சர்வம் தாளமயம் – திரைப்பார்வை

ராஜீவ் மேனன் 19 வருடங்கள் கழித்து இயக்குனராக இருந்து அண்மையில் வெளிவந்துள்ள படம் சர்வம் தாளமயம் (பிப்ரவரி 2019). அடிப்படையில் இந்தப் படத்தின் கட்டமைப்பு பொதுவான வணிகசினிமா என்ற வகைப்பாட்டில் இருந்தாலும் சமூக, கலாசார ரீதியில்  தமிழ்ச் சூழலில் இது ஒரு முக்கியமான திரைப்படம் என்று கருதுகிறேன். 

சில தலைமுறைகளாக மிருதங்கம் என்ற தோற்கருவியை செய்து கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் மிருதங்க வித்வான்களுக்கு அளித்து வரும் ஒரு பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பீட்டர் ஜான்சன். ஒரு தருணத்தில் மூத்த வித்வான் பாலக்காடு வேம்பு ஐயரின் வாசிப்பால் கவரப்பட்டு  அவரது சீடராகி விடவேண்டும் என்று துடிக்கிறார். பல்வேறு சாத்தியங்கள் வழியாக அவரைப் போன்றவர்கள் நுழைவதற்கே கடினமான கர்நாடக இசை உலகம் என்ற இரும்புக் கோட்டைக்குள் அவர் புகுந்து விடும் சித்திரம் இந்தப் படத்தில் அற்புதமாக எழுந்து வருகிறது. கலைத்தாகம் கொண்ட ஒரு மாணவனின் வேட்கை,  பாரம்பரிய இசைக்கல்விச் சூழலில் குருவுக்கும் அவர்மீது அதீத பக்தியும் சிரத்தையும் கொண்ட சீடனுக்கும் இடையில் மெல்லமெல்ல உருவாகும் அந்தரங்கமான உறவுப் பிணைப்பு,   அந்தச் சூழலின் போட்டி பொறமைகள், மாச்சரியங்கள், சிறுமனங்கள்,  மூத்த கலைஞர்களின் அதீத கலைச்செருக்கும் விசித்திரமான சுபாவங்களும் இழைந்த நடத்தை,  சதிகளாலும் தவறான புரிதல்களாலும் அறுபடும் குரு-சிஷ்ய உறவு –  இவற்றை முதற்பாதியில் திரைப்படம் அற்புதமாக காட்சிப் படுத்தியுள்ளது.  தான் ஒரு மகத்தான கலைஞன் என்பதை வேம்பு ஐயராக இந்தப் படத்தில் நெடுமுடிவேணு இன்னும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.  அவரது ஒவ்வொரு அசைவும், உரையாடலும், உணர்ச்சிகளும், தனது கலைக்குள் தானே கரைந்து போகும் லயம் வெளிப்படும் அந்தத் தருணமும்  அபாரம். இந்தப் படத்திற்கு ஒரு காவியத் தன்மையை அளித்து விடுகிறது அவரது நடிப்பு என்றால் அது மிகையில்லை.  பீட்டர் ஜான்சனாக ஜிவி பிரகாஷ் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.  விஜய் ரசிகனாக விசிலடிக்கும் சராசரி விடலைத் தனத்திலிருந்து அவரது இளமைத் துடிப்பு கலையை நோக்கித் தீவிரமாகத் திரும்பிக் கூர்மை கொள்ளும் அந்த ரசவாதத்தை  இயல்பாகவும் அழுத்தமாகவும் அவரது நடிப்பு வெளிப்படுத்துகிறது.  வேம்பு ஐயரின் சட்டாம்பிள்ளை சீடராக சாதிய மேட்டிமை உணர்வையும்  வில்லத்தனத்தையும் காட்டும் மணியின் பாத்திரத்தில் வினீத் அசத்தியிருக்கிறார். 

குடும்பம், குரு, சூழல் அனைத்துத் தரப்பிலிருந்தும் நிராகரிப்பையும் ஏளனத்தையும் சந்தித்து தன்னை திக்கற்றவனாக உணர்ந்து குறுகும் பீட்டர் அதிலிருந்து வெளிவருவதற்கான ஒரு விசை பட்டும் படாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவரது காதல் (affair?) டிராக்கிலிருந்து வருகிறது.  இதயம் முழுவதும் தாளத்தின் வசப்பட,  அதன் ஒரு மூலையில் பீட்டர் தேக்கிவைத்திருக்கும் நர்ஸ் சாராவின் மீதான பாலியல் ஈர்ப்பு நெகிழ்ச்சியான இரவொன்றில் முகிழ்ந்து சகஜமாக ஒரு கூடலை ஏற்படுத்தி விடுவதை அனாயாசமாக எந்த புரட்சிகர பாவனைகளும் இல்லாமல் காட்டிவிடுகிறார் இயக்குனர். அட, இதற்குத் தானா மணிரத்னம் போன்ற இயக்குனர் இப்படி மண்டையை உடைத்துக் கொள்கிறார் என்று நமக்குப் புன்னகை அரும்புகிறது.   இங்கிருந்து படத்தின் இரண்டாவது பாதி முற்றிலும் வேறு கதியில் பயணிக்கிறது.   “உன்னைச் சுற்றி எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இசை. ஓடிக்கொண்டிருக்கிறது தாளம். நீ கவனிக்கவில்லையா” என்று சாரா சாதாரணமாகச் சொல்லும் வாசகம் பீட்டருக்கு அப்படியே ஒரு தத்துவ உபதேசமாகி விடுகிறது.

அடுத்து நாம் காண்பது பல நிலக்காட்சிகளின் ஊடாக  பீட்டர் தனது பைக்கை உதைத்துக் கொண்டு, அங்கங்கு உள்ள இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டு செல்லும் ஒரு அகில இந்தியப் பயணம்.  ராஜீவ் மேனனின் நேர்த்தியான விளம்பரப் படம் இடையில் திடீரென ஓட ஆரம்பித்து விட்டதோ என்று நினைக்கும் படியாக இந்தப் பயணம் ஒரு பாடலின் வழி காட்டப் படுகிறது.  இந்தக் காலகட்டத்தில்  கலையுலக அரசியல் மற்றும் மணியின் துரோகத்தால் சீடர்களால் கைவிடப் பட்டு நிற்கும் வேம்பு  ஐயர்  பீட்டரைத் திரும்பி அழைக்கிறார்.  இறுதியில் பீட்டர் ஒரு தொலைக்காட்சி  இசைப் போட்டியில் வென்று அதன் வாயிலாகவே தன்னை ஒரு வித்வானாக கர்நாடக இசை உலகில் நிலைநிறுத்திக் கொள்கிறார். 

படத்தின் கடைசி அரை மணி நேரத்திற்கு மேல் டிவி போட்டி காட்சிகளே வருவதால் திரையரங்கே தொலைக்காட்சிப் பெட்டியாக மாறிவிட்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.     திருவனந்தபுரம் போய்க் கொண்டிருந்த ரயில் திடீரென்று தடம் மாறி திருப்பூரில் வந்து நின்றுவிட்டது  போன்ற ஒரு உணர்வை  இது ஏற்படுத்துகிறது.  என்ன செய்வது, வேறு வழியில்லை.  தமிழ் சினிமா என்ற ஊடகத்தின் சாத்தியங்களுக்குள் ஒரு பாரம்பரிய இசைக் கலைஞன் தன் இடத்தைப் பாடுபட்டுத் தேடி அடையும்  கதையை இந்த மாதிரி தான் காட்ட முடியும் என்று தோன்றுகிறது. கச்சேரிகள் மூலம் ஒரு வித்வான் வெளிப்படுத்தும் புதிய பாணிகள், நுட்பங்கள், தனித்துவங்கள் ரசிகர்களால் உணரப்பட்டு பின்பு அவர் ஏற்றுக் கொள்ளப் படுகிறார் என்பதை திரைப் படம் வழியாக பொது பார்வையாளர்களுக்கு கடத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதால் இயக்குனர் இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது தெளிவு.  

கர்நாடக இசையை, அதிலும் குறிப்பாக தாளத்தை மையப் படுத்திய இந்தப் படத்தின் அழகியலுக்கு மிகவும் பொருந்தும் வகையில், அதைக் குலைக்காமல்  ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பு அற்புதமாக, கச்சிதமாக அமைந்துள்ளது. காவியத் தலைவன் படத்தில் நிகழ்ந்தது போன்ற இசைப் பொருத்தமின்மை விபத்துக்கள் நேர்ந்திருந்தால் இந்தப் படமே காலியாகி இருக்கும் என்பதை யோசித்தால் தான் இது எவ்வளவு முக்கியமானது என்று புரியும்.  படம் முழுவதும் இழையோடி வரும்  மிருதங்க இசைக் கோவைகள் அருமையாக, கலாபூர்வமாக உள்ளன.    

வரலாமா உன்னருகில் 

பெறலாமா உன் அருளை

திரும்பாயோ என் திசையில் – உன் மனம்

அசையாதோ என் இசையில்..

கேதாரகௌள ராகத்தில் வரும் இந்தப் பாடல் நெஞ்சை உருக்குகிறது.  வருகலாமோ  ஐயா என்ற நந்தன் சரித்திர கீர்த்தனையை அடியொற்றி ராஜீவ் மேனன் தானே இந்த வரிகளை எழுதியிருக்கிறார். ஸ்ரீராம் பார்த்தசாரதி அருமையாகப் பாடியிருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் வேம்பு ஐயர் கோயிலுக்குள்ளே இருக்க, வெளியே இந்தப்புறம் பீட்டர் நிற்கிறார். நடுவே பெரிதாக நந்தி! பீட்டர் ஜான்சனின் தவிப்பு சிதம்பர தரிசனம் காண விழைந்து நந்தி குறுக்கே மறித்த நந்தனாரின் தவிப்பைப் போன்றது என்றே கூறுவது போல அந்தக் காட்சி உள்ளது.

இந்த வரிகள் உணர்ச்சிகரமாகவும் அதே சமயம் படம் பேச விரும்பும் அரசியலை முன்வைப்பதாகவும் உள்ளன. கர்னாடக இசையில் தற்போது ஒரு சமூகமாக பிராமணர்களின் செல்வாக்கே மேலதிகமாக உள்ளது என்பது ஒரு யதார்த்தம். அதை இந்தப் படமும் பதிவு செய்கிறது. அந்த செல்வாக்கு என்பது அதிகாரத்தாலோ அந்தஸ்தாலோ மட்டும் உருவானதல்ல, அதன்பின் மாபெரும் அர்ப்பணிப்புகளும், தியாகங்களும், கலை மீதான சிரத்தையும் கடும் உழைப்பும் இருக்கின்றன என்பது கடந்த 300 ஆண்டுகால கர்நாடக இசை வரலாற்றை அறிந்தவர்களுக்குப் புரியும். வெறுமனே பிராமண ஆதிக்கம், அடக்குமுறை என்று வீறிடும் டி.எம்.கிருஷ்ணாத் தனமான அரசியல் இதை விளக்க முடியாது. அந்த வகையில் இப்படம் இந்த அரசியலை சம நிலையுடன் அணுகியுள்ளது என்றே சொல்ல முடியும். இந்தப் படத்தில் பீட்டரின் அப்பா ஜான்சன் தனது வாழ்க்கை, துயரம், சமூக நிலை பற்றிப் பேசும் சில குமுறல் வசனங்கள் இயல்பாக அவரது ஆற்றாமையில் வெளிப்படுபவையாக உள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். டி.எம்.கிருஷ்ணா போன்ற திடீர் புரட்சி முற்போக்குகள் சொல்லிக் கொடுத்ததை கூச்சலிடுவதற்கும் இதற்குமான வித்தியாசம் முக்கியமானது. 

வேம்பு ஐயர் அன்றாட நடைமுறையில் ஒரு தீவிர ஆசாரவாத பிராமணர் தான். ஆனால் கலை என்ற தளத்தில் அவரிடம் எந்தவித சாதி சார்ந்த பாரபட்சமோ வெறுப்புணர்வோ இல்லை. பீட்டருக்காக தனது நீண்டநாள் சீடனான மணியை வெளியோ போ என்று சொல்லும் அளவுக்கு அவரது இந்த  குணாதிசயம் உள்ளது. இத்தகைய குணாதிசயம் கற்பனை அல்ல. அந்தக்காலத்து கலைஞர்கள், பண்டிதர்கள், குருமார்கள் சிலரிடம் இது இருந்தது என்பதற்கான பதிவுகள் உள்ளன. கே.ஜே.ஏசுதாஸின் குரு செம்பை வைத்தியநாத பாகவதர் ஒரு வாழ்ந்த உதாரணம். இதை சமன் செய்யவோ என்னவோ, பீட்டரின் சக மாணவனாக அவனுடன் மிகவும் நட்புடன் பழகி கடைசியில் அவனை முதுகில் குத்தத் தயங்காத வேம்பு ஐயரின் என்.ஆர்.ஐ சீடர் பாத்திரத்தை ஒரு பிராமணராக இயக்குனர்  காட்டி இருக்கிறார் என்று தோன்றுகிறது.  

படத்தின் ஆரம்பத்திலேயே மிருதங்க மகாவித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கு நன்றி என்று டைட்டில் வருகிறது. இதன் பின்னணியை ராஜீவ் மேனன் தனது சமீபத்திய நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆமாம், ஜான்சன் மிருதங்கக் கடை உண்மையிலேயே மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் உள்ளது. அதன் உரிமையாளரின் மகன் சிவராமன் சாரிடம் மிருதங்கம் கற்று வருகிறார்! இந்தத் தகவல் தான் இயக்குனர் இந்தப் படத்தை எடுப்பதற்கே உந்துதலாக அமைந்திருக்கிறது. படத்தின் சம்பவங்களும் சரி, சாத்தியங்களும் சரி – சுகமான கற்பனை அல்ல, உண்மையின் வீச்சுகள் அவை என்பது இந்தப் படத்தின் மதிப்பை மேலும் ஒரு படி கூட்டுவதாக உள்ளது. 

பாலக்காடு மணி ஐயருக்கு மிருதங்கம் செய்துகொடுத்தவர் பெயர் பர்லாந்து. அவரும் ஒரு கிறிஸ்தவர். தஞ்சைப் பகுதியில் தோல் இசைக்கருவிகள் செய்யும் சமூகத்தினர் 19ம் நூற்றாண்டின் இடையிலோ அல்லது இறுதியிலோ கூட்டாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. பறையர்களின் சமூக அந்தஸ்து வீழ்ச்சியடைந்ததற்கும் இந்த மதமாற்றங்களுக்கும் தொடர்பு உண்டா என்பது ஆராயப்பட வேண்டியது. ஆனால் மதமாற்றத்திற்குப் பிறகும் அவர்கள் தங்கள் குலத்தொழிலை விடவில்லை என்பது கவனிக்க வேண்டியது. எனவே அதுசார்ந்த திறன்களும் இன்று வரை    மறக்கப் படவில்லை. படத்தில் ஜான்சன் தன் மகன் பீட்டருக்கு மிருதங்கம் செய்வதில் உள்ள நுட்பங்களையும் தோல் சமாசாரங்களையும் விவரிக்கும் காட்சி அசலானது. கிராமத்திற்குப் போய் சொந்த பந்தங்களுடன் கூடி சூலம் வீற்றிருக்கும் குலதெய்வ கோயில்களில் ஜான்சன் குடும்பத்தினர் சகஜமாகக் கும்பிடுவதும் காட்டப்படுகிறது. முதல் காட்சிகளிலேயே பீட்டருக்கு விபூதி பூசுவதில் எந்தத் தயக்கமும் இல்லை என்பதும் இயல்பாக சொல்லப்படுகிறது. இந்தக் கலாசார உணர்வை subtle ஆகக் காண்பித்தது பாராட்டுக்குரியது. 

அங்கங்கு படத்தில் தர்க்கப் பிழைகள் தென்படுகின்றன – டிரம்ஸ் அடிப்பதில் தேர்ச்சியுள்ள, மிருதங்கம் தயாரிக்கும் குடும்ப தொழில் உள்ள பீட்டர் மிருதங்க த்வநியை அப்போது தான் முதன்முறை கேட்பது போன்ற சித்தரிப்பு, சிக்கில் குருசரண் காரில் போகும்போது முகத்துக்கு நேராக வேம்பு ஐயர் போன்ற சீனியர் வித்வானை அவமதிப்பது  – இத்யாதி. ஆயினும் படத்தின் ஜீவன் இவற்றால் குலைந்து விடவில்லை.

கலையுணர்வு, சமூக உணர்வு என்ற இரண்டு கண்ணோட்டத்திலும் ரசித்து, லயித்து விவாதிக்க வேண்டிய ஒரு நல்ல சமகாலத் திரைப்படம் சர்வம் தாளமயம்.

*******

2 Replies to “சர்வம் தாளமயம் – திரைப்பார்வை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *