அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்

மதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் (வெ.சா) அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். நுரையீரல் பிரசினையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவருக்கு வயது 82.

கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்.

வெங்கட் சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன்

தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து  வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை  வெ.சா நமது தளத்தில் எழுதியிருக்கிறார்.  அவை தமிழ்ஹிந்து வாசகர்களின் தீவிரமான கவனத்திற்கும் வாசிப்புக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன.   மேலும் இங்கு வெளிவந்த பல கட்டுரைகளுக்கு சிறப்பான மறுமொழிகளும் எதிர்வினைகளும் அவர் அளித்திருக்கிறார். இந்த இணையதளத்தின் ஆசிரியர் குழுவுக்கு  குருவாகவும், சிந்தனைத் தெளிவையும் உத்வேகத்தையும் தரும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் வெ.சா.  அவரது மறைவு, தனிப்பட்ட அளவிலும்  எமக்கு ஒரு பேரிழப்பாகும்.

வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம்  என்ற கட்டுரை தான். அதன் முதல் பகுதி தமிழ்ஹிந்துவில் சென்ற வாரம் வெளிவந்தது.  அதன் அடுத்தடுத்த பகுதிகளை ஏற்கனவே அவர் அனுப்பி வைத்திருந்தார். அவை வெளியாவதற்கு முன் வெ.சா மறைந்து விட்டார் என்ற செய்தி இதயத்தைக் கனக்கச் செய்கிறது.  அந்தப் பகுதிகள் நாளை  வெளிவரும்.

“வெ.சா அவர்களின் இறுதிச் சடங்கில் இன்று மதியம் கலந்து கொண்டேன். அவரது விருப்பத்தின் படி கண்கள் தானம் செய்யப் பட்டிருந்தன. மேதைமையும் விசாலமும் கூர்மையும் குழந்தைத் தனமும் குறும்பும் இழையோடிய அந்தக் கண்கள் இன்னொரு ஜீவனின் வழி உலகைக் காணும் என்ற எண்ணமே மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மிகச் சில நெருங்கிய உறவினர்கள், தனது மகன் வீட்டில் அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒருசில நண்பர்கள் தவிர்த்து அவரது வாசகர்கள், கலை இலக்கிய அபிமானிகள் என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் வந்திருந்தனர் – பாவண்ணன், விட்டல் ராவ், ஸிந்துஜா, மகாலிங்கம், திருஞான சம்பந்தம், பேரா. கிருஷ்ணசாமி, ஷிமோகா ரவி..

இவ்வாறாக, பெங்களூரில் எஸ்டீம் மால் அருகில் உள்ள ஹெப்பல் மின் மயானத்தில் மதியம் ஒன்றரை மணியளவில் தமிழின் தலைசிறந்த கலை இலக்கிய விமர்சகரின் பூதவுடல் தகனம் செய்யப் பட்டது.”

–  ஜடாயு  ஃபேஸ்புக்கில், 21 அக். 2015

வெ.சா. தமிழ்ஹிந்துவில் எழுதிய கட்டுரைகள்

“அவரது சீற்றங்கள் அரசியல் சமன்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை அல்ல. அவரது அளவுகோல்கள் சௌகரியங்களின் அடிப்படையில் நெகிழ்ச்சி அடைபவை அல்ல. அவரது அன்பு விமர்சனங்களை தாண்டி சாஸ்வதமானது. அவரது குரலில் ஒரு குழந்தையின் அன்று பூத்த விகசிப்பும் வாழ்வின் அனைத்து சுவையையும் அனுபவித்துணர்ந்த கனிவும் இருக்கும். கலைவெளியில் கலந்து விட்ட ஒரு பேரிதயம். இன்று மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களிடம் மிகவும் மன்றாடி கேட்டுக்கொள்ளும் ஒரு விஷயம் உண்டு. தயவு செய்து அவர் பெயரில் ஒரு கலை-வளர்க்கும் விருது ஒன்றை என்றென்றும் அரசியலும் அதிகாரமும் தொட்டுவிட முடியாதவாறு உருவாக்குங்கள். ஒரு நுண்கலை மையம் ஒன்றை உருவாக்குங்கள். அபிநவகுப்தரும் தொல்காப்பியரும் தொடங்கிய பெருமரபொன்றின் தென்னக அகல் ஒளி பாரதமெங்கும் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி தரட்டும்.”

– அரவிந்தன் நீலகண்டன்  ஃபேஸ்புக்கில், 21 அக். 2015

வெ.சாவின் மறைவுக்கு தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவின் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

4 Replies to “அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்”

  1. கலை, இலக்கிய விமர்சன உலகின் பீஷ்ம பிதாமஹர் இறைவனடி அடைந்து விட்டார். ஆழ்ந்த இரங்கல்கள். தொடர்ந்து சளையில்லாது கடைசீ வரை தனது வாழ்க்கை அனுபவங்களை உலகோருடன் பகிர்ந்து கொண்டே இருந்திருக்கிறார். கீதை சொல்லிய படி கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன…….. உன் பணியினைச் செய்; பலனை எதிர்பாராதே …….. என்ற படிக்கு தொடர்ந்து சளைக்காது அலுப்பில்லாது கடமையாற்றி வந்திருக்கிறார்.

  2. திரு வெங்கட் சுவாமி நாதன் ஐயா அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  3. உன்னத விமர்சகர் மற்றும் வழிகாட்டி இன்று நம்மிடம் இல்லை, அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி குடும்பத்தாரின் துயரத்தில் பங்கு கொள்கிறேன், இறைவா எங்களுக்கு இன்னொரு வெ சா வைக் கொடு
    கண்ணீருடன்
    நந்திதா

  4. ஈழத்து இலக்கிய வாசகர்கள் எழுத்தாளர்கள் எல்லோர் சார்பாகவும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *