பூதவிருள் பொருளை மறைப்பதன்று
மக்கள்கண்ணுக்குப் பொருள்களைக் காணுமாறு விளக்கத்தினை நல்கும் ஒளியைப் போன்று, இவ்விருள் மறைப்பினைச் செய்யுமொரு பொருளன்று.
- ஞாயிறு, சுடர் முதலிய ஒளிகளை வேறுபடுத்திக்காட்ட இயலுவதுபோல வெளியினின்றும் இருளை வேறுபடுத்திக்காட்ட இயலாது.
- அவ்வாறு வேறுபடுத்திய இருளை விழி காணும்படியாகச் சாரவைத்தலும் இயலாது.
- சாரவைத்தபோது கண் இருளை நோக்காது நிற்றலை மெய்ப்பித்தலும் இயலாது.
இருள்மீது மறைத்தல்தொழிலும் கரியநிறமும் ஏற்றிக் கூறும் வழக்கமானது அவ்விருளினை ஒருபொருளெனக்கொண்டு கூறும் வியவகாரத்து எய்தியதாகும். ஒளிமுன் இருள் அடங்கிக்கிடக்கும்; ஒளிமுன் இருள் கெடும் எனக் கூறுவதும் ஒரு வியவகாரத் தெய்தியதேயாகும். அதாவது, ஒரு பேச்சுக்கவ்வாறு கூறப்படுகின்றதே யொழிய உண்மையில் அந்நிலையில்லை. இருளொரு தனிப்பொருளன்று. ஒளியற்ற வெட்டவெளியே இருள் என்ற பெயருடைப்பொருளாக அழைக்கப்படுகிறது.
உலகத்தாரின் பேச்சு வழக்கிற்கேற்பப் பாம்பனடிகளும்,’பாசம் பகலோன் முனரே திமிரம் நாசம் பெறல்போல்’ எனப் பாடியுள்ளார். ஆனால், இருள் ஒரு தனிப்பொருளன்று. அஃது பொருளை மறைப்பதுமன்று. ஒளிமுன் இருள் கெடுவதுமில்லை. மனிதவிழி மட்டுமே இருளில் பொருளைக் காண இயலுவதில்லை. அஃது கண்ணின் குறையேயன்றி இருளின் மறைக்கும் திறனன்று.
சம்பந்தங்களும் இருளுக்கும் வெளிக்கும் உள்ள சம்பந்தமும்:
இருளும் வெளியும் நெருங்கிய சம்பந்தமுடையன. அந்தச் சம்பந்தம் எத்தகையது?
சம்பந்தம் அத்துவித சம்பந்தம், வியாபக வியாப்பிய சம்பந்தம், குணகுணி சம்பந்தம், தாதான்மிய சம்பந்தம், சையோக சம்பந்தம், சமவாய சம்பந்தம் எனப் பலவகைப்படும்.
இரண்டு பொருள்கள் இரண்டற்றநிலையில் கூடியிருப்பது அத்துவித சம்பந்தம். உயிரும் இறையும் அத்துவித சம்பந்தம்
இறையின் வியாபகத்தில் சேதன-அசேதனப் பிரபஞ்சம் அடங்கியிருத்தல் வியாபக-வியாப்பிய சம்பந்தம்.
சிவத்திற்கும் சிவசத்திக்கும் இடையேயுள்ளது தாதான்மியசம்பந்தம்.
மலரில் மணமும் பழத்தில் இரதமும் குணகுணிசம்பந்தம்.
பாலும் நீரும்போல ஒருபொருளாய் ஒற்றுமைப்பட்டுக் கலந்துள்ள சம்பந்தம் சையோக சம்பந்தம்.
ஞாயிறுக்கும் ஞாயிற்றின் ஒளிக்கும் இடையே உள்ள சம்பந்தம் நீக்கமின்றி நிற்கும் சமவாய சம்பந்தம்.
சிவமும் சிவசத்தியும், ஞாயிறும் ஞாயிற்றின் ஒளியும் பிரிக்கவியலாத தாதான்மிய சம்பந்தமும், ஒருவகையில் சமவாய சம்பந்தமும் ஆகும். சிவமும் சத்தியும் பிரிவிலா தாதான்மிய சம்பந்தம் உடையன என்றாலும், சிவம் தனித்தும் இயலும்; சிவசத்தி சிவமின்றி இல்லை. சூரியனும், சூரியனுடைய ஒளியும் பிரிவிலா நிலைமயனவாயினும் சூரியனில் கதிருண்டு, சூரியனின்றிக் கதிரில்லை. இச்சம்பந்தம் சமவாய சம்பந்தம்.
சமவாய சம்பந்தமுடைய ஞாயிறும் ஒளியும் பிரிந்து அறியப்படும். ஞாயிற்றொளி வழியே ஞாயிறு எனும் முதல் அறியப்படும். ஞாயிறு நேரே உலகுக்குப் பயன்படுவதில்ல். ஞாயிற்றின் ஒளியே உலகுக்குப் பயன்படுகின்றது. சிவத்திலிருந்து சிவசத்தி பிரித்து அறியப்படும். சிவசத்தி வாயிலாகவே சிவம் அறியப்படும். சிவம் நேரில் இப்பிரபஞ்சத்தைத் தொழிற்படுத்துவதில்லை, சிவசத்தியின் வாயிலாகவே தொழிற்படுத்துகிறது. இது தாதான்மிய சம்பந்தத்திற்கும் சமவாய சம்பந்தத்திற்கும் உள்ள வேற்றுமை.
ஞாயிறும் அதன் ஒளியும் ஒன்றெனப்படுமாறு, இருளும் வெளியும் ஒன்றெனப்படுமேயன்றி வேறுவேறு எனப்படா. மனிதர்விழிக்கு ‘வெளியே’ இருளாகத் தோன்றுகின்றது. அவ்வாறு வெளியே இருளாகத் தோன்றுவதற்குக் காரணம் அவற்றிடையே அமைந்துள்ள சமவாய சம்பந்தமே என்ற தீர்வை வழங்குகின்றார், பாம்பன் சுவாமிகள்.
“தேவதைகளுக்கு வேறாகநின்று இன்பமும் துன்பமும் நுகர்பாக்கு இறைவனாற் படைக்கப்பட்ட மாந்தருடைய விழி, வெளியினையே இருளாகக் காண்பான் அமைக்கப்பட்டமையின், அவ்விருள் மேலிடாது அடங்கும் ஏல்வை காட்சியுண்டாம்படி அக்கினிக் கோளமென்னும் சூரியன், இராக்கதிராகிய சந்திரன், விண்மீன் ஆகிய இவற்றுள் ஒளித்திறங்கள் அமைக்கப்பட்டன என்பதூஉம் இவ்விழியான் இராப்பகல்கள் அனுபவமாமாறு மாந்தர்க்கே பிரதான வாசத்தானமமிப் பூமியும் படைக்கப்பட்ட தென்பதூஉம் ஏற்புடையன வென்றியம்புவாம்”
என மொழிந்தருளினார்.
ஆக சுவாமிகளின் கருத்துப்படி,
- இருள் ஒரு தனிப்பொருளன்று. (இருள் தனிப்பொருள் என்றது சிவஞான பாடியம்)
- இயற்கை நிலைக்கள வெளியையே மானுடவிழி இருளாகக் காண்கிறது. (வெளி இருளாகக் காண்பது மயக்கவுணர்ச்சி என்பது பாடியம்)
- இயற்கை நிலக்கள வெளியையே இருளாகக் காணும்படியாக அமைந்தது, மானுடவிழி.
- ஒளியிலா ஞான்று இயற்கை நிலைக்கள வெளியையே மானுடவிழி இருளாகக் காண்கிறது. (இருள் உள்பொருளெனினும் காட்சிப்பொருளன்று என்பது பாடியம்.)
- பகற்போதிலும் நீண்ட ஆகாயமாகிய வெளி நீலநிறமாகக் காட்சியளிப்பது, பகற்போதிலும் இருளுண்மையைக் காட்டும். ஒளிபெற்றும் பார்வை செயலற்று நின்றுவிட்ட நிலைக்களவெளி மட்டுமே நீலநிறமாகக் காணப்படுகின்றமையின், இருளைக் காட்சியளவையாலும் அறியலாம். (இருளைக் காட்சியளவையாற் காணமுடியாது; நீலம் அல்லது கருமையாகத் தோன்றுவது மயக்கவுணர்வே என்பது, மாபாடியம்)
ஆணவ இருளும் பூத இருளும்:
பூதவிருளின் உண்மை இயல்பினை மேற்கண்டவாறு விளக்கிய பாம்பன் சுவாமிகள், பூதவிருள் ஆணவ இருள் இவற்றுக்கிடையேயுள்ள வேற்றுமையையும் எடுத்துக்காட்டினார்.
ஆணவமலத்தை ஆகமங்கள்,
- அநாதியாகவே உயிரைப் பற்றியுள்ள குற்றம்
- அது சகசம் (உடன் தோன்றியது).
- எனவே அநாதி பந்தம்.
- அது இருள் வடிவிற்று.
- செம்பில் களிம்புபோல சீவான்மாவில் கலந்து அறிவை மறைக்கும்.
எனக் கூறுகின்றன. ஆணவமலம், ஆன்மா, மெய்ப்பொருளை அறியவொட்டாமல் மறைப்பதாகையால், பொருளைக் கண்ணுக்குத் தெரியவொட்டாமல் மறைக்கும் இருள் அதற்கு உவமையாயிற்று. அதனால் ஆணவமலம் இருள்வடிவிற்று என்றும் ஆணவவிருள் எனவும் வழங்கலாயிற்று.
வேதங்கள் ஆகமங்கள் இரண்டும் ஆணவ இருளைப்பற்றிப் பேசுகின்றன. ஆணவமலத்துக்குப் பசுத்துவம், பசுநீகாரம், மிருத்யு, மூர்ச்சை, மலம், அஞ்சனம், அவிச்சை, ஆவிருதி, ருக்கு, கிலானி, பாவமூலம், க்ஷ்யம் முதலிய பல பெயர்களை வேதாகமங்கள் வழங்குகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் கருமை அல்லது இருள் என்னும் பொருளுடன் தொடர்புடையன்.
பூத இருள் கண்ணுள்கலந்து நில்லாமையால் கண்ணுக்குக் காட்சிப்படுகின்றது. செம்பில் கலந்துநிற்கும் களிம்பு அதன் ஒளியை மறைத்து நிற்றல் காணப்படுமாறுபோல ஆணவம் சீவான்மாவில் கலந்து நிற்கும், அறிவை மறைக்கும். எனவே, பூத இருளைப் போல்வதொன்றன்று, ஆணவ இருள். சுவானுபூதியில் ஞானவொளி பிறத்தலும் ஆணவ இருள் வலிமடங்கும்.
ஆணவமலம் சடம். அது தானாகச் செயல்படாது. ஆன்மாவைப் பற்றியிருக்கும் மலசத்தியினை வலி குன்றும்வரைக்கும் பக்குவப்படுத்துவது திரோதானம் எனப்படும் ஈசுவரசத்தியே. அது சிவத்தை மறைத்து, ஆன்மாவுக்கு உலகத்தைக் காட்டி, உலக அனுபவத்தில் அழுத்தும். ஆணவமலம் பக்குவப்பட்டு வலிகுன்றிய தருணத்தில் திரோதான சத்தியே அருட்சத்தியாகி ஆன்மாவுக்குச் சிவத்தைப் புலப்படுத்தும்
பூதவிருள் உலகெங்கணும் நிரம்பியிருந்தாலும், அஃது இல்லங்கள்தோறும் வெவ்வேறு அளவில் காணப்படுகின்றது. எங்கும் பரந்துள்ள இருள், இல்லத்தின் ஒளிக்குத் தக்கவாறு வெவ்வேறளவில் காணப்படுகின்றது. அதுபோலவே, ஆணவ இருள் எல்லாப் புவனங்களிலும் செறிந்து, காரணசரீரத்திற்குள்ளே இருக்கும் ஒவ்வொரு சீவான்மாவிடத்தும் புணர்ந்துநின்று ஆன்ம அறிவை மறைத்துநிற்கின்றது.
அந்த மறைப்பு வெவ்வேறளவில் காணப்படும். ஆன்ம அறிவில் திருவருள் விளங்கிநிற்பதற்கு ஏற்பவும், ஆன்ம அறிவு விளக்கத்திற்குத் துணையாகத் திருவருளால் கூட்டப்படும் மாயாகாரியமான கருவிகளின் சிறப்புக்கு ஏற்பவும் ஆணவ வல்லிருள் மெலிந்து தோன்றும்.
இருளில் சந்திரனும் விண்மீன்களும் பிரகாசித்து உலகிற்கு ஒளிவழங்குகின்றன. இந்நிலை இருளும் ஒளியும் ஒருசேர நிற்பதைக் காட்டும். அதுபோல ஆன்மபோத சந்திரனும் தத்துவக் கருவிகளாகிய விண்மீன்களும் ஆணவவிருளில்தான் சுடர்விடுகின்றன.
ஞாயிறொளிக்கு முன் சந்திரன் முதலிய சிற்றொளிகளும் இருளும் தத்தம் வலிகளை ஒருங்கே இழந்து அப்பேரொளியில் அடங்கிநிற்கின்றன. அதாவது, அழியாமல் அடங்கிநிற்கின்றன.
அவ்வாறே, பேரொளியாகிய சிவஞானத்திற்குமுன் சிற்றறிவாகிய ஆன்மபோதமும் அஞ்ஞானவிருளும் அடங்கியிருக்கின்றன.
மூவகை விழிகள்
கண்ணுக்குக் காணும் இயல்பில்லையென்றால் அதற்கு இருளினால் வரும் கெடுதியும் இல்லை; ஒளியினால் வரும் பயனும் இல்லை. இருள்பற்றிய ஆய்வில் கண்ணின் காணும் இயல்பும் கருதத் தக்கதாம்.
சாத்திரங்களில் கண் உயிருக்கு உவமையாகக் கூறப்படும். அவ்வாறே, கண்ணின் காணும் தன்மை உயிரின் அறிவுக்கு உவமையாகும்.
அதுபோல அறிவில்லையேல் உயிருக்கு ஆணவமலத்தால் பாதிப்பு இல்லை, திருவருளால்பெறும் உபகாரமும் இல்லை. உயிரின் அறிவுடைமையால்தான் ஆணவமலத்தின் மறைப்பும் உடன் நிகழ்கிறது. திருவருளின் உபகாரமும் இன்றியமையாததாகின்றது.
இக்கருத்தை விளக்க வந்ததே,
“ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல்லெனின் என்செய”
என்னும் திருவருட்பயன் குறள் (16)
பாம்பன் சுவாமிகள் இருளோடு தொடர்புபடுத்தி மூவகை விழிகளை விளக்குகின்றார். இருள் ஆணவமலத்திற்கு உவமையெனின் அம்மூவகை விழிகளும் ஆணவமலத்தொடு கூடிய உயிரின் மூவகை நிலைகளை விளக்குவனவாக உள்ளன.
- கூகையின் விழி:
கூகையின் விழி சூரியன் காய்கின்ற பகற்போதினும் ஒளியை இருளாகவே காண்கின்றது. உயிர்கள் அநாதியாகவே திருவருளின் வியாபகத்தில்தான் உள்ளன; உயிருக்குயிராக நின்று திருவருள் உபகரித்து வருகின்றது. ஆயினும் அத்திருவருளை உயிர்கள் அறியவியலாமல் உள்ளன. அதற்குக் காரணம் என்ன? அநாதியே திருவருள் உடனிருந்தும் அதனைக் காணமுடியாத குறை அவ்வுயிரிடத்தே உள்ளது. அந்தக் குறைதான் ஆணவமலம். சகசக் குற்றமாகிய ஆணவமலத்தில் அழுந்திக்கிடக்கும் உயிர்கள் திருவருளோடு கூடியிருந்தும் அதனை அறியமாட்டா. இதுவே உயிரின் அநதியான கேவல நிலை. திருவருளிடைக் கிடந்தும் அதனை அறியமுடியாத உயிரின் நிலையை உமாபதி சிவம்,
“ஊமன் கண்போல ஒளியும்மிக இருளே
யாம்மன்கண் காணா தவை”
எனும் திருவருட்பயன் (19) குறளில் விளக்கினார்.
- மானுடவிழி
மானுடவிழி இருளில் இருளைச்சார்ந்து இருளாய் நிற்கும். பகலில் ஒளியைச் சார்ந்து ஒளியாய் நிற்கும்.. மானுடவிழி ஒளியோடு கூடி ஒளியாயும், இருளோடு கூடி இருளாயும் நிற்பதைப்போல, உயிர் மலத்தோடு கூடி அறியாமையை உற்றும் திருவருளோடு கூடி மெய்யுணர்வுபெற்றும் சார்ந்ததன் வண்ணமாகும். இருளில் நிற்கும் காணும் தன்மையுடைய மானுடவிழிக்குப் பொருள்களைக் காட்ட விளக்கு, ஞாயிறு போன்ற பிறிதொரு காட்டு தேவையாகும். அவ்வாறே திருவருள் உணர்த்தினால்தான் உயிர் உணரும். இது உயிரின் சகலநிலை. மானுடவிழியே உயிரின் சதசத்தாம் தன்மையை விளக்கும்.
- பூனையின் விழி
பூனையின் கண்போன்ற கண்கள் இருளையே அறியா. எப்பொழுதும் ஒளியையே அறிவன. திருவருளொளியுடன் கூடிய உயிர்கள் ‘பரமே பார்த்திருப்பன; பதார்த்தங்களைப் பாரா’. பூனையின் கண்கள் மலமகன்ற சுத்தநிலையில். உள்ள ஆன்மாக்களின் நிலைக்கு உவமையாகும்.
இவ்வுவமைகளால் பெறப்படுவதென்ன? இருள் ஒருதன்மைத்தாகவே உள்ளது. அது, தானாக எதையும் மறைப்பதில்லை. காணாத குறை கண்ணின் பார்வையில்தான் உள்ளது.
மலம் சடம். அது தானாகத் தொழிற்பட்டு எதனையும் மறைப்பதில்லை. எங்கும் நிறைந்துள்ள திருவருளை அறியமுடியாத குறைபாடே ஆணவமலத்தின் மறைப்புக்குக் காரணம் எனும் உண்மைகள் இவ்வுவமைகளால் பெறப்படுகின்றன.
இருளும் ஒளியும் வெளியிலே கலந்துள்ளன. வெளியை விட்டு இருளோ ஒளியோ தனியே காணப்படுதல் இல்லை. அவ்வாறே ஆன்மாவுடன் ஆணவமலமும் திருவருளும் அநாதியே தொன்மையே அத்துவிதமாகக் கலந்துள்ளன. ஒளிக்குத் தக்கவாறே இருள் அடரும். அதுபோலவே, திருவருள் விளக்கத்துக்குத் தக்கவாறே மலமறைப்பு நிகழும். ஆன்மாவில் திருவருள் விளக்கம் குறைந்தபொழுது ஆணவமல மறைப்பு மிகுந்திருக்கும். ஆன்மாவில் திருவருள் விளக்கம் கூடியிருக்கும் போது ஆணவமல மறைப்பின் வலிமடங்கும். ஆணவமல வலி ஆற்றல் மடங்கும் இயல்பினதாகும். திருவருள் விரிவடைந்து பெருகும் இயல்பினதாம். ஞாயிற்றினொளி பரந்துள்ள வெளியில் இருள் காணப்படாது. அவ்வாறே திருவருட்பிரகாசம் நிறைந்துள்ள ஆன்மாவில் ஆணவமலச் சேட்டை நிகழாது.
இருளும் வெளியும், ஆணவமலமும் திரோதானமும்:
உயிரறிவின் குறைபாடு திருவருளால் நீங்கநீங்க மலமறைப்பும் நீங்கும். கேவலநிலையில் உயிர் திருவருளோடு கூடியிருந்தும் திருவருளை அறிய முடிவதில்லை. சகலநிலையில் கலைஆதி தத்துவங்களொடு கூடிய நிலையில் அறியும் கருவிகள் நீங்கியபோது அறியாமையும் அடைகின்றது. இவ்வாறு உயிருக்கு ஐந்தவத்தைகள் உண்டாகின்றது. ஐந்தவத்தைப்படுதல் உயிரின் இலக்கணம். கருவிகளைக் கூடி அறிவும், கருவிகளை நீங்கி அறியாமையும் அடையும் இக்குறைபாடு முற்றிலும் நீங்கிய சுத்த நிலையில் உயிர் திருவருளொளியில் திளைக்கின்றது.
முதல்வன் தன்னுடைய ஆதிசத்தியாகிய திரோதனத்தால் உயிருக்கு மாயாமல காரியமாகிய காரணசரீரத்தை உதவி ஆணவமலத்தில் மறைப்புண்டிருக்கும் உயிரறிவைச் சற்றே விளக்கியருள்கிறான். திரோதானசத்தி உயிருக்கு உலகைக் காட்டி வினைசெய்ய ஊக்கியும், வினைப்பயனை ஊட்டியும் மலவலியைக் கெடுத்துப் பக்குவம் அடையச்செய்கின்றது. உயிர் மெய்யறிவு பெறுதற்கு மலத்தைச் செயற்படுத்தி நிற்றலால் திரோதானசத்தியைத் திரோதானமலம் எனவும் உபசாரமாகக் கூறுவர். உண்மையில் திரோதானமும் சிவசத்தியே. சிவசத்தியாகிய அருட்சத்தி உயிருக்கு அருளைச்செய்யும். மலம் பக்குவம் அடையுங்காறும் அதற்கு அனுகூலமாய் நிற்கும் சிவசத்தி, திரோதானசத்தி எனப்படும். திரோதானம் என்றால் மறைப்பு என்பது பொருள். உண்மையில் திரோதானமும் திருவருட்சத்தியே.
இங்கு,
“பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே”,
“ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே! எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!’
என அம்மையின் அருளை வியந்த அபிராமி பட்டரின் வாக்குகளை நினைவு கூர்க.
இத்திரோதான சத்தியின் செயலைப் பாம்பனடிகள் விளக்குவது காண்க
“அனாதி பந்த ஆணவமல சக்திகள் கெடும்படி அம்மலத்தோடு கலந்து அதற்குச் செயலுண்டாக்கி, அனாதி அத்துவித மெய்ப்பொருளை மறைத்து, நிலையிலாப் போகங்களை நிலையுள்ளனவாகக் நினைத்திருக்கும்படி அவற்றில் திருத்தி பண்ணுவித்து, முற்ற மும்மல இயல்புகளையும் தேயும்படிச் செயற்படுத்திப், பதியாகிய சிவத்தை நினையாதோரிடத்தில் இருளாய், அங்ஙனம் நினைக்கும் உள்ளத்தில் ஒளியாய்ப் பிரகாசித்து நிற்பது அந்தத் திரோதையாகும். அதனை அருளென்றும் பெரியோர் கூறுவர்”
— (பரிபூரணானந்த போதம், பக் 108, 109)
கலையாதி தத்துவங்களோடு உயிர் கூடியுள்ள சகலநிலையில், முன் கேவலநிலையில் எந்தச் செயலுமின்றிக் கிடந்த சடமாகிய மலத்துக்குச் செயலூட்டுவது, திரோதானசத்தியாகும். திரோதானமின்றி மலத்துக்குச் செயலில்லை. கேவலாவத்தை மட்டுமன்றி இச்சகலாவத்தையும் பெத்தநிலையே.
எங்ஙனம் மானுடவிழிக்கு ‘வெளியே’ இருளாகத் தோன்றுகின்றதோ, எங்ஙனம் வெளியின்றி இருள் இல்லையோ, அதுபோலச் சகலநிலையில், உயிருக்குத் திரோதானமின்றி ஆணவமறைப்புச் செயல்படுவதில்லை. இருளெனத் தனியொரு பொருளின்றி, வெளியே இருளாகத் தோன்றிக் கண்ணை மறைப்பதுபோல, உண்மையில், சகலநிலையில் கன்ம அனுபவத்தின்பொருட்டு அறிவை மறைப்பது திரோதானமே ஆகும்.
முடிவுரை
இருள்பற்றிப் பாம்பனடிகள் கருத்துக்களைத் திரட்டி நோக்கினால் பின்வரும் முடிவுகளைப் பெறலாம்.
ஆணவத்தோடு விரவி மலங்களொடு ஒன்றேன நிற்கும் ஆதிசத்தியாகிய திரோதானம், ஈசனை நாடார்க்கு இருளாகவும், நாடுவாருக்கு அருளொளியாகவும் இருக்கும். ஆகாசமயமாய் நிற்கும் அச்சத்தி பொய்யன்று. இச்சத்தி வாயிலாகவே ஆணவமும் திரோதானமும் நிலைபெறுகின்றன. இருளும் ஒளியும் வெளியில்தான் திகழ்கின்றன. மறைப்புமருளும் திரோதானத்தில்தான் நிக்ழ்கின்றன.
“திரோதான நீக்கமே அனுக்கிரகம்; அனுக்கிரகமே திரோதான நீக்கம். இருளாகவும் வெளியாகவும் நிற்கின்ற திரோதை எனும் அருட்சத்தி ஏககாலத்திற்றானே அவ்விரண்டு காரியமும் இழைக்க வல்லதாகவும் எண்ணப்படுகின்றது”
–(திருப்பா பக்கம் 225)
திரோதை அருளொளி பரப்புங்கால் அதனிடத்துச் செயல்பட்டிருந்த பாசமும் அவ்வொளியில் பிரகாசிப்பதில் தடையொன்றுமில்லை. பாசம் முத்திக் காலத்தில் ஆனந்தமயமாய்ப்பரிணமித்து உயிருக்கு இன்பம் விளைவிக்கும் என்பது பாம்பனடிகள் கருத்து.
இஃது சித்தாந்த சம்மதமுமாம். முத்தியிலே மும்முதலும் நிற்கும் நேர்மயை விளக்கும் உபதேச விளக்கப் பாடல்:
“சூரியன் சிவம்;கண் ஆன்மா; சுடரொளி அருள்;மலம்தான்
கூரிருள் ஆகும்; கண்தான்கொள்ளிருள் ஒளியால் நீங்கிச்
சூரியன் ஒளிநேர் நிற்கில் சூரியனாம் அக்காலைப்
பேரிருள் ஒளியால் நித்தம் பெறும் திரிபொருள் முத்திப்பால்”
கண்ணிருள் நீங்கிக் கதிரோனோளியில் நேர்நிற்கில், அப்பேரிருள் அக்கதிரொளியில் அடங்கி அக்கதிரொளியாய் நிற்கும். அவ்வாறே ஆன்மாவும் ஆணவம்நீங்கிச் சிவனருளில் நேர்நிற்கில் ஆன்மா சிவமாம் தன்மை பெறும். அப்பொழுது அம்மலம் அச்சிவனருளில் அடங்கி அவ்வருளாய் நிற்கும்.
பின் இணைப்பு:
வெளி, வெளியின் நிறம் பற்றி அறிவியலார் கூறுவது
வானம் என்பது தட்டையான பூமிக்கு மேலே அமைந்த வளைவான கூடாரத்தின் உட்புறக்கூரை போன்று நமக்குக் காட்சியளிக்கின்றது. வானத்துக்கு நிறம் உள்ளது போன்றதொரு தோற்றமுள்ளது. சிலசமயங்களில் அது நீலநிறமாக உள்ளது. வேறு சமயங்களில் அது சாம்பல் நிறமாக உள்ளது. இதிலிருந்து வானத்துக்கெனத் தனிநிறம் இல்லையென நம்மால் ஊகிக்க முடிகிறது.
வானம் என்பதுதான் என்ன?
ஒரு பெரிய மைதானத்தில் ஒரு கொசு பறக்கின்றது என வைத்துக்கொள்வேம்.. அக்கொசு அந்தரத்தில் நிலையாக ஓரிடத்தில் நிற்பதாக வைத்துக்கொள்வோம். அக்கொசுவைப் பொருத்தமட்டில் எல்லாத்திசைகளிலும் உள்ள இடம் காலியானதே. அது பொருந்தும்.
பூமியிலிருந்து நீங்கள் எந்தத் திசையிற் சென்றாலும் நீங்கள் போய்க்கொண்டே இருக்கலாம். பல ஆயிரம், பலலட்சம், பலகோடி ஆண்டுகள் பயணம் செய்தாலும் எல்லை என எதுவுமே கிடையாது. இதையே வேறுவிதமாகச் சொல்வதானால் வானத்துக்கு எல்லையே கிடையாது. பிரம்மாண்டமான காலியிடத்தில் பூமியானது அந்தரத்தில் நின்றபடி தனது அச்சில் சுழல்கிறது. இந்தப் பிரம்மாண்டமான காலியிடத்தையே நாம் விண்வெளி (space) என்கிறோம்
ஒருபெரிய வீட்டைச் சுற்றி விஸ்தாரமான காலியிடம் இருக்கலாம். ஆனாலும் அந்த வீட்டின் முன்புறத்தை வாசல் என்றும் பின்புறத்தைப் புழக்கடை என்றும் குறிப்பிடுகின்றோம். அம்மாதிரி இப்பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியின் ஒருபகுதியை நாம் வானம் என்று கூறுகின்றோம்.
பூமியைச் சுற்றிலும் காற்றுமண்டலம் உள்ளது. இதையும் நாம் வானம் என்றே கூறுகின்றோம். அந்தந்த வட்டாரத்துக்குமேலே உள்ள பகுதியும் வானம் என்றே குறிப்பிடப்படுகின்றது. தவிர, தலைக்கு மேலே காகம் பறக்கின்ற இடமும் நமக்கு வானம்தான். தலைக்கு மேலே பலகோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் சூரியன் இருக்கும் இடமும் நமக்கு வானந்தான்.
வானத்துக்கு நிறம் கிடையாது என்று குறிப்பிட்டோம். நீங்கள் சந்திரனில் இருப்பதாக வைத்துக்கொண்டால் வானம் எல்லாநேரங்களிலும் கருப்பாக இருக்கும். பகலில் இந்தக் கரியவானில் சூரியன் தெரியும். நட்சத்திரங்களும் தெரியும். பூமியில் காற்று மண்டலம் இருப்பதால், பகல் நேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் குறிப்பாகச் சூரியனில் அடங்கியிருக்கும் நீலநிற ஒளியலைகள் நாலாபுறமும் சிதறடிக்கப்பட்டு வானம் என்பது நீலநிறத்தில் காட்சி அளிக்கிறது. வானத்துக்கு நிறம் கிடையாது.
பகலில் தெரிகின்ற வானமும் இரவில் தெரிகின்ற வானமும் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இரவு வானமோ மிகமிக உயரத்தில் இருப்பது போலத் தோன்றுகின்றது. மிக உயரமான கூடாரத்தின் உட்புறக் கூரையில் நுண்ணிய விளக்குகள் பதிக்கப்பட்டதுபோல விண்மீன்கள் காட்சி அளிப்பது எல்லாம் வெறும் தோற்றமே. சுருங்கச் சொன்னால் வானம் எனத் தனியாக எதுவும் இல்லை. (தினமணி, அறிவியல் ஆயிரம், 17 செப்டம்பர், 2006)
அறிவியலார்,
- வானம் எனத் தனியாக எதுவும் இல்லை.
- வானத்துக்கெனத் தனியான நிறம் ஒன்றுமில்லை.
- சூரிய ஒளியிலிருந்தே நீலநிற ஒளியலைகள் தோன்றி வானம் நீல நிறத்தில் காட்சியளிக்கின்றது.
- வான வெளியில் ஒளி பரவுகின்றது.
எனக் கூறும் கருத்துக்கள் சிவஞான பாடியம், பாம்பன் சுவாமிகள் ஆகிய இருவருடைய ஆய்வுகளிலும் வெளிப்படுகின்றன.
(முற்றும்)