அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மொழியுரிமை மாநாட்டில் கலந்துகொண்ட மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள்,’பாஜக தலைவர் திரு.கே.அண்ணாமலை அவர்களே, நீங்கள் ஒவ்வொருமுறை உங்களின் பெயரை எழுதும்பொழுதும் கையெழுத்திடும்பொழுதும் வீரமாமுனிவர் என்ற கிறிஸ்துவருக்கும் தந்தை பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் நீங்கள் கையெழுத்துப்போட வேண்டும். ஏனென்றால் கே என்பதில் வரும் இரட்டை சுழியை (‘÷’) கொடுத்தவர் வீரமாமுனிவர். ணா என்ற எழுத்தையும் லை என்ற எழுத்தையும் கொடுத்தவர் பெரியார் என்று கதை விட்டிருக்கிறார் சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன் காவல் கோட்டம், வேள்பாரி போன்ற வரலாற்று நாவல்களை எழுதியதால் தமிழ் எழுத்தின் வரலாறு நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் அரசியல் பிழைப்புக்காக தமிழ் எழுத்தின் வரலாற்றை எப்படியெல்லாம் மறைத்து மக்களை முட்டாளாக்குகிறார் என்பது அவரது பேச்சு உறுதிபடுத்தியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்காக வேறொரு கட்சியிடம் இருந்து 25 கோடி வாங்கியதன் நன்றிக்காக வரலாற்றை மறைப்பது என்பது தமிழுக்கு – தமிழருக்கு செய்யும் துரோகம். அதை தெரிந்தே சு.வெங்கடேசன் செய்திருக்கிறார்.

’ ÷’ இரட்டைச் சுழி எழுத்தை கண்டிபிடித்தவர் அல்லது அதை தமிழுக்கு முதலில் கொண்டுவந்தவர் வீரமாமுனிவர் அல்ல என்று எப்போதோ நிறுவப்பட்டுவிட்டது. அவ்வெழுத்து ஏற்கனவே தமிழ் எழுத்தில் தமிழர்கள் எழுத தொடங்கிவிட்டனர். மதுரைச் சார்ந்தவர் சு.வெங்கடேசன். அந்த மதுரையிலேயே இதற்கான ஆதாரம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது. அதைப் பற்றி தொல்லியல் அறிஞர், முனைவர் இரா. நாகசாமி அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

உயிர்மெய்யெழுத்தில் ‘ஏ’, ‘ஓ’ வருமிடங்களில் இப்பொழுதும் இர்ட்டைக் கொம்பு ’ே’ போடுகிறோம். பண்டைய கல்வெட்டுக்களில் ஒற்றைக்கொம்புதான் உள்ளது. தொல்காப்பியத்தின்படி எகர, ஒகர குறிலையும், நெடிலையும் வேறுபடுத்திக்காட்ட குறிலுக்குப் புள்ளியிட வேண்டும் என்பதே மரபு. ‘எகர ஒகரத் தியற்கையும் அற்றே’ என்பதால் அது புலப்படும். சில கல்வெட்டுக்களில் குறிலுக்குப் புள்ளியும், நெடிலுக்குக் கோடும் போட்டுள்ளனர். ஆயினும் பெரும்பாலான கல்வெட்டுக்களில் வேறுபாடே இல்லை. இரண்டுக்கும் ஒரு கொம்புதான் இட்டுள்ளனர். மொழி தெரிந்தவர்தான் புரிந்துகொள்ள முடியும். கி.பி.18ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ‘பெர்சி’ பாதிரியார் இந்த தகவலைத் தருவதோடு, புதியதாகத் தமிழ் கற்பவர்கள், இந்த வேறுபாட்டை அறிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்று குறிலுக்கு ஒரு கொம்பும், நெடிலுக்கு இருகொம்புகளும் இட்டு, வேறுபடுத்தியதாக ஒரு குறிப்புண்டு. இங்குள்ள மங்கம்மாள் காலத்திய ஓவியத்தில் ‘மீனாக்ஷி தேவி அக்னிதேவனோடு யுத்தம் செய்தது’ என்பது போன்ற விளக்கங்கள் எழுதியுள்ள இடத்து, நெடில் வருகின்ற இடங்களில் சில இடங்களில் ஒற்றைக் கொம்புகளும், சில இடங்களில் இரட்டைக் கொம்புகளும் இட்டு எழுதியிருப்பதை இங்கே காணலாம். ஒன்று போலவே எழுதாமல், ஒரு இடத்தில் எழுதியும், மறு இடத்தில் எழுதாமலும் விட்டுள்ளது இந்த மரபு இன்னும் வேரூன்றவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றது. ஆயினும், வந்துவிட்டது என்பது இந் ஓவிய விளக்கங்களால் ஐயம்திரிபறத் தெளியக்கிடக்கின்றது.

ராணிமங்கம்மாள் 1706இல் இறந்துவிட்டாள். பெர்சி பாதிரியார் தமிழ்நாட்டுக்கு வந்தது 1710 என்று ஆதாரப்பூர்வமாக அறியப்பட்டுள்ளது. 1700இலேயே தீட்டப்பட்ட இந்த ஓவியத்தில் இரட்டைக் கொம்புகள் போடப்பட்டுள்ளது. பெர்சி பாதிரியார் தமிழகத்தில் காலடி வைப்பதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே இங்கிருப்பது நோக்கத்தக்கது. ஆதலின் இப்பெரியார், இரட்டைக் கொம்புகளைப் புதிதாக க் கண்டுபிடித்தார் என்று சிலர் குறித்துள்ளது இப்போது மாற்றம் பெற வேண்டும். ஆயினும் குறிலுக்கு ஒரு கொம்பும், நெடிலுக்கு இரட்டைக் கொம்புகளும் இட்டு, ஒரே சீராக எழுதப்படாமல் இருந்திருக்கின்றது. பெர்சி பாதிரியார் வந்தபோது சீராக இரட்டைக் கொன்பையே போட்டால் தெளிவு வரும் என்று மதுரையில் அவர் கற்றிருக்க வேண்டும். (நூல் : ஓவியப் பாவை, பக்.134-135)

தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட இந்த நூல் 1979லேயே வெளிவந்துவிட்டது. இர்ண்டாம் பதிப்பு 2010ல் வெளிவந்திருக்கிறது. வரலாற்று நாவல்கள் எழுதும்போது இவற்றையெல்லாம் வாசித்திருப்பார். ஆனாலும் இரட்டை சுழி கொம்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்களிலேயே காணக்கிடைக்கிறபோது, மதுரைவாசியான சு.வெங்கடேசன் அவர்களுக்கு மட்டும் தெரியாமல் போனது வியப்புதான். அதனால் இரட்டை சுழி எழுத்திற்காக வீரமாமுனிவருக்கு அண்ணாமலை அவர்கள் நன்றி சொல்லவேண்டியதில்லை.

ணா, லை போன்றவை ஈவெரா கொண்டுவந்த சீர்திருத்தம் என்கிறார் சு.வெங்கடேசன். ஈவெரா சொல்வதற்கு முன்னமே, ஏன் அதைப் பற்றி ஈவெரா யோசிக்காத காலகட்டத்தில் இவ்வெழுத்துக்களைப் பற்றிய விவாதம் தொடங்கிவிட்டது. சில கல்வெட்டுகளில் இந்த ’கால்’ எழுத்து குறிப்பிடப்பட்டாலும் அவ்வெழுத்துப் பற்றிய விவாதம் விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்கள் நடத்திவந்த ஞானபானு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் தமிழில் எழுத்துக்குறை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஞானபானு இதழில் ஜூலை 1915ல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அதே ஞானபானு இதழில் செப்டம்பர் 1915ல் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். அதில் ‘…இப்புலவரிற் சிலர் றா, றோ, னா, னோ என்று எழுப்பட்டுத் தமிழ்ப் பாஷையைக் கற்றாளுதலை இன்னும் எளிதாக்க வெண்டுமென்று விரும்புகின்றனர்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது சில எழுத்துக்களுக்கு கீழ்வரும் (t) விலங்கு என்பதை அகற்றிவிட்டு கால் எழுத்து எழுதலாம் என்று புலவர்கள் விரும்புகின்றனர் என்கிறார். அதனால் எழுத்தின் விலங்கொடித்தவர் ஈவெரா அல்ல, தமிழ்ப் புலவர்களே என்பதை சு.வெங்கடேசன் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணாமலை என்ற பெயரில் வரும் லை என்ற எழுத்தையும் அறிமுகப்படுத்தியவர் ஈவெரா அல்ல. பல்லவர் கால செப்பேடுகளில் ஏற்கனவே இருந்தவைதான். பல்லவ அரசனான சிம்மவர்மன் தன்னுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டில் அளித்த தானத்தைத் தெரிவிக்கும் சாசனம் ஐந்து செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இது பள்ளன் கோயில் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது. அதில் ஐந்து விதமான லை எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று அண்ணாமலை என்ற பெயரில் வரும் லை ஆகும். (நூல் : பல்லவர் செப்பேடுகள் முப்பது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,)

தும்பிக்கையுள்ள எழுத்துகள் , கீழ்விலங்குகொண்ட எழுத்துக்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துடன் முருகப்பா செட்டியாரால் வெளியிடப்பட்ட குமரன் இதழில், ’தமிழ் எழுத்தில் திருத்தம்’ என்ற தலைப்பில் 4-9-1930ல் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. தும்பிக்கையுள்ள, கீழ்விலங்குகொண்ட எழுத்துகளுக்குப் பதிலாக ணா, லை போன்ற எழுத்துக்களை குறிப்பிட்டு இப்படி சீர்திருத்தினால் பயில்பவருக்கு வெகு சௌகரியமாக இருக்கும் என்று அக்கட்டுரை எழுதியிருக்கிறது. இந்தக் கட்டுரையில் கடைசியில் குறிப்பு என்று குமரன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதுதான் வெகுமுக்கியம்.

குறிப்பு – இந்தத் திருத்தங்களில் உயிர்மெய் எழுத்துக்களின் குறிப்பிடப்பட்டிருக்கும் திருத்தங்களுடன் பரிஷார்த்தமாக இவ்வாரக் குமரன் மூன்றாம் பக்க கட்டுரை வெளியிடப்படுகிறது. அதைப்பற்றிய நேயர்களின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறோம். பத்திரிகைகளிலும் நாவல்களிலும் முதலில் இம்முறைகள் கையாளப்படுமானால் விரைவில் வழக்கத்திற்கு வந்துவிடக்கூடும். அதுபோலவே மூன்றாம் பக்க கட்டுரை இந்த எழுத்துச் சீர்திருத்த த்துடன் வெளிவந்துள்ளது. அதனால் இது ஈவெராவால் கொண்டுவரப்பட்ட அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்து அல்ல.

1933 – திசம்பர் 23, 24 நாட்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15 வது தீர்மானமாக எழுத்துச் சீர்திருத்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார். இதற்குப் பிறகுதான் 1935ல் ஈவெரா அவர்கள் தன்னுடைய பத்திரிகையில் ஏற்கனவே குமரன் இதழில் வெளிவந்த எழுத்துக்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் போன்ற எழுத்துக்களையும் எழுதி எழுத்துச் சிக்கனத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.

1941 – சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1948 –  பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது. 1950 -ல் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த பொழுது எழுத்துச் சீர்திருத்தக் குழுவை அமைத்தார் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன இப்படி பலருடைய முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றுவந்த்து.

ஈவெராவின் நூற்றாண்டு விழாவின்போது (1978) ஈவெரா பயன்படுத்தி வந்த எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்கும் விதமாக அரசு ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில்கூட ஈவெரா அறிமுகப்படுத்திய அல்லது கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம் என்று இல்லாமல் ஈவெரா ’மேற்கொண்ட தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்’ என்றுதான் அந்த அரசாணை 19-10-1978ல் வெளிவந்தது. பின்பு அந்த அரசாணையிலும் (15-2-1979) திருத்தம் கொண்டுவந்து ஐ, ஔ போன்றவை கைவிடப்படவேண்டியதில்லை என அரசு இப்போது கருதுகிறது என்று திருத்தியது. ஆகவே ஈவெராவுக்கும் அண்ணாமலை நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இரட்டை சுழி எழுத்து மற்றும், ணா, லை எழுத்துகள் பல்வேறு காலகட்டங்களில் சீர்திருத்தம் பெற்று பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தமிழர்களின் வரலாற்றை – பங்களிப்பை மறைப்பதில் பிறமொழியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய எழுத்துக்களை வீரமாமுனிவர், ஈவெரா ஆகியோர் கண்டுபிடித்தனர் என்று வரலாற்றை திரித்து பரப்பி வருகிறார் கம்யூனிஸ்டான சு.வெங்கடேசன்அவர்கள்.

சு.வெங்கடேசன் என்று எழுதுவதற்கும் கையெழுத்து போடுவதற்கும் தெலுங்கரான சு.வெங்கடேசன்தான் முதலில் தமிழர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

(இக்கட்டுரைக்கான பெரும்பாலான தரவுகள் பழங்காசு சீனிவாசன் அவர்களின் பாரதி ஆய்வு நூலகத்திலிருந்து பெறப்பட்டது.)

One Reply to “அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி”

  1. எழுத்து சீர்திருத்தம் பற்றிய பழங்காசு சீனிவாசன் அவர்களது ஆய்வு நூலாக வரவேண்டும் . அதற்குத்தங்களைப் போன்றோர் உதவி இன்றியமையாதது. வெங்கடேசன் எம் பி அவர்களது தவறான விரிவாக சுட்டியதற்கு பாராட்டுக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *