ராமாயணத்தில் சரணாகதி

(தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதா தேவியார் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 26வது மாநாடு ஓசுரில் 2018 டிசம்பரில் நிகழ்ந்தது. அப்போது வெளியிடப்பட்ட நினைவு மலரில் வந்த கட்டுரை இது).

ராமாயண காவியத்தினுடைய ஆன்மீக சாரமாக விளங்குவது சரணாகதி தத்துவம் தான். இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டவேண்டும் என்று கருதியே கம்பர் தனது முதல் பாடலிலேயே ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று குறிப்பிடுகிறார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும், அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர். அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

*****

வனவாசத்தின் தொடக்கத்தில் ஸ்ரீராமனும் சீதையும் லஷ்மணனும் கங்கைக் கரையில் அமைந்த சிருங்கிபேரபுரம் என்ற் ஊரை அடைகிறார்கள். அங்கு குகனுடைய பேரன்பையும் உபசரிப்பையும் ஏற்று ஓரிரவு தங்கியபின் “கங்கையைக் கடந்து செல்லவேண்டும், படகைக் கொண்டு வருக” என்று ராமர் குகனிடம் கூறுகிறார். குகன் தனது படகோட்டி ஒருவரை அழைக்க, அவன் வருகிறான். கரையோரமாக நங்கூரமிட்டு நிறுத்தியுள்ள படகில் ராமர் ஏறுவதற்கு எத்தனிக்கையில், “ஐயா ஒரு நிமிஷம்” என்று படகோட்டி கைகூப்பிக் கொண்டு முன்னால் வந்து தடுக்கிறான்.

அனைவரும் இதென்னடா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லக்ஷ்மணனுக்குக் கடுங்கோபம், யார் என் அண்ணனைத் தடுப்பது என்று கடுகடுத்த முகத்துடன் முன்னே வருகிறான். ராமர் அவனைக் கையமர்த்துகிறார். படகோட்டியை அருகில் அழைத்து என்னப்பா விஷயம் என்று விசாரிக்கிறார்.

“ஐயா, உங்களுடைய பெருமையைப் பற்றி ரொம்பவே கேள்விப்பட்டிருக்கேன். ஒருமுறை நீங்கள் நடந்துபோகும்போது வழியில் கிடந்த கல் உங்க பாததூளி பட்டு ஒரு அழகிய பெண்ணாக மாறிவிட்டதாம். அவ்வளவு கடினமான கல்லுக்கே அப்படி நேர்ந்தது என்றால், மரத்தால் செய்த என் படகு எப்படி ஆகும் என்று தெரியவில்லையே. அதுவும் ஒரு அழகியாகி விட்டால், என் பிழைப்பு என்ன ஆவது? அதனால் உங்களது பாதங்களை நான் என் கையால் நன்றாகக் கழுவிய பிறகு தான் படகில் ஏற அனுமதியளிக்க முடியும்” என்று பணிவுடன் கூறுகிறான் படகோட்டி.

அவனது கள்ளங்கபடமற்ற வெள்ளந்தியான அன்பைக் கண்டு ஸ்ரீராமரது முகத்தில் மந்தகாசம் தவழ்கிறது. சீதையையும் பின்பு லக்ஷ்மணனையும் பார்த்துப் புன்னகைக்கிறார். “நீ சொல்வது சரிதான்” என்று முன்னே வந்து தனது திருவடிகளை நீட்டுகிறார்.

படகோட்டி தனது தோல்பையிலிருந்து தண்ணீரை எடுத்து ராமரின் பாதங்களின் மீது வார்க்கிறான். அருகில் நிற்கும் அவனது குடும்பத்தாரும் வருகிறார்கள். அளவற்ற அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஸ்ரீராமரின் பாதங்களைத் தொட்டு அலம்பி அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் தலைமீது தெளித்துக் கொள்கிறார்கள்.

துளசிதாசர் இயற்றிய ஸ்ரீராமசரிதமானஸ் என்ற ஹிந்தி மொழி ராமாயணத்தில் இந்தப் பிரசங்கம் வருகிறது. ஸ்ரீராமரின் பாத ஸ்பரிசம் என்ற புண்ணியத்தால் கங்கையாற்றைக் கடக்கப் படகோட்டி வந்த அந்தப் படகோட்டி மட்டுமல்ல, அவனது குடும்பமும், முன்னோர்களும் பின்னோர்களும் எல்லா தலைமுறைகளும் பிறவிப் பெருங்கடலையே கடந்து பகவானுடைய பரமபதத்தை அடைந்தார்கள் என்று கவி மெய்சிலிர்ப்புடன் குறிப்பிடுகிறார்.

திருவடி சூடிய திருமுடி:

சித்திரகூடத்தின் எழிலார்ந்த சூழல். ஸ்ரீராமர் தனது வனவாசத்திலிருந்து உடனே திரும்பிவந்து அயோத்தியின் அரசாட்சியை ஏற்கவேண்டும் என்று பரதனும் அயோத்தி மக்களும் அழுதுபுலம்பிக் கேட்கிறார்கள். தந்தைசொல் காப்பதே தனது சத்தியவிரதம் என்று கூறி ஸ்ரீராமர் மறுத்துவிட, உனது பாதுகையைக் கொடு, அதை சிம்மாசனத்தில் அமர்த்தி அயோத்தியின் ராஜ்யபாரத்தைக் கவனிக்கிறேன் என்று பரதன் கூறுகிறான். ஸ்ரீராமர் தனது பாதுகைகளைத் தருகிறார். அவற்றைக் கிரீடம் சூடுவது போலவே தனது தலைமேல் சூடிக்கொள்கிறான் பரதன் என்கிறார் கம்பர்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.

இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன் முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான். பின்னர், புழுதி படிந்து விளங்குகிற பொன்மயமான திருமேனியுடைய பரதன், மண்ணில் விழுந்து வணங்கி, மீண்டும் அயோத்திக்குச் சென்றான்.

நகரத்திற்குள் நுழையாமல், அதற்கு வெளியே நந்திக்கிராமம் என்ற இடத்தில் தவக்கோலத்தில் இருந்து கொண்டு, கர்மயோகியாக பதினான்கு ஆண்டு காலம் அயோத்தியின் அரசாட்சியைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் பரதன். “இன்று இந்த தேசத்திலிருந்து இந்த மன்னர் வந்திருந்தார், இந்த மாதம் அரசக் கருவூலத்தில் இவ்வளவு வரி சேர்ந்திருக்கிறது.” என்று ஒவ்வொரு நாளும் பாதுகைக்கு முன்பு நின்று அன்றன்று நடக்கும் அரச அலுவல்கள் அனைத்தையும் பரதன் கூறிவந்தான் என்கிறது வால்மீகி ராமாயணம். ஸ்ரீராமரின் பாதுகையை ஒரு பிம்பமாகவோ பிரதிநிதியாகவோ அல்ல, ஸ்ரீராமருடைய ஜீவசக்தியாகவே பரதன் கருதினான் என்பது இதிலிருந்து தெரிகிறது. பகவானுடைய திருவுருவங்களைப் பூஜிக்கும் உண்மையான பக்தர்களுடைய உணர்வு நிலையும் இதே ரீதியில் இருக்கும் என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

*****

ஸ்ரீராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இடையிலான நட்பின் தொடக்கம் ராஜ்யத்தை இழந்துவிட்ட இரு அரசர்களுக்கு இடையே ஏற்படும் அக்னிசாட்சியான உடன்படிக்கை என்பதாக வால்மீகி ராமாயணத்தில் சித்தரிக்கப் படுகிறது. அதன்பிறகு, ஸ்ரீராமரின் மகிமையையும் பராக்கிரமத்தையும் தெரிந்துகொண்ட சுக்கிரீவன் பின்பு ராம சேவகனாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறான். கம்பர் தனது ராமாயணத்தில் சரணாகதித் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இதனை மெலிதாக மாற்றியிருக்கிறார்.

“வலிமையுடைய பெரிய கையை ஓங்கிக் கொண்டு, என் அண்ணன் வாலி, அவனது உடன்பிறந்த தம்பியாகிய என்னை இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும், உலகெங்கும் பின்தொடர்ந்து துரத்தினான். இம்மலையையே பாதுகாப்பாகக் கொண்டு உயிர் பிழைத்தேன். உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான், உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குரிய தருமம்” என்கிறான் சுக்கிரீவன்.

அரண் உடைத்தாக உய்ந்தேன்;
ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்

தாங்குதல் தருமம் என்றான்.

அதை ஏற்ற ஸ்ரீராமர் உடனே அவனுக்கு அபயம் அளிக்கிறார்.

‘மற்று, இனி உரைப்பது என்னே?
வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;

தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;

உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என்

இன் உயிர்த் துணைவன் ‘என்றான்.

“சுக்கிரீவனே! மேலும் இனிச் சொல்ல என்ன இருக்கிறது? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உன்னை வருத்தியவர் என்னை வருத்தியவராவர். தீயவராகவே இருந்தாலும் உன்னோடு நட்புக் கொண்டவர்கள் எனக்கும் நண்பராவர். உன் உறவினர் எனது உறவினராவர். என் அன்புள்ள சுற்றத்தினர் உனக்கும் சுற்றத்தினராவர். நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்” என்கிறார் ஸ்ரீராமர்.

தன்னிடம் அபயம் கேட்டு வந்த சுக்கிரீவனுக்கு இவ்வாறு நிபந்தனையற்ற பாதுகாப்பையும் உறுதியையும் வழங்குவதாக ஸ்ரீராமரின் பெருங்கருணை இருக்கிறது.

*****

Ram accepts Vibhisana

இராவணனுக்கு மீண்டும் மீண்டும் தர்மத்தையும் நன்மையை எடுத்துக் கூறியும், அவன் கேளாமல் விபீஷணனை அச்சுறுத்துகிறான். விபீஷணன் ஆகாச மார்க்கமாக ஸ்ரீராமரது வானரப்படை முகாமிட்டிருக்கும் இடம் நாடிவந்து அபயம் கேட்கிறான். அப்போது அனுமனைத் தவிர்த்து மற்ற படைத்தலைவர்கள் அனைவரும் பகைவனின் தம்பியாகிய இவனுக்கு அடைக்கலம் கொடுப்பது தகாது என்று கூறுகின்றனர். அவர்களை மறுத்து, ஸ்ரீராமர் கூறுகிறார்:

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 18.33)

“ஒரே ஒரு முறை, “நான் உன்னைச் சேர்ந்தவன்” என்று கூறிக்கொண்டு என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் எந்த அச்சமும் நேராதபடி அபயம் அளிக்கிறேன். இதுவே எனது விரதம்”.

இந்த இடத்தில், தேவர்களுக்கு அபயமளித்து உலகின் நன்மைக்காக நஞ்சையே அருந்திய சிவபெருமானை ஸ்ரீராமர் உதாரணமாக் காட்டுவதாக கம்பர் தமது ராமாயணத்தில் அழகுற அமைத்திருக்கிறார்.

ஸ்ரீராமர் கூறுகிறார்:

இடைந்தவர்க்கு, “அபயம் யாம்“ என்று
இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம்
உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,

உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,

அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?

அலைபாயும் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி ஓடி வந்தவர்களும், நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று கெஞ்சியவர்களும் ஆன தேவாசுரர்களுக்காக, அந்த நஞ்சைத் தான் உண்டு, அவர்களைக் காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? தோல்வியால் சிதைந்து உடைந்தவர்களுக்கு உதவவில்லை என்றால், தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டு வந்தவர்களுக்குத் தரவில்லை என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணை காட்டி அருள் செய்யவில்லை என்றால், அறத்தால் என்ன பயன்? ஆண்மையால் என்ன பயன்?

******

ஸ்ரீராமர் சரணமடைந்தவர்களைக் காப்பவர் என்பது உலகப் பிரசித்தம். ஆனால் சீதை இதில் அவரையும் விஞ்சி நிற்கிறாள். அன்னை சீதையின் அந்தப் பெருங்கருணைக்கு ஈடு இணை ஏது?

யுத்தம் முடிந்து விட்டது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்றபடி இராவணன் அழிந்துவிட்டான். அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையிடம் இந்த வெற்றிச்செய்தியைக் கூற வருகிறார் அனுமான். ‘இந்த நல்ல செய்தியைச் சொன்ன உனக்கு என்ன பரிசு தருவேன்? என்னிடம் எதுவும் நல்ல பொருளோ அணிகலனோ இல்லையே’ என்று அந்த நிலையிலும் ஒரு பேரரசிக்கு உரிய மிடுக்குடனும் ஆற்றாமையுடனும் கூறுகிறாள் சீதை.

‘தங்களை இத்தனை காலம் துன்புறுத்திய இந்த அரக்கிகளைக் கொல்ல அனுமதி அளியுங்கள் அதுவே எனக்கு நல்ல பரிசு’ என்கிறார் அனுமான். இந்த அரக்கிகள் சீதையை தினந்தோறும் சித்திரவதை செய்தவர்கள். சகிக்கமுடியாத வசை பாடியவர்கள். சொல்லமுடியாத மனத்துயரத்தை ஏற்படுத்தியவர்கள். முன்பு கடல்கடந்து சீதையைத் தேடிவந்தபோது அதை அனுமானே கண்ணால் பார்த்திருக்கிறார்.

ஆனாலும் அவர்கள் பெண்கள். அதிலும் ஏவலாளர்கள். இதனை எண்ணி மனமிரங்கிய சீதை, “இராவணன் ஏவலால்தான் இவர்கள் அவ்வாறு செய்தார்கள். அவர்களாக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறாள்.

பாபானாம்ʼ வா ஶுபா⁴னாம்ʼ வா
வதா⁴ர்ஹாணாம்ʼ ப்லவங்க³ம |
கார்யம்ʼ கருணம்ʼ ஆர்யேண

ந கஶ்சின் ந அபராத்⁴யதி ||

(வால்மீகி ராமாயணம், யுத்தகாண்டம் 116.49)

“வானரரே, நல்லவர்களானாலும் பொல்லாதவர்களானாலும் வதைக்குரியவர்களானாலும் கூட, அவர்களிடம் சான்றோர்கள் காட்டும் குணம் கருணையே. குற்றம் செய்யாதவர்கள் இந்த உலகில் யாருண்டு? ” என்கிறாள். அனுமன் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று ஆணையிடுகிறாள்.

இவ்வாறு குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை அன்னை சீதை மூலமாக இராமாயணம் நமக்குப் புலப்படுத்துகிறது.

*****

2 Replies to “ராமாயணத்தில் சரணாகதி”

  1. Can we share the contents of this site – stories, anecdotes etc by cut/paste or will have to seek specific permission from the authors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *