இப்படி ஒரு மனிதர் இயங்க முடியுமா? எவ்வித பிரதிபலனும் இல்லாமல். அப்படியும் சொல்லிவிட முடியாது. கல்லடிகள் ரொம்பவே உண்டு: ‘அமெரிக்காவிலிருந்து மணி ஆர்டர் வருவதாக’ நகைச்சுவையான சொல்லடிகளுடன் :).
நிலாவைச் சுட்டியதாலேயே கையை வெட்டநினைக்கும் தமிழ் சூழலில் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்முடன் பகிர்ந்திருக்கிறார் அவர். மதிப்பீடுகளில் எவ்வித சமரசமும் இல்லாமல் இயங்கியவர். அவ்வாறு இயங்க முடியும் இயங்கி ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என நிரூபித்தவர். இனி இலக்கிய விமர்சனம் என்றால் அவரைத் தாண்டி வளர்ந்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை தமிழுலகில் ஏற்படுத்தியவர்.
கோபக்கார இளைஞர்.
எப்போதும் மொழியில் ஒரு சிரிப்பை பார்க்க முடியும். சிரிக்காமலும் கோபப்படாமலும் பேசத்தெரியாத மனிதர். வளராமல் தேங்கி ரசனை என்கிற பெயரில் தமிழனின் கூட்டுமனவியாதியாக முடைநாற்றம் வீசும் அந்த மலினத்தின் மீது கோபம் – அந்த முடைநாற்றத்தை வர்த்தக வெற்றியாக்கி வாழும் தமிழக ஊடக நிறுவனங்களின் மீது. சிரிப்பு அவருடைய இருப்புடன் இருப்பது அது. சிரிக்கத் தெரிந்த அதிகாரபீடங்களைக் குறித்து சட்டை செய்யாமல் கோபப்பட தெரிந்த ஒரு கலை விமர்சகர்.
அவரிடம் நான் கண்டது என்ன?
விஞ்ஞான பூர்வமான கலை விமர்சனம் என்கிற மதக்கோட்பாட்டை மார்க்ஸிய வட்டார ஆச்சாரியர்கள் எம்பி எம்பி பிரச்சாரித்துக் கொண்டிருந்த நேரம். “சோவியத் யூனியனிலிருந்து சல்லிசாக எப்படி இலக்கிய விமர்சனத்தை அறிவியல் பூர்வமாக செய்வது எப்படி?”, “முற்போக்கு இலக்கியத்தையும் பிற்போக்கு இலக்கியத்தையும் மோப்பத்தால் கண்டறிவது எப்படி?” என்பவை குறித்து நியூசெஞ்சரி புத்தக கண்காட்சிகள் மூலம் நூல்களாக இறக்கிக் குவிக்க அலைந்த வேளைகள் அவை. இதற்கு வேறு துறை எதுவும் கிடைக்காமல் தமிழ் படித்த பேராசிரிய முனைவர் பட்டம் பெற்றவர்கள் கிளிப்பிள்ளைகளாக அந்த விஞ்ஞானபூர்வ விமர்சனங்களை ஒப்பித்து தங்களுக்கு அறிவுஜீவி ஒளிவட்டமும், செமினார் அழைப்பிதழ்களையும் தேடிக்கொண்டிருந்த காலம் அது. அந்தக் காலத்தில், விஞ்ஞானபூர்வமான விமர்சனம் என்பது எத்தனை சாத்தியமற்றது என்பதை, பேரரசரின் உடை குறித்த ஒற்றைக்குரலை எழுப்பியது வெசாதான்.
“இலக்கிய ரசனை என்பது விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு அடங்கி வாழாத தன் வழிச் செல்லும் ஒரு குணம்…உண்மையான கலைஞனின் உண்மையான விமர்சனம் ஒரு புதிய படைப்புத்தான்.”
அப்போது இண்டர்நெட் கிடையாது. கைவிரல் தட்டில் தரவுகளைத் திரட்டியளிக்க கூகிள் ஆண்டவர் கிடையாது. மானுடவியல் ஆராய்ச்சி துறைகளில் மார்க்சிய சித்தாந்தவாதிகள் கோலோச்சிய காலம். (இன்றைக்கு அதைவிடவும் மோசமான வியாதிகள் கோலோச்சுகின்றன.) பாளையங்கோட்டையில் நிலைக் கொண்டிருந்த மார்க்சிய சித்தாந்தவாதிகள் வெசாவை எதிர்கொள்கிறார்கள். விவாதம் ஐஸன்ஸ்டைனைக் குறித்து. அவருடைய Montage of attraction யுக்திக்கு உந்துதலாக இருந்தவை ஜப்பானிய சித்திர எழுத்துக்களே என வெசா நிறுவுகிறார் – ஐஸன்ஸ்டைனின் வார்த்தைகளிலேயே. சித்தாந்த கூண்டுகளில் அகப்பட்டுக் கொண்ட மனதை கையைப் பிடித்து முதல்நடை பழக முயலும் குழந்தையை அழைத்துச் செல்லும் தகப்பனை போல. ஆனால், சித்தாந்த கூண்டில் அகப்பட்டு கிடந்தது மானுடக்குழந்தை அல்ல போலும்; அது வேறு ஏதோ போலும். கையை வெடுக்கென கடிக்கிறது. “பாவ்லாவின் நாய்க்கும் ஜப்பானிய சித்திர எழுத்துக்கும் ஐஸ்ஸண்டைனின் சினிமாவுக்கும் என்ன தொடர்பு?” என அசட்டுத்தனமாக கேட்டு இளிக்கிறது. வெங்கட் சாமிநாதன் பொறுமையுடன் விளக்குகிறார்:
தன்னுடைய Montage of attraction யுக்திக்கு உந்துதலாக இருந்தது ஜப்பானிய சித்திர எழுத்துக்களே என்றும் பாவ்லோவின் சித்தாந்தங்கள்பற்றித் தான் முன்னதாகத் தெளிவாக அறிந்திருந்தால் தன் உத்தி சித்தாந்தத்திற்கு Theory of artistic stimulants என்று பெயர் கொடுத்திருக்கக் கூடும் என்று ஐஸன்ஸ்டைன் கூறினாலும் இது பற்றி விரிவாக அவர் ஏதும் சொல்லவில்லை. (காரணம் இவற்றைப் பற்றிய பரிச்சயம் வாசகர்களுக்கு இருக்கும் ஆகவே விளக்கம் தேவை இல்லை என அவர் நினைத்திருக்கலாம்.)
ஆனால், பாளையங்கோட்டையில் சில விசித்திர ஆராய்ச்சியாளர்கள் உண்டு என்பதோ அவர்கள் இதைப் பெயரை உதிர்க்கும் காரியம் என்று குற்றம் சாட்டுவார்கள் என்பதோ ஐஸன்ஸ்டைனுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே சுற்றுச்சுருக்கமாக சில விளக்கங்கள்…
கட்டுரை முழுக்க வெசாவின் அமுக்கமான புன்சிரிப்பு ஊடாடுகிறது. அறியாமையை எள்ளி.
அதே நேரத்தில் திறந்த மனத்துடன் சித்தாந்த கூண்டை திறக்க நினைப்பவனுக்கு கையை பிடித்து கூண்டுக்கு வெளியே அழைத்து செல்லும் குரு. பீடமில்லாத குருவாக, இல்லாத தோள் மேல் கை போட்டுப் பேசும், விவாதங்களில் மகிழும், அதிகாரத்துவம் குறித்த பிரக்ஞை கூட இல்லாத ஒரு ஆச்சாரியன்.
வெசாவின் மற்றொரு பெரிய பலம் அவருடைய பார்வையில் கலைஞன் வெறும் கலைஞன் அல்ல. அவன் ஒரு பெரும் மரபில் மேலும் மேலும் மேலதிக உச்சங்களைத் தொடக்கூடியவன். சோழத்து வெண்கல திருவடிவங்களிலும் ஹொய்சால கற்சிற்பங்களிலும் சிற்பிகள் அடைந்த அந்த கலைசாதன சாத்தியங்களின் எல்லைகளைத் தாண்டி அடைந்த உச்சங்களை ஹென்றி மூர் தனது வெண்கலப் படைப்பில் அடையவில்லை என்பதை வெசாவின் கண்கள் சரியாக கண்டடைகின்றன.
கோயாவின் சித்திரங்களில் அவரின் இஸ்லாமிய மத அதிகாரக் கட்டுப்பெட்டித்தனத்திற்கு அப்பால் இஸ்லாமிய கலையுணர்வு காலிகிராப்பியில் எழுந்ததை நினைவுகூர்ந்தே அவரால் பேசமுடிகிறது. குலாம் ரஸுல் சந்தோஷின் வண்ணவெளியாக விரியும் திரையில் தாந்திரிக மண்டலங்கள், ஜான் ஆபிரகாமின் மனதின் அந்தரங்கத்தில் உறையும் ஆதிகுடி, பால் க்ளேயுடன் தான் ஒப்பிடப்படும் போது அதனை ஏற்காமல் ஒரிஸாவின் ஜகந்நாத பலராம வடிவங்களில் தன் வேரை காணத்துடிக்கும் ப்ரொஃபுல்ல மொஹந்தியின் கலை உலக சஞ்சாரம் — வெசாவினால் எழும் ஒரு மிகப்பெரிய சுய உணர்தல்.
சிவராமமூர்த்தியின் நடராஜர் குறித்த லஷ்மி குறித்த ஆராய்ச்சிகள் வெசாவை சிலிர்க்க வைக்கின்றன. கலையின் உச்ச வெளிப்பாடு பக்தி அல்ல. தேவாரத்திலும் திருவாசகத்திலும் அதையே அவரால் காணமுடியும். அவருக்கு இறைநம்பிக்கை இல்லை. ஒரு நாஸ்திக இயக்கத்தின் இருப்புக்கான நியாயத்தை அவரை விடத் தெளிவாக இதுவரை எவரும் முன்வைக்கவில்லை.
ஆனால், அது கேலிக்கூத்தாக ஆகிவிட்டதில் நம் தொன்மையையெல்லாம் அழிக்கும் அழிப்புசக்தியாக இரட்டைநாக்குப் போலிகளால் ஆபாசமாக மாறிவிட்டதில் அவருக்கு வருத்தம்தான். வீட்டில் பொய் சொல்லி ஈவெரா பேச்சு கேட்ட அவருக்கு தன் அருவெறுப்பான இனவாத வெறுப்பின் பல்லிளிப்பின் தரிசனத்தை அளித்து (ரமணரின் மரணத்தை “அவாளின் பகவான் புழுத்து செத்தார்” என்று) அவரை அந்த ஈர்ப்பிலிருந்து மீட்டது அந்த இனவாத போலி பகுத்தறிவு இயக்கம்.
வெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா? எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்?” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும். ஏதோ இலக்கிய உயர்பீடத்திலிருந்து புரியாததை பேசவில்லை மனிதன். சரியான இடங்களை – எந்த இடங்களில் கிருமி உள்ளே புகுந்து புண்ணைச் சீழ் கொள்ளச் செய்கிறது எனச் சரியாகவே கணிக்கிறார்.
எனக்குத் தெரிந்து ஒரு வருடம் போதிக்கப்பட்டது மு.வ.வின் “கள்ளோ காவியமோ”. பரீக்ஷையில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று ‘கள்ளோ காவியமோ’ நூலிலிருந்து ஆசிரியரின் மனோதத்துவ அறிவு எவ்வாறு வெளிப்படுகிறது? என்பதாகும். பத்தாண்டுகளில் சத்தான ரசிகனும் படைப்பாளியும் கல்லூரி வாசல்கள் வழியே வெளிவர வழி பிறந்துவிட்டது என்று இன்னமும் செல்லப்பா நம்புகிறாரா? தாடகையை எப்படி சிங்காரித்துப் பார்த்தால் என்ன?
அது 1964. இன்றைக்கு 2010 இல் தாடகையை சிங்காரிக்க முடியும் என்பது மட்டுமல்ல அப்படி சிங்காரிப்பதை தொழில்முறையாக லாபம் தரும் வாழ்க்கை பிழைப்பாக செய்ய முடியும் என்று சென்னை பல்கலைக்கழகம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
கலையின் அனைத்து வெளிப்பாடுகளிலும் அவரால் எளிதாக விமர்சன சிறகடித்து பறக்க முடிந்தது. ஏனெனில் அனைத்து கலைகளும் வேர்கொள்ளும் இதயத்துடிப்பின் தாளகதியை தன்னில் உணர்ந்துவிட்டவர் அவர். சினிமா முதல் செவ்விய மரபு, நாட்டார் மரபு, நவீன ஓவியம், நாடகம் என அனைத்துக் கலைகளிலும் அவரால் சஹிருதய விமர்சகராக காலூன்ற முடிந்தது.
நாம் எதையெல்லாம் திரைப்படம் என நம்பிக்கொண்டிருக்க வைக்கப்பட்டிருந்தோமோ, அதெல்லாம் திரைப்படமே அல்ல புகைப்படம் எடுக்கப்பட்ட இசைநாடகம் என்கிறார் அவர். டெல்லியில் மனோகர் நடத்திக்காட்டிய இலங்கேஸ்வரனையும் சாணக்கியனையும் பார்த்த பிறகு தமிழனுக்கு நாடகம் என்றாலும் என்னவென்று தெரியாது என்கிறார்.
ஆனால், அது மேட்டிமை உணர்வல்ல. ஆபாசமான நகர்ப்புறச் சூழலில், அங்கும் இல்லாத இங்கும் இல்லாத, கலை எதுவெனத் தெரியாமல் உதைத்துக்கொண்டு திரியும் உயிர்வகையைத்தான் அவர் அப்படிக் காய்கிறார். பாரம்பரிய தெருக்கூத்துக் கலைஞர் கண்ணப்ப தம்பிரானிடம் தமிழனுக்கு நாடகமே தெரியாது என கர்ஜித்த அதே வெசா அதே சமயத்தில் எப்படி ஒரு சிஷ்ய மனோபாவத்துடன் உரையாடுகிறார் பாருங்கள்:
வெ.சா: ஏன்னா, தெருக்கூத்தினுடைய சிறப்பே அந்த உக்கிரத்திலதான் இருக்குன்னு நான் நினைச்சுண்டிருந்தேன். ஆனா இதை விரும்புறாங்களா மக்கள்? சிறுத்தொண்ட நாயனார், வள்ளித் திருமணம் இதையெல்லாம்? ஏன்னா….
தம்பிரான்: முன்னே இருந்தவங்கள்ளாம் காலமாயிட்ட பிறகு இப்ப இருக்கிற பசங்களுக்கு இன்னம் பயிற்சி கேட்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. மார்க்கண்டேய சரித்திரத்தையே எடுத்துக்குங்க….
“சுற்றுப்புறச் சூழலை பாதுக்காக்கிற மாதிரி விஷயங்களை எடுத்து நீங்க தெருக்கூத்து போடமுடியுமா?” என்று கேட்கிறார் வெசா. கண்ணப்ப தம்பிரான் மிக விரிவான பதிலைத் தருகிறார்.
“காடு அழகானது காப்பாற்ற கான்வெண்ட் பிள்ளைகளே அட்டை பிடித்து நடங்கள்” என்பது போன்ற வெறும் நகரிய கோஷங்களல்ல தம்பிரான் சொல்வது. எப்போதோ நடந்த காண்டவ வன தகனம், அதனால் ஏற்படும் விரோதம் இது; இது எவ்வாறு 17 ஆம் நாள் யுத்தத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது? இதிலிருந்து சூழலியல் உணர்வு பிறக்கிறது எனப் பேசுகிறார் தம்பிரான்.
வெசா இங்கே சிஷ்ய பாவத்துடன் அந்த கலைஞரை அணுகுகிறார்.
சராசரி தமிழன் தன் ரசனையை மேம்படுத்த நினைக்கும் பட்சத்தில், வெசா அவனிடம் இருக்கும் ரசனையை கல்கல்லாக பெயர்த்தெடுத்து மேலெழ வைக்கிறார். அவரும் திரைக்கதை எழுதியிருக்கிறார். ஆபிரகாம் ஜானுக்கு. அக்கிரகாரத்தில் கழுதை. அத்திரைப்படத்துக்கு தேசிய விருது கூட கிடைத்தது. என்றாலும் தமிழ் பொதுத்தளம் சிரமமெடுத்து, இயலவே இயலாத டிகிரிகளிலெல்லாம் கழுத்தை வளைத்து அத்திரைப்படம் என்று ஒன்று இருக்கவே இல்லை என்பது போல மௌனத்தால் நிராகரித்தது.
ஆனால், அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தார். மெல்ல மெதுவாக மாற்றங்கள் வருகின்றன. ஆங்காங்கே. அங்கொன்றும் இங்கொன்றுமாக. பீர் முகமதுவுடைய “திரைப்படம் ஒரு வாழும் கலை” குறித்து அவருக்கு ஒரு துல்லியமான சந்தோஷம் இருக்கிறது.
“தமிழில் முதன்முறையாக திரைப்படத்துறையில் எது கலை, எது தொழில்நுட்பம், எது வெறும் வியாபாரம் என்று தாராதரம் அறிந்து சொல்லும் புத்தகம் பீர் முகமதுவினுடையது என்பதில் எனக்கு சந்தோஷம். அத்தோடு சினிமா நடிகர், நடிகையர் குறித்து துளி கூட கவனம் செலுத்தாத இயக்குநர் தொழில்நுட்பம் பற்றியே பேசும் முதல் திரைப்படநூல் இது என்பதிலும் எனக்கு சந்தோஷம்.”
தன் குழந்தைக்கு நடக்கத்தெரியும், எழும்பி நிற்கத் தெரியும், தள்ளாடித் தள்ளாடி விழுந்தாலும் எழுந்து நடக்க முடியும் என்பதில் தகப்பனுக்கு ஏற்படும் சந்தோஷம் வெசாவுக்கு உண்டு. தமிழ் ரசனைக் குழந்தை அப்படி நிற்க வெசா காத்திருந்த காலம் கால் நூற்றாண்டுக்கும் மேலே.
இதுதான் கலை. இதுதான் கலையின் உண்மை ஆழமும் விஸ்தீரணமும். “பார் ! இங்கெல்லாம் நீ போக முடியும். இங்கெல்லாம் நீ சிறகடித்து எழ முடியும். இந்த ஆழங்களில் நீ சஞ்சரிக்க முடியும். வா. என் கையைப் பற்றிக்கொள். உன் முதல் தடுமாறும் காலடிகளுக்கு என்னைப் பற்றிக்கொள். பிறகு நீயாகவே பறந்து சென்று அந்த அற்புத வெளியின் நீட்சியை ரசி. நீயாகவே மூழ்கி ஆழங்களை ரசி. ஆனால், உன்னை நீயே மலின ரசனை எனும் சங்கிலியால் கட்டிப் போட்டுவிட்டு முடை நாற்றமடிக்கும் கருங்குகையில் அடைந்து கொண்டு, அதுதான் கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தக்குடியின் பாரம்பரிய பொக்கிஷம் என்று சொல்லிக் கொண்டு மூச்சு முட்டி ஒவ்வொரு அவயங்களாக அழுகி நாற்றமடிக்க இறந்து விடாதே.” என்று நம்மிடம் சொன்னவர் அவர்.
பிளேட்டோவின் குகைக்கு வெளியே நின்று கூவி அழைக்கும் மனிதர். நாமும் மெல்ல முயற்சிக்கிறோம். ஆனால், மலினத்தின் பாதுகாப்பு பழகிப் போன முடைநாற்ற மதிப்பீடு, சமரசங்களின் சௌகரியம் எல்லாமாக நம்மை கட்டிப் போடுகின்றன.
நாம் மேலெழ நம் மெல்லிய முயற்சிகளும் அவரது வெற்றிகள். நம் தோல்விகள் நம் சமரசங்கள் அவருக்கு செய்யப்படும் துரோகம். ஆனால், இறுதியாக அவருடையது முழுமையான வாழ்க்கை. நல்ல இரசனைக்காகவே வாழும் ஒரு வாழ்க்கை. வாலின் நனைவு இவ்வளவுதான். இது எவ்விதத்திலும் வெசா எனும் பெருங்கடலின் ஆழத்தையும் விஸ்தீரணத்தையும் சுட்டுவதாக அமையாது.
இந்தக் கட்டுரை 30-ஏப்ரல் அன்று வெளியிடப் பட இருக்கும் வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் புத்தகத்தில் இடம் பெறுகிறது. வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் இங்கே.
வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும்
(கலை, இலக்கிய ஆளுமைகள், ஆர்வலர்கள் எழுதிய 43 கட்டுரைகள்)
தொகுப்பு: பா.அகிலம், திலீப்குமார், சத்தியமூர்த்திவெளியிடுவோர்:
சந்தியா பதிப்பகம்
பு. எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044-24896979
https://sandhyapublications.com/
பக்கங்கள்: 504
விலை: ரூ. 300
நண்பர்கள் , அவர்வழி நடந்தவர்கள் எல்லாம் கூடி அவருக்கு விழா எடுப்பது மகிழ்ச்சிக்குறியது , நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என் சார்பாக .
காநாசுவுக்கு பின் விமர்சன மரபு பட்டுப்போகாமல் காத்தவரல்லவா ?
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,
தமிழ் இந்து என்கிற இந்த தலத்தில் எல்லா கட்டுரைகளும் நன்றாக உள்ளன, பல விஷயங்கள் நம் நாட்டு மதமான இந்து மதம் பற்றி அறிய உதவுகிறது இந்த தளம் எனது மனமார்ந்த நன்றிகள்,
எனக்கு அவ்ளவா பத்திசாளிதனமா இங்கே எழுதியவர்கள் போல எழுதவோ, பேசவோ தெரியாது, நான் மற்றும் என் பேரன்ஸ் எல்லாருமே கிருத்துவர்கள்
எவ்வளவோ பிரையர் செஞ்சாலும், சர்ச்சுக்கு போனாலும் அதுக்கு மேலே என்னமோ இருக்கு அப்டீங்கரத எனக்கு தெரிய ரொம்ப நாள் ஆச்சு. இதுவரிக்கும் எனக்கு சொல்லிக் குடுத்த பிரார்த்தனைகள் ஏசுவோட புகழ் பாடல் கள் மூலமா எனக்கு தெரிஞ்ச இயேசு நல்லவராத்தான் தெரியறார்,
ஆனா எனக்கு பைபிளை நம்பறதை விட இயேசு ஒரு நல்ல வழிகாட்டி என்பதை தவிர பெரிசா நான் ஒன்னும் நம்ப முடியலா,
என்னோட இந்து பிரெஞ்ட்ச்களோட வீட்ல பல பெரியங்க பல கத சொல்வாங்க, ஆனா அவங்கள் நடத்துற பல விசேஷங்கள் அதுக்கு அவங்கல்லாம் சொல்ற காரணம் எல்லாம் நம்ம லைபோட ஒத்து போகுது.
என்னோட இருவது வசிலே ரொம்ப கோலம்பிடேன், ஏன்னா பைபிள் சொல்ற எல்லாத்தையும் விஞ்ஞானம் பல விதமா பொய்யாக்கி விட்டது.
எதை நம்பறதுன்னு கொல்ப்பமாச்சு, என்னமோ ஒரு நம்பிக்கை ஏசு மேல அவ்வளவுதான், ஆனா வெறும் நம்பிக்கை மட்டுமே மன அமைதி தராது,
அப்படீன்னு எதோ ஒன்னு உறுத்தினது, சரி நம்ம ஆளுங்க யாருக்குமே தெரியாமே யோகாவும், தியானமும் படிச்சேன்,
அப்புறம்தான் எனக்கு பல விஷயங்கள் தெரிஞ்சது, நம்ம நாட்டுலே இருந்த பல முனிவருங்கள் போல் இயேசு அந்த நாட்டில இருந்து இருப்பார் போல, அவரு சொந்த தப்ப இவங்க புருகிட்டாங்கலோன்னு நேநிக்கிறேன்,
இப்ப நான் எல்லா கோயிலுக்கும் என்னோட வொய்ஃப்பையும் கூட்டிப் போறேன், இப்போ அவ தீவிர அம்மன் பக்தையாயிட்டா, நான் சர்ச்சுக்கும் போறேன், ஆனாலும் எனக்கு மனம் அமைதிப் படுத்தறது என்னமோ சிவன் கொவ்வில்தான், அங்கே எத்தனை சத்தம் இருந்தாலும் ஒரு பத்து நிமிஷம் கண்மூடி தெறந்தா பாத்தா அர மணி நேரம் ஆயிருக்கும், சாமிய கூட பாகாடினாலும் அந்த பத்து நிமிஷம் என்ன மேலும் பல சாலி ஆக்கிடும். என் குறு நாதன் சொல்லி இருக்கார் கோயில் என்பது சாமிய பாகாட்டினாலும் பிரச்சினை இல்லா. ஆனா அங்கே பொய் தியானம் பண்ணு அதுத்க்கு தான் கோயில் அப்டீன்னு.
இத நான் ஏன் எழுதினேன்ன இங்க ரோபக்கா மையம்னு எழுதறாங்களே அவங்க மாதிரிதான் என்னோட அக்காவும் ரொம்ப நம்பினாங்க ஆனா ஆன்மிகம் அப்டீங்கறது என்னன்னே தெரியாம தன நம்பிக்கையே இல்லாம பல பிரச்சினைகளை இயேசு மேல போட்டுட்டுன் அவர் காப்பார் அப்டீன்னு காத்திட்டு இருந்துய் இப்போ மன நோய் முத்தி மரிசுட்டாங்க, அதுக்கு கூட இருந்தவங்க சொன்ன ஒரே பதில் என் அக்க கர்த்தரை விசுவாசிக்கலயாம்,
எவ்வளவு பெரிய பிராடுத்தனம் , இவங்க யேசுவோட பிணத்தை வச்சு சம்பாரிக்கரான்கள் அவ்வளவுதான், என்னோட இயேசு வேற, அவர் என்னோட வழிகாட்டி, அவர் சொன்ன நல்வழி நான் நடப் பெண் அவர் செத்துட்டார் இனி அவர் உயிரோடவேல்லாம் வரமாட்டார்னு எனக்கு அறிவு இருக்கு.
அவர் சொன்ன அன்பு மட்டும்தான் நேசம் அப்படீன்னு நாம் நம்புறேன். ( தப்பிருந்தா மன்னிக்க)
What a refreshing comment from Mr Steepen. Thank you, sir
Interesting article but there was one M Thalayasingam who has written more extensively than Ve Sa , Thalayasingam has written about Tamil literature particularly criticism, philosophy and hindusim. He advocated to look beyond Marxism. His philisophy was called Meiyul. Sundara Ramasamy & jeyamohan has introdused him to Tamil nadu readers.
I would like to know Aravindan Neelakandan’s view on Thalayasingam’s writings. Please write in Tamil Hindu soon. Thanks
Rishi
மு.தளைய சிங்கம் குறித்து விரிவாகவே எழுதியிருக்கிறேன். பார்க்கவும்:
https://tamilhindu.com/2009/03/darwin-and-muruga/
//
steepen (30 April 2011 at 8:34 pm)
//
அன்புள்ள ஸ்டீபன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் சிந்தனையும் தேடலும் உங்களுக்கு சத்தியத்தை காட்டும்.
சில கருத்துக்களை உங்கள் அனுமதி இன்றி சொல்லலாமென்றால், இவற்றை சொல்ல விரும்புகிறேன் :
பைபிள்படி, இயேசுவை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்ததாக காட்டப்படும் அந்தச் சூழலில் அந்த மக்களுக்கு அன்பின், அமைதியின் அவசியம், அவரின் உபன்யாசங்கள் தேவைப்பட்டிருக்கலாம் . அப்பொழுதும் அன்பைச் சொன்னதற்காக அவரைக் கொடுமைப் படுத்தியதாகச் சொல்கிறது பைபிள். ஆனால் எந்த ஹிந்துவாவது பைபிளில் சொல்லப்பட்டது போல் கொடூரமாக பாதிரியார்களிடம் நடந்து கொண்டார்களா?
ஹிந்துக்களிடம் அந்த அளவுக்கு அன்பைச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா? இயேசு ‘love thy neighbor ‘ என்றுதானே சொன்னார்? அன்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் குடுமபத்தில் ஒருவரைப் கிறிஸ்தவர் ஆக மதமாற்றம் செய்து, தாய்க்கும் மகனுக்கும் மனஸ்தாபம் உண்டாக்கி குடுபத்துக்குள்ளேயே அமைதியையும் அன்பையும் இல்லாமல் செய்வதா இயேசுவின் உபன்யாசத்தின் நோக்கம்?
வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடுபவர்களுக்கு, பிராணிகளுக்கு உணவிட்ட பின்பே உண்பவர்களுக்கு அன்பைப் பற்றி போதனை தேவையா?
பைபிளில் ஏசுநாதர் தொழுவத்தில் பிறந்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது.. அதற்க்குக் காரணம் கால்நடைகள் அன்பு பேணத்தக்கவை என்பதாக இருக்கலாம்.. கால்நடையை அடைக்கும் கொட்டகையைக் கூட ‘தொழுவம்’ என்று அழைத்து தொழுதலுக்குரிய இடமாக்கியோர் ஹிந்துக்கள்.. அவர்களுக்கு மன மாற்றம் தேவையா?
அன்பின் உருவமான, பாலைப் பொழியும் அன்னையான பசுவை ‘தொழுவோம்’ என்று வணங்கும் ஹிந்துக்களிடம், மாட்டு மாமிசம் விலக்கப் படுகிறது. அடைக்கலம் தரும் இயேசுநாதரின் பிறப்புக்கே அடைக்கலம் கொடுத்ததல்லவா? அன்பையும் பாலையும் கலந்து பொழியும் அப்படிப்பட்ட தெய்வப் பிராணியை எதற்கு உணவுக்காகக் கொல்லவேண்டும்? அதுவும் வேறு மாற்று உணவுகள் இருக்கும்போது? இதை பைபிளே சொல்கிறதே:
Genisis 1:30 – ” to every beast of the earth, and to every fowl of the air, and to everything that creepeth upon the earth, wherein there is life, I have given every green herb for meat: and it was so ”
இதைப் பார்த்தால் ஏசுவின் கட்டளைகளை பின்பற்றுவோர் ஹிந்துக்களில் கிறிஸ்தவர்களைவிட அதிகம் என்றே தோன்றுகிறது.
உங்கள் கருத்து என்ன?
//அரவிந்தன் நீலகண்டன் (author)
2 May 2011 at 10:06 pm
மு.தளைய சிங்கம் குறித்து விரிவாகவே எழுதியிருக்கிறேன். பார்க்கவும்:
https://tamilhindu.com/2009/03/darwin-and-muruga/
//
எப்படித்தான் ஒருவரால், இவ்வளவு விஷயங்களைப் படித்து எழுத முடிகிறதோ..
ஒருமுறை அரவிந்தன் நீலகண்டன் என்னும் யாரோ ஒருவரை அறிமுகம் செய்து வைக்கையில், அவரைப் பற்றி கால்கரி சிவா மிக உயர்வாகச் சொன்னார். கால்கரி சிவா சொன்னதில் உயர்வு நவிற்சி ஒன்றும் இல்லை.. அவரால், ஆன்மிகம், வரலாறு, அரசியல், இலக்கியம், கலாச்சாரம் தொல்நாகரிக ஆராய்ச்சி, கவின்கலைகள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து அறுசுவை விருந்து படைக்கும் அரவிந்தன் நீலகண்டன் பற்றி கூகிள் சாட்டில் சொல்ல முடிந்தது ஒரு துளியே என்பதை உணர்கிறேன்…
வெ. சா. என்னும் பிதாமகரைப் புகழ வேண்டிய இடம் இது.. ஆகவே மேலும் இழுக்காமல் இத்தோடு முடிக்கிறேன். அரவிந்தனும் ஒரு வித்தியாசமான வெ.சா. தான்..
அன்புள்ள ஸ்டீபன்,
எங்கும் எதிலும் வியாபித்து இருக்கும் பரம்பொருள் உங்களை ஆட்கொண்ட விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் மேலும் அவருடைய நல்லருள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
அன்புள்ள வாசகர்களுக்கு,
சில கிறிஸ்தவம் தொடர்பான மறுமொழிகள் இந்தப் பதிவில் போடப் பட்டு வெளிவந்தும் விட்டன. இவை இந்தக் கட்டுரையுடன் சிறிதும் தொடர்பில்லாதவை. “இந்துக்கள் இயேசுவை கும்பிடலாமா” கட்டுரைக்கு பதிலாக இங்கு போடப் பட்டு விட்டதாகத் தோன்றுகிறது. தயவு செய்து இதனைத் தவிர்க்கவும்.
அன்புடன்,
ஆசிரியர் குழு
//வெ. சா. என்னும் பிதாமகரைப் புகழ வேண்டிய இடம் இது.. ஆகவே மேலும் இழுக்காமல் இத்தோடு முடிக்கிறேன். அரவிந்தனும் ஒரு வித்தியாசமான வெ.சா. தான்..//
வெசா எழுதிய போது இண்டர்நெட் கிடையாது,. விரல் நுனியில் தகவல் மழை பொழியாது. ஆனால் அவர் நூல்களைப் படித்துப் பாருங்கள் ஆழமான விரிவான தரவுகளும் பார்வைகளும் இருக்கும். நினைத்துப் பார்க்கவே முடியாத மூலங்களிலிருந்து அவர் பெற்ற பொக்கிஷங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு சொல்லடியும் பட்டார். அநீ அப்படியல்ல. அவன் முழுக்க முழுக்க இந்த இணையம் தகவல் மழை பொழிவதால் உருவான ஒரு சிறு காளான் அவ்வளவே. வெசா என்கிற கல்பதருவையும் அநீ என்கிற சிறு நாய்க்குடையையும் ஒப்பிடுவது… யானையும் எலியுமாக ஓடிக்கொண்டிருந்ததாம். எலி திரும்பி பார்த்ததாம். ஒரே புழுதி. எலி யானையிடம் சொன்னதாம்,. நாம ரெண்டு பேருமா எப்படி புழுதியை கிளப்புறோம் பாத்தியா… இதை நான் தன்னடக்கத்தால் எல்லாம் சொல்லவில்லை. இதுதான் உண்மை.
வெ.சா புத்தக வெளியீட்டு விழா பற்றிய எனது புகைப்பட, வீடியோ பதிவுகள் இங்கே –
https://jataayu.blogspot.com/2011/05/blog-post.html