நவீன வாழ்க்கையில் மனிதன் முழுவதுமாக அன்னியப் பட்டுப் போய் விட்டான். அதன் கசப்புணர்வும் விரக்தியும் தான் நவீனத்துவ இலக்கியம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொதுவாக எல்லா இலக்கிய விமர்சகர்களும் கூறுகிறார்கள். இந்தப் புறநானூற்றுப் பாடலை வாசிக்கும் போது, எல்லாக் காலகட்டங்களிலும், சில மனிதர்களுக்காவது நேர்வது தான் அது என்று தோன்றுகிறது. அனேகமாக அவர்கள் தான் (நல்ல) கவிதைகளையும் எழுதுகிறார்கள்.
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.(பாடியவர்: ஓரேர் உழவனார்)
உரித்த தோலைப் பரப்பியது போன்ற
நீண்ட வெளிறிய சேற்று நிலத்தில்
ஒருவன் துரத்தி வரும் மானைப் போல
ஓடிப் பிழைக்கவும் கூடுமோ
சுற்றி நிற்கும் வாழ்க்கை தடுக்கும் போது.
இந்தப் பாடலுக்கு உரை கண்ட உ.வே.சா உள்ளிட்ட தமிழறிஞர்கள் அத்தனை பேரும், ‘ஒக்கல் வாழ்க்கை’ என்பதற்கு சுற்றத்தாருடனே கூடி வாழும் இனிய இல்வாழ்க்கை என்று பொருள் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாழ்க்கை இல்லாதவர்களுக்கே துறவும் தவ ஒழுக்கும் தகும்; அதனையுடையவர்கள் துறவு நெறியில் ஓடிச் சென்று உய்தல் கூடாது என்பதே புலவர் கூறும் கருத்து என்கிறார்கள்.
ஒரு எளிய வாசகன் கூடத் தீண்ட முடிந்த கவிதையின் உள்ளத்தை பண்டித மனங்கள் பல நேரம் தவற விட்டு விடுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது. நூற்றாண்டுகள் கழித்தும் இந்தக் கவிதை வழியாக வந்து நம்மைத் தாக்குகிறது அந்த சங்கப் புலவனின் தனிமை.
தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன்.
தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்.
அக்காலத்தில், நடைமுறையில் போர்க்களங்களில் சகஜமாக இந்தக் குழப்பம் இருந்திருக்கக் கூடும். “படைமடம்” என்று இதற்கு ஒரு பெயரும் கொடுத்து உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கும், பல பிரசினைகளில் நமது சமகால அரசியல், சமூக, பண்பாட்டு சூழலுக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது இந்தச் சொற்றொடர்.
போர்க்குடிகளையும், போர் மரணங்களையும் கண்மூடித்தனமாக, வெறித்தனமாக விதந்தோதிய ஒரு காலகட்டத்தில், அத்தகைய புகழ்ச்சிப் பாடல் ஒன்றினுள்ளேயே கவிஞனிடமிருந்து வந்து விழுந்து விட்டிருக்கிறது இப்படி ஒரு சொற்றொடர். அந்தப் பாடல் ஒட்டுமொத்தமாக இன்று உருவாக்கும் உணர்வு, வீரப் புகழ்ச்சியாக அல்ல, பதைபதைக்க வைப்பதாக, சிந்தனையை ஆழமாக அதிரச் செய்வதாக இருக்கிறது.
வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ் தரக்
கண் கூடு இறுத்த கடல் மருள் பாசறைக்
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு எனப்
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரை தார் மார்பின் நின் கேள்வனைப் பிறரே.
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார் (புறம் 294)
வெண்குடை முழுநிலவாக ஒளிவீச
கண்ணுக்கெட்டிய தூரம்
கடல் போன்று பரந்த பாசறைகளில்
கூற்றுவன் போல கொலைத் தொழில் வல்ல
புதிய படை வீரர்கள்.
தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாது மயங்கும்
போர்க்களம்.
தலைவன் புகழும் உங்கள் பெயரும் விளங்கி நிற்க
வாழ்நாளைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் உங்களில் யார்
வாருங்கள் அவர்கள் இங்கு என
போருக்கு அறைகூவி
ஒருபுறம் சென்று நின்றான் உன் கணவன்.
மாலை நிறைந்த மார்பன்.
நாகம் உமிழ்ந்த மணியைக் கண்டது போல
பிறர் ஒருவரும் செல்லவில்லை
அந்தப் பக்கம்.