மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

 இதைப் படிக்கும் முன் படிக்க வேண்டிய பதிவுகள்:

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருந்து நேரடியாக நிகழ்வுகளைப் பதிவு செய்த ச.திருமலையின் கட்டுரைகள்…

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3

மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4

 

 

modi us1
அமெரிக்காவில் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இந்தியாவில் பாஜகவின் அரசியல் எதிரிகளால் ஜீரணிக்க இயலாததாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் தலைமையகமான சிலிகான் வேலியில் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு (செப். 27) இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் பெறாதது.

அமெரிக்காவில் மோடி தங்கியிருந்த 6 நாட்களும் தினசரி 30-க்கு மேற்பட்ட நிகழ்வுகளுடன் அவரது நிகழ்ச்சிநிரல் கவனமுடன் திட்டமிடப்பட்டு, 16 மணி நேரத்துக்கு மேல் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாகிஸ்தான் பத்திரிகையான ’நேஷன்’ பொறாமையுடன் குறிப்பிட்டிருப்பதுபோல, “மோடி அமெரிக்காவில் ஒரு நட்சத்திர விருந்தாளியாக நடத்தப்பட்டார்”.

தனது நிகழ்ச்சிநிரலில் மோடி எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்விலும் பங்கேற்கவில்லை. அவர் கலந்துகொண்ட அனைத்து நிகழ்வுகளுமே, இந்தியாவுக்கு முதலீட்டைக் கவர்வதாகவும், இந்திய- அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும், மாறிவரும் உலக அரங்கில் இந்தியாவின் பங்கேற்பை அதிகரிப்பதாகவுமே இருந்தன. ஏதோ இன்பச் சுற்றுலாவுக்கு மோடி சென்றது போல இந்தியாவில் அவரை விமர்சித்துக் கொண்டிருக்கும் எதிரிகளுக்கும், அரைவேக்காட்டு அறிவுஜீவிகளுக்கும், அவரது பயணத்தின் தாக்கம் புலப்பட நாளாகும்.

ஆறுநாள் பயணம்:

பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்தே, மோடி உலக நாடுகள் பலவற்றுக்கும் தேர்ந்த திட்டத்துடன் சென்று வருகிறார். அமெரிக்காவுக்கு மோடி பிரதமராகச் செல்வது இப்போது இரண்டாவது முறை. முதல்முறை சென்றபோதே (2014 செப்.) அமெரிக்காவில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக மோடியின் பயணம் அமைந்தது. எனவே தற்போதைய பயணமும் மிகவும் அதிக அளவில் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. அதை நிவர்த்தி செய்தார் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி செப். 23-ம் தேதி (இந்திய நாள்காட்டியின்படி) தனது அமெரிக்கப் பயணத்தைத் துவக்கினார். வழியில் அயர்லாந்து சென்ற அவர் அந்நாட்டு பிரதமரை சந்தித்துப் பேசினார். பிறகு அங்கிருந்து கிளம்பி இரவு அமெரிக்காவில் நியூயார்க் சென்று சேர்ந்தார். அன்று முதல் அங்கிருந்து நாடு திரும்பிய செப். 29 வரை அவரது நிகழ்வுகள் கடிகார முள்களுடன் போட்டியிடக் கூடிய அளவில் தொடர்ச்சியாக அமைந்திருந்தன.

முன்னணித் தொழிலதிபர்கள் சந்திப்பு:

modi- fortune
முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடன்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘ஃபார்ச்சூன்’ இதழ் சார்பில் செப். 24-ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில், முக்கியமான 47 அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் (சி.இ.ஓ.) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இந்த விருந்தின்போது, அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்துகள், இந்தியாவுக்கான திட்டங்கள், இந்தப் பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது ஆகியவற்றை பிரதமர் மோடி கவனமாகக் கேட்டறிந்தார். அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதைக் கேட்டறிந்த பிரதமர் மோடி, அரசுத் துறையில் சீர்திருத்தம் செய்வதுதான் தனது அரசின் முதன்மையாயப் பணி என்றும், இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான நடைமுறைகள் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், பொறுப்புடையதாகவும் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள துறைகளைப் பட்டியலிட்ட மோடி, ’உலகம் முழுவதும் நேரடி அன்னிய முதலீடு சரிந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 40 சதவீதம் அது அதிகரித்திருப்பதை’ சுட்டிக் காட்டினார். இது, இந்தியப் பொருளாதாரம் மீதான நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி தொடர்பான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை, அவரது கடந்த 15 மாத கால ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியவற்றை அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பாராட்டினர். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா), திறன்மிகு இந்தியா (ஸ்கில் இந்தியா), நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டிஸ்) ஆகிய திட்டங்களுக்கும் அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில், அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகை- பொழுதுபோக்கு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளான ரூபர்ட் முர்டோச் (நியூஸ் கார்ப்பரேஷன்ஸ்- ஸ்டார் குழுமம்.), மிக்கேல் லிண்டன் (சோனி என்டர்டெய்ன்மென்ட்), டேவிட் ஜாஸ்லாவ் (டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ்), ஜேம்ஸ் முர்டோச் (டுவென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி), உதய் சங்கர் (ஸ்டார் இந்தியா), இந்திரா நூயி (பெப்சிகோ நிறுவனத் தலைவர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

murdoch-modi
ஊடக அதிபர்களுடன்…

அவர்கள் பிரதமர் மோடியுடனான தங்களின் கலந்துரையாடலின்போது, இந்தியாவில் தொலைதொடர்புத் துறையில் நான்காம் தலைமுறை (4ஜி) தொழில்நுட்பத்தை விரைவுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

அமெரிக்காவில் பாதுகாப்புத் தளவாடங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் லாக்ஹீட் மார்டின் நிறுவனத் தலைவர் மேரிலின் ஹியுசன் மற்றும் பிற நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளிடம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் தளவாடங்களை தயாரித்து தர வேண்டும் என்று மோடி தெரிவித்தார். இதைக் கேட்ட ஹியுசன், இந்தியாவில் தொழில் தொடங்க உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உலகின் ஊடக உலகச் சக்கரவர்த்தியாகக் கருதப்படும் ரூபர்ட் முர்டோச் மோடியின் ஆளூமையால் மிகவும் வசீகரிக்கப்பட்டார். அவர் தனது டுவிட்டர் தளத்தில், “இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, சிறப்பு மிக்கது. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இருக்கும் தலைவர்களில் சிறப்பான கொள்கைகளை கொண்ட சிறந்த தலைவர் இவர்தான். அதிக சிக்கல் நிறைந்த நாட்டில், சாதனைகளை புரிய அவர் மிகப் பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கும்” என்று குறிப்பிட்டார்.

ஜி-4 கூட்டமைப்பின் பிரகடனம்:

Modi at G4 Summit
ஜி-4 கூட்டமைப்பின் தலைவர்களுடன்…

இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-4 நாடுகளின் மாநாடு செப். 26-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, பிரேசில் அதிபர் தில்மா ரூசேப் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற தங்களுக்குப் போதிய தகுதிகள் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பெற இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. இது குறிந்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் குறித்த காலத்துக்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளாகும். சர்வதேச அளவில் பொருளாதாரத்தை வலுப்படுத்த காரணமாக இருப்பவை. இந்த நான்கு நாடுகளுமே சர்வதேச அளவில் பொறுப்புகளை ஏற்றுச் செயல்படத் தயாராக இருக்கின்றன. பருவநிலை மாற்றமும், பயங்கரவாதமும் உலகில் நமக்கு பெரும் சவாலாக உள்ளன. இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆண்டாண்டு காலமாக கடைபிடித்து வரும் பழைய மனோநிலையை மாற்றிக்கொண்டு புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வந்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஐ.நா. பொதுச்சபையின் 70-வது ஆண்டுக் கூட்டம் நடைபெறும் இந்த சமயத்தில் இது குறித்து முடிவு எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஐ.நா. சபை உதயமான பிறகு, உலகில் பல்வேறு அடிப்படை மாற்றங்களுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சிக்கலான இப்பிரச்னைக்கு நாம் தீர்வு காண வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

modi-ban ki moon
ஐ.நா. பொதுச்செயலாளருடன்…

பின்னர் ஜி-4 மாநாட்டின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்றும், அதற்கான சட்டப்படியான தகுதி அவற்றுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்கும் பட்சத்தில் இந்த நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதி தெரிவித்துள்ளன. நான்கு நாடுகளுமே பரஸ்பரம் ஒன்றையொன்று ஆதரிப்பதாகவும் அறிவித்தன.

ஐ.நா. அமைப்பில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 15 நாடுகள் அடங்கிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரம் மிக்க அமைப்பாகும். இந்த அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதர 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா சேர வேண்டும் என்பதற்காகவே மோடி உலக அளவில் ஆதரவு திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகத் தலைவர்களுடன் சந்திப்பு:

Modi-srisena
இலங்கை அதிபருடன்…

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை நியூயார்க்கில் மோடி சந்தித்தார். அப்போது, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்குமா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

‘இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப் பொருத்த வரை, எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படக் கூடிய ஒருமித்த தீர்மானமாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஆகும். அந்தத் தீர்மானம் இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்று சிறிசேனாவிடம் மோடி தெரிவித்ததாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

போர்க்குற்றத்துக்கு எதிராக சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஸெய்யத் ராத் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்தார். ஆனால், உள்நாட்டு விசாரணைக் குழுவே போதுமானது என இலங்கை அரசு கூறி வந்தது. ஆனால் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்து அனைவரையும் வியக்கவைத்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அக். 1-ல் ஒருமனதாக நிறைவேறியது. இலங்கையின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டனால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தை, அந்த ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. இந்தத் திடீர்த் திருப்பத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளது.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே உள்ளிட்டோரையும் நியூயார்க்கில் பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்துப் பேசினார். ஜோர்டான் மன்னர் அப்துல்லா – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பின்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

modi- abdulla
ஜோர்டான் மன்னருடன்…

அப்போது, ஐ.எஸ். பயங்கரவாதம்தான் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்ற கருத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர், அதேவேளையில், “இஸ்லாமிய மதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க வேண்டும். இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதைத் தடுப்பதுடன், அந்த இயக்கத்தினரின் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்’ என்று மோடி அவரிடம் வலியுறுத்தினார்.

பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கேவை பிரதமர் மோடியும் சந்தித்தபோது, பூடானில் செயல்படுத்தப்படும் நீர்மின் திட்டங்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்யும் என உறுதியளித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க பூடான் ஆதரவு தெரிவிக்கும் என்று ஷெரிங் உறுதியளித்தார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனையும் மோடி சந்தித்தார். அந்தச் சந்திப்பு ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது, ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகள், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

பான் கீ மூனிடம் மோடி பேசுகையில், “ஐ.நா. அமைதி நடவடிக்கைக் குழுவுக்கு அதிகப்படியான வீரர்களை இந்தியா அனுப்புகிறது. ஆனால், அமைதி நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கு முன்னர் இந்தியாவிடம் போதிய அளவில் கலந்தாலோசிப்பதில்லை. இந்த அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிலிகான் வேலியில் சிங்கநாதம்:

PM in San Jose
சிலிகான் வேலி சிங்கங்களுடன்…

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் சின்னமான சிங்கத்துக்கு தகவல் தொழில்நுட்ப உலகின் மையமான சிலிகான் வேலியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிகான் வேலிக்கு செப். 27-ல் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்து, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் விருந்தளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய அமெரிக்கரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சத்யா நாதெள்ளா பேசுகையில், ”இந்தியாவில் 5 லட்சம் கிராமங்களில் குறைந்த கட்டணத்தில் அகண்ட அலைவரிசை இணைய வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுடன், ’கிளவுட் கம்யூட்டிங்’ சேவைகளும் வழங்கப்படும்.  இந்தச் சேவை மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து மென்பொருள்கள், சேவைகள், செயலிகள் ஆகியவற்றை விலைக்கு வாங்காமல், இணையம் வாயிலாக குறைந்த கட்டணத்தில் பல்வேறு துறைகளும், வர்த்தக நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.

இதைத் தொடர்ந்து அடோப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண் பேசுகையில், “பிரதமர் மோடியின் ’மின்யுக இந்தியா’ திட்டம், இந்தியாவை அடுத்த உயரத்துக்குக் கொண்டு செல்லும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குவால்கம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பால், “இந்தியாவின் ‘ஸ்டார்ட்-அப்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 15 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 992 கோடி) முதலீடு செய்யப்படும்” என்றார்.

முன்னதாக, ஆப்பிள் கணினி நிறுவனம், தனது கிளையை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்று மோடி விடுத்த வேண்டுகோளை, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை பேசுகையில், “இந்தியாவில் 500 ரயில் நிலையங்களில் வை-ஃபை இலவச இணைய வசதி வழங்கப்படும். இணைய வசதியை அனைவரும் பயன்படுத்த வேண்டுமெனில், அவர்களின் பிராந்திய மொழிகளில் சேவைகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இந்தியாவில் குஜராத்தி உள்பட மேலும் 10 பிராந்திய மொழிகளில் விரைவில் சேவைகள் வழங்கப்படும். பிரதமர் மோடியின் இந்த முயற்சியின் மூலம், உலக அரங்கில் தகவல் தொழில்நுட்பத்தில் எதிர்காலத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

“இந்தியாவில் திறன்மிக்க, சிக்கனமான, உறுதியான அரசு நிர்வாகத்தை அளிப்பதற்காக, மின்-ஆளுகை (இ-கவர்னன்ஸ்) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மேலும், வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய, எளிதில் அணுகக்கூடிய, அனைவரும் பங்கேற்கக் கூடிய அளவிலான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க முடியும்.

இந்தியாவில் வசிக்கும் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையிலும் அதிவிரைவில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், ’மின்யுக இந்தியா’ திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சாதிப்பதற்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தைப் போல அரசுத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது முதல் சேவைகளை வழங்குவது வரை, பொருள்களை உற்பத்தி செய்வது முதல் மனிதவளத்தை மேம்படுத்துவது வரை, ‘மின்யுக இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) திட்டமானது, எண்ணற்ற தொழில் வாய்ப்புகள் அடங்கிய இணையதள உலகமாகும்.

sundar - sathya
பெருமிதமளிக்கும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா

இந்தியாவில் உள்ள நமது கிராமங்களை நவீன பொருளாதார மையங்களாக மாற்ற விரும்புகிறோம். அகண்ட அலைவரிசை இணைய வசதியால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் ஒருங்கிணைக்கப்படும். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் போல, இணைய வழி இணைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.  அனைத்துக் கிராமங்களுக்கும் இணைய சேவை வழங்குவதற்காக, 5 லட்சம் கிராமங்களில் கண்ணாடி இழை வடம் (ஃபைபர் ஆப்டிகல் கேபிள்) பதிக்கப்படும்.

ஒவ்வொரு குடிமகனும் தனது தகவல்களை அரசின் பல்வேறு துறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும், பாதுகாக்கவும் ’மின்னணு பெட்டக வசதி’ (டிஜிட்டல் லாக்கர்) உருவாக்கப்பட உள்ளது. புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, ‘இ-பிஸ்’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

நவீன உலகில் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை மிகவும் பரிச்சயமாகிவிட்டன. ஒரு நாட்டில் முகநூல் கணக்குகள் இருந்தால், அது வலுவான தகவல் தொடர்புள்ள நாடாக இருக்கும். கூகுள் இணையதளம் ஆசிரியராக மாறிவிட்டது; டுவிட்டர் பக்கம் ஒவ்வொருவரையும் செய்தியாளராக மாற்றிவிட்டது.

உலகுக்கு புது வடிவம் கொடுப்பதற்காக, பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு குடையின் கீழ் கூடியிருக்கிறார்கள் என்றால், அது இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும்  ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் அமைதியும், வளமும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதற்கு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது என்றார் மோடி.

இந்தியர்கள் பரவசம்:

modi-san jose
கலிஃபோர்னியாவில் ஒரு மக்கள் கடல் நடுவே…

நரேந்திர மோடி உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரைச் சந்திப்பதில் மிகுந்த உற்சாகம் பெறுகிறார். அதேபோல, இந்தியப் பிரதமரை நேரில சந்திக்கும் அனுபவம் பெற்றிராத அவர்களும், அதனால் அதீதப் பரவசத்தில் ஆழ்கிறார்கள். இந்த அமெரிக்கப் பயணமும் அதற்கு விதிவிலக்கல்ல.

அவர் அமெரிக்கவில் இருந்த நாட்களில், ஏதாவது ஒரு இந்தியர் அவரைச் சந்தித்துக் கொண்டேதான் இருந்தார். சென்றமுறை (செப். 28, 2014) நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்தில் நிகழ்த்திய மாயாஜாலத்தை விஞ்சுவதாக சான் ஓசே நகரில் எஸ்ஏபி மையத்தில் நடைபெற்ற (செப். 28, 2015) இந்தியர்களின் கூடுதல் அமைந்தது. இதில் 18,000 இந்தியர்கள் முன்பதிவு செய்து பங்கேற்றனர். நிகழ்ச்சி தொடங்கியது முதல் நிறைவுறும் வரை ’பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷமும் ’மோடி மோடி’ என்ற கோஷமும் தான் எதிரொலித்தபடியே இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை:

கடந்த 16 மாதங்களாக நடைபெறும் பாஜக ஆட்சியால் இந்தியா குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த மாற்றத்துக்கு 125 கோடி மக்களின் அர்ப்பணிப்பு, வலிமை, மனஉறுதி ஆகியவைதான் காரணமாகும்.

இந்த நாட்களில் பல புதிய உச்சங்களை இந்தியா தொட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மையையும் அடைந்திருக்கிறோம். கடந்த 6 மாதங்களில் வெளிவந்த பல்வேறு கருத்துக் கணிப்புகளும், பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடு இந்தியாதான் என்று தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த புத்திசாலிகளால் நமது நாட்டுக்கு ஏற்பட்ட ’அறிவாற்றல் இழப்பு’ (பிரெய்ன் டிரெய்ன்) தற்போது ’அறிவாற்றல் லாபமாக’ (பிரெய்ன் கெயின்) மாறும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  உண்மையில், புத்திசாலிகள் புலம்பெயர்ந்தது அறிவாற்றலுக்கான முதலீடுதான். அவர்கள் தக்க சமயத்தில் தங்களது தாய்நாட்டுக்கு சேவையாற்றுகிறார்கள்.

இந்தியாவில் வெறும் 100 நாள்களில் 18 கோடி ‘ஜன்தன்’ வங்கிக் கணக்குகளை திறந்ததன் மூலம் ரூ. 32,000 கோடி வைப்புத் தொகை கிடைத்துள்ளது. ஒவ்வோர் இந்தியருக்கும் தனிச் சிறப்புமிக்க அடையாளத்தை (ஆதார்) வழங்கி வருகிறோம். அடுத்ததாக, அரசு நிர்வாகத்தை செல்லிடப்பேசிகளில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் (மொபைல் கவர்னன்ஸ்) முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஊழலும் குறைந்திருக்கிறது.

பயங்கரவாதம் என்றால் என்ன? யாரைப் பயங்கரவாதி என அழைக்கலாம் என்பதை சர்வதேச சமூகம் இதுவரை வரையறை செய்ய முடியவில்லை. குறிப்பாக, 70-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ஐ.நா.வால் இதை வரையறை செய்ய முடியாதது வருத்தம் அளிக்கிறது. இந்தியா கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்கள் நாடுகளில் குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் நடைபெற்ற பிறகே பயங்கரவாதம் குறித்து மேலை நாடுகளும், பிற நாடுகளும் விழிப்படைந்தன. இந்த 21-ஆம் நூற்றாண்டை பயங்கரவாதக் கறை படிந்ததாகக் கொண்டு செல்லக் கூடாது. இதற்காக, உலக நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

கலிபோஃர்னியாவுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறேன். இங்கு நிறையவே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  உங்களது விரல்கள் (அமெரிக்கவாழ் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள்) தட்டச்சுப் பலகையிலும், கணினியிலும் பல வித்தைகளை உருவாக்குகின்றன. இதனால், இந்தியாவுக்கு புதிய அடையாளம் கிடைத்திருக்கிறது.

modi- bhagat singh
பகத் சிங்கை மறவாத தேசபக்தர்…

இங்கு அமர்ந்து கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் மூலம், மாற்றத்தை நோக்கிச் செல்லுமாறு உலகையே நிர்பந்தம் செய்கிறீர்கள்.  அந்த மாற்றத்தை ஏற்க மறுப்பவர்கள் விரைவில் இந்த நூற்றாண்டுக்கு பொருத்தமற்றவர்களாக மாறி விடுவார்கள். முக்கியமாக, இந்திய வம்சாவளியினரைப் பார்த்து அமெரிக்கர்கள் பெருமைப்படும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இதற்காக, உங்களை வணங்குகிறேன் என்றார் மோடி.

தனது வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கேலி செய்துவரும் காங்கிரஸுக்கு மறைமுகமாக குத்துவிடவும் மோடி மறக்கவில்லை. “இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் எழுவது பெரிய விஷயமே அல்ல. ஒருவர் ரூ. 50 கோடிக்கு ஊழல் செய்துள்ளார். மேலும், ஒருவருடைய மகன் ரூ. 250 கோடிக்கும், மகள் ரூ. 500 கோடிக்கும் ஊழல் செய்துள்ளனர். ஒருவருடைய மருமகன் ரூ. 1,000 கோடிக்கு ஊழல் செய்துள்ளார். இதையெல்லாம் பார்த்து உங்களுக்கு (வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு) கவலையாக இருக்கிறதா? உங்களுக்கு கோபம் வரவில்லையா? என் நாட்டு மக்களே, நான் உங்கள் முன் நிற்கிறேன். எனக்கு எதிராக ஏதேனும் ஊழல் புகார் இருக்கிறதா?” என்றார் மோடி. “இல்லை” என்று கூட்டம் ஆர்ப்பரித்தது.

”இந்த நாள் அமெரிக்காவில் செப்டம்பர் 27-ஆம் தேதியாகும். அதுவே இந்தியாவில் 28-ஆம் தேதி. இது பகத்சிங் பிறந்த நாளாகும். அந்தத் தியாகியை வணங்குகிறேன். ”பகத்சிங் அமர் ரஹே ஹை” (பகத் சிங் மறைவதில்லை) என மோடி கூற, அதைப் பார்வையாளர்கள் ஆனந்தக் கண்ணீருடன் வழிமொழிந்தனர்.

பாதுகாப்பு மன்றத்துக்கு கோரிக்கை:

Modi- un
ஐ.நா. அமைதி காப்பு நாடுகளின் கூட்டத்தில்…

தனது அமெரிக்கப் பயணத்தின் முக்கிய இலக்காக மோடி கருதியது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பெறுவது ஒன்றே. அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்தபோதும் அதை வலியுறுத்தி, அந்நாட்டின் ஆதரவை மோடி பெற்றார். இந்நிலையில், நியூயார்க் நகரில் செப். 29-ல் நடைபெற்ற ஐ.நா. அமைதி காப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை தனது வேண்டுகோளை முன்வைக்க சிறந்த இடமாக்கினார் மோடி.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உலக நாடுகளிடையே நிலவிய மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். அந்தக் காலக்கட்டத்தில் செல்வாக்கு மிகுந்த, அமைதியை விரும்பிய நாடுகள் இந்த கவுன்சிலில் இடம் பெற்றன.  ஆனால், தற்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. உலக நாடுகளுக்கு புதிது புதிதாக அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.  இதைச் சமாளிப்பதற்கு பழைமையான சில விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இல்லையெனில், அந்த விதிமுறைகளே, அமைதிகாப்பு நாடுகளுக்கிடையே பிரச்னை உருவாகக் காரணமாகிவிடும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உலக நாடுகளிடையே ஸ்திரத்தன்மையும், வளமையும் நிலவுவதற்கு இந்த நடவடிக்கை இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர வேண்டும்.  உரிய நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீரமைக்கப்பட்டால் மட்டுமே ஐ.நாவின் மாண்பையும், ஆற்றலையும் பாதுகாக்க முடியும்.

அமைதிகாப்பு நாடுகளின் மாநாட்டை தற்போது கூட்டியிருப்பது அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிக்க மட்டுமே அல்ல; புதிய சவால்களை எதிர்கொள்ள அந்நாடுகள் தயாராகும்படி அறிவுறுத்தவும்தான்.  தற்போதைய சூழலில், சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் அமைதிகாப்பு நாடுகள் பெரும்பாலும் பங்கேற்பதில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது. மாறிவரும் பாதுகாப்பு சூழலுக்கேற்றவாறு அமைதிகாப்பு நாடுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

INDIA-US-DIPLOMACY
அமெரிக்க அதிபருடன்…

நீண்டகாலமாக ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கு சிறப்பான பங்களிப்பு அளித்து வரும் வெகுசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.  ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கு இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் ராணுவ வீரர்களை இந்தியா அளித்துள்ளது. இதில் 161 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.  இந்நிலையில், ஐ.நா. அமைதி நடவடிக்கைகளுக்கு கூடுதலாக, படையில் 850 திறமையான ராணுவ வீரர்கள், மூன்று காவல் துறை படைப் பிரிவினர் கொண்ட ஒரு படைப் பிரிவை வழங்க இந்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதேபோல, மற்ற அமைதிகாப்பு நாடுகளும் ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டும். அதேவேளையில், அதிகார வரம்புகளுக்கு உள்பட்டு சர்வதேச பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகள் அமைய வேண் டும் என்றார் மோடி.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவை நியூயார்க்கில் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, பருவநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.  பருவநிலை மாற்றத்தை எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் அணுகுவதைக் காட்டிலும், நேர்மறையான எண்ணத்துடன் அணுகுவதே வெற்றி தரும் என ஒபாமாவிடம் மோடி வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இயற்கை எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும், கரியமில வாயுவை உலகில் அதிகம் நிரப்பும் நாடான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவிடம் மோடி எடுத்துரைத்தார்.

சாதனையின் பின்புலம்:

modi us indians 2
மோடி மந்திரம்- எங்கும்….

இவ்வாறாக, தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின.

’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், பலரும் அறியாத சங்கதி ஒன்று உள்ளது. இந்தப் பரவச அனுபவம் ஒரே நாளில் சாத்தியமாகவில்லை. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அமெரிக்காவில் இயங்கும் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கமும், பல்வேறு ஹிந்து இயக்கங்களும், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொஸைட்டியும், பாஜக கடல் கடந்த நண்பர்கள் குழுவும் பல்லாண்டுகள் பாடுபட்டதன் பலன் இப்போது அறுவடையாகிறது. மோடியின் இந்தப் பயணம் வெற்றியடைய பலநூறு அமெரிக்கா வாழ் இந்திய வல்லுநர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக பாடுபட்டனர். அவர்கள் பணத்துக்காகப் பணியாற்றவில்லை. இந்த நாடு நலம் பெற வெண்டுமென்ற தாபத்தில் செயல்பட்டவர்கள் அவர்கள்.

மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ஆகும் செலவை ஆராய வேண்டும் என்று பொறாமையில் அறிக்கை வெளியிடும் ஆனந்த் சர்மாக்களுக்கு இது புரியாது. கோடிக் கணக்கில் மோடியின் பயணச் செலவாக வீணடிக்கப்படுவதாகப் பிதற்றும் காங்கிரஸ்வாலாக்கள், இந்தப் பயணத்தால் மோடி சாதித்தது ஒன்றுமில்லை என்கிறார்கள். அவர்கள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டிருக்கட்டும்; அவர்களின் உலகம் இருண்டே கிடக்கட்டும். உலகம் ஒளிமயமானது. அதில் பாரதம் எழுச்சி ஞாயிறாக உதயமாகி வருவதை சுயநலக் குருடர்கள் பார்க்க வேண்டியதில்லை.

எந்த ஒரு இந்தியப் பிரதமரும் சிந்திக்காத கோணத்தில், எந்த வெளிநாடு சென்றாலும் அங்கு வாழும் இந்தியர்களைச் சந்திக்கிறாரே அதுவே மோடியின் பெருமை தான். எந்த உலகத் தலைவரைச் சந்தித்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு கேட்கிறாரே அதுவே மோடியின் சிறப்பு தான். அவரது தலைமையையும் வேண்டுகோளையும் ஏற்று இந்தியாவில் முதலீடு செய்யவரும் வெளிநாட்டு நிறுவனங்களால் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் நன்மைகளை இப்போது பட்டியலிட முடியாது.

modi-us indians
பாரத அன்னையை வாழ்த்தும் அமெரிக்க இந்தியர்கள்…

தி ஹிண்டு போன்ற அதிபுத்திசாலி பத்திரிகைகள், எப்படியேனும் விமர்சிப்பதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களால் கபளீகரமாகப் போகும் இந்திய இயற்கைவளம் குறித்து பூச்சாண்டி காட்டலாம். மோடி அமெரிக்காவில் சாதித்ததை ஜவஹர்லால் நேரு செய்திருந்தால் தொழில் துறைக்குத் தெம்பான செயலாகக் காட்டியிருக்க முடியும். என்ன செய்வது? காலம் நேருவின் முகத்தைத் தோலுரித்து (நேதாஜி வந்துகொண்டே இருக்கிறார்), மோடிக்கு சாதகமாக மாறி இருக்கிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் இனைந்து அளித்த பேட்டியில், “இதுவரை இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தகம் ரூ. 6.60 லட்சம் கோடியாக உள்ளது. வரும் நாட்களில் இதன் மதிப்பு ரூ. 33 லட்சம் கோடியாக உயரும்” என்று கூறி இருக்கிறார்.

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், முதலீட்டுக்கு ஏற்ற தேசமே சிறந்த தேசமாக இருக்கும். ஏனெனில் அங்குதான் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்கும். அந்த வகையில் பிரதமர் மோடி தெளிவான பார்வையுடன் சிந்தித்துச் செயல்படுகிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரிக்கட்டும். உலக அரங்கில் இந்தியாவில் செல்வாக்கு அப்போது தானாகவே அதிகரிக்கும்.

 

முகநூல் தலைமையகத்தில் முத்திரை

முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சுமார் ரூ.530 லட்சம் கோடியாக (8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) உள்ள இந்தியப் பொருளாதாரத்தை ரூ. 1,300 லட்சம் கோடியாக (20 டிரில்லியன் டாலர்கள்) உயர்த்துவதே தனது இலக்கு என்றும் மோடி கூறினார்.

உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் (ஃபேஸ்புக்) தலைமையகம், அமெரிக்காவின் சான்ஓசே நகரில் அமைந்துள்ளது. அந்நிறுவனத்தில் தலைமை அலுவலகத்துக்கு செப். 27-ல் சென்ற மோடி, முகநூல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க்குடன் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிலளித்தார்.

modi- facebook
முகநூல் தலைமையகத்தில் அதன் தலைவருடன்…

இளமைப் பருவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த மோடி, 90 வயதைக் கடந்த தனது தாய், பாத்திரங்களைக் கழுவும் தொழிலாளராக பணியாற்றி தன்னை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

இந்தியாவில் எளிமையாகத் தொழில் தொடங்குவதற்கு வகை செய்யும் சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண்மை, சேவைகள், உற்பத்தி ஆகிய மூன்று துறைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் இழந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டு வரும் செயல்பாடுகளும் கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து நாடுகளிடமும் நிதி இருப்பு உள்ளது. ஆனால், அதை எங்கு முதலீடு செய்வது என்பது தான் பெரும்பாலான நாடுகளுக்குத் தெரிவதில்லை. முதலீட்டுக்கான முகவரியைச் சொல்வதென்றால் அந்த இடம் இந்தியா. முதலீட்டாளர்களின் சொர்க்கபூமியாக இந்தியா விளங்குகிறது என்றார் மோடி.

ஊரகப் பகுதிகளை இணையதளம் வாயிலாக இணைக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முகநூல் நிறுவனம் ஆதரவளிக்கும் என்று மார்க் ஜக்கர்பெர்க் தெரிவித்தார்.

உலகை தகவல் தொழில்நுட்பத்தால் இணைத்த மார்கின் பெற்றோரை வணங்குவதாகக் கூறிய மோடி., அவர்களையும் சந்தித்தார். அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தது.

2 Replies to “மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு”

  1. ” உலகம் ஒளிமயமானது. அதில் பாரதம் எழுச்சி ஞாயிறாக உதயமாகி வருவதை சுயநலக் குருடர்கள் பார்க்க வேண்டியதில்லை. ”

    Yes.
    True.
    Well written article and thank you for sharing.
    Kind Regards,
    Srinivasan. V.

  2. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *