பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை

Phyus Manus
சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ்.

சேலத்தில் மேம்பாலப் பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட சமூக சேவகருக்கு எதிராக பல புகார்கள் கூறப்பட்டபோதும், அவரை சிறைக்குள் கொடூரமாகத் தாக்க எந்த சட்ட விதிகளும் இடமளிக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இந்தத் தாக்குதலின் பின்னணியில் பெரும்புள்ளிகளும் அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் கூட்டணியாகச் செயல்பட்டிருப்பது நன்றாகவே புலப்படுகிறது. இது வன்மையாக்க் கண்டிக்கத் தக்கதாகும். இது மக்களாட்சி முறைக்கே களங்கம் விளைவிக்கும் அபாயமான கரும்புள்ளியாகும்.

சேலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் பியூஷ் மானுஷ் (40).  ‘சேலம் மக்கள் குழு’ என்ற பெயரில் தன்னார்வ அமைப்பை நடத்திவரும் அவர் ஒரு சூற்றுச்சூழல் போராளி. சேலம் வட்டாரத்தில் கனிமவளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க மால்கோ, ஜிண்டால் போன்ற பெருநிறுவனங்களுக்கு எதிராகப் போராடியவர் அவர். தவிர, சேலத்தில் பராமரிப்பின்றிக் கிடந்த பல நீர்நிலைகளை அவரது குழு தூர் வாரி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது.

குறிப்பாக,  சேர்வராயன் மலைப்பகுதியில் கன்னங்குறிச்சி அருகே உள்ள 55 ஏக்கர் பரப்பிலான மூக்கனேரி பறவைகள் சரணாலயம் பாழடைந்து கிடந்தது. 2009-10-இல் வறட்சிக்காலத்தில் அவரது தலைமையில் அங்கு பணியில் இறங்கிய குழுவினர், அந்த ஏரியை தூர் வாரியதுடன், அதில் 40-க்கு மேற்பட்ட மண்திட்டுகளை உருவாக்கினர். மேலும் புங்கன், அரசு, ஆல், மூங்கில், புளி, கருவேலம் போன்ற ஆயிரக்கணக்கான மரங்களை ஏரியில் நட்டு வளர்த்தனர். அடுத்து வந்த மழைக்காலத்தில் அந்த ஏரி நிரம்பியது. இன்று அப்பகுதியே பசுமையாக மாறி, பறவைகள் சரணாலயம் புத்துயிர் பெற்றுள்ளது.

அதேபோல, அம்மாப்பேட்டை ஏரி, குமரகிரி ஏரி, அரிசிபாளையம் குளம், சத்திரம் குளம், பள்ளப்பட்டி குளம் போன்ற நீர்நிலைகளையும் தூர்வாரி மீட்டெடுத்தவர் பியூஷ்  மானுஷ். தவிர, தர்மபுரி அருகே, கூட்டுறவு முறையில் மரம் வளர்ப்புப் பண்ணையைத் துவங்கி, அங்கு பல்லாயிரம் மரங்களை வளர்த்து பசுமை பூமியாக்கி இருக்கிறார். சேலம் பகுதியில் எங்கேனும் மரம் வெட்டப்பட்டால், அதைத் தடுக்க முதல் ஆளாக நிற்பவர் அவர்.

தீவிர இடதுசாரி அமைப்பின் பின்புலம் உள்ளவர் என்பது அவர் மீதுள்ள பொதுவான குற்றச்சாட்டு. இவரது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை நாம் ஏற்கவில்லை.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடு இருக்கலாம். ஆனால், நாட்டின் நலன் என்று வரும்போது, பொதுநலத்துக்காக சுயநலத்தைத் துறப்பவர்கள் யாராயினும் பாராட்டப்பட வேண்டியவர்களே. அந்த வகையிலேயே பியூஷ் மானுஷுக்கு நேரிட்ட துயரத்தை நாம் கண்டிக்கிறோம். அதேசமயம், தனது அரசியல்பாதை சரியானதா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் கடமையும் சமூக சேவகர்களுக்கு உண்டு.

Phyus Manus 2
சிறையிலிருந்து வெளிவந்தபோது… அருகில் மனைவி.

ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சமணக் குடும்பத்தில் பிறந்த பியூஷ் மானுஷ், சேலத்திலேயே வளர்ந்தவர் என்பதால், அநத நகரின் மீது மிகுந்த பிடிப்பு கொண்டவர். சேலத்தில் பல சேவைப்பணிகளை நடத்தி வருபவர். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கடலூர், சென்னையை மழை வெள்ளம் சூறையாடியபோது, சேலத்தில் அவரது தலைமையில் இயங்கிய குழுவினர் பல நிவாரணப் பொருள்களைச் சேகரித்து சென்னைக்கும் கடலூருக்கும் அனுப்பி வைத்ததை மறக்க முடியாது.

சூழலியல் செயற்பாட்டாளரான பியூஷ் மானுஷ், அரசியல் விழிப்புணர்வுள்ள குடிமகனாகவும் பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். அண்மையில் வினுபிரியா என்ற இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக முகநூலில் ஓர் இளைஞர் சித்தரித்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காவல்துறையினரின் மந்தமான விசாரணையும் கையூட்டு பெற்றதுமே காரணம் என்று கூறி பியூஷ் மானுஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக, காவல் அதிகாரி ஒருவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், சேலம், முள்ளுவாடி ரயில்வேகேட் பகுதியில் மேம்பாலப் பணி நடைபெற்றபோது, அதை எதிர்த்து பியூஷ் மானுஷ் குரல் கொடுத்தார். இந்த மேம்பாலத்துக்காக பலரது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்;  மாற்றுப்பாதை அமைத்துக் கொடுத்துவிட்டு மேம்பாலப் பணியைத் துவக்க வேண்டும் என்று கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஜூலை 8-இல் நடந்த போராட்டத்தின்போது, மேம்பாலப் பணியில் ஈடுபட்டோரைத் தடுத்து அவரும் அவரது நண்பர்கள் இருவரும் கோஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து, வழக்கமான நீதிமன்ற நடைமுறைப்படி சேலம் மத்திய சிறைக்கு அனுப்பினர்.

சிறைக்குள் அனுப்பப்படும் விசாரணைக் கைதிகளுக்கும் தண்டனைக் கைதிகளுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து முடியும் வரையோ, பிணையில் விடுதலை பெறும் வரையோ, சிறைக்குள் அவர்களை பத்திரமாகப் பராமரிக்க வேண்டியது சிறை நிர்வாகத்தின் கடமை. காவல்துறையின் விசாரணை முறைகளுக்கு அஞ்சி, நீதிமன்றத்தில் சரணடையும் குற்றவாளிகள் சிறைக்குள் ஆசுவாசமாக இருப்பதும் உண்டு. ஆனால், பியூஷ் மானுஷ் விவகாரத்தில் எல்லாமே தலைகீழாக நடந்திருக்கிறது.

சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்ட மூவரில் பியூஷ் மானுஷ் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரும், 20-க்கு மேற்பட்ட சிறைக் காவலர்களும் அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். நிர்வாணப்படுத்தி, லத்திகளாலும், கைகளாலும் கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். அவ்வாறு தாக்கியபோது,  “இனிமேல் தேசியக் கொடியை எரிப்பாயா?” என்று கேட்டு, தாக்கி இருக்கின்றனர். தவிர அவரது ஜாதியைக் கேட்டும் அடித்திருக்கிறார்கள். சமண மதத்தில் ஜாதி வேறுபாடு கிடையாது என்று கூறியபோது கூடுதலாக உதை கிடைத்தது. உண்மையில் அவர் அத்தகைய எந்தத் தவறும் செய்யவில்லை. அதாவது, தாக்குதலின் காரணம் வேறு; அதற்கு உத்தரவிட்டவர்கள் பெரும்புள்ளிகள். அதை மூடி மறைக்க, தேசியக் கொடியை பியூஸ் மானுஸ் எரித்ததாக வேண்டுமென்றே வம்பு வளர்த்து சிறைக்குள் தாக்கி இருக்கிறார்கள். அவ்வாறு ஒருவர் தேசதுரோகக் குற்றமே செய்தாலும், அவரைத் தாக்க சிறைக் காவலர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது தனிக்கதை.

Phyus Manus 3
சிறைக்குள் தாக்கப்பட்ட தனது மகனை வாஞ்சையுடன் அரவணைக்கும் அன்னை.

தவிர, பியூஷ் மானுஷை விசாரணைக் கைதிகளுக்கான அறையில் அடைக்காமல், தனிமைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். சிறைக் காவலர்கள் மட்டுமல்லாது, சிறைவாசிகள் பலரும் கூட இவரை அடிக்கடி தாக்கி இருக்கின்றனர். எல்லாமே முன்னேற்பாட்டுடன் நடந்திருக்கிறது.

சில நாள்கள் கழித்து, பியூஷ் மானுஷைக் காண அவரது மனைவி மோனிகா சிறைக்கு வந்தபோதுதான், அவர் தாக்கப்பட்டது தெரிய வந்தது. அவர் அதனை பத்திரிகையாளர்களிடம் கூற, அது பரவி, சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பிரசார இயக்கம் நடைபெற்றது. இதனிடையே, சிறைக்குள் தன்னை யாரும் தாக்கவில்லை என்று பியூஷ் மானுஷிடம் மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர். எப்படிப்பட்ட தைரியசாலியாயினும், தனிமைப்படுத்தி கொடுமைப்படுத்தினால், அவர் அச்சமடைவது இயற்கை. அதுவே, சிறைக்குள் அவருக்கு பாடம் கற்பிக்க விரும்பியவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

அவருடன் சிறைப்பட்ட இருவருக்கு பிணையில் விடுதலை கிடைத்தபோதும், அவருக்கு மேலும் சில நாட்கள் கழித்தே பிணை கிடைத்தது. அவர் வெளியே வந்து சிறைக்குள் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறியபோது, நமது சிறை நிர்வாகங்களின் கொடிய முகம் வெளிப்பட்டது.

இந்து இயக்க நிர்வாகிகளுக்கு இதுபோன்ற தாக்குதல்கள் புதியதல்ல. போராட்டங்களில் கைதான பல இந்து இயக்க நிர்வாகிகள் இவ்வாறு காவல்துறையாலும் சிறைக்குள்ளும் கடுமையான சித்ரவதையை அனுபவித்துள்ளனர். ஆனால், அப்போதெல்லாம், அதற்கு ஊடகங்களிடமோ, பொதுமக்களிடமோ அது தெரியப்படுத்தப்பட்டதில்லை. அவ்வாறு தெரியவந்தாலும் யாரும் அதைக் கண்டுகொண்டதில்லை. ஏனெனில், இந்து இயக்கத்தினர் தாக்கப்பட்டால், அது சரியே என்ற நிலைப்பாட்டை பெரும்பாலான கருத்து சுதந்திர – மனித உரிமை நேசர்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது.

இத்தகைய அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது பியூஷ் மானுஷ் வடிவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. பணபலம் உள்ளவர்கள் சிறைக்குள் ராஜபோகமாக நடத்தப்படுவதும், அப்பாவிகள் சீரழிக்கப்படுவதும் தவிர்க்கப்பட, பியூஷ் மானுஷுக்கு நேர்ந்த கொடுமை உதவ வேண்டும்.

தனக்கு சிறைக்குள் நேர்ந்த அநியாயம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்போவதாகவும், சேலம் சிறைக் கண்காணிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் பியூஷ் மானுஷ் அறிவித்திருக்கிறார். மாநில மனித உரிமை ஆணையம் அவரது வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. பியூஷ் மானுஷின்  ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் நல்லுள்ளங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அதிகார அத்துமீறல்களுக்கு சாவுமணி அடிக்க இதை ஒரு வாய்ப்பாக அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விசாரணைக் கைதிகளை வழக்குக் காலத்தில் பத்திரமாகப் பராமரிப்பது மட்டுமே சிறை நிர்வாகத்தின் கடமை. தண்டனைக் கைதிகளையும்கூட தாக்கவோ, அநாகரிகமாக நடத்தவோ, சிறைக் காவலர்களுக்கு உரிமையில்லை. அத்தகைய நிலையில் விசாரணைக் கைதியாக சிறைக்குள் சென்ற பியூஷ் மானுஷ் சிறைக்காவலர்களாலும் சிறைக் கண்காணிப்பாளராலும் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது, சற்றும் நியாயமற்றது; சட்ட விரோதமானது. இந்த தாக்குதலுக்கு வெளியிலிருந்து அளிக்கப்பட்ட நிர்பந்தமே காரணமாக இருக்க முடியும். பியூஸ் மானுஷ் தனது பொதுநலப் போராட்டத்தில் பலரை எதிரிகளாக்கிக் கொண்டிருக்கிறார். அவர்களின் திட்டமிட்ட முயற்சியே இத்தகைய தாக்குதல்.  இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் யார்மீதும் நிகழ்த்தப்படக் கூடாது.

இதே சேலத்தில் தான் மூன்றாண்டுகளுக்கு (2013 ஜூலை 19) முன் ஆடிட்டர் ரமேஷ் என்ற அரசியல் செயற்பாட்டாளர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவர் பாரதீய ஜனதா கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்ததே அவரது குற்றம். அப்போது, பொதுநல சேவகரான பியூஷ் மானுஷ் அந்தப் படுகொலையைக் கண்டிக்கவில்லை. தவிர, அவருடன் இருந்த சிலர் அதை ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய அரசியல்ரீதியான பிளவு மனப்பான்மை தான் நமது பொதுநல சேவகர்களுக்கு தடைக்கல்.

இனிமேலேனும், மனித உரிமைகள் என்பது அனைவருக்கும் பொதுவான உடைமை என்பதை பியூஷ் மானுஷ் உணர வேண்டும்.  ‘தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி’ என்பது வடிவேலு திரைப்பட நகைச்சுவை மட்டுமல்ல; யதார்த்தமான கள நிலவரமும்கூட.

பியூஷ் மானுஷ் போன்ற அனைவரும் அறிந்த சமூக சேவகருக்கே சிறைக்குள் இந்த நிலைமை என்றால், சாமானிய குடிமகனின் நிலை என்ன? அவரை சிறைக்குள் வைத்து தாக்குமாறு உத்தரவிட்ட பெரும்புள்ளிகள் யார்? அவர்களது அரசியல் பின்னணி என்ன என்பது வெளிப்பட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட, மக்கள் உரிமைகளைக் காக்க விருப்பமுடையவர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஓரணியாகத் திரள வேண்டிய நேரம் இது.

 

.

26 Replies to “பியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை”

 1. நக்சல் ஆதரவாளனுக்காக தமிழ் இந்து குரல் கொடுப்பது தான் கொடுமை

 2. ப்பா,…. ஆனந்த விகடனில் இந்த வாரம் வர உள்ள கட்டுரையை படித்தது போலவே இருக்கிறது…

  இந்த ஆள் யார்…இவரின் பின்புலம் என்ன ..செயல்பாடுகள் என்ன..என்பதைப்பற்றியெல்லாம் குறைந்த பட்ச தகவல்களையாவது சேகரிக்க முயற்சி செய்திருக்கலாம்…

  சேலத்தைச்சேர்ந்த திரு. கோமதி செட்டி , ஈரோட்டைச்சேர்ந்த ராஜ சங்கர் போன்றோர் இருக்கிறார்கள்… ஏன்…திருப்பூரில் கூட பலருக்கு இவரைப்பற்றி தெரிந்த பலர் இருக்கிறோம்…….

  விரைவில் பெருமாள் முருகனுக்கு இழைக்கப்பட்ட அநீதி[?] யைப்பற்றி சோகரசம் ததும்பும் கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கிறேன்… ஜி.ஆர். சுவாமிநாதனைக்கேட்டால் தேவையான விபரங்களை கொடுப்பார்…

  நான் நீண்ட காலமாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை…[ தற்போது கூட இப்படி ஒரு கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்திருக்கிறது என்று ஒரு நண்பர் குறிப்பிட்டதால் வந்தேன் ]

  அதுவும் நல்லதிற்குத்தான் போல… வாழ்க நவீன ஹிந்துத்வம்…

 3. It is very sad that such an articel is published here ….
  he is a secular face of a ngo trying to create communl adisharmony amongst hindus …..pse his funding for carrying out the jobs u will be surprised ..
  Hope to see the study on his immedaite elivation to this level …
  rregards

 4. பியூஷ் மானுஷின் நிலைப்பாட்டுக்கான நேரடி ஆதரவு இந்தக் கட்டுரையில் இல்லை. சிறையில் தாக்குதல் மீதான கண்டனம் தான் உள்ளது. உண்மையில் இந்தக் கட்டுரையின் ஒட்டுமொத்த ஃபோகஸாக கீழ்க்கண்ட பத்தி இருந்திருக்க வேண்டும் –

  // இந்து இயக்க நிர்வாகிகளுக்கு இதுபோன்ற தாக்குதல்கள் புதியதல்ல. போராட்டங்களில் கைதான பல இந்து இயக்க நிர்வாகிகள் இவ்வாறு காவல்துறையாலும் சிறைக்குள்ளும் கடுமையான சித்ரவதையை அனுபவித்துள்ளனர். ஆனால், அப்போதெல்லாம், அதற்கு ஊடகங்களிடமோ, பொதுமக்களிடமோ அது தெரியப்படுத்தப்பட்டதில்லை. அவ்வாறு தெரியவந்தாலும் யாரும் அதைக் கண்டுகொண்டதில்லை. ஏனெனில், இந்து இயக்கத்தினர் தாக்கப்பட்டால், அது சரியே என்ற நிலைப்பாட்டை பெரும்பாலான கருத்து சுதந்திர – மனித உரிமை நேசர்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது. //

  “தெரியப்படுத்தப் பட்டதில்லை” என்று சொன்னால் ஆச்சா? 1980-90களில் இத்தகைய போலீஸ் அராஜகங்கள் யாருக்கும் தெரியக்கூட வந்திருக்காது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இன்டர்னெட்டும் சமூக வலையும் பிரபலமடைந்த பிறகு, முதலில் ஊடகங்கள் இருட்டடித்தாலும் ஒரு விஷயத்தை வெளியே கொண்டுவந்து பரபரப்பு ஏற்படுத்த முடியும்… பிறகு ஊடகங்களே வருவார்கள்.. இதை பியூஷ் ஆதரவாளர்கள் எவ்வளவு கச்சிதமாகச் செய்தார்கள், இந்துத்துவர்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு கேவலமாக சொதப்புகிறார்கள் என்பதையும் பாருங்கள். இந்த விவகாரத்தில் இப்படி பாடத்தைக் கற்றுக் கொள்வதன் அவசியத்தை விளக்கிக் கட்டுரையை முடித்திருக்கலாம்.

  இதனை அழுத்தமாகச் சொல்லாததால் கட்டுரையின் தொனி ஆதரவு நிலைப்பாடு போல அமைந்து விட்டது. சேக்கிழான் அவர்கள் தொடர்ந்து தமிழ்ஹிந்துவில் பல கட்டுரைகளை எழுதி வரும் இந்துத்துவர். அவர் பியூஷ் மானுஷின் அரசியலை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்.

 5. Earlier, there was a system of giving our views in Tamil , procedure for which was very simple. Somehow, of late that facility is not available in this site. The editorial board may kindly look into it and restore the said facility. Thanks and regards.

 6. */ விரைவில் பெருமாள் முருகனுக்கு இழைக்கப்பட்ட அநீதி[?] யைப்பற்றி சோகரசம் ததும்பும் கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கிறேன்… ஜி.ஆர். சுவாமிநாதனைக்கேட்டால் தேவையான விபரங்களை கொடுப்பார்…/*

  திரு. சான்றோன், அருமையாகச் சொன்னீர்கள் சார்.

  இப்ப என்ன தேவை வந்ததென்று தெரியவில்லை இப்படிப்பட்ட ஒரு கட்டுரையின் அவசியத்திற்கு. இந்த வலைத்தளம் எந்த நோக்கில் பயணிக்கின்றது என்பதே புதிராக இருக்கும் போலிருக்கிறது. இருக்கின்ற ஒன்றும் இப்படியாகிவிட்டதே என்ற வேதனை அதிரிகத்துக்கொண்டே போகிறது.

 7. நான் நீண்ட காலமாக இந்தப்பக்கம் வரவில்லை….

 8. நான் நீண்ட காலமாக இந்தப்பக்கம் வரவில்லை….நல்லதென இப்போதும் புரிய வைத்துமைக்கு நன்றி..
  குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுங்கள் அது உங்கள் உரிமை..

  https://www.jeyamohan.in/89062#.V5eBIk3VzDc

 9. நன்றி சேக்கிழான், தயக்கமின்றி உங்களை ஆதரிக்கிறேன். ஆசிரியர் குழுகுழுவையும்

 10. தமிழ் இந்துவில் இவருக்கு இப்படி வக்காலத்து வாங்குவது நல்லதல்ல. இவர் இந்துமத துவேஷி!. இவர் இந்துமதத்தை துவேஷித்து வெளிவந்த வீடியோவை ஆசிரியர் பார்க்க தவறிவிட்டார் போலும்! தமிழ் இந்துவின் மேல் இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது எனக்கு!

 11. அன்புள்ள சகோதரர்களுக்கு,

  சமூக சேவகர் பியூஷ் மானுஷ் சிறைக்குள் தாக்கப்பட்டது தவறு என்பதுதான் எனது கட்டுரையின் அடிப்படை என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். நான் அவரது அரசியல் வழிமுறைகளையோ, ஹிந்து எதிர்ப்புக் கருதுகளையோ ஏற்பவன் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

  நியாயமற்ற கொடுமைகள் எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பது தான் பரிபூரண ஹிந்துவின் இயல்பு என்றும் கடமை என்றும் நான் எண்ணுகிறேன். அதனால் தான் இந்தக் கட்டுரையை, தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவின் அனுமதியுடன் எழுதினேன். அவரது ஹிந்து விரோதப் போக்கையும் கட்டுரையில் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் எழுதி இருக்கிறேன்.

  ஆனால், பியூஷ் மானுஷின் மோசமான பேச்சுகளால் சீண்டப்பட்ட பலர், இக்கட்டுரையை அவரது கருத்துகளுக்கு ஆதரவானதாகப் பார்ப்பது புரிகிறது. அவர்கள் அவ்வாறு கருத வேண்டியதில்லை என்பதே எனது நிலைப்பாடு.

  அதர்மம் எங்கு நடந்தாலும் ஒரு பத்திரிகையாளனாகக் குரல் கொடுப்பது எனது பணி. உண்மையான ஹிந்துவாக எனது மனசாட்சிப்படியே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இதை தமிழ் ஹிந்து வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விழைகிறேன்.

  என,
  சேக்கிழான்

 12. ஹரிஹரன், சான்றோன், ராஜாளி, பரீக்‌ஷித், கார்த்திகேயன், மத்யஜகனே

  என்ன சொல்ல வருகிறீர்கள்? பியூஷ் மானுஷ் ஹிந்து மத விரோதி, அதனால் அவர் சட்டவிரோதமாக, அநியாயமாக் தாக்கப்பட்டால் அதை தமிழ் ஹிந்து தளம் ஆதரிக்க வேண்டுமா? குறைந்த பட்சம் கண்டிக்கக் கூடாதா? அடுத்தது என்ன, ஹிந்து மத விரோதி படுகொலை செய்யப்பட்டால் அது தவறு என்று சொல்லக் கூடாதா? இன்று மகான் என்றும் கொண்டாடப்படும் அனேகர் – ராமானுஜர், பசவர் – அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களது கருத்துகளுக்காக சாஸ்திரங்களை மீறியவர்கள் என்று கருதப்பட்டவர்கள்தான். பிரம்ம சமாஜம் அமைத்தவர் ஹிந்து மத விரோதியாகத்தான் கருதப்பட்டார். தலித்கள் கோவிலுக்குள் நுழையலாம் என்று சொன்னவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஹிந்து மத விரோதிகள்தான். ராமகிருஷ்ண மிஷன்காரர்கள் தாங்கள் ஹிந்துக்கள் இல்லை வேறு மதம் என்று கேசே போட்டார்கள், சில வருஷங்கள் முன்னால்தான் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. நீங்கள் எல்லாம் அந்தக்காலத்தில் வாழ்ந்திருந்தால் இந்த ஹிந்து மத விரோதிகளை அடிப்பதுதான் சரி என்று நினைத்திருப்பீர்களோ?

  சேக்கிழானுக்கும் இந்தத் தளத்தின் பொறுப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 13. சேக்கிழான் அவர்களது கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். அவரது கட்டுரைகளால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவருக்கு அதற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

  சில நாட்களாக நான் இந்தத் தளத்தைப் பார்க்கவில்லை, இப்போது பார்த்தேன். வந்ததற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். சேக்கிழான் அவர்களுக்கும், இக்கட்டுரையை அனுமதித்த ஆசிரியர் குழுவுக்கும் பாராட்டுக்கள்.

  விருப்பு வெறுப்பு இல்லாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், மனித உரிமைகள் மீறப்படும்போது, சட்டத்துக்குப் புறம்பாக ஒரு மனிதர் தாக்கப்படும்போது அதைத் தயங்காமல் பொது இடத்தில் கண்டிக்க நெஞ்சுரமும், நேர்மைத் திறமும் வேண்டும். அவற்றை சேக்கிழான் அவர்களும், ஆசிரியர் குழுவினரும் காட்டி இருக்கிறார்கள்.

  தர்மோ ரக்ஷித ரக்ஷித:

  தர்மத்தைக் காப்பவர்களைத் தர்மம் காக்கும்.

  ஒரு மனிதனை சட்டத்துக்கும், நியாயத்துக்கும் புறம்பாக சிலர், காவலர்கள் உள்பட, தாக்கினால் அதைப் பொதுவில் கண்டிப்பது தர்மம் ஆகும். தர்மத்தைக் காக்கும் செயல் ஆகும். தாக்கப்பட்டவர் நமக்கு வேண்டியவரா இல்லையா என்பது அல்ல கேள்வி. தாக்குதல் தர்மமா அல்லவா என்பதுதான் கேள்வி. தர்மம் அல்லாத செயலைக் கண்டிக்கும் கட்டுரை என்ற வகையில் இந்தக் கட்டுரை தர்மத்தின் பாற்பட்டது, அறத்தின் பாற்பட்டது. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

 14. அரசு ஊழியர்களை அல்லது அரசால் பணிக்கப்பட்ட ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் சட்டப்படி குற்றம்… அதற்காகத்தான் பியுஷ் கைது செய்யப்பட்டார்…

  உடல் அங்க டையாளங்களை பரிசோதிக்கும்போது ஒத்துழைக்க மாட்டேன் என்று ரகளை செய்திருக்கிறார்..அதற்கு நாலு அறை விழுந்திருக்கிறது..அவ்வளவுதான் ..இதை வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்…முப்பது போலீஸ் தாக்கினார்களாம்…போலீஸ் அடி எப்படி இருக்கும் என்பதை [ அயோத்தி விவாகரத்தின்போது முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது ] நேரில் பார்த்தவன் நான்… இரண்டே இரண்டு போலீஸ் சேர்ந்து லாடம் கட்டினால் போதும்…. எழுந்து நிற்க இரண்டு மாதமாகும்….மொத்தம் நாற்பதே போலீஸ் பணியில் இருக்கும் அந்த சிறையில் முப்பது பேர் இவரை தாக்கினார்களாம்…இதையெல்லாம் நம்ப நாம் என்ன பாப்பாக்களா?

  சரி…அப்படியே தாக்கப்பட்டிருந்தாலும் பெயிலுக்காக நீதிபதி முன்புன் ஆஜரானாரே? ..அப்போது நீதிபதியிடம்முறையிட்டிருக்கலாமே? சரி வேண்டாம்….பிணையில் வந்தவர் உடனடியாக மருத்துவமணைக்கு சென்று அட்மிட் ஆக வேண்டியதுதானே? தினம் ஒரு டி.விக்கு பேட்டி கொடுக்கிறாரே அது எப்படி?

  கோர்ட்டே உத்தரவிட்டும் இந்த ஆசாமி மருத்துவ சான்றிதழ் வாங்கவில்லை…காரணம் குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால் …இதை சிறை நிர்வாகம் கோர்ட்டிலும் , மனித உரிமை கமிஷனிடமும் எழுத்து மூலமாக தெரிவித்திருக்கிறது……..

  தமிழகத்தில் ஹிந்துவிரோத , இந்திய விரோத மனப்போக்கை வளர்க்க தெளிவான செயல்திட்டத்தோடு களமிறங்கியிருக்கும் நக்சல்களின் பிரதிநிதி இந்த பியுஷ் சைத்யா….இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அது வெளிப்படும்…

  தவறான ஒரு ஆசாமிக்கு வக்காலத்து வாங்கிவிட்டோம்..அது தவறுதான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு கட்டுரையை வாபஸ் பெறுங்கள்..அதுதான் குறைந்தபட்ச நேர்மையான செயலாக இருக்கும்….

 15. முதலில் பியுஷ் மனுஷ் தாக்கப்பட்டார் என்பதே தவறான தகவல்…அதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள் ..அதற்குப்பின்னர் அநீதிக்கு எதிராக பொங்கலாம்…

  அரசு ஊழியர்களை அல்லது அரசால் பணிக்கப்பட்ட ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் சட்டப்படி குற்றம்… அதற்காகத்தான் பியுஷ் கைது செய்யப்பட்டார்…

  உடல் அங்க டையாளங்களை பரிசோதிக்கும்போது ஒத்துழைக்க மாட்டேன் என்று ரகளை செய்திருக்கிறார்..அதற்கு நாலு அறை விழுந்திருக்கிறது..அவ்வளவுதான் ..இதை வைத்துக்கொண்டு நாடகம் ஆடுகிறார்…முப்பது போலீஸ் தாக்கினார்களாம்…போலீஸ் அடி எப்படி இருக்கும் என்பதை [ அயோத்தி விவாகரத்தின்போது முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது ] நேரில் பார்த்தவன் நான்… இரண்டே இரண்டு போலீஸ் சேர்ந்து லாடம் கட்டினால் போதும்…. எழுந்து நிற்க இரண்டு மாதமாகும்….மொத்தம் நாற்பதே போலீஸ் பணியில் இருக்கும் அந்த சிறையில் முப்பது பேர் இவரை தாக்கினார்களாம்…இதையெல்லாம் நம்ப நாம் என்ன பாப்பாக்களா?

  சரி…அப்படியே தாக்கப்பட்டிருந்தாலும் பெயிலுக்காக நீதிபதி முன்புன் ஆஜரானாரே? ..அப்போது நீதிபதியிடம்முறையிட்டிருக்கலாமே? சரி வேண்டாம்….பிணையில் வந்தவர் உடனடியாக மருத்துவமணைக்கு சென்று அட்மிட் ஆக வேண்டியதுதானே? தினம் ஒரு டி.விக்கு பேட்டி கொடுக்கிறாரே அது எப்படி?

  கோர்ட்டே உத்தரவிட்டும் இந்த ஆசாமி மருத்துவ சான்றிதழ் வாங்கவில்லை…காரணம் குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால் …இதை சிறை நிர்வாகம் கோர்ட்டிலும் , மனித உரிமை கமிஷனிடமும் எழுத்து மூலமாக தெரிவித்திருக்கிறது……..

  தமிழகத்தில் ஹிந்துவிரோத , இந்திய விரோத மனப்போக்கை வளர்க்க தெளிவான செயல்திட்டத்தோடு களமிறங்கியிருக்கும் நக்சல்களின் பிரதிநிதி இந்த பியுஷ் சைத்யா….இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அது வெளிப்படும்…

  தவறான ஒரு ஆசாமிக்கு வக்காலத்து வாங்கிவிட்டோம்..அது தவறுதான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு கட்டுரையை வாபஸ் பெறுங்கள்..அதுதான் குறைந்தபட்ச நேர்மையான செயலாக இருக்கும்….

 16. Dear RV, You should support a person who is unbiased.This man never voiced against the killing of BJP,leader in Salem. You can support who deserves it.
  Gun must be met with another gun. Prithviraj chauhan let go Muhammed ghori and paid the price for it. Prithvi’s war ethics should be applied for Hindu kings;not barbaric kings.
  Hindus must stop sysmpathising for satans.

 17. Dear RV,

  In early times, the DK cadres were beaten by muslims in Thanjavur district when they attacked islam also. Then DK stopped talking about other religions.
  Had hindus also resorted to such thing, Veeramanis will not be talking today.

  அந்தக்காலத்தில் வாழ்ந்திருந்தால் இந்த ஹிந்து மத விரோதிகளை அடிப்பதுதான் சரி என்று நினைத்திருப்பீர்களோ- yes , I would have thought that way only.

 18. Dear RV,
  The persons who have mentioned were not enemies of hindus. They were great saints.They never harmed others. Do not confuse yourself by comparing them with these scoundrels.

 19. Without nature their is no Hindu Muslim Christian etc….. U people r so mean that you can’t even understand what nature mean to human who is having six sense. And I understand we Hindu need cow been saved from jallikattu and send to slaughter houses that is our dharmam..

  Thanks for reading

 20. அடக்கடவுளே ! தமிழ் ஹிந்து.காமா இது.

  பேசாம,திராவிட இடதுசாரி முற்போக்கு ஹிந்து.காம் னு பேரை மாத்திடலாம்.

 21. “திரு.பூபதி அவர்களே !! ஹிந்து என்பது மதமே அல்ல ..இது ஒரு வாழ்க்கை முறை ..இன்னும் சொல்லப்போனால் இயற்கையுடன் முழுவதும் ஒன்றிப்போகும் இயல்பான வாழ்க்கை …..ஹிந்துவை யாராலும் “விவரித்துக்கூற ” இயலாது அல்ல ..முடியாது …எங்கே நீரே முயன்று பாரும் ..பதிவும் செய்யவும் …..சகிப்புத்தன்மை இயற்கையிலேயே அதிகம் இருந்ததினால் தான் ( அப்பேற்பட்ட கலாச்சாரத்தை நம் நாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டு விளங்குகிறது ……2000 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாள் மேற்கத்திய நாட்டினர் பலரும் ..குகையில் வாழ்ந்தார்கள் என்பது சரித்திர வரலாறு .)….அந்நிய மதம் அல்லது வழிபாடு முறைகளைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை . ஆனால் இஸ்லாமும் , கிறிஸ்துவமும் என்னவெல்லாம் நம் நாட்டில் “செய்தது ” என்பதை உண்மையான சரித்திரம் சொல்லும் …..நிற்க ..பசுவிற்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன தொடர்பு …..இரண்டினையும் காலம் காலமாக தெய்வங்களாக வணங்கி வருகிறோம் ..அவைகளுடைய பயன்பாடுகள் நமக்குத் தொடர்ந்து கிடைத்து இருந்தால் ……பல கோடி ரூபாய்களை ..மருந்திற்கும்( பல உயிர்கள் அநியாயமாக இறந்தமைக்கு செயற்கை வேதிப்பொருள்களால் …உரம் மற்றும் பூச்சி மருந்துகள் ..உணவுப்பொருள்கள் கலப்படம் ஆகி ..தன்மையை இழந்தன .) இன்னும் பிறவற்றிற்கும் செலவழித்து இருக்க வேண்டிய வாய்ப்பில்லை .ஆக இயற்கையான ஆரோக்கியத்தினை மிகச் சுலபமாக இழந்தோம் . இன்னும் இழந்து கொண்டிருக்கிறோம் .விஞ்ஞான தொலைக்காட்சியில் பாருங்கள் …”இன்னும் ஆப்பிரிக்க பழங்குடியினர் பசுமாடுகளை நிறைய வளக்கின்றனர்…அதற்காக சச்சரவுகளும் நடக்கின்றன .

 22. POLICE MEN ARE ALWAYS ATTACKING COMMON MEN OR PUBLIC VERY BRUTALY. BUT NO POLICE MEN HAVE COURAGE TO ATTACHE A TERRORIST/ROWDY/MURDERER/POLITICIAN. THEIR ONLY TARGET IS INNOCENT PUBLIC.

 23. // சேலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் பியூஷ் மானுஷ் (40). ‘சேலம் மக்கள் குழு’ என்ற பெயரில் தன்னார்வ அமைப்பை நடத்திவரும் அவர் ஒரு சூற்றுச்சூழல் போராளி. சேலம் வட்டாரத்தில் கனிமவளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க மால்கோ, ஜிண்டால் போன்ற பெருநிறுவனங்களுக்கு எதிராகப் போராடியவர் அவர். தவிர, சேலத்தில் பராமரிப்பின்றிக் கிடந்த பல நீர்நிலைகளை அவரது குழு தூர் வாரி பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது.

  குறிப்பாக, சேர்வராயன் மலைப்பகுதியில் கன்னங்குறிச்சி அருகே உள்ள 55 ஏக்கர் பரப்பிலான மூக்கனேரி பறவைகள் சரணாலயம் பாழடைந்து கிடந்தது. 2009-10-இல் வறட்சிக்காலத்தில் அவரது தலைமையில் அங்கு பணியில் இறங்கிய குழுவினர், அந்த ஏரியை தூர் வாரியதுடன், அதில் 40-க்கு மேற்பட்ட மண்திட்டுகளை உருவாக்கினர். மேலும் புங்கன், அரசு, ஆல், மூங்கில், புளி, கருவேலம் போன்ற ஆயிரக்கணக்கான மரங்களை ஏரியில் நட்டு வளர்த்தனர். அடுத்து வந்த மழைக்காலத்தில் அந்த ஏரி நிரம்பியது. இன்று அப்பகுதியே பசுமையாக மாறி, பறவைகள் சரணாலயம் புத்துயிர் பெற்றுள்ளது.

  அதேபோல, அம்மாப்பேட்டை ஏரி, குமரகிரி ஏரி, அரிசிபாளையம் குளம், சத்திரம் குளம், பள்ளப்பட்டி குளம் போன்ற நீர்நிலைகளையும் தூர்வாரி மீட்டெடுத்தவர் பியூஷ் மானுஷ். தவிர, தர்மபுரி அருகே, கூட்டுறவு முறையில் மரம் வளர்ப்புப் பண்ணையைத் துவங்கி, அங்கு பல்லாயிரம் மரங்களை வளர்த்து பசுமை பூமியாக்கி இருக்கிறார். சேலம் பகுதியில் எங்கேனும் மரம் வெட்டப்பட்டால், அதைத் தடுக்க முதல் ஆளாக நிற்பவர் அவர். //

  இவ்வளவு செய்திருந்தாலும் அவர் இந்து மதத்தை விமர்சித்திருந்தாலோ, இந்து மதத்தவர்கள் கொலையுண்டதை கண்டிக்காமலிருந்தாலோ, அவர் அநியாயமான முறைப்படி காவல்துறையால் சிறையிலடைக்கப்பட்டு தாக்கப்பட்டால் அவர் தாக்கப்பட்டது நியாயமே என்றுதான் சொல்வோம்.

  அடடா அடடா …

 24. எல்ல்லோருக்கும் வணக்கம்.

  நாம் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியரை மிகவும் மதிக்கிறோம். இந்த கட்டுரையை வெளியிடும் வலைதளப் பொறுப்பாளர்களையும் மதிக்கிறோம். அதே நேரத்தில், சமூகப்பணி செய்யும் ஒருவர் ஹிந்து மத துவேஷியாக இருந்தால் அதை கண்டுகொள்ளத் தேவையில்லை என்பதை நிராகரிக்கிறோம். ஏனெனில், ஹிந்து மத துவேஷம் என்பதே எவெறையோருவரை திருப்திப்படுத்துவதற்கோ அல்லது வேறொரு நோக்கத்திலோ செய்யப்படுகிற செயல். இப்படிப்பட்ட ஒருவரின் சமூகதொண்டையே எம்மால் ஏற்கயியழவில்லை. ஒருவர் எமது குடும்பத்தை மிகவும் தரம் தாழ்ந்து விமரிசித்துவிட்டு எங்கள் தாய் தந்தையை அவமானப்படுத்திவிட்டு எங்களுக்கு நாஙகள் பிழைப்பதற்கு வழி ஏற்படுத்தித்தருகிறேன் என்று வந்தால், எவ்வாறு ஏற்றுக்கொள்ளவியலும்.

  இந்தவகையில், இப்படிப்பட்ட ஒருவருக்கு நேர்ந்தது நியாயமா அல்லது அநியாயமா என்பதை தீர்மானிக்கும் மனநிலைக்கே எமக்கு செல்ல விருப்பமில்லை.

  மற்றொன்று, கர்நாடகாவில் யுவ பிரிகேட் என்ற ஒரு இயக்கம் இங்கே மேற்சொல்லப்பட்ட பல நல்ல காரியங்களை செய்துகொண்டுதானிருக்கிறது. இதே போல் பல்வேறு இயக்கங்களும் செய்யக்கூடும். ஆனால் இவர்கள் எவரும் இந்து மத துவேஷிகள் இல்லை.

  வேறெதுவும், இந்த கட்டுரை தொடர்பாக எழுத எம்மிடம் எதுவுமில்லை. நன்றி.

 25. கட்டுரையாளருக்கு வணக்கம்……………..தங்கள் கட்டுரைகளை நீண்ட காலமாக நான் வாசித்து வருகின்றேன்…………..ஆனால் இந்தக் கட்டுரை என்னை அதிர்ச்சியடைய வைத்தது……………ஏனென்றால் முதலில் அவர் சமூக சேவகரே அல்ல………….அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன……………மேலும் அவர் சிறையில் தாக்கப்படவில்லை என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது………………நாட்டில் நீங்கள் கவனித்து எழுத வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் இருக்க……………இந்த தேவையற்றவரைப் பற்றி எழுதி நேரத்தை வீணடித்திருக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து…………………நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *