பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்

கமலாம்பாள் சரித்திரம் (1896) தமிழின் முதல் நவீன நாவல் என எல்லாப் பட்டியல்களிலும் இடம் பெறுவது. நவீன இலக்கியத்தின் தொடக்க காலத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு academic ஆவலில் வாசிக்கலாம், மற்றபடி இன்றைய வாசகனுக்கு அனேகமாக அதில் ஒன்றுமிருக்காது என்றே பல வாசகர்கள் எண்ணக்கூடும். எனது புத்தக அலமாரியில் உள்ளே கிடந்த இப்புத்தகத்தை இரண்டு நாள் முன்பு எடுத்து வாசித்தபோது அது முற்றிலும் தவறு என்று உணர்ந்தேன். பெரும் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் அடைந்தேன். சி.சு.செல்லப்பா, க.நா.சு (இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்), வெ.சா ஆகியவர்கள் ராஜமய்யரை அப்படிப் புகழ்ந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் ஆசிரியர் பி.ஆர்.ராஜமய்யர் (1872-1898) வெறும் 26 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்திருந்தார் என்ற மாபெரும் வரலாற்றுத் துயரம் இந்தப் புத்தகத்துடன் என்றென்றைக்கும் இணைந்து இதற்கு மேலும் ஒரு காவியத்தன்மையை அளித்து விடுகிறது. காதல் மனங்களின் துள்ளல், குயுக்தியும் சிறுமையும் கொண்ட பாத்திரங்களின் நடத்தைகள், வலிந்து புகுத்தப்பட்ட செயற்கைக் கதைப்போக்கு சம்பவங்கள், இறுதியில் வேதாந்தத்தை நோக்கிய திருப்பம் அனைத்தின் பின்னும் அந்த வாழ்க்கையின் துயரத்தின் சுமை படிந்துள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆரம்ப அத்தியாயங்கள் முதல் நடுப்பகுதி வரை பீறிடும் நகைச்சுவை அபாரம். அக்கிரகாரத்துப் பிராமணர்கள், தமிழ்ப்பண்டித பிள்ளை, கொள்ளையன் பேயாண்டித் தேவன் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. பெண்களின் மீதான அந்தக் காலகட்டத்தைய பொதுவான பார்வையும் அதைக் தாண்டிய அற்புதமான பரிவும் வியப்பிலாழ்த்துகின்றன. தனிப்பட்ட அளவில், கதை முழுவதும் விரவி வரும் கம்பராமாயணப் பாடல் வரிகளை என்னால் ஆழ்ந்து ரசிக்க முடிந்தது.

விவேகானந்தரையும் பாரதியையும் ராமானுஜனையும் எஸ்.ஜி.கிட்டப்பாவையும் விடக் குறுகிய கால வாழ்வு. ஆனால் அந்த வாழ்வுக்குள், இந்தப் பட்டியலில் உள்ள முதல் இரண்டு பேரால் சிலாகிக்கப் பட்டிருக்கிறார் இந்த மேதை. அவ்வளவு சிறுவயதில் ஷெல்லி, பைரன், கீட்ஸ், கம்பர், தாயுமானவர் என்று உலகப் பெருங்கவிஞர்களின் கவிதையில் ஆழ்ந்து தோய்ந்த ஒரு மனம். தன் கலைத் திறனால் சிகாகோவையும் லண்டனையும் மூச்சடைக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்ட ஒரு தமிழ் மனம். பி.எல்.பரீட்சையில் தோற்றதும், உடல் நலம் சிதைந்ததும் அந்தக் கனவை நொறுக்கி விட்டாலும், வேதாந்தப் பித்து அணைந்து கொண்டிருந்த அந்த ஜாஜ்வல்யமான சுடரை சிறிது காலத்திற்கு சுடர்விட்டு எரியச்செய்து இப்படி ஒரு நாவலை எழுதவைத்தது என்று தோன்றுகிறது. இறுதி ஆண்டுகளில், விவேகானந்தர் தொடங்கிய ‘பிரபுத்த பாரத’ இதழின் முதல் ஆசிரியராக இருந்திருக்கிறார். Rambles in Vedanta என்று 900 பக்கங்கள் எழுதியிருக்கிறார்.

“இக்கதை பெரும்பான்மையும் பலவித மனோ சஞ்சலத்தின் மத்தியில் எழுதப்பட்டலாதலால் அழகு குன்றி குன்றக்கூடல் மிகைபடக்கூறல் முதலியயீரைங் குற்றங்களுக்கும் குடியாயுளது” என்று தொடங்கும் பின்குறிப்பில் தனது நவரசங்களும் கலந்த நாவல் உண்மையில் ஒரு ‘வேதாந்த காவியம்’ என்று கவித்துவமான சொற்களுடன் நிறுவும் உறுதியும் தென்படுகிறது.

“இச்சரித்திர மெழுதுவதில் எனக்கு கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோவெனில், ஆசையோடு உசாவும் அர்ச்சுனனுக்கு “நாந்ந்தோஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம் பரந்தப” என்று பகவானாலேயே சொல்லிவிடப்பட்ட அவனது மாயா விபூதியாம் பெருங்கடலினுள் ஓர் அலையுள், ஓர் நுரையுள், ஓர் அணுவை யானெடுத்து, அதனுள் என் புல்லறிவுக் கெட்டியமட்டும் புகுந்து பார்த்து,

(சாணினும் உளனோர் தன்மை… என்ற கம்பனின் நரசிம்மாவதாரப் பாடலை முழுதாக இங்கு தருகிறார்)

என்று காட்டத் தூண் பிளந்து தோன்றிய அவனே அங்கும் இருக்கக் கண்டு, திசை திறந்தண்டங்கீறிச் சிரித்த செங்கட்சீயத்தைக் கண்டு கைகூப்பி ஆடிப்பாடி அரற்றி உலகெலாம் துள்ளித் துகைத்த இளஞ்சேயொப்ப யாமும் ஆடிப்பாடி ஓடவேண்டுமென்பதேயன்றி வேறன்று…. இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்டநஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மலமான ஓர் இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்”.

இறுதியாக தனது நவீனத்தை இவ்வாறு சமர்ப்பணம் செய்கிறார்.

“எந்த தெய்வத்தைத் தொழுது இச்சிறு கிரந்தமானது இயற்றப்பட்டதோ, எந்த சுயம்பிரகாசமான திவ்யதேஜோ ரூபத்தின் பொருட்டு இக்கதையானது நிஷ்காமியமாக அர்ப்பிக்கப்படுகிறதோ, அந்த திவ்விய, மங்கள, குணாதீத, பரிபூரண சச்சிதானந்த ஸ்வரூபத்தை நாமனைவரும் முயற்சித்து அடைவோமாக”.

பி.ஆர்.ராஜமய்யர் குறித்த வெங்கட் சாமிநாதனின் மதிப்பீடு, அந்த ஆளுமையின் மகத்தான ஆகிருதியை உள்ளபடியே சரியாக அடையாளப்படுத்துகிறது.

”ராஜமய்யர் என்ற சக்தி, ஒரு வால் நட்சத்திரம் போல, அணு ஆயுத வெடிப்பின் பிரம்மாண்டம் போல ஒரு குறுகிய காலத்திற்குள், பல்வேறு திசைகளில் ஓர் அசாதாரண வேகத்தில் துடித்து இயங்கி மறைந்துவிட்டது. இவ்வியக்கத்தின் துடிப்பும், வேகமும், பலதிசை நோக்கும், வாழ்ந்த காலத்தின் சுருக்கமும், இதை அணுகி புரிந்து கொள்ள முயற்சி செய்பவனைத் திக்கித் திணற வைத்துவிடுகிறது. இதன் விளைவு, வெடித்துச் சிதறிய துணுக்குகளில் தனக்கு அகப்பட்டதை வைத்துக் கொண்டு, ராஜமய்யரை, நாவலாசிரியர், தத்துவ ஞானி என்று பலவாறாக மதிப்பிடுகிறோம்” (’சில இலக்கிய ஆளுமைகள்’ நூலில்)

பி.ஆர் ராஜமய்யர் வாழ்க்கைக் குறிப்பு இங்கே.

கமலாம்பாள் சரித்திரம் ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.

Rambles in Vedanta புத்தகம் முழுவதுமாக ஆன்லைனில் இங்கே உள்ளது.

******

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில்   ஆகஸ்டு 16,2017 அன்று  எழுதியது) 

2 Replies to “பி.ஆர் ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம்”

  1. சுவாமி விவேகானந்தாின் வாழ்க்கையில் அவரது ஆதரவாளா்களில் ஒருவராக அவரை நான் அறிவேன். சரளமான ஆங்கில நடை.

  2. முத்தலாக் நடைமுறையை எப்படியோ உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.அதுபோல் நிக்காஹலால் முறையையும் ரத்து செய்ய வேண்டும். அசிங்கமாக மேற்படி பழக்கம் தொடர அனுமதிக்க முடியாது.இது குறித்து விபரமான ஒரு கட்டுரை எழுத வேண்டுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *