கித்தூர் ராணி சென்னம்மா: சுதந்திரப் போராட்ட வீராங்கனை

காலங்களைக் கடந்தும் போற்றப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை கர்நாடகத்தைச் சேர்ந்த கித்தூர் இராணி சென்னம்மா.

விடுதலைக்காகப் போராடிய கித்தூர் ராணி சென்னம்மாவை நினைவுகூரும் வகையில், கரநாடக மாநிலம் குடகில் அவரது பிறந்தநாளான அக்டோபர் 23-ஆம் தேதி முதல் கன்னட கலாச்சாரத் துறை மூலம் ”கித்தூர் ராணி சென்னம்மா உற்சவம்” கொண்டாடப்பட்டு வருகிறது. 3 நாள்கள் நடக்கும் இந்த உற்சவத்தையொட்டி கித்தூர் ராணி சென்னம்மாவின் ஜோதி யாத்திரை நடைபெற்றது. இதில் கித்தூர் ராணி சென்னம்மாவின் பெயரில் வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு, அது மாநிலம் முழுவதும் யாத்திரையாக சென்று வருகிறது. இதுகுறித்து கன்னட கலாச்சாரத் துறை உதவி இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:- ”கித்தூர் ராணி சென்னம்மாவின் விஜய ஜோதி யாத்திரை வாகனம் மாநிலம் முழுவதும் சுற்றி வரும். இந்த வாகனம் சுதந்திரத்திற்காகவும், பெலகாவியின் விடுதலைக்காகவும் போராடிய கித்தூர் ராணி சென்னம்மாவின் வரலாற்றை நினைவுப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது”. இந்த யாத்திரையைத் தொடர்ந்து 23-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் கித்தூர் ராணி சென்னம்மா உற்சவம் நடைபெற்றது.

சீற்றத்தில் மின்னுகின்றன அந்தப் பெண்ணின் கண்கள். குதிரையில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் அவருடைய கையில் வீற்றிருக்கும் வாள் பளிச்சிடுகிறது. கர்நாடகத்தின் முக்கிய நகரங்களில் இந்தச் சிலையைப் பார்க்கலாம். அவருடைய தீரம் இன்றைக்கும் பலருக்கு உத்வேகம் அளித்துவருகிறது. இப்படிக் கர்நாடகம் முழுவதும் துணிச்சலின் மறுபெயராக அறியப்படுபவர் கித்தூர் ராணி சென்னம்மா.

1857-ஆம் ஆண்டில் முதல் விடுதலைப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து ஜான்சி ராணி லட்சுமி பாய் போரிடுவதற்கு 33 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டவர்தான் சென்னம்மா. அவருக்கு முன்னதாகக் கர்நாடகத்தைச் சேர்ந்த ராணி அப்பக்கா தேவி போர்த்துகீசியர்களை எதிர்த்திருந்தார்.(16 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி). இவர்கள் எல்லாருக்கும் முன்னதாக,ஆங்கிலேயரை எதிர்த்துத் தன் இன்னுயிரைத் தாய்நாட்டிற்கு அர்ப்பணித்தவர் நம் இராணி வேலுநாச்சியார் அவர்கள்.( 1730- டிசம்பர் 25, 1796)

1778 அக்டோபர் 23-ஆம் தேதி பெலகாவி மாவட்டத்தில் உள்ள காகட்டி என்ற சிறிய கிராமத்தில் சென்னம்மா பிறந்தார். சின்ன வயதிலேயே குதிரையேற்றம், வாள் சண்டை, வில்வித்தை போன்றவற்றில் அவர் பயிற்சி பெற்றவராகவும், வீரத்துக்காக அறியப்பட்டவராகவும் இருந்தார்.

தமது 15 ஆம் வயதில் கித்தூர் இராஜா மல்லசர்ஜா தேசாயை அவர் மணந்தார். ஆனால், 1816-ஆம் ஆண்டில் மல்லசர்ஜா இறந்தார். அவர்களுடைய மகனும் 1824-ஆம் ஆண்டில் இறந்துபோனார்.

மகனும் இறந்துவிட்ட நிலையில் சிவலிங்கப்பா என்பவரைப் பட்டத்து இளவரசராகச் சென்னம்மா தேர்ந்தெடுத்தார். இதற்கு எதிர்வினையாற்றத் துடித்த கிழக்கிந்திய கம்பெனி, பிற்காலத்தில் சட்டமாக்கப்பட்ட வாரிசு இழப்புக் கொள்கையை (Doctrine of Lapse) முன்வைத்துச் சிவலிங்கப்பாவை நாடுகடத்த உத்தரவிட்டது.

இந்திய ஆட்சிப் பகுதிகளைக் கிழக்கிந்திய கம்பெனியுடன் இணைக்கும் மறைமுகத் திட்டமாக அது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின்படி, முடியாட்சியின் கீழ் உள்ள ஒரு பகுதியில் பதவியேற்க வாரிசு இல்லாவிட்டால், அந்தப் பகுதியை ஆளும் உரிமை பிரிட்டனுக்குச் சென்றுவிடும். இதன்படி கித்தூர் பகுதி தார்வாட் ஆட்சியர் ஜான் தாக்கரேயினுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஆனால், சென்னம்மா அதை ஏற்கவில்லை. தன் மண்ணையும் மக்களையும் ஆங்கிலேயரிடமிருந்து காக்க எதையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. கித்தூர் தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டது, அதைத் தொந்தரவு செய்யக் கூடாது எனப் பம்பாய் துணை ஆளுநர் மவுண்ட் ஸ்டூவார்ட் எல்ஃபின்ஸ்டோனுக்குச் சென்னம்மா கடிதம் எழுதினார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சென்னம்மாவின் தொடர் எதிர்ப்பால், 1824-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கித்தூரைத் தாக்கினர். சென்னையைச் சேர்ந்த உள்நாட்டு குதிரை-பீரங்கிப் படையின் நான்கு பீரங்கிகள், 200 வீரர்கள் போர் தொடுத்துவந்தனர். சென்னம்மாவின் சிறிய படையோ துணிச்சலுடன் போரிட்டது.
ஆங்கிலேயர் படை தோற்றது மட்டுமில்லாமல், ஆளுநர் தாக்கரேயை அமட்டூர் பாலப்பா வீழ்த்தினார். சர் வால்டர் எலியட், ஸ்டீவன்சன் ஆகிய இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளும் பிடிபட்டனர். இந்த வெற்றியைப் பயன்படுத்திக்கொண்டு, போரைக் கைவிட முன்வந்தால் ஆங்கிலேய அதிகாரிகளை விடுவிப்பதாக ஆணையர் சாப்ளினுடன் சென்னம்மா ஒப்பந்தம் செய்துகொண்டார்.

தோல்வியைப் பெரும் அவமானமாகக் கருதியது மட்டுமில்லாமல், அன்றைய மதிப்பில் சென்னம்மாவிடம் இருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, சொத்துகளைக் கைப்பற்றவும் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதனால் மைசூர், ஷோலாபூரில் இருந்து 20,000 படைவீரர்கள், 400 துப்பாக்கிகள் கொண்ட பெரும் படையைக் கித்தூரைச் சூழ்ந்து ஆங்கிலேயர்கள் நிறுத்தினர்.

தளபதி சங்கொள்ளி ராயண்ணாவுடன் இணைந்து சென்னம்மா துணிச்சலுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.

இதில் ஷோலாபூரின் துணை கலெக்டர் மன்ரோ (இவர் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் சர் தாமஸ் மன்ரோவின் மருமகன்) பலியானார். இதற்கிடையே சென்னம்மாவின் படையைச் சேர்ந்த மல்லப்பாவும் வேங்கட ராவும் நம்பிக்கை துரோகம் செய்தனர். துப்பாக்கி மருந்துடன் மாட்டுச்சாணத்தைச் சேர்த்துப் பீரங்கிகளில் நிரப்பினர். இதன் காரணமாகச் சென்னம்மா தோற்று, ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டுப் பெய்ல்ஹொங்கல் கோட்டையில் அடைக்கப்பட்டார். 1829 பிப்ரவரி 21-ஆம் தேதி இறந்தார்.

தன் மண்ணைக் காப்பதற்கான சென்னம்மாவின் தீரம், சங்கொள்ளி ராயண்ணாவுக்கு மிகுந்த உத்வேகம் அளித்தது. காடுகளில் மறைந்திருந்த அவர், தொடர்ந்து ஆங்கிலேயர்களைத் தாக்கிவந்தார். ஆனால், 1829-ஆம் ஆண்டு ராயண்ணா கைது செய்யப்பட்டு, பின்னர்த் தூக்கிலிடப்பட்டார்.

நாட்டுப்புறக் கதைப்பாடல், லாவணி, கிகி படா வடிவங்களில் ராணி சென்னம்மாவின் வீரக் கதை காலம்காலமாகக் கூறப்பட்டுவருகிறது.

1962-ஆம் ஆண்டில் சரோஜாதேவி நடிப்பில் பி.ஆர். பந்துலு இயக்கிய ‘கித்தூர் சென்னம்மா’ என்ற கன்னடப் படம் வெளியானது, சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. ‘கித்தூர் சென்னம்மா’ கன்னடத் திரைப்படத்தினைக் காண கீழ்வரும் இணைப்பிற்குச் செல்க.

Kitthuru Chennamma – ಕಿತ್ತೂರು ಚೆನ್ನಮ್ಮ | Kannada Full Movie | FEAT.M V Rajamma, B Sarojadevi

பெங்களூருவிலிருந்து கோலாபூருக்குச் செல்லும் அதிவேக ரயில் ‘ராணி சென்னம்மா விரைவு ரயில்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 22-24-ம் தேதிகளில் கர்நாடக மாநிலம் கித்தூரில் நடைபெறும் ‘கித்தூர் உற்சவ’த்தில் சென்னம்மாவின் வீரமும், போரில் அவர் பெற்ற முதல் வெற்றியும் கொண்டாடப்படுகின்றன.

தேசிய அளவில் கௌரவப்படுத்தும் வகையில் 2007 ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்ற வளாகத்தில் ராணி சென்னம்மாவின் சிலை நிறுவப்பட்டது.

(கட்டுரையாசிரியர் வீரமணி வீராசாமி ஓய்வுபெற்ற தமிழாசிரியர். இவர் ஆன்மீகம், பயணம், தமிழ் இலக்கியம், வரலாறு தொடர்பான பல சிறப்பான பதிவுகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *