“இராவணன் சிவபக்தனா ? என்ற விவாதம் நடந்து கொண்டு உள்ளது . அதற்கு இராமாயணம் ( துளசி & கம்பர் ) மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து அறிஞர்கள் சான்றுகளை எடுத்து நிறுவுகிறார்கள். நம்மைப் போன்ற பக்தர்களைப் பொறுத்தவரை சில விஷயங்கள்:
– வேதங்கள் , உபநிடதங்கள் , இதிகாசங்கள் ஆகியன பொதுப் பிரமாணங்கள் . சிறப்பாக நாம் கொள்வது நமது சைவ திருமுறை ஆசிரியர்களும் சாத்திர ஆசிரியர்களும் தங்கள் நூல்களில் என்ன கூறி உள்ளனர் என்பதே.
– ஆக, சிறப்பு பிரமாணமாக நமது திருமுறைகளில் குறிப்பாக நமது ஆச்சாரிய பெருமகனாரகிய ஸ்ரீ ஞானசம்பந்த பெருமான் தமது திருக்கடைக்காப்பில் என்ன அருளி உள்ளார்கள் என்பதே நமக்கு முக்கியம்.
– ஸ்வாமிகள் தமது ஒவ்வொரு பதிகங்களில் (பெரும்பாலும்) எட்டாவது திருப்பாட்டில், இராவணன் தனது ஆணவத்தினால் கைலை மலையை எடுக்க முயற்சித்தும், அதனை கண்ட இறைவன், தன் கால் விரலால் அவனை அடர்ததுதும், அதானால் அரக்கன் அழுது புலம்பி சாம கானம் இசைத்தும், பின் அவன் நிலையைக் கண்டு இரங்கி, அவனுக்கு வாளும் நாளும் நல்கி அவனுக்கு அருள் புரிந்த வரலாறும் விரிவாக பேசபடுகின்றன.
– இறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன? இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா? இருவிதக் கருணை காட்டி வழி தவறும் பக்தர்கள் மற்ற சமயங்களில் இல்லையா என்ன? ஸ்வாமிகள் தமது திருநீற்று பதிகத்தில் ‘இராவணன் மேலது நீறு’ என்றே அருளி அவன் சிறந்த சிவபக்தன் என்றே குறிப்பு உணர்த்தி உள்ளார்கள்.
நம்மைப் பொறுத்தவரை நமக்கு ஸ்வாமிகள் தான் Supreme Court. அவர்கள் வாக்கே நமக்கு முடிவான இறைவாக்கு (“எனதுரை தனது உரையாக நீறு அணித்து ஏறு உகந்து ஏறிய நிமலன்”).
மேற்கண்ட பதிவை, கே.கந்தசாமி அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில நாட்கள் முன்பு எழுதியிருந்தார். அதன் மறுமொழியாக கீழ்க்கண்டவாறு முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் எழுதியதை இப்பதிவாகத் தொகுத்தளிக்கிறோம்.
– ஆசிரியர் குழு
*****
இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. சிவதன்மம் இருவரையும் எவ்வாறு நோக்கிற்று என்பதனை வைதிக சூளாமணி கவுணியர்கோன் (திருஞான சம்பந்தர்) திருவிராமேச்சுரப் பதிகத்தில் பாடி நமக்கு உரைத்தருளுகின்றார்.
இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் கூறினார்.
இராவணன் போர்வலி மிக்கவன். தன்னாற்றலைத் தானே மெச்சிக் கொள்பவன். இந்திரசித்துப் பிறக்கும் பொழுது சோதிடம் இன்றுள்ள கிரகநிலையில் குழந்தை பிறந்தால் தீமையெ தரும் என்று கூற, இராவணன் தான் பெற்ற வரத்தின் வலியால் ஒன்பது கிரகங்களையும் ஒருசேரச் சிறையில் இட்டுக் குழந்தை பிறந்தபின் விடுவித்தானாம். இராவணனின் இவ்வலிமையையும் கொடுமை செய்து மகிழும் பண்பினையும் காழியர்கோன், “சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன செய்துகந்தான்” என்று பாடினார்.
இராமனை, ”ஈனமிலாப்புகழ் அண்ணல்” என்றும், இராமனின் போராற்றலை “வரைபொரு தோளிறச் செற்ற வில்லி” என்றும், இலங்கைக்குச் செல்ல, அணை கட்டியதை “அணையலை சூழ்கடலன்றடைத்து வழி செய்தவன்” என்றும் பாராட்டினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற சிறு தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார் பாராட்டினார் எனலாம். உயிர்க் கொலை பிழை எனினும் இராவணனைக் கொன்றதால், தனக்கும் இரவி குலத்துக்கும் வரவிருந்த பழியைப் போக்கிய புகழ் உற்றது எனக் குறிக்க ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்றார்.
இனி, இராவணன் பிரமனின் புதல்வன், அவனைக் கொன்றது பிரமஹத்தி எனும் தோஷமாகும்; அவன் பெரு வீரன். வீரனைக் கொன்றது வீரஹத்தி எனும் தோஷமாகும். அந்தப் பழி தன்னை வந்து பற்றாத வகை, அறவழி நின்ற இராமன், சிவவழிபாடு செய்தான் என்பதை,
“தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்,
பூவிய லும்முடி பொன்றுவித்த பழி போயற,
ஏவியலும் சிலையண்ணல் செய்த இராமேச்சுரம்”
எனத் தல வரலாற்றையும் பிள்ளையார் அருளினார்.
சிவநெறியில் ஒழுகும் சைவர்கள் இராமனையும் இராவணனையும் எந்த முறையில் மதித்தனர் என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான் கூறிய நெறியில் போற்றுதலே தக்கதாம். இராவணனைத் தமிழன் என்றோ திராவிடன் என்றோ கூறிக் கொள்வதும் இராமனை ஆரியன் எனப் பழிப்பதும் சைவ மரபன்று.
******
பின்னிணைப்புக்கள்:
திருஞானசம்பந்தர் திருவிராமேச்சுரப் பதிகம் – கடைசிப்பாடல்
தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை
நாவியன் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்றேத்தும்
பாவியன் மாலை வல்லார் அவர்தம் வினையாயின பற்றறுமே.
திருநாவுக்கரசர் திருவிராமேச்சுரப் பதிகம் – சில பாடல்கள்
குன்றுபோல் தோளுடைய குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்று போராழி அம்மால் வேட்கையால் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில்
சென்று நீ தொழுது உய் கண்டாய் திரு இராமேச்சுரம்மே.
வீரமிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன்
கூரமிக்கவனைச் சென்று கொன்று உடன் கடற்படுத்துத்
தீரமிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக்
கோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே.
பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே.
வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணராகி நின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே.
நன்றி
சிறந்த விளக்கம். மிக்க நன்றி.
இராவணன் சிவபக்தராக வீணை வாசித்து, சாம கானம் பாடியும் தவம் செய்தும் சிவனருள் பெறும் காட்சியைத்தான் வாகனமாக வரித்திருக்கின்றனர் எனக் கருத இடமுள்ளது. அந்தச் சமயத்தில் இராவணன் இறையருள் பெற்ற சிவபக்தனே. ஆனால், அதே இராவணன் செய்யத்தகாத செயலைச் செய்தபின்னர் முன்னிருந்த அதே உயர்நிலையில் தொடர்வார் என்று எவரும் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஒரே ஜீவன் தனது நிலையை உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் தான் செய்யும் வினையால் அன்றி வேறல்ல.
இதில் குறிப்பிட்ட ஓவியத்தில் இராவணனுக்கு 9 தலைகளே உள்ளன. அவனின் ஒரு தலையை கொய்து, கொய்த ஒரு கரத்தில் பொருத்தி வீணையாக்கி மீட்பது போல் உள்ளது.
இது குறித்து மேலும் விளக்க முடியுமா