“தக்(கு)பீர் முழக்கம் கேட்டால் உள்ளம் இனிக்கும், இனிக்கும்’ என்று நாகூர் அனிபா பாடிய புகழ்மிக்க பாட்டு ஒன்று உண்டு. தக்பீர் முழக்கம் எது? ‘அல்லாஹூ அக்பர்’ என்பது. அதன் பொருள் என்ன? இறைவன் மிகப் பெரியவர் என்பது. இறைவன் எதனால் பெரியவர்? நம்மால் செய்ய முடியாதவற்றையெல்லாம் அவரால் செய்யமுடியும் என்பதால் பெரியவர்.”
மேலே உள்ள வரிகள் ‘தமிழ் தி இந்து’ நாளிதழில் திருமந்திரம் உட்பொருள் குறித்து கரு. ஆறுமுகத்தமிழன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையின் துவக்க வரிகளாகும். மேம்போக்காகப் பார்த்தால், இதில் என்ன தவறிருக்கிறது என்றுதான் தோன்றும், இந்த சிந்தனைதான் தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்று சொல்ல வைத்த ரகசியம் ஒளிந்திருக்கும் புள்ளி.
திரூமூலர் புராணம் நமக்கு சொல்வது என்ன?
அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
அந்தியில் தோன்றும் இளம்பிறைக் கண்ணியைச் சூடிய சிவபெருமானது திருக்கயிலாய மலையினில் உள்ள பழமையான கோயிலுக்கு, முதற்பெருந் தலைவராகத் தலைமையேற்று ,இந்திரன், மால், அயன் முதலாய தேவர்கட்கு இறைவனை அடைகின்ற நெறியினை அருள் செய்கின்ற குருமூர்த்தியாகிய நந்தியெம் பெருமான் திருவருள் பெற்ற, நான்கு மறைகளையும் உணர்ந்த, யோகியர்களில் ஒருவர்.
இதுதான் சேக்கிழார் பெருமான், திருமூலர் புராணத்தில் நமக்குச் சொன்னது.
சிவபெருமானின் அருள்பெற்ற நந்தி தேவரைக் குருநாதராகக் கொண்ட சனகர்,சநந்தனர்,சநாதனர், சனற்குமார், சிவயோகமாமுனி, பதஞ்சலி, வியாக்கிரமர் என்கின்ற எழுவருடன் தானும் ஒருவரென்று திருமூலநாயனாரே சொல்லிக்கொள்கிற திருமந்திர பாடல் உண்டு..அந்தப்பாடல் கீழே.
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்,
நந்திகள் நால்வர், சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி, வியாக்கிரமர்
என்றிவர், என்னோ டெண்மரு மாமே.
(திருமந்திரம் – 67)
இப்படி, திருக்கயிலாயத்திலே நான்கு மறைகளையும் கற்ற யோகியர்களில் ஒருவரான திருமூலர் அகத்தியரை தரிசிக்க பொதிய மலை நோக்கி வருகிறார். அப்போது திருக்கேதாரம், பசுபதிநாத், காசி, திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, தில்லை என தரிசனம் செய்து வருகிறார்.
அப்படி வருகிறபோதுதான் திருவாவடுதுறைக்கு அருகே உள்ள சாத்தனூர் என்னுமிடத்தில் மூலன் என்ற இடையனின் மரணத்தால் அவன் மேய்க்கும் பசுக்கள் சுற்றி நின்று கண்ணீர் விடுவதை கண்டு,தன் விசேஷ சக்தியால் அவன் உடலில் புகுந்து பசுக்களை கொண்டு போய் ஊரில் சேர்க்கிறார்.இதற்கும் மேல் இந்த கதையை எல்லோருமே அறிவோம்,அதன் பின்தான் திருமந்திரம் வந்தது.
இந்த புராணம்தான் சைவ உலகம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்ட திருமூலநாயனார் வரலாறு. சுந்தரர் பெருமானால்,”நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” என்று பாடப்பட்டு சேக்கிழார் பெருமானால் பெரியபுராணமாக மலர்ந்தது.
இப்போது மேலே தலைப்பில் இருக்கும் வரிகளுக்கு செல்லுங்கள். அந்த திருமூலரை பற்றியும், திருமந்திரத்தை பற்றியும் சொல்ல ‘தக்பீர்’ முழக்க உதாரணம் ஏன் வருகிறது?
ஸ்ரீருத்ரத்தில் இருந்து ஒரு உதாரணமோ அல்லது வேறேதேனும் வேத மந்திரத்திலோ,ஆகம வாக்கியத்தில் இருந்தோ மேற்கோள்காட்டி துவங்கலாம். ஆனால் அதை வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள். திருக்கயிலாயத்தில் இருந்து வந்த யோகி, வேதாகமப் பொருளை ,தமிழ் பேசும் மண்டிலத்தவருக்கு விளக்கிச் சொல்கிறார் திருமூலராக. அதற்கும் தக்(கு)பீர் முழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
இதுதான் திருமூலரை தனித்தமிழ்படுத்தி, ஆபிரஹாமிய மதங்களுக்கும் சைவத்துக்கும்தான் ஏதோ தொடர்பிருப்பது போல காட்டும் திருகு வேலை. இதுபோன்ற செயல்களை எல்லாம் நாம் எளிமையாக கடந்து போகிறோம். உண்மையில் இவை அப்படி கடக்கும் விஷயம் அல்ல. படிப்படியாக நம் மனங்களில் வேறொரு சித்திரத்தை உருவாக்கும் திட்டமே தவிர்த்து இவை வேறில்லை.
நிற்க. ராஜராஜ சோழன் 9ம் ஆட்சியாண்டில், திருமூலர் புராணத்தை நாடகமாக நடித்துக்காட்ட, ஏழு அங்கமாக அவற்றை ஆரியக்கூத்தாக ஆடுவதற்கும் நிவந்தம் கொடுத்த கல்வெட்டு திருவாவடுதுறை கோவிலிலேயே உள்ளது. ‘வடுகமாங்குடி பாண்டியகுலாசனி’ என்பவரும் ‘சாக்கையர் குமரன் சீகண்டவன்’ என்பவரும் நடித்து, ஆடிக்காட்டுவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், திருமூலருடன் தொடர்புகொண்ட புராண தடயங்கள் என எல்லாமே அந்த ஊரைச் சுற்றி உள்ளது.
திருக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஏழு நாட்கள் திருவிழா நடைபெறும் கொடியேறி. அதன் முடிவுநாளாகிய புரட்டாசிப் பூரட்டாதி நாளில் திருமூல நாயனாரது நாடகம், ஆரியக்கூத்தெல்லாம் நடக்கும் விதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படி தொடர்ச்சியாக தரவுகள் உள்ள நமது நம்பிக்கையையும், அந்த புராணத்தையும் தூக்கி வீசும் விதமாக தனித்தமிழ் கோஷ்டிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவற்றை எல்லாம் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், நாம் வைதீக சைவம், வீரசைவம் என தனித்தனியாக பிரிந்து அடித்துக் கொண்டு இதை ஆபிரஹாமிய சைவமாக மாற்றிவிட வழிசெய்யும் வாய்ப்பை தந்துவிடக்கூடாது. உட்பகை நம்மை பல நூறாண்டு கருவறுத்தது போதாதா? இன்னும் நம் கழுத்தை அறுக்க நாமே வழி செய்து கொடுக்க வேண்டுமா?
ஆம். நீங்கள் சொல்வதே சரி. வேண்டுமென்றெ விஷமிகள் சொல்லாடலுக்கு மயங்காது, நம்மைப் பிரித்துக்கொள்வதை விடல் வேண்டும்.