அச்சுதனின் அவதாரப் பெருமை – 3

அச்சுதனின் அவதாரப் பெருமை – 1

அச்சுதனின் அவதாரப் பெருமை – 2

(தொடர்ச்சி…)

“யஸ்மாத்3விச்’வம் உதே3தி யேன விவித4ம் ஸஞ்ஜீவ்யதே லீயதே
யத்ராந்தே க33னே க4னா இவ மஹாமாயின்யஸங்கே3ऽத்3வயே |
ஸத்யஜ்ஞான ஸுகா2த்மகே அகி2ல மனோऽவஸ்தா2னுபூ4த்யாத்மனி
ஸ்ரீராமே ரமதாம் மனோ மம ஹேமாம்பு3ஜே ஹம்ஸவத் ||”

maryada-purushottam1இந்த சமஸ்கிருத சுலோகமானது, ஸ்ரீ ராமதீர்த்தர் என்னும் பண்டைய அத்வைதத் துறவியரால் எழுதப்பட்ட “அன்வயார்த்த பிரகாசிகை” என்னும் விளக்க நூலில் உள்ள மங்கள சுலோகமாகும். இச்சுலோகத்தின் பொருள்,

எவரிடத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றுகிறதோ, எவரால் (ஜீவராசிகள்) அனைத்தும் உயிர்வாழ்கின்றனவோ, பிரளயத்தில் எவரிடம் போய்ச் சேருகின்றனவோ, எவரை மேகம் வானத்தைத் தொடாதது போல் (ஸத்வம், ரஜஸ், தமஸ்ஸாகிய முக்குணங்களைக் கொண்ட) மாயை தொடாதோ, மெய்ப்பொருளாய், ஞானமாய், ஆனந்தமாய் விளங்கி, உயிருக்கு உயிராய் இருந்து, பிரமாணங்களால் அறியப்படும் அந்த இராமபிரான்கண் என் மனம் தாமரை மலரை விரும்பும் அன்னப்பறவை போல இன்புறுகிறது

என்பதாகும். ஆக, இராமாவதாரம் என்பது, பிரபஞ்சம் முழுவதையும் படைத்துக் காத்தழிக்கும் முழுமுதற்பொருளின் சற்றும் குறையாத, சற்றும் வேறுபடாத உருவமே என்று இச்சுலோகம் கூறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார் பண்ணிய

“உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”

என்னும் கம்பராமாயணப் பாயிரப் பாடலுடன் ஒப்பிடத்தக்கது.

“இயன்றவெல்லாம் தன்னுள்ளே பயின்று அடக்கி, வேத முதல்வனாய்த் தீதற விளங்கிய திகிரியோனாகிய” [நற்றிணை கடவுள் வாழ்த்து] திருமாலானவன், அனைத்துயிர்களையும் பேணுதற்பொருட்டு இப்பூவுலகில் அவதாரங்களை எடுக்கிறான். ஆதிசங்கர பகவத்பாதரும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் “அமூர்த்திமான், அனேகமூர்த்திஹி” என்ற இடத்திற்கு,

கர்மநிப3ந்த4னா மூர்த்திரஸ்ய ந வித்3யத இதி அமூர்த்திமான் | அவதாரேஷு ஸ்வேச்ச2யா லோகானாம் உபகாரிணீஹி ப3ஹ்வீர்மூர்த்தீர் ப4ஜத இதி அனேகமூர்த்திஹி |

என்று விளக்கியுள்ளார். இவ்வாக்கியங்களின் அர்த்தம் “கர்ம நிபந்தனையால் விளையும் உடல் அவனுக்கு இல்லாமையால் அவன் ‘அமூர்த்திமான்‘ எனப்படுகிறான். உலகத்தில் உள்ளோர்களுக்கு நன்மை செய்தருளும் பொருட்டு தன்னிச்சையாகப் பல உருவங்களை எடுப்பதால் ‘அனேகமூர்த்தி‘ எனப்படுகிறான்.” என்பதாகும். இதுவும் “பிறவாப் பிறப்பு இலை, பிறப்பித்தோர் இலையே” [பரிபாடல் – 3] என்ற சங்கப்புலவர் வாக்குடனும் “பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய்மொழி, 2.9.5] என்ற நம்மாழ்வார் வாக்குடனும் உடன்படுகிறது. இப்படித் தன்னிச்சையாக அவதாரம் எடுக்க, அவனைப் பிறப்பிக்கச் செய்யும் கர்ம நிபந்தனையோ, வேறு எவரோ கிடையாது என்பதே பொருள்.

வடுவூர் ராமர்

நம் நாட்டில் பண்டிதர்கள், ஆச்சாரியார்கள் முதல் பாமரர் வரை அனைவரும் “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனையே விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவனன்றோ! நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்த அயோத்தி ராம் ஜன்ம பூமி இயக்கத்தின் கோஷமே “மரியாதா புருஷோத்தம் ராம்” என்பதாயிற்றே. பரமனாகிய திருமாலுக்கு “புருஷோத்தமன்” என்பது தனிப்பெரும் பெயர். திருமாலே “அதோ அஸ்மி லோகே வேதே3 ச ப்ரதிதஹ புருஷோத்தம” [லோகத்திலும் வேதாந்தத்திலும் நான் “புருஷோத்தமன்” என்று அழைக்கப்படுகிறேன்பகவத்கீதை 15.18 ] என்று செப்பியுள்ளான்.

rama-sita-mayamaan1

கீதைக்கு பாஷ்யம் இட்ட ஆதிசங்கரரும் இவ்விடத்தில் “கவிகள் கூட தமது ஆக்கங்களில் இப்பெயரை இவனுக்கு இட்டு அழைக்கின்றனர்” என்று விளக்கியதற்கு ஏற்ப, சிவபக்தனாகிய காளிதாசனும், இராமனால் மனம் கவரப்பட்டு “ஹரிர்யதை2கஹ் புருஷோத்தமஹ் ஸ்ம்ருதோ” [ஹரி ஒருவனே புருஷோத்தமன் என்று கூறப்படுவதைப் போலரகுவம்சம், 3.49 ] என்று காவியம் படைத்தான். கீதையில் “புருஷோத்தமன்” என்ற பதத்திற்குக் கூறப்படும் அர்த்தம், “சம்சாரமென்னும் ஆலமரத்தின் விதையாகிய மூலப் பிரக்ருதிக்கும் மேலானவன்” என்பது. இந்த உயர்ந்த வேதாந்தத் தத்துவ விளக்கம் ஒரு பக்கம் இருக்க, நாம் அன்றாடம் கூறும் “மனிதர்களில் உத்தமன்” என்ற எளிய விளக்கமும் பொருந்துமாறு தன்னை இராமாவதாரத்தில் எளியவனாக்கிக் கொண்டவனன்றோ அந்த உத்தமன்!

rama-sabari1

ஜகத்துக்கெல்லாம் காரணமாய் உள்ள இறைவன் இப்படித் தன்னை எளியவனாக்கிக் கொண்டு காடுவாழ்மக்கள் தலைவனுடனும், வேட்டுவ மூதாட்டியுடனும், பறவையுடனும், குரங்குடனும் குலாவுவதைச் சரியான கண்ணோட்டத்துடன் காணாமையாலும், அவன் மேன்மையையும் எளிமையையும் ஒருசேரப் புரிந்துக் கொள்ளாமையாலும், அவன் எடுத்த இராமாவதாரம் பற்றிய சில தவறான புரிதல்கள் ஏற்படுகின்றன.

சிலர், “இவன் தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்கிறான்; சீதையைப் பிரிந்துத் துன்புறுகிறான்; அவள் எங்கு இருக்கிறாள் என்று காண முடியாமல் தேடி அலைகிறான்; ஆகையால் இவன் ஒரு மனிதனே” என்ற முடிவிற்கு வருகிறார்கள். இத்தகைய தவறான புரிதல்களைச் சரிசெய்து, இராமாவதாரத்தின் உண்மையான வேதாந்தத் தத்துவ ரீதியில் அமைந்த தாத்பரியத்தை அறிய வேண்டுமானால் சான்றோர்களுடைய வாக்கை ஊன்றுகோலாக எடுக்க வேண்டும். ஒருசில விளக்கங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

rama-hanuman1

“இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தா3ச’ரதி2 ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-ஆவது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். இத்துடன், வேதாந்தத்தின் அடிப்படை நூல்களில் ஒன்றாகிய “உபநிடதங்களின் சாரம்” என்று ஆதிசங்கரர் முதலிய வேதாந்திகளால் போற்றப்பட்ட கீதை கூறும் விளக்கம் ஒன்றை இங்கு நினைவுப் படுத்த வேண்டும் [கீதை 4.14]:

ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம ப2லே ஸ்ப்ருஹா |
இதி மாம் யோ அபி4ஜானந்தி கர்மபி4ர் ந ஸ ப3த்4யதே ||

இச்சுலோகத்தில் கண்ணன், “என்னைக் கன்மங்கள் (வினைகள்) தீண்டுவதில்லை, எனக்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற தனிப்பட்ட சுயநலமான ஆர்வமும் இல்லை. என்னைப்பற்றிய இவ்வுண்மையை எவனொருவன் உள்ளபடி அறிகிறானோ, அவன் கன்மங்களின் பிடியிலிருந்து மீட்கப்படுகிறான்.” என்கிறார். ஆக, சற்றும் கன்ம சம்பந்தமற்ற முழுமுதற் பொருளின் நேரிடையான தோற்றமே இராமன் என்று அறிகிறோம். ஆகையால், “இராவணனைக் கொன்றதால் இராமனுக்கு ஏதேதோ தோஷம் பிடித்துக்கொண்டது”, “இராமன் வாலியை முதுகில் அம்பெய்து வதம் பண்ணியதன் காரணமாக, கிருஷ்ணாவதாரத்தின் இறுதியில் பாதத்தில் அம்பு தைக்கப்பட்டு அவதாரம் முடிகிறது” போன்ற நூதனமான விளக்கங்கள் வேதாந்தத் தத்துவ ரீதியின் முன்பு செல்லாக் காசாகிவிடும். இனி, இராமன் சீதையைப் பிரிந்துத் துன்பப்பட்டது, “நான் என்னை ஒரு மனிதனாகத் தான் எண்ணுகிறேன்” என்று கூறியது முதலான நிகழ்ச்சிகளைப் பற்றிக் காண்போம்.

shankaracharya-with-four-shishyasஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதருக்கு அடுத்ததாக வந்த பண்டைய அத்வைத வேதாந்திகளுள் அவருடைய நேரிடையான சீடர்களாகிய ஸுரேச்வராச்சாரியார், பத்மபாதர், தோடகாச்சாரியார், ஹஸ்தாமலகர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் காலத்திற்கு அடுத்தபடியாக வந்த வேதாந்திகளுள் முதன்மையானவர் “ஸர்வஜ்ஞாத்ம முனி” என்பவர். இவருடைய நூல்களில் தம்மை “தேவேச்வரருடைய சீடர்” என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறார். இவர் காலம் CE 10-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது. ஸர்வஜ்ஞாத்ம முனிகள் எழுதிய அத்வைத விளக்க நூல்களில் ஒன்று “ஸங்க்ஷேப சாரீரகம்“. (“சுருக்கமான பிரம்ம சூத்திர விளக்க நூல்” என்று பொருள்). இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கண்ட சமஸ்கிருத சுலோகத்தைக் கொண்ட “அன்வயார்த்தப் பிரகாசிகை” என்னும் நூலானது, ஸங்க்ஷேப சாரீரகத்திற்கு ஸ்ரீ ராமதீர்த்தர் எழுதிய விளக்கவுரை நூலாகும்.முழுமுதற் பொருளானது, சொரூபத்தாலேயே எல்லா ஆற்றல்களையும் குறைவறப் பெற்ற எல்லாம் அறிந்த இறைவனே என்று வேதமும் பிரம்ம சூத்திரமும் கூறியிருக்க, இராமன் சீதையைப் பிரிந்துத் துன்புற்றது முதலிய நிகழ்ச்சிகள் எப்படிப் பொருந்தும் என்ற கேள்விக்கு ஸ்ரீ ஸர்வஜ்ஞாத்ம முனிகள் ஸாங்க்ஷேப சாரீரகத்தில் விளக்கம் கூறுகிறார் [ஸங்க்ஷேப சாரீரகம், 2.182]:

ஸங்கல்ப பூர்வகம் அபூ4த்3 ரகு4நந்த3னஸ்ய
நாஹம் விஜான இதி கம் சன காலம் ஏதத் |
ப்3ரஹ்மோபதேச’ம் உபலப்4ய நிமித்தமாத்ரம்
தச்ச உத்ஸஸர்ஜ ஸ க்ருதே ஸதி தே3வகார்யே ||

இதன் பொருள்: “தன்னுடைய சுய சங்கல்பத்தால் இரகுநந்தனன் சிறிது காலம் “நான் அறிகிலேன்” என்று (வெளியுலகத்திற்குத்) காட்சியளித்தான். பிரம்மாவின் உபதேசத்தை வெறும் கருவியாகக் கொண்டு, அந்த வேஷத்தையும் தானே கலைத்துக் கொண்டான். இப்படிச் செய்தது (தீய அரக்கர்களைக் கொல்வதாகிய) தேவர்கள் வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக.

மேற்கண்ட இடத்தில் இராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியைக் முனிகள் குறிப்பிடுகிறார். யுத்த காண்டத்தில் இராவணவதம் முடிந்த பின்னர் தேவர்கள் அனைவரும் சீதாப்பிராட்டியின் அக்கினிப் பரீட்சையின்பொழுது அங்கு தோன்றி, “இராம! நீயே பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாய் உளாய்! ஜகன்மாதாவாகிய சீதையை இப்படி நீ சாதாரண மனிதனைப் போல பரீட்சிக்கலாமா?” என்று வினவினர். அப்பொழுது இராமன் அவர்களைக் கண்டு கைகூப்பி,

ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் த3ச’ரதா2த்மஜம் |
ஸோஹம் யஸ்ய யதச்’சாஹம் ப43வம்ஸ்தத்3 ப்3ரவீது மே ||

[இராமாயணம், யுத்த காண்டம், 117.11]

அதாவது, “நான் என்னை தசரதன் புத்திரனாக, ‘இராமன்’ என்னும் பெயரை உடைய மனிதனாகத்தான் கருதுகிறேன். நான் யார், எத்தகையவன் என்று தேவர்களாகிய நீங்களே எனக்கு விளக்குங்கள்.” என்று மொழிந்தான்.

govardhanaநிற்க. “நான் என்னை மனிதனாகத் தான் கருதுகிறேன்” என்று இராமன் கூறியதை மாத்திரம் வைத்துக்கொண்டு “இராமன் ஒரு மனிதனே. கண்ணன் தான் கடவுள் என்று கீதையில் தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறார்” என்று சிலர் சொல்லக்கூடும். உண்மை என்னவென்றால், கண்ணனும் ஓரிடத்தில் இராமனைப் போலத்தான் கூறியுள்ளான் [விஷ்ணு புராணம், 5.13]:

கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து ஆயர்களையும் ஆநிறைகளையும் காத்த நிகழ்ச்சியால் வியந்த ஆயர்குலச் சிறார்கள் கண்ணனைப் பார்த்து, “இதெல்லாம் என்ன விந்தை? உண்மையைக் கூறு கண்ணனே! காளியன் என்ற நாகத்தை வீழ்த்தினாய், பிரலம்பனைக் கொன்றாய், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தாய். இதையெல்லாம் பார்த்தும் நாங்கள் உன்னை ஒரு மனிதன் என்று இனி நம்பப்போவதில்லை. நீ ஒரு தேவனோ, அசுரனோ, யக்ஷனோ, கந்தர்வனோ?” என்றனர். அதற்கு விடையாக பால்ய பருவக் கண்ணன், “ஆயர்களே! நான் உங்களுடைய குலத்திலேயே பிறந்த உங்கள் உறவினன். நானும் உங்களில் ஒருவன் தான். என்னை யக்ஷன் என்றோ, தேவன் என்றோ, ஒதுக்கிவிடாதீர்கள்.” என்று ஆச்சரியமாக பதில் கூறினனன்றோ.

இராமன் தன்னை மனிதனாகக் கூறிக்கொண்டதற்கு விடையாக நான்முகக் கடவுள் இராமனிடம், “நீ உண்மையில் பரமனாகிய ஸ்ரீமந் நாராயணன். சீதாப்பிராட்டி ஜகன்மாதாவாகிய இலக்குமியே” என்று பதில் இறுத்தார். இந்நிகழ்ச்சியை இராமதீர்த்தர் “மநுஷ்யாவதார நாட்யம்”, அதாவது, மனிதனைப் போல நடித்தது என்று குறிப்பிடுகிறார்.

மகாவிஷ்ணுவாகிய, திருமாலாகிய, இராமன் மனிதனாக நடித்ததற்கு இரண்டு காரணங்கள் புராணங்களில் படிக்கப்படுகின்றன:

  1. இராவணன் நான்முகக் கடவுளாகிய பிரம்மாவை உகப்பித்து அவரிடம் ஒரு வரம் வாங்கியிருந்தான். “தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், விலங்குகள், பறவைகள், ஆகிய எந்த ஜந்துவாலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது” என்பதே அவனுடைய வரம். ஆணவம் கண்ணை மறைக்க, “மனிதன்” என்ற ஜந்துவை அவன் மறந்துவிட்டான். இதைக் காரணமாக வைத்தே திருமால் இராமாவதாரத்தில் மனிதனாக நடித்தார். பிரம்ம தேவர் இரணியனுக்கு “மிருகமோ மனிதனோ உன்னைக் கொல்ல முடியாது” என்று வரம் தர, மனித உருவும் அல்லாத, விலங்கு உருவும் அல்லாத நரசிங்கமாக அவதரித்து இரணியனை வதம் செய்ததைப் போலவே.
  2. ஒரு முறை பிருகு முனிவர் கோபத்தால் “நீ மனிதப் பிறவி எடுத்துத் துன்பப்பட வேண்டும்” என்று திருமாலையே சபித்து விட்டார்! இறைவன் பிருகு கூறியதை மனப்பூர்வமாக ஏற்று, “சரி, இவர் வாக்கு பொய்யாகாமல் இருப்பதற்காக நாமே அவதாரம் எடுப்போம்” என்று முடிவு செய்தார். புராணங்களில் உள்ள மற்றொரு விளக்கமாகிய இதையொட்டி, ஸங்க்ஷேப சாரீரகத்திற்கு ‘தத்த்வபோதினி’ என்னும் உரை எழுதிய அத்வைத பண்டிதராகிய நரசிம்மாசிரமர், கீழே நாம் கண்ட இராமாவதார நிகழ்ச்சிக்கு விளக்கத்தை முன்வைக்கிறார்: “பக்தவத்சலனாகிய இறைவன், தன்னுடைய பக்தனாகிய பிருகுவின் சாபத்தைப் பேணுதற்பொருட்டு தானே மனிதனைப் போல அவதாரம் எடுத்து, துன்பப்படுவது போல நடித்தார்” [ப4க்தவத்ஸலஸ்ய ப43வதோ ப4க்த ப்4ருகு சா’ப பரிபாலனாய ஸங்கல்பபூர்வகமேவ] என்று. (அப்பைய தீட்சிதரும் “சித்தாந்த லேச சங்க்ரஹம்” என்னும் அத்வைத விளக்க நூலில் இதே நியாயத்தை முன்வைத்து இராமாவதாரத்தை விளக்கியுள்ளார்).

narasimha2

மேற்கண்ட இரண்டு விளக்கங்களும் முரண்பாடற்றவை. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், நரசிம்மாசிரமர் “பிருகுவின் சாபத்தால் வசப்பட்டு” என்று கூறாமல், “பிருகுவின் சாபத்தைப் பேணுவதற்காக” என்று குறிப்பிட்டிருப்பதை நோக்க வேண்டும். உண்மையில் பெருமாளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை; “நிரங்குச ஸ்வதந்திரன்” என்று பெரியோர்கள் கூறுவர். அத்துடன் “கன்மங்கள் அவனைத் தீண்டுவதில்லை” என்ற பகவத்கீதை வாக்கியத்தையும் நோக்கவேண்டும். இப்படி இருக்க, அவர் ஏன் பிருகுவின் சாபத்தையும், நான்முகன் தந்த வரத்திற்கும் கட்டுப்பட்டது போல நடக்க வேண்டும்? வரத்தைத் திரும்ப வாங்க முடியாதா அவரால்?

“ஏன், எல்லையில்லா ஆற்றல் படைத்தவன் நினைத்த மாத்திரத்தில் இராவணன், கம்சன் முதலான அரக்கர்களைக் கொன்றிருக்கலாமே? அவன் தான் எப்பொழுதும் எங்கும் உள்ளானே? அவதாரமே எடுக்கத் தேவை இல்லையே?” என்ற கேள்விகளும் எழலாம். “அதுவும் அலகிலா விளையாட்டுடையாரின் ஒரு விளையாட்டே” என்று எளிதாக விளக்கிவிடலாம், அதிலும் உண்மை உண்டு. ஆனால், அதையும்விடச் சிறந்த, ஆழமான விளக்கத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் காணலாம்.

(தொடரும்)

20 Replies to “அச்சுதனின் அவதாரப் பெருமை – 3”

  1. ஆசிரியர் குழுவிற்கு நன்றி. ஒரு வேண்டுகோள் –

    When I had submitted the original file, the Sanskrit parts that were transliterated into Tamil had the numbers written in subscript form. Can you change it into subscript/superscript format by enclosing the numbers in the or tags?

  2. Pingback: Indli.com
  3. அது ஏன் திருமாலைக் குறித்த கட்டுரைகள் எழுதுவோர் எல்லாருமே அய்யங்கார் பரிபாசையில் எழுதுகிறார்களோ! கொஞ்சம் பரப்பியல் தமிழில் எழுதினால் உறுத்தாமல் படிக்க இயலுமே.

    அதோடு தேடித்தேடி யாராரோ அத்வைதிகள் சொன்னதையெல்லாம் எடுத்துப் போட்ட கட்டுரை ஆசிரியர் மறந்தும் ராமானுசர், தேசிகர், கூரத்தாழ்வார், நம்மாழ்வார் என்று அச்சுதனே தெய்வம் – தேவு மற்றறியேன் என்று இருந்த பெரியோர்களை மறந்தும் குறிப்பிட வில்லையே… ஏதேனும் காரணம் உண்டா…

  4. அன்புள்ள கீர்த்தி,

    // அது ஏன் திருமாலைக் குறித்த கட்டுரைகள் எழுதுவோர் எல்லாருமே அய்யங்கார் பரிபாசையில் எழுதுகிறார்களோ! கொஞ்சம் பரப்பியல் தமிழில் எழுதினால் உறுத்தாமல் படிக்க இயலுமே. //

    நான் ஐயங்கார் அல்ல. எனினும், எந்த இடத்தில் கடினமாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சிரமத்துக்கு வருந்துகிறேன்.

    // அதோடு தேடித்தேடி யாராரோ அத்வைதிகள் சொன்னதையெல்லாம் எடுத்துப் போட்ட கட்டுரை ஆசிரியர் //

    எனக்கு அத்வைதிகளுடைய படைப்புகளில் பக்தி பற்றிய குறிப்புகளில் மிக்க ஆர்வம் உண்டு. ‘அத்வைதிகள் பக்தியைப் புறம்தள்ளினர், சதா நானே பிரம்மம் என்று கனவு கண்டுக் கொண்டிருந்தனர்’ என்று சில பேர் (அத்வைதிகள் கூட) தவறாகப் புரிந்துக்கொண்டுள்ளனர். அது சரியல்ல என்று காட்டுவதற்கு ஒரு experimental முயற்சி தான் இது. மேலும், இராமானுஜர், கூரத்தாழ்வான், தேசிகர் பற்றி எழுத பலர் உண்டு. ஆனால் ஏனோ இன்று பண்டைய அத்வைதப் பெரியோர்களுடைய உன்னதமான படைப்புகளைப் பற்றி எவரும் எழுதுவதில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்று எனக்குக் கொள்ளை ஆசை.

  5. > எந்த இடத்தில் கடினமாக இருக்கிறது என்று சுட்டிக்
    > காட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

    ஒவ்வொரு வரியிலும் ஏதாவது ஒரு பொருள் செறிந்த ஒரு வார்த்தையை போகிற போக்கில் சொல்லி விட்டு போய் விடுகிறது. அதுவும் வடமொழியாக வேறு இருப்பதால் பொருளை யூகிப்பதும் கடினமாக உள்ளது.
    உதா:
    * சம்சாரமென்னும் ஆலமரத்தின் விதையாகிய மூலப் பிரக்ருதிக்கும் மேலானவன்
    * முழுமுதற் பொருளானது, சொரூபத்தாலேயே எல்லா ஆற்றல்களையும் குறைவறப் பெற்ற எல்லாம் அறிந்த இறைவனே என்று வேதமும் பிரம்ம சூத்திரமும் கூறியிருக்க….
    * “நிரங்குச ஸ்வதந்திரன்” என்று பெரியோர்கள் கூறுவர்..

    போன்ற சில வாக்கியங்கள்.

    //‘அத்வைதிகள் பக்தியைப் புறம்தள்ளினர், சதா நானே பிரம்மம் என்று கனவு கண்டுக் கொண்டிருந்தனர்’ என்று சில பேர் (அத்வைதிகள் கூட) தவறாகப் புரிந்துக்கொண்டுள்ளனர். //

    ஆதி சங்கரர் தொட்டு பல அத்வைதிகளும் பலவகையான ஸ்தோத்திரங்கள் பாடியுள்ளனரே. பிரம்ம சூத்திர உரையிலும் விஷ்ணுவே பிரம்மம் என்ற வாசகங்கள் உண்டு என்று படித்திருக்கிறேன்.

  6. அன்புள்ள கீர்த்தி,

    // ஒவ்வொரு வரியிலும் ஏதாவது ஒரு பொருள் செறிந்த ஒரு வார்த்தையை போகிற போக்கில் சொல்லி விட்டு போய் விடுகிறது. அதுவும் வடமொழியாக வேறு இருப்பதால் பொருளை யூகிப்பதும் கடினமாக உள்ளது.//

    இதற்கு வருந்துகிறேன். பின்வரும் பாகங்களில் சமஸ்கிருத வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்த முயலுகிறேன். இப்போதைக்கு நீங்கள் கேட்டவற்றிற்கு எனக்குத் தெரிந்த விளக்கங்கள்:

    // சம்சாரமென்னும் ஆலமரத்தின் விதையாகிய மூலப் பிரக்ருதிக்கும் மேலானவன் //

    இதற்கென்ன பொருள் என்றால், நாம் பிறப்பு, இறப்பு, கர்மம் என்னும் சூழலில் சிக்கி பிரபந்சமாகிய அண்டத்தில் தவிக்கிறோம். கர்ம விளைவுகளை அனுபவிக்கும் ஜீவர்கள் எல்லாம் இந்த பிரம்மாண்டங்களுக்குள்ளே கட்டுப்பட்டவர்கள். இந்த பிரம்மாண்டத்திற்கான காரணப்பொருள் “மூல பிரக்ருதி” எனப்படும். பிரபந்சம் சிருஷ்டி காலத்திற்கு முன்பு இந்த மூல பிரக்ருதி என்னும் ஸூட்சும நிலையில் இருக்கும். அதுவே சிருஷ்டிக்காலத்தில் விரிவடைந்து பிரபந்சமாகிறது. புருஷோத்தமன் இந்த மூலப் பிரக்ருதிக்கும் அப்பாற்பட்டவன், அதாவது அதற்குள் சிக்கி நம்மைப் போல தவிக்காதவன். அவனை “நித்ய-சுத்த-புத்த-முக்த ஆத்மா” என்று சங்கரர் கீதா பாஷ்ய அவதாரிகையில் கூறுகிறார்.

    // * முழுமுதற் பொருளானது, சொரூபத்தாலேயே எல்லா ஆற்றல்களையும் குறைவறப் பெற்ற எல்லாம் அறிந்த இறைவனே என்று வேதமும் பிரம்ம சூத்திரமும் கூறியிருக்க…. //

    சொரூபத்தாலேயே – காலம், இடம், சூழ்நிலை, இன்னொருவருடைய தயை முதலிய வரையறைகள் இல்லாத என்று பொருள்.

    // * “நிரங்குச ஸ்வதந்திரன்” என்று பெரியோர்கள் கூறுவர்.. //

    தனக்கென்று எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி இயங்குபவன் என்று பொருள்.

  7. // ஆதி சங்கரர் தொட்டு பல அத்வைதிகளும் பலவகையான ஸ்தோத்திரங்கள் பாடியுள்ளனரே. பிரம்ம சூத்திர உரையிலும் விஷ்ணுவே பிரம்மம் என்ற வாசகங்கள் உண்டு என்று படித்திருக்கிறேன். //

    ஸ்தோத்திரங்கள் பலவற்றைப் பலர் எழுதியிருக்கலாம். ஆனால், பக்தி என்பது ஞான ரூபமானது. ஸ்ரீமந் நாராயணனைப் பற்றி தத்துவ ரீதியாக — ஆதி சங்கரராகவே இருக்கட்டும், அவருக்குப் பின் வந்த ஆச்சாரியார்களாக இருக்கட்டும் — பல அத்வைதிகள் தங்களுடைய பாஷ்ய நூல்களில் விளக்கியுள்ளனர். விஷ்ணு பக்தர்களுக்கும், பொதுவாக எல்லா இந்துக்களுக்கும் இவ்விஷயங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியே இவற்றை எழுதுகிறேன்.

  8. “நான் என்னை மனிதனாகத் தான் கருதுகிறேன்” என்று இராமன் கூறியதை மாத்திரம் வைத்துக்கொண்டு “இராமன் ஒரு மனிதனே. கண்ணன் தான் கடவுள் என்று கீதையில் தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறார்” என்று சிலர் சொல்லக்கூடும். உண்மை என்னவென்றால், கண்ணனும் ஓரிடத்தில் இராமனைப் போலத்தான் கூறியுள்ளான் – கட்டுரை ஆசிரியர்//

    ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியைச் சாமானிய மனிதனாக எவர்தான் எண்ணுவர்? அவரும் நாம் வழிபடும் தெய்வமே அல்லவா? ஆனால் மானிடப் பிறவி எடுத்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்று அறிவுறுத்தவே மனிதனாக அவதாரம் செய்தவராதலால் மர்யாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமனாக அவர் விளங்குகிறார். கண்ணபிரானோ குழந்தைப் ப்ராய முதலே சமயம் வாய்க்கிற பொழுதெல்லாம் தன்னை இறைவன் என அடையாளம் காட்டி வருகிறார். எவரும் தமது அசாதாரண ஆற்றல்கண்டு திகைத்து விலகி நின்றுவிடலாகாது என்பதாலேயே தாமும் அவர்களில் ஒருவன் என உறுதியளிக்கிறார். மேலும் மனிதர்களிடையே தானும் மனிதன் எனக் கலந்துறவாடுவதில் இறைவனுக்குப் பெருவிருப்பம் உண்டல்லவா? அர்ஜுனனிடம் கண்ணன் நடந்துகொண்டவிதமும் சுந்தரரிடம் சிவபிரான் கொண்ட உறவும் ஒரு நண்பனைப் போன்றதே அல்லவா? வேறு எந்த அவதாரங்களுக்கிடையிலும் இல்லாத ஒருமை ஸ்ரீ ராமாவதாரத்திற்கும் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்திற்கும் இருப்பதால்தான் ராம க்ருஷ்ணன் என்று சேர்த்தே அனுபவிக்கிற வழக்கம் உள்ளது அல்லவா? துதிக்கையிலும் இருவரையும், ஹரே ராமா, ஹரே க்ருஷ்ணா என்று சேர்த்தேதான் துதிக்கிறோம். ஸ்ரீ ராமனை இறைவன் மானிட அவதாரம் எடுத்த்து மானிடனாய் வாழ்ந்து காட்டியவன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணனை இறைவன் மனித ரூபமெடுத்து இறைச் சக்தியைத் தேவைப்படுகிறபோதெல்லாம் வெளிப்படுத்திக் காத்தவன் என்றும் கொளவ்து சிறப்பாக இருக்கும். இரண்டுக்கும் மயிரிழை வேறுபாடு உள்ளதுதானே! இருவகைத் தோற்றங்களுக்கும் மிகவும் அவசியமும் உண்டு நமக்கு!
    -மலர்மன்னன்

  9. விளக்கங்களுக்கு மிக்க நன்றி. எனக்கு மேலும் சில சந்தேகங்கள் உண்டு. பிறகு ஒரு சமயம் கேட்டு தெரிந்து கொள்கிறேன். அவசியம் இக்கட்டுரையை தொடருங்கள்.

  10. மதிப்பிற்குரிய ஸ்ரீ மலர்மன்னன் ஐயா,

    அனுபவத்திலும் தொண்டிலும் நீங்கள் என்னை விட முதியவர். அதற்கு முதற்கண் வணக்கங்கள்.

    // ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியைச் சாமானிய மனிதனாக எவர்தான் எண்ணுவர்?//

    இருக்கின்றனர்… “இராமன் ஒரு அரசன், வெறும் காவியத்தின் கதாநாயகன்; பிற்காலத்தில் தான் அவன் கடவுளாகப் பரிணமித்தான்” என்ற நிலை சிலரிடம், அதுவும் இராமனை வணங்குபவர்களிடம் உள்ளது. நான் என்ன கூற வருவதென்றால் — வால்மிகியோ, காளிதாசனோ, கம்பனோ, அத்வைத/விசிஷ்டாத்வைத/த்வைத ஆச்சாரியார்களோ இதற்குச் சற்றும் இடம் கொடுக்கவில்லை என்பதைத் தான்.

    நூற்றுக்கணக்கான வாசகர்கள் படிக்கும் ஒரு இணைய தளத்தில், “இராமன் வாலியை அம்பெய்திக் கொன்றதன் ‘பாபத்தால்’, அதன் விளைவாக ‘அடுத்த ஜன்மத்தில்’ கிருஷ்ண பரமாத்மாவைக் காலில் ஒரு வேடன் அம்பை அம்பெய்தி அவதாரம் முடிகிறது” என்ற அபத்த விளக்கத்தை யாரோ எழுதியிருந்தார். அதைக் கண்டிக்கக் கூட ஆளில்லை. பாப-புண்யங்களுக்கும் மேலானவனாகிய,
    அனைவர்க்கும் தீன சரண்யனாய் இருப்பவனை இப்படியும் சிலர் புரிந்துக் கொள்கின்றனர்! இந்தக் கொந்தளிப்பினால் தான் சற்று தர்க்க ரீதியில் கட்டுரையைத் திசைதிருப்பினேன்.

    // மேலும் மனிதர்களிடையே தானும் மனிதன் எனக் கலந்துறவாடுவதில் இறைவனுக்குப் பெருவிருப்பம் உண்டல்லவா? //

    கண்டிப்பாக, ஐயமில்லை. வைணவ ஆச்சாரியார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அவனுக்குப் பரமபதத்தில் முக்தர்களுடன் இருப்பதை விட, சம்சாரத்தில் இன்னும் தவித்துக் கொண்டிருக்கும் ஜீவர்களுடன் இருப்பதைத் தான் விரும்புகிறான் என்று. எப்படி ஒரு தாய் ஆரோக்யமாக இருக்கும் பிள்ளையை விட, நோய்வாய்ப்பட்டுத் தவிக்கும் பிள்ளையிடம் தான் அன்பு அதிகமோ அதைப் போல.

    // வேறு எந்த அவதாரங்களுக்கிடையிலும் இல்லாத ஒருமை ஸ்ரீ ராமாவதாரத்திற்கும் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்திற்கும் இருப்பதால்தான் ராம க்ருஷ்ணன் என்று சேர்த்தே அனுபவிக்கிற வழக்கம் உள்ளது அல்லவா? //

    இளங்கோவடிகள் கூட இராம-கிருஷ்ணானுபவத்தில் இறங்கி “வடவரையை மத்தாக்கி” என்ற பாடலை இயற்றியிருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

    // ஸ்ரீ ராமனை இறைவன் மானிட அவதாரம் எடுத்த்து மானிடனாய் வாழ்ந்து காட்டியவன் என்றும் ஸ்ரீ க்ருஷ்ணனை இறைவன் மனித ரூபமெடுத்து இறைச் சக்தியைத் தேவைப்படுகிறபோதெல்லாம் வெளிப்படுத்திக் காத்தவன் என்றும் கொளவ்து சிறப்பாக இருக்கும். //

    ஸ்ரீ ராமனை “மானிட அவதாரம் எடுத்து” என்றும், கிருஷ்ணனை “மனித ரூபமெடுத்து” என்றும் சொல்வதில் ஏதேனும் வித்தியாசத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆச்சாரியார்கள் இசைந்தது என்ன என்று கேட்டால், அவர்கள் சொரூபத்தில் இருவர்க்கும் வித்தியாசம் இல்லை, ரூபத்திலும் லீலைகளிலும் தான் வித்தியாசம் என்கின்றனர். அதாவது, இருவரும் நித்யமாய், பரிபூரண ஆற்றல்களோடும் ஞானத்தோடும் கூடிய பரமாத்மா தான் என்கின்றனர். இக்கருத்தை அவர்கள் நூலிலிருந்து எடுத்துக் காட்டினேன். அவ்வளவே.

    பிருகு சாபம் பற்றிய கருத்தையும் நரசிம்மசிரமர் என்பவர் விளக்கியதைச் சுட்டியிருந்தேன். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    மற்றபடி, எது அவரவர் மனதிற்குச் சிறப்பாக இருக்கும் என்பது அவரவர் ருசிக்கு ஏற்றபடி மாறும் என்று நினைக்கிறேன்.

  11. அன்பு ஆசிரியருக்கு .
    வணக்கம் . ஒரு அருமையான கட்டுரையை இப்படி பாதியிலேயே நிறுத்திவிட்டீர்களே . இதன் அடுத்த பாகம் எப்போது வரும் ?ஆவலுடன் காத்திருக்கிறேன் . ஆவன செய்யவும் ஆசிரியரே … நன்றி

  12. //ஸ்ரீ ராமனை “மானிட அவதாரம் எடுத்து” என்றும், கிருஷ்ணனை “மனித ரூபமெடுத்து” என்றும் சொல்வதில் ஏதேனும் வித்தியாசத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்று தெரியவில்லை-ஸ்ரீ கந்தர்வன்//

    ராமபிரான் தனது அவதார நிறைவுவரை மானிட வடிவிலேயே இருந்தான். கண்ணபிரானோ தனது விசுவரூப சுயரூபத்தை அவசியம் நேருகையில் எல்லாம் வெளிப்படுத்தினான். எனவேதான் அவதாரம் எடுத்து என்று ராமபிரானையும் மனித ரூபமெடுத்து என்று கண்ணபிரானையும் குறிப்பிட்டேன்.

    ராமனையும் க்ருஷ்ணனையும் வெறும் மனிதர்கள் என்பதோடு மட்டுமின்றி இருவரையும்பற்றி இழிவாகப் பேசுபவர்களும் உள்ளனர் என்பதை அறியாதவனா நான்? நீங்கள் இன்சுவை விருந்துபடைத்திருக்கையில் அதனை அனுபவித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் அருவருப்பான விஷயங்களையெல்லாம் நினைவில் வைத்து சூழலைக் கெடுக்க வேண்டுமா?
    -மலர்மன்னன்

  13. மதிப்பிற்குரிய மலர்மன்னன் ஐயா,

    //
    ராமனையும் க்ருஷ்ணனையும் வெறும் மனிதர்கள் என்பதோடு மட்டுமின்றி இருவரையும்பற்றி இழிவாகப் பேசுபவர்களும் உள்ளனர் என்பதை அறியாதவனா நான்? நீங்கள் இன்சுவை விருந்துபடைத்திருக்கையில் அதனை அனுபவித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில் அருவருப்பான விஷயங்களையெல்லாம் நினைவில் வைத்து சூழலைக் கெடுக்க வேண்டுமா?
    //

    இதை முன்வைத்ததற்கு மன்னிக்கவும். எனினும், ராம-கிருஷ்ண பக்தர்கள் கொஞ்சம் தர்க்க ரீதியில் மாற்று வாதத்தை அணுக வேண்டுமென்றே கருதுகிறேன். திக காரர்களும் தமிழ்நாட்டு முதல்வரும் எப்படியோ போகட்டும். ஆனால், ராமனையும் கண்ணனையும் வணங்குபவர்களில் கூட சிலர் இப்படித் தவறான புத்தி பண்ணுகிறார்கள். அத்தகைய வாதங்கள் சான்றோர் வாக்கிற்கு எதிரானது என்பதற்காகத்தான் கொஞ்சம் வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போலச் சொன்னேன். இதில் உங்கள் ராம-கிருஷ்ண அனுபவம் அடிபட்டால் அதற்கு மிகவும் வருந்துகிறேன்.

  14. Sri Malarmannan Sir’s definition of the Avatars of Sri Rama and Sri Krishna is simply superb. We think nobody has given this much of clarity on the nature of Sri Rama and Sri Krishna that is Sri Rama had been alaways in the form of a humanbeing till the end of His Avatar and Sri Krishna showing His Visvarupa during the time of His Avatar to reveal who He is. We have never heard of this kind of explanation before. Our sincere gratitude to SriMalarmannan Sir for educating us without expecting any Dakshina!
    Senthilkumar.

  15. இராம அவதாரத்திலும் கூட ராமனிடமிருந்து அமாநுஷ்ய்ம் வெளிப்படும் – இதை ராமாநுஜரின் சிஷ்யரான கூரத்தாழ்வான் அதி மாநுஷ்ய ஸ்தவத்தில் படம் பிடித்து காட்டுகிறார்

  16. //இராம அவதாரத்திலும் கூட ராமனிடமிருந்து அமாநுஷ்ய்ம் வெளிப்படும் – இதை ராமாநுஜரின் சிஷ்யரான கூரத்தாழ்வான் அதி மாநுஷ்ய ஸ்தவத்தில் படம் பிடித்து காட்டுகிறார்- ஸ்ரீ சாரங்//

    இது பற்றிச் சிறிது விரிவாக எழுதினால் விளக்கம் பெறமுடியும். தற்சமயம் நான் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் விவரம் கண்டறிய இயலவில்லை.
    -மலர்மன்னன்

  17. மலர்மன்னன் அய்யா

    ஜடாயு மோக்ஷத்தை அதிசயித்து கூருகிறார் கூரத்தாழ்வான்

    லக்ஷ்மனனை பிரிந்ததும் ராமர் புலம்புவதும் கூட சாக்ஷாத் ஹரீயின் பக்தனை பிரிய இயலாத பரமாதம குணம் தான்

    இதை போல பல நிகழ்வுகள் ராமாயனத்தில் காணலாம்

    பற்றி விரிவாக பிறகு எழுதுகிறென்

  18. //ஜடாயு மோக்ஷத்தை அதிசயித்து கூருகிறார் கூரத்தாழ்வான்

    லக்ஷ்மனனை பிரிந்ததும் ராமர் புலம்புவதும் கூட சாக்ஷாத் ஹரீயின் பக்தனை பிரிய இயலாத பரமாதம குணம் தான்-ஸ்ரீ சாரங்//

    என்ன இருந்தாலும் ஸ்ரீ ராமபிரானிடம் இறைச் சக்தியையும் இறைத் தன்மையினையும் கண்டணர்ந்து அனுபவிப்பதற்கும் ஸ்ரீ கிருஷ்ணனே தான் யார் என்று பிரகடனம் செய்தும், பகிரங்கமாக வெளிப்படுத்தியும் நம்மை மெய்சிலிர்க்க வைப்பதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா? எனினும் இவ்வாறு தர்க்கித்துக் கொண்டிராமல் ராமக்ருஷ்ண அனுபவத்தில் தோய்நதுகிடப்பதே பரம சுகம் அல்லவா? இவ்வாறான விவாதம் நீடித்தால் அது ராமன் பெரியவனா க்ருஷ்ணன் பெரியவனா என்கிற பேதமையில் போய் முடிந்துவிடக் கூடும் அல்லவா?
    -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *