கம்பனில் காத்திருப்பு – புத்தக அறிமுகம்

முனைவர் செ.ஜகந்நாத் எழுதியுள்ள கம்பனில் காத்திருப்பு (ஜூலை 2025, பவித்ரா பதிப்பகம் ) நூலுக்கு இந்து சிந்தனையாளர், கம்பராமாயண அறிஞர் ஜடாயு எழுதிய அணிந்துரை – ஆசிரியர் குழு.

மற்றுமொரு சுடர்

தமிழ் இலக்கியத்தின் சிகரம் கம்பராமாயணம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.  எனில், அந்தப் பெருங்காவியத்தைப் பலவிதங்களில் விளங்கச்செய்யும் வகையிலும், போற்றிப் பாதுகாக்கும் வகையிலும் எழுந்த உரைநூல்களும், பிரசங்கங்களும், ஆய்வுகளும், வெகுஜன இயக்கங்களும் எல்லாம் அதன் மீது வைக்கப்பட்ட சிகரதீபம் என்று கருதத்தகும். அதிலும் குறிப்பாக,  படர்ந்து எழும் இருளாலும் இன்னபிற காரணங்களாலும் சிகரமே கண்ணுக்குத் தோன்றாமல் போகும் அபாயம் கொண்ட சூழலில், இத்தகைய தீபங்களின் தேவையும் சேவையும் மிக முக்கியமானவை. அந்த வகையில் நண்பர், பேராசிரியர் ஜகன்னாத் அவர்களின் இந்த நூல், கம்பராமாயண ஆய்வுப் பரப்பிலும், ரசனை வெளியிலும் மற்றுமொரு சுடரை ஏற்றி வைத்துள்ளது.

இதிலுள்ள  பத்துக் கட்டுரைகளில் நான்கு, இராமகாதைக்கெனத் தமது வாழ்வின் கணிசமான பகுதியைச் செலவிட்டு உழைத்த பெருந்தகைகளைப் பற்றி அமைந்துள்ளது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.  பெரிதும் பேசப்பட வேண்டியவர்கள், கொண்டாடப் படவேண்டியவர்கள் இந்த ஆளுமைகள்.

தமிழ்ப் பண்பாட்டு வெறுப்பும், கலாசார அழிப்பு மனநிலையும் ஓங்கிக் கொண்டிருந்த அரக்கத்தனமான திராவிட இயக்க சூழலிலும், கம்பன் கழகம் என்ற இயக்கத்தைக் கனவு கண்ட காரைக்குடி சா.கணேசன் பற்றிய கச்சிதமான கட்டுரை ‘கம்பனைக் காத்த திரிசடை’.

கு.அழகிரிசாமியின் கம்பர் பணிகள் குறித்த இரு கட்டுரைகளிலும் உள்ள முக்கியமான தரவுகளும் (உதா: 1950களில் நினைவுகூரப்பட்ட பல சாதிகளையும் சேர்ந்த கம்பராமாயணப் பிரசங்கிகள் பற்றிய தகவல்கள்), கம்பராமாயணப் பதிப்புகள் பற்றிய ஆய்வுக் குறிப்புகளும் செறிவானவை.  நவீன இலக்கிய முன்னோடியாகவே பெரிதும் அறியப்பட்டுள்ள கு.அழகிரிசாமி, ‘கவிச்சக்கரவர்த்தி’ மேடைநாடகம் எழுதியதும், கம்பராமாயணப் பதிப்பைக் கொண்டுவருவதற்காகச் செலுத்தியுள்ள உழைப்பும், சிரத்தையும் பிரமிக்க வைக்கின்றன.  பாடல்களை சொல், சீர் பிரிப்பதில் தொடங்கி,  இடைச்செருகல்கள் குறித்த மதீப்பீடுகள் வரை அந்தப் பதிப்பின் பல கூறுகளையும் சுருக்கமாக அளித்திருப்பது அருமை.  “ஒரு பிரதியைப் படைப்பாளர்மைய வாசிப்பிலிருந்து வாசகர்மைய வாசிப்புக்கு உட்படுத்துவது (Author Centric to Reader Response View) பின்நவீனத்துவ திறனாய்வுப் போக்குகளுள் ஒன்று. கம்பனை அவ்வாறான வாசகர்மைய நோக்கில் வாசிப்பதற்கான சாளரத்தை ஒருவகையில் அழகிரிசாமி திறந்துள்ளார் எனலாம்” (பக். 65) என்ற நூலாசிரியரின் கருத்து ஆழமானது, சிந்தனைக்குரியது.

வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் என்கிற வை.மு.கோவின் புகழ்பெற்ற கம்பராமாயண உரை ஏழு பகுதிகளாக, சுமார் 6500 பக்கங்களில் விரியும் அற்புதம்.  ஒரு 25-பக்கக் கட்டுரையில், பொறுக்கி எடுத்த உதாரணங்களுடனும் மேற்கோள்களுடனும்  இந்த மகத்தான உரையின் பல்வேறு சிறப்புக்களைக் கட்டுரையாசிரியர் விவரிக்கிறார். வை.மு.கோவின் பொருள்காணும் திறன், இலக்கணம் சார்ந்த குறிப்புகள், பாடபேதங்களைத் தரும் விதம்,  வைணவம் சார்ந்த விளக்கங்கள் எதையும் விட்டுவிடவில்லை. இந்த உரையின் தனித்தன்மையையும் பெருமையையும் “வீறு” என்ற சொல்லால் ஆசிரியர் குறிப்பது மிகப்பொருத்தமானது.  கம்பர் காவியம் மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்தாலும், 19ம் நூற்றாண்டுக்கு முன்பாக கம்பராமாயண உரைகள் ஏதும் எழவில்லை என்பதையும் கட்டுரை தவறாமல் சுட்டிக் காட்டுகிறது.  “இத்தகு பெருமை கொண்டதமிழ் உரையாசிரியர் மரபு கம்பனைக் கண்டு  கொள்ளவில்லை என்பது மிக வியப்பான செய்தி. தமிழ் இலக்கியப் பரப்பில் உள்ள பற்பல செய்யுள்களை மேற்கோள்களாகக் காட்டியோர் கம்பன் பாடல்களைமேற்கோள்களாகக் கூட பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. திவ்யப்ரபந்த உரையாசிரியர்களான நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்றோர் ஓரிரு இடங்களில் மட்டும் பெயர் குறிப்பிடாமல் கம்பனை எடுத்தாண்டுள்ளனர். இந்நிலைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும்” (பக். 96).  

காத்திருப்பு என்ற சொல்லுக்கான மிகப் பரந்த பொருளை எடுத்துக் கொண்டு, இராமகாதையின் பல பாத்திரங்களையும், பலவிதமான தருணங்களையும் அந்த உணர்வு நிலைக்குள் பொருத்திக் காட்டுகிறது ‘கம்பனில் காத்திருப்பு’.  சபரியும் சரபங்க முனிவரும் வருடக்கணக்கில் இராம தரிசனத்திற்காகவே காத்திருந்து உயிர்விடுகிறார்கள்.  கபந்தனும் விராதனும் இராமன் கையால் வதைபடுவதற்குக் காத்திருந்து சாபவிமோசனம் பெறுகிறார்கள்.  கடலரசனான வருணனுக்காக மூன்று நாள் நோன்பிருந்து காத்திருந்தும் அவன் வராதது  வில்லில் கணைதொடுக்கும் அளவுக்கு சீற்றத்தை இராமனிடம் ஏற்படுத்துகிறது.  இவற்றையெல்லாம் அவ்வவற்றுக்குரிய பாடல்களின் மேற்கோள்களோடு ஆசிரியர் விவரிக்கிறார்.  இவற்றில் அசோகவனத்தில் சீதையின் காத்திருப்பு என்பது “கெடுவிதித்த காத்திருப்புகள்” என்ற வகைமையில் மட்டும் அடங்குவது அல்ல. அது காவியத் தன்மை கொண்டது. அரக்கிகளின் அச்சுறுத்தல்களுக்கும், இராவணின் உளவியல் சித்ரவதைகளுக்கும் நடுவில் தேவி மேற்கொண்ட துன்பியல் தவம் அது. சுந்தரகாண்டம் என்ற பகுதியின் ஜீவனாகவே அமைந்திருப்பது.  மேலும்,  காத்திருப்பு என்ற சொல்லின் நேரடிப் பொருள் ‘காத்து இருத்தல்’ என்பது.  எதைக் காத்து? பொறுமையை. ஆனால் சீதை விஷயத்தில் அவள் பொறுமையை மட்டும் காக்கவில்லை, தனது குலத்தின் பெருமையையும், கற்புநெறியையும், இராமனின் புகழையும் காத்தாள். அவளை தருமம் காத்தது.

“தருமமே காத்ததோ சனகன் நல் வினைக்
கருமமே காத்ததோ கற்பின் காவலோ
அருமையே அருமையே யார் இது ஆற்றுவார்
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற்பாலதோ”  

என்று அனுமன் கூற்றாகக் கம்பர் இதனை அழகாக எடுத்துரைக்கின்றார். மேற்படிக் கட்டுரையை வாசிக்கும்போது இந்தப் பாடலும் அது சார்ந்த எண்ணங்களும் நினைவில் தோன்றின.  நூலாசிரியரின் ரசனை நோக்கிற்கும், கம்பன் கவியில் அவரது தோய்விற்கும் நல்லதொரு சான்று இக்கட்டுரை.   

பொ.யு. 12ம் நூற்றாண்டில் கம்பர் தோன்றுவதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்பே தமிழகத்தில் இராமகாதை மக்களிடையே வழங்கியது என்ற அடிப்படையான தகவல், ஓரளவு வாசிப்பவர்களிடையே கூட இப்போது தான் பரவலாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.  இத்திறக்கில், புறநானூறு உள்ளிட்ட சங்க நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் வரும் இராமாயணக் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் ‘தமிழ் இலக்கியங்களும் இராமகாதையும்’ கட்டுரை அவசியமான ஒன்று.

பரதன் என்ற பாத்திரப் படைப்பின் தியாகமும் சீலமும் காவியத்தின் ஊடாக அடையும் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசும் ‘வரதனும் பரதனும்’,  நம்மாழ்வாரின் அருளிச் செயல்களின் தாக்கம்  இலக்கியரீதியாகவும், தத்துவம் சார்ந்தும் கம்பனில் வெளிப்படும் இடங்களைப் பதிவு செய்யும் ‘காரி மாறனும் கம்பனும்’,  பேசித்தீர்க்க முடியாத இராமனின் அளப்பரிய நற்குணங்களே இராமகாதையின் ஆன்மீக மையம் என்பதை வலியுறுத்தும் ‘நற்குணக்கடல்’ ஆகிய கட்டுரைகளும் நன்றாக வந்துள்ளன.

நண்பர் ஜகன்னாத் அவர்களின் கம்பராமாயண வாசிப்பு ரசனை, ஆய்வு, சமயம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது என்பதை இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இவற்றுக்கிடையில் முரண்பாடுகளை அவர் காண்பதில்லை. இவை மூன்றையும் இணைத்துச் செல்வதாகவே அவரது பார்வை அமைந்துள்ளது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு,  கம்பனில் பல இடங்களில் வெளிப்படும் உணர்வெழுச்சிகளையும், பக்தி வெளிப்பாடுகளையும் அதற்குரிய வகையில் உள்வாங்கி, எடுத்துரைப்பதற்கு உதவுகிறது. நவீன இலக்கியம் மற்றும் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் அறிவியல் நோக்கிலான ஆராய்ச்சிகள் சார்ந்த அவரது வாசிப்பு அவரது ஆய்வுகளுக்கு ஒரு விசாலமான தன்மையை அளிக்கிறது. தமிழிலக்கியம் குறித்த அவரது எழுத்துக்கள் மேன்மேலும் வெளிவரவேண்டும்.  நண்பருக்குப் பாராட்டும் வாழ்த்துக்களும்.

அன்புடன்,
ஜடாயு,
பெங்களூர்
மே 31, 2025

கம்பனில் காத்திருப்பு
ஆசிரியர்: முனைவர் செ.ஜகந்நாத்

பக்கங்கள் : 123
வெளியீடு: பவித்ரா பதிப்பகம்,
தொ.பே: 8778924880 / 9940985920
மின்னஞ்சல்: pavithrapathippagam@gmail.com,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *