இந்து தர்ம ஆசாரியர், வேத-சாஸ்திர-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய காணொளி. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்தக் காணொளி அளிக்கிறது.
“பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. பாவச் செயல்களை செய்வதிலிருந்து மக்களைத் தடுத்து அதுகுறித்த பயத்தை ஏற்படுத்துவதற்காக இந்த உபதேசம். ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா? தேசத்திற்காகப் போராடி அந்தமான் சிறையில் மாபெரும் கஷ்டங்களை அனுபவித்த மகாவீரர், தியாகச்சுடர் பூர்வஜன்ம பாவத்தால் அந்தக் கஷ்டத்தை அனுபவித்தார் என்று கூறுவோமா?..
மாற்றுத் திறனாளிகள் எல்லாம் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் என்பது அல்ல கர்மா தியரி. ரிக்வேத ரிஷிகளிலேயே தீர்க்கதமஸ் (குருடர்), விஷ்பலா, (காலை இழந்து, அஸ்வினி தேவர்களால் செயற்கைக் கால் அளிக்கப்பட்ட பெண் ரிஷி), அபாலா ஆகிய தெய்வ அருள்பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.. விபத்தினால் ஏறக்குறைய உடல் முழுவதும் செயலிழந்து போக, அதற்குப் பின் மாபெரும் சமூகசேவை ஸ்தாபனத்தை நடத்தி வரும் ஆய்க்குடி அமர் சேவா சங்கம் (பத்மஶ்ரீ) ராமகிருஷ்ணனிடம் ஏன் உங்களுக்கு எப்படி ஆயிற்று என்று கேட்டார்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா.. ?”
வீடியோ சுட்டி: https://www.youtube.com/watch?v=3xrrnnjz3N8
(கவனத்துடன் கேட்பவர்கள் 1.5x வேகத்தில் கேட்கலாம்)
வீடியோவில் சொல்லப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்:
1. “நல்லது செய்தவன் நன்மை அடைகிறான்; கெட்டது செய்தவன் தீமை அடைகிறான்” என்பதே கர்மா கோட்பாடு. இது வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பிற இந்திய மதங்களும் இக்கோட்பாடை உடையவையே.
2. மதங்களுக்கு அப்பால், மனிதர்கள், உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும், இந்த “நல்லது… அடைகிறான்” என்பதை நம்பித்தான் வாழ்கிறார்கள். அதாவது, இது உலகளாவிய நம்பிக்கை.
3. அதே சமயம், இக்கோட்பாட்டை, “மாற்றுத்தினாளிகள் முற்பிறப்பில் செய்த பாவத்தினால் உடல் ஊனத்தை அடைந்து இப்பிறவியில் கஷ்டப்படுகிறார்கள்” என்று பொருள் தருவதாக எடுக்கவே கூடாது.
4. பள்ளிச்சிறார்களிடம் கர்மா கோட்பாட்டை பற்றி பேசக்கூடாது.
எண்ணம் மூன்றை பல இடங்களில் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.
(பள்ளியில் பேசாமல் வேறிடத்தில் அந்த நபர் பேசியிருந்தால் யாரும் பெரிது படுத்தியிருக்க மாட்டார்கள். பலர் பொது மேடையில் அல்லது ஆன்மிக மேடையில் இந்த நபர் பேசியதையே பேசியிருக்கிறார்கள். பேசிக்கொண்டுமிருக்கிறார்கள். ஒருவரும் சட்டை செய்யவில்லை. அவர்களை தடுக்கவும் முடியாது. தடுத்தால் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகும்.
மொத்தத்தில், பள்ளியில் பேசியதுதான் சர்ச்சை.)
பள்ளியில் பேசக்கூடாது என்று இந்து தர்ம ஆசாரியர், வேத-சாஸ்திர-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி சொல்கிறார்கள்.