தமிழ்நாட்டில் சித்தர்கள், சித்தர் மரபு என்றால் அது புரட்சிகர, “பகுத்தறிவு” “முற்போக்கு” ஆன்மீகம் என்பது போல ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அதைப் பேசக்கூடிய ஆட்களில் கணிசமானவர்கள் திமுக கொத்தடிமைகளாகவும் இந்து விரோதிகளாவும் இருப்பது தான் வினோதம்.
தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் என்ற மகத்தான அரசியல் தலைவர் கோரக்நாத் சித்தர் பீடத்தின் தலைவர். ஆனால் அவரைக் குறித்து கீழ்த்தரமான வசைகள், அவதூறுகள், வெறுப்பு இங்கு பரப்பப் படுகிறது. சித்தர் மரபின் மீது உண்மையான பக்தியோ அபிமானமோ இருந்தால், அதைக் குறித்து ஒரு சிறிய கண்டனமானவது வந்திருக்க வேண்டுமே. ஒன்றும் கிடையாது. மாறாக, “சித்தர்” ஆசாமிகளும் கூட சேர்ந்து கொள்ளும் கொடுமை தான் நடக்கிறது. என்ன ஒரு போலித்தனம், இரட்டை வேடம்.
கோரக்நாதர், மத்ஸ்யேந்திரநாதர் என்னும் இமயமலைச் சித்தர்களே கோரக்கர், மச்சேந்திரர் என்று தமிழில் அழைக்கப்படுகின்றனர். அவர்களைத் தான் உத்தரப் பிரதேசமும் போற்றுகிறது, தமிழ்நாடும் வணங்குகிறது. “நவநாத்” என்ற ஒன்பது சித்தர் மரபின் தலைமை சித்தர் கோரக்நாதர் தான். வட இந்தியாவிலும், மகாராஷ்டிரத்திலும் நவநாத் படங்களை பரவலாகப் பார்க்கலாம்.
“ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே
நவநாத சித்தர்களும் உன்
நட்பினை விரும்புவார்”
என்றும்
“எண்ணரிய கணநாதர் நவநாத சித்தர்கள்
இரவிமதி யாதியோர்கள்”
என்றும்
தாயுமானவர் இந்த மரபைத் தான் புகழ்ந்து பாடியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு சித்தர்களும் பிற்காலத்திய தமிழ்நாட்டு பதினெட்டு சித்தர் மரபிலும் இடம் பெறுகின்றனர் என்பதிலிருந்தே அவர்களுடைய முதன்மையான இடத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வளவு பெருமைக்குரிய ஒரு மகா சித்தயோகியை உத்தரப்பிரதேச மக்கள் தங்களது மாநில முதல்வராகவே தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை இங்குள்ள சித்தர் மரபு பக்தர்கள் கொண்டாடக் கூட வேண்டாம், குறைந்தது அவர் மீதான வெறுப்பு பிரசாரத்துக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிப்பதில்லையே.
சித்தர்கள் குறித்து பொழுதுக்கும் விதவிதமான கதைகளையும் ஏதேதோ செய்திகளையும் வெளியிட்டு வரும் சக்தி விகடன், குமுதம் பக்தி இத்யாதி “ஆன்மீக” பத்திரிகைகளில் எல்லாம் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் சித்தர் பெருமகனாரைக் குறித்து ஒரு வரி வந்ததுண்டா?
சித்தர் ஆன்மீகத்தின் மீது உண்மையான அன்பும் பக்தியும் கொண்ட சீரிய அன்பர்களே, சிந்திப்பீர். இந்த உண்மைகளைத் தமிழ் மக்களுக்கு எடுத்துரைப்பீர்.