வாருங்கள் எல்லோரும்! உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. ஆனந்தமாகக் கண்டு களிக்கலாம். இதோ, இங்கே உங்களுக்காக வர்ணனைகளுடன்… அன்னை தெய்வத்தின் நவராத்திரி காட்சிகள்…
1. தர்மசம்வர்த்தனியின் தர்பார் பெருமை!
திருவையாறு க்ஷேத்ரம். பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பரும், தர்மசம்வர்த்தனி எனும் அறம்வளர்த்த நாயகியும் எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம். சைவசமயக் குரவர்களால் இனிய தமிழில் பாடல்பெற்ற தலம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலியவர்களால் முறையே தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இயற்றப்பட்ட அழகான கீர்த்தனைகளால் வழிபடப்பெற்ற அன்னையும் அத்தனும் அருள்பொழிய நின்று நம்மைக் கடைத்தேற்றும் இடம். காவிரியன்னை தானும் தனது மற்ற நான்கு கிளை நதிகளாலும் (வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி) செழிப்பூட்டி, வழிபட்டு, மக்களை வாழ்வித்து, தனது பெயரான திரு+ ஐயாறையே ஐயன் சூட்டிக் கொள்ளவும் அளித்த பெருமை வாய்ந்த ஊர். இன்னும் என்னென்னவோ பெருமைகள் உண்டு.
இங்கு வெள்ளிக்கிழமையில் தர்மசம்வர்த்தனியின் கொலுமண்டபத்தின் வியத்தகு அழகையும் பெருமையையும் அவள் கொலுவிருக்கத் தனது தர்பார் மண்டபத்திற்கு வரும் கோலாகலத்தினையும் கண்குளிரக் காணச்செல்லலாமா? இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான தேவர்களும் ஈரேழு பதினாலு உலகத்து அரசர்களும் வந்து நெருக்கியடித்துக்கொண்டு அவள் திவ்யதரிசனத்துக்குக் காத்திருக்கிறார்கள்; ஒருபுறம் ரம்பை, ஊர்வசி ஆகிய தேவமாதர் நடனமாடுகிறார்கள்; குழல், வீணை ஆகிய வாத்தியங்களிலிருந்து இனிய இசையை எழுப்பும் வித்தகர்கள் இன்னொரு புறம். கீதங்கள் இசைக்கப்படும் தர்பார்; ஆவலாக தேவியின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் கூட்டம். ‘அதோ! அதோ!’ என்னும் எல்லாரின் ஆரவாரத்தினிடை, கூட்டம் விலகி வழிவிட, ‘தர்மாம்புதி சாயி’ எனப்படும் தேவி கம்பீரமான அழகுடன், ‘கஜகாமினி’ என மென்மையாக நடைபயின்று வருகின்றாள். சேடிப்பெண்கள் சாமரம் வீசிவர, மற்றவர்கள் சித்திர விசித்திரக் குடைகளையும், விருதுகளையும், சிவச்சின்னங்களையும் ஏந்திவருகின்றனர். அவளுடைய மென்னடையில் மார்பில் அசையும் வைர, ரத்தின ஹாரங்கள் புரண்டு ஜொலித்து அவற்றின் ஒளி எல்லா திசைகளிலும் பளீரிடுகின்றது. புன்னகை தவழ்ந்தாடும் அவளது முத்துப்பற்களின் பிரகாசத்தோடு அந்த ரத்தின, வைர ஹாரங்கள் போட்டியிடுகின்றன. உடன் வரும் மஹாலக்ஷ்மியுடன் சிரித்து உரையாடியபடியே, கிளியைக் கையில் ஏந்தி தர்பாரினுள் நுழைகின்றாள் அன்னை. பூரண கும்பத்தினை ஏந்தி தேவியை வரவேற்கின்றனர். ‘ஜய,ஜய,’ எனும் கோஷம் அனைவரிடமிருந்தும் எழுகின்றது; தேவர்கள் விண்ணிலிருந்து மலர்களைச் சொரிகின்றனர். அமர கோடிகள் ‘தட தட’ எனத் தரையில் விழுந்து தண்டனிட்டு வணங்குகின்றனர். அந்த வணக்கத்தையும் கடைக்கண்ணால் பார்த்து மகிழ்ந்து தலையை மெல்ல அசைத்து அதனை அன்னை அங்கீகரித்துக் கொள்ளும் நளினம் (சொகுசு) இந்தத் திருவையாற்றில் உள்ள நமக்கல்லாது வேறு யாருக்கு காணக் கிடைக்கும்? பக்தர்களே! வாருங்கள்; பாருங்கள், ரசியுங்கள், மகிழுங்கள்.
நான் மட்டும் உங்களைக் கூப்பிடவில்லை. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரே இவ்வாறு நம்மையெல்லாம் அழைக்கிறார். அதைத் தான் நான் திரும்பக் கூறி உங்களை அழைக்கின்றேன்.
‘விதி சக்ராதுலகு’ எனும் யமுனாகல்யாணி ராகத்தில் அமைந்த தியாகராஜகிருதியின் பொருள்இது!
பல்லவி
விதி சக்ராதுலகு தொரகுணா இடுவண்டி சன்
னிதி வேடுக ஜூதாமு ராரே
அனுபல்லவி
ஸுதி ஜன ரக்ஷகி தர்மாம்
புதிசாயி சேவ ஜூட (விதி)
சரணம்
உடுபதி முகுலெல்ல வருஸகா பிருதுலனு பட்டி
அடுகடுகுகு ஜயஜய மனகா ஆ வேல்புல வெல
படுசுலு நிஜ நாட்யமாடகா ஸமயமுன பசிடி
ஸுமவர்ஷமு குரியக வடிவடிகா அமர கோடுலு
தடபட பூமினி தண்டமு லிடகா ஸந்
தோஷமுனனு கடகண்டினி ஜூசு சொகஸு (விதி)
2. ஈசனின் திருப்பல்லக்கு பவனி!
திருவையாறின் ஒரு பரபரப்பான வீதி. பூவும் பழங்களும் விற்பவர்கள். அங்கும் இங்கும் திரள்திரளாக நிற்கும் மக்கள்; சாலையின் இருமருங்கும் வேதவிற்பன்னர்கள். திடீரெனப் பரபரப்பு. “சுவாமி வந்துவிட்டார்; ஐயாறப்பன் வருகிறார், வாருங்கள், தரிசித்து நமஸ்காரம் செய்யலாம்” என மக்கள் பேசிக்கொள்ள, அழகான ஒரு பூப்பல்லக்கில் பஞ்சநதீஸ்வரர் விரைவாக வந்துகொண்டிருக்கிறார். வழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான். நான்கு பல்லக்குத்தூக்கிகள் அவரைச் சுமந்து விரைகின்றனர். விருதுகளும் சைவச் சின்னங்களும் ஏந்திய தொண்டர்குழாம் பின்னால் வருகின்றது.
தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம்? யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். ‘எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்,’ என்கிறார் அந்த அடியார். அவர்தான் தியாகராஜர்- மத்யமாவதி ராகத்தில் அமைந்த இப்பாடலை இயற்றியவர்.
பல்லவி
முத்ஸட ப்ரஹ்மாதுலகு தொரகுனா
முதிதுலார ஜுதாமு ராரே
அனுபல்லவி
பச்சனி தேஹினி பரம பாவனி
பார்வதினி தகசுசுனு ஹருடே கெடு
சரணம்
சல்லரே வேல்புல ரீதி நருலகர
பல்லவமுலனு தளுக்கனு ஸுபிருது
லெல்லமெரய நிஜ பக்துலு பொகடக
உல்லமு ரஞ்சில்ல
தெல்லனி மேனுன நிண்டு சொம்முலதோ
மல்லேஹாரமுலு மரி சோபில்லக
சல்லனி வேள சகல நவரத்னபூ
பல்லகிலோ வேஞ்சேஸி வச்சு (முத்ஸட)
ஈசனின் பவனிக்குத் தமது கண்ணோட்டத்தில் ஒரு அழகிய கற்பனையாக இப்பாடலைப் பாடி வைத்த அடியாரின் கவிதை உள்ளத்தினைப் போற்றும் விதமாக ஒரு நவராத்திரியில் கொலு அமைத்தேன். அதன் படங்களையும் இணைத்துள்ளேன். கண்டு களியுங்கள்!
இப்படியாக கொலு வைக்க எண்ணம் எழுந்ததன் பின்னணி:
2000மாவது வருடம் சில காரணங்களால், வழக்கம்போலப் பெரிய முழுமையான சம்பிரதாயமான கொலு வைக்கமுடியவில்லை. ஆகவே, ஒரு புதுமையான எண்ணம் உதித்தது. கைவினைப் பொருட்கள் அங்காடியில், மிக அழகான ஆணும் பெண்ணுமான ஜோடி பொம்மைகள் கண்ணில் பட்டதை வாங்கி வந்தேன்; மிகவும் பிரயத்தனப்பட்டு, அவற்றிற்கு உடை, நகை, அலங்காரங்களை மாற்றி, தேவியாகவும், சிவபெருமானாகவும் மாற்றினேன்.
சற்றே கூர்ந்து நோக்கினால் முக்கியமான பாத்திரங்களின் முகங்கள் (தேவி, ஈசன், மகாலட்சுமி உருவங்கள்) மிக அழகான முப்பரிமாண வடிவமைப்புக் கொண்டிருப்பதைக் காணலாம். பரிவாரங்கள் வேண்டுமே! எனக்கு நேரம் இல்லாமையால் இத்தகைய பொம்மைகளைச் செய்து விற்கும் ஒரு பெண்மணியிடம் என் தேவையை விளக்கி, ஒரு நாரதர், சில முனிவர்கள், சில அந்தணர்கள், சில அரசர்கள், சேடிப்பெண்டிர், பல்லக்குத்தூக்கிகள் எனச் செய்துதர வேண்டினேன். இவற்றைக் கூர்ந்துநோக்கினால் முகம் உருண்டையாகக் கண், மூக்கு, வாய் முதலியன இரண்டே பரிமாணங்களில் வரையப்பட்டிருக்கும். ஆயினும் இவை, எடுத்துக்கொண்ட காட்சிகளுக்கு வெகுவாகக் களைசேர்த்தன. அழகாகவும் அமைந்தன.
அடுத்தடுத்த வருடங்களில் பரிவாரபொம்மைகள் நிறையச்சேர்ந்தன. முக்கியமான உருவங்களான தேவி, ஈசன், லட்சுமி, சரஸ்வதி, முருகன் முதலானோரை எப்போதுமே புதிது புதிதாக என் கைப்படச் செய்து மகிழ்ச்சி அடைந்தேன் என்றால் மிகையாகாது.
*****
இவை சம்பந்தமான சில பகிர்வுகள்:
1.இந்தக் காட்சிகளுக்குக் கரு ‘தியாகராஜ கீர்த்தனைகள்’ எனினும், இவற்றை ஏற்கெனவே ஒரு கலைஞர் (காலஞ்சென்ற பாடகரும், சித்திரம் வரைவதில் வல்லுனருமான திரு. எஸ். ராஜம் அவர்கள்) ‘Musings on Music’ எனும் தலைப்பில் கோட்டுச் சித்திரங்களாக வரைந்து புத்தகமாக வெளியிட்டிருந்தார். ஒரு விதத்தில் அவருடைய கற்பனையைப் பிரதிபலிக்கும் விதமாகவும் இந்தக் கொலு அமைந்தது எனலாம். புகைப்படங்களைப் பார்த்த அவர், இதை ஒரு நிரந்தரக் கண்காட்சியாகவே எங்காவது வைக்கலாமே எனக் கூறினார்.
- கொலு பார்க்க வந்த குழந்தைகள் இவற்றைப் பார்த்து, கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அனைவருக்குமே இக்காட்சிகளைப் பார்த்தபோது பெருத்த உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ‘அடுத்த வருடம் என்ன காட்சி’ என்று இந்தக் கொலு முடிவதற்குள் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஒரு ஆறு வயதுப்பையன் என்னிடம் ஓடிவந்து, “ஒரு பொம்மை கீழே விழுந்து கிடக்கிறது பாருங்கள்,” எனப்பரபரத்தது சிரிப்பை வரவழைத்தது. அவனுக்குப் பின்பு அதனை விளக்கினேன்.
- இந்தக் காட்சிகளைத் திரும்பத்திரும்ப நம்வாயாலேயே கொலுகாணவரும் நண்பர்களுக்கு விளக்கிக்கூறும்போது, தேவியின் ஸ்லோகங்களைக் கூறியதுபோன்ற மகிழ்ச்சி மனதில் நிலவுகின்றது.
இந்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது உற்சாகம் கொப்பளிக்கின்றது.
(நவராத்திரி தொடரும்)
\\\தேவிக்குந்த நவராத்திரி — 1\\\
தலைப்பு சும்மா நச்சுன்னு இருக்குய்யா …..
“தேவிக்கு உகந்த” சரி !
அது என்ன சார் தேவுக்குந்த ….?