கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்

மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் கடந்த நவ. 20 ம் தேதி, பூனா, எரவாடா சிறையில் ரகசியமாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். பயங்கரவாதிகளுக்கு கடைசியில் கிடைக்கப்போவது இது தான் என்பதை காலம் கடந்தேனும், நமது அரசுகள் வெளிப்படுத்தி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆயினும், இந்த தண்டனை நிறைவேற்றத்தின் பின்னணியில் உள்ள மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

2008, நவம்பர், 26 ம் தேதி, பாகிஸ்தானின் லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல்வழியாக மும்பையில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவர்கள் மும்பை ரயில் நிலையத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புகுந்து கண்மூடித்தனமாக நடத்திய கொடூரத் தாக்குதல்களில் காவல் துறை அதிகாரிகள் பலர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் படுகாயம் அடைந்தனர். தாஜ், டிரைரென்ட் ஓட்டல்களில் பதுங்கிக் கொண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் 60 மணிநேரம் போராடி வென்றனர். இந்தச் சண்டையில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; கசாப் மட்டும் துப்பாக்கியும் கையுமாகப் பிடிபட்டான்.

இத்தாக்குதலால், இந்தியா மீதான பாகிஸ்தானின் வெறுப்பூட்டும் ரகசிய போர்முறை அம்பலமானது. ஏற்கனவே நாடாளுமன்றம் தாக்குதல், மும்பை தொடர்குண்டு வெடிப்பு என்று பல பயங்கரவாதச் செயல்களைப் பார்த்திருந்தாலும், மும்பை 26/11 தாக்குதல் உலகிற்கே அதிர்ச்சி அளிப்பதாக, பயங்கரவாதத்தின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியது. தவிர, உள்ளூரில் ஆதரவுத் தளம் இல்லாமல் இத்தகைய திட்டமிட்ட கொடூரத் தாக்குதலை நடத்துவது சாத்தியமல்ல என்பது நமது அரசுகளுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் புரிந்தது.

பயங்கரவாதியாக இருந்தபோதும், கசாபுக்கு இந்திய சிறையில் மிகுந்த பாதுகாப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. அவனை காவல்துறையினர் விசாரித்தபோது கூட சித்ரவதை செய்யவில்லை. ஒரு பக்குவப்பட்ட ஜனநாயக நாடு என்பதை கசாப் வழக்கில் நமது அரசு நிரூபித்தது. கசாப் கோரிய அனைத்து வசதிகளும் அவனுக்கு செய்து தரப்பட்டன. அவனுக்கு இலவச சட்ட உதவியும் வழங்கப்பட்டது. அவனுக்காக வாதாட வழக்குரைஞர் ஒருவரை நமது அரசே நியமித்தது. குற்றவாளி என்றபோதும் அவனுக்குள்ள அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், கசாப் வழக்கை விசாரித்த மும்பை மாவட்ட நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது (2010, மே 6). இந்தத் தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் கசாப் மனு செய்தான். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தூக்கு தண்டனையை உறுதி செய்தது (2011, பிப்ரவரி 21). உச்சநீதி மன்றத்திலும் இந்தத் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது (2012, ஆகஸ்ட் 29). கசாப் சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. அதை கடந்த நவம்பர் 8 ம் தேதி அவர் நிராகரித்தார். இவ்வாறாக, கசாப் வழக்கில் அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. ஆயினும் கசாப் தூக்கு தண்டனை நிறைவேறுமா என்பதில் சந்தேகம் இருந்து வந்தது. 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு இன்னமும் தண்டனை பெறவில்லை. அதே போன்ற நிலை தான் கசாப் விஷயத்திலும் அனுசரிக்கப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் தான், கசாபுக்கு தூக்கு தண்டனை ரகசியமாகவும், அவசர அவசரமாகவும் எரவாடா சிறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்போது பயங்கரவாதத்துக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுவிட்டதாக நெஞ்சு நிமிர்த்துகிறது காங்கிரஸ். மும்பை குண்டுவெடிப்புகளுக்கும், 26/11 தாக்குதலுக்கும் காரணமான அதே காங்கிரஸ் தான் இப்போது வெற்றி முழக்கம் செய்கிறது.

இவ்வழக்கை மஹாராஷ்டிரா அரசு தான் நடத்தியது கசாபுக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு, கசாப் கும்பலுக்கு உள்ளூரில் உதவிய ‘ஸ்லீப்பர் செல்’ பிரமுகர்களைத் தப்பிக்கச் செய்துவிட்டது. இத்தகைய பயங்கர தாக்குதல் உள்ளூர் தீவிரவாதிகளின் உதவியில்லாமல் சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். இவ்வழக்கிலும் பலர் கைதாகினர். ஆனால் மாநில அரசு திறம்பட வழக்கை நடத்தாததால் அவர்கள் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இதுகுறித்து அரசுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. உண்மையில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வாக்கு வங்கிக்காக இந்த வழக்கில் பல ஓட்டைகளை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள் தப்ப உதவி இருக்கிறது.

அதேபோல நாடு கடந்த மறைமுகப் போர் குறித்து உலக அளவில் பிரசாரம் செய்து பாகிஸ்தானின் முகமூடியைக் கிழிக்கும் வாய்ப்பையும் மத்திய அரசு தவற விட்டுவிட்டது. கசாபுடன் வந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பது ஊர்ஜிதமானபோதே, அந்நாட்டின் மீது இந்தியா படை எடுத்திருக்கலாம். இஸ்ரேல் அவ்வாறு தான் செய்கிறது. அமெரிக்கா ஆப்கன் மீது போர் தொடுத்ததும் அதனால் தான். அவ்வாறு செய்யாவிட்டாலும் உலக அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்த வாய்ப்பை நமது அரசு பயன்படுத்தி இருக்க வேண்டும். எங்கே, நமது அரசுக்கு ஊழல்களில் திளைக்கவே நேரம் போதவில்லையே?
கசாப் கைதான போதே அவனை ‘என்கவுன்டர்’ முறையில் கொன்றிருக்க முடியும். ஆனால், நமது அரசு அவனை கைது செய்து, அவனுக்கு உரிய அனைத்து சட்டப்பூர்வமான வசதிகளையும் வழங்கி, அவனை ஒரு விருந்தாளி போலவே நடத்தியது. இதற்காக நாம் பெருமிதப்படலாம். இதற்காக நமது அரசுகள் செய்த செலவினம் ரூ. 29 கோடி! இவ்வளவும் செய்த நமது அரசுகள் அதை திறம்பட பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

கசாபை தூக்கில் இட்டதும் கூட மிக ரகசியமாக செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. கசாபுக்கு தூக்கு நிறைவேற்றப்படுவதை உலக நாடுகள் எதிர்க்க வாய்ப்பில்லை. பாகிஸ்தானே, கசாபுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கைவிரித்துவிட்டது. மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்ற அச்சம் காரணமாக இருக்கும் என்று கூறப்படுமானால், அதை விட நகைப்புக்குரிய விஷயம் எதுவும் இருக்க முடியாது. இந்திய அரசின் அச்சம், இங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் மீதானது. கசாப் தண்டனை நிறைவேற்றத்தை இந்திய முஸ்லிம்கள் எதிர்ப்பார்களோ என்ற அச்சத்தால் தான், இதை ரகசியமாக நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை கேவலப்படுத்துவதாகும்.

இங்கு வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் வெறுப்பு அரசியலில் திளைப்பவர்கள் அல்ல. சில பயங்கரவாத அமைப்புகள் அவர்களிடையே செயல்படுவது உண்மைதான். ஒரு துணிவுள்ள அரசு, அத்தகைய பயங்கரவாதிகளுக்கு படிப்பினை அளிக்கும் வகையில், இதே தண்டனையை ஒரு கருத்தியல் பிரசாரமாகவே முன்னெடுத்திருக்கும். அவ்வாறு செய்யும் திராணி நமது மத்திய அரசுக்கு இல்லை. இந்தத் தண்டனையே உள்ளூர் நிர்பந்தம் காரணமாக, மகாராஷ்டிரா அரசின் முயற்சியால் தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அண்மையில் காலமான சிவசேனை தலைவர் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய 25 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மகாராஷ்டிர காங்கிரஸ் காரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்துவிட்டது. அதுவும் கசாப் விரைவாக தூக்கிலிடப்பட ஒரு காரணம். இன்னொன்று நவ. 22 ல் துவங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அரசுக்கு தற்காப்பு உபாயங்கள் தேவைப்பட்டன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததால் அரசுக்கு ஏற்பட்ட சிக்கலை எதிர்கொள்ள கசாப் தண்டனை நிறைவேற்றம் உதவும் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சாதாரணமாக எடைபோட முடியாது.

2 ஜி ஊழலை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி. வினோத் ராயையும், அரசுக்கு அடிக்கடி சங்கடம் கொடுக்கும் பொது கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியையும் ஒரே நேரத்தில் வீழ்த்த என்ன செய்வது என்று சதித் திட்டம் தீட்டும் அபார மூளைகள் குயுக்தியுடன் செயல்படும் கட்சி காங்கிரஸ். 2 ஜி மறு ஏலத்தையே அரசுக்கு சாதகமாக மாற்ற என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யும் கட்சி 125 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ். அக்கட்சிக்கு எங்கு கல்லெறிந்தால் எங்கு பழம் விழும் என்று தெரியும். கசாப் விஷயத்தில் காங்கிரஸ் அற்புதமாக காய் நகர்த்தி இருக்கிறது. இதற்கு ஒரே பதிலடி அப்சல் குருவுக்கு எப்போது தண்டனை? என்று கேட்பது தான். அதுவும் விரைவில் நிறைவேறுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. அரசியலுக்காக காங்கிரஸ் இயங்கினாலும், நாட்டுநலனை விரும்புவோர் அதற்கான நிர்பந்தங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பது அவசியம்.

கசாப் உடலை அவரது குடும்பத்தாரிடம் கொடுக்காமல் சிறைக்குள்ளேயே புதைத்ததை பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பு கண்டித்திருக்கிறது. கசாப் உடலை பாகிஸ்தானுக்கு அனுப்பாவிட்டால் அங்குள்ள இந்தியர்களைக் கடத்திக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறது தலிபான். இதை நமது அரசு துணிவுடனும் விவேகத்துடனும் கையாண்டு முறியடிக்க வேண்டும். கசாப் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில், பாக். சிறையில் உள்ள அப்பாவி சரப்ஜி சிங்கின் உயிருக்கு உலை வைக்கப்படலாம் அதைத் தடுக்க வேண்டிய கடமையும் நமது அரசுக்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி எந்தத் தந்திரத்தைக் கையாண்டாலும், கசாப் தூக்கு நிறைவேற்றத்தில் லாபம் காண விரும்பினாலும், நாட்டுநலன் அடிப்படையில் அக்கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அக்கட்சியின் சுயரூபத்தை பிரசாரமும் செய்வது அவசியம். அதேபோல, கசாப் தூக்கில் இடப்பட்டதைக் கொண்டாடும் மனநிலையும் தேவையில்லை. இந்த அம்பை ஏவியவர்கள் எப்போது வெல்லப்படுகிறார்களோ, அப்போது தான் உண்மையான கொண்டாட்டத்துக்கான தருணம் வாய்க்கும். இதை தேசபக்தர்கள் மறந்துவிடக் கூடாது.

16 Replies to “கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்”

 1. காங்கிரஸ் அரசு இன்றைய தேதியில் ஒரு தேசவிரோத அரசு மட்டுமே. திமுக போன்ற பல தேசவிரோத சக்திகள் அதற்கு உதவிவருகின்றன. மோசடிக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த இந்த அரசுக்கு, மக்கள் விரைவில் மூடுவிழா நடத்தி, ஜனநாயக முறையில் விரட்ட இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல் பிரமுகர்களை தப்ப விட்ட, மகாராஷ்டிர காங்கிரஸ் அரசுக்கு , மக்கள் தூக்கு தண்டனையை வரும் தேர்தலில் வழங்குவார்கள். துரோகிகளின் அத்தியாயம் முடிவது உறுதி.

 2. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் திரிமுல் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மான முன்மொழிவை (ப.ஜ.கா) ஏன் ஆதரிக்கவில்லை? இதற்கான உண்மையான காரணம் என்ன என்று கூறமுடியுமா

 3. தேசத்தின் அனைத்து பக்தர்களுக்கும் உறுதியான சோதனை. தன்னுடைய தவறை மறைத்து மக்களை முழுவதுமாக ஏமாற்றும் செயலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
  விழித்துக் கொண்டு அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளையும் தூக்கில் போட வலியுறுத்த வேண்டும்.
  வாழ்க பாரதம்.

 4. கசாபை தூக்கில் இட்டது பற்றி புதிய தலை முறை தொலைக்காட்சி பழ நெடுமாறனையும் பேராசிரியர்(?) அ மார்க்ஸ் என்பவரையும் பேட்டி கண்டது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் ஓர் உயிரைப் பறிக்க அரசுக்கு உரிமை இல்லை என்றும் வக்காலத்து வாங்கினர். மும்பையில் அநியாயமாய் போன உயிர்களை பற்றி கவலைப் படவில்லை. அன்றைய தினம் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை சந்திக்க நேர்ந்தது. அவர் இந்துத்துவ வாதி என்றும் ஆர் எஸ் எஸ் காரர் என்றும் சில முற்போக்கு காரர்களால் வசை பாடப்படுபவர். அவர் மிகவும் தெளிவான முறையில் தன கருத்தினை தெரிவித்தார், உலக அளவில் மரண தண்டனைக்கு எதிரான அபிப்ராயங்கள் இருந்தாலும் சில நேரங்களில் தவிர்க்க இயலாது. என்றும் கசாபை சிறையில் வைத்துப் பாதுகாக்கும் போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் வேறு ஒரு பயங்கரவாதத்தை நிகழ்த்த முயற்சித்து அவனுடைய விடுதலையை கோருவர் எனவே அரசின் முடிவு சரியே என்றார். பல நேரங்களில் மனித உரிமை பாடல் தவறாகவே இசைக்கபடுகிறது

 5. //இந்த வாரம் நாடாளுமன்றத்தில் திரிமுல் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மான முன்மொழிவை (ப.ஜ.கா) ஏன் ஆதரிக்கவில்லை? இதற்கான உண்மையான காரணம் என்ன என்று கூறமுடியுமா//

  ஜீ, அது அநாவசியம். தீர்மானம் மாயாவதி, முலாயம் மற்றும் இடதுசாரிகள் மூலமாக தோற்கடிக்கப் பட்டிருக்கும்..

 6. பழ நெடுமாறன் , அ. மார்க்ஸ் போன்ற வீண்போன நபர்களுக்கு , மும்பையில் இறந்த 166 – மனிதர்களின் உயிர் மனித உயிராக தெரியவில்லையா ? இறந்தவர்களை விடவும், இந்த தாக்குதலின் விளைவாக கண், காது, கை, கால் , மூக்கு , என்று பல்வேறு உடல் உறுப்புக்களை இழந்து வாடும் முதியோர், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு பேர் என்பது இவர்களுக்கு தெரியாதா ? புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் , இவர்களை போன்ற தீய சக்திகளை வைத்து விவாதம் செய்தல் பெரிய தவறு ஆகும். எதிர்காலத்தில் தங்களை அவர்களே திருத்திக்கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம். நூற்றுக்கணக்கான மக்களை கொன்றவனை தூக்கில் போடவில்லை என்றால், மேலும் பலரும் இதே போன்ற அயோக்கியத்தனங்களை நிறைவேற்ற தயங்கமாட்டார்கள். தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது சரியானதே. அது சரி, அப்சல் குருவுக்கு எப்போது தூக்கு தண்டனை நிறைவேற்ற விருக்கிறார்கள்? பார்லிமெண்டு கட்டிடத்தினை தாக்கிய கோஷ்டிக்கு , உதவிகள் செய்த அயோக்கியனை சும்மா விடலாமா? அவனை உடனடியாக தூக்கிலிட தவறினால், காங்கிரசின் நாடகம் அம்பலமாகிவிடும்.

 7. மத்திய அரசின் பல்லக்கு தூக்கிகளாக மாயா, முலாயாம், கம்யூனிஸ்டு கோமாளிகள் என்று பல அடிவருடிகள் இருப்பதால், கலைஞரின் பாத பூஜையை சொக்கத்தங்கம் சோனியா முன்புபோல அவ்வளவு முக்கியம் கொடுத்து ஏற்கவேண்டிய நிலையில் இல்லை. எனவே, மஞ்சளாருக்கு இனி டெல்லியில் மானம் மரியாதை இருக்காது. எவ்வளவு நாளுக்கு தான் சொக்கத்தங்கம் காலை கழுவி வாழ்வது? சிறிதாவது சுயமரியாதையுடன் இருந்தால் தான் , குடும்ப கட்சி எதிர்காலத்தில் பிழைக்கும். இல்லையென்றால், கோவிந்தா தான்.

 8. The Hindu வில் ஒருவர் எழுதியிருந்தார், கசாப்பை அவனுடைய நாட்டுக்கு அனுப்பி, அவர்கள் சட்ட்ப்படி விசாரித்து ஹண்டித்திருக்க வேண்டும் என்று. மார்க்ஸ்சும் நெடுமாறனும் கசாப்பை வெறுங்கையுடன் அனுப்ப்க்கூடாது. அவன் திருந்தி வாழுவதற்குக் கைப்பணமாக 24கோடி ரூபாயும் கொடுத்து அனுப்பவேண்டும் என்றும் கூறுவார்கள். என்னே இவர்களின் மனிதநேயம்!

 9. \\\\இங்கு வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் வெறுப்பு அரசியலில் திளைப்பவர்கள் அல்ல.\\\\

  ஹிந்துத்வ வாதிகள் தங்கள் செயலில் காட்டும் ஆனால் உரத்துப் பேசாத விஷயம். செகுலர் வாதிகள் என்றென்றும் நம்ப மறுக்கும் விஷயம்.

  பால் தாக்கரே மட்டும் இறக்கவில்லையானால் இன்னமும் கசாபை வைத்து காங்கிரஸ் காரர்கள் வித்தை காட்டிக் கொண்டு மனித உரிமை அது இது என சீதா ராம் எசுரி மற்றும் ராஜாவுடன் டிவியில் கதை பேசிக் கொண்டு இருப்பார்கள்.

 10. திரு.சேக்கிழான்,
  காங்கிரஸ் அரசாட்சியில் இடம்பெற்றுள்ள ஊழல்களை வைத்து, கசாப்
  தூக்குத்தண்டனையை அளவிடுவது சரியாக இருக்காது என்பது என் கருத்து.
  எப்படி இருப்பினும் காங்கிரஸ் அரசு செய்துள்ள ஆகப்பெரும் சாதனையாகவே
  நான் இதை நோக்குகிறேன்.

  “அதேபோல நாடு கடந்த மறைமுகப் போர் குறித்து உலக அளவில் பிரசாரம்
  செய்து பாகிஸ்தானின் முகமூடியைக் கிழிக்கும் வாய்ப்பையும் மத்திய அரசு
  தவற விட்டுவிட்டது.”

  இந்திய மத்திய அரசு நன்றாகவே உலகளவில் பிரசாரம்
  செய்துள்ளதாகவே நான் பார்க்கிறேன்.

  “கசாபுடன் வந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பது ஊர்ஜிதமானபோதே, அந்நாட்டின் மீது இந்தியா படை எடுத்திருக்கலாம். இஸ்ரேல் அவ்வாறு தான் செய்கிறது”

  இஸ்ரேல் படையெடுக்கலாம். இந்தியாவால் அதை செய்ய முடியாது.
  இஸ்ரேலுக்கு அமேரிக்கா செய்யும் ஆயுத உதவியைப் போல இந்தியாவிற்கும்
  செய்தால். நம்மால் போர் செய்ய முடியும். ஆனால் அழிவுகள் இந்தியாவிலும்
  அதிக அளவில் இருக்கும். (அதனால்தான் அமேரிக்காவை அனுசரித்து பெரும்
  உதவிகளை நாம் பெற வேண்டும் என்று எழுதி வருகிறேன்.)

  (சமீபத்திய காஸா மோதலில் Iron Dome என்னும் தொழில்நுட்பத்தைப் பற்றி
  படித்து பாருங்கள். அமேரிக்க உதவி பெற்று பெரும்பாலான ஹமாஸின்
  ராக்கெட்டுகளை வானத்திலேயே வீழ்த்தும் வசதியை இஸ்ரேல் பெற்றுள்ளது.)

  “கசாப் கைதான போதே அவனை ‘என்கவுன்டர்’ முறையில் கொன்றிருக்க முடியும்.”

  அது தவறான முடிவாகவே இருந்திருக்க முடியும். என்கவுண்டர் முறையை நான்
  ஆதரிப்பவன். ஆனால் இந்த நிகழ்வில் இந்திய மத்திய அரசு சரியாக
  செயல்பட்டுள்ளதாகவே நான் உணர்கிறேன்.

  “ஆனால், நமது அரசு அவனை கைது செய்து, அவனுக்கு உரிய அனைத்து சட்டப்பூர்வமான வசதிகளையும் வழங்கி, அவனை ஒரு விருந்தாளி போலவே நடத்தியது. இதற்காக நாம் பெருமிதப்படலாம்”
  சட்டபூர்வமான வசதிகள் வழங்கியதற்காக நாம் கண்டிப்பாக பெருமிதம்
  கொள்ளலாம். விருந்தாளி போல நடத்தியது என்பதற்கு ஆதாரம் இல்லை.
  பொதுவாகவே குற்றவாளிகளுக்கு வசதிகள் அதிகமாக செய்து தரப்படக்கூடாது
  என்பதுதான் எனது வாதம். ஆனால் கசாபுக்கு மட்டும் சில வசதிகள் செய்து
  தரப்பட்டதாக நான் நினைக்கவில்லை.

  “இதற்காக நமது அரசுகள் செய்த செலவினம் ரூ. 29 கோடி! இவ்வளவும் செய்த நமது அரசுகள் அதை திறம்பட பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. ”

  ரூ 29 கோடி செலவு செய்யப்பட்டது அற்புதமான வெளியுறவுத்துறை வியூகம்.
  இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் கூறுவதை உலக
  நாடுகளில் பல ஏற்றுக்கொள்வதில்லை. ஆப்கானிஸ்தான் போர்
  காரணங்களுக்காக சில விட்டுகொடுப்புகளை செய்து தருகின்றனவே தவிர,
  அனைத்து உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், அமேரிக்க அதிபர்,
  பிரிட்டனின் பிரதமர் உட்பட வெளிப்படையாகவே பாகிஸ்தானிற்கு எதிராக
  பேசியுள்ளனர்.

  “கசாபை தூக்கில் இட்டதும் கூட மிக ரகசியமாக செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை”

  ரகசியமாக செய்தது சரியென்றே நான் நினைக்கிறேன். மனித உரிமை ஆர்வலர்களிடம் பயமில்லை. ஆனால் ஏதாவது பொதுநல வழக்கு வந்துவிட்டால் அநாவசியமான கால விரயம் ஏற்படும்.

  மொத்தத்தில் கசாப் தூக்கு வழக்கில் காங்கிரஸ் அரசின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள தக்கதாகவே எனக்கு தோன்றுகிறது.

 11. பாலாஜி அவர்களின் கண்களுக்கு , அப்சல் குரு- கசாபை விட சீனியர் என்பது ஏனப்பா தெரியவில்லை ?

 12. //இதற்காக நமது அரசுகள் செய்த செலவினம் ரூ. 29 கோடி!//

  //இங்கு வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் வெறுப்பு அரசியலில் திளைப்பவர்கள் அல்ல. சில பயங்கரவாத அமைப்புகள் அவர்களிடையே செயல்படுவது உண்மைதான்.//

  //அண்மையில் காலமான சிவசேனை தலைவர் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய 25 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மகாராஷ்டிர காங்கிரஸ் காரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்துவிட்டது.//

  //அக்கட்சிக்கு எங்கு கல்லெறிந்தால் எங்கு பழம் விழும் என்று தெரியும். கசாப் விஷயத்தில் காங்கிரஸ் அற்புதமாக காய் நகர்த்தி இருக்கிறது. இதற்கு ஒரே பதிலடி அப்சல் குருவுக்கு எப்போது தண்டனை? என்று கேட்பது தான்.//

  //கசாப் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில், பாக். சிறையில் உள்ள அப்பாவி சரப்ஜி சிங்கின் உயிருக்கு உலை வைக்கப்படலாம் அதைத் தடுக்க வேண்டிய கடமையும் நமது அரசுக்கு இருக்கிறது. //

  //காங்கிரஸ் கட்சி எந்தத் தந்திரத்தைக் கையாண்டாலும், கசாப் தூக்கு நிறைவேற்றத்தில் லாபம் காண விரும்பினாலும், நாட்டுநலன் அடிப்படையில் அக்கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அக்கட்சியின் சுயரூபத்தை பிரசாரமும் செய்வது அவசியம். அதேபோல, கசாப் தூக்கில் இடப்பட்டதைக் கொண்டாடும் மனநிலையும் தேவையில்லை.//

  அருமையாக விளக்கியுள்ளீர்கள். நேர்மையான பதிவு.

 13. // கசாபை தூக்கில் இட்டது பற்றி புதிய தலை முறை தொலைக்காட்சி பழ நெடுமாறனையும் பேராசிரியர்(?) அ மார்க்ஸ் என்பவரையும் பேட்டி கண்டது //

  யார் அந்த மார்க்ஸ் ? தனக்குப் பிடிக்காத எழுத்துக்களை வெளியிட்டதற்காக இந்தியா டுடே பத்திரிக்கை பக்கங்களை தனது மலம் துடைத்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு அனுப்பினாராமே அவர்தானே ? இவர் இது மனித உரிமை மீறல் என்கிறாராமா ? இவரெல்லாம் ஒரு பேராசிரியர் ? தமிழ் சமூகத்தை கறைப்படுத்தி நாறடிக்க எப்படிப்பட்ட ஆட்களெல்லாம் கிளம்பி வந்துவிடுகிறார்கள் பாருங்கள் !!

  புதிய தமிழகம் இதன் மூலம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துக்கொண்டுள்ளது எனலாம். நெடுமாறன், ‘மலம் அனுப்பி’ மார்க்ஸ் போன்ற ஆசாமிகள் இது போன்ற பிரச்சினையில் என்ன சொல்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். இதற்கேன் ஒரு பெட்டி, புண்ணாக்கு எல்லாம் ?

 14. நண்பர் பாலாஜியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.. பாகிஸ்தானின் முகமுடியை பொறுமையாகவும் தெளிவாகவும்,திறமையாகவும் கிழியவைத்ததர்க்காக காங்கிரசையும் பாராட்டுகிறேன். இனியும் பாரத இஸ்லாமியரை ஓட்டுவங்கியாக நினைத்து பாவிக்கும் மனப்போக்கை காங்கிரஸ் மற்றும் ஜாதி வெறி, மொழிவெறி, இன வெறி கொண்ட கட்சிகள் கைக்கொண்டால் வன்மையாக கண்டிப்போம்.!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *