ஸ்ரீமத் பாகவதத்தின் இதயம் எனக் கருதப் படும் பத்தாவது ஸ்கந்தத்தின் தொடக்கத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் கிருஷ்ண ஜனன வர்ணனை வருகிறது. கம்சனின் சிறைக்கூடத்தில் நள்ளிரவில் தேவகியின் திருவயிற்றிலிருந்து பகவான் பிரசவித்த ஆச்சரியகரமான அவதார வைபவத்தை, மெய்சிலிர்ப்பூட்டும் வகையில் சுகமுனிவர் விவரிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது. பூஜையின் முடிவில் தீபாராதனைக்குப் பிறகு வாசிக்கலாம். அல்லது நள்ளிரவு வரை பகவத் ஸ்மரணையுடன் விழித்திருந்தால், பகவானின் அவதார காலமான 12 மணிக்கு ஒரு 5 நிமிடம் முன்பாக ஆரம்பித்து வாசிக்கலாம்.
அத்யாயம் முழுவதையும் வாசிக்க இயலாவிடில் அதன் சுருக்கமாக உள்ள கீழ்க்கண்ட சுலோகத் தொகுப்பை வாசிக்கலாம். பாகவதம் முழுவதையும் சுருக்கி ஸ்ரீமத் பாகவத ஸாரம் (இரண்டு பாகங்கள்) என்று உரையாசிரியர் ஸ்ரீ அண்ணா தொகுத்து அருமையான புத்தகமாக வெளிவந்துள்ளது (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை). அதிலிருந்து இந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து pdf ஆக அளித்திருக்கிறேன்.
சுலோகங்களையும் தமிழாக்கத்தையும் அடுத்தடுத்து வாசித்துச் செல்வது நன்று. தேவநாகரி லிபி தெரியாதவர்கள் தமிழாக்கத்தை மட்டுமே வசனமாக வாசித்துச் செல்லலாம். மொத்தம் எட்டு பக்கங்கள் தான்.
நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், கிருஷ்ணானுபவம் தான். ஆயினும் ராமநவமி என்றால் குலசேகராழ்வார் உடனடியாக மனதில் எழுவது போல, கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள். “வண்ண மாடங்கள்” என்று கோகுலத்தில் கிருஷ்ண ஜனன உத்சவத்தை பாடுவதில் தொடங்கி பெரியாழ்வார் திருமொழி முழுவதுமே குழந்தைக் கண்ணனை மையப் படுத்திய பகவத் விஷயமாகத் தான் இருக்கிறது. மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களிலும் (குறிப்பாக ஆண்டாள், நம்மாழ்வார்) கிருஷ்ண பரமாகவே பல பாசுரங்கள் உள்ளன.
கோலம், பூஜை, முறுக்கு, சீடை, அப்பம், உறியடி, ஆட்டம், பாட்டம், பஜனை என்று அல்லோல கல்லோலப் படும் கிருஷ்ண ஜெயந்தி உத்சவத்தன்று நிறைய பாசுரங்கள் பாராயணம் செய்வதற்கு நேரமிருக்காது. எனவே, திவ்யப் பிரபந்தம் விஷயமாக எனக்குள்ள சிற்றறிவின் அடிப்படையில், எல்லா ரசங்களும் பாவங்களும் வெளிப்படுமாறு இந்த 60 பாசுரத் தொகுப்பை சில வருடங்கள் முன்பு உருவாக்கினேன் (40 பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி தான்). இன்றைய புனித நாளில் பக்தர்களுடன் இத்தொகுப்பை பகிர்ந்து கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய ஶ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்.