சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம். 

தொடர்ச்சி.. 

சுவாமி அம்பேத்கர் இப்படி பக்தர்களின் விருப்பத்தைக் கேட்டு சீர்திருத்தத்தை முன்னெடுப்பதைப் பார்க்கும் பெண்ணிய வாதிகள், நாத்திகர்கள் ஆகியோர் பக்தர்கள் போல் கோவில் களுக்குள் நுழைந்து தமது அரசியலை முன்னெடுக்கிறார்கள்.

பெண்கள் அர்ச்சகராக்கப்படவேண்டும், கரு முட்டை கரையும் நாட்களில் கோவிலுக்கு வர அனுமதிக்கவேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்கிறார்கள். சுவாமி அம்பேத்கர் புன்முறுவலுடன் அதைப் பட்டிமன்றத் தலைப்பாக முன்வைக்கிறார். பெண்ணியவாதிகள் சொல்லும் வாதங்களுக்கு எளிய பக்தர்கள் பதில் சொல்கிறார்கள். கோவிலில் அமலாகும் ஒழுக்க விதிகள் எல்லாம் ஆதிக்க சக்திகளின் திணிப்பு அல்ல… எளிய மக்களின் விருப்பமே என்பது பெண்ணியவாதிகளுக்குப் புரிகிறது. எனினும் சுவாமி அம்பேத்கர் பக்தர்களிடம் சில மாற்றங்கள் கொண்டுவர முயற்சி செய்கிறார். அதன்படி பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அர்ச்சகராக நியமனம் பெறலாம். கரு முட்டை கரையும் நாட்களில் பக்தி உணர்வு பெருகும் பெண்களுக்கென்று தனி தரிசன நேரம் ஒதுக்கப்படலாம். கோவிலுக்குள் நுழையும் முன் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை எடுத்து முழு உடம்பும் நனையும் வகையில் தலைவழியாக ஊற்றிக்கொண்டு ஈர உடையுடனே தெய்வத்தை அவர்கள் தொழ அனுமதிக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

*

சில நாத்திகர்கள் கோவில்களில் ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். இடை, கடை நிலை சாதிகளின் தெய்வ சன்னதிகள் அமைக்கப்பட்டு அசைவ படையல்கள் நடத்தப்படலாம். ஆனால், அத்தகைய கோவில்களில் திருவிழா நாட்களில் நூற்றுக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகள் பலி கொடுக்கப்படுகின்றன. அதற்கு பதிலாக ஒரே ஒரு ஆடு பலியிடப்பட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒரு துளி அப்பமும், ஒரு சொட்டு திராட்சை ரசமும் தரப்படுவதுபோல் சிறிய அளவில் பிரசாதமாக அனைவருக்கும் தரலாம் என்று ஒருவர் சொல்கிறார்.

பக்தர்கள் தமது பலி விலங்குகளை கோவிலுக்கு அழைத்து வந்து இறைவன் சன்னதி முன்பாகக் கொண்டுவந்து காட்டி, மஞ்சள் நீர் தெளித்து, குங்குமம் இட்டு, உடம்பில் லேசாக சிறு கீறல் செய்து ஒரு சொட்டு ரத்தத்தை எடுத்து பலிபீடத்தில் தெளித்து அந்த ஆட்டை வீட்டுக்குக் கொண்டுசென்று சமைத்து உண்ணலாம். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு மிகுந்திருந்த காலத்தில் அப்படி நடந்ததாக இலங்கையில் இருந்து வந்திருந்த பக்தர் ஒருவர் சொல்கிறார். இந்த இரண்டில் எது என்பதை ஒவ்வொரு கோவில் பக்தர்களும் கூடிக் கலந்து முடிவெடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ‘பலி’ தரப்படும் நாட்களில் திருவள்ளுவரின் கொல்லாமை அதிகாரக் குறள்களே அந்த சன்னதிகளில் மந்திரமாக ஓங்கி ஒலிக்கப்படும். மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் அதை தெய்வச் சடங்காகச் சொல்லிச் சாப்பிடுவதையாவது நிறுத்தவேண்டும் என்றே பெரும்பாலான பக்தர்கள் முடிவெடுக்கிறார்கள்.

*

சுதந்தர தினம், குடியரசு தினம், உள்ளூர் ராணுவ வீரர்கள், சமூக சேவகர்கள், சுதந்தரப் போராட்ட வீரர்கள் நினைவு தினமன்று அவர்களுடைய நினைவாக பக்தர்கள் அனைவரும் அர்ச்சனை செய்து அவர்களின் குடும்பத்தினருக்கு முதல் மரியாதை செய்து ஆசி பெறலாம். தேச நலனுக்கான பிரார்த்தனைகள், திருவிளக்கு வழிபாடுகள் ஏற்பாடு செய்யலாம் என்று முடிவுசெய்யப்படுகிறது.

*

அடுத்ததாக, கோவில் என்பது அதைச் சுற்றியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக இருக்கவேண்டும். முந்தைய காலகட்டக் கோவில்கள் சுற்றுப் பகுதியில் இருந்த நிலபுலன்களைக் குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதாக இருந்திருக்கிறது.

இன்று விவசாயம் மட்டுமல்லாமல் பல தொழில்கள் வந்துவிட்டன. தொழில்புரட்சி, அச்சுத் தொழில் கண்டுபிடிப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவை பெருகிவிட்டன. எனவே பாரம்பரியக் கோவில்களில் மதம் சார்ந்த கல்வி மட்டுமே தரப்பட்டுவந்த நிலை மாறி ஒவ்வொரு கோவில் முலமாகவும் இன்றைய தொழில்களுக்கான கல்வி மையம் நடத்தப்படவேண்டும். இன்றைய கல்வி மையங்கள் எல்லாமே அதிக பணம் கிடைக்கும் ஒரு வேலையைப் பெற்றுத் தருவதையே இலக்காகக்கொண்டு செயல்படுகின்றன. கோவில் சார் கல்வி மையங்கள் அந்த வேலையை தர்மத்தின் வழி நின்று செய்யக் கற்றுத் தரவேண்டும். மத நீக்கம் செய்யப்பட்ட பொதுவான பள்ளிகள் ஒருவரை அதிக பணம் சம்பாதிக்கும் மருத்துவராக ஆக்கும்போது கோவில்கள் நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க முன்வரும் மருத்துவர்களை உருவாக்கவேண்டும். அல்லது வாரத்துக்கு ஒரு நாள் கோவில் வளாகத்தில் இலவச வைத்தியம் பார்க்க அந்த செல்வந்த மருத்துவர்கள் முன்வரும்படிச் செய்யவேண்டும். அறிவினான் ஆவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை. பிறருடைய துயரத்தைத் தனது துயரமாகப் பார்த்துத் தீர்வு சொல்ல முன்வராவிட்டால் கல்வி கற்று என்னதான் பயன் என்று சுவாமி அம்பேத்கர் கோவில் சார்பில் இலவச மருத்துவ மையம், இலவச அன்ன தான மையம், சிறு தொழில் பயிற்சி மையம் தொடங்குகிறார்.

கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் கோவில் சார்பில் பூஜாரியும் வேறு சில பக்தர்களும் சேர்ந்து நோய்வாய்ப்பட்டவர் வீட்டுக்குச் சென்று விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலுக்கு அருகில் மருத்துவமனைகள் இருந்தால் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவை சில நோயாளிகளுக்கு அலர்ஜியைத் தந்துவிடக்கூடும் என்பதால் மருத்துவ அனுமதி கிடைக்கும் நபர்களுக்கு மட்டுமே அவற்றை இட்டுவிடுகிறார்கள். மற்றவர்களுக்கு அவர்களுடைய தலைமாட்டில் சிவன், விஷ்ணுவின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்துவிட்டு வருகிறார்கள்.

கோவிலைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நடக்கும் அநாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், மறு வாழ்வு மையங்கள், மன நல விடுதிகள் ஆகியவற்றுக்குச் சென்று சுவாமி அம்பேத்கர் தலைமையில் உதவிகள் செய்கிறார்கள்.

பக்தர்கள் தாம் கொடுக்கும் பணத்தை எந்தெந்த சேவைக்கு எத்தனை சதவிகிதம் என்று ஒரு படிவத்தில் எழுதி பணத்துடன் சேர்த்து ஒரு கவரில் போட்டு உண்டியலில் போடவேண்டும். மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை உண்டியலைத் திறந்து பணத்தை எண்ணும்போது ஆயிர ரூபாய் காணிக்கையாகக் கொடுத்த நபர் கல்விக்கு ஐம்பது சதவிகிதம், மருத்துவத்துக்கு 25 சதவிகிதம், கோவில் நிர்வாகப் பணிகளுக்கு 25 சதவிகிதம் என்று எழுதியிருந்தால் அந்த ஆயிரம் ரூபாயை அந்தவிதமாகவே பிரித்துச் செலவிடவேண்டும். இதற்கான படிவத்தையும் கவரையும் ஒவ்வொரு கோவிலிலும் கோவில் நிர்வாகம் அச்சிட்டுத் தரவேண்டும் என்று சுவாமி அம்பேத்கர் ஒரு விதிமுறை கொண்டுவருகிறார். கோவிலில் கல்விக்கு, மருத்துவத்துக்கு, கோவில் நிர்வாகப் பணிகளுக்கு, பிற சேவைகளுக்கு என்று நான்கு உண்டியல் வைக்கலாம் என்று பக்தர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். அப்படி நான்கு உண்டியல் வைத்தால் மிகப் பெரிய இடத்தை அதுவே எடுத்துக்கொள்ளும் என்பதால் ஒரே உண்டியலை நான்காகப் பிரித்து நான்கு திறப்புகளை வைத்து ஒவ்வொன்றின் மேலும் ஒவ்வொரு சேவையை எழுதி வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

பக்தர்கள் தமது நேர்ச்சையின் ஓர் அங்கமாக கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பொங்கல் போன்றவற்றைத் தருவதுபோல் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கான பாட புத்தகங்கள், சிடிக்களை வாங்கித் தரலாம் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார். பக்தர்களில் கல்வியறிவு பெற்றவர்கள் தமது வழிபாட்டுச் சடங்குகளின் ஓர் அங்கமாக அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் பாடம் எடுக்கும் முறையைக் கொண்டுவருகிறார். சரஸ்வதி வந்தனத்துடன் ஆரம்பமாகும் அந்த வகுப்புகள் பாழடைந்த கோவில்களைச் சீரமைத்தல், விழாக்காலங்களில் கோவில் பணிகளில் ஈடுபடுதல் போன்ற சிரமதானத்தின் புதிய வடிவமாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கவேண்டும். அதில் வாரந்தோறும் உலகின் மிகச் சிறந்த அறிவியல் பாடங்கள், உலகின் மிகச் சிறந்த ஆவணப்படங்கள், சார்லி சாப்ளின் படங்கள், தாய்மொழி வழியில் உலக விஷயங்கள், மாற்றுக் கல்வி வகைகள், இந்து சமூக சேவை மையங்கள் பற்றிய ஆவணப்படங்கள், காளி பேன் ஆறு சீரமைப்பு போன்ற முன்னெடுப்புகள், புகழ் வெளிச்சம் படாத சமூக சேவகர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைக் பார்க்கச் செய்யலாம். பூஜாரி என்பவர் இந்தக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருக்கவேண்டும். அர்ச்சகர் தேர்வோடு, டிகிரி படிப்பும் முடித்தவர்களுக்கு இதில் முன்னுரிமை தரலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

கோவிலையொட்டிய பகுதியில் பக்தர்கள் தாம் தானமாகக் கொடுக்கவிரும்பும் பொருட்களைக் கொண்டுவந்து வைக் கலாம். தேவைப்பட்டவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம்.

கோவிலுக்குக் காணிக்கையாக மரக் கன்றுகளைத் தரலாம். தேவைப்பட்டவர்கள் அதை தமது வீட்டுக்குக் கொண்டு சென்று நட்டு வளர்க்கலாம். அல்லது கோவில் நிர்வாகமே கோவிலைச் சுற்றிய பகுதிகளில் அந்தக் கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம்.

கோவில் ஸ்தல விருட்சத்தில் ஒவ்வொரு பக்தரும் தமது பிரார்த்தனைகளை காகிதத்தில் எழுதிக் கட்டவேண்டும். அதை கோவில் நிர்வாகிகள் படித்துப் பார்த்து அந்தத் தேவைகளை கோவில் வாசலில் ஒரு கரும் பலகையில் எழுதிவைக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் சிறு தொழில் தொடங்க விரும்புகிறார். அதற்கான பணம் கிடைக்கும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாரென்றால் இன்னொரு பக்தர் அந்த தொழில் தொடங்க தன்னால் முடிந்த தொகையை கொடுக்கலாம். இப்படியான லௌகீகத் தேவைகளுக்கு என்று தனியாக ஒரு மரமும் குழந்தை வரம், நோய் தீர வேண்டிக்கொள்ளுதல் போன்ற இறைவனின் கருணையை எதிர்பார்த்துச் செய்யும் வேண்டுதல் களுக்குத் தனி மரம் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார்கள்.

கோவில் வழிபாடு என்பதோடு யோகா, தியானம் ஆகியவற்றுக்கான வசதி வாய்ப்புகளையும் கோவில் வளாகத்தில் பிரார்த்தனை அல்லாத நேரங்களில் கிடைக்கச் செய்யலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.

*

திருப்பதி, பழனி, சபரிமலை போன்ற பெரும் கூட்டக் கோவில்களில் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில் நசிவில் இருக்கும் பாரம்பரியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்யலாம். இப்போது திருப்பதி போன்ற இடங்களில் தொலைகாட்சிப் பெட்டிகளில் கோவில் நிகழ்வுகள் அல்லது புராண திரைப்படங்கள் ஒளிபரப்பா கின்றன. அதற்கு பதிலாக புராண நாடகங்களை, கலை நிகழ்வுகளை நேரடியாக நடத்தலாம் என்று ஆலோசனை வழங்குகிறார் சுவாமி அம்பேத்கர்.

நீண்ட நேரம் காத்திருக்க நேரும்படியாகக் கூட்டம் வரும் கோவில்களில் எல்லாம் அந்தக் காத்திருப்பு நேரத்தை இறைச் சிந்தையுடன் கழிக்க அங்கு யோகா, தியான வகுப்புகள், 108, 1008 முறை இறை நாமத்தை எழுதுதல் (நோட்டு புத்தகம், பேனா பக்தர்களுக்கு அங்கு தரப்படும்), பஜனைகள் என ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தர்ம தரிசனம், சிறப்புக் கட்டண தரிசனம் என இருப்பது தவறென்று சிலர் சொல்கிறார்கள். இறைவன் சன்னதியில் ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் இருப்பது தவறு என்று சிலர் சொல்கிறார்கள். கடந்த காலத்தில் சமூகத்தில் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிய ஏற்றத் தாழ்வு இருந்தது. எனவே, அது அப்படியே கோவில் வழிபாட்டிலும் பிரதிபலித்தது. சில ஜாதியினர் மட்டுமே கோவிலுக்குள் நுழைய முடியும் என்று இருந்தது. இன்று பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு வெகுவாக மறைந்துவிட்டது. ஆனால், ஏழை பணக்காரன் ஏற்றத் தாழ்வு இருக்கிறது. சமூகத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறைந்ததைத் தொடர்ந்து கோவில் நுழைவிலும் அது பிரதிபலித்ததுபோல் கோவிலில் பணக்கார – ஏழை ஏற்றத் தாழ்வை போக்குவதன் மூலம் சமூகத்தில் அந்த ஏற்றத் தாழ்வு குறைய வழி பிறக்கும். எனவே இம்முறை அந்த சீர்திருத்தத்தை கோவிலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று தீர்மானிக்கிறார்கள்.

யாராக இருந்தாலும் முதலமைச்சரே, பிரதமரே ஏன் மடாதிபதிகளேயானாலும் அனைவருக்கும் ஒரே வரிசை என்று தீர்மானமாகிறது. முதல்வர் பஸ்ஸில் பயணம் செய்தார்… வாக்குச் சாவடியில் ஜனாதிபதி வரிசையில் நின்று வாக்களித்தார்… நடிகர் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார் என்றெல்லாம் செய்திகளும் புகைப்படங்களும் வெளியாவதுபோல் சுவாமி அம்பேத்கர் தான் கட்டிய கோவிலில் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமத்துவச் செய்தியை அழுத்தமாக உலகுக்குத் தெரிவிக்கிறது.

*

கோவில்கள் என்பவை கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அடைக்கலம் தரும் பாதுகாப்பு மையமாகத் திகழவேண்டும். அப்படி ஏதேனும் காதலர்கள் அங்கு வரும்போது அக்கம்பக்கத்தில் வசிக்கும் பக்தர்கள் தமது வீடுகளில் அவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டும். அல்லது கோவிலில் வந்து இருந்து தங்கி அந்தக் காதலர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்று சொல்கிறார்.

இது பெரிய பிரச்னையைக் கிளப்புகிறது. பக்தர்கள் குழுவில் இதனால் பெரும் விரிசல் விழுகிறது. என்னதான் இறை நம்பிக்கை, சமூக சேவை போன்றவற்றுக்கு ஆதரவு கிடைத்தாலும் சாதி உணர்வில் இருந்து யாரும் வெளிவரத் தயாராக இல்லை. சொந்த மதத்துள்ளான திருமணத்திலேயே இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இருப்பதுபோல் சொந்த சாதிக்குள்ளான திருமணமே இந்து மதத்தில் அனைவருடைய லட்சியமாகவும் இருக்கிறது. பிற மதங்களைப் பொறுத்தவரை யில் வேற்று மதத்து மணமகனையும் மணமகளையும் தமது மதத்துக்குள் இழுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையைத் தந்திரமாக, ஒருவகையில் அராஜகமாகத் தீர்த்துக் கொள்கிறார்கள். சாதி மாறுவது சாத்தியமில்லையென்பதால் இந்து சமயத்தில் இது பிரச்னையாக இருக்கிறது.

சுவாமி அம்பேத்கர் இதற்கு இரண்டு யோசனைகளைச் சொல்கிறார்: ஒன்று காதலிப்பவர்கள் பிராமண ஜாதிக்கு மாறிக்கொள்ள அனுமதி தரவேண்டும். அல்லது அவர்கள் பவுத்தத்துக்கு மாறி திருமணம் செய்துகொள்ளவேண்டும். முதல் வழியை விரும்புபவர்களுக்கு சைவ-வைணவ பாரம்பரிய மடாதிபதிகள், ஆரிய சமாஜிகள், இந்துத்துத் தலைவர்கள், ஜக்கி வாசுதேவ்-அமிர்தானந்த மயி போன்ற நவீனத் துறவிகள், ராம கிருஷ்ண மிஷன், இஸ்கான், இந்து மதத்தின் மீது பெருமதிப்பு கொண்ட அயல் நாட்டினர், அயல் நாட்டு இயக்கங்கள் இவர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பின் மூலம் இந்த பூணூல் வைபவத்தை நடத்தி ஜாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு மனோபாவத்தை மாற்றவேண்டும். அல்லது காதலிக்கும் இருவரும் புத்த மதத்துக்கு மாறித் திருமணம் செய்துகொள்ள வழிவகை செய்து தரவேண்டும் என்று சொல்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் புத்தர் சன்னதி கட்டப்படவேண்டும். அங்கு சென்று ஒரு பெண்ணோ ஆணோ அங்கிருக்கும் மணியை அடிக்கிறார் என்றால் அவர் கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று அர்த்தம். அந்த மணியோசை மனுநீதிச் சோழனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட மணிபோல் தர்மத்தின், நீதியின், அன்பின், சமத்துவத்தின் அறைகூவலாக இருக்க வேண்டும். கோவில் மணியின் ஒலியைவிட இந்த மணியின் ஒலி கம்பீரமாக, உரத்து ஒலிப்பதாக, பக்தர்களின் மனதில் சமத்துவ அதிர்வுகளை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.

இப்படித் திருமணம் செய்து கொள்பவர்கள் மேலே சொன்ன நிறுவனங்களில் சேர்ந்து தம்பதிகளாகச் சேவைப்பணிகளில் ஈடுபடலாம்.

இந்து மதத்தின் சீர்திருத்தக் குழுக்கள் இந்த மத மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இடைநிலை சாதியினரும் கடைநிலை சாதியினரும் இந்த வழிமுறையை ஏற்றுக்கொள்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் வந்து நடத்திக்கொடுக்கும் திருமணங்களை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்கிறார்கள். பாரம்பரியத்தில் பிடிப்பும் கல்வி கேள்விகளில் சிறந்தும் இருக்கும் நபர்களுக்கே அயல் நாட்டினர் என்றால் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இருக்கும் நிலையில் எளிய மக்களுக்கு அது இன்னும் அதிகமாகத்தானே இருக்கும். எனவே, கலப்பு திருமணம் செய்துகொள்ள விரும்பும் தம்பதிகள் இந்த அமைப்புகளுக்கு போன் செய்து சொன்னால் அவர்கள் வந்து பெற்றோரைச் சந்தித்து சம்மதம் பெற்று உயர் ஜாதிக்கு மாற்றி அல்லது பௌத்தத்துக்கு மாற்றி பிரச்னையை சுமுகமாக முடிக்கிறார்.

*

தமிழகத்தில் இருக்கும் அனைத்து பிரிட்டிஷ் கால கட்டடங்களுக்கும் தமிழ் பெயர்களைச் சூட்டும் இயக்கத்தை முன்னெடுக்கிறார். வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் எழுதச் சொல்வதைவிட தமிழ் படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று சொல்வதைவிட தமிழக அரசுக் கட்டடங்களுக்குத் தமிழ் பெயர் சூட்டப்படுவது மிக மிக அவசியம் என்று சொல்கிறார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு திருவள்ளுவர் மண்டபம் என்று பெயர் சூட்டி இந்தத் திருப்பணியைத் தொடங்கிவைக்கிறார்.

*

கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கால்வாய் சீரமைப்பு, ஏரி, குளங்களைத் தூர்வாருதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பணிகளை வழிபாட்டின் ஓர் அங்கமாக முன்னெடுக்கிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் எந்திரங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், உழைப்புக் கூலி தரப்படும். சுவாமி அம்பேத்கர் எந்திரங்களுக்கான தொகையை கோவில் நிர்வாகத்திலிருந்து தருகிறார். பணியாளர்களுக்கான கூலியை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் தர வழி செய்கிறார். அப்படியாக ஒரு வருடத்தில் நாடுமுழுவதும் தடுப்பணைகள் கட்டப்பட்டு, ஏரி குளங்கள் தூர் வாறப்பட்டு விவசாயம் உயிர்ப்பிக்கப்படுகிறது.

*

நாத்திகர்கள் புதிதாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று இந்து மதம் சொல்வதாகப் பெருமை பீற்றிக் கொள்கிறீர்களே… கோவில்களில் ஏசு கிறிஸ்துவுக்கு சன்னதி கட்டவேண்டியதுதானே என்கிறார்கள். பக்தர்களிடம் அந்த விஷயம் கலந்தாலோசிக்கப்படுகிறது. செய்யலாம்தான். ஆனால், பதிலுக்கு சர்ச்சுகளில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தனியாக ஒரு சன்னதி கட்ட அவர்கள் முன்வருவார்களா என்று கேட்கிறார்கள். அதைக் கேட்டதும் நாத்திகர்கள் அலறி அடித்து ஓடுகிறார்கள். ஆனால், சுவாமி அம்பேத்கர்க்கு அப்படிக் கிடைக்கும் வெற்றி போதுமானதாக இல்லை. உண்மையிலேயே கோவில் வளாகத்துக்குள் மேரியம்மன், இயேசு, சிலுவை என ஏதேனும் ஒரு உருவச் சிலை வைத்து வழிபடலாம். இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற கிறிஸ்தவர்கள் தமது வேர்ப் பிடிப்பை இழக்காமல் இருக்கும் நோக்கில் இத்தகைய கோவில்களுக்கு வந்து வணங்கிச் செல்ல அது உதவும். இந்தக் கோவில்களில் பிற இந்து தெய்வங்களுக்கு நடப்பதுபோலவே அனைத்து அபிஷேக, ஆரத்தி சடங்குகள் எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் சமத்துவமாக கிறிஸ்தவ சிலைகளுக்கும் முன்னெடுக்கலாம். ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்மஸ் போன்ற எல்லா அந்நிய விழாக்களிலும் அந்த தெய்வங்களுக்கு விமரிசையான பூஜைகள் நடத்தலாம் என்று சொல்கிறார்.

அதுபோலவே, கோவிலின் மேற்கு பக்கத்தில் இஸ்லாமிய வழிபாட்டு மண்டபம் அமைக்கப்படவேண்டும். இஸ்லாமிய மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதுபோல் அல்லாமல் இங்கு ஆண்களும் பெண்களும் தனி வரிசையில் அமர்ந்து தொழுதுகொள்ள வழிசெய்து தரப்படலாம் என்று சொல்கிறார்.

இந்துக்கள் மட்டுமல்ல… கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சுவாமி அம்பேத்கர் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். சபரி மலைக்குச் செல்லும் இந்து பக்தர்கள் வாபர் மசூதிக்குச் சென்று தொழுவதில்லையா… சபரிமலைக்குக் கூட இஸ்லாமியர்கள் மாலை போட்டுகொண்டு வணங்கச் செல்கிறார்களே… இதுபோல் இங்கும் வந்து போகலாமே என்கிறார். யாரும் அவருடைய கருத்தை ஏற்காமல் போகிறார்கள்.

அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி பாரத மாதா ஆலயம் கட்டுவதுதான். மூவர்ணக் கொடியே அந்தக் கோவிலின் மூல விக்கிரஹம் (மின் விசிறி மூலம் அது பட்டொளி வீசிப் பறந்தாகவேண்டும்). இந்திய அரசியல் சாசனமே அந்த கோவிலின் வேத புத்தகம். தேசிய கீதமே அங்கு ஒலிக்கும் ஒரே மந்திரம் என தீர்மானிக்கிறார்கள். உள்ளேயும் வெளியேயும் தேசியக் கொடி பறக்க பாரத மாதா ஆலயம் கிராமந்தோறும் உருவாகிறது.

*

அதுபோல் கொடிமரம், தேர் பவனி, காவி உடை, பாத யாத்திரை என இந்து அடையாளங்களைக் கிறிஸ்தவ அமைப்புகளில் சில கவர்ந்துகொள்வதை பக்தர்கள் சுவாமிஜியின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார்கள். அது தொடர்பான கலந்துரையாடலில் பல பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி இந்து அடையாளங்களைப் பிற மதங்கள் பின்பற்றுவதை அறவே தடுக்கவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ அதில் தவறில்லை என்கிறார்கள். இன்னும் சிலர் நாமும் பதிலுக்கு கிறிஸ்தவ அடையாளங்களைத் நமதாக்கிக் கொள்ளவேண்டும் என்கிறார்கள். கிறிஸ்தவர்களின் தனித்தன்மை மிகுந்த விஷயமான கிறிஸ்மஸ் மரம், சாண்டா க்ளாஸ் போன்றவற்றை நாம் கையகப்படுத்தவேண்டும் என்று சொல்கிறார்கள்.

கையகப்படுத்துதல், கவர்ந்து கொள்ளுதல் என்ற வார்த்தைகள் அடிப்படையில் தவறானவை… இவை இரண்டு கலாசாரங்களின் இயல்பான கொடுக்கல் வாங்கல்… பரஸ்பர நல்லிணக்கம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகக் கருதப்படவேண்டும் என்று சொல்லும் சுவாமிஜி கிறிஸ்தவ அடையாளங்களை இந்து மயப்படுத்த என்ன வழி என்று கேட்கிறார்.சாண்டா க்ளாஸ் ஒரு வேடிக்கை கதாபாத்திரம்… இந்து மரபில் விநாயகர், அனுமன் என சில கடவுள்களுக்கு நகைச்சுவை அம்சம் உண்டு. கிருஷ்ணருக்கும் அப்படியான குறும்புக் குணங்கள் உண்டு என்றாலும் அவர் கீதாசிரியனும் கூட. எனவே, அனுமன், விநாயகர் என்ற இருவரே இதற்குப் பொருத்தமானவர்கள். ஆனால், ஏற்கெனவே விநாயகர் சதுர்த்தி மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணிகள் திறமையாக நடந்துவிட்டிருப்பதால் அன்றைய தினத்தில் விநாயகர் போல் வேடமணிந்துகொண்டு குழந்தைகளைச் சந்தித்து பிரசாதங்கள், ஆசீர்வாதங்கள், தானங்கள், குழந்தைகளின் சின்ன சின்ன தவங்களுக்குச் சின்னச் சின்ன வரங்கள் கொடுப்பது நன்றாக இருக்கும் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார். தற்போதைய விநாயக சதுர்த்தியின் சூழல் மாசுபாடு, இஸ்லாமிய வீண் பதற்றம் போன்றவற்றை மட்டுப்படுத்தும்வகையில் அது குழந்தைகளின் விழாவாக மாற்றம் பெற வழிவகுக்கும். கிறிஸ்மஸ் மரத்துக்கு இணையாக இந்து அரச மரம் ஒன்றை அலங்கரித்து அதில் இந்து தெய்வ்வங்கள், இந்து மதத் தலைவர்களின் டாலர்களை கனிகளாகத் தொங்கவிட்டு சரவிளக்குகளால் அலங்கரித்து எல்லா கோவில்களிலும் கடைகளிலும் வீடுகளிலும் வைக்க ஆலோசனை சொல்கிறார். அந்த அரச மர உற்பத்தித் தொழில் மூலம் மிகப் பெரிய வேலை வாய்ப்பையும் உருவாக்குகிறார்.

*

(தொடரும்)

One Reply to “சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4”

  1. இருக்கின்ற கோவில்கள் போதாதென்று
    பாரதமாதா கோவில் கட்டுவது வீண் மனித வள விரயம்.

    அதுபோல் திருநெல்வேலியில் தாமரபரணி நதியோரம் ஒரு தாமிரபரணி அம்மனுக்கு கோவில் கட்ட நாள் செய்யப்பட்டுள்ளது. நதிகளின் ஒரங்களில் மலம் கழித்து விட்டு நதிகளில் ஒட்டத்தில் மலத்தை கழுவி வாழும் நமக்கு-நம்மை போன்ற முட்டாள்களுக்கு தெரிந்த பையித்தியக்காரத்தனம் ” கோவில்” கட்டுவது.அரசு இத்தகைய கோவில் களைக் கட்ட அனுமதிக்கக் கூடாது. நதிகளை வணங்குவதால் எந்த நன்மையம் இல்லை.அதை சுத்தமாக வைத்திருப்பதுதான் நமது பிராத்த்தனையாக இருக்க வேண்டும்.தாமரபரணி அம்மனுக்கு கோவில் சிலை -விளக்கு -பின் கும்பாபிஷேகம் என்று வெற்றுச் சடங்காக அது தொடரும்.நதியில் தண்ணீா் வருமா ? வந்த தண்ணீா் சுத்தமாக இருக்குமா ? என்ன உத்திரவாதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *