புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்: நேரடி அனுபவம்

கடந்த ஒரு வாரமாக காசியில் தான் இருந்தேன். நேற்றைய முன்தினம் தான் விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தேன்.

உண்மையிலேயே முன்பு நாம் பார்த்த காசிக்கும் இப்போது பார்க்கும் காசிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது; குறிப்பாக விஸ்வநாதர் கோவிலில் அதன் விஸ்தீர்ணத்தையும் அதன்
விரிவாக்கத்தையும் மிகத் தெளிவாக காண முடிந்தது. ஏற்கனவே நான் வந்த கோவில் போலவே இது இல்லை. ஏதோ புதிய கோவிலுக்கு வந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கியமான விஸ்வநாதர் ஆலயம் அதற்கான கம்பீரத்தை மீண்டும் அடைந்திருக்கிறது.

பலவிதமான தகவல்கள் இன்டர்நெட்டில் உலவிக் கொண்டு வருகிறது. நானும் அதில் பல விஷயங்களை பார்த்திருந்தேன். ஆலயங்கள் தகர்க்கப்பட்டன; பழைய ஆலயங்கள் புல்டோசர் வைத்து எடுக்கப்பட்டது; பல ஆலயங்கள் திரும்ப கிடைத்திருக்கிறது; ஆக்கிரமிப்புகளுக்கு ஊடாக இருந்த ஆலயங்கள் கண்டு எடுக்கப்பட்டிருக்கிறது; என்று பல செய்திகள் இதில் எவ்வளவு தூரம் உண்மை என்று பல நண்பர்களிடம் சர்ச்சையும் நடந்தது. அதை நான் நேரில் பார்த்த பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். ஓரளவு பார்க்கவும் முடிந்தது.

இதில் எல்லா வகையிலுமே உண்மையும் இருக்கிறது. மிகைப்படுத்தப்பட்ட பல தகவல்களும் இருக்கிறது என்பதுதான் நிஜம். அதன்படி நாங்கள் அடுத்து காசியில் செய்யப்போகும் பூஜை விஷயமாக ஏற்பாடுகள் செய்ய வேண்டி இந்த வாரணாசி புரியில் கிட்டத்தட்ட 5-6 நாட்கள் தங்கும் பாக்யம் கிடைத்தது.

ஆலய விரிவாக்கத்தின் போது சுற்றியிருந்த பல கடைகளுக்கு உள்ளாக ஒளிந்து கொண்டிருந்த, வீடுகளுக்குள் மறைந்திருந்த பல புராதன ஆலயங்கள் வெளிப்பட்டிருக்கிறது. அதேபோல் விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் பல ஆலயங்கள், உப சன்னதிகள் சிலவும் சரியான மந்திர கிரியைகள் இல்லாமல் அவசர கதியில் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது என்பது உண்மைதான். இதை இன்னும் சற்று கவனமாக கையாண்டிருக்க வேண்டும். நிச்சயமாக இது கொஞ்சம் மனவருத்தம் தந்தது. ஆனால் அகற்றப்பட்ட சன்னதிகள் மீண்டும் அமைக்கப்படும்; அதற்கான பணிகளும் நடக்கிறது என்று அங்கிருந்த பண்டிதர்கள் கூறினார்கள். அது ஆறுதல் அளித்தது.

மற்றபடி “பைரவர் ஆலயம், பிந்து மாதவர் ஆலயம், இவையெல்லாம் மாற்றப்பட்டது ; மசூதியை பார்த்துக்கொண்டு இருந்த நந்தி திருப்பிவைக்கப்பட்டது; அன்னபூரணி ஆலயம் ட்ரில்லிங் மெஷின் கொண்டு பெயர்க்கப்பட்டது” என்று வந்த செய்திகள் எல்லாம் துளியும் உண்மை இல்லை.
விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகள் மட்டுமே விரிவாக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

“நான் கைலாசத்தை விட்டுவிட்டு என் பிரியமான காசி நகரத்தில் வசிப்பதையே விரும்புகிறேன்” என்று பரமேஸ்வரன் கூறி விஸ்வநாதராக இங்கே குடியிருக்கிறார் என்கிறது காசி காண்டம்.
அப்படிப்பட்ட விஸ்வநாதர் ஆலயம் முகலாயர்களால் சூறையாடப்பட்டது. மூல விஸ்வேஸ்வர லிங்கம் ஞானவாபி கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டது. பின்னர் த்ரைலிங்கேஸ்வர மஹராஜ் என அழைக்கப்படும் நம்முடைய தமிழகத்தின் ஸ்ரீ குழந்தையானந்த மஹா சுவாமிகள் அந்த கிணற்றில் இருந்து லிங்கத்தை எடுத்து கொடுத்து அந்த லிங்கமே இப்போது மூல லிங்கமாக அகல்யாபாய் மஹாராணியால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வளவு கம்பீரமான அந்த சிவ ராஜதானியில் விச்வநாதர் தன் முக்தி மண்டபத்தை இழந்து, அவிமுக்தீஸ்வரருடைய ஆலயத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டார் (இன்று நாம் காணும் ஆலயம்).

மற்ற 12 ஜோதிர் லிங்கங்களும் கம்பீரமான விஸ்தாரமான ஆலயங்களில் வீற்றிருக்க ராஜதானி ஆன விஷ்வநாதர் இப்படி ஒன்று ஒண்டுக்குடித்தனம் போல ஒடுங்கி இருந்தது நிச்சயமாக மனவருத்தம் கொடுத்தது. அந்த குறை இன்று நீங்கி இருக்கிறது. சிவ ராஜதானியில் விஸ்வநாதர் ஆலயம் மிகவும் கம்பீரமாக இன்று வானளாவ எழுந்து நிற்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகவத் ஆசிர்வாதம் இருக்கும் காரணத்தால் தான், அயோத்தியா ஆலயமாகட்டும் காசி விஸ்வநாதர் ஆலயமாகட்டும், இவர் பிரதமராக அமர்ந்து ஸங்கல்பம் செய்யக்கூடிய பாக்கியத்தை இறைவன் வழங்கியிருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்நாள் நிச்சயமாக ஒரு பொன்னாள்.

நம் சனாதன தர்மத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் இடம் காசி. காலத்துக்கும் முற்பட்ட அந்த காசியில் விஸ்வநாதன் ஆலயம் வானளாவ எழுந்து நிற்பதை நாம் நம் இன்று கண்ணால் காண்கிறோம்.

நான் நேற்று முன்தினம் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது ஞானவாபியின் அருகில் இருந்த நந்தியை பார்த்தபோது, இந்த ஆனந்தத்தையும் மீறி உணர்ச்சி மேலோங்கியது; எத்தனை பக்தர்கள், எத்தனை அர்ச்சகர்கள், இந்த ஆலயத்தை காக்க வேண்டி முகலாயர்களுடன் போராடி தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்? விஸ்வநாதர் ஆலயம் இவ்வளவு கம்பீரமாக எழுந்து நிற்கிறது ; ஆனால் இது போதாது. விஸ்வநாதன் ஆசைப்பட்டு அமர்ந்த அந்த முக்தி மண்டபம், அவருடைய உண்மையான மூலஸ்தானம் இன்றும் மசூதியாகத்தான் இருக்கிறது. விச்வநாதர் ஆலயம் கம்பீரமாக எழுந்ததை பார்த்துவிட்டோம். அயோத்தி ஆலயம் உருவானதையும் பார்த்தோம். இதேபோல் விஸ்வநாதன் தன்னுடைய உண்மையான மூலஸ்தானத்துக்கு எழுந்தருளிய கூடிய நாள் என்று வரும் என என் மனம் ஏங்கியது.

அயோத்தியில் சில ஆண்டுகளுக்கு முன் தார்பாலின் ஷீட்டுக்கு கீழே ஸ்ரீ ராமனைப் பார்த்த போது கண்ணீர் விட்டு அழுதேன்; அதேபோல் இன்று இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகிவிட்ட பின்பும், நந்தி பரிதாபமாக ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது என்னை மீறி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது. விஸ்வநாதர் ஆலய வளாகம் பிரமாண்டமாக உருவாகி விட்டது. வெகு விரைவில் மசூதி அகற்றப்பட்டு அங்கே மூலஸ்தானத்தில் முக்தி மண்டபத்தில், ஈசன் அமரவேண்டும் அதையும் நாம் நம் வாழ்நாளில் காண வேண்டும்.

ஹர ஹர மஹாதேவ சம்போ! காசிவிஸ்வநாத கங்கே!

(கட்டுரையாளர் “சாஸ்தா வியாசர்” அரவிந்த் சுப்ரமணியம் புகழ்பெற்ற ஆன்மீக எழுத்தாளர், பேச்சாளர், ஐயப்ப உபாசகர். இது அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவு).

5 Replies to “புதிய காசி விஸ்வநாதர் ஆலயம்: நேரடி அனுபவம்”

  1. சிறிய, ஆனால், செறிவுள்ள, கட்டுரை. கட்டுரை எழுத்தாளருக்கு எழுத்தின் மீது உள்ள முழு கட்டுப்பாடு வெளிப்பட்டுள்ளது. இவருக்கு என் இதயம் கனிந்த நல்லாசிகள் பல. நல்வாழ்த்துக்கள் பல.

  2. காலம் சில நல்லவர்களை அதர்ம கூட்டத்தில் வைத்திருக்கும், அவர்கள் அந்த கூட்டத்தில்தான் இருப்பார்கள், அவர்கள் செய்யும் பல கொடுமைகளை, அதர்மங்களை கண்டுகொண்டேதான் இருப்பார்கள், நல்லவர்கள் இவர்களால் பாதிக்கபடும்பொழுது பல்லைகடித்து கொண்டு அமைதியாய் இருப்பார்கள்

    காரணம் எப்பொழுது பாயவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், எப்பொழுது நிலமை எல்லைமீறி செல்லுமோ அப்பொழுதுதான் நாம் பேசவேண்டும், அதுவரை அமைதிகாக்க வேண்டும், அவசரபட்டு தர்மத்தை பேசுகின்றோம் செய்கின்றோம் என மொத்தத்தையும் கெடுத்துவிட கூடாது என்பது அவர்களுக்கு தெரியும்

    பாரதத்தில் விதுரர் போன்றவர்கள் உண்டு, ராமாயணத்திலும் பலர் உண்டு. அவர்கள்தான் கடைசி நேர குழப்பத்தில் தர்மம் அரங்கேற முழு காரியமும் செய்திருப்பார்கள்

    அந்த பாரம்பரியத்தில் வந்தவர் பட்டேல், சர்தார் வல்லபாய் பட்டேல்

    அவரும் நேதாஜி போல, வ.உ.சி போல கிளம்பியிருந்தாலோ இல்லை காமராஜர் போல முழு காங்கிரஸ் அடிமையாக மாறி இருந்தாலோ இன்றைய இந்தியா இல்லை

    ஆம், சுதந்திரம் பெறும்பொழுதே உடைந்தே சிதறிய தேசம் அதன் பின்னும் பல துண்டுகளாக உடையும் ஆபத்து இருந்தது

    பிரிட்டன் வெளியேறினாலும் பிரான்சும் போர்ச்சுக்கலும் இந்தியாவில் இருந்து வெளியேற மறுத்து இவை எங்கள் பகுதி என மல்லுகட்டின‌

    அதைவிட மாபெரும் மிரட்டல் இந்தியாவின் அன்றைய நிஜாம்களும் நவாப்புக்களும்

    மராட்டிய சிவாஜி காலத்தில் அடங்கியிருந்த அந்த சுல்தான்கள் பின் மெல்ல எழும்பொழுது வெள்ளையன் வந்து இந்நாட்டினை இந்துக்கள் ஆதரவோடு கைபற்றினான்

    அதே நேரம் இந்த நவாப்புக்களை சுல்தான்களை முழுக்க ஒழித்தால் இந்துக்கள் மிக சிறுபான்மையான தங்களையும் விரட்டிவிடுவார்கள் எனும் அச்சம் அவனுக்கு இருந்தது, இதனால் இந்துக்களை நவாப் நிஜாம் என கொண்டு ஆண்டுகொண்டிருந்தான்

    சுல்தான்களும் அவனுக்கு கட்டுபட்டு சந்தோஷமாக வரிகட்டி கொண்டிருந்தனர்.

    அந்த சுல்தான்கள் 1947க்கு பின் போர்கொடி தூக்கினர், சிறு சிறு சமஸ்தானத்து நவாப்புகளெல்லாம் இனி நாங்கள் தனிநாடு என கிளம்பின, இவைகளுக்கு பின் பாகிஸ்தான் இருந்தது, பாகிஸ்தான் பின்னால் யார் யாரெல்லாமோ இருந்தார்கள்

    தெற்கு பாகிஸ்தான் வேண்டும் என குரல் எழும்பியது

    ஐதரபாத் நிஜாம் தனி அரசாக துடித்து கொண்டிருந்தார், இன்னும் வங்கம் முதல் ஆற்காடு வரை ஆளாளுக்கு இனி எங்கள் சமஸ்தானம் என கிளம்பினார்கள்

    இந்தியாவில் அன்று பலமான‌ ராணுவமில்லை, அரசு இல்லை, சட்டங்கள் முழுமையில்லை, கஜானா இல்லை இனி இந்தியா கிபி 1500ம் ஆண்டுக்கு திரும்பும், அந்நாடு உடைந்து அரேபியா போல சுல்தான்களின் தேசங்களாக உதிக்கும் என உலகம் நம்ப தொடங்கிற்று

    காரணம் காந்தி அதை தடுக்கும் சக்தி கொண்டவராக இருந்தார், நேருவுக்கோ எதுபற்றியும் கவலையில்லை, இனி யார் இதையெல்லாம் தடுக்க போகின்றார்கள் என தேசமே கவலையுற்ற நேரமிது

    இங்கே இனி மறுபடி சுல்தான்கள் ஆட்சியா, இல்லை கிறிஸ்தவ மிஷனரிகள் காங்கிரஸ் மூலம் ஆள்வார்களா? இல்லை இந்து புரட்சி வெடிக்குமா? இதையும் தாண்டி ரஷ்ய சீன பாணியில் கம்யூனிசம் வெடிக்குமா என்றெல்லாம் பல கடுமையான சிக்கல்கள் இருந்த நேரம்

    அதிலும் ஐதரபாத் நிஜாம் போன்றவர்கள் செல்வந்தர்கள், பெரும் படைகளை குவித்தும் வைத்திருந்தார்கள்
    அப்பொழுதும் இஸ்லாம் ராஜ்ஜியங்களாக உடையும் எனும் ஆரூடம் இருந்ததே தவிர, இந்துக்களுக்கு என ஒரு சிறு ராஜ்யம் கூட அமையும் என யாரும் சொல்லவில்லை, வரலாற்றின் கண்ணீர் சோகம் இது

    இந்தியா இனி சுல்தானியங்களாக உடையும் என எதிர்பார்க்கபட்ட வேளைதான், ஒரு சிங்கம் உறுமியது
    அதுவரை காந்திக்கு அடிமை, நேருவிசுவாசி என நம்பபட்ட மனிதர் அற்புதம் காட்டினார். துண்டு துண்டாக நாட்டை உடைக்கவா சுதந்திரம் வாங்கினோம் என சீறி எழுந்தார்

    அந்த மனிதனாலே இன்றிருக்கும் ஒருங்கிணைந்த இந்தியா சாத்தியமாயிற்று, அவனும் அமைதியாக இருந்திருந்தான் என்றால் இன்றிருக்கும் இந்தியாவும் இல்லை காஷ்மீரும் இல்லை, இந்தியா உடைந்து சிதறியிருக்கும்

    ஆம், சரியான நேரம் எழும்பி காந்தியினையும் நேருவினையும் எதிர்த்து சுதந்திர இந்தியாவினை பலமான ஒரே இந்தியாவாக அவர்தான் மாற்றினான்

    சுதந்திர இந்தியாவில் மறக்கமுடியாத மனிதர் அவர், இன்று இந்தியா சுல்தான்கள், மன்னர்கள், நவாப்கள் இம்சையின்றி ஜனநாயக நாடாக இந்தியா இருக்க அவர்தான் முதல் காரணம், இந்தியாவின் பெரும் அடையாளம் அவரேதான்

    சர்தார் வல்லபாய் பட்டேல்

    காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர்.

    காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை, மோதலில்தான் சந்தித்தார்கள். அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது பிரிட்டிஷ் அரசாங்கம்

    விளைச்சல் இல்லை என சொன்ன விவசாயிகள் கதறல் அவர்களுக்கு கேட்கவில்லை, நிலத்தை ஜப்தி செய்ய வந்தார்கள், இங்குதான் பட்டேல் போராட வந்தார், அது வெற்றியும் ஆயிற்று

    அதனை வாழ்த்த வந்தார் காந்தி, ஏனென்றால் ஒரு தலைவன் உருவாகின்றானா? விட கூடாதே என ஓடிவந்து பார்க்கும் தந்திரம் அது, அப்படி வந்த காந்தி கொடுத்ததுதான் சர்தார் பட்டம், சர்தார் என்றால் தலைவர் என பொருள்.

    அதன் பின் காந்தி பட்டேல் நட்பு வலுபெற்றது. காந்தியின் எல்லா போராட்டங்களிலும் பட்டேல் இருந்தார், எல்லா மாநாடுகளிலும் அவரோடு கலந்துகொண்டார், பல சிறைகளில் அடைக்கபட்டாலும் காந்தியோடு கலந்திருந்தார்

    எரவாடா மாளிகை சிறையில் காந்தியினை மிக நன்றாக கவனித்துகொண்டவர் பட்டேல்

    பகத்சிங் விவகாரத்தில் இருந்து நேதாஜி விவகாரம் வரை காந்திக்கும் பட்டேலுக்கும் முரண்பாடுகள் அதிகம், மலபாரின் மாப்பிள்ளை கலவரம் முதல் காந்தியின் இஸ்லாமிய பாசம் வரைக்கும் பட்டேலுக்கு பிடிக்காதுதான்
    ஆனால் தனியே சென்றால் காந்தி தன்னை அடையாளமின்றி அழிப்பது நிச்சயம் இதனால் காந்தியோடு இருந்தே உரிய நேரத்தில் திருப்பி அடிக்க , காந்திக்கு ஒரு கண்காணிப்பாளனாக சுற்றி வந்தார்

    ஒருவழியாக சுதந்திரம் கிடைக்கும் காலம் நெருங்கிற்று, இந்திய வரலாற்றின் துரதிருஷ்டம், சுதந்திரம் பெற போராடியதை விட, பெற்றபின்புதான் சவால் அதிகம் இருந்தது

    முதல் சிக்கல் அந்த ஜின்னா வடிவில் வந்தது, நேரடி நடவடிக்கை என அந்த ஜின்னா பொறுப்பே இல்லாமல் பாய, இந்தியாவில் ரத்த ஆறு ஓடிற்று

    காந்தியின் பேச்சினை கொஞ்சமும் மதிக்காமல் தேசத்தை பிரித்துகொண்டு ஓடினார் ஜின்னா

    காந்தி மனமொடிந்து இருக்க , நேரு அவர்களும் சகோதரரே எனும் மிகபெருந்தன்மையில் இருக்க, பட்டேலின் முன்னிலையிலே இத்தேசம் பிரிக்கபட்டது

    காந்தி என்னமோ சொல்லி அழுதுகொண்டிருக்க, மிக தைரியமாக தன் அதிரடி கருத்தை இப்படி சொன்னார் பட்டேல்

    “உடலில் வளர்ந்துவிட்ட கட்டி மற்ற உறுப்புகளை தாக்குமுன் அப்புறபடுத்தபடுவது போல, இத்தேசத்திற்கு வந்த ஆபத்தை வெட்டி எறிந்துவிட்டோம், இனி இத்தேசம் தன் வழியில் வளர்ச்சி நோக்கி செல்லட்டும்”

    ஆம், அடம்பிடித்த ஜின்னாவினை இங்கே வைத்துகொண்டு சதா காலமும் சர்ச்சையினை வளர்ப்பதை விட, சனியனை அடித்து விரட்டுவது சரி என ஆணித்தரமாக சொன்னார் பட்டேல்

    காந்தி பட்டேல் மோதல் தொடங்கியது, பட்டேல் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி எனும் சர்ச்சை எல்லாம் வந்தது, கொஞ்சமும அசரவில்லை பட்டேல்

    நாட்டுக்கு நல்லதை செய்யும் நான் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்றால் அதை நான் பெருமையாக கருதுகின்றேன் என உறுமி நின்றார் பட்டேல், ஆடிபோனார் காந்தி, பட்டேலுக்கு ஆதரவு பெருகிற்று

    காங்கிரசுக்கும், நாட்டின் பிரதமர் பதவிக்கும் ஒருவரே இருக்கவேண்டும் என்றார் காந்தி, ஆனால் காங்கிரஸ் பட்டேலின் கையில்தான் இருந்தது, அவருக்குத்தான் கட்சி ஆதரவு இருந்தது, நினைத்தால் நொடியில் பட்டேல் பிரதமராகியிருக்க நேரமது

    ஆனால் விட்டுகொடுத்தார் பட்டேல், உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர் ஆனார். காந்தியோடு மோதிகொண்டிருக்க அவருக்கு விருப்பமில்லை, காரணம் செய்யவேண்டிய வேலைகள் அவ்வளவு இருந்தன‌

    இந்திய பிரிவினை, பாகிஸ்தானியரால் அடித்துவிரட்டபட்ட இந்துக்கள், சொத்துக்களை இழந்த இந்து அகதிகள், நவாப்களின் தனி கொடிகள் என பெரும் சிக்கல்கள் இருந்தன‌

    இப்பொழுதும் காந்தி திருந்தியபாடில்லை, பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய 55 கோடி ரூபாயினை கொடுக்க சொன்னார், பட்டேல் மறுத்தார். அவர்கள் வெறிபிடித்த நிலையில் இருக்கின்றார்கள், இதனை கொடுத்தால் நம்மீதுதான் பாய்வார்கள், இது கொடுக்க வேண்டிய நேரம் அல்ல என மறுத்தார்

    உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி, இறுதியில் காந்தியின் பிடிவாதம் வென்றது, பட்டேலுக்கு மனம் சோர்ந்தது, எனினும் லட்சியத்தில் பின்வாங்கவில்லை

    ஆனால் குஜராத்தின் ஜூனாகத் சர்ச்சையில் அவர் கவனம் செலுத்தினார். அங்கு இஸ்லாமிய மன்னன் இருந்தான் அவன் பாகிஸ்தானோடு இணைய விரும்பினான், மக்களோ இந்தியாவோடு இணைய விரும்பினர்
    பெரும் குழப்பம் ஏற்பட்டது, இறுதியில் பட்டேலின் ஆலோசனையில் நடந்த‌ பொது வாக்கெடுப்பில் மக்கள் தேர்வு இந்தியா என முடிந்தது, ஜூனாகத் சுல்தான் காட்சியில் இருந்தே அகற்றபட்டான், பெரும் ஆபத்து நீங்கியது

    பாகிஸ்தானுக்கு பெரும் அவமானம் ஆயிற்று. ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இதற்கு பெரும் காரணம் பட்டேல்

    இங்கு சறுக்கிய பாகிஸ்தான் காஷ்மீரில் தேர்தல் என்றாலும் அம்மக்கள் மனம் இந்தியாவிற்குத்தான் செல்லும் என உணர்ந்தது, காரணம் பாகிஸ்தானை இஸ்லாமியரில் பலரே விரும்பவில்லை

    பாகிஸ்தான் திட்டத்துக்கு காந்தி உண்ணாவிரதம் இருந்து வாங்கி கொடுத்த 55 கோடி மிகவும் உதவியது, ஆம் அந்த பணம் இன்று சில நூறு பில்லியன்களுக்கு சமம்

    அந்த பணத்தில்தான் காஷ்மீர்மேல் பாய்ந்தது பாகிஸ்தான், காந்தி எவ்வளவு பெரும் தவறு செய்தார் என்பதை தேசம் உணர்ந்து கொண்டது

    இந்தியா ஆயிரம் சிக்கலில் இருக்க, இந்தியாவின் இந்துக்களும் சீக்கியரும் எல்லையில் பாதிக்கபட்டு மானமின்றி சொத்து இன்றி வாழ்வின்றி அழுது கொண்டிருக்க, அவர்கள் சடலங்கள் தெருவிலும் கிணற்றிலும் மிதக்க, அந்த பாகிஸ்தானுக்கு காந்தி 55 கோடி கொடுக்க சொன்னதுதான் இந்திய இந்துக்களின் கோபத்துக்கு காரணம்

    அந்த பணத்தை வாங்கி காஷ்மீரிலே பாகிஸ்தான் பாய்ந்தபொழுதுதான் காந்திமேல் வன்மம் பெருகிற்று, கோட்சே துப்பாக்கி தூக்க காரணம் இதுதான்

    கோட்சே இல்லாவிட்டால் இன்னொருவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும், ஆனால் அந்த வரலாற்று பெருமையினை இன்னொருவனுக்கு கொடுக்க கோட்சே விரும்பவில்லை வென்றுவிட்டான்

    ஆம் பட்டேல் தடுத்து காந்தி வாங்கி கொடுத்த 55 கோடியில்தான் பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது, மன்னன் ஹரிசிங் முதலில் இந்திய உதவியினை கோரவில்லை என்றாலும் பின் இறங்கி வந்தார், இந்தியா காஷ்மீரை மீட்டுதரவேண்டும் என்றார்

    இந்தியாவோடு இணைய சம்மதம் என்றால் தயார் என சொன்னது இந்தியா, இந்தியா என்றால் பட்டேல், போரில் பாதி காஷ்மீர் இந்தியா வசம் ஆயிற்று, மன்னரும் கையெழுத்திட்டார்

    பட்டேல் உறுதியாக சொன்னார், இதோ மன்னரின் ஒப்பந்தம் அதாவது முழு காஷ்மீரும் மன்னருடையது. மன்னர் இந்தியாவிற்கு தந்துவிட்டார், ஆக பாகிஸ்தான் தான் பாதி காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. நியாய நம்பக்கம் இருக்கின்றது, போர் மூலம் அதனை மீட்கலாம் என வாதிட்டார்

    ஆம், முழு காஷ்மீரும் மன்னருக்கு, மன்னர் இந்தியாவோடு இணைத்துவிட்டார், பாகிஸ்தான் ராணுவம் ஒன்றும் பிரமாதமானது அல்ல, அடித்து துவைத்து காஷ்மீர் முழுக எடுத்துவிடலாம், இதை இப்பொழுது செய்யாவிட்டால் பெரும் சிக்கல் என எச்சரித்தார் பட்டேல்

    ஆனால் நேருவா அசைவார்?, அவர் பாகிஸ்தானை தன் தம்பியாகவே கருதியவர் அல்லவா? இதனால் பாகிஸ்தானிய சகோதரனிடம் பாதி காஷ்மீர் இருப்பதில் என்ன தவறு என்பது போல பேசிவிட்டு போருக்கு சம்மதிக்கவில்லை

    ஐ.நா அது இது என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார், அவர் மனதில் காஷ்மீரில் பாதி பாகிஸ்தானுக்கு இருக்கட்டும் எனும் ஒரு பாசம் இருந்து கொண்டே இருந்தது

    “மிக பெரும் தவறு செய்கின்றீர்கள் நேரு, இது பிற்காலத்தில் தீரா தலைவலி கொடுக்கும்” என்ற பட்டேலின் எச்சரிக்கையினை புறக்கணித்தார் நேரு.

    மனம் நொந்த பட்டேல் காந்தியினை சந்தித்து தான் அரசியலிலிருந்தும், உள்துறை அமைச்சர் பதவியிலும் இருந்தும் விலகுவதாக சொன்னார், காந்தி இதுபற்றி அடுத்தமாதம் பேசலாம் என சொல்லி சமாதான படுத்தினார்

    காந்தியினை உயிரோடு சந்தித்த கடைசி பிரபலம் பட்டேல்தான்

    கடும் அதிருப்தியில் இந்தியாவும் ஏராளமான இந்துக்களும் இருந்தபோது 1948 ஜனவரி 20ம் தேதி காந்தி மீது குண்டு வீசபட்டது , தப்பினார் காந்தி, அந்த குண்டை வீசிய மதனாலால் எனும் அகதியினை பிடித்து விசாரித்தார்கள், ஆனால் காந்தியினை கொல்ல பல குழுக்கள் அலைந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை

    அடுத்தம் 10ம் நாள் காந்தி கோட்சேவால் கொல்லபட்டார்

    பழி எங்கு விழுதது என்றால் பட்டேல் மீது விழுந்தது, ஆம் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை பட்டேல் கட்டுபடுத்தவில்லை, அவர்களுக்கு சாதகமாக நடந்தார். அவர்தான் கொலைக்கு பொறுப்பு என்றெல்லாம் கடும் குற்றம் சாட்டபட்டன‌

    மனம் நொந்தார் பட்டேல், காந்தியின் கொலை அவர் மனதை பெரிதும் பாதித்தது , ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிகாட்டா இரும்பு மனிதர் அவர் அதனையும் காட்டிகொள்ளவில்லை
    அடுத்து அவர் உயிரோடு இருந்தது 2 வருடங்களே

    அந்த 2 வருடத்தில் பட்டேல் செய்ததுதான் உச்சபட்ச சாதனை

    ஆம் 527 சமஸ்தானமாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா, வெள்ளையன் வெளியேறியதும் பல தாங்கள் சுதந்திர நாடு என அறிவித்தன. அதில் ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இன்னும் ஏராளமான பகுதிகள் குதித்தன‌

    அவற்றை எல்லாம் இந்தியாவோடு சேர்த்தார், பேச வேண்டிய இடங்களில் பேசினார், மிரட்ட வேண்டிய இடங்களில் மிரட்டினார், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தார்

    பெரும் தொல்லை கொடுத்தது ஐதராபத் சமஸ்தானம், அதன் மன்னர் இணைய மறுத்தார், போருக்கு தயார் என்றார், பாகிஸ்தான் உதவிக்கு வரும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது

    அவர் துருக்கி மன்னருக்கு சம்பந்தி என்பதால் பல கணக்குகள் அவருக்கு இருந்தன.

    அவருக்கு ஆதரவாக மேற்கு பாகிஸ்தான், கிழக்குபாகிஸ்தான் போல தெற்கில் ஒரு பாகிஸ்தான் வேண்டும் என்ற குரல்களும் எழும்பின‌

    ஒருவித பரபரப்பு தொற்றிகொண்ட நேரமது, ஆனால் இந்திய படைகளுக்கு முழு உரிமை கொடுத்தார் பட்டேல் , போரில் சில அழிவுகளுடன் ஐதரபாத் இந்தியாவோடு இணைந்தது

    தெற்கு பாகிஸ்தான் எனும் விஷ வித்து அன்றே பிடுங்கி தூர எறியபட்டது

    இன்று நாம் காணும் சுதந்திர இந்தியாவின் முழு வடிவம் பட்டேல் எனும் இரும்பு மனிதன் கொடுத்தது

    பட்டேல் என்ற மாமனிதன் இல்லையென்றால் இத்தேசம் இந்த வடிவம் பெற்றிருக்குமா? என்பது சந்தேகம்
    காரணம் நேருவின் ஒரு மாதிரியான குணம் அது, ஏதோ பண்ணையார் மனநிலையில் இருந்து கடை தேங்காயினை எடுத்து பிள்ளையாருக்கு உடைப்பது போல் இந்திய பகுதிகளை அந்நியருக்கு விட்டு கொடுத்தே வந்தார்

    பிரிட்டன், பிரான்ஸ் எல்லாம் சிறிய தேசங்கள் அல்லவா? அப்படி இந்தியாவும் இருந்தால்தான் என்ன எனும் அளவு அவருக்கு சிந்தனை இருந்தது

    போர்ச்சுக்கல்லை கூட கோவாவில் இருந்து வெளியேற அவர் விரும்பவில்லை, பட்டேல் அதற்கு முயன்றபொழுது நேரு தடுத்தார், பட்டேல் மனம் மிகவும் கதறி அழுத தருணமது

    ஆம், பட்டேலுக்கு மிக தூய கொள்கை இருந்தது, நாட்டுபற்று இருந்தது ஆனால் அதிகாரமும் சக்தியும் நேருவிடம் சிக்கிகொண்டது, நேருவினை விட்டு வந்தால் பட்டேல் நிலைக்கமுடியாது எனும் நிலவரம் இருந்தது
    சீன யுத்தமே நேருவுக்கு உண்மையினை கற்று கொடுத்தது, கோவா எனும் தனி நாட்டில் அந்நிய விமானம் வர இருந்தது

    இந்தியாவுக்குள் அந்நிய தளமும் நாடுகளும் இருப்பது எவ்வளவு ஆபத்து என பட்டேல் 1947ல் எச்சரித்தார், ஆனால் நேருவுக்கு 1962ல்தான் தெரிந்தது, தன் கடைசி நாட்களில் நேரு பட்டேலை நினைத்து அழுதிருக்க கூடும்.

    பட்டேல் கொடுத்த எச்சரிக்கையிலேதான் போர்ச்சுகலின் கோவா, பிரான்சின் பாண்டிச்சேரி ஆகியவை பின்னாளில் நமக்கு கிடைத்தன, அதனை காண அவர் உயிரோடு இல்லை

    ஆனால் அவர் இந்த அளவு அடித்து நொறுக்கி இந்தியாவினை ஒன்று சேர்க்கவில்லை என்றால் இந்த இணைப்புகள் இன்னும் தாமதமாகியிருக்கும்

    வரலாறு சொன்னபடி இந்தியாவின் பிரதமராக பட்டேல்தான் வந்திருக்க வேண்டும், அவர் இருந்திருந்தால் காஷ்மீர் உள்ளிட்ட பெரும் சிக்கல்கள் முளைத்தே இருக்காது

    ஜூனாகத், ஐதராபாத் போல காஷ்மீரும் இன்று அமைதியாக இந்தியாவோடு இருந்திருக்கும்

    பட்டேலின் நாட்டுபற்றும், அவரின் தியாக வாழ்வும் நெருப்பு போன்றது. அதில் ஒரு குறை சொல்ல முடியாது
    நெருப்பில் ஏது மாசு?

    நாட்டுபற்று மிக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது, காஷ்மீர் போரின் பொழுது நாட்டுபற்றை பேசிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்திருந்தது

    இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது அகதிகளாய் ஓடிவந்தவர்களுக்கு முகாம் அமைத்து உதவிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்தது

    இது நாட்டுபற்று மிக்க எல்லோருக்கும் வரும் உணர்வு, பட்டேலுக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை, வராவிட்டால்தான் ஆச்சரியம்

    இந்த நாட்டின் உண்மையான பாதுகாவலர்கள் ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என நம்பினார் பட்டேல், அவர்கள் பணி அரசியல்வாதிகள் குறுக்கிடாமல் நடந்தால் ஒழிய இத்தேசம் நன்றாக இயங்காது என்பது அவரின் கொள்கை

    அது மகா உண்மையானதும் கூட‌

    இத்தேசத்தின் உண்மையான சவால் சுதந்திரத்திற்கு பின்பே இருந்தது, இத்தேசம் இரண்டல்ல இரண்டாயிரம் துண்டாக உடையும் என உலகம் நம்பிகொண்டிருந்தது

    அதனை எல்லாம் பொய்யாக்கி, இந்த மாபெரும் தேசத்தை அமைத்து கொடுத்த அந்த மாபெரும் மனிதனுக்கு இன்று நினைவு நாள்.

    கஜினியால் இடிக்கபட்ட சோமநாதபுரி ஆலயத்தை திரும்ப கட்டியதில் மிகபெரிய பங்காற்றியவர் பட்டேல், அதை மறக்கவே கூடாது, தேசத்தில் அந்நிய ஆட்சியால் பாதிக்கபட்ட எல்லா ஆலயங்களும் பொலிவு பெற வேண்டும் என விரும்பிய தலைவர் அவர்

    நல்ல இந்தியனாகவும் நல்ல இந்துவாகவும் சிறந்த ராஜதந்திரியாகவும் விளங்கிய தியாக தலைவர் அவர், ஒருவகையில் வீரசிவாஜியின் மறுபிறப்பு அவர்

    பிரதமராகும் வாய்பிருந்தும் கொஞ்சமும் சுயநலமின்றி உள்துறையில்தான் இத்தேசத்தை காக்கும் வாய்ப்பு உண்டு என சொல்லி ஏற்று அதனை சாதித்தும் காட்டியம் மாமனிதர் பட்டேல்

    இத்தேசத்தின் சர்தார் எனும் சொல்லுக்கு மிக பொருத்தமானவர் அவர். ஆம் இத்தேசத்தின் தலைவன் அவரே தான்.

    இத்தேசம் காலம் தந்த அந்த மாமனிதனை அவர் நினைவுநாளில் வாழ்த்தி வணங்குகின்றது

    அந்த மாமனிதன் காந்தியினை எதிர்த்தார், நேருவினை எதிர்த்தார் என்பதால் காங்கிரஸார் அவரை ஒதுக்கினார்கள் பட்டேலுக்கு பெரும் துரோகம் இழைக்கபட்டது

    ஆனால் பாஜக அரசுதான் அவருக்குரிய அங்கீகாரத்தை கொடுத்தது

    அவர்கள்தான் பட்டேலுக்கு மிகபெரும் சிலை திறந்தார்கள், பட்டேல் பாஜகவுக்கான அடையாளம் என்பது சரியல்ல, அவர் தேச தலைவர்களில் ஒருவர்

    அவர் படமும் காந்தி நேரு படங்களைவிட அதிகமாக இங்கே கொண்டாடபட வேண்டும்
    இந்திய ரூபாயிலும் இந்திய அரசின் அடையாளங்களிலும் தயக்கமின்றி அந்த மனிதனை சேர்க்கலாம் காரணம் அவன் இல்லையென்றால் பரந்த இந்த தேசமில்லை இந்த அடையாளங்கள் இல்லை

    அந்த தேசதலைவனுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்படி கரன்ஸி முதல் காவல் நிலையம் வரை அவர் படம் வைக்கபடவேண்டும், அதுதான் அவருக்கான அங்கீகாரம்

    இத்தேசம் 3 துண்டுகளாய் உடைய மனபூர்வமாக ஆசிவழங்கிய காந்தி, அது இன்னும் பல்நூறு துண்டுகளாக உடைந்தாலும் சம்மதம் என இருந்த நேரு போன்றோருக்கு கொடுக்கபடும் கவுவரவத்தை விட இந்த தேசத்தை ஒரே நாடாக்கிய அந்த மாமனிதனுக்கு எவ்வளவு பெரும் கவுரவம் கொடுக்கபடவேண்டும்?

    அதை இன்னும் இத்தேசம் செய்யவில்லை, விரைவில் செய்யும் என நம்புவோம்

    இத்தேசம் ஒரே தேசமாக இருக்க வேண்டும் என பாடுபட்ட அந்த மாமனிதனுக்கு தேசத்தின் அஞ்சலிகள்.
    பட்டேலின் கனவுபடி இந்தியா ஒரே தேசமாக, பாதுகாப்பான தேசமாக வளர்ந்து நிலைத்திருக்க இத்தேசம் உறுதிமொழி எடுக்கின்றது

    ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லலாம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து , பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்கு என்பதிலெல்லாம் பட்டேலுக்கு உடன்பாடே இல்லை. காஷ்மீரை இந்தியாவின் பூரண பகுதியாக்குவதுதான் அவர் கனவு, ஆனால் நேரு விடவில்லை

    பட்டேலின் நெஞ்சில் குத்திய முள் அது, இந்த அரசு 370 பிரிவினை நீக்கி அந்த முள்ளை எடுத்துவிட்டது

    பட்டேல் சிலையினை விட அவருக்கு மகா பெருமையான விஷயம் அதுதான்

    இந்தியாவின் இரும்பு மனிதனுக்கு, லெனின், கரிபால்டி, பிஸ்மார்க், கமால் பாட்சா, மாவோ என்ற உலக‌ வரிசையில் வந்த மாமனிதனுக்குக்கு ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சார்ந்த‌ அஞ்சலிகள் நன்றி கண்ணீராய் கொட்டிகொண்டிருக்கின்றது

    வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

  3. இந்தியாவின் வரலாறுகளெல்லாம் பெண்களை முன்னிட்டே நடந்திருக்கும், அதர்மம் உச்சகட்டத்தில் ஆடியபொழுது பெண்களை கருவியாக வைத்தே இங்கு தர்மத்தை பிரபஞ்சம் மீட்டெடுத்திருக்கும்

    அது ராமாயணத்தில் சீதை, பாரதத்தில் பாஞ்சாலி, மதுரையில் கண்ணகி என பல இடங்களில் அழுத்தமாக காட்டபடும் காட்சி

    அதே வரலாறு 16ம் நூற்றாண்டில் ஈரானியர் ஆப்கானியர் ஆட்சியில் இம்மண்ணில் திரும்பிற்று, அதை செய்ய ஜீஜாபாய் எனும் அதிசயமான இரும்பு பெண்மணியினை பிரபஞ்சம் இந்து பெண்ணாக அனுப்பிற்று

    அவளே இங்கு தன் மகன் மூலம் இந்துராஜ்ஜியம் நிறுவினாள், அவளாலே மாபெரும் திருப்பங்கள் அன்று அதிசயமாக நடந்து, அவள் கொடுத்த எழுச்சியாலே இன்று இங்கு இந்து ராஜ்ஜியம் அமைந்து இன்று பேரெழுச்சிபெற்று வருகின்றது

    இந்திய வரலாற்றில் இந்து பாரம்பரியத்தை மீட்டெடுத்த வீரசிவாஜி, அவனை உருவாக்கினாள் ஜீஜாபாய்

    எல்லாம் இழந்து கடைசியில் பாஞ்சாலி மானத்துக்காய் துரியன் அவையில் கதறியது போல் தேசமும் சனாதான தர்மமும் கதறியபொழுதுதான் மாவீரன் சிவாஜி அன்னை பவானியின் அருளால் தோன்றினான், தாய்நாட்டின் மானம் காத்தான்

    வீரசிவாஜி எனும் திருமகன் பெரும் ஆச்சரியம். எத்தனையோ இந்துமன்னர்கள் ஆப்கானியரிடம் தோற்ற இடத்தில் ஒதுங்க இடமில்லாதவனாக, நாலுபேரை சேர்க்க பணமில்லாதவனாக இருந்த அந்த சாமான்யன் பெரும் சக்தியாய் எழும்பி முதல் இந்து மன்னனாக அவுரங்கசீப்புக்கு எதிராக முடிசூட்டி கம்பீரமாக அமர்ந்ததெல்லாம் சிலிர்க்க வைக்கும் வரலாறு

    ஆனால் அந்த வீரசிவாஜி தனிமனிதர் அல்ல, இங்கு பல நூறு ஆண்டுகளாக இந்துமதத்துக்கு சவால் வந்தபொழுதெல்லாம் எதிர்த்து நின்ற எத்தனையோ ஆன்மாக்களின் மறுவடிவம்

    ஆம் இந்தியா என்பது எல்லா வல்லரசுகளாலும் விரும்பபட்ட செல்வந்த நாடு, இந்த உலகில் அன்று யாரிடமெல்லாம் பெரும் படை உண்டோ அவர்களெல்லாம் இந்தியாவினை நோக்கி வருவது வாடிக்கை, வந்து தங்கள் மதம் கலாச்சாரம் என புகுத்தி வளமான இந்தியாவினை தங்கள் சொத்தாக துடிப்பதும் வழமை
    இந்துமதம் எனும் அருமையான வாழ்வியல் முறை அந்த செல்வத்தை ஏற்படுத்தியிருந்தது, அதே வாழ்க்கை முறை பலமான ராணுவத்தையும் கொண்டிருந்தது

    இந்தியாவினை வென்று அதை தக்கவைக்க அதன் முதுகெலும்பான இந்துமதம் ஒழிக்கபட்டு தங்கள் மதம் நிறுவபட்டால் தவர வேறு சாத்தியமில்லை என்பது எதிரிகளின் கனக்கு, அதில் தவறொன்றும் இருக்க முடியாது ஆட்சியின் நீதி அது

    ஆனால் இந்துமதம் தன்னை அழிக்க வந்தவனையெல்லாம் அடித்து விரட்டி கொண்டே இருந்தது, அடித்து விரட்டமுடியா காலம் இருந்தாலும் அவன் இங்கே நிம்மதியாக வாழ அது விடாமல் தன் எதிர்ப்பினை கொடுத்து கொண்டே இருந்தது

    ஒரு கட்டத்தில் இந்தியா முழுக்க இஸ்லாம் என அவுரங்கசீப் மிகபெரிய நடவடிக்கையில் இறங்கியபொழுது அம்மதம் வீரசிவாஜி என்பவரை உருவாக்கி அவுரங்கசீப்பின் கனவை தூள்தூளாக்கியது, காலத்தால் மிக சரியாக வந்தவர் வீரசிவாஜி

    சிவாஜி ஏன் உருவானார் என்றால் இத்தேசம் கடந்த வடுக்களை திரும்பபார்த்தல் வேண்டும், சிவாஜி அந்த வரிசையில் வந்த மாவீரன்

    முதன் முதலில் இந்தியாவினை கைபற்ற துடித்த அந்நியன் அலெக்ஸாந்தர், அவனை தொடக்கத்திலே முறியடித்து திருப்பி அனுப்பினார் இந்து மன்னர் புருஷோத்தமன்

    அவனுக்கு பின் செலூகஸ் எனும் கிரேக்கதளபதி கடுமையாக ஊடுருவ அவனை நொறுக்கி தள்ளினான் சாணக்கியன் உருவாக்கிய சந்திரகுப்த மவுரியன்

    இதெல்லாம் கிமு 300களின் வரலாறுகள்

    தேசத்தின் அடுத்த ஆபத்து அசோகனுக்கு அடுத்த காலம் தோன்றிற்று, அசோகனின் புத்த கொள்கையால் இந்தியா வலுவிழக்க சாகர்கள் எனும் அந்நியர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்

    அவர்களை எதிர்த்து விரட்டினான் விக்ரமாதித்தன், இன்றைய மத்திய பிரதேசமான‌ அன்றைய அவந்தி நாட்டில் தோன்றினான். உஜ்ஜையினி காளியின் வழிகாட்டலில் சாக்ர்களை சம்ஹாரம் செய்தான் விக்ரமாதித்தன்
    இந்து அரசனாய் இந்துஸ்தானத்தை காத்தான் விகிரமாதித்தன்

    விக்ரமாதித்தனுக்கு பின் சாகர்கள் மீண்டும் அச்சுறுத்தல் கொடுக்க மாவீரன் சமுத்திரகுப்தன் எழுந்து இந்தியா வெங்கும் சாம்ராயம் எழுப்பி தேசத்தின் காவலாகி குப்த வம்ச தலைமகனாய் சாகர்களை ஒடுக்கினான் இந்து மன்னன் சமுத்திரகுப்தன்

    இவர்களுக்கு பின் ஹூணர்கள் எனும் கொள்ளையர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல அவர்களை அடித்து விரட்டினான் ஹர்ஷர் மகாராஜ். அவன் ஒரு இந்து மன்னனே, அவனை புத்தமத அரசனாக சித்தரித்ததெல்லாம் வரலாற்று திரிபு

    இப்படி புருஷோத்தமன் முதல் ஹர்ஷர் வரை அரும்பாடுபட்டு இந்துஸ்தானம் காக்கபட்டது, இந்துமதத்தின் ஆபத்துக்கள் களையபட்டன‌

    இந்நிலையில்தான் அரேபியாவில் நபிபெருமானின் காலத்துக்கு பின் மிகபெரிய சக்தியாய் கலீபாக்கள் எழும்பினார்கள், இவர்களும் நாடு பிடித்து மதம் மூலம் ஆட்சி செய்யும் வித்தைக்கு தப்பவில்லை

    அவர்கள் இந்தியாவில் ஊடுருவினார்கள், கிபி 700 வாக்கில் இது நடந்தது

    அவர்கள் எல்லையில் இருந்த இந்து மன்னர்களை அறம் அற்று தாக்கினர், அதாவது போர் அறமற்று இந்திய யானைகளின் தும்பிக்கையினை வெட்டுதல், யானைக்கு தீக்காயம் ஏற்படுதுதல், குதிரைகளை கொல்லுதல், தீ வைத்தல் என ஏகபட்ட கொடூரமான வழிகைகளை கையாண்டார்கள்

    இதில் தொடக்கத்தில் கலீபாக்களின் தளபதி மீர்காசிம் என்பவனுக்கு வெற்றி கிடைத்தது, ஆனால் மாவீரன் பாபா ராவல் என்பவன் அந்த முகமது காசிமை விரட்டி அடித்து கலீபாக்களின் ஆட்சி பரவாமல் காத்தான்
    அவன் பெயரால் உருவான நகரமே இன்றைய பாகிஸ்தானின் ராவல் பிண்டி, அது ராவல் எனும் இந்து மன்னன் இஸ்லாமிய கலீபாக்களை வென்றதால் உருவாக்கபட்ட அடையாளம்

    அடுத்த 200 ஆண்டுகள் அமைதி நிலவியது, அதன் கடைசியில் கிபி 970களில் ஆப்கனின் கஜினி முகமது பெரும் அச்சுறுத்தலானான்

    அவன் ஆட்சி புரியும் நோக்கில் வந்தவன் அல்ல, வறண்ட இந்திய செல்வத்தை கொள்ளையிட்டு ஓடும் வகை, அவனை பலமுறை அடித்து விரட்டினான் இந்திய மன்னன் ஜெயபாலன்

    கஜினியால் கொள்ளை அடித்து ஓடமுடிந்ததே தவிர ஆட்சி அமைக்க முடியவில்லை

    இந்தியாவில் கோரி முகமது காலமே இந்தியாவில் ஆப்கன் ஆட்சி நிலைபெற்ற காலம் ஆனால் அது சுலபமாக நடக்கவில்லை

    கோரியினை இந்திய பெண்ணரசி நாயகி தேவி கோரியினை விரட்டி அடித்தாள் அவளுக்கு பின் மாவீரன் பிரித்வி ராஜன் கோரியினை பலமுறை விரட்டி அடித்தான்

    பின்னர் பிரித்வி ராஜனுக்கும் கன்னோசி மன்னனுக்கும் இடையே நடந்த சிக்கலில் உள்ளே வந்த கோரி பிரித்வியினை வஞ்சகமாக பிடித்து குருடாக்கி , கன்னோசி மன்னனையும் ஒழித்து தன் அடிமை குத்புதீனை ஆட்சியில் அமர்த்தினான்

    ஆனால் கோரியினை கொன்றுவிட்டுத்தான் மாண்டான் பிருத்வி, குத்புதீனை தன் அரசனை தவிர எவனையும் ஏற்காக உதய்பூர் பட்டத்து குதிரை தன் மேல் ஏற முயன்ற குத்புதீனை தள்ளிவிட்டு மிதித்தே கொன்றது

    இந்தியாவில் கோரி தொடங்கி வைத்த அந்த ஆப்கானிய ஆட்சிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு பெருகி கொண்டே வந்தது, அதே நேரம் ஆப்கானியர் வடக்கு ஆசியா முழுக்க இருந்து உஸ்பெக், தஜிக், அரேபியா என எங்கிருந்தெல்லாமோ ஆட்களை கொண்டு படைகளை பெரிதாக்கினர்

    1300ம் ஆண்டுக்கு பின் ஆப்கானியரின் ஆட்சி வலுத்தது ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதிகொண்டும் இருந்தார்கள், இந்த மோதலில் இந்து மன்னர்கள் தங்கள் ஆட்சி அமைக்க முயன்றும் பார்த்தார்கள்

    இந்து மன்னர்கள் அக்கால ராஜதந்திரத்தை கையாண்டார்கள், அதாவது ஆப்கானியருக்கு தேவை பணம், அது ஒரு நாட்டில் விவசாயமும் தொழிலும் நடந்தால் வரும், ஆப்கானியருக்கு இந்தியர்களை போல் உழைத்து செல்வம் சேர்க்க தெரியாது

    இன்னொரு புறம் ஆப்கானியரை எதிர்த்தே கொண்டிருந்தனர் இந்துக்கள், இதனால் முழு இந்து ஒழிப்பு சாத்தியமில்லை சாத்தியமானால் தாங்கள் வாழமுடியாது எனும் நிலைக்கு ஆப்கானியரும் சிக்கினர்
    இதனால் இந்துக்கள் ஆப்கானியருக்கு வரிகட்டி தங்களை காத்து கொண்டனர், ஆப்கானியரும் வரி என்ற பெயரில் இந்து அரசர்கள் பலம் பெற்றுவிடாதபடி வசூலை உறிஞ்சினர்

    ஆம், பணமிக்க அரசு எளிதில் பலமான ராணுவத்தை உருவாக்கும் என்பதால் இந்துக்களிடம் சல்லிகாசு தங்க கூடாது என்பது ஆப்கானியர் திட்டம்

    வடக்கே இப்படி நிலமை மாறியது ஆனாலும் ஆங்காங்கே இந்துக்கள் திடீரென எழுவதும் மோதுவதுமாகவே இருந்தார்கள்

    இடையில் குரூஸ்கான் என இந்து ஒருவன் இஸ்லாமிய வேடமிட்டு இஸ்லாம் மன்னன் என டெல்லியில் அமர்ந்து இந்து ஆட்சி நடத்தியிருக்கின்றான், இஸ்லாமிய வழிபாட்டுதலம் அப்புறபடுத்துதல் இந்து ஆலயம் புதுபித்தல் என அவன் மாறுவேடமிட்டு இந்து ஆட்சியினை நிறுத்தினான்

    ஆனால் ஆப்கானியர் அவனை அடையாளம் கண்டு கொன்று போட்டனர், வடக்கே ஆப்கானியர் கொடி பறந்தது

    தெற்கே தக்காணத்தில் முதல் இஸ்லாமிய ஆட்சி அலாவுதீன் கில்ஜி காலத்தில் நடந்தது, அவனின் தளபதியான ஆப்ரிக்கன் மாலிக்காபூர் இங்கே படையெடுத்தான்

    சுல்தானிய அரசில் ஏகபட்ட ஆப்ரிக்க அடிமைகள் உண்டு, இவர்கள் தளபதிகள் முதல் பிரதம அமைச்சர்கள் வரை பணியில் இருந்தார்கள், அரேபிய அடிமைசந்தையில் வாங்கபட்டவர்கள் இவர்கள்

    இந்த அடிமைமுறைதான் பின்னாளில் அமெரிக்காவுக்கு ஆப்ரிக்கர் கடத்தபட்டு விற்கும் காலம் வரை தொடர்ந்தது

    இந்த மாலிக்காபூரும் இன்னும் பல ஆப்ரிக்க அடிமைகளும் இந்த தொடரில் அடிக்கடி வருவார்கள்
    (கில்ஜி காலம் இந்துக்களுக்கு விடபட்ட சவால் இந்திய பெண்களும் பொன்னும் தேடி தேடி அவன் ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் இந்துக்களின் மிகபெரிய கொடுமையான காலம்)

    மாலிக்காபூர் மகா கொடுமையான தளபதி, மதுரை வரை படையெடுத்து இந்து ஆலயங்களை நாசமாக்கி கொள்ளை அடித்தவன் அவனே, அவனுக்கு பின் முகமது துக்ளக் வந்தான் அவனும் தென்னகத்தை ஆக்கிரமித்தான்

    ஆனால் ஆப்கானியருக்குரிய இனமோதல் அங்கும் தொடர்ந்தது அதில் தென்னகம் பாமினி சுல்தான் மதுரை சுல்தானியம் என பிரிந்தது

    இந்த காலத்தில்தான் கிபி 1330களில் விஜயநகர சாம்ராஜ்யம் எழும்பி பாமினி சுல்தான்களை கட்டுபடுத்தி மதுரை சுல்தானியத்தை கருவறுத்தது

    ஆப்கானியருக்கு எதிராக எழும்பிய முதல் இந்து சாம்ராஜ்யம் அதுதான், ஆனால் அதுவும் 1500களில் பலமிழந்தது

    அதே நேரம் வடக்கே ஆப்கானிய சாம்ராஜ்யமும் வலுவிழந்தது, அவர்களை வீழ்த்த உதயபூர் ராஜபுத்திர மன்னன் சங்கரசிம்மன் தலமையில் டெல்லியில் ஆப்கானிய வம்சத்தை கருவறுக்க கூடினர்

    அவர்களை சங்கரசிம்மன் தலமையில் இந்துக்கள் வெற்றிகொண்டு பெரும் மிரட்டல் விடுத்த நேரம்தான் பாபர் இந்தியாவில் தலையிட்டான்

    பாபர் ஒரு உஸ்பெக் இனத்தவன், அவன் இயற்பெயர் வேறு பாபர் என்றால் பாயும் புலி என பொருள், மிக பலமான அவன் பெரும் படையோடு இந்தியாவுக்குள் வந்தான்

    சங்கரசிம்மன் படைகளோ பாபரும் லோடியும் மோதட்டும் எஞ்சியவனை நாம் ஒழிக்கலாம் என காத்திருந்தார்கள், எதிர்பார்த்தபடியே பாபர் லோடியினை வென்றான்

    ஆனால் பாபரை முறிய அடித்தான் மாமன்ன சங்கரசிம்மன், பாபர் தோல்வியின் விளிம்பில் இருந்தான் அவனுக்கு இருதேர்வுகளே இருந்தன‌

    ஒன்று ஆப்கனுக்கு ஓடுவது இன்னொன்று சங்கரசிம்மனுக்கு வரிகட்டி டெல்லியில் நீடிப்பது இந்த இரண்டாம் வகையினை தேர்ந்தெடுத்தான் பாபர்

    ஆனால் சங்கரசிம்மன் இறுக்கமாக பாபர் வெளியேறவேண்டும் என மிரட்டியபொழுது தந்திரமாக சங்கரசிம்மனின் தளபதிகள் சிலரை விலைக்கு வாங்கி சிம்மனின் படைகளை உடைத்து வெற்றிபெற்றான் பாபர்

    இந்திய வரலாறு அதில்தான் மாறிற்று, சித்தூரில் இன்றும் அந்த சங்கர்சிம்மனின் நினைவு அடையாளங்கள் உண்டு

    எனினும் சங்கரசிம்மனின் எழுச்சி இந்துக்களிடையே பெரும் வேகத்தை கொடுத்த நிலையில் இந்துக்களோடு அனுசரையான ஆட்சி என மெல்ல ஆட்சியினை தொடங்கினான் பாபர்

    எனினும் பாபர் ஆப்கன் திரும்பி அங்கே இறந்ததும் வரலாறு, இந்தியாவில் அவர் ஏன் தங்கவில்லை என்பது மர்மமே

    பாபருக்கு பின் அவர் மகன் ஹூமாயுன் அரசரானார்

    ஆனால் அவனுக்கு பின் அவன் மகன் ஹூமாயுனை விரட்டினான் ஷெர்ஷா எனும் இந்து. அவனை தொடர்ந்து ஹேமந்த் என்பவரும் இந்து ஆட்சி நடத்தினார்

    எனினும் வழமையான வஞ்சனையில் ஆட்சிக்குவந்தது மொகலாய வம்சம், காரணம் இந்துக்களிடம் எளிதில்படை திரட்டும் பலம் இல்லை, கொஞ்சம் நாட்களும் ஆட்களும் பணமும் அவசியமாய் இருந்தது ஆனால் மொகலாயருக்கு அது எளிதாய் இருந்தது

    மறுபடியும் ஆட்சி மொகலாயருக்கு சென்றபொழுது ஜலாலுதீன் மன்னரானான், ஆனால் மிகபெரிய எதிர்ப்பு அவனுக்கு வந்தது, தாத்தா பாபரை போல ஆப்கனுக்கே ஓடும் அவசியமும் அவனுக்கு இருந்தது
    ஆம் ஹேமந்த் பெரும் எழுச்சியுடன் எழுந்தார் ஜலானுதீனுக்கும் அவருக்கும் பெரும் போர் மூண்டது, போரில் ஹேமந்த் தோற்றார் எனினும் அவர் மீண்டுவரும் ஆபத்து இருந்தது

    இந்துஸ்தானத்தில் இந்து எழுச்சியினை கண்ட அக்பர் மெல்ல பணிந்தார், ஹேமந்துடன் சமாதானம் எழுதி தழுவிகொண்டார், இந்து விரோதத்தை கைவிட்டார், எல்லா மதமும் சம்மதம் என்றார், இன்னும் இந்து அரசர்களுடன் மண உறவு கொண்டார்

    இப்படி இந்துக்களுடன் சமரசம் செய்ததால் அவர் மகா பெரியவர் எனும் “அக்பர்” என்றானார்
    இப்படி மொகலாய வம்சம் வடக்கே இந்துக்களுடன் உறவாடி அவர்களுடன் சரிக்கு சரி நடத்திய நிலையில் தெற்கே பாமினி சுல்தானம் ஐந்து துண்டாக உடைந்தது, ஆப்கானிய வழமை அது

    பலமான தலமை இருகும் வரை வாழ்வார்கள், தலமை மறைந்ததும் தனி தனியாக அரசு அமைத்து கொள்வார்கள் வலுத்தவன் மறுபடி பேரரசனாவான்

    அந்த பாமினி சுல்தான்கள் கோல்கொண்டா, பிஜப்பூர், அகமது நகர், பீதர், பேரர் என ஐந்து சுல்தானமாக பிரிந்தது

    இந்த சுல்தான்களை அடக்கி இந்தியா முழுக்க ஒரே இஸ்லாமிய சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்ற கனவு மொகலாயருக்கு உண்டு, இந்த பயம் இந்த தென்னக சுல்தான்களுக்கும் உண்டு

    இந்துஸ்தான் என்பது இந்தியர்களுக்கானது என்பதை அறவே மறந்து பல நூற்றாண்டுகள் ஆகியிருந்ததால் அவர்கள் இது தங்கள் தேசமாகவே கருதி ஆண்டுகொண்டிருந்தார்கள்
    இதில் மராட்டிய பகுதி இந்த அகமதுநகர் சுல்தான்களிடம் சிக்கியிருந்தது,
    அவர்களும் இந்துக்களுக்கு சில தளர்வுகள் வழங்கியிருந்தார்கள், அதனால் இந்துக்களும் அவர்கள் படைகளில் இருந்தார்கள்

    சுருக்கமாக சொன்னால் இந்துக்களுக்கு ஆட்சி உரிமை, அரசுரிமை என எதுவுமில்லை. அவர்கள் விவசாயம், ராணுவம் என சுல்தான்களிடம் வேலை செய்யலாம் ஆனால் ஆட்சிமொழி உருது அல்லது பாரசீகம் அரசமதம் இஸ்லாம்

    இவர்களுடன் சில இந்துமன்னர்கள் சமரசம் செய்து வரிகட்டினார்கள், அதாவது என்றாவது இஸ்லாம் சாம்ராஜ்யம் சரியும் அதுவரை தங்கள் இருப்பை தக்கவைப்பது என்பது அது, ஆனால் இவர்களை பலம்பெற விட கூடாது என்பது சுல்தானிய கணக்கு

    இப்படி ஆங்காங்கே பொம்மை இந்து சிற்றரசுகளும் இருந்தன‌

    இக்காலகட்டத்தில் இந்தியா முழுக்க பச்சை கொடி பறந்தது, இந்து ஆலயங்கள் மட்டுபடுத்தபட்டன , பல அழிந்தன, சில சுல்தானிய அரசமதமாக மாறின‌

    காவிகொடி அடையாளமே இல்லை, சாதுக்களின் உடலில் மட்டும் அது சுற்றபட்டிருந்தது, சமஸ்கிருதம் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து சில நூறாண்டுகள் ஆகியிருந்தன‌

    இஸ்லாமாக மாறினால் முன்னுரிமை என்றெல்லாம் ஆசைகாட்டபட்டது, 1300களில் ஏற்பட்ட அவர்கள் ஆட்சி அடுத்த 200 ஆண்டுகளில் இந்தியா முழுக்க ஏற்பட்டது, தென்னக விஜயநகர சாம்ராஜ்யமும் சரிந்திருந்தது
    அப்பொழுது டெல்லியில் ஜஹாங்கீர் ஆட்சி செய்து கொண்டிருந்தார், தேசம் முழுக்க இந்துக்கள் அடங்கி மெல்ல மறைந்து கொண்டிருந்தனர், பலர் நம்பிக்கை இழந்தனர்

    இந்துக்களின் பெயர் சொல்லவோ அவர்கள் அடையாளமாகவோ அவர்கள் உரிமையினை உரக்க சொல்லவோ, ஏன் இந்து நாடு என சொல்லவோ யாருமில்லா ஒரு அவல நிலை

    இந்து பார்மபரியம் மறைந்து கொண்டிருந்தது, இந்துமதம் வெறும் சித்தர்கள் சாமியார்கள் என மரத்தடியில் சுருங்கியது, இந்துக்களுக்கென எந்த உரிமையும் இல்லை, இந்து மன்னர்களும் ஆப்கானியருக்கு கட்டுபட்ட அடிமைகளாய் இருந்தனர், அவர்களும் வெகு சிலரே

    சுருக்கமாக சொன்னால் உழைத்து செல்வத்தை தரும் அடிமைகளாக மட்டு இந்துக்களை நடத்தியது சுல்தானிய ஆட்சி, அந்த வருமானமும் அவ்வப்பொது அழகு பெண்களும் தருவதற்காக மட்டும் இந்துக்களை வாழ அனுமதித்தனர்

    இந்த பின்னணியில்தான் மராட்டியத்தில் இன்றைய புனே அருகே இரு குடும்பங்கள் ஹோலி கொண்டாடின, அது 1500களின் அந்திம காலங்கள்

    1500களிலே அப்பகுதி பிஜப்பூர் நிஜாமிடம் வந்திருந்தது, அந்த நிஜாம் அடில்ஷாவிடம் தளபதியாக இருந்தவர் லக்கோஜி ஜாதவ்

    அந்த மராட்டியம் அகமதுநகர், பிஜப்பூர், மொலகாயர் என மூன்று சுல்தானியத்திடம் அடிமையாக இருந்தது, இதில் பிஜப்பூர் சுல்தானின் பகுதியில்தான் தென் மராட்டிய பகுதி இருந்தது அதில்தான் லக்கோஜி பணியாற்றினார்

    அது 1598ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, அன்று அவருக்கு பெண் மகவு பிறந்தது, அது சாதாரண குழந்தையாகத்தான் பிறந்தது

    இன்றைய மராட்டியத்தின் அமராவதி அருகிருக்கும் புல்தானா என்ற ஊரில்தான் அந்த பெண்குழ்ந்தை அவதரித்தது

    ஆனால் ராமாயண கோசலை போல, பாரத குந்திதேவி போல மிகபெரிய வீரனை பெற்று தர்மத்தின் காவிகொடியினை பறக்கவிட்டு இத்தேசத்தில் சனாதன தர்மத்தை ஏற்றிவைக்கும் ராஜமாதாவக போகின்றது என்பது மறைந்திருந்த விதியினை தவிர யாருக்கும் தெரியாது

    லக்கோஜி ஜாதவ் அந்த குழந்தையினை கையில் ஏந்தினார், ஜீஜாபாய் என பெயரிட்டார்

    அந்த பெண்குழ்ந்தை காளியின் அவதாரம் என்பதை பிரபஞ்சம் மட்டுமே அறிந்திருந்தது, எந்த அவதாரமும் தனியாக வருவதில்லை அப்படி வீரசிவாஜி எனும் மாபெரும் அவதாரத்துக்கு முன்னோடியாக அவன் அன்னையாக ஜீஜாபாய் என அவதிரித்தாள் அன்னை காளி

    இந்திய வரலாற்றின் இந்துமத அழிவினையும் இந்து பெண்களின் வலியும் கண்ணீரும் முழுக்க அறிந்திருந்தவள் ஜீஜாபாய், அவளின் அந்த வலியெல்லாம் அதை விடுக்கும் கனவெல்லாம் தன் கருமேல் இறக்கி வைத்தவள் அவளே

    அவள் இல்லையென்றால் மாவீரன் சத்ரபதி சிவராஜ் மகராஜ் உருவாகியிருக்க முடியாது

    இந்திய பெருநாடும் அதன் இந்துமதமும் பெண்களை வழிபட்டு நிற்பவை, அதன் வழிபாட்டிலும் வாழ்வியலிலும் மதத்திலும் பெண்களுக்கு தனி உயர்ந்த இடம் உண்டு

    அப்படி கோரியினை விரட்ட முயன்று உயிர்விட்ட மாதேவி நாயகி தேவியின் வாரிசாக வந்து அந்த கோரி ஏற்படுத்திய டெல்லி சுல்தானியத்தை தன் மகன் மூலம் அகற்றியவள் அந்த மாதரசி ஜீஜாபாய்

    வெறும் படைவீரனின் மனைவியாக அமர்ந்தவள் தன் மகனை தனியே வளர்த்து, கணவன் துணையின்றி தனியே வளர்த்து அவனில் இந்துராஜ்ஜிய கனவை ஊன்றி விதைத்து, அவனின் ஒவ்வொரு போரிலும் அசைவிலும் துணையிருந்து, அவன் தளர்ந்த நேரமெல்லாம் தேற்றி எவ்வளவோ இழப்புகள் வலிகள் பெரும் போராட்டங்கள் நடுவில் அவனை இந்து அரசனாக்கி முடிசூட்டி பாரத கட்டத்தில் தனி இந்து அரசன் என முடிசூட்டி இந்துமதம் காத்ததெல்லாம் வீரவரலாறு

    அந்த மங்கையர் திலகம், காளி அவதாரம் ஜீஜாபாய்க்கு இன்று பிறந்த நாள்

    இந்திய வரலாற்றினையே திருப்பி போட்டு அழிவில் இருந்த இந்துஸ்தானத்தையும் இந்து மதத்தையும் காத்து மீட்டெடுத்து வாழவைத்த அந்த வீரதாய்க்கு வீரவணக்கம் செய்கின்றது இந்துஸ்தானம்

    ஜெய்ஹிந்த்

    ஜெய் பவானி.. ஜெய் மகாதேவா

  4. “உடல் பலவீனத்தையோ, மனப் பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் நீங்கள் அணுகக்கூடாது என்பதே நான் உங்களுக்குப் போதிக்க விரும்பும் முதன்மையான உபதேசம் ஆகும்.

    மிகப்பெரிய உண்மை இது வலிமைதான் வாழ்வு; பலவீனமே மரணம். வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, நிரந்தரமான வளவாழ்வு, அமரத்துவம் ஆகும். பலவீனம் இடையராத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான்.

    பலவீனத்திற்கு பரிகாரம், ஓயாமல் பலவீனத்தை குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான்.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

    வலிமையோடு இருங்கள், மூடக்கொள்கைகளை உதறித் தள்ளுங்கள். எனக்கு வயது ஏற ஏற, எல்லாம் ஆண்மை என்ற ஒன்றில் அடங்கியிருப்பதாகக் காண்கிறேன். இதுவே நான் தரும் புது வேதம்.

    உபநிஷதங்களிலிருந்து வெடிகுண்டைப் போலக் கிளம்பி, அறியாமைக் குவியல்களின் மீது வெடிகுண்டைப் போன்று வெடிக்கும் சொல் ஒன்றை நீ காண்பாயானால், அந்தச் சொல் அஞ்சாமை என்பதுதான்.

    உங்கள் குழந்தைகளைச் சிறுவயதிலேயே வலிமை உடையவர்களாக ஆக்குங்கள். பலவீனத்தைச் சொல்லித்தராதீர்கள். அவர்களை வலிமையானவராக ஆக்குங்கள். தைரியமானவர்களாக, எல்லாவற்றையும் வெல்பவர்களாக, எல்லாத்துன்பங்களையும் ஏற்பவர்களாக ஆக்குங்கள். அவர்களைத் தங்கள் கால்களிலேயே நிற்பவர்களாக உருவாக்குங்கள்.

    தைரியசாலியால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும். சிங்கத்தையும் நரியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வேற்றுமை தெரியும்.

    எந்தக் காலத்திலும் தைரியத்தை இழக்காதே. சாப்பிடும்போதும் உடுத்தும்போதும் படுக்கும்போதும் விளையாடும்போதும் மகிழ்ச்சியிலும் நோயிலும் எப்போதும் மிகவும் உயர்ந்த ஒழுக்கத்துடன் கூடிய தைரியத்தை உன்னிடமிருந்து வெளிப்படுத்து. அதன் பிறகுதான் மகாசக்தியான ஜகன்மாதாவின் கருணையைப் பெறுவாய்.

    அளவற்ற பலமும் பெண்ணைப்போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன் ஆவான்.

    உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்கும் கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.

    தாய்நாடு, மக்கள் சமுதாயம், சத்தியம் இவற்றை உண்மையாகவே நேசித்து எவன் பணிவுடன் நடக்கிறானோ, அவனால் உலகத்தையே ஓர் அசைப்பு அசைத்துவிட முடியும். ஆற்றல்களுக்கு எல்லாம் அடிப்படையாய் இருப்பது ஒழுக்கமேயன்றி வேறு எதுவும் அன்று.

    எல்லாரிடத்திலும் சம அன்பு கொள்ளுதல் மிக மிகக் கடுமையான ஓர் ஒழுக்கம் ஆகும். இந்த ஒழுக்கம் இன்றி முக்தி கிட்டாது.

    உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒழுக்கமும் ஆண்மையும்தான். கோழைத்தனம் இன்மை, பாவமின்மை, பலவீனமின்மை இவையே தேவை. மற்றவை தாமாகவே உங்களைத் தேடி வரும். உள்ளத்தை தூண்டக்கூடிய, உணர்ச்சியை எழுப்பக்கூடிய கேளிக்கை, களியாட்டங்களுக்குச் செல்ல வேண்டாம். நாடக மேடைகளை நாட வேண்டாம்.

    சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

    கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.

    ஒரு காரியம் செய்யும் பொது உண்டாகும் பலனில் ஏற்படும் அக்கறையை விட அந்த காரியத்தை செய்யும் முறைக்கே அதிக அக்கறை கொடுக்க வேண்டும் . நான் கற்று கொண்ட பாடங்களிலே முக்கியமானதும் , பெரியதும் இதுவேயாகும் , இந்த ஒரு பாடத்திலிருந்து நான் பல பாடங்கள் கற்று கொண்டே வருகிறேன் .

    உயர்ந்த பீடத்தில் நின்று உன் கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு, ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள் என்று நீ சொல்லாதே. மாறாக, அவனுக்கு கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்திகொள்ள முடிந்ததை நினைத்து அந்த ஏழை அங்கே இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத்தன்மையும் உன்னை வந்தடையும்.

    உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செய்வதைக்காட்டிலும் சிறந்த அறம் வேறு இல்லை. உண்மையோடு ஒருவன் இந்த ஓர் அறத்தைக் கடைபிடிப்பானானால் அவன் முக்தி பெறுவது நிச்சயம்.

    உங்கள் சகோதரர்களுக்குத் தலைமை வகிக்க முயல வேண்டாம். அவர்களுக்கு ஊழியமே செய்யுங்கள். தலைமை வகிக்கும் பைத்தியம், வாழ்க்கை என்ற கடலில் எத்தனையோ பெரிய கப்பல்களையெல்லாம் மூழ்க அடித்துவிட்டது. மரணம் நேரினும் சுயநலம் கருத வேண்டாம். தொண்டை மறக்க வேண்டாம்.

    உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.
    செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.

    தீயவர்களுக்கு உலகம் தீய நரகமாகத் தெரிகிறது. நல்லவர்களுக்குச் சுவர்க்கமாகத் தெரிகிறது. அருளாளர்களுக்கு அருள்வடிவமாகத் தெரிகிறது. பகையுணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்பு மயமாக தெரிகிறது. சண்டை சச்சரவு செய்வோருக்குப் போர்க்களமாகத் தெரிகிறது. அமைதியாளருக்கு அமைதிக் களஞ்சியமாக தெரிகிறது. முழுமையுற்ற மனிதனுக்கு எல்லாமே தெய்வமாகத் தெரிகிறது. அவன் அனைத்தையும் தெய்வமாகவே காண்கிறான்.

    இறைவனே இன்று உலகமாகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழுக்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.

    நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்யக்கூடாது?

    முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.

    இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

    அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

    துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

    உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

    மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும்,இந்துக்கள் சிறந்த இந்துக்களாகவும் வாழ வேண்டும் . ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.

    நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.

    இந்தியா அழிவே இல்லாத ஆன்மீக பூமி. இந்த நாடு இப்போது வீழ்ச்சியடைந்துவிட்டது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த நாடு நிச்சயமாக எழுச்சி பெறும். எழுந்து நிற்கும் அதன் முழக்கம் உலகம் முழுவதையுமே பிரமிக்க வைக்கும். கடலில் பெரிய அலைகள் எந்த அளவு பின்வாங்குமோ, அந்த அளவு முன்னோக்கி அதைவிட ஆற்றலோடு மறுபடியும் எழும்”

    – ஞானபெருமகன் விவேகானந்தர்

  5. கர்த்தர் அழைக்கிறார் ஜப ஊழிய திருச்சபை says:

    நந்தி பொறுமையாக அமர்ந்து காத்துக்கொண்டே இருக்கும் என்று ஒரு கட்டுரையில் படித்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. காசியிலும் நந்தி பொறுமையாக அமர்ந்து காத்துக்கொண்டே இருக்கும். அந்த ஒர் உயிர் சக்தியின் வரவுக்காக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *