ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1

இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.

1 – மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மேலைநாடுகள் ஒன்றில், ஓர் ஆஸ்பத்திரிக்குள் சென்று கிட்டத்தட்ட தங்களது வாழ்நாள் முடிவை எட்டிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குத் தரிசனம் தந்து, அவர்கள் அருகில் சிறிது நேரம் நின்றுவிட்டுச் செல்லும் ஒரு குதிரை பற்றிய “வாட்ஸ்-அப்” தரவை ஒரு முறை நான் காண நேர்ந்தது. அந்தத் தரவை நான் பலருக்கும் அனுப்பிவைத்தேன். அதைப் பெற்ற சிலர், ஆறறிவுள்ள நமக்கு ஐந்தறிவுள்ள ஜீவன்களைக் காட்டிலும் மேலான பரிவு வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அப்போது, எனக்கு இராமாயணக் காலத்தில் இருந்தே ஒரு குதிரையைக் கொண்டு செய்யப்பட்டு வரும் அசுவமேத யாகம் பற்றிப் படித்த ஞாபகம் வந்தது. அதனால் உந்தப்பட்ட எனக்கு, இயற்கையில் நடப்பதைக் கவனித்து அதன் வழியில் “ரிக் வேதம்” நமக்கு எடுத்துரைப்பது பற்றி எழுதலாம் என்று தோன்றியது. இவ்வாறாக ஒரு குதிரையைப் பற்றித் தொடர்ந்த சில பதிவுகளுக்குப் பின் எழுதப்பட்ட நூல்தான் இது.


ஒருவர்:
பரிவு காட்டுவதில் பசு, பூனை, குதிரை, யானை போன்ற விலங்குகளும் இவற்றிலடக்கம். தமது எஜமானர்கள் மரித்த காலங்களில் துக்கம் தாளாமல் சாப்பிடக்கூட மறுப்பவை அவை.

மகரந்தச் சேர்க்கைக்குப் பல வழிகளில் துணை செய்யும் வேலைக்காரத் தேனீக்கள் அந்த வேலை செய்யும்போதே இறந்துவிடுகின்றனவாம்.

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்…?? நம்மூர் ஆறறிவு ஜீவிகள் சிலரது அழுக்கேறிய இதயங்களை முதலில் கழுவவாவது அவை பயன்படட்டும்.


நான்:
அஞ்சு அறிவு என்று நாம் பொதுவாகக் கூறினாலும், அது சரியா என்பது பற்றி எனக்குச் சந்தேகம் நிறையவே உண்டு. 1950-க்கு முன்னால், ரமண மகரிஷி காலத்தில் அணிலில் இருந்து சிறுத்தை வரை பல மிருகங்கள் அவர் முன்னால் சகஜமாக வந்து போனது பற்றியும், ஒருவர் கடிந்து கொண்டதால் நாய் ஒன்று அருகாமையில் இருந்த குளத்தில் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. அதேபோல, ரமணாஸ்ரமத்தில் சுமார் பத்து வருடங்கள் முன்னால் நடந்த ஒரு நிகழ்வு நம்மை நெகிழ வைக்கும். நீண்ட கால ரமண பக்தரான இராமசாமிப் பிள்ளை என்பவர் காலமானவுடன் எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று அவர் சடலத்தின் அருகே வந்து உட்கார்ந்தது. தன் முகத்தைத் தொங்கப்போட்டு உட்கார்ந்த அது எவரையும் துன்புறுத்தவில்லை. எவர் விரட்டியும் அங்கிருந்து நகரவும் இல்லை. சடலத்தைத் தூக்கும் முன்னால் அங்கிருந்தவர்கள் ரமணர் இயற்றிய “அருணாசல சிவ” பாடல் முழுமையும் பாடி முடித்ததும், தானே அங்கிருந்து வெளியேறி மலைப் பக்கம் சென்று மறைந்தது. இவ்வாறான வெளிப்பாடுகள் நமது அறிவுக்கு எட்டாதவைகளாகவே இருக்கின்றன.


ஒருவர்:
செஞ்சிக்குப் போகும் வழியில், மதிய உணவுக்காகக் காரை நிறுத்தியபோதுதான், அவரைக் கண்டேன், அந்தப் பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். கையில் சிக்னல் ஸ்டிக் லைட்டும், வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அந்தக் கடைக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தார்…

வயோதிகம் காரணமாகவோ, நின்றுகொண்டே இருப்பதன் காரணமாகவோ, கால் வலி தாளாமல், கால் மாற்றி மாற்றித் தவித்துக் கொண்டே இருந்தார்…உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. நாச்சியாவோடு சில செல்பிகள் எடுத்துக் கொண்டே மீண்டும் கவனித்தபோதும், அவர் அமரவே இல்லை.

இது போன்ற எளிய மனிதர்களைக் கண்டால், என்னால் இயன்றதைத் தருவது என் வழக்கம். அவர் அருகே சென்று, அவரது தோள் தொட்டுத் திருப்பி, பெரும் மதிப்புள்ள ஒற்றைத் தாளாய் பண நோட்டு ஒன்றை நீட்டினேன். பணத்தைக் கவனித்தவர், மெல்ல புன்னகைத்து, ” வேணாம் சார் ” என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஏனெனில், நான் கொடுத்த பணத்தின் மதிப்பு அப்படி. எப்படியும் அது, அவரது ஒருநாள் சம்பள மதிப்பிருக்கும்.

”ஏன் ” எனக் கேட்டேன்.

“அவங்க கொடுத்திட்டாங்க “

” யாரு “

திரும்பி, கார் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியைக் காண்பித்தார். நிச்சயமாய் நான் கொடுத்ததைப் போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை. பணம் கண்டு பேராசைப்படாத அவரின் உண்மையும், உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்குப் பிடித்திருந்தது… மெல்ல பேச்சு கொடுத்தேன்.

” பேரென்னங்க ஐயா “

“முருகேசனுங்க “

” ஊருல என்ன வேல “

” விவசாயமுங்க “

” எத்தன வருசமா இந்த வேல செய்றீங்க “

” நாலு வருசமா செய்றேங்க “

” ஏன் விவசாயத்த விட்டீங்க “

மெல்ல மௌனமானார். தொண்டை அடைத்த துக்கத்தை, மெல்ல முழுங்கினார்.

கம்மிய குரலோடு பேசத் துவங்கினார். ஆனால் என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும், அவரின் முழுகவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே இருந்தது.

” எனக்குத் தஞ்சாவூர் பக்கம் கிராமமுங்க; ஒரு பொண்ணு, ஒரு பையன். விவசாயந்தான் பொழப்பே நமக்கு. ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். கடன உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணும் விளங்கலே, கடவுள் கண்ணே தொறக்கல.

இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்த வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு, மிச்சமீதிய வச்சு, பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணேன்.

பையன் இருக்கானே, அவன படிக்க வைக்கணுமே, அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்து வேலைக்கு சேர்ந்தேன். மூணு வேளை சாப்பாடு. தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம்.
இந்த வேலையப் பாத்துகிட்டே, பையன என்ஜினியருக்குப் படிக்க வைச்சேன். படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன் கோயம்புத்துருல வேலைக்குச் சேர்ந்தான்.”

“அப்படியா, உங்க பையன் என்ஜினியரா, சூப்பர். சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல, நீங்க ஊரோட போக வேண்டியதுதானே, பெரியவரே “

” போவேன் சார், என் பையனே நீ கஷ்டப்பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு” தான் சொல்லுறான், ஆனா கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் “

” எப்போ”

” இன்னும் இரண்டு மாசம் ஆவும் சார்”

” சரி, கடவுள் இருக்கார் பெரியவரே, நல்லதே இனி நடக்கும் “.

பெரியவர் சிரித்தார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, ஹோட்டலிலிருந்து யாரோ ஒரு பையன் வந்து, அவரிடம் ஏதோ சொன்னான், பெரியவர் முகம் மலர்ந்தார். ” கொஞ்ச நேரம் உக்கார சொல்லிருக்காங்க” என்றார்.

“என்ன சொன்னீங்க சார். கடவுளா? கடவுள் என்ன சார், கடவுளு? அவன் கொடுமைக்காரனுங்க சார். இல்லன்னா, ஊருக்கே சோறு போட்ட என்னிய, கடனாளியாக்கி இப்பிடி ரோட்டுல நின்னு, சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா?

“மனுஷங்கதான் ஸார், கடவுள்,

முகம் தெரியாத, என்னை நம்பி வேலை தந்து, வேலைகாரன்தானேன்னு பாக்காம, இதோ, வயசானவனுக்கு கால்வலிக்கும்ன்னு உக்காற சொல்ற என் முதலாளி ஒரு கடவுள்,

“உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்படணும், பேசாம நம்ம கூட வந்திருக்கச் சொல்லு, கூழோ, கஞ்சியோ பகிர்ந்து சாப்பிடலாம்னு ” சொன்ன, எம் பொண்ண சந்தோசமா வச்சிருக்கிற, என் மாப்பிள்ள ஒரு கடவுள்.

கஷ்டப்பட்டு அப்பா படிக்க வச்சத மறக்காம, “நீ வேலைக்கு போவாதப்பா, எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன என் புள்ள, ஒரு கடவுள்; நான் கடன அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத எனக்கு கடன் கொடுத்தவங்க ஒரு கடவுள்.

அப்பப்ப ஆதரவா பேசுற, உங்களைமாதிரி இங்க வர்ற ஆளுங்க எல்லாரும் தான் சார் கடவுள்.

மனுசங்கதான் சார் கடவுள் “

எனக்கு அந்த பெரியவரை அணைக்கத் தோன்றியது; அணைத்துக் கொண்டேன். வேண்டாமென மறுத்தபோதும், பாக்கெட்டில் பலவந்தமாய் பணத்தைத் திணித்தேன்.

கார் எடுத்துக் கிளம்பும் போது, மெல்ல புன்னகைத்த, முருகேசன் என்கிற அந்த பெரியவரைப் பார்த்து, தலை வணங்கி, கும்பிட்டேன்.

ஊரெல்லாம் இது போன்ற தகப்பன் சாமிகள், நிறைய இருக்கிறார்கள். நமக்குத்தான் கும்பிடத் தோன்றுவதில்லை, அல்லது நேரமில்லை…


நான்:

நெகிழ்வு! கண்ணதாசனின் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ பாடல் நினைவுக்கு வந்தது! “தேவானாம் மானுஷ்ய ரூபாணாம்” என்பது உண்மையே.


இந்தப் பதிவுகள்தான் என்னை இந்த நூலை எழுதவைத்தது. “வாட்ஸ்-அப்”பில் வந்ததாலோ என்னவோ, வாரம் ஒரு பகுதியாக “வாட்ஸ்-அப்”பிலேயே நானும் இதை எழுதி முடித்தேன். அவைகளின் தொகுப்புதான் இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருப்பது.

(தொடரும்)

2 Replies to “ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1”

  1. ஐயா, தங்கள் தொடரை ஆவலுடன் படித்து மகிழக் காத்திருக்கிறோம். நல்வரவாகட்டும் . நன்றி .

  2. Very interesting writing. I have a small request. Is it possible to get all parts in one pdf for easy reading.

    My mobile no 9841359578.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *