அண்மையில் எனது குடும்பநண்பர் ஒருவரின் பரிந்துரையின்பேரில் அமெரிக்க டி.வி.யான நெட்ஃபிளிக்ஸில் தர்மக்ஷேத்திரம் [Dharmakshetra] என்னும் தொடரைப் பார்த்தேன்.
“பதினெட்டு நாள்கள் நடந்து, நமது பண்பாட்டைப் புரட்டிப்போட்டு, குருக்ஷேத்திரத்தில் நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடந்த போரில் எவர் உண்மையானவர், எவர் பொய்யானவர், எவர் அதர்மி, எவர் அறத்தைக் காத்தவர், யாருக்குத் தெரியும்? போருடன் எல்லாம் முடிந்து போயின. குருக்ஷேத்திரம் பின்னால் தங்கிவிட்டது. இப்போது தர்மக்ஷேத்திரத்தின் முறை. குற்றங்கள் சுமத்தப்பட்டன; பதில்களும் கிடைத்தன. இப்பொழுதும்கூட இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. இது நம் வாழ்வுடன் இணைக்கப்படவேண்டும். இல்லாவிடில், தர்மக்ஷேத்திரம் அறைகுறையாகவே இருக்கும்!” என்ற முன்னுரையுடன் இத்தொடர் துவங்குகிறது.
சித்திரகுப்தனின் அவையில் ஒருபக்கம் கௌரவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களான பீஷ்மர், திருதராட்டிரன், காந்தாரி, விதுரர், துரியோதனன், துச்சாதனன், துரோணர், கிருபர், கர்ணன் ஆகியோரும், மறுபக்கம், தர்மபுத்திரரான யுதிட்டிரர், கண்ணன், பாஞ்சாலி, பீமன், அருச்சுன்ன், நகுல-சகாதேவர்கள், துருபதன் ஆகியோரும் அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்கள்மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, யார் சுமத்தியிருக்கிறார்கள், அதற்கு அவர்களது பதில் என்ன, குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அதற்கு சாட்சியென்ன என்று சித்திரகுப்தனால் விசாரிக்கப்படுகிறார்கள். சாட்சிகளாக மகாபாரதத்திலுள்ள மற்றபல பாத்திரங்களும் அழைக்கப்படுகிறார்கள்.
அத்துடன் மகாபாரத்தை எழுதிய வியாசமுனியும் அழைக்கப்பட்டு, அவர்மீது மற்றவர்கள் தொடுக்கும் வினாகளுக்குப் பதில்கூறுமாறு சொல்லப்படுகிறார்.
2014லில் வெளிவந்து, இப்பொழுதுதான் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் தொடரின் ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பாகவே இருக்கிறது.
இந்திமொழியில் எடுக்கப்பட்டுள்ள இத்தொடருக்கு ஆங்கில மொழியாக்கமும் கொடுக்கப்படுகிறது. ஆயினும் மொழிபெயர்ப்பு இந்தியின் உணர்வுபூர்வமான உரையாடல்களைச் சரிவர ஆங்கிலத்திற்குக் கொணரவில்லை என்பதே உண்மை.
செந்தமிழில் இலக்கணமுறைப்படி பேசினால் இக்காலத்தில் எப்படிப் பல தமிழர்களால் புரிந்துகொள்ள இயலாதோ, அவ்வாறே, இலக்கண இந்தியை நன்றாகவும், வடமொழியான சங்கத்ததை ஓரளவாவது அறிந்தவர்களால்தான் உரையாடலின் அழுத்தத்தைப் புரிந்துகொள்ள இயலும். இந்தியில் பரவிக் கிடக்கும் உருதுச் சொல்களை அறவே நீக்கி, சங்கதச் சொற்களைக் கையாண்டு உள்ளார்கள். எனக்கு மேற்சொன்ன இரண்டும் தெரிந்திருந்ததால் உரையாடல்களை நன்கு புரிந்தகொள்ளமுடிந்தது, உரையாடல்களை இரசிக்கமுடிந்தது.
மகாபாரதம் அறிந்தவர்களால்தான் — நீதிவிசாரணையைப் போன்று நடக்கும் 26 பகுதிகள் உள்ள இத்தொடரில் என்ன சொல்லப்படுகிறது என்று புரிந்துகொள்ளலாம். இல்லாவிடில், நினைவுமீட்பாகச் [ஃப்ளாஷ்பேக்] சொல்லப்படும் சிற்சில நிகழ்ச்சிகளின்மூலம் மகாபாரதத்தையும், சுமத்தப்படும் குற்றங்களையும், அதற்குச் சொல்லப்படும் பதில்களையும், சித்திரகுப்தனின் தீர்ப்பையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது.
மகாபாரத மூலத்திலிருந்து பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், இத்தொடர் மகாபாரதக் கதாபாத்திரங்களை மனம்போலச் சித்தரிக்காமல், முடிந்த அளவுக்கு நடுநிலைமையிலேயே சித்தரிக்கிறது எனலாம். நீதிமன்ற விவாதங்கள்போல மகாபாரதப் பாத்திரங்கள் விவாதம் செய்வது மிகவும் ரசிக்கும்படித்தான் உள்ளது.
இத்தொடரில் நன்கு பதிலளித்துத் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுதளிப்பவர்கள் தருமபுத்திரரும், கண்ணனும்தான். அத்துடன், வேதவியாசரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கர்ணனை, ‘எனக்கு இது ஏன் நடந்தது? என் தாய் என்னை ஏன் துறந்தாள்? என்னைத் தேரோட்டிமகன் என்று தாழ்த்தினார்களே!’ என்று தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ளாதவனாகவும், துரியோதனனை, ‘நான் கெட்டவன்தான். அனைவரும், எனது சொற்படி நடந்ததால், அவர்கள்மீது எப்பழியையும் சுமத்தக்கூடாது,’ என்று வாதிடுபவனாகவும் காட்டுகிறார்கள்.
துச்சாதனன் தான் சரித்திரத்தில் தனக்கென்று ஒரு தனியிடம் பெறுவதற்காக, துரியனின் தம்பி என்ற பெயர்மட்டுமே தனக்கு இல்லாமலிருப்பதற்காகவே, பாஞ்சாலியைத் தலைமயிரைப் பற்றி இழுத்துவந்ததாக் கூறுகிறான்.
திருதராட்டிரனோ தனக்குக் கண்பார்வை இல்லை என்ற காரணத்தால் தன்னிடமிருந்து அத்தினாபுரப் பேரரசு வஞ்சகமாகப் பாண்டுவிற்குக் கொடுக்கப்பட்டது, முறைப்படி துரியனுக்கே அப்பேரரசு சேர்ந்திருக்கவேண்டும் என்றும், துரியன் தான் சொல்வதைக் கேட்காதபோது தன்னால் எப்படி நீதியை நிலைநாட்ட இயலும் என்று தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை மறுக்கிறான்.
இருப்பினும், இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன். கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன். “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்? பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்? எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.
வழக்கம்போல மகாபாரத மூலத்தில் இல்லாத செய்திகள் நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன.
ஒருசில:
- பலரோடும் போர்புரிந்து வஞ்சகமாக நிராயுதப்பாணியாக்கப்பட்ட அபிமன்யுவை, துரோணர் பின்னாலிருந்து வாளால் வீழ்த்தியதாகக் காட்டுகிறார்கள்; மூலத்தில் களைத்துக் கீழேவீழ்ந்த அபிமன்யுவைத் துச்சாதனினின் மகன் கதைகொண்டு அடித்துக்கொல்வதாக வருகிறது.
- தன்மீது ஆசைப்பட்டதால்தான் குந்தி ஐவரும் தன்னை மணக்கவேண்டும் என்று சொன்னபோது அது அறமில்லை என்று தடுக்காததாகத் திரௌபதி தருமர்மேல் குற்றம்சாட்டுகிறாள்.
ஆனால் உண்மையில் தருமர் அன்னையின் ஆணை முறையற்றது என்றுதான் சொல்லுகிறார். அருச்சுனன்தான் அன்னையின் ஆணைக்கு அடிபணியவேண்டும் என்பதாக மகாபாரதம் சொல்லுகிறது.
- தனது மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்ற செய்தியைப் பீமன் சொல்வதை நம்பால், யுதிட்டிரரிடம் துரோணர் வினவும்போது, “அசுவத்தாமன் இறந்தான், அது ஒரு யானை” என்ற பதில் கிட்டுகிறாது. அது ஒரு யானை என்று சொல்லும்போது கிருஷ்ணன் சங்கை ஊதுவதால், அது துரோணர் காதில் விழவில்லை. உடனே செயலிழந்துவிட்டார். அவரை திருஷ்டத்தும்னன் உடனே வாளால் வெட்டிச் சாய்த்துவிடுகிறான் என்று காட்டுகிறார்கள். ஆனால், அப்படித் தருமர் சொல்லியும், சிறிதுநேரம் கலங்கிய துரோணர் மீண்டும் போரிடுவதாகவும், அவருக்கு திவ்விய அஸ்திரங்கள் பயனற்றுப்போவதாகவும், அவருடன் வீரத்துடன் போர்புரியும் திருஷ்டத்தும்னனாலும் வீழ்த்தவியாலாது போகிறது என்றும், பீமன் துரோணரிடம், ‘மகனே இறந்தபின்பு எதற்காகப் போரிடவேண்டும், யோகத்தின்மூலம் உயிரை விடுங்கள்’ என்று சொல்வதாகவும் வருகிறது. அவரது உயிர் ஒளிமயமாக உடலை விட்டு நீங்குவதை ஒருசிலர் மட்டும் காண்பதாகவும், அதைக் காணவியலாத திருஷ்டத்தும்ன் வாளால் அவரது தலையைக் கொய்வதாகவும் மகாபாரத மூலம் கூறுகிறது.
இப்படிப் பலப்பல வேறுபாடுகளைக் காட்டலாம்.
சித்திரகுப்தனின் தீர்ப்பும் சிற்சில சமயங்கள் முரண்பாடாகவே தெரிகிறது. கடமையைச் செய்ததற்காக சிலருக்கு முக்தியும், தளபதியாகத் தனது கடமையைச் செய்த திருஷ்டத்தும்னனுக்கு முக்தியளிக்க மறுக்கவும் செய்கிறார்.
இக்கால சமத்துவநெறியை வலிந்து திணிக்கும் முயற்சியில் துரோணரையும், பரசுராமரையும்கூட விட்டுவைக்கவில்லை. கர்ணனுக்குப் பிரம்மாஸ்திரம் கற்பிக்க அவன் க்ஷத்திரியனல்ல என்று துரோணர் மறுப்பதையும், பிராமணன் என்று பொய்சொல்லிக் கற்றதால் தக்கசமயத்தில் அந்த அஸ்திரம் பயன்படுத்தும் முறை மறந்துபோகட்டும் என்று பரசுராமர் சபித்ததும் தவறு, கல்விபயிற்றுவதற்கு வர்ணபேதம் காட்டக்கூடாது என்று இருவருக்கும் அறிவுரை வழங்குகிறார், சித்திரகுப்தன்.
வீரம், விவேகம், அரசநீதி அறிந்த தானே அத்தினாபுரப் பேரரசனாகியிருக்கவேண்டும் என்று விதுரர் குறைப்பட்டுக் கொள்வதாகவும் காட்டுகிறார்கள். இது அசட்டுத்தனத்தின் உச்சம் என்றே படுகிறது.
அதற்கு வேதவியாசர் அளிக்கும் பதில் மிகவும் பொருத்தமாக உள்ளது. விதுரர் நெறிமுறைப்படி அரசாண்டாலும், அவருக்குப் பின்னர் இவ்வாறு பெரியதொரு போர் நிகழ்வதை அவரால் தடுக்க இயலாது, எனவே, அவருக்கு அரசு கிடைக்கக்கூடாது என்பதே விதியானது என்று சமாதானம் சொல்கிறார், வியாசர்.
இது அசட்டுத்தனத்தின் உச்சம் என்றால், இதைவிடப் பெரிய அசட்டுத்தனம் ஒன்றும் சித்திரகுப்தன் அவையில் நடந்து விண்ணுக்கும்மேலே செல்கிறது
தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசி அரசன் மகளிர் மூவரையும் கவர்ந்து வரும் பீஷ்மரிடம், தன் மனதை சால்வனுக்குப் பறிகொடுத்துவிட்டதாகச் சொல்லும் அம்பையை அனுப்பிவிடுகிறார் அவர். கவருவதற்குமுன் அம்பை சால்வனை விரும்பது அவருக்குத் தெரியாததால் அவளையும் கவர்ந்துவந்திருந்தார்.
சால்வனோ, “சத்திரியனான நான் தானம் வாங்கமாட்டேன். இன்னொருவரால் கவரப்பட்ட உன்னை நான் ஏற்கமாட்டேன்,” என்று மறுக்கவே, அம்பை பீஷ்மரிடம் சென்று தன்னை மணம்புரியும்படி வற்புறுத்துகிறாள். தன்னுடைய பிரம்மச்சரிய சபதத்தைக் காட்டி, மறுக்கிறார். அவரைப் பழிவாங்கத் தன்னுயிரை ஈந்து துருபதன் மகனான சிகண்டியாகப் பிறக்கிறாள் அம்பை.
ஆயினும், தன்னை ஏற்காததற்காகப் பீஷ்மர்மீது குற்றம் சுமத்துகிறாள் அம்பை. பீஷ்மர் என்னசொல்லியும் அதை ஏற்காத சித்திரகுப்தன், “என்னதன கடுஞ்சபதம் மேற்கொண்டிருந்தாலும், ஒரு அபலையைத் தவிக்கவிடுவது அறமல்ல. எனவே, பீஷ்மர்மீது சுமத்தப்பட்ட இக்குற்றம் குற்றமே!” என்று தீர்ப்பு வழங்குகிறார். அதாவது, எந்தவொரு சபதத்தினால் கங்கைமைந்தன் பீஷ்மர் அனைவரின் மனதிலும் சிறந்துநிற்கிறாரோ, அச்சபதமே பொருளற்றது என்று சொல்லும் தீர்ப்பினை நாம் எப்படித்தான் பொருள்கொள்ளமுடியும்?
பீமன் மந்தபுத்திக்காரன் என்ற துரியோதனனின் கூற்றும் சித்திரகுப்தனால் ஏற்றுகொள்ளப்படுகிறது. அதற்குச் சமாதானமும் கூறுகிறார் கண்ணன்.
மகாபாரத மூலத்திலோ, துரியனைத்தான் மந்தபுத்திக்காரன்.என்று பலமுறை பீஷ்மரும், திருதராட்டிரனும், விதுரனும், உத்யோக பர்வத்தில் வசைபாடுகிறார்கள், பீமனை அல்ல.
மேலும், மாவீரனான அருச்சுனனைச் சரியானமுறையில் பதிலளிக்கவும் திராணியற்றவனாகவும், கர்ணனுடன் ஒப்பிடுகையில் மிகத் திறமைகுறைந்த வில்லாளனாகவுமே காட்டுகிறார்கள்.
இறுதிப்பகுதியில் கண்ணனும் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களுக்குப் பதிலிருக்கிறான். அதை அனைவரும் நேரில் கண்டு, கேட்டு இரசிக்கவேண்டிய ஒன்று.
எனவே, எவ்வளவுதான் விறுவிறுப்பாகக் கொண்டுசெல்லப்பட்டாலும், மூலத்தை இப்படி மாற்றிப் பாண்டவரைத் தாழ்த்திக் காட்டுவதை இக்கால நியதியாக ஆக்குவதும் ஏன் என்று தோன்றாமலில்லை.
இவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும், மகாபாரத மூலத்தை மறந்து, இது ஒரு நீதிமன்ற வழக்குத் தொடர் என்ற நினவுடன் பார்த்தால் வாதங்களை இரசிக்கமுடியும். அவ்வளவு விறுவிறுப்புடன் செல்கிறது இத்தொடர்.
***
இக்காலச் சட்டம் பெரும்பாலும் மேலை நாடுகளின் சட்டங்களின் பிரதிபலிப்பு.நமது தர்மம் என்பது வேறு.பெண்களுக்கு சரிசமமான வாக்குரிமையை சுதந்திரம் அடைந்த போதே வழங்கிய நாடு.நமக்கு நம் தர்மம் பெண்களை உயர்ந்த நிலையில் வைத்து கற்பித்து வந்ததால் தான் ஒரு சிறு எதிர்ப்பு கூட இல்லை.இதுபோல பல விஷயங்கள் இன்றைய மதமாற்ற ஊடகச் சூழ்நிலையில் மறக்கடிக்கப் பட்டு பலவிதங்களில் அர்த்தமற்ற வெற்று மானுட மனதை சமன்படுத்தும் சட்டங்களே பிரதான இடம் பிடித்து உள்ளன.பைபிள் கருக்கலைப்பை எதிர்ப்பதால் கர்ப்பிணிப் பெண்ணின் உயிர் காக்கும் சட்டத் திருத்தம் அனுமதிக்காக காத்திருக்கும் நிலைதான் அங்கு.அதே இங்கென்றால் (அதுவும் இந்துக்களுக்கு எதிரானது) எத்தனை விரைவாக அந்தச் சட்டம் நிறைவேற்றப் படும் என்பதை கற்பனையில் பார்க்க முடிகிறது.