மூலம்: பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகம்
தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்
தொடர்ச்சி…
1573-1574 :
அக்பரின் அரசவையில் இருந்த தோடர்மல் சொன்ன யோசனையை ஏற்று அக்பர் முகலாய சாம்ராஜ்யத்தில் இருக்கிற அத்தனை குதிரைகளுக்கும் கட்டாய ராஜ முத்திரை இட வேண்டும் என உத்தரவிடுகிறார். இதன்படி குதிரை வைத்திருக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் அரசனுக்கு அடிமையாகி விடுவான் என்பதுடன் அக்பர் அழைக்கும் பொழுதெல்லாம் வருவதற்குமான கட்டாயத்திற்குள்ளாவான்.
மார்ச் 3, 1575 :
வங்காளம், ஒரிஸ்ஸா, பீஹார் பகுதிகளை ஆண்ட ஆப்கானியான தாவூதுக்கு எதிராக துகாரோய் என்னுமிடத்தில் நடந்த போரில் அவன் தோற்கடிக்கப்படுகிறான். தோற்றவர்களின் தலைகளை வெட்டி கோபுரமாக அடுக்குகிறார்கள். அந்தக் கோபுரம் எட்டு மினார்களின் உயரத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
1574-75 :
குஜராத்தில் மிகக் கடுமையான பஞ்சம் தலைதூக்குகிறது.
ஜூலை 12, 1576 :
ஆப்கானிய அரசன் தாவூத் வங்காளத்தில் ராஜமஹால் என்னுமிடத்தில் நடந்த போரில் கொல்லப்படுகிறான்.
ஹிந்துஸ்தானத்தின் சிறந்த வீரப்புதல்வர்களில் ஒருவரான ராணா பிரதாப்புடன் அக்பர் நிகழ்த்திய போர்கள் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்தன. இறுதியில் ராணாவை வெல்ல முடியாமல் அக்பர் தன் படைகளை திருப்பி அழைத்துக் கொள்கிறார். ராணா பிரதாப்பின் ஆட்சி செய்த நிலப்பரப்பின் அளவு குறைந்தாலும் இறுதியில் அவரே வெல்கிறார்.
ஜூன் 1576 :
ராணா பிரதாப்புக்கும் அக்பருக்கும் நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போர் நடைபெற்றது. யானையின் மீது அமர்ந்து அந்தப் போரில் பங்கேற்ற ஜஹாங்கிரைக் கொல்வதற்காக ராணா தனைது நீண்ட ஈட்டியுடன் பாய்கிறார். ஜஹாங்கிர் மாவுத்தனின் பின்னால் ஒளிந்து கொள்ள மாவுத்தன் கொல்லப்படுகிறான்.
நவம்பர் 1579 :
போர்த்துக்கிசிய பாதிரிகள் கோவாவிலிருந்து புறப்பட்டு அக்பரை ஃபதேபூர்சிக்ரியில் பிப்ரவரி 28, 1580 அன்று சந்திக்கிறார்கள். அக்பருக்கு ஒரு பைபிளை பரிசாக அளிக்கிறார்கள். அதனை வாங்கிக் கொள்ளும் அக்பர் சில வருடங்களுக்குப் பின்னர் அவர்களிடமே அதனைத் திருப்பித் தந்துவிட்டார்.
பிப்ரவரி 8, 1581 :
வடமேற்கு மாகாணங்களில் நிகழ்ந்த கலவரத்தை அடக்கப் புறப்படுகிறார் அக்பர். அக்பரிடம் நிதி மந்திரியாக இருந்த ஷா மன்சூர் அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். அக்பரை எதிர்த்து புரட்சி செய்தவர்களில் 12வது நபர் அவர். தானேஷ்வருக்கும் அம்பாலாவுக்கும் இடைப்பட்ட ஷாபாத் என்கிற இடத்தில் வைத்து ஷா மன்சூரை தூக்கிலிடுகிறார் அக்பர். அவரிடம் வரலாற்றாசிரியராக பணியாற்றிய அபுல் ஃபசலே அவரைத் தூக்கிலிடுபவராக பணியைச் செய்கிறார்.
ஆகஸ்ட் 9, 1581 :
காபூலுக்குள் நுழையும் அக்பரை எதிர்த்து நிற்கத் துணிவின்றி அவரது சகோதரனான (half-brother) முகமது ஹக்கீம் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். காபூலில் வெறும் ஆறு நாட்கள் மட்டுமே தங்கியிருக்கும் அக்பர் மீண்டும் ஃபதேபூர்சிக்ரி நோக்கித் திரும்புகிறார்.
1581-82 :
அக்பருடன் கருத்து வேற்றுமை கொண்ட பல ஷேக்குகளும், ஃப்க்கீர்களும் நாடுகடத்தப்படுகிறார்கள். பெரும்பாலனவர்கள் காந்தஹாருக்குக் கொண்டு செல்லப்பட்டு பண்டமாற்று முறையில் குதிரைகளுக்கு பதிலாக அடிமைகளாக விற்கப்படுகிறார்கள்.
மார்ச் 1582:
அக்பரின் அரசவையில் இருந்த மாசூம்கான் ஃபர்ஹான்குடி அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். பின்னர் அக்பருடன் சமாதானாமாகும் ஃபர்ஹான்குடியை ஒன்றும் செய்யக்க்கூடாது என அக்பரின் தாயார் கேட்டுக் கொள்கிறார். இருப்பினும் வீடு திரும்பும் வழியில் வைத்து ஃபர்ஹான்குடி படுகொலை செய்யப்படுகிறார்.
1582 :
ஜைன முனி ஹிர்விஜயசூரி அக்பரின் அரசவையில் சில நாட்கள் தங்குகிறார்.
ஏப்ரல் 15, 1582 :
போர்ச்சுக்கீசியர்களின் வசமிருந்த டாமன் அக்பரின் படைகளினால் தாக்கப்பட்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் இன்னொரு கோட்டையான டையூ அக்பரின் படைகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்துகிறது.
ஆகஸ்ட் 4, 1582 :
இஸ்லாமியர்களாக மதம் மாற மறுத்த இரண்டு கிறிஸ்தவ இளைஞர்கள் சூரத்தில் கொல்லப்படுகிறார்கள். அதற்கு முன்பு பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அவர்களை விடுவிப்பதற்காக அளிக்கப்பட்ட ஆயிரம் தங்கக்காசுகளை ஏற்க பிணியாளர்கள் மறுத்துவிட்டார்கள்.
ஆகஸ்ட் 1582 :
அக்பரின் அரசவைக்கு காதுகளற்ற ஒரு மனிதனை அழைத்து வந்தார்கள். காது துவாரம் எதுவும் அவனுக்கு இல்லையென்றாலும் அவனால் பிறர் சொல்வதனைக் கேட்க முடிந்தது. அக்பரின் படிப்பறிவற்ற மூளைக்கு அது அதிசயமாகப் பட்டது. எனவே அதனை சோதனை செய்து பார்க்க முடிவெடுத்த அக்பர் தாயிடம் பால் குடிக்கும் இளம் குழந்தைகளை எந்த சத்தமும் இல்லாமல் வளர்த்தால் என்னவாகும் என்று ஆராய முடிவெடுத்தார்.
அதன்படி பால்குடிக்கும் வயதுடைய இருபது குழந்தைகளை அவர்களின் தாய்மார்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வந்து எந்தவிதமான சத்தமும் கேட்காத தூரப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் வைத்து வளர்க்க உத்தரவிடுகிறார். அந்தக் குழந்தைகளை கவனிப்பதற்காக காது கேளாதா, வாய் பேசாத தாதிகள் அமர்த்தப்பட்டார்கள். யாரும் எந்த சத்தமும் எழுப்பக்கூடாது என கடுமையான உத்தரவு இடப்பட்டது. அந்த வீட்டிற்கு “செவிட்டு வீடு” எனவும் பெயரிடப்பட்டது. மனித சத்தமே கேட்காத விதத்தில் வளர்ந்த அந்தக் குழந்தைகள் அத்தனை பேர்களும் நான்கே வருடத்தில் காது கேட்காத, வாய் பேசாத ஊமைகளாகிவிட்டார்கள் என்கிறார் பதானி. பின்னர் அங்கிருந்த பல குழந்தைகள் இறந்துவிட்டார்கள் என மேலும் சொல்கிறார்.
அக்டோபர் 15, 1582 :
ஆறுமைல் நீளமும், இரண்டு மைல் அகலமும் கொண்ட ஃபதேபூர்சிக்ரியின் ஏரி உடைகிறது. தனது சகாக்களுடன் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் அக்பர் வெள்ளமெனப் பாய்ந்து வந்த நீரில் மூழ்கி இறப்பதிலிருந்து மயிரிழையில் தப்புகிறார். ஏரி நீர் முற்றிலும் வடிந்து காய்ந்துவிட்டது. நீரில்லாத ஃபதேபூர் சிக்ரியில் வாழமுடியாத அக்பர் 1585-ஆம் வருடம் அந்த நகரைக் கைவிட்டுவிட்டு ஆக்ராவுக்குத் திரும்புகிறார். அதேவருடம் குஜராத்தை ஆண்டுவந்த முகலாய கவர்னர் இட்டிமத்கான் அக்பருக்கு எதிராக புரட்சி செய்கிறார். புரட்சி ஒடுக்காப்பட்டு மீண்டும் இட்டிமத்கானிடமே குஜராத் ஒப்படைக்கப்படுகிறது.
1583 :
அக்பர் தன்னிடம் பணிபுரிந்த ஒரு ராஜபுத்திர இளவரசனை வெளியூருக்குப் பணி நிமித்தமாக அனுப்பி வைக்கிறார். அரண்மனையை விட்டு வெளியே வந்த சிறிது தூரத்திலேயே அந்த இளவரசன் செத்துப் போனான். உடன்கட்டை ஏற முயன்ற அவனது அழகான இளம் மனைவியை அக்பர் காப்பாற்றி தனது அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்கிறார். அனேகமாக அந்த இளவரசன் அக்பராலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அழகான அவன் மனைவி மீது அக்பரின் கண்கள் பட்டதால் அந்த இளவரசன் தேவையின்றி கொல்லப்பட்டான்.
அக்டோபர் 8, 1583:
பக்ரீத்தின் போது நடந்த போலோ விளையாட்டில் ராஜா பீர்பல் குதிரையிலிருந்து தூக்கியெறியப்பட்டு மயக்கமடைகிறார். அக்பர் அவர் மீது காற்றை ஊதி அவரை மயக்கத்திலிருந்து தெளிவிக்கிறார். அக்பருக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மற்றவர்களை நம்பச் செய்வதற்காக திட்டமிட்டே நடந்த நாடகம் இதுவாக இருக்க வேண்டும்.
நவம்பர் 1583 :
அக்பர் அலஹாபாத் நகரத்தின் கோட்டையைக் கட்டி அந்த நகரத்தை உருவாக்கியதகவும், பின்னர் அந்த நகரத்துக்குள் பல மாளிகைகளைக் கட்டியதாகவும் அவரது அமைச்சக சகாக்கள் சொல்கிறார்கள். ஆனால் பிரயாகை நகரம் (அலஹாபாத்) உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று என்கிற சமாச்சாரத்தை மிக வசயாக மறந்துவிட்டார்கள். அதனையே இந்திய வரலாற்றாசிரியர்களும் பின்பற்றி அதனை இன்றும் பள்ளிகளில் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா ராமச்சந்திரபாதாவின் நாடு அக்பரின் இஸ்லாமியப்படைகளினால் மூன்றாவது முறையாக சூறையாடப்படுகிறது. ராமச்சந்திரபாதா சரணடைவதுடன் ஏராளமான செல்வத்தையும் அக்பரிடம் ஒப்படைக்கிறார். இதேபோல் 1563-ஆம் வருடம் நிகழ்ந்ததொரு படையெடுப்பில் அவரது அரசவையில் இருந்த இசைமேதே தான்சேனை அக்பர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்.
முகலாயர்கள் வசமிருந்த பகுதிகளில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
1584 :
அக்பரின் கேடுகெட்ட செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத, அக்பரின் அரசவையில் ஓவியனாக இருந்த ஹிந்து தஸ்வந்த் தன்னைத்தானே கத்தியால் குத்தித் தற்கொலை செய்துகொள்கிறார்.
ஜுலை 15, 1584 :
அக்பருக்கு மிகப்பிடித்தவராக இருந்த காஸிகான் பதக்ஷானி அயோத்தியாவில் இறக்கிறார். மசூதிகளாக மாற்றப்பட்ட அயோத்தியாவின் பல கோவில்களைப் போல, பதக்ஷாவை புதைத்த கோவிலும் மசூதியாக மாற்றப்படுகிறது.
பிப்ரவரி 13, 1585 :
இளவரசர் சலிம் (ஜஹாங்கிர்) ராஜா மான்சிங்கின் சகோதரியான மன்பாயை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மகள் சுல்த்துனிஸ்ஸா பேகம் திருமணம் செய்துகொள்ளாமலேயே 60 வருடங்கள் வாழ்ந்து மறைந்தாள்.1587-ஆம் வருடம் பிறந்த மகன் குஸ்ரூ ஜஹாங்கிருக்கு எதிராக புரட்சி செய்து அலஹாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1622-ல் குஸ்ரூ மரணமடைந்தார். மன்பாய் 1604-ஆம் வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னனியில் அக்பரும், ஜ்ஹாங்கிரும் இருந்தார்கள்.
ஜனவரி 22, 1586 :
ஆப்கானிய யூசுப்ஸாய்களுக்கு எதிரான போரில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு பிர்பாலுக்கு ஆணையிடுகிறார். பீர்பால் போரில் கொல்லப்படுகிறார். 1528-ஆம் வருடம் கல்பி நகரில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர் பீர்பல். அவரது உண்மையான பெயர் மகேஷ்தாஸ் என்பதாகும்.
யூசுப்ஸாய்களை அடக்குவதற்காக ராஜா தோடர்மல் தலைமையில் இன்னொரு படை அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் கோபமடையும் யூசுப்ஸாய்கள் முகலாயப்படைகளுக்கு எதிராக வெறியுடன் மோதுகிறார்கள். அப்போது காபூலில் இருந்த மான்சிங்கும் போரில் கலந்து கொள்ள உத்தரவிடப்படுகிறார். பல ஆப்கானியர்கள் கொல்லப்படுகிறார்கள். பிடிபட்டவர்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். இருப்பினும் ஆப்கானிய கலகம் 1600-ஆம் வருடத்தினையும் தாண்டி நிகழ்கிறது.
ஜூன் 26, 1586 :
பிகானீர் அரசரான ராய்சிங்கின் மகள் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு ஜஹாங்கிரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.
அக்டோபர் 6, 1586 :
அக்பரின் படை காசிம்கானின் தலைமையில் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் புகுகிறது. முகலாயப் படைகளால் கொலையும், கொள்ளையும், வன்புணர்வும், சித்திரவதைகளும் நடத்தப்படுகின்றன. காஷ்மீரை ஆண்ட யாகூப்கானும், யூசுப்கானும் கொரில்லா போர்தொடுத்து முகலாயப்படைகளை தாக்குகிறார்கள்.
1587 முற்பகுதி :
தனது அரசவைக்கு வரும் ஒவ்வொரு குடிமகனும் அவனது தகுதிக்கு ஏற்ப தனக்கு பரிசுகள் கொடுக்க வேண்டும் அல்லது அவனது வயதின் எண்ணிக்கைக்க்கு ஏற்ப வெள்ளி அல்லது தங்கக்காசுகள் தரவேண்டும் என்கிற உத்தரவை அக்பர் விதிக்கிறார்.
ஜூலை 1589 :
யாகூப்கான் சரணடைகிறார். யூசுப்கான் விடுதலை செய்யப்பட்டு காஷ்மீர் முகலாய அரசுடன் இணைக்கப்படுகிறது. அக்பர் யூசுப்கானை ஒரிஸ்ஸாவிற்கு அங்கு ஆண்டு கொண்டிருந்த ஆப்கானிகளுக்கு எதிராகப் போர்புரிய அனுப்பி வைக்கிறார். யாகூப்கானின் வீரத்தை மெச்சிய அக்பர் அவருக்கு விஷம் தடவிய உடை ஒன்றை அனுப்பி வைக்கிறார். அதனை அணிந்த சில நிமிடங்களில் யாகூப்கான் செத்து வீழ்கிறான்.
இந்த காலகட்டத்தில் லாகூரில் இருக்கும் அக்பர், அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் ஹிந்து அரசர்களை மிரட்டி பணியவைக்கிறார். நாகர்கோட்டின் ராஜா பிபிசந்த், ஜம்முவின் பரசுராம், மாவ்வின் பாசு, அனுராதா ஜெய்ஸ்வால், கால்பூரின் ராஜா திலா…எனப் பல ஹிந்து அரசர்கள் அக்பருக்கு அடிபணிகிறார்கள்.
ஜனவரி 1, 1592 :
சிறிய மற்றும் பெரிய திபெத் நாடுகள் அக்பரின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள வைக்கப்படுகின்றன. சிறிய திபெத்தின் அரசனான அலிராய் அவரது மகளை ஜஹாங்கிரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க வற்புறுத்தப்படுகிறார். அதன்படி அந்த அப்பாவிப் பெண் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு ஜஹாங்கிரின் அந்தப்புரத்தில் அடைக்கப்படுகிறாள்.
ஏப்ரல் 26, 1589 :
அக்பரின் அரசவைப் பாடகரான தான்சென் லாகூரில் இறக்கிறார். வலுக்கட்டாயமாக அழைத்துவரப்பட்ட நாளிலிருந்து இருபத்தேழு வருடங்கள் மனமுடைந்தவராக வாழ்ந்த அவரது வாழ்வு முடிவுக்கு வருகிறது. அவரது உடல் முதலில் லாகூரில் புதைக்கப்ட்டு பின்னர் குவாலியருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
ஏப்ரல் 28, 1589 :
அக்பர் முதல் முறையாக காஷ்மீருக்குச் செல்கிறார்.
ஜூன் 5, 1589 :
காஷ்மீரை அடையும் அக்பர் அங்கு 36 நாட்கள் தங்குகிறார். அங்கிருக்கையில் அக்பருக்கும் அவரது மகனான ஜஹாங்கிருக்கும் மனஸ்தாபம் முற்றுகிறது. அக்பர் ஜஹாங்கிரைப் பார்க்க மறுத்ததால் அச்சமடையும் ஜஹாங்கிர் தனது கூடாரத்தை விட்டு வெளியே வராமலேயே அடைந்து கிடக்கிறார். அக்பரின் அருகாமையினால் அச்சமடையும் சிறிய மற்றும் பெரிய திபெத் நாட்டினர் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை அனுப்பி வைக்கிறார்கள்.
அக்டோபர் 3, 1589 :
அக்பர் காபூலை அடைந்து அங்கு 48 நாட்கள் தங்குகிறார். அங்கிருக்கையில் தோடர்மல்லின் ராஜினாமா கடிதம் அவருக்குக் கிடைக்கிறது. தோடர்மல் சாமியாராகி ஹரித்வாரத்திற்குச் சென்றுவிட்டார். எனினும் அவரை மீண்டும் அழைத்து வந்து அவரை அதே பதவியில் அமர்த்துகிறார்கள்.
நவம்பர் 9, 1589 :
ராஜா தோடர்மல் லாகூரில் மரணமடைகிறார்.
மே 22, 1599 :
இளவரசர் முராத்தின் கட்டற்ற மதுவருந்தும் பழக்கத்தினாலும், போதை மருந்து உட்கொண்டதாலும் கோமா நிலைக்குச் சென்று பின்னர் தவுலதாபாதின் பூர்ணா நதிக்கரையில் மரணமடைகிறார். முராத்தின் பொறுப்பில் நிகழ்ந்து கொண்டிருந்த தக்காணப் போருக்குச் செல்லும்படு ஜஹாங்கிரிடம் உத்தரவிடுகிறார் அக்பர். ஜஹாங்கிர் அதனை ஏற்க மறுக்கிறார்.
போர்த்துக்கீசிய பாதிரி ஜெரோம் சேவியர் தான் போதுமான அளவு பாரசீகம் படித்திருப்பதாகவும் தன்னை மதப்பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அக்பரிடம் கோரிகை வைக்கிறார். அக்பர் அவரிடம் உங்கள் மதத்தைப் பற்றி இங்கு பேசவிட்டதே அதிகம் என்று சொல்லி அவரை மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியளிக்க மறுக்கிறார்.
ஆகஸ்ட் 1, 1601 :
அக்பர் ஃப்தேபூர்சிரிக்குச் சென்று அங்கு 11 நாட்கள் தங்குகிறார். இதே வேளையில் அவரது 31 வயதான அவரது மகன் ஜஹாங்கிர் அக்பருக்கு எதிரான புரட்சியில் ஈடுபடுகிறார். அவரது இருபதாவது வயதிலிருந்தே அக்பருடனான உறவு மிகவு சீர்கெடத் துவங்கியிருந்தது. அதற்கு முன்னதாக ஜூலை 8, 1589-ஆம் தேதி அக்பர் வயிற்று வலியால் துடிக்கும் அக்பர் தனது மகன் ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்துவிட்டார் என்று புலம்புகிறார். அவரது சமையற்காரரான ஹக்கிம் ஹுமாம் (நவரத்தினங்களில் ஒருவர்) ஜஹாங்கிரின் பேச்சைக்கேட்டு விஷம் வைத்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறார். அக்பர் தக்காணத்திற்குப் படையெடுத்துச் சென்றிருந்த வேளையில் அஜ்மீரிலிருந்து ஆக்ராவுக்குப் படையெடுத்து வரும் ஜஹாங்கிர் பின்னர் அங்கிருந்து அலகாபாதிற்குச் சென்று தன்னை ஒரு அரசனாக அறிவித்துக் கொள்கிறார்.
ஆகஸ்ட் 9, 1602 :
அக்பரின் “புகழ்”பெற்ற வரலாற்றாசிரியரான அபுல் ஃபைசல் ஜஹாங்கிரின் ஆணையின்படி குவாலியருக்கில் வைத்துக் கொல்லப்படுகிறார். அவரது தலை ஜஹாங்கிருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜஹாங்கிர் அந்தத் தலையை குப்பையில் தூக்கிப் போடுகிறார்.
1604 :
ஜஹாங்கிரின் மனைவியும், மான்சிங்கின் சகோதரியுமான மன்பாய் கொலை செய்யப்படுகிறார். இருந்தாலும் அது ஒரு தற்கொலை என வெளியில் அறிவிக்கப்படுகிறது.
மதிய உறக்கத்திற்காக தனது படுக்கையறைக்கு விரையும் அக்பர் அங்கு தனது வேலையாள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதனைக் காண்கிறார். கோபமடையும் அக்பர் அவனை ஆக்ராக் கோட்டையின் மீதிருந்து தூக்கியெறிய உத்தரவிடுகிறார். அதன்படியே அவனைத் தூக்கி எறிந்து கொல்கிறார்கள்.
அக்பருக்கு சிறிதும் குறையாத சேடிஸ்ட்டான ஜஹாங்கிர் தனது எழுத்தனின் தோலை உயிருடன் உரித்துக் கொல்கிறார். அவரது இன்னொரு வேலையாள் காயடிக்கப்பட, மற்றொரு வேலையாளை அடித்தே கொல்கிறார்.
செப்டம்பர் 22, 1605 :
சிக்கந்தரா கோட்டையில் அக்பரின் உடல் நிலை சீர்கெடுகிறது.
அக்டோபர் 15, 1605 :
தனது 63 வயதில் அக்பர் மரணமடைகிறார்.
(தொடரும்)