கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது… நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார். ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே ஒரு கட்டத்தில் ஸ்மிருதியுடனான பேட்டி என்பதுபோல் அதைக் கொண்டு செல்லவேண்டிவந்துவிட்டது. கமல் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். வாயைத் திறந்தால் அடுத்ததாக ஃப்ரெஷ்ஷாக ஏதேனும் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால் மிக அழகாகச் சமாளித்தார் என்றே சொல்ல வேண்டும்.

*
நான் இந்தியாவை நேசிக்கிறேன். திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கு எழுந்து நின்றால்தான் தேச பக்தன் என்று பரிசோதனை செய்யாதீர்கள். திரையரங்கில் அது வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் என்றார்..

இது சரியான பதில் போலவே தோன்றியது. ஆனால், பொது இடம் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கச் சொல்வதை தேசபக்திக்கு வைக்கப்படும் சோதனையாக நான் கருதமாட்டேன். அதை என் கடமையாக பெருமிதமாகச் செய்வேன் என்ற ஸ்மிருதியின் பதிலுக்கு கமலிடம் பதில் இல்லை.

நேருகூட ஒருமுறை நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தாராம். அவர் வந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அது வேண்டாம் என்று தடுத்தாராம். கமல் இதைச் சொன்னதும் உங்கள் கூட்டம் அன்றிலிருந்தே தேசிய கீதத்தை இசைப்பதை தடுக்கத்தான் சொல்கிறது. எனவே நீங்களும் அதையே தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்றார். கமல், ”குள்ள அப்பு’ போல் திரு திருவென முழித்தார்.

சட்டென்று வெகுண்டு இப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் நான் எழுந்து நிற்பேன். நான் என் தேசத்தை நேசிக்கிறேன் என்று சொன்னார். அர்னாப் அடுத்த அடியாக, நீங்கள் நல்ல நடிகர்தான். இந்த மேடையை நாடக மேடையாக்கவேண்டாம் என்று சொன்னார்.

(ஸ்மிருதி கூட வேறொரு இடத்தில், ”அடுத்தவர் எழுதிக் கொடுப்பதற்கு வாயசைக்கும் பழக்கமோ டியூஷன் எடுத்துக் கொண்டு வந்து பேச வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை’ என்று சொருகினார். கமல் சார் யாரையோ சொல்வதாக நினைத்துக்கொண்டு மய்யமாகப் புன்னகைத்தார்).

1984- சீக்கியப் படுகொலையில்தண்டிக்கப்பட்ட சஜன் குமார் விஷயத்தில் ஏன் இவ்வளவு பெரிய மயான மவுனம் என்ற கேள்விக்கு நீதி நிலைநாட்டப்பட்டதில் சந்தோஷம்தானென்று மென்று முழுங்கினார்.

*
தேசத்தை நேசிப்பதாகச் சொல்ல்லும் நீங்கள் தேசத்தை உடைப்போம் என்று சொல்லும் இஸ்லாமிய மாவோயிஸ பயங்கரவாதிகளைப் பற்றி ஏன் எதுவும் சொல்வதில்லை;அஃப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களை எதிர்த்து எதுவுமே நீங்கள் ஏன் பேசுவதில்லை என்ற கேள்விக்கும் சரியான பதில் கமலிடம் இல்லை. மாவோயிஸ்டுகள் ஏன் ஆயுதத்தை ஏந்துகிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
என் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்திக் கொண்டிருப்பவரிடம் நான் எப்படி பேசமுடியும்… அவர்களை ஆயுதங்களை கீழே போடச் சொல்லுங்கள் என்று ஸ்ம்ருதி இரானியின் பதிலடிக்கு கமலிடம் எந்த பதிலும் இல்லை.

*
இந்து தீவிரவாதம் இந்து பயங்கரவாதம் என்ற வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டார். டெரரிஸம் என்று சொல்லவில்லை எக்ஸ்ட்ரீமிஸம் என்றுதான் சொன்னேன் என்றார். வேறு மத அடிப்படைவாதச் செயல்பாடுகளை இதுபோல் விமர்சிப்பீர்களா என்றபோது விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிப் பேசியிருப்பதாகச் சொன்னார். ஹேரேம் படத்தில் பிராமண தீவிரவாதம் (?) பற்றியும் பேசியிருப்பதாகச் சொன்னார்.

*
தூத்துக்குடி விவகாரம் பற்றி பேச ஆரம்பித்த கமல்ஹாசனை அந்நிய முதலீட்டை ரகசியமாகப் பெறும் பல்வேறு என்.ஜி.ஓ.க்களின் தூண்டுதலால் தேசத்தின் வளர்ச்சிக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகள் பற்றிக் கேட்டபோது நான் நேர்மையானவன் எனக்கான பணம் நேர் வழியில் வருகிறது என்று மட்டுமே சொல்ல முடிந்தது.

*
சபரி மலை விவகாரம் பற்றிய கேள்விக்கு கடந்த காலத்தில் தலித்துகளை கோவிலுக்குள் நுழைய விடவில்லை. அது மாறியதுபோல் இதுவும் மாறும்; மாற்றப்படவேண்டும் என்றார்.

இஸ்லாமியர்களின் உள் விவகாரமான முத்தலாக் விஷயத்தில் பாஜக தலையிடுவது சரியென்றால் சபரி மலை விஷயத்தில் பிறர் தலையிடுவதும் சரிதானே. உங்கள் தரப்பு என்றால் பாரம்பரியத்தை மதிக்கவேண்டும். எதிர் தரப்பு என்றால் அதில் நீங்கள் தலையிடுவீர்களா என்று அர்னாப் ஸ்ம்ரிதி இரானியிடம் கேட்டார். அடிப்படையில் இது தவறான கேள்வி.

முத்தலாக் விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு குர்ரான் வழங்கியிருக்கும் சொற்ப பாதுகாப்பையும் பறிக்கும் அராஜகத்தைத்தான்பாஜக மாற்ற முன்வந்திருக்கிறது. உடனடியாக மூன்று தலாக் சொன்னால் செல்லாது. அது தண்டிக்கத் தக்கதுஎன்றுதான் சொல்கிறது. குர்ரானும் அதையேதான் சொல்கிறது. பல இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக்கொண்டிருக்கும் விஷயம் இது. ஆனால், சபரி மலை விவகாரத்தில் அந்தக் கோவில் என்ன விதிமுறையை முன்வைக்கிறதோ அதை நீதிமன்றம் அடியோடு மாற்றப் பார்க்கிறது.

தலித்களின் ஆலயப் பிரவேச விஷயத்தில் எந்தவொரு தர்ம சாஸ்திரத்திலும் அவர்களை உள்ளே நுழையக்கூடாதுஎன்று சொல்லவில்லை. எனவே பிற்கால மனிதர்கள் செய்த தவறை நீக்குவதென்பது தர்ம சாஸ்திரத்தை முறையாக அமல்படுத்தும் செயல்தான். சபரி மலையில் அந்தக் கோவிலின் தர்ம சாஸ்திரமே குறிப்பிட்ட வயதுப் பெண்களை வரவேண்டாம் என்று வரையறுத்திருக்கிறது. இது பின்னால் வந்த மனிதர்கள் செய்த தவறு அல்ல. எனவே இந்த ஒப்பீடுகள் சரியல்ல.

ஸ்ம்ருதி இரானி வட நாட்டிலும் அதுபோல் சில கோவில்களைல் பெண்களுக்கு அனுமதி இல்லாமல் இருப்பதையும் ஆண்களுக்கு பல கோவில்களில் நுழைய அனுமதி இல்லாமல் இருப்பதையும் சொல்லிக் காட்டினார். இங்கு நடப்பது சமத்துவ மறுப்பு அல்ல… பாரம்பரியத்துக்கான மரியாதை என்று சொன்னார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கமல் மட்டுமல்ல அர்னாபும் திணறினார்.

*
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறை பற்றிக் கேள்வி எழுந்தபோது ஸ்ம்ருதி இரானி பிரதமரும் பாஜகவின் முக்கிய தலைவருமான நரேந்திர மோதி அதை மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. விசாரணை நடக்கிறது… நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னார்.

*
இந்துக்கள் இந்து அல்லாதவர்கள் என்று நாட்டை பாஜக துண்டாடுவதாக கமல் ஹாசன் சொன்னதை எடுத்து அர்னாபும் ஸ்மிருதி இரானியும் கேட்ட கேள்விகளுக்கு கமலிடம் எந்த பதிலும் இல்லை.

பாரதிய ஜனதா தேசத்தின் வளர்ச்சி என்ற ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்குகிறது. ஒரு சாலை அமைக்கும்போதோ, மின் இணைப்பு கொடுக்கும்போதோ, அணை கட்டும்போதோ இந்துவா முஸ்லீமா என்று பார்த்துச் செயல்படுவதில்லை. அனைவருக்குமான வளர்ச்சியையை முன்வைத்தே நரேந்திர மோதியின் அரசு செயல்படுகிறது. அதில் ஓர் அங்கம் என்பதில் எனக்குப் பெருமையே. காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அமேதி தொகுதியில் அடிப்படை வசதிகள் ஒன்று கூட இல்லை. பாஜகவும் யோகியும் வந்த பின்னர்தான் அவை தலைகாட்டத் தொடங்கியுள்ளன என்றார்.

காங்கிரஸ் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வளர்ச்சிக் கனவுகளை முன்வைக்கிறது. பாஜக அரசு உண்மையான நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்று ஸ்மிருதி சொன்னதும் கமல் என்னிடமும் பல கனவுகள் இருக்கின்றன என்றார். உடனே ஸ்மிருதி, அதுதான் சொல்கிறேனே. உங்கள் குழு கனவு கண்டுகொண்டே இருப்பதில் வல்லவர்கள். நாங்கள் செயல் வீரர்கள் என்று மடக்கினார்.

*
தேசத்தின் வளர்ச்சியா… பிரிவினைவாதமா… குறுகிய அரசியல் கணக்குகளா… உங்களுடைய கருத்துகளுக்கு மாறுபட்ட மாவோயிஸ்ட், தீவிரவாத சக்திகள், ஊழல் சக்திகளுடன் எப்படி உங்களால் கூட்டணி வைக்க முடியும் என்று கமலிடம் கேட்டபோது நான் யாருடனும் கூட்டணி வைப்பதாகச் சொல்லவே இல்லையே என்று பம்மினார்.

*
ஒரே நாடு… ஒரே மொழி… ஒரே மதம் என்று பாஜக சொல்வதைக் கண்டித்து அவர் சொன்னதை மேற்கோள் காட்டிக் கேள்வி கேட்கப்பட்டது. நியூயார்க்கில் யாரோ ஒருவன் கமல ஹாசனை முஸ்லீம் என்று நினைத்து இந்தியா இந்துக்களுக்கே என்று சொன்னதாகச் சொன்னார். தலைவர்கள் டிப்ளமேட்டிக்காக அனைவரையும் அரவணைப்பதாகச் சொல்கிறார்கள். பாஜக தொண்டர்கள் அல்லது அந்த சிந்தனையால் பீடிக்கப்பட்டவர்கள் நாட்டின் பன்முகத்தன்மையை மதிப்பதில்லை என்று நிஜமாகவே உளறினார்.

நியூயார்க்கில் எங்கோ யாரோ சொன்னதை வைத்து பாஜகவைப் பற்றி இப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்களே… அதே பாஜக மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களை நாட்டின் ஜனாதிபதியாகவே ஆக்கியதே அது உங்கள் கண்ணில் படவில்லையா… பாஜகவின் சித்தாந்தம் என்ன என்பதை நியூயார்க் கூவலை வைத்தா முடிவு செய்வது என்ற ஸ்மிருதியின் கேள்விக்கு கமலிடம் எந்த பதிலும் இருந்திருக்கவில்லை.

*
தெளிய வைத்துதெளிய வைத்து அடித்துவிட்டு அர்னாப் கடைசியாக, கமல் சார் தன்னுடைய கடைசிப் படத்தின் ஷூட்டிங்கையே இந்த நிகழ்சிக்காக நிறுத்தி வைத்துவிட்டு வந்திருக்கிறார். அதற்கு அவருக்கு மிகப் பெரிய நன்றி, பாராட்டு என்று தட்டிக்கொடுத்து (ஒழுங்கா ஊர்ப் போய்ச் சேர்ந்து திரையுலக வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போடற மாதிரியே அரசியலுக்கும் பெரிசா எண்ட் கார்டு போட்ரு என்று சொல்லாமல் சொல்லி) அனுப்பினார்.

மொத்தத்தில் எளிதில் மடக்க முடிந்த பல்வேறு ஓட்டைக் கருத்துகளுடன் போலி அறிவுஜீவிப் பிம்பத்துடன் வலம் வந்துகொண்டிருக்கும் கமல் சாரிடம் (இப்போது அபாய அரசியலை முன்னெடுக்கும் அயோக்கியனாகவும் ஆகத் தொடங்கியிருக்கிறார்) தமிழிலும் இதுபோல் பேட்டிகள் எடுக்கவேண்டும். ஒருவகையில் இந்த ஆங்கிலப் பேட்டி கூட கொஞ்சம் மிதமானதுதான். ஆனால், தமிழில் இதுகூடச் சாத்தியமா என்பது சந்தேகமே.

(B.R.மஹாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

3 Replies to “கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை”

  1. I have listened to the dabate from first to last carefully. I did not find Kamal losing the debate. He gave
    short and simple and clear-cut views on all the questions – whether they are left or right, we agree or disagree. She gave long-winding verbose replies and on some questions, Arnob had to remind her to come to the point directly. B R Mahadevan can go back to the video and listen once more.

  2. கமலுக்கு அறிவில்லை என்று நிறுவுவதில்தான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆனந்தம். ஹேராம் படத்தில் ஒரு வசனம் வரும்,”அந்த மிருகத்தை இதுவரையில் நான் பார்த்ததிலை”என்று,அந்தஒரு வசனத்திற்க்கு,கமலை கேவலமாகப் பேசும் அத்தனைப் பேரின் வாழ்க்கையையும் கூட ஈடாக வைக்க முடியாது.

  3. ரொம்பவும் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கியபடியேதான் கட்டுரையை வாசித்தேன்… (முடியல…) கூடவே நடிகர் கவுண்டமணியின் பல வசனங்கள் மனதில் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை. தமிழ் மக்களின் கனவு உலகத்தை திரையில் காட்டும் ஒளி ஓவியங்களின் கனவு மீட்சிகளை மனதில் கொண்டு, பெறக்கூடிய சொற்ப சந்தோஷத்தை வியாபார கலையாக மாற்றவல்ல பலரது கனவுகளும் அவர்களுக்கு சொற்ப சந்தோஷத்தையே தந்திருக்கிறது என்பது பல நட்சத்திரங்களின் வாழ்க்கையாக உள்ளது… விதி யாரை விட்டது…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *