நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

 << முந்தைய பகுதி

தொடர்ச்சி…

‘தலித் என்றால் சாதி மறுத்தல்’ என்று சொல்லுகிறபட்சத்தில், அது ஏன் பிறப்பால் சாதி இழந்தவர்களுக்கு மட்டுமான அடையாளமாக இருக்கவேண்டும்? தத்தம் சாதி அடையாளத்தைப் புறக்கணிப்பவர்கள் அல்லது மறுப்பவர்களும் ‘தலித்’ என்று அழைக்கப்படுவதை எது தடுக்கிறது? என்று ஒரு பத்தியை ஆரம்பிக்கிறார். ‘தலித் என்றால் சாதி மறுத்தல்’  என்று யாரும் சொல்லவில்லை. ப்ரோக்கன் – ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வகையிலேயே பயன்படுத்துகிறார்கள். அந்தவகையில் அனைத்து சாதியில் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுமே தலித்கள்தான். அதாவது, எல்லா சாதிகளிலுமே தலித்கள் உண்டு. எனவே, தலித் என்றால் சாதி மறுத்தல் என்ற புதிய இல்லாத ஒரு கருதுகோளை முன்வைத்து அவர் சொல்லிச் செல்லும் அனைத்தையுமே ஏற்கமுடியாமல் போகிறது.

*****

muneeswaranநாட்டுப்புற தெய்வங்களின் உருவாக்கம் பற்றிய கட்டுரையில் கடந்த எழுபது ஆண்டுகளில் ஒரு நாட்டுப்புற தெய்வமும் உருவாகியிருக்கவில்லை; பின் காலனிய காலகட்டத்தில் மேல் நிலையாக்கமே வளர்ச்சி என்று சொல்லப்பட்டதால் நாட்டுப்புற தெய்வங்கள் உருவாகவில்லை; தமிழகத்தில் பகுத்தறிவுப் பிரசாரம் நடந்ததால் நாட்டுப்புற தெய்வங்கள் உருவாகியிருக்கவில்லை என்று மூன்று காரணங்களைச் சொல்லி ஆரம்பிக்கிறார். இந்த மூன்றுமே தவறானவை.

முதலில் 70 வருடங்கள் என்பது மிகவும் குறுகிய காலகட்டம். ஒரு நாட்டுப்புற தெய்வம் மெள்ள மெள்ளத்தான் உருவாகும். ஒரு குறிப்பிட்ட நபர் பற்றிய சரித்திர நினைவுகள் இரண்டு மூன்று தலைமுறைக்குள் அழிந்து போகாது. சரித்திர நினைவுகள் அழிய ஆரம்பித்தபிறகுதான் புனைவுகள் அந்த இடத்தைப் பிடித்து ஒரு நபரை தெய்வமாக்கும் செயல்பாடுகள் ஆரம்பிக்கும். எனவே 70 ஆண்டுகளுக்குள் ஒரு நாட்டுப்புற தெய்வம் கூட உருவாகவில்லை என்பது கல்யாணம் ஆகி இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டது. இன்னும் குழந்தையே பிறக்கவில்லையே என்று கவலைப்படுவதைப் போன்றது.

தமிழகத்தில் பகுத்தறிவுச் செயல்பாடுகள் தீவிரமாக நடந்ததால்தான் நாட்டுப்புற தெய்வங்கள் உருவாகவில்லை என்பது நல்ல நகைச்சுவை. ஏனென்றால் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நாட்டுப்புற தெய்வங்களின் உருவாக்கம் இதே காலகட்டத்தில் அருகித்தான் போயிருக்கிறது. மேலும் தமிழகத்தில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. விஷயம் என்னவென்றால், விஞ்ஞான, நவீன காலகட்டத்தில் இப்படியான புனைவுகள் இயல்பாக மறைந்துபோகும் என்பதுதான் உண்மையான காரணம். பயண வசதிகள் பெருகியதாலும் பல்வேறு மக்கள் திரளுடனான சந்திப்புகளும் தகவல் பரிமாற்றங்களும் பல்வேறு இடப் பெயர்வுகளும் சாத்தியமானதாலும்தான் நாட்டுப்புற தெய்வங்கள் உருவாவது குறைந்திருக்கிறது. இந்த நவீன காலகட்டத்தில் புனைவுகளுக்கும் மிகைப்படுத்தல்களுக்கும் இடம் கொஞ்சம் குறைவு என்பதால் கொஞ்சம் கூடுதலான கால இடைவெளியில் தெய்வங்கள் பிறக்கத்தான் செய்யும். ஒஸாமாவின் உடலை கடலில் வீசி எறிந்ததாகச் சொன்னதையும் பிரபாகரனுடைய வீடு முதலான அனைத்து தடயங்களையும் சிங்கள அரசு துடைத்தழித்த அவசரத்தையும் கண் முன்னால் கண்டிருக்கிறோம். அவர்கள் தெய்வங்களாக நிச்சயம் மெள்ள உருவாவார்கள். முத்துராமலிங்கமும் இமானுவேல் சேகரரும்கூட தெய்வமாக்கப்படலாம்!

அடுத்ததாக அவர் சொல்லும் பத்தி முழுக்கவே தவறு:

கடந்த எழுபது வருடங்களில், பல தெய்வ வழிபாடு என்ற நிலையைத் தாண்டி, ஏக தெய்வ வழிபாட்டிற்கு நகர்ந்து வந்திருப்பதை, சமயங்களின் பரிணாம வளர்ச்சி என்று பேசும் மானிடவியலாளர்கள், பகுத்தறிவு சார்ந்த நகர்வு என்றே விளக்குகிறார்கள். அதாவது, செவ்வியல் தெய்வங்களை நோக்கி நகர்ந்த மேல்நிலையாக்கம் சமய வளர்ச்சிப் போக்கில் நிகழ்ந்தவொரு பகுத்தறிவுப் போக்கு.

கடந்த 70 வருடங்களில் பல தெய்வ வழிபாடு என்ற நிலை ஏக தெய்வ வழிபாட்டுக்கு நகர்ந்திருப்பதாகச் சொல்கிறார். உண்மையில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள்தான் அவை தோன்றிய இடத்தில் இருந்த பல தெய்வ வழிபாடுகளை அழித்தொழித்து ஏக தெய்வத்தைத் திணித்திருக்கின்றன. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நடந்துமுடிந்த விஷயம். அதை எந்த மானிடவியலாளர் மேல்நிலையாக்கமாகவும் பகுத்தறிவு சார்ந்த நகர்வாகவும் சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் உண்மையில் மானிடவியலாளராக இருக்கமாட்டார். அந்த மதங்களின் அரசியல் ஏஜெண்டாகத்தான் இருப்பார்.

இது ஒரு பக்கமென்றால் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏக தெய்வ வழிபாடு என்ற உருவாக்கம் முற்றிலும் மாறுபட்ட கோணத்திலேயே நடக்கிறது. அதாவது இங்கு அது பிற நாட்டார் தெய்வங்களை இடம் பெயர்த்து அந்த இடத்தில் ஒற்றை தெய்வம் நிலைநிறுத்தப்படுவதில்லை. நாட்டார் தெய்வ வழிபாடுகள் சிற்சில இயல்பான மாற்றங்களோடு வெகு விமர்சையாக நடக்கவே செய்கின்றன. ராமர் வழிபாடும், விநாயகர் வழிபாடும் எந்த இசக்கி வழிபாட்டையும் மாடன் வழிபாட்டையும் ஒரு நாள் கூட முடக்கியதில்லை. இங்கே ஏக தெய்வம் என்பது ஏற்கனவே இருக்கும் தெய்வங்களோடு கூடுதலாக இன்னொரு தெய்வமாக அனைத்து ஜாதியினருக்குமான பொது தெய்வமாகவே உருவாகின்றன.

எனவே, அரசியல் வசனங்கள் சரித்திர மறுப்புகளாக ஆகாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

அதே கட்டுரையில் அடுத்ததாக, அகால மரணங்கள் அதிகரிக்க, அதிகரிக்க ‘இறந்த தெய்வங்களின்’ எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த தெய்வங்களை நாட்டுப்புற மக்களே இரண்டு கட்டங்களாக உருவாக்குகிறார்கள்; முதலில், படுகொலை செய்கிறார்-கள், அதன் பின் சாவகாசமாய், கொலையுண்டவர்களை தெய்வமாக்குகிறார்கள் என்று சொல்கிறார். உண்மையில் ஆதிக்க சாதிக்காரர்கள் கொல்கிறார்கள். அடக்கப்பட்ட சாதியினர் கொல்லப்பட்ட நபரை தெய்வமாக்கி பதிலடி கொடுக்கிறார்கள். இருவருமே நாட்டுப்புற மக்கள் என்று இந்த இடத்தில் இணைத்துச் சொல்வது அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், இப்படிச் சொல்லும்போது தெய்வ உருவாக்கத்தில் மேல் சாதிக்கும் ஈடுபாடும் நேர்மறையான பங்களிப்பும் இருப்பதாக ஒரு தொனி வருகிறது. என்னதான் அவர்களுக்கு இறந்தவர்களுடைய ஆவியைத் திருப்தியாக்கியாக வேண்டும் என்ற பயம் இருக்கும் என்றாலும் தன்னால் கொல்லப்பட்ட தாழ்ந்த சாதிக்காரனை தெய்வமாக அவர்கள் வணங்குவதில்லை. அதுபோல் உயர் சாதியினர் உருவாக்கும் பெண் தெய்வங்கள் என்பதில் உயர் சாதிப் பெண்களைக் கொன்றுவிட்டு அவர்களே அந்தப் பெண்களை தெய்வமாக உருவாக்குவதில்லை. அவர்களைவிட உயர் சாதியால் கொல்லப்பட்டவர்களையே அல்லது மன்னர்கள், இஸ்லாமியர் போன்ற பிற ஆதிக்க சாதிகளால் கொல்லப்படும்போதே அந்த உயர் சாதிப் பெண்களை தெய்வமாக்கிக் கொள்வது வழக்கம். அல்லது அந்த உயர் சாதியில் இருக்கும் எளிய மக்கள் தமது சொந்த சாதி ஆதிக்க சக்திகளை எதிர்க்க முடியாமல் உருவாக்கிக் கொள்ளும் தெய்வமாகவே இருக்கும்.

உண்மையில் இப்படியாக இறந்து பிறக்கும் தெய்வங்கள் பலவீனமானவர்களின் கையறு நிலையிலான எதிர்வினையாகவே இருக்கும். ஆனால், தர்மராஜோ கொலை செய்த மேல் சாதியினரே தமது பயத்தினால் தன்னால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை தெய்வமாக ஆக்கியதாகச் சொல்கிறார். அப்படி எந்த மேல் சாதியும் கீழ்சாதி நபர்களைக் கும்பிட்டு வருவதில்லை. அப்படி அவர்களுடைய உருவாக்கமாக அது இருந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்களின் தெய்வமாக அது ஆகியிருக்கவும் முடியாது. கொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும். இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா… பறையர்கள் தெய்வமாக்குவார்களா..? நினைவு நாள் கொண்டாட்டம்தானே தெய்வ உருவாக்கலின் முதல் படி. முதலில் இதைச் செய்வது யார்..? இளவரசன் தெய்வமாக்கப்பட்டால் அது யாருடைய முன்னெடுப்பினால் சாத்தியமாகும்?

எந்தவொரு சாதி வன்முறையும், இந்தியச் சட்டவியலின்படி குற்றமாக அறிவிக்கப்பட்டதால், அது, இரண்டு தனி நபர்களுக்-கிடையி-லான குற்றவியல் நடவடிக்கையாக மாற்றமடைந்துவிட்டதாகச் சொல்கிறார். இதற்கு உதாரணமாக கீழ்வெண்மணி கொடூரத்தில் நாயுடு செய்தது தனி நபர் குற்றம் என்று நீதிமன்றம் சொன்னதாகச் சொல்கிறார். உண்மையில் செல்வந்தர்களான பண்ணையார்கள் தீப்பந்தத்தையும் துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டுபோய் அந்தக் குற்றத்தைச் செய்திருக்கமாட்டார்கள் என்று சொல்லித்தான் தீர்ப்பு வழங்கியது.

இந்த விளக்கத்தின்படி, தலித்துகளின் மீதான வன்கொடுமைக்கும் நிலவும் சமூக ஒழுங்கமைப்பிற்கும் (நிலவும் சமூக அமைப்பு சமத்துவமானது என்ற கற்பனையில்) நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்பட்டது. வன்கொடுமை என்பது, தலித் பலியாளுக்கும் மனம்பிறழ்ந்த சாதிக் குற்றவாளிக்குமான பிரச்னை என்ற பார்வை, பாதிக்கபட்ட தலித் பலியாளை அவருடைய சமூகத்திலிருந்து பிரித்து அனாதையாக்கியது; அதே நேரம், தீண்டாமையை உற்பத்தி செய்த சாதி சமூக அமைப்பைக் குற்றவுணர்விலிருந்து நிரந்தரமாய் விடுவிக்கவும் செய்தது என்று குற்றம் சாட்டுகிறார்.

இது இப்படித்தானே இருக்கமுடியும். வஹாபியிஸ்ட்களும் ஐ.எஸ்.ஐ.எஸ்.களும் அல்லாஹு அக்பர் என்று சொல்லியபடியே அத்தனை கொலைகளைச் செய்தாலும் அவர்களுடைய செயல்களுக்கு இஸ்லாம் காரணமல்ல என்றுதானே சொல்லப்படுகிறது. நாயுடுக்களின் செயல்பாடுகளுக்கு சாதி சமூகம் காரணம் என்று சொல்லாமல் இருப்பதை விமர்சிக்கும் தர்மராஜ்கள் வஹாபியிஸ்ட்களுடைய செயல்களுக்கு அவர்களுடைய மதமே கூடுதல் காரணமாக இருக்கும் நிலையிலும் இஸ்லாமைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதில்லையே… இவ்வளவு ஏன் வஹாபியிஸ்ட்களிக்கூட கூண்டில் ஏற்றுவதில்லையே..?

ஐரோப்பியர்களின் அனைத்து ஏகாதிபத்திய, பொருளாதார விரிவாக்கத்துக்குப் பின்னாலும் கலாசார அழித்தொழிப்புக்குப் பின்னாலும் தேவனின் மகிமையை உலகுக்குக் கொண்டு செல்லும் லட்சியம் நீறு பூத்த நெருப்பாக இருக்கத்தானே செய்தது. எந்த தேவாலயத்தையாவது இதற்காக யாரேனும் விமர்சித்ததுண்டா..? ஒரு வன்முறையை வைத்து இன்னொரு வன்முறையை நியாயப்படுத்தக்கூடாதுதான். ஆனால், ஒரு ஆதிக்க சக்தியை எதிர்க்கப் புறப்படுபவர்கள் அதைவிட கொடூரமான இன்னொரு ஆதிக்க சக்தி பற்றி மவுனம் சாதிக்கும் சந்தர்ப்பவாதத்தைச் சுட்டிக்காட்டவே இந்த ஒப்பீட்டைச் செய்கிறேன். மேலும் சட்டம் என்பது குற்றம் செய்த நபரைத்தான் தண்டிக்க முயற்சி செய்யும். குற்றம் செய்தவரின் சமூகச் சூழல், மதம், பொருளாதார, அரசியல் நிலை இவற்றைப் பற்றியெல்லாம் எதுவும் சொல்லாது. இந்து செய்யும் தவறுக்கு மனு ஸ்மிருதியை எரி என்றோ இஸ்லாமியர் செய்யும் தவறுகளுக்கு குர்ரானைக் கொளுத்து என்றோ கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு பைபிளைக் கிழித்துப் போடு என்றோ நீதிபதிகள் சொல்ல முடியாது.

அதுபோல், பலியாள் பற்றிய பகுதியில் பிராமணர்களைக் கேடு விளைவித்தவர்களாக முன்வைத்த அதே கையால், பிராமணரல்லாத சூத்திரர்களைத் திராவிடப் பலியாட்களாக சித்திரித்ததில், வெகுஜன அரசியலின் முட்டாள்தனமே மேலோங்கியிருந்தது என்று சொல்கிறார். இங்கும் தவறான வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அது முட்டாள்த்தனமல்ல… அராஜகம், கொடூரமான தந்திரம் அல்லது அதிகாரப் பரிமாற்றம் மட்டுமே.

*****

நன்றியின்மையின் உச்சபட்ச கொடூரம்...
நன்றியின்மையின் உச்சபட்ச கொடூரம்…

மாட்டுக்கறி பற்றிய கட்டுரையில் ஜே.என்.யு.வில் நடத்திய கருத்தரங்கங்களில் மாட்டுக்கறியை ரகசியமாகச் சாப்பிட்டது பற்றிய குறிப்புகளைப் பார்க்கும்போது இந்துத்துவ எதிர்ப்பு கொடி கட்டிப் பறக்கும் இடதுசாரிக் கோட்டைகளில்கூட நீக்கமற நிறைந்திருக்கும் ‘ஆதிக்க சாதி’ மதிப்பீடுகள் கொஞ்சம்போல் நம்மை அதிரவே வைக்கின்றன. அது மட்டுமல்லாமல் இள ரத்தம் கொதிக்கும் தலித் சகோதரர்கள் இந்த விஷயத்தைப் பெரிய அவமானமாகவும் சவாலாகவும் எடுத்துகொண்டு போராடியிருக்கவேண்டும். ஆனால், நூலாசிரியரும் அவரையொத்த தலித் இளைஞர்களும் அவர்கள் நடத்திய பெரும் தமிழ் விழாவில் சைவ உணவையே போட்டதாகவும் அதை நயத்தகு நாகரிகமாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். அது முழுக்க முழுக்க சூத்திர தமிழர்களுக்காகவும் பிற இடதுசாரிகளுக்காகவும் செய்துகொண்ட சமரசமே. அது மட்டுமல்லாமல் அந்த சமரசத்தை கிண்டல் மூலம் கடக்க விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள். சூத்திர ஜாதியினரின் ஒடுக்குமுறைகளை மவுனமாக சகித்துக்கொள்ளும் தமிழக தலித் அனுபவத்தை இடதுசாரி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் வெளிப்படுத்த நேர்வதைப் பார்க்கும்போது மனதுக்குள் வருத்தமே மேலிடுகிறது. வெறென்ன இந்துத்துவ, பிராமணிய ஆதிக்க சக்திகளை எதிர்ப்பது மட்டும்தானே எளிது. ஆதாயம் மிகுந்தது. பாதுகாப்பானது.

ஆனால், அந்த சமரசத்தையும் தாண்டி அந்தக் கட்டுரையின் முடிவில் நூலாசிரியர் சொல்லியிருக்கும் விஷயமும் எழுப்பியிருக்கும் கேள்வியும் மிகவும் முக்கியமானது : (பெரும்பான்மையினரின்) சமையலறைகளில் தயாரிக்கப்படாத உணவுக்கு சமூக அங்கீகாரம் கிடையாது; கோவில்களில் பேசப்படாத எந்தப் பேச்சுகள் எவ்வளவு நாத்திக, பகுத்தறிவு மிகுந்ததாக இருந்தாலும் சமூகம் அதை வெறும் விடலைத்தனமாகச் சகித்துகொண்டு புறமொதுக்கிவிடும். உயர் சாதி சார்ந்த மற்றும் பக்தி சார்ந்த மதிப்பீடுகளை அந்தக் குடும்பப் பெண்களிடம் கொடுத்திருப்பதே அந்த அமைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம். இதைப் புரிந்துகொள்ளாத பொதுவுடமை சித்தாந்தங்கள், பகுத்தறிவுக் கொள்கைகள், தீவிர கலை – இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்றுவிட்டனவா என்றறொரு கேள்வியை எழுப்புகிறார். தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு வாய்க்குமென்றால் தமிழகச் சூழலில் தலித் நலனுக்கு பேருதவியாக அது இருக்கும்.

******

‘மெட்ராஸ்’ திரைப்படம் குறித்த கட்டுரையில் காளிதாசனுடைய சைகைகளுக்கு பண்டிதர் விளக்கம் கொடுத்ததுபோல் ஏராளமான குறியீட்டு அர்த்தங்களைக் கண்டுசொல்கிறார். அந்தப் படம் தமிழ் சூழலை யதார்த்தமாகச் சித்திரிப்பதில் இருந்து எந்த அளவுக்கு தந்திரமாக பம்மாத்து செய்தபடி ஓடுகிறது என்பது பற்றி ஒரு கேள்விகூட அவரால் எழுப்பப்படவில்லை. அந்தப் படத்தில் சுவர் ஒன்று யாருக்கு சொந்தம் என்ற அடிப்படையில் மோதல் நிகழ்வதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான தமிழகத்தில் இந்தச் சண்டையானது தலைவர்களின் சிலைகளை வைத்தும் கொடிக் கம்பம் நடுவதை வைத்தும்தான் உருவாகியிருக்கிறது. உத்தப்புரம் சுவர் கூட மிகப் பெரிய வேலி என்ற அடிப்படையில் உருவானதுதான். அதிமுக திமுக பிரமுகர்களுக்கு சுவரில் யாருடைய விளம்பரத்தை எழுதுவது என்று சில்லறைச் சண்டை நடக்கும். அதை சாதி மோதலாக மிகைப்படுத்தியிருக்கிறார். உண்மையில் சிலையை வைத்து இந்தப் படத்தை எடுக்க முடியாமல் போன அவலமே திரை இயக்குநராலும் விமர்சகர்களாலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். தென் மாவட்டங்களில் கூண்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் சிலைகள் மிகப் பெரிய சோகத்தை இன்றும் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தின் முக்கியமான சாதனை என்பது தலித்தின் வாழ்க்கையை பொது சமூகம் பொறுமையாக காது கொடுத்துக் கேட்க வைத்திருக்கிறது என்று சொல்கிறார்.

‘உங்கள் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதற்காக, உங்களை உரையாடலுக்கு அழைத்து வரவேண்டும் என்பதற்காக, தங்களது வாழ்க்கையைக் கூட அவர்கள் முழுமையாய்ச் சொல்லாமல் உங்களுக்காக சமரசம் செய்து கொண்டார்கள். நீங்கள் பாதியிலேயே எழுந்து போய்விட்டால்? யாரிடம் போய்பேசிக் கொண்டிருப்பது? இதற்காகத்தான் அவர்கள் உங்களுக்கு விருப்பமான வகையில் தங்களது கதையை சிதைத்துக் கொண்டார்கள். தங்களது விடுதலைக்-கான அரசியலை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பரிதவித்து நிற்கிறார்கள். சொந்த சாதி அமைப்புகளைச் சந்தேகப்படும் படைப்பாக இது வெளிவந்திருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றினால், நல்லது! அது உங்களுக்காக (பெருஞ்சமூகத்திற்காக) செய்து கொள்ளப்பட்ட சமரசம் தான். தலித் அரசியலை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டது; முழுமை-யாகப் பேசவில்லை என்றாலும், அதுவும் இந்த உரையாடலை சாத்தியப்படுத்துவதற்காக செய்துகொண்ட சமரசம் தான்’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.

உண்மையில் தலித் தன்னுடைய வருத்ததையோ கோபத்தையோ பரிதாபகரமான நிலையையோ தனக்கு இழைக்கப்படும் அநீதி பற்றியோ பேசாமல் அப்படி என்னதான் உரையாட விரும்புகிறார். ‘எங்கள் சமூகத்தின் பிரச்னை எங்கள் சாதித் தலைவர்கள்தான்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைத்தான் ஆதிக்க சாதிகள் விரும்புவார்கள் என்றால் அதை ஒரு தலித் போய் பேசிவிட்டு வருவாரென்றால், அப்படியான உரையாடல் நடந்து என்னதான் பிரயோசனம். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துச் சொல்லாமல் முதலாளி கொடுக்கும் டீ சமோசாவைச் சாப்பிட்டுவிட்டு, மாதம் மும்மாரி பொழிகிறது… தொழிலாளர்கள் அமோகமாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டுவரும் தொழிற்சங்கத் தலைவனை நியாயப்படுத்த முடியுமா என்ன? ஆதிக்க சாதி எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் பேசுவதற்கு பதில் பேசாமலேயே இருந்துவிடலாமே. சம்திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங். என்பது உண்மைதான். ஆனால், நத்திங் ஈஸ் பெட்டர் தேன் Cowardice அல்லவா..?

அப்படியே உள் சாதிப் பிரச்னையைப் பேச முடிவெடுத்தால் நாம் எதிரியுடன் சண்டைபோடுவதை விட்டு விட்டு நமக்குள் இப்படிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோமே… இது தவறு அல்லவா என்று ஒரு வசனத்தைக் கூடவா வைக்க முடியாமல் போய்விட்டது. உண்மையில் கார்த்தியும் அவர்களுடைய குடும்பத்து பினாமியுமான ஞானவேல் ராஜாவும் கவுண்டர்கள் என்பதால்தான் தலித் கதாயாயகனாக நடித்த பிறகும் ஒரு தலித்தையே வில்லனாகக் காட்டியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்ற சாதிய சமரசத்தை எதற்காக இப்படி நியாயப்படுத்தவேண்டும்? தேவர் மகன் படத்திலும் இதே சமரசம் தானே செய்துகொள்ளப்பட்டிருந்தது. இதற்காகவும்தானே அந்தப் படமும் விமர்சிக்கப்பட்டது. தேவரை வில்லனாகவும் காட்டியதன் மூலம் சமத்துவ, விடுதலை அரசியலை சாத்தியமான அளவில் பேசியதாக அவரையும்கூடப் பாராட்டிவிடமுடியுமே? அதைச் செய்ய முடியுமா தலித் போராளிகளால்?

******

கைசிக நாடகத்தில் ஒரு காட்சி
கைசிக நாடகத்தில் ஒரு காட்சி

கைகசி புராண நாடகம் தொடர்பான கட்டுரையானது அரசியல் வாசிப்பு எந்த அளவுக்கு திரிபடையக்கூடும் என்பதற்கான அருமையான சாட்சியாக இருக்கிறது. அந்தக் கதையில் தாழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படும் சாதியைச் சேர்ந்த ஒருவர் கோவிலில் பாடல் பாடுகிறார். அக்ரஹாரத்துக்குள் நுழையவே விடவில்லை…  பொதுக்குளத்தில் தண்ணி எடுக்கவேவிடவில்லை என்றெல்லாம் உரிமைக்குரலும் போராட்டங்களும் நடத்தியாகவேண்டியிருந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் உயர் சாதிக் கோவிலில் மூலவருக்கு முன்னால் நின்று கொண்டு பாடலைப் பாடியிருக்கிறார் என்ற செய்தி நிச்சயம் பல கற்பிதங்களை உடைக்கும் என்பதால் தலித் வாசிப்பு என்ற பெயரில் தரவுகளைச் சாராமல் உருவாக்கிக்கொண்ட அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டுடைக்கிறார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் ஒரு தாழ்த்தப்பட்டவர் துடிப்புடன் இருப்பதைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான மறைமுக உத்தரவாகப் பார்க்கிறார். கொடுத்த வாக்கை மீறும்படித் தூண்டும் தெய்வத்தையே மீறிச் செல்வதை முட்டாள்த்தனமாகச் சித்திரிக்கிறார். தாழ்த்தப்பட்டவர்களை நேர்மையற்றவர்களாகச் சித்திரித்தால் அவர்கள் மீதான அவதூறாகச் சொல்லவேண்டும். நல்லவர்களாகச் சித்திரித்தால் நல்லவனாக இருந்தாகவேண்டும் என்று மிரட்டியதாகச் சொல்லவேண்டும் என்ற அரசியல் பார்வை துரதிஷ்டவசமானது. இப்படி எடுத்துக்கொண்டால், எல்லா சாதியினருக்கு முன்வைத்த நீதி போதனைக் கதைகளையுமே அவர்களை நல்லவர்களாக நடந்துகொள்ளச் சொல்லும் போலிஸிங் ஆக்டாக எடுத்துக்கொண்டு நிராகரித்துவிடலாமே. அப்படியானால், கொள்ளையடி… வாக்கு மீறு… கொலை செய் என்றுதான் கதை புனையவேண்டும் என்று எதிர்பார்க்கிறர்களா தலித் வாசிப்பாளர்கள்?

மரபில் வேரூன்றியபடி நவீனம் கிளைக்கவேண்டும் என்று சொல்லப்படுவதை நிராகரிக்கிறார். பறையர்களின் நவீன இசை என்பது பறையில் இருந்து கிளர்ந்து வரவேண்டும் என்று சொல்வதை நிராகரிப்பதுபோன்ற அசட்டு வாதம் இது. மேலும் கைகசி நாடகத்தை நடத்துபவர்கள் மரபைப் பாதுகாக்கும் நோக்கில்தான் அதை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். அவர்கள் இசையில் ஃப்யூஷன் செய்வதுபோல் நவீன வடிவமாக்குகிறேன் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை. எனவே, அவர்களை ஏன்  நவீன நாடகமாக ஆக்கவில்லை என்று கேட்பது அபத்தம். ரிவைவலை நோக்கமாகக் கொண்ட ஒருவரைப் பார்த்து ஏன் ரீ கன்ஸ்ட்ரக்ட் அல்லது மறு வாசிப்பு செய்யவில்லை என்று கேட்பது தவறு.

******

அடுத்த கட்டுரையையும் வழக்கம் போலவே அரசியல் திருகலுடன் ஆரம்பிக்கிறார்.

இந்து சமயக் கோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் அதிகாரத்தை சாதிப்படிநிலையைக் காரணம் காட்டி உரிமை கொண்டாடுவதோடு, அதற்கான நியாய அநியாயங்களைப் பட்டியலிட்டிருக்கும் பிராமண  சாதியினர் நாட்டுப்புறக் கோவில்களுக்கு பூசாரிகளாகப் பணியாற்ற முன்வருவதில்லை என்பது அவர்களுடைய பார்வையின் படி சாதியத் துவேசத்தால் விளைந்தது என்றாலும், பிராமணப் பூசாரிகள் இல்லாத குறையை நாட்டுப்புற வழிபாட்டினர் பொருட்டாகக் கருதுவதில்லை என்பதைப் பார்க்கையில், நாட்டுப்புறத்தினர் தெய்வத்தையும் அதற்கான வழிபாட்டு முறைமைகளையும் நிறுவனப்படுத்துவதற்கோ நிலைப்படுத்துவதற்கோ யோசிப்பதில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது என்கிறார்.

அதாவது பள்ளர்கள் வழிபடும் கோவிலுக்கு பள்ளர் ஒருவரே பூசாரியாக இருப்பதுதான் சரி. அதை நிர்வகிப்பவர்கள் அப்படி நினைத்துத்தான் செயல்பட்டிருக்கும் நிலையில் அந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு அப்படியே தொடரவிட்டிருக்கும் பிராமணர்களின் நல்லிணக்க மனோபாவத்தை சாதித்துவேசம் என்று குறிப்பிடுகிறார். இந்து ஆன்மிகம் பல தெய்வ வழிபாட்டையும் பன்முகத்தன்மையையும் அடிநாதமாகக் கொண்டிருப்பதை பூசாரிகளின் வேசைத்தனம் என்று அம்பேத்கர் சொன்னதன் நீட்சியே இந்த வாதமும். கிறிஸ்தவம் போலவோ இஸ்லாம் போலவே பல தெய்வ வழிபாட்டை அழிப்பதை சமத்துவச் செயல்பாடாகப் பார்க்கும் நியாயவான்களுக்கு இப்படித் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை.

ஆனால், எளிய மக்கள் இந்து மதத்தின் மீதும் பிராமணர்கள் மீதும் மதிப்பும் மரியதையோடும் இருந்துவருவதைப் பார்க்கும்போது இந்த அரசியல் சவடால்களை  அவர்கள் பொருட்படுத்தவே இல்லை என்பதே புலனாகிறது. ஏனென்றால், இந்த எளிய மக்கள் தமது கோவில்களை தமது சாதிக்கான கோவிலாக நிறுத்திக்கொள்ளாமல் அனைத்து ஜாதியினரும் வந்து கும்பிடும் கோவிலாக ‘மேல்நிலையாக்கம்’ செய்யும்போது பிராமணர்களையே அங்கு பூசாரிகளாக நியமிப்பார்கள். தமது நாட்டார் தெய்வங்களுக்கு சம்ஸ்கிருத ஸ்லோகங்களை உருவாக்கச் சொல்வார்கள். மாமிசப் படையலை நிறுத்திவிட்டு (அல்லது குறைத்துக்கொண்டு) சைவ பிரசாதங்களுக்கு நகர்வார்கள். பிராமணர்களும் எந்த சாதி துவேசமுமின்றி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். ஆனால், அப்படி இரு தரப்பின் சம்மதத்துடன் நடக்கும் இயல்பான மேல்நிலையாக்கத்தை பிராமணச் சதியாகச் சொல்வார்கள் நம் அறிவுஜீவிகள். ஆக பிராமணப் பூசாரி வராவிட்டால் சாதி துவேஷம். வந்தால் சதி!

நாளை உருவாகும் புதிய அறிவுஜீவி வர்க்கமாவது மக்களிடமிருந்து தன் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். பின்னூட்டமளிக்கும் எஜமானர்களின் வார்த்தைகளைத் தனது கண்டடைதல்கள் போல் ஒப்பிக்கும் கிளிப்பிள்ளைகளாக இருக்கக்கூடாது.

*******

எம்.எஸ்.எஸ். பாண்டியன் பற்றிய கட்டுரை மிகவும் முக்கியமானது. திராவிட இயக்கத்தினர் பிராமண மேலாதிக்கத்தை உண்மையிலேயே ஒழித்துவிட்டிருக்கிறார்களா..? தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தில் இருந்து வெளியேறி மத்திய அரசியலிலும் நீதித்துறையிலும் இன்று ஊடகத்திலும் செல்வாக்குடன் திகழும் பிராமணர்களை ஒழித்துக்கட்டப்பட்டவர்களாக எப்படிச் சொல்வது..? நிறுவனங்கள் தன்னால் எளிதில் கையாளவும் கண்காணிக்கவும் முடிந்த கலகக்காரர்களை உருவாக்குவது வழக்கம். பிராமண அதிகார மையத்தால் அப்படியாக உருவாக்கப்பட்ட கலகக்காரரே ஈவே.ரா. என்ற பார்வை மிகவும் முக்கியமானது.

missionary_british_indiaஆனால், அந்தக் கட்டுரையில் அவர் சொல்லும் இன்னொரு கருத்து  விவாதத்துக்குரியது. 17-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிஷனரிகள் பிராமணர்களையும் வெள்ளாளர்களையும் மதம் மாற்றியபோது அவர்கள் கிறிஸ்தவத்தையும் காலனிய ஆட்சியையும் மனதார ஏற்கவே செய்தனர். எப்போது மிஷனரிகள் தாழ்த்தப்பட்டவர்களிடையே செயல்பட ஆரம்பித்தனரோ அதன் பிறகே பிராமணர்கள் காலனிய ஆட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள் என்கிறார்.

விஷயம் என்னவென்றால் ஆரம்பகட்டத்தில் மிஷனரிகளும் ஐரோப்பிய வர்த்தகர்களும் அறிஞர்களும் ஆய்வாளர்களும் இந்திய கீழைத்தேய மரபுகள், வாழ்க்கை முறைகள், கலாசாரங்கள் ஆகியவற்றை புரிந்துகொள்ளும் நோக்கிலும் நல்லெண்ண அடிப்படையிலுமே அணுகினார்கள். தரம்பால் தனது அழகிய மரம் நூலில் சொல்லும் காரணம் என்னவென்றால், ஆப்பிரிக்க, அமெரிக்க பூர்வ குடி கலாசாரங்களை அழித்த குற்ற உணர்ச்சி அவர்கள் மனதில் இருந்தது. ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும்போது அதன் பாரம்பரிய அம்சங்களைப் புரிந்துகொள்ளவும் பதிவு செய்யவும் முன்வரவேண்டும்; இல்லையென்றால் அந்த கலாசாரமும் அவர்களுடைய முன்னோர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளும் கலைகளும் எல்லாமும் ஒரேயடியாக அழிந்துபோய்விடுகிறது என்ற விஷயம் அவர்களுக்குப் புரிந்திருந்தது. எனவே, அவர்கள் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆரம்பகட்டத்தில் இந்திய பாரம்பரிய அமைப்புகளோடு நட்புணர்வையே கொண்டிருந்தார்கள். எனவே, அந்தக் காலகட்டத்தில் இந்திய உயர்வர்க்கமும் அவர்களுடன் நட்புறவுடன் இருந்தது.

ஆனால், 18-19-ம் நூற்றாண்டுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டதும் காலனிய சாம்ராஜ்ஜிய விரிவாக்கச் செயல்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டபோது பிற நாட்டுக் கலாசரங்கள் குறித்த அவதூறுகளும் அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. உலகைச் சீர்திருத்தியாகவேண்டிய வெள்ளையனின் சுமை அவர்களை அழுத்தத் தொடங்கியது. அதன் ஓர் அங்கமாகவே இந்து அமைப்பின் கடைநிலையில் இருந்தவர்களை அவர்களுடைய அதிருப்தியை மிகைப்படுத்துவதன் மூலம் தமக்கு ஏவல் பணியாட்களாக வளைத்தெடுக்கும் நோக்கில் தலித்களில் சிலருக்குக் கல்வி கொடுத்து அவர்களில் இருந்து தமக்கான விசுவாசிகளை உருவாக்கிக் கொண்டார்கள். உண்மையில் தலித்கள் காமராஜர் வந்து பள்ளிகளைத் திறந்த பிறகுதான் அதுவும் மதிய உணவுபோட்டுக் கூப்பிட்டபோதுதான் ஒரு சமூகமாக, ஓரளவுக்குப் படிக்க ஆரம்பித்தார்கள் என்பதையும் கணக்கில் கொண்டுபார்த்தாகவேண்டும்.

எனவே, காலனிய ஆட்சி மற்றும் மிஷனரிச் செயல்பாடுகள் தொடர்பான பிராமணர்களின் மாறுபட்ட அணுகுமுறைக்கு தலித்களுக்கு மிஷனரிகள் கல்வி கொடுத்தது அல்ல; இந்து கலாசாரம் குறித்த அவதூறுகளையும் பிரிவினைவாத வேலைகளையும் மிஷனரிகள் முன்னெடுக்க ஆரம்பித்ததுதான் முக்கிய காரணம்.

(தொடரும்)

2 Replies to “நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2”

  1. எது எப்படியிருப்பினும் சாதி பிரச்சனைக்கு விவேகானந்தா் அளித்த தீா்வுதான் நிரந்தரமானது . பாா்ப்பனரல்லாத சாதி மக்கள் தகுதியில் கலாச்சார பண்புகளில் நல்ல பழக்க வழக்கங்களில் மனித வளத்தை உருவாக்குவதில் பாா்ப்பனா்களை விஞ்ச வேண்டும்.தங்கள் தகுதியை உயா்த்திக்கொள்ள வேண்டும்.இது மட்டுமே நிரந்தர தீா்வுக்கு வழி வகுக்கும்.

  2. ஜி அருமையான கட்டுரை நன்றி தமிழ் ஹிந்து எழுத்தாளர்களுக்கு.

    அப்படியே திராவிட சித்தாந்த வாதிகளால் புனையபட்ட திரிபு புத்தகங்களுக்கு மறுப்பு வெளியிட வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *