மாலைகள் பொன்னாடைகள் எல்லாம் போர்த்தப்பட்டு முடிந்தபின் சூர்யா பேச ஆரம்பிக்கிறார்.
இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களின் ஆன்மிக, தத்துவ விஷயங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், கல்கத்தாவில் சீழ் ஒழுகும் தொழுநோய்க் கரங்களுக்கு மருந்திட்ட அல்பேனியக் கரங்களைத் தெரியும். ஒரிஸாவின் வனாந்தரத்தில் வலியால் துடித்த குழந்தைக்காக கண்ணீர் சிந்திய ஆஸ்திரேலியக் கண்களைத் தெரியும். அந்த கருணையின் கண்களை எரித்துப் பொசுக்கியது யார் என்பதும் தெரியும்.
உலகம் முழுவதும் அறியாமை இருளிலும் நோயிலும் வறுமையிலும் வாடும் பயிர்களுக்கு சாந்தியையும் சமாதானத்தையும் அருளும் கருணையாளனைத் தெரியும்.
(கூட்டத்திலிருந்து ஒரு குரல்) நிறுத்து உன் போலிப் பிரசங்கத்தை என்று உரக்க ஒலிக்கிறது.
முதலில் என்னைப் பேசவிடுங்கள்.
இது பொதுக்கூட்ட மேடையல்ல. வழக்காடு மன்றம். ஒருவர் பேசிக் கொண்டே செல்ல மற்றவர்கள் கேட்டுக்கொண்டே செல்ல இது உங்கள் அரங்கம் அல்ல. மக்கள் அரங்கம். சொல்ல வருவதைச் சுருக்கமாகச் சொல்.
இஸ்லாமும் கிறிஸ்தவமும் மறுமை பற்றிய போலிக் கனவுகளை விதைக்கவில்லை. இன்றைப் பற்றிச் சிந்திக்கின்றன. உலகை, வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்கச் சொல்லவில்லை. மாற்றியமைக்கச் சொல்கின்றன. பசித்த வயிறிடம் ஆன்மிகம் பேசிப் பலனில்லை. அடிபட்டவனிடம் ஆன்மிகம் பேசிப் பலனில்லை. இந்து மதம் ஆற்றைத் தாண்டிச் சென்றால் அதர்மம் என்கிறது; உலகம் முழுவதும் சென்று கண்ணீரைத் துடையுங்கள் என்று சொல்கின்றன ஆபிரஹாமிய மதங்கள். இன்று ஒருவர் படும் துன்பத்துக்கு நேற்று செய்த தவறே காரணம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தன்னைத்தானே முடக்கிக்கொண்டு மனதில் ஊறும் சக மனித நேயத்தை சகோதரத்துவத்தை அடைத்துப் போட்டது இந்து மதம். கருணையின் ஊற்றைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன ஆப்ரஹாமிய மதங்கள்.
சேவையை முன்வைக்கின்றனவா ஆப்ரஹாமிய மதங்கள். நல்ல வேடிக்கை. பச்சிளம் பாலகனுக்குப் பாலூட்டவா வந்தாள் பூதகி, தன் ராட்சஸ முலையில் கொடிய நஞ்சைத் தடவியபடி? உலக மக்களின் கண்ணீரைத் துடைக்கவா நீண்டன ஏகாதிபத்தியவாதிகளின் எடுபிடிக் கரங்கள்? ஆடுகளின் மீதான கருணையினாலா பசுங்குழைகளை நீட்டுகின்றன கசாப்புக்கடைக்காரனின் கொடுங்கரங்கள்?
இந்து மதம் முக்தியை இலக்கா வெச்சிருக்கு. ஒவ்வொரு வர்ணத்துக்கு ஒவ்வொரு வேலைன்னு பிரிச்சு வெச்சிருக்கு. அது ஆயிரக்கணக்கான ஜாதிகளா மாறியிருக்கு. அந்த ஜாதிகளுக்கும் அதே இலக்கு. அதே பிரிவினை. ஆனா எந்தவொரு வர்ணத்துக்கும் ஜாதிக்கும் அடுத்தவங்களுக்கு உதவணுங்கறதையோ சமூக சேவையையோ இலக்கா வைக்கவே இல்லை. உன் துருத்தியை ஒழுங்கா ஊது. இதுதான் இந்து மதம். இது மட்டுமே இந்து மதம். இந்து மதத்தின் உச்சபட்ச உன்னத மனிதன் எல்லாத்தையும் துறந்து இமயமலைல போய் குகைக்குள்ள ஒடுங்கிக் கிடக்கறவர் தான். இப்படி தனி மனிதரோட லட்சியமா உள்ளொடுங்கறதை முன்வைச்ச ஒரு மதம் எப்படி சக மனிதர் மேல அக்கறை கொண்டதா இருக்கமுடியும்? கிறிஸ்தவமும் இஸ்லாமும் தன்னுடைய அரவணைப்புக்குள்ள உலகத்தையே கொண்டுவரணும்னு ஆசைப்படற மதங்கள். ஒரு பேரீச்சை மரம் உலகம் பூராவும் பேரீச்ச மரங்களாகவும் பழங்களாகவும் நிறையணும்னு கனவு காண்ற மாதிரி. ஒரு திராட்சைக் கொடி உலகம் பூராவும் படர்ந்து அனைவருடைய தாகத்தையும் போக்கணும்னு ஆசைப்படறமாதிரி கிறிஸ்தவமும் இஸ்லாமும் உலகம் பூராவும் ஆரத்தழுவ விரும்புது. இந்து மதம் குகைக்குள்ள, கூட்டுக்குள்ள ஒடுங்கச் சொல்லுது.
ஆப்ரஹாமிய மதங்கள் உலகம் முழுவதும் படர விரும்புவது உண்மைதான். ஆனால், ஒரு ஆக்டோபஸ் தன் கொடூரக் கரங்களை உலகம் முழுவதும் நீட்டுவதுபோல்தான் அது நடக்கிறது. ஆப்ரஹாமியக் கரங்கள் அரவணைக்க அல்ல; கழுத்தை நெரிக்கவே உலகம் முழுவதும் நீள்கிறது. அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியா என மூன்று மாபெரும் கண்டங்களில் கிறிஸ்தவம் திராட்சைக் கொடியாக அல்ல… மீன்களை நீரில் இருந்து பறித்து தரையிலிட்டுக் கொல்லும் வலை போலவே படர்ந்திருக்கிறது. சிலுவையின் நிழல் நீரின் மேல் படரும் வல்லூறின் நிழலாகவே படர்ந்திருக்கிறது. எளிய மக்களுக்குக் கிடைத்த தேவாலயத்தின் நிழலானது பயந்து பதுங்கிய தவளைகளுக்குக் கிடைத்த பாம்புப்படத்தின் நிழலைப்போலவே இருந்திருக்கிறது. கிறிஸ்து வாக்களித்த பூமியானது பூர்வகுடி கலாசாரங்களுக்கு மீட்சிக்கு வழியில்லாத புதைமணல் வெளியாகவே இருந்திருக்கிறது.
அவர்கள் எங்கள் நாட்டில் கால் வைத்தபோது நிலங்கள் எங்களிடம் இருந்தன. அவர்கள் கைகளில் பைபிள் இருந்த்து. கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். கண்ணைத் திறந்து பார்த்தால், எங்கள் கைகளில் பைபிள் இருந்தன. நிலங்கள் அவர்களிடம் போயிருந்தன. இது யாருடைய வேதனைக்குரல் தெரியுமா..?
அதுதான் அவர்களுக்கு பைபிள் கிடைத்துவிட்டதே. அதைவிடப் பெரிய சொத்து, சுகம் வேறென்ன வேண்டும்?
நல்ல கதையாக இருக்கிறதே. உங்கள் சொத்துக்களை எனக்கு எழுதித் தருகிறீர்களா… நான் ஒன்றல்ல ஒன்பது பைபிள் தருகிறேன்.
தலை குனிந்து நிற்கிறார்.
அந்தப் பூர்வகுடி மூப்பன் சொல்லத் தவறிய வேறு சில வாக்கியங்களும் உண்டு. அவர்கள் எங்கள் நாட்டில் கால் பதித்தபோது எங்களிடம் ஒரு நூறு தெய்வங்கள் இருந்தன. அவர்களிடம் சிலுவை இருந்தது. கண்ணை மூடிக்கொள்ளச் சொன்னார்கள். கண் திறந்து பார்த்தால் எங்கள் குல தெய்வக் கோவில்கள் இருந்த இடங்களில் எல்லாம் சிலுவை ஊன்றப்பட்டிருந்தன. அவர்கள் எங்கள் நாட்டில் கால் பதித்தபோது நாங்கள் எங்கள் மொழிகளுடன் எங்கள் அடையாளங்களுடன் எங்கள் கலாசாரங்களுடன் இருந்தோம். கையில் பைபிளைக் கொடுத்தனர். கண் திறந்து பார்த்தபோது எங்கள் அடையாளங்கள், கலாசாரங்கள், மொழிகள் அனைத்தும் அழிந்துபோயிருந்தன. எதற்கு மாற்றாக எது இருக்கமுடியும்?
எந்த அடையாளமாக இருந்தாலும் சுய மரியாதை இருக்கவேண்டும். கௌரவமான வாழ்க்கைக்கான வழி இருக்கவேண்டும்.
சுய மரியாதை என்றால் என்ன..? சுய நம்பிக்கை அதுதானே. உண்மையில் நம் முன்னோர்களுக்கு அது போதுமான அளவுக்கு இருக்கத்தான் செய்தது. சுயமரியாதையை ஊட்டுகிறேன் என்று ஆரம்பித்தவர்களால்தான் அது இல்லாமல் போயிருக்கிறது.
அதெல்லாம் இல்லை. இன்று நீங்களும் நானும் இப்படி நிமிர்ந்து நின்று பேச அந்த இயக்கமே காரணம்.
அந்த இயக்கம் என்ன சொன்னது. பிராமணரல்லாதவர்களை பிராமணர்கள் ஒடுக்கினார்கள். இழிவுபடுத்தினார்கள். அடிமைப்படுத்தினார்கள். அப்படித்தானே.
ஆமாம். பிராமணரல்லாத நம் முன்னோர்களை இழிவான வேலையைச் செய்ய வைத்து சுயமரியாதையை இழக்கச் செய்துவிட்டார்கள். நீதிக்கட்சி இயக்கம், திக, திராவிர முன்னேற்றக் கழகங்கள் எல்லாம் நம் முன்னோர்களுக்கு சுயமரியாதையை ஊட்டின.
யார் அந்த முன்னோர்கள். அவர்களுடைய ஜாதி என்னென்ன?
பிராமாணரல்லாத அனைவரும் அந்த வகைக்குள் வருவார்கள்.
அதாவது நேற்று மன்னர்களாக இருந்த அனைவரும் அதில் வருவார்கள். அப்படித்தானே.
அது வந்து…
அதாவது நேற்று உள் நாட்டு வணிகம், கடல் வாணிபம் செய்துபெரும் செல்வந்தர்களாக இருந்த அனைவரும் அதில் வருவார்கள் அப்படித்தானே.
மௌனம்.
மூப்பனார்கள், முதலியார்கள், கவுண்டர்கள், பிள்ளைகள், தேவர்கள் என பண்ணையார்களாக இருந்த அனைவரும் அந்த சுயமரியாதை இல்லாதவர்கள் பட்டியலில் வருவார்கள் அப்படித்தானே.
மௌனம்.
துருப்பிடிக்காத இரும்புத்தூணைச் செய்தவரும் தீப்பெட்டிக்குள் அடங்கும்படியான மெல்லிய புடவையை நெய்தவரும் விண் முட்டும் கோபுரங்கள் கட்டியவரும் களிமண் போல் கருங்கல்லில் சிற்பங்கள் செதுக்கியவரும் சுய மரியாதை இல்லாதவர்கள் அப்படித்தானே.
அது வந்து… நில உடமை இல்லாத நாவிதர், வெட்டியார், வண்ணார், தோட்டி போன்ற இழிவான வேலை செய்தவர்களை சுயமரியாதை இல்லாமல் ஒடுக்கினார்கள்.
அந்த வேலையைச் செய்தவர்களுக்கு சுயமரியாதை குறைவாக இருந்ததற்கு அந்த வேலைகளை எளிமையாக்கும் தொழில்நுட்ப அறிவு அன்றைய காலகட்டத்தில் வளர்ந்திருக்கவில்லை.
பிராமணர்கள் தத்துவ விசாரம், ஆன்மிகம், மறுபிறவின்னு இருந்தாங்களே ஒழிய இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவே இல்லை. எனவே இந்த இழிவுக்குக் காரணம் அவர்கள்தான்.
உலகம் பூராவுமே அந்த வேலைகளுக்கான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் 100-200 வருஷங்களுக்கு முன்னாலதான் வந்திருக்கு. உலகத்துல எல்லா இடங்கள்லயும் அந்த வேலைகள் தலைமுறை தலைமுறையா குலத்தொழிலாத்தான் கைமாறி வந்திருக்கு.
அதை மாத்தினது கிறிஸ்தவர்களும் அவங்களோட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும்தான.
அதுனால?
அப்ப அவங்களோட மதம் தான அந்த கஷ்டங்கள்ல இருந்து விடுதலை கொடுத்திருக்கு.
ஒரு விஞ்ஞானி கண்டுபிடிச்ச கருவிக்கு ஒரு மதவாதி எப்படி உரிமை கொண்டாடமுடியும்? கடந்த காலத்துல விஞ்ஞானிகளையெல்லாம் மிகக் கொடூரமா நட்த்தினதுதான் கிறிஸ்தவத்தோட வரலாறு. பைபிள்ல சொன்னதுக்கு எதிரா பேசினதாச் சொல்லிக் கொன்னதுதான் கிறிஸ்தவத்தோட வரலாறு.
ஆனா 18-19 நூற்றாண்டுகளுக்கு அப்பறம் விஞ்ஞானத்தை கிறிஸ்தவம் எதிர்க்கலியே.
அதனால
அந்தக் கண்டுபிடிப்புகளைச் செஞ்சவங்க கிறிஸ்தவங்கதான. அப்ப அந்தப் பெருமைக்கு கிறிஸ்தவ மதம்தான காரணம். 2000 வருஷமா மனுஷ மலத்தை மனுஷனே அள்ளியிருக்கான். ஃப்ளெஷ் அவுட் டாய்லெட் கண்டுபிடிச்சது ஒரு கிறிஸ்தவர்தான. அப்ப அதுக்கான நன்றியை மதம் மாறறதுமூலம் காட்டலாம். காட்டணும்.
விஞ்ஞானம், இசை, விளையாட்டு இதெல்லாம் தேச, மத எல்லைகளைத் தாண்டினது. மதச்சார்பற்ற அறிவுத்துறைகளை மதச் சிமிழ்ல அடைக்கறதும் மத மாற்றத்துக்கு அதைப் பயன்படுத்தறதும் தப்பு. மேற்கத்திய கண்டுபிடிப்புகளுக்கு கிறிஸ்தவர்கள் காரணம்னு சொல்றீங்க. முஸ்லிம்கள் அதைப் பயன்படுத்தறாங்க. அப்படின்னா முஸ்லிம்களையும் கிறிஸ்தவத்துக்கு மாறச் சொல்வீங்களா?
இஸ்லாம் மனிதர்களிடையே சகோதரத்துவத்தை போதிக்குது. அதனால அவங்க மதம் மாறத் தேவையில்லை.
எது சகோதரத்துவம்? மேற்கத்திய கிறிஸ்தவர்களால்ல் கொல்லப்படறது தப்பு. ஷியாக்கள் வைக்கற குண்டுல சன்னிகள் செத்தா சுவனத்துல இடம் உண்டுன்னு செயல்படறாங்களே அந்த சகோதரத்துவத்தைச் சொல்றீங்களா?
இதெல்லாம் நம்ம நாட்டு முஸ்லிம்களுக்கு இடையில நடக்கலியே. உலகம் பூராவும் கிறிஸ்தவர்கள் தமக்குள்ள அடிச்சுக்கறாங்க. முஸ்லிம்கள் தமக்குள்ள அடிச்சுக்கறாங்க. முஸ்லிமும் கிறிஸ்தவர்களும் அடிச்சுக்கறாங்க. ஆனா இந்தியால அவங்க எல்லாரும் ஒண்ணா இருக்காங்க. அதனால வெளியில நடக்கற தப்புகளுக்கு இந்திய கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.
நாளைக்கு இவங்க பெரும்பான்மையானா அந்தச் சண்டையை இங்க போடமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?
அது வரும்போது பாத்துக்கலாம்.
சில கதவுகளைத் திறந்துட்டா மீண்டு வரவே முடியாது. கோடைக்காலத்துலயே மழைக்காலத்துக்கான உணவைச் சேமித்துக்கொண்டாகவேண்டும். கோடைக்காலத்திலேயே மேற்கூரைகளைச் சரி செய்துகொண்டாகவேண்டும். அதிலும் வரப்போவது புயல் மழை என்றால் முன்னேற்பாடுகள் முன்பே செய்துகொண்டாகவேண்டும்.
விவாதம் தொடர்ந்து நடக்கிறது.
One Reply to “ம(மா)ரியம்மா – 12”