எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்கள் (சுவாசம் பதிப்பகம்)

2022ம் ஆண்டு தொடங்கப் பட்ட சுவாசம் பதிப்பகம் இதுவரை சுமார் 40 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் கீழ்க்கண்ட எட்டு புதிய இந்து அறிவியக்க நூல்களும் அடங்கும். இது தவிரவும், அரவிந்தன் நீலகண்டன் எழுதி முன்பு வெளிவந்த ஆழி பெரிது, கம்யூனிசம்: பஞ்சம், படுகொலை, பேரழிவு ஆகிய நூல்களின் மறுபதிப்பையும் இப்பதிப்பகம் கொண்டுவந்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் சிறப்பான இந்து அறிவியக்க நூல்களை வெளியிட்டுள்ள சுவாசம் பதிப்பகத்திற்கு நமது பாராட்டுக்கள்.

இப்புத்தகங்கள் அனைத்தும் 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் சுவாசம் பதிப்பகம் அரங்கில் (எண்: F-29) கிடைக்கும்.

ஆன்லைனில் இங்கு ஆர்டர் செய்யலாம்.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய: 81480-80118

(1)

தமிழர் பண்பாடு – குதர்க்கமான கேள்விகளும் தெளிவான பதில்களும்
ஆசிரியர்: பா.இந்துவன்

தமிழர் பண்பாடு என்பதை யாரோ சிலர் வரையறுத்துவிட முடியாது. ஏனென்றால், நம் முன்னோர்களின் வாழ்க்கைத் தொகுப்பு அது. எப்படிப் பொய்யான ஒன்றை நம் பண்பாடு என்று புகுத்திவிட முடியாதோ, அதற்கு இணையாக நிஜமான நம் மரபை இல்லை என்றும் மறைத்துவிட முடியாது.

நீண்ட காலமாக நிலவி வரும் நம் பண்பாடு குறித்த சந்தேகங்களை, பொய்ப் பிரசாரங்களை இந்நூலில் எதிர்கொண்டுள்ளார் பா.இந்துவன். தமிழர்களின் பண்பாட்டு அடிப்படைகளை, பழந்தமிழர் நூல்கள் மூலமே நிறுவியுள்ளார். ஒவ்வொரு கேள்விக்கும் மிக விரிவான, ஆழமான, எளிமையான பதில்கள்.

சங்க காலத்தில் தமிழ்நாடு இருந்ததா, தமிழர் பண்பாட்டில் இதிகாசங்களின் பங்கு என்ன, தமிழர்களின் திருமண முறையில் தாலிக்கு இடம் உண்டா, சங்க காலத்தில் சம்ஸ்கிருதம் இருந்ததா போன்ற இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு விரிவாக, ஆதாரபூர்வமான பதில்களை எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.

இனி எவரும் இதுபோன்ற குழப்பமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்பதற்காகவே தெளிவான ஆதாரங்களுடன் வெளியாகி இருக்கிறது இந்த நூல்.

(2)

அரசியல் ஆன்மிக எம்ஜிஆர்
ஆசிரியர்: ம.வெங்கடேசன்

எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது. தனது ஆன்மிக நிலைப்பாட்டை என்றுமே எம்ஜிஆர் மறைத்ததில்லை என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, எம்ஜிஆரால் மிகவும் மதிக்கப்பட்ட ஈவெராவின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியதே இல்லை என்பதையும் உறுதிபடச் சொல்கிறது.

எம்ஜிஆரின் அரசியல் ஆன்மிகச் செயல்பாடுகளை விளக்கும் இப்புத்தகம், அதற்கு இணையாக, அக்காலக் கட்டத்தின் அரசியல் சித்திரம் ஒன்றையும் சேர்த்துத் தருகிறது.

காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற துறவிகளை ஆதரிப்பதால் தனக்கு வரும் முத்திரைகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாதவர் எம்ஜிஆர். தனக்கிருக்கும் ஆன்மிக நம்பிக்கைகளைப் பலமுறை உரக்கச் சொன்னவர் அவர். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, ஆய்வு செய்து, தன் வாதங்களுக்கு வலுவான நிரூபணங்களுடன் இந்த நூலை எழுதி இருக்கிறார் ம.வெங்கடேசன்.

(3)

இந்திய சுதேச சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பு
ஆசிரியர்: இலந்தை சு இராமசாமி

இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல சுதேச சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. எத்தனை கெடு விதித்தும் பல சமஸ்தானங்கள் இந்தியாவின் கீழ் இணையாமல் போக்குக் காட்டி வந்தன. அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இந்திய தேசத்தின் கீழ் கொண்டு வரவேண்டிய மாபெரும் பொறுப்பு நேருவின் அரசாங்கத்துக்கு இருந்தது. இந்த மாபெரும் வேலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் வல்லபபாய் படேலும் வி.பி.மேனனும்.

பெரிய அரண்மனை, ஏவல் செய்ய வேலைக்காரர்கள், அந்தப்புரம் முழுக்க ஆசை நாயகிகள், அவர்களுடனான காமக் களியாட்டம், ஆடம்பர வாழ்க்கை – இவற்றை மகாராஜாக்கள் விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. படேலின் கண்டிப்பில் பலர் உடனே இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டாலும், சிலர் முரண்டு பிடித்தனர். பல்வேறு சலுகைகள் கொடுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது. அப்படியும் ஒத்துக்கொள்ளாதவர்களை இராணுவ ரீதியாக சம்மதிக்க வைக்க வேண்டி வந்தது.

இந்தியா ஒரு பரந்துவிரிந்த தேசம். பல்வேறு கலாசாரம், மொழி, நிலப் பாகுபாடுகள் நிறைந்த தேசம். இப்படிப்பட்ட தேசத்தில், அதுவும் சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்களிலேயே இவற்றைச் செய்வது எத்தனை பெரிய சவால்? உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் மாபெரும் சாதனையாக இந்த சமஸ்தானங்களின் இணைப்பைச் சொல்லலாம். இலந்தை சு இராமசாமி திறம்பட இந்த நூலை எழுதி இருக்கிறார். பல்வேறு சம்பவங்களை ஆதாரத்துடன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

(4)

மகாபாரதம் – மாபெரும் உரையாடல்
ஆசிரியர்: ஹரி கிருஷ்ணன்

மகாபாரதம் பற்றிய இந்தப் புத்தகம் மிக அபூர்வமானது. மகாபாரதத்தின் கதையைச் சொல்லும்போதே, மகாபாரதம் தொடர்பாக நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவற்றுக்கும் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஆதாரபூர்வமான, நுணுக்கமான, ஆழமான பதில்கள் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இந்த ஆதாரங்களை எல்லாம் எந்த எந்தப் புத்தகங்களில் இருந்து ஹரி கிருஷ்ணன் திரட்டி இருக்கிறார் என்பதுதான் இந்தப் புத்தகத்தை முக்கியான புத்தகமாக்குகிறது.

ஹரி கிருஷ்ணன் பாரதி அன்பர். தமிழ் இலக்கிய உலகில் பிரபலமானவர். மகாபாரதம், இராமாயணம், திருக்குறள் மற்றும் பாரதியின் எழுத்துகளில் ஆழங்கால் அறிவு கொண்டவர். இந்த இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்பவர். அவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பதில் வல்லவர்.

மகாபாரதம் மாபெரும் உரையாடல் என்னும் இந்தப் புத்தகம் காலம் கடந்து நிற்கப் போகும் ஒரு பொக்கிஷம். எளிய வாசகர்களின் பார்வையில் மகாபாரதத்தின் சிக்கல்களை எளிமையாக ஆதாரத்தோடு விளக்கும் அரிய நூல்.

(5)

குட் பை லெனின் – கம்யூனிஸத் திரைப்படங்கள்
ஆசிரியர்: அருண் பிரபு

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கோட்பாடு கம்யூனிஸத்தின் அடிப்படை என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்வார்கள். இதை ஆங்கிலத்தில் utopia எனும் பதத்தால் குறிப்பார்கள். இந்த utopia முழு முற்றான ஒரு கற்பனை உலகம். கம்யூனிஸத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடுகளிலேயே ‘எல்லோரும் எல்லாமும்’ பெறுவதில்லை.

இந்தியாவில் கம்யூனிஸம் பற்றிய பிரசாரம் மிகைப்பட்ட அளவில் நடக்கிறது. அனைத்து ஊடகங்களும் பெரும்பாலும் கம்யூனிஸ சித்தாந்தத்தின் பிடியில் இருக்கின்றன. பெரும்பாலான திரைப்படங்கள் கம்யூனிஸத்தை ஒரு மாபெரும் லட்சியக் கனவு என்னும் வகையிலேயே சித்திரிக்கின்றன. ஆனால் உலகத் திரைப்படங்கள் அப்படி அல்ல.

கம்யூனிஸம் தான் கால் பதித்த நாடுகளில் எல்லாம் எப்படி மனித உரிமைகளுக்கு வேட்டு வைத்தது, ஜனநாயகத்தை எப்படி நசுக்கியது என்பதை விளக்கும் திரைப்படங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். இத்திரைப்படங்கள் கம்யூனிஸத்தை வெறுப்புடன் அணுகவில்லை. மாறாக வரலாற்று யதார்த்தத்துடன் அணுகுகின்றன. மானுட குல வீழ்ச்சியில் கம்யூனிஸத்தின் பங்கு என்ன என்பதை விவாதிக்கின்றன. எதிர்-கம்யூனிஸத் திரைப்படங்களில் முக்கியமானவற்றில் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறார் அருண் பிரபு.

(6)

இந்திய ஞான தரிசனங்கள்
ஆசிரியர்: பத்மன்

கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்;

பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்;

ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்;

ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்;

பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்ந்து ஆன்மாவை வலியுறுத்தி ஆண்டவனை மறுக்கும் சாங்கியம்;

அணுக்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் வைசேஷிகம்;

காரண – காரிய வாதங்களை அலசி ஆராயும் நியாயம்;

உடல்-மன கட்டுப்பாடுகள், பயிற்சிகள் மூலம் உண்மையை அறிய முயலும் யோகம்;

வேள்விகள் உள்ளிட்ட கடமைகளைச் செய்வதை வலியுறுத்தும் மீமாம்சை;

தத்துவ விசாரணையையும் கடவுளையும் வலியுறுத்தும் வேதாந்தம், அதன் உட்பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அபேதபேதவாதம்;

இந்த வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டு சிவமே பரம் என்று கூறும் சித்தாந்த சைவம்;

சித்தாந்த சைவத்தோடு முரண்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம்;

மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டை முன்னிறுத்தித் தோன்றிய தாந்திரீகம்;

வழிபடு கடவுளை வரித்துக்கொண்டு எழுந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், ஐந்திரம்;

பிற்காலத்தில் தோன்றிய சீக்கியம், பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம்.

இத்தகைய அனைத்து இந்திய தத்துவ தரிசனங்களையும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எளிய நடையில் தொகுத்துக் கூறும் முக்கியமான நூல்.

தினமணி.காமில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.

(7)

மறைக்கப்படும் ஈவெரா
ஆசிரியர்: ம.வெங்கடேசன்

பெரியார் என்று விதந்தோதப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்துகள் அனைத்தும் எவ்விதப் பாகுபாடும் இன்றி மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்படுவதில்லை. அவர் சொன்னவற்றில் தங்களுக்கு ஏற்ற கருத்துகளை மட்டும் சொல்லி, தங்களுக்கு வசதியான ஒரு தோற்றத்தை ஈடுபடுவதில் பெரியாரியர்கள் ஈடுபடுகிறார்கள். அதில் கணிசமான வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.

ம.வெங்கடேசன் அம்பேத்கரிய ஆய்வாளர். ஈவெரா சொன்னவற்றில் மக்கள் முன்பாக எவையெல்லாம் மறைக்கப்படுகின்றனவோ அவற்றை இப்புத்தகத்தில் தொகுத்திருக்கிறார். இன்று தங்கள் அரசியல் காரணங்களுக்காக ஈவெராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டிப் பிரசாரம் செய்பவர்களுக்கு மத்தியில், துணிச்சலாக, மறைக்கப்படும் ஈவெராவின் கருத்துகளை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி இருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள், ‘இப்படியெல்லாம் கூட பெரியார் சொல்லி இருக்கிறாரா?’ என்று ஆச்சரியப்படப் போவது உறுதி.

(8)

லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்
ஆசிரியர்: சக்திவேல் ராஜகுமார்

இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை.

இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல்.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *