இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்

மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரே ஒரு கல்வெட்டுதான் சம்ஸ்கிருதத்தில் உள்ளது, மற்றவை எல்லாம் தமிழ்தான் ஆகவே இந்த மண்ணின் ஆன்மீக மரபில் சம்ஸ்கிருதத்திற்கு இடமில்லை என்று பேசுவதெல்லாம் அபத்தம் மட்டுமல்ல அதன் பெயர் நிர்மூடத்தனம் அல்லது அறிவொழுக்கமில்லாமை என அழைக்கலாம்..

இந்திய அரசாங்கம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் தன்னுடைய ஆணைகளை தருகிறது.பெரும்பாலும் அரசாணைகள் ஹிந்தியிலேயே இருக்கிறது.இதை நாளை ஒருவர் வந்து பார்த்து,இந்தியாவில் ஹிந்தி/ஆங்கிலம் என்கிற மொழியே இருந்தது.அதில் ஹிந்தி விஞ்சி நின்றது எனச் சொன்னால் எப்படி இருக்குமோ? அதுபோலதான் இவர்கள் பேசுவது உள்ளது..

முதலில் ‘மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்’ என்ற பெயரே தமிழ் கிடையாது.பலர் சொல்வது போல ‘மீனாட்சி’ என்று எழுதி,அதை ‘மீன்+ஆட்சி’ என பொருள்படுவது தவறு..மீன் போன்ற கண்களை குறிப்பதே ‘மீனாக்ஷி’..அக்ஷி என்றால் கண் எனப்பொருள்…இதனுடைய தமிழ் பதம் அங்கயற்கண்ணி ஆகும்.அதே போல சுந்தரேஸ்வரர் என்பதன் தமிழ் பதம் ‘சொக்கர்’ ஆகும்..’அங்கயற்கண்ணி – ஆலவாய் சொக்கர்’ என்பதே தேவார குறிப்பு.

இன்னும் ‘மதுரை’ என்கிற பெயரே தமிழ்தானா? என்பது இன்று வரை விவாதம்தான். காரணம் உத்தரகாசி – தென்காசி இருப்பதைப் போலவே உத்தர மதுரை என்கிற கிருஷ்ணன் பிறந்த வடமதுரைக்கும், நமது தென்மதுரைக்குமான தொடர்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.. பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு அந்த வாதத்தை வலிமையுற வைக்கிறது.

மதுரையின் பழமையான பெயர் ‘கூடல்’ என்றே சங்கப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது. அகுதை என்ற வேளிர்குடியினனிடம் இருந்த கூடல்நகரை,நெடுந்தேர் செழியன் என்ற பாண்டியன் கொற்கையிலிருந்து கைப்பற்றியதே கூடல் கைமாறியதை குறிக்கிறது..

கூடல் நகருக்கு பிற்பாடு மதுரை என்ற பெயர் பாண்டியர்களால் சூட்டப்பட்டது என்பதே புரிந்துகொள்ள வேண்டியது.அந்தப் பெயர் பாண்டியர்களின் சந்திரவம்ச தொடர்பில் இருந்து வந்ததா? என்பதை வெறுப்பற்ற ஆய்வுட்குட்படுத்த வேண்டும்.

அதே போல ‘கூடல்’ ‘மதுரை’ என்ற பெயர்களை விட பழையது ‘ஆலவாய்’ என ஒரு கருத்து உண்டு.இந்த இடத்தில் சங்கப்புலவர் பேராலவாயரை குறிப்பிட வேண்டும்.பழம்பெரும் பாண்டியனான பூதபாண்டியன் இறப்பையும்,அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறியதையும் அவரே குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமல்ல,நெடுந்தேர் செழியன் அகுதையிடமிருந்து கூடல் நகரை கைப்பற்றியதையும் குறிப்பிடுகிறார்.இவருடைய பெயரிலேயே ‘ஆலவாய்’ இருப்பது கவனிக்கத்தக்கது..

சைவர்களுக்கு தெளிவாகப் புரியும்,தேவாரம் வாசித்தவர்களுக்கும் தெரியும்.மதுரை நகரை ‘தென்கூடல் ஆலவாய்’ என்றே அப்பர்,சம்பந்தபெருமான் அழைத்தார்கள்.அதற்கு மிக முக்கியமான காரணம் அது சைவபுராணங்களோடு தொடர்பு கொண்டது என்பதே..

எல்லோரும் சொல்வது போல ஆலமரம் வாசலில் இருந்ததால் அது ‘ஆலவாய்’ என்ற பெயரை பெறவில்லை.’ஹாலாஸ்ய’ என்ற வடமொழி பெயரின் தமிழ் பதமே ஆலவாய்..’ஹாலாஸ்ய மாகாத்மியம்’ என்ற வடமொழி இலக்கியத்தில் இருந்தே ‘திருவிளையாடல் புராணம்’ மொழிபெயர்க்கப்பட்டது.

எப்படி ‘ஹாலாஹலா’ என்ற வடமொழி வார்த்தை ‘ஆலகாலம்’ என்று மாறுகிறதோ அதையொத்தே ‘ஹாலாஸ்ய’ என்பது ‘ஆலவாய்’ என்று மருவியிருக்க வேண்டும்.ஹலாயுதன் என்றால் பலராமனைக் குறிக்கும்,அதை தமிழில் ‘அலாயுதன்’ என ஆழ்வார் பாசுரங்கள் குறிப்பிடுவது போலவேதான் இதுவும்.

‘ஹாலா’ என்பது இறைவனின் கங்கணமாக திகழும் விஷம்பாம்பை குறிக்கும்.. ‘ஆஸ்ய’ என்றால் வாய் எனப்பொருள்.

திருவிளையாடல் புராணத்தின் படி,மதுரை நகரின் எல்லையை மன்னனுக்கு உணர்த்த இறைவன் தன் கங்கணமாயிருந்த பாம்பினை எடுத்து விட அது வட்ட வடிவமாகத் தன் வாலை வாயால் கௌவியது. அவ்வட்ட வடிவமே எல்லையாகக் கொள்ளப்பட்டது.இவ்வாறு நாகம் தன் வாயால் கவ்வி எல்லையைக் காட்டியதால் இத்தலம் ‘ஆலவாய்’ என்றழைக்கப்படுகிறது..

இப்படித்தான் ‘மதுரை – ஆலவாய்’ இரண்டுமே ‘மதுரா – ஹாலாஸ்ய’ என்ற மூலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்ற வலுவான வாதம் உள்ளது.இவற்றை கூடல் நகரை கைப்பற்றிய சந்திர வம்சத்து பாண்டியர்களே சூட்டுகிறார்கள் என்பதும் தெளிவானது.

இப்படியிருக்க ‘தமிழ்’ ‘வடமொழி’ என்று ஒற்றைப்படையாக ஒருபக்கம் உத்தி பிரியும் இருதுருவ நோக்குடன் அரசியல் பேசுவதெல்லாம் நகைப்புகக்குரியதாகும்..”ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறிகிலா” என்று இதே மதுரையில்தான் ஞானசம்பந்த பெருமான் பாடினார்.


நமது கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகள் பெரும்பாலும் மெய்கீர்த்தி,அரசாணைகளே. இன்று தமிழக அரசு எப்படி தன் ஆணைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் தருகிறதோ அப்படி அன்றுள்ள அரசு தன் ஆணைகளை வடமொழியிலும் தமிழிலும் தந்தது.எல்லா கோவில்களிலும் பெரும்பங்கு தமிழ்கல்வெட்டுகளே இருக்கும்.அது அத்தனையும் அரசாணை..

அந்த அரசாணைகளும்,அரசர்களின் செப்பேடுகளும் என்ன செய்தி சொல்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும்..அது இந்த தர்மத்துக்கு மாறாக எங்கே பேசியுள்ளது? கீழே உள்ள வேள்விக்குடி சாசனத்தை கவனியுங்கள்..

|| எண்ணிறந்த கோஸஹஸ்ரமும்,ஹிரண்ய கர்பமும்,துலாபாரமும் மண்ணின் இசைப்பல செய்து மறைநாவினர் குறைதீர்த்துங் கூடல் வஞ்சி கோழி மாடமதில் புதுக்கிஉ ||

“ஆயிரக் கணக்கில் பசுக்களை கொடுத்தும்,ஹிரண்யகர்ப்பம்,துலாபாரம் இவைகள் செய்தும்,வேதத்தினை ஓதும் அந்தணர்கள் குறைகளை தீர்த்தும்,கூடல் – வஞ்சி – கோழி மூன்று ஊர்களின் மாடம் திருத்தியும்..” என்று ஜடில பராந்தக நெடுஞ்சடையன் புகழ் பேசப்படுகிறது..

இந்த தர்மம் போதிப்பது எதை? வைதீக பண்பாட்டையா? அல்லது வேறேதேனும் ஒன்றையா?

மதுரைக் சுந்தரேஸ்வரர் கோவிலில் கீழ்க்கோபுரத்து இரண்டாம் நிலை தூணில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்கீர்த்தி கல்வெட்டு சொல்லும் செய்தி கீழே.

|| கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
 ஒருகுடை நீழல் இருநிலம் குளிர
 மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க
 நால்வகை வேதமு நவின்றுடன் வளர
 ஐவகை வேள்வியுஞ் செய்வினையியற்ற அறுவகை சமயமும் அழகுடன் திகழ ||
  • அதாவது,கலியுகம் தன் கொடுமையை செய்ய விடாமல் அதை அடக்கி செங்கோல் செலுத்தினான் பாண்டியன்..

‘இயல் – இசை – நாடகம்’ என்ற முத்தமிழும் முறைபட,’ரிக் – யஜூர் – சாம – அதர்வண’ என்கிற நால் வேதம் பெருக,’ரிஷி – தேவ – பித்ரு – பூத- மனுஸ்ய’ எனும் பஞ்ச மகா யக்ஞங்கள் சரியாகச் செயல்பட,’சாங்கியம் – யோகம் – மீமாம்ஸம் – வேதாந்தம் – நியாயம் – வைசேஷிகம்’ போன்ற அறுசமயங்கள் சிறப்பாக விளங்க சுந்தர பாண்டியனின் ஆட்சி இருந்தது என்கிறது இந்த சாசனம்..

அதுமட்டுமல்ல,”மனுநெறி தழைப்ப மணிமுடிசூடி” என மனுதர்மம் சிறப்புற்று விளங்க சுந்தர பாண்டியன் முடிசூடி ஆண்டான் என்கிறது..

|| மறைநெறி வளர மனுநெறி திகழ
 அறநெறிச் சமயங்கள் ஆறும் 
தழைப்ப || - சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) 
|| கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன் சிறப்ப
அருந்தமிழும் ஆரியமு அறுசமயத்தறநெறியும் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்க ||

- சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271)

‘நால்வேதம் – ஆறங்கம் – ஐவேள்வி – அறுசமயம் – தமிழ்/வடமொழி – மனுநெறி’ இவை தழைத்தோங்க ஆட்சி செய்கிறேன் என்றுதான் பாண்டியர்கள் வரிசையாக சொல்லிக் கொண்டார்கள். இதில் எங்கே தனித்தமிழ் மரபுள்ளது?


அதுமட்டுமில்லை,பாண்டியன் ஜடில பராந்தக நெடுஞ்சடையனின்(பொயு 765 – 815)’வேள்விக்குடி சாசனம் – ஸ்ரீவரமாங்கல சாசனம் – சின்னமனூர் சிறிய சாசனம்’,பராந்தக வீர நாராயணனின் (பொயு 880 – 905) ‘தளவாய்புர சாசனம்’ – இராஜசிம்ம பாண்டியனின் ‘சின்னமனூர் பெரிய சாசனம்’,வீரபாண்டியனின் ‘சிவகாசி சாசனம்’ என இவைதான் அடிப்படை சான்றுகளே..

எல்லா சாசனங்களும் முதலில் சம்ஸ்கிருதத்திலும் அடுத்தது தமிழிலும் உள்ளது.தங்களை சந்திர வம்சம் என்றும்,பாரதப் போரில் பாண்டவர்களோடு நின்று திருதராஷ்டிர புத்திரர்களை அழித்தவரென்றே சொல்கிறார்கள்.

சந்திரன் – புதன் – புரூரவஸ் – யயாதி வழிவந்த பாண்டியன் குலம் என்றே பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.அகஸ்தியனை புரோகிதனாக பெற்றவர்கள் என்றும்,அசுரர்களை தங்கள் தோள்வலியால் வென்றவரென்றே சொல்கிறார்கள்.

இது திடிரென சொல்லவில்லை நாம் முன்பு சொன்னபடியே,சங்ககாலத்திலேய புறநானூற்றில் ‘கருங்கை ஒள்வாள் பெரும்பயர் வழுதியை’ இரும்பிடர்தலையார் புகழ்ந்து பாடும் போது “நெஞ்சின், தவிரா ஈகை, கவுரியர் மருக!” என்று குறிப்பிடுகிறார்.

கௌரவர்களின் வழித்தோன்றலே! என்றுதான் பாண்டியனை போற்றுகிறார்.அகநானூறில் ஸ்ரீராமர் தனுஷ்கோடியில் வியூகம் வகுத்ததை குறிப்பிடும் பாடலில்,”வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பஞ்சவர் – கவுரியர்’ இரண்டுமே பாண்டியர்களின் மகாபாரத தொடர்பையே குறிக்கிறது.பாண்டிய என்பது ‘பாண்டு’ என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்து வலுவாகவே உள்ளது.. அதை ஒட்டியே சங்ககாலத்தில் இருந்து பிற்கால பாண்டியர் தங்கள் மகாபாரத தொடர்பை நீட்டி சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

|| மணிமாட கூடல்புக்கு மலர்மகளோடு வீற்றிருந்து மனுதர்சித மார்க்கத்தினால் குருசரிதம் கொண்டாடி ||

அதாவது,மணிமாடங்கள் உள்ள மதுரை சேர்ந்து செல்வத்தோடு,மனுநெறி காட்டிய வழியில் நின்று குருசரிதை கொண்டாடினான் என பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீவரமங்கல சாசனம் சொல்கிறது.

|| திருதராஷ்டிரர் படை முழுதும் களத்தவியப் பாரதத்து   பகடோட்டியும் ||

- தளவாய்புரம் சாசனம்.
|| பஞ்சவனென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில் வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண் தமிழும் வடமொழியும் 
பழுதறத்தான் ஆராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும்
மாரதர் மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும்
விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும் ||

|| மகாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் ||

மேற்கண்டது சின்னமனூர் பெரிய சாசனம் ஆகும்.

“பாண்டவர்க்குரிய பஞ்சவனெனும் பெயரை பெற்றவனும்,மதுரை மாநகர் கண்டு,அதற்கு மதிலமைத்த பெருமை பெற்றவனும் ஆவான்.தமிழையும், வடமொழியையும் ஒருங்கே கற்று ஆராய்ந்து அதில் பண்டிதர்களை விட மேலே நின்றான்..,பாரதப் போரில் தன் யானைப்படையை செலுத்தி மகாசேனாதிபதிகளை அழித்ததோடு,அர்ஜூனனின் வசுசாபத்தை நீக்கினான் பாண்டியன் என்கிறது”.

மகாபாரதத்தை தமிழ்படுத்தவே மதுராபுரியில் சங்கம் அமைக்கப்பட்டதாக பாண்டியர் செப்பேடு சொல்வதை ஆழமாக கவனிக்க வேண்டும்..


பிற்கால பாண்டியர்கள் மட்டுமல்ல,சங்ககால பாண்டியர்கள் மிகப்பழமையானவன் முதுகுடுமி பெருவழுதிதான்,பொயு.முன் 1 ம் நூற்றாண்டாகக் கூட இருக்கலாம்..அவனே ‘பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி’ என்றுதான் அழைக்கப்படுகிறான்..பல யாகங்களை செய்வித்து ஸ்ருதி மார்க்கம் பிழையாத பெருவீரனாக இருந்தான்..


அவன் வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு கொடுத்த நிலத்தை களப்பிரர் கைப்பற்றியதாக சொல்லி,முதுகுடுமி பெருவழுதி தன் முன்னோனுக்கு கொடுத்த ஆவணங்களை பராந்தக நெடுஞ்சடையனிடம் காட்டியே மீண்டும் பாகனூர் கூற்றத்தை சேர்ந்த வேள்விக்குடியை பெறுகிறான் நற்சிங்கன் என்ற அந்தணன்.


உறையூரும்,வஞ்சியும் கோழி கூவி விழிக்கிறது ஆனால் மதுரை வேதஒலி கேட்டு விழிக்கிறது என்கிறது ‘பரிபாடல்’.

|| பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல் அல்லதை –
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாதுளம் பேரூர் துயிலே ||

இப்படி சங்ககாலம் துவங்கி பாண்டி மாநகரம் வேதஒலி தழைப்ப, ஸ்ருதிமார்க்கம் பிழையாமலே இருந்தது.. அது தன்னுடைய பேரிருளை சந்தித்தது மாலிகாபூர் படையெடுப்பிலும்,அதை தொடர்ந்து அங்கே நடந்த மதுரை சுல்தானக ஆட்சியிலும்தான்..


சரியாக 711 வருடம் முன்பு 3 – ஏப்ரல் – 1311 அன்றுதான் படையெடுப்பாளன் மாலிகாபூர் மதுரையை நோக்கி வர தமிழகத்துக்குள் நுழைந்தான்.. அந்த நாட்கள் தமிழகத்தின் கொடுங்கனவாக மாறியது..

மதுரை – சிதம்பரம் – ஸ்ரீரங்கம் – கங்கை கொண்ட சோழபுரம் – விருத்தாச்சலம் – ராமேஸ்வரம் என எல்லா புண்ணிய தலங்களும் தாக்கப்பட்டது.. அப்போது மதுரை கோவில் முற்று முழுதாக இடிக்கப்பட்டு அதன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் ‘அமீர் குஸ்ரு’ போன்றவர்களே சொல்கிறார்கள்..இதன் காரணத்தால்தான் பழம்பெருமைமிக்க மதுரைக் கோவிலில் பொயு 13 ம் நூற்றாண்டுக்கு முன்பான கல்வெட்டுகள் எதுவுமே கிடைக்கவில்லை.. பொயு 1311 – 1378 வரை மதுரை மற்றும் தமிழகமே இஸ்லாமிய ஆட்சியின் கீழே சென்றது..

1365 – 1378 இந்த இடைப்பட்டை ஆண்டுகளில்தான் விஜயநகர அரசர் குமார கம்பண்ணர் தமிழகத்தை கவ்விய இருளில் இருந்து மீட்டார்.. மதுரை – ஸ்ரீரங்கம் – சிதம்பரம் என புகழ்பெற்ற கோவில்கள் மறுநிர்மாணம் அடைந்தது..

நிற்க. மதுரை கோவிலில் தமிழ் கல்வெட்டு,சம்ஸ்கிருத கல்வெட்டு என்றெல்லாம் பேசுபவர்கள் மாலிகாபூர் மற்றும் மதுரை சுல்தான்கள் ஆட்சியால் மீனாட்சி கோவில் முழுவதும் தரைமட்டமாக்கியதையும் அதை குமாரகம்பணர் மீட்டதையும் ஏன் பேச மறுக்கிறார்கள்? இங்கிருக்கும் கோவில்களை போலவேதான் நமது காஷ்மீர் – இன்றைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் இருந்தது.இன்று அவையெல்லாம் எங்கே?

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த கல்வெட்டுகளும்,கோவிலும், பண்பாடும் இந்த அளவுக்கு பிழைத்த ஒரே காரணம் விஜயநகர பேரரசுதான்.. ராஜமெளலி போன்ற ஒரு இயக்குனர், ஸ்ரீ குமாரகம்பண உடையாரின் வரலாற்றை சினிமாவாக எடுத்தால் இந்திய அளவில் மிகப்பெரிய வரலாற்று திறப்பாகவும், தென்னிந்திய மக்களுக்கே அது பாடமாகவும் அமையலாம்

இது தனி.. தமிழ் ஆன்மீகம்,தெலுங்கு ஆன்மீகம் என்றெல்லாம் சமயத்தை உடைக்க முடியாது.அப்படி பேசுவது,இந்த பண்பாட்டை சீர்குலைக்கும் நீண்ட காலயுத்தத்தின் நவீன வடிவமாக மாறியுள்ளது என்றே பார்க்க வேண்டும்..

One Reply to “இந்துப் பண்பாட்டு மாநகர் மதுரையின் வரலாறு: ஒரு கண்ணோட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *