர்கள் தமிழில் உருவாகிறார்கள். ஆனால் அவர்களின் மலையாள இளம் இயக்குநர்களோடு எண்ண இயலாது
திருமணம் என்பதை அக்காலத்தில் வரைவு என்றார்கள். இன்னார் இன்னாருக்கு என்று எல்லைக்கோடு போட்டு, அதைவிட்டு அவர்கள் வெளியேறக்கூடாது, மற்றவர்களும் உள்புகக்கூடாது என்பதற்காக வரைவு (எல்லை) என்றார்கள். இந்த எல்லை மீறும் பரத்தைகளை வரைவு இல் (வரைவின்) மகளிர் என்றார்கள்.
இந்தத் திருமணம் என்பது, சமூகத்தில் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சடங்காகத் தோன்றுவதற்கு முன்னால், இத்தகைய லிவிங் டுகெதர் என்னும் கருத்தும் அக்காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் எழவே, தொல்காப்பியரே பின்வருமாறு கூறுகிறார்:
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.
நாகரிக வளர்ச்சியின் ஒரு தொடக்கப்புள்ளிக்கு அழைத்துச்சென்று, இதனை புதுமையான கண்டுபிடிப்பாகக் காட்டிக்கொள்வதுதான் இந்த நவீன முற்போக்குவாதிகளின் பேரறிவு போலும்.
மணி ரத்னம் சொன்னது போல இந்த படத்தின் கதையை ஒரு ஸ்டாம்ப் பேப்பர் பின்னால் எழுதிவிடலாம். ஒன்று மட்டும் புரியவில்லை. இதனால் எனன தத்துவத்தை அவர் சொல்ல நினைக்கிறார்? 15 பேரை காதலித்த ஒரு பையனும் அதற்க்கு குறைவாக காதலித்த ஒரு பெண்ணும் எதற்காக அதோடு நிறுத்திவிட்டார்கள்? அவர்களிடயே அவ்வளவு ஆழமான காதல் வர ஒரு காரணத்தையும் காண்பிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ என்ன அவசரம்? படத்தில் காண்பிப்பது போல் செக்ஸ் தனா? ஒரு சதாரண வயசான தம்பதிகளை பார்த்து impact ஆகும் அளவிற்கு அவர்கள் இந்த உலகத்தையே அதற்க்கு முன்னால் பார்த்ததில்லையா? இரண்டு பெரும் premarital செக்ஸ் ஐ அனுபவித்து விட்டு பின்பு கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அவர்கள் நேர்மையாக கல்யாணம் செய்ததுதான் புதுமையா? இந்த கதையும் ஏதோ இங்கிலீஷ் பட காபி என்று whatsapp இல் வருகுறது. நும் ஆட்களுக்கு ஒன்றும் இல்லாத கதையை கூட ஒரிஜினலாக எடுக்க தெரியாதா? ஹீரோ ஹீரோஇன் மற்றும் இசை கேமரா இவை நன்றாக இருப்பதால் ஓட்டிவிடலாம் என்ற கணக்கா?
“திருமண பந்தமின்றி ஒன்றாய் இருப்போம்”. அண்மையில் அதிகமாக அச்சுறுத்தும் புதிய வாழ்க்கை முறை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை மலர்களை பட்டாம்பூச்சி தாவும். தாவி வந்த மலர் என்ன ஆகும். வாடி வதங்கி போவதுதான் அந்த மலரின் நிலமையா? இது மனதிற்குள் நெருடலை தரவில்லையா?
நம் தேசத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இப்போது அதிகமாக பேசப்படுவது கற்பழிப்பு. அப்படிபட்ட சூழலில் பந்தமில்லாது சேர்ந்து வாழும் முறை அஞசப்பட வேண்டிய ஒன்று.
Living together என்று இளம்வயது ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருக்கும் போது
தவறு நடந்தால் அந்த ஆடவனை தண்டிக்க முடியுமா? அது வன்முறையற்ற கற்பழிப்புதானே, சட்டம் இதற்கு துணை வருமா? இவர்கள் தவறினால் பிறக்கும் குழந்தைக்கு யார் பாதுகாப்பு ? இருவரும் அக்குழந்தையை வைத்து கொள்ள யோசித்தால் ஆதரவற்றவர் இல்லம்தான் அதன் இடமா?
இந்த முறையில் ஒரு பெண்ணை விட்டுவிட்டு அந்த ஆண் சென்று விட்டால் அந்த பெண் கதி அதோகதி தான். ஆண் என்பவன் படடாம்பூச்சி பெண் என்பவள் மலர்.
ஆண் தனது நிலையில் மாறி திருமணம் செய்ய நினைத்தால், இந்த சமூகம் அதையும் ஏற்று கொள்ளும். ஆனால் பெண்ணை ஏற்று கொள்ளாது.
திருமணம் ஆனவுடன் ஏற்படும் உறவுகள் தவறாக எண்ணபடமாட்டாது. தவறுகள் ஏற்பட்டாலும் தட்டி கேட்கலாம். அவர்களது குழந்தைகளுக்கு ஒரு வித பாதுகாப்பு இருக்கும். சட்டம் துணை வரும்.
திருமண வாழ்க்கையில் அச்சுறுத்தல்கள் இலலையா என்று கேட்கலாம். அது பந்தம், பாசம், உறவுகள் எல்லாம் கலந்தது. பெற்றவர், உடன் பிறந்தோர், சுற்றம், சூழல் நிறைந்தது. தவறுகளை திருத்த உதவி இருந்தது. அதையெல்லாம் மீறும் போதுதான் தோல்வி ஏற்படும் வாய்ப்பு விளைந்தது. வெற்றி, தோல்விகளை பார்க்கும் போது திருமண வாழ்க்கையில் வெற்றியே மிக்க அதிகம்.
திருமண பந்தத்தில் இருக்கும் நாம் நம் மகன், மகளுக்கு நம் திருமண வாழ்க்கை வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்முடன் வாழும் நாட்களில், நமது கலாச்சாரத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். நமது நடைமுறையில் அவர்கள் அதனை உணர வேண்டும்.
ஆண், பெண் இருவரும் இதை மனதார உணர்ந்தால் யாராலும் இந்த “living together or leaving to other” எதையும் திணிக்க முடியாது.
நமது இந்து கலாசாரம் உலகில் அனைவராலும் போற்றபடும் ஒன்று. இது நான் கண்கூடாக பார்த்த உண்மை. தயவுசெய்து நாமே நமக்கு இரையாகி விட கூடாது.
இது என் இல்ல கணினி எலி கூறியது அல்ல, என் மனகணினியை அரிக்கும் கரையான்.
“சிந்தனை செய் மனமே!
இல்லையேல் தீவினைகள் விளைந்திடுமே”.
பற்று இல்லாத பந்தம் என்றால் திருமணம் வேண்டாம். இந்த சேர்ந்து வாழும் வாழ்க்கையில் பந்தம் இல்லை, ஆனால் பற்று உண்டு. இந்த பற்று உண்மை, காலம் முழுவதும் சேர்ந்து வாழ்வோம் என்ற நம்பிக்கையிருந்தால் பந்தம் என்பது ஒதுக்க வேண்டிய ஒன்றாக மனம் சொல்லாது. இந்த பற்று நிரந்தரமில்லை, எப்போது வேண்டுமானாலும் மனம் பற்றற்று போகும், வேறொரு மனம் நாடும் என்ற சந்தேகம் காரணமாகதான், சுயநலத்துடன் இந்த சேர்ந்து வாழும் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படிபட்ட ஒருவரது வாழ்க்கையில் தந்தை, தாய், உடன்பிறந்தோருக்கு இடம் கிடைக்குமா? கிடையாது. நாம் மேற்கத்திய நாடுகளிருந்து நல்லன விட்டு விட்டு தேவையற்றவைகளை ஏற்கிறோம்.