ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணமாக அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.

ஸ்ரீராமானுஜரைப் பற்றி சிறுவயதிலிருந்தே தனது மனதில் பதிந்த, இதய எழுச்சிக்குக் காரணமான மகத்தான சித்திரம் பெருமளவும் திவ்யப் பிரபந்த வியாக்கியானங்கள், குருபரம்பரை நூல்கள், ரகஸ்ய த்ரய நூல்கள் ஆகியவற்றின் வழியானதாக இருக்க, சிலர் (வித்வான்கள் உட்பட) அவரது வடமொழி நூல்களை மட்டுமே ஆதாரம் காட்டி அந்த சித்திரத்திற்கு ஆதாரம் எதுவுமில்லை என்று கூறியபோது குழப்பமடைந்ததாகவும், பிறகு மீண்டும் விரிவான கற்றல், சிந்தித்தல் வாயிலாக அந்த சித்திரம் முற்றிலும் ஆதாரபூர்வமானதே என்று தெளிவடைந்ததாகவும் கூறுகிறார். “சான்றுகள் இல்லை என்று அவர்கள் கூறிய விஷயங்களுக்கு ஆணித்தரமான, கணிசமான சான்றுகள் இருப்பதைக் கண்டு நிம்மதி பிறந்தது.. சமீபத்தில் ஸ்ரீராமானுஜர் சமத்துவ சிலை திறக்கப்பட்ட போது அத்தகைய சந்தேகங்களை மீண்டும் சிலர் கிளப்பினர். அதை முன்னிட்டு சில கட்டுரைகள் எழுதலாம் என்று எண்ணி அது நூலளவுக்கு வளர்ந்துவிட்டது” என்கிறார்.

மூன்று பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது.

முதல் பகுதியில் உள்ள எட்டு கட்டுரைகளில் “இதுவரையில் யாரும் தொடாத சில விஷயங்களைத் தொட்டிருக்கிறேன்” என்று ஆசிரியரே கூறுகிறார். திருக்கோட்டியூர் நம்பிகளிடமிருந்து அரும்பாடு பட்டுத் தாம் அடைந்த பிரபத்தி என்ற நெறியை, நாம் பொதுவாக அறிந்திருப்பது போல “கோபுரத்தின் மேல்நின்று அனைவரும் கேட்குமாறு” ராமானுஜர் கூறவில்லை, தேர்ந்தெடுத்த சில வைஷ்ணவர்களுக்கு மட்டுமே கூறினார் என்ற ரீதியில் சில சம்பிரதாயவாதிகள் விவரிப்பதை ஆசிரியர் கடுமையாக மறுக்கிறார். தமது தரப்பிற்கு அடுக்கடுக்காக ஆதாரங்களைத் தருகிறார்.

“காசினியிலுள்ள ஜனங்களை அதிகாராநாதிகார விபாகமற தாமேவந்து தொடர்ந்து அந்த சரமஸ்லோகார்த்தத்தை பூரிதானமாகக் கொடுத்த க்ருபாவாத்ஸல்யௌதார்யாதி கல்யாண குணங்களை உடைய.. எம்பெருமானார் தம்முடைய (படியிதுவே) ஸ்வபாவமிதுவே”

என்ற பிள்ளைலோகம் ஜீயரின் இராமானுச நூற்றந்தாதி உரை மேற்கோள் ஒரு உதாரணம். இதில் “அதிகாராநாதிகார விபாகமற” – பரமார்த்தத்தைப் பெற அதிகாரம், அதாவது தகுதி உள்ளவர்களா இல்லையா என்பதையெல்லாம் பிரிவினைப் படுத்திப் பார்க்காமல். “பூரிதானம்” – வரையா ஈகை. இன்னாருக்குத் தான், இவ்வளவு தான், இப்பொழுதுதான் என்ற எந்த எல்லைகளையும் கொள்ளாமல் ஈவதே தனக்கு இயல்பாகத் தருவதே பூரிதானம் என்று அருமையாக விளக்குகிறார் (பக். 21). இதேபோல “அவர்களுடைய ஜன்ம விருத்த ஞானங்களால் (பிறப்பு, தொழில்) உண்டான உத்கர்ஷ அபகர்ஷங்கள் (உயர்வு தாழ்வு) பாராதே, ஆபிமுக்ய சூசகமான (ஈடுபாடு கொள்வதற்கு அடையாளமான) ருசியையே பார்த்து நான் உங்களுக்குச் சொன்ன பரமார்த்தத்தை அவர்களுக்குச் சொல்லுங்கோள்” என்று இவ்வாறே ராமானுஜர் தமது சீடர்களுக்கும் ஆணையிட்டார் என்பதை உபதேசரத்தினமாலையில் இருந்து சான்று கூறி எடுத்துக்காட்டுகிறார் (பக். 22-23).

உத்தாரக விசிஷ்ட க்ருபாமாத்ர ப்ரஸன்ன ஆசார்யத்வம் பூர்ணமாகக் கடவது உடையவர் பக்கலிலேயிறே (வலுக்கட்டாயமாகப் பிடித்து ஆபத்தினின்றும் மேலே தூக்கிக் காப்பாற்றும் சிறப்பும், கிருபையினால் தாமே உவந்து உபதேசம் செய்யும் இயல்பும் உடையவரிடம் முழுமையாக உள்ளதன்றோ).. வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தைத் தாமே மேல்விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே (மிகுந்த முயற்சியினால் கிடைத்த சீரிய அர்த்தத்தை தாமே மேலே விழுந்து எல்லாருக்கும் வெளியிட்டு அருளினார் அன்றோ)”

என்ற அருமையான மேற்கோளைத் தருகிறார் ஆசிரியர் (பக். 33-34). தீய நடத்தைகொண்ட அரங்கமாளிகை என்பவரை ராமானுஜர் மன்னித்துக் கருணையால் ஆட்கொண்ட சரிதமும் வருகிறது. இதில் “மேல்விழுந்து” என்ற சொல்லாடல் ஆச்சரியப் படுத்தியது. பொதுவாக, வைதிக ஆசாரம் புழங்கும் சூழல்களில் மடியாக இருப்பவர்கள் கவனத்துடன் “மேலே விழுந்துடாதே” என்று சொல்வது வழக்கம். ஆனால், இங்கே அதே சொல்லையே எடுத்துக் கொண்டு, உடையவர் “மேல் விழுந்து” எல்லாருக்கும் உபதேசம் செய்தார் என்று இந்த உரைநடையின் (சரமோபாய நிர்ணயம்) ஆசிரியர் கூறுவது போலத் தோன்றுகிறது.

பிரபன்ன குலம் என்ற கட்டுரை, தர்மசாத்திர ரீதியான வர்ணாசிரம வழக்கங்களும், பிரபத்தியின் அடிப்படையிலான “தொண்டர் குலம்” என்ற கருத்தாக்கமும் உண்டாக்கும் முரண்களையும் அது எவ்வாறு ஸ்ரீவைஷ்ணவ மரபின் வரலாற்றில் ஒருவிதமான சமன்வயத்தை அடைந்தது என்பதையும் விளக்க முற்படுகிறது. அழகிய மணவாளப் பெருமாளின் ஆசார்ய ஹ்ருதயம், நடாதூரம்மாள், ஆளிப்பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை இத்யாதி ஆசாரியர்களின் வாழ்க்கை சம்பவங்கள் ஆகியவை இதில் எடுத்தாளப் படுகின்றன.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

தமிழும் ஸ்ரீராமானுஜரும், தமிழில் வேதங்கள் ஆகிய கட்டுரைகளில் வடமொழி வேதத்திற்கு நிகராக ஆழ்வார்களின் தமிழ் அமுதமான திவ்யப் பிரபந்தத்தை நிலைநிறுத்துதல் என்பது நாதமுனிகள், ஆளவந்தார் வழியாக ராமானுஜர் வரை தொடர்ந்து வருவதைப் பலபட விரித்துரைக்கிறார் நூலாசிரியர். வியாக்யானங்களில் பல இடங்களில் வரும் “ஸர்வாதிகாரமான த்ராவிட பிரபந்தத்தை” (அனைவருக்கும் உரியதான தமிழ்ப் பாசுரங்கள்) என்ற சொல்லாட்சியின் முக்கியத்துவம் உணர்த்தப் படுகிறது (பக். 114-115). ஸ்ரீபகவத் விஷயம் என்ற கட்டுரையில், எப்படி அந்தச் சொல்லானது முதலில் திருவாய் மொழியையும், பின்பு அதன் வியாக்கியானங்களையும், அதன் பின்னர் மற்ற ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் வியாக்கியானங்களுடன் சேர்த்து விரிந்த பொருள் கொண்டதாக வளர்ந்தது என்பதை அறிய வருகிறோம். இந்த நூலாசிரியர் ஸ்ரீபகவத் விஷயத்தை எண்ணும்போது (2013) என்று முன்பே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யப் பிரபந்த பாசுரங்களை கவிதா ரசனை, தத்துவார்த்தம் என்ற இரு திறக்கிலும் ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களின் அடிப்படையில் விளக்கிச் செல்லும் அபாரமான வாசிப்பனுவம் கொண்ட நூல் அது.

“ஸ்ரீராமானுஜர் அருளிய நூல்களும் கருத்துக்களும்” என்ற நீள்கட்டுரை, ஸ்ரீபாஷ்யம் மற்றும் விசிஷ்டாத்வைத தரிசனம் குறித்த விரிவான அறிமுகத்தைத் தருகிறது. இதன் பெரும்பகுதி ராமானுஜ தரிசனம் குறித்த பல நூல்களில் நான் வாசித்த விஷயம் தான் என்றாலும், ஆசிரியர் அதை எழுதிச் செல்லும் முறை சிறப்பானது. ஸ்ரீராமானுஜர் வேதார்த்த சங்க்ரஹம் தொடங்கி ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம் ஈறாக தனது உரைநூல்கள் அனைத்திலும் “வேதாந்த அடிப்படையிலான உபாசனா பூர்வகமான பக்தி” என்பதையே தனது சித்தாந்தமாக வைக்கிறார். “பிரபத்தி” என்ற சரணாகதி நெறியைப் பற்றி ஏன் கூறவே இல்லை என்ற ஆட்சேபத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்பது தான் இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம். அதை முன்னிட்டே அந்த விரிவான அறிமுகம் தரப்பட்டுள்ளது. அந்த ஆட்சேபத்திற்கு கத்யத்ரயம் முதலான நூல்களின் அடிப்படையிலும் யுக்திபூர்வமாகவும் ஆசிரியர் சிறப்பாக பதிலளித்துள்ளார்.

நூலின் இரண்டாம் பகுதி “ஸ்ரீராமானுஜரின் பெருமை”. இதில் ஸ்ரீவைஷ்ணவ மரபில் ராமானுஜருக்கு உள்ள மையமான, தனிச்சிறப்பு வாய்ந்த இடம் என்பது பல்வேறு நூல்கள் வழியாக நிறுவப்படுகிறது. நாயனாராச்சான் பிள்ளை (பெரியவாச்சான்பிள்ளையின் புத்திரர்) அருளிய சரமோபாய நிர்ணயம் என்ற நூலை ஆசிரியர் முதன்மையாக எடுத்துக் கொள்கிறார். பிரதம உபாயம் (முதல் வழி) பகவான், சரம உபாயம் (இறுதி வழி) பகவானைக் காட்டித் தரும் ஆசாரியன் என்பது பிரபத்தி நெறியின் வளர்ச்சி நிலை. அதில் ஆசார்யன் என்ற சொல் அவரவர்களது ஆசாரியர்களைக் குறிக்கும் என்று பலரும் எண்ணத் தலைப்பட்ட காலத்தில், அது இராமானுசன் ஒருவனையே குறிக்கும், இராமானுசனைக் கைகாட்டும் பணியைச் செய்பவர்களே மற்ற அனைத்து ஆசாரியர்களும் என்று நிலைநிறுத்த இந்த நூல் எழுந்ததாக ஆசிரியர் கூறுகிறார் (பக். 126-127). இதைத் தொடர்ந்து ராமானுஜரின் அவதார மகிமை, அதற்கான முன்னறிவிப்புகள், அவரது சமகாலத்தில் சரணடைந்த கூரத்தாழ்வான், திருக்குருகைப் பிரான் பிள்ளான், அநந்தாழ்வான் உள்ளிட்ட பெரியோர்கள், அவருக்குப் பின்வந்த வேதாந்த தேசிகர் உள்ளிட்ட ஆசாரியர்கள் ஆகியோர் ராமானுஜரைப் போற்றி எழுதிய சுலோகங்கள், வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியவை விரிவாகத் தரப்பட்டுள்ளன. மணமாள மாமுனிகளின் யதிராஜ விம்சதியில் உள்ள 20 சுலோகங்களையும் கவித்துவமாக தமிழாக்கம் செய்து விளக்கங்களும் அளித்துள்ளார் ஆசிரியர்.

மூன்றாம் பகுதி, திருவரங்கத்தமுதனார் இயற்றிய ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாடல்களுக்குமான முழுமையான விரிவுரை. அமுதனாரின் பெரும்புலமையையும் அவர் இயற்றிய இந்த அருள்நூலை ராமானுஜரே கேட்டு உகந்து அருள் செய்ததையும் உணர்ச்சிகரமாக விவரிக்கிறார் ஆசிரியர்.

“ஒரு நூற்றந்தாதி அளவில் பாடப்பட்ட பிரபந்தம் கேட்டவர்களைப் பிணைத்தது. தங்கள் நெஞ்சில் இருந்த நன்றியையே அமுதனார் தமக்காகச் சொன்னது போல ஒருசேர அவர்கள் உணர்ந்தனர். அனைவரின் உள்ளத்தின் குரலாக மாறிப்போனர் திருவரங்கத்து அமுதன்” (பக். 218).

இந்த விரிவுரை மிகச்சிறப்பாக எழுதப் பட்டுள்ளது. பூமன்னு மாது என்ற முதற்பாடலும் பூமன்னவே என்று இறுதிப் பாடலும், திருமகளைக் குறிப்பதை எடுத்துக் காட்டி பிரபத்தி நெறியில் திருமகளின் திருவருள் குறித்து விவரித்திருப்பது அருமை. ஒவ்வொரு பாடலிலும் பயின்று வரும் நுட்பங்களையும், தத்வார்த்தர்களையும், ராமானுஜர் குறித்த ஆத்மார்த்தமான பொருள்பொதிந்த போற்றுதல்களையும் ஆசிரியர் விளக்கிச் செல்லும் பாங்கு அலாதியானதாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தாமே இயற்றியுள்ள “ஸ்ரீராமானுஜர் மீது இருபது வெண்பா” என்ற அருமையான துதி நூலையும் கொடுத்திருக்கிறார். அதில் என்னை மிகவும் கவர்ந்த ஓர் அழகிய பாடல்:

பொலிந்தது பூதூர் புகழ்மலி கச்சி
பொலிந்தது பொன்னரங்கம் வேங்கடம் பூத்துப்
பொலிந்தது பூமி புலர்ந்தது வாழ்வு
பொலிந்தது பாரத நாடு.

ஆசிரியர் இறுதியில் கொடுத்துள்ள குறிப்புதவி நூல்களின் பட்டியலிலிருந்து அவரது ஆய்வின் ஆழத்தையும் அகலத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், ஸ்ரீவைஷ்ணவ மரபைச் சார்ந்தவர்கள், ராமானுஜ சித்தாந்தம் குறித்து அறிவும் உணர்வும் சார்ந்து மதிப்புக் கொண்ட பொதுவான வாசகர்கள் என்ற இரு சாராருக்கும் முக்கியமான திறப்புகளை அளிப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது என்று கூறலாம்.

ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்
ஆசிரியர்: ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
சந்தியா பதிப்பகம் வெளியீடு
பக்கங்கள்: 362
புத்தகத்தை ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.
தொலைபேசி: 9444715315

5 Replies to “ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்”

  1. அன்புள்ள மோகன ரங்கம்
    ஹிந்து தமிழ் தங்களை அறிமுகபடித்திய விதவும் ஆய்வு செய்த விதமும் மிக அருமை. வாழ்த்துக்கள். நான் SJC1978 குழுவில் உங்களுக்கு அறிமுகமான நண்பன் தான்( P S Muralidharan).
    எங்களைப் பொருத்த வரையில் ஸ்வாமி என்றால் இராமனுஜர் தான். என்னுடைய சொந்த ஊர் சத்தியமங்கலம்.
    எனது அம்மாவின் ஊர் திருநாராயணபுரம் என்ற மேல் கோட்டை.
    நான் கல்லூரியில் படித்தது தான் தெரியுமே.
    நான் என் மகளை மணமுடித்த ஊர் ஸ்ரீபெரும் புதூர். என் மாப்பிள்ளை வீட்டார் எம்பெருமானாருக்கு வஸ்த்ர. கைங்கரியம் செய்பவர்கள். ஆகையால் நானும் இராமானுஜர் போற்றப்படும் மூன்று சிறப்புமிக்க தலங்களில் கால் பதிக்க பாக்கியம் செய்து இருக்கிறேன். நான் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் இந்த சீரிய புத்தகத்தை வாங்க முடியவில்லை. நான் தற்போது ஸ்ரீபெரும்பூதூர் அருகில் தான் வசிப்பதால் இந்தியா வந்தவுடன் வாங்குகிறேன். மேலும் ஸ்ரீரங்கம் வரும் சமயம் அவசியம் சந்திக்கிறேன்.
    வளர்க உம் இலக்கியப்பணி.
    P S Muralidharan

  2. நன்றி திரு முரளீதரன்.

  3. ஶ்ரீ ரங்கம் மோகனரங்கன் ஐயா அவர்கள் ஆழமாக வேதாந்தம் மற்றும் பக்தி நூல்களை உணர்ந்தவர். அவரது கட்டுரைகள் நுணுகி ஆய்ந்து எழுதப்பட்டிருப்பதை நாம் உணரமுடிகிறது! இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான நூலொன்றை ஐயா எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! ஜடாயு அவர்களது மதிப்புரை நூலை வாங்கி வாசிக்கத்தூண்டுகிறது! அனைவருக்கும் வர்ண ஜாதி லிங்க பேதமின்றி மோக்ஷத்திற்கு வழிகாட்டிய ஶ்ரீ ராமானுஜரது பணியை அனைவரும் தெள்ளத்தெளிவாக உணர இந்தூல் அவசியம் பயன்படும்!

  4. ஒரு விளக்கம்: – ‘மேல்விழுந்து சொல்லுதல்’ என்பது ‘ஒருவர் தாம் மிக ஆர்வம் கொண்டு தேடிவந்து கேட்கவில்லையென்றாலும், அவர் பகவத் விஷயம், பிரபத்தி போன்ற கருத்துகளைச் சொன்னால் வேண்டாம் என்று மறுக்க மாட்டார் என்றாலே போதும் அவருக்குத் தாமே வலியச் சென்று தம் பேறாகக் கருதிச் சொல்லுதல்’ என்பதைக் குறிக்க வந்த பிரயோகம்.

  5. வைணவ சம்பிராயதற்திற்குரிய பல கலைச் சொற்களின் அர்த்தம் புரிந்து கொள்ள மிக்க சிரமமாக இருக்கிறது. எளிதில் கிடைக்கவும் இல்லை. ஏதேனும் அகராதி உள்ளதா? வலைதளங்கள் உள்ளதா?தெரிந்தவா்கள் பதிவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *