ஊழலின் சிகரம்

ஆக்கம்: சுமித் மித்ரா
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 19 மார்ச், 2011

தமிழாக்கம்: எஸ். ராமன்

uuzhal-3நம் நாட்டில் ஊழல் கட்டுக்கடங்காத தொற்றுநோயைப் போலப் பரவிக் கொண்டிருக்கிறது.  சாலை சந்திப்புகளில் நாம் சுவாசிக்கும் பெட்ரோலின் கழிவு  கலந்த நஞ்சுக் காற்றைப்போல இந்தியாவின் அரசியல் மற்றும்  சமூக அமைப்புகளில் ஊழல் என்பது என்றுமே காற்றோடு கலந்தே இருந்தது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஊழல் செய்திகளே முதலிடம் வகித்தன என்பதை யாருமே மறுக்க முடியாது. ஆனால் இப்போதோ ஊழல் என்பது காட்டாற்று வெள்ளம் போல் கரையை உடைத்துக் கொண்டு ஓடுகிறது. மற்றைய காரணங்களோடு, நம் சமுதாய நோக்கின் தரமும் வெகுவாகத் தாழ்ந்து, Malcom Gladwell எனும் ஆசிரியர் கூறுவதுபோல, ஒரு வரம்பைத் தாண்டி ஊழலானது இப்போது காட்டுத்தீயைப் போலவும் பரவி வருகிறது.

இத்தகைய ஒரு பெரும் மாற்றத்தின் விளைவுகளைப் பற்றி அறிய வேண்டுமென்றால், நமது இந்திய இறையாண்மையின் முப்பெரும் தூண்களான சட்டமன்றம், அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறை இவை மூன்றும் எப்படிப் புரையோடிப் போயிருக்கின்றன என்பதைப் பார்த்தாலே போதும். நான்காவது தூணான ஊடகத்துறையைப் பற்றிப் பேசவே வேண்டாம். சமீப காலமாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கும் WikiLeaks எனும் அமெரிக்க உளவுத்துறையின் ரகசியச் செய்திகளை ஆளும்கட்சி வரிந்து கட்டிக்கொண்டு மறுத்தாலும், அவைகளால் கடந்த கால மத்திய அரசின் சாயம் வெளுத்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் கண்கூடு. தற்சமயத்திலும் அமைச்சராக இருப்பவர் ஒருவரையும்  சேர்த்து காங்கிரசின்  இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி அணுசக்தி மசோதாவினால் முந்தைய மத்திய அரசு  பாதிக்கப்படாமல்  இருக்க எதிர்க்ட்சி உறுப்பினர்கள் சிலருக்கு லஞ்சம் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டனர் என்பதை அவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
 

அரசு நிர்வாகத்தின் மாபெரும் ஊழலாக 2G-அலைக்கற்றை

spectrum_cartoon_kalki2ஊழல் பெயரெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், பொதுவாக ஊழலுக்கு அப்பாற்பட்ட நீதித்துறை என்ற நம்பகத் தன்மைக்கு இடமாய் இருக்கவேண்டிய தலைமை நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியின் உறவினர்களும் வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்ப்பு வழக்குகளில் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளனர் என்பதும் ஒரு தலைகுனிவே. ஊடகங்களில் வரும் இது போன்ற செய்தி அலசல்களால் இத்தகைய ஊழல்கள் வருங்காலத்தில் தவிர்க்கப்படலாம் என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால், தங்கள் நிறுவனத்திற்குச் சாதகமாக இருக்கக்கூடிய அரசியல்வாதிகளை அமைச்சர்களாக நியமிக்க, ஊடகத்து ஊழியர்களின் சேவையைப் பயன்படுத்திய தரகர் நீரா ராடியாவின் ஒலிநாடாப் பதிவுகளோ சில ஊடகங்களின் நேர்மையின்மையைக் கோடிட்டுக் காட்டிவிட்டது. 

சமீப காலமாக நடைபெறும் ஊழல்கள், எவரும் பொறுத்துக்கொள்ள முடியாத எண்ணிக்கையைத் தாண்டிய மர்மம்தான் என்ன? ஊழல்களைத் தோண்டித் துருவி ஆராய்வதற்கு தற்போதைய தொழில் நுட்பங்களும், சட்டம் மற்றும் நீதிமன்றச் சூழ்நிலைகளும் வெகுவாக உதவுகின்றன என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததுதான். கணினி, மற்றும் வலைத்தளங்கள் தொடர்பான தொழில் நுட்பம்தான் WikiLeaks போன்ற வெளியீடுகள் மூலம் அமெரிக்க அரசுக்கு மற்ற நாடுகளைப் பற்றி என்ன தெரியும் என்பதை வெளி உலகிற்கு அப்பட்டமாக அறிவித்திருக்கிறது. மற்ற நாடுகள் என்ன முயன்றிருந்தாலும் இப்படிப்பட்ட தகவலை இவ்வளவு எளிதாகப் பெற்றிருக்க முடியாது. அதே போல சட்ட நுட்பத்தின் துணையினால் உருவாகிய இந்திய அரசின் தகவல் பெறும் உரிமை மசோதாவும் ஊழலை ஒழிக்க உதவும் ஓர் ஆயுதமே. 

ஆனாலும் WikiLeaks வெளியீடுகளால் ஊழலை ஒழிக்கவோ, அடக்கவோ முடியுமா என்று கேட்டால் அது ஒரு கேள்விக்குறிதான். ஏனென்றால் அந்த அமெரிக்க வெளியீடுகளை அந்த அரசாங்கமே மறுக்கலாம் என்பது ஒருபுறம் இருக்க, மற்ற நாடுகளோ அவைகளைப் பிரசார உத்திகள் என்றோ, அனுமானத்தில் விளைந்த வதந்திகள் என்றோ முத்திரை குத்தி, தங்களுக்குச் சாதகம் இல்லாத செய்திகளைத் தள்ளுபடி செய்யலாம். அப்படி இருந்தபோதும், பீகார் மாநிலத்தில் செய்துள்ளது போல் அனைத்து அரசு அதிகாரிகளும், சட்ட மன்ற உறுப்பினர்களும் தங்களது மற்றும் உறவு-நட்பு மூலம் நெருங்கியவர்களது சொத்து விவரங்களை கட்டாயமாக அறிவித்தாக  வேண்டும் என்று தகவல் பெரும் உரிமைச் சட்டம் மூலம் செய்ய முடியும். அதாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருக்கும் பட்சத்தில், பெரும்பாலான மக்களிடம் மேலும் ஊழலை வளர்க்காமல் இருப்பதற்கு அது ஆவன செய்யும் என்று நம்ப இடம் இருக்கிறது.

ஒரு மாபெரும் ஊழல் என்பது ஒரு அரசின் தன்னிச்சையான முடிவுகளால் நடப்பதால், அதைத் தடுப்பதற்கு சட்ட, மற்றும் தொழில் நுட்ப வழிகள் மட்டுமே முழுப்பயன் தராது. ஒரு வரைமுறைக்குள் அடங்கியே அரசின் முடிவுகள் எல்லாமே எடுக்கப்படுகின்றன என்று பொதுவாகத் தோற்றம் அளித்தாலும், உண்மையில் அவை அப்படியல்ல. வருடம் 2007-ல் எடுக்கப்பட்ட ஒரு முரணான கொள்கை முடிவின்படி, அலைகளை ஏலத்தில் விற்காமல் வருடம் 2001-ன் விலையிலேயே விற்கலாம் என்பதே 2G-அலைகற்றை ஊழலின் ஊற்று. எடுக்கப்படும் கொள்கையை முன்கூட்டியே சொல்லமுடியாத ஒரு வழவழாத் தன்மையே ஒரு ஊழலின் தொடக்கம். அதனால் அது ஒரு மூடு மந்திரம் போல எவருக்கும் தெரியாமல் அடக்கப்படுகிறது. ஒரு சிலருக்கே விவரங்கள் வெளியிடப்படுகிறது. 

ஓர் உதாரணத்திற்கு, வீடு-மனை வாங்கல்-விற்றல் வியாபாரத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். அதில் ஏன் அவ்வளவு ஏமாற்று வித்தைகள் இருக்கின்றன? அதன் காரணமே அரசின் கொள்கைகளில்தான் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடம் எதற்குப் பயன்படப் போகிறது என்ற முடிவை அரசு எல்லோருக்கும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும் எல்லா விவரங்களும் வெளியே வந்திருக்காது. விவசாயத்துக்கான நிலங்கள் விரைவில் வர்த்தகத்துக்காக என்று அறிவிக்கப்படப் போகிறது என்றதான விவரங்களை எவரேனும் தவறான வழியில் சென்று தகவலை முன்னதாகப் பெற்றிருந்தால், அவர்கள் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி வர்த்தகக் கட்டிடங்கள் எழுப்பப்படும்போது அந்த   நிலத்தை விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். இங்கு சரியான தகவல் கொடுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு ஊழல் புரியும் வாய்ப்பு நிறையவே உள்ளது.
 
இதன் தொடர்ச்சியாகப் பார்த்தால், வெளிநாட்டிலிருந்து மூலதனம் கொண்டு வருபவர்களுக்கும் உள்நாட்டு நிலத் தரகர்களுக்கும் எப்போது நம் நாட்டில் நிறுவப்போகும் சில்லறை வியாபாரத்திற்கு வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் எவ்வளவு லாபகரமானது என்று புரியும். ஒருவரை விட இரண்டாமவர் இந்தத் தகவலை முன்னதாகப் பெற்றுவிட்டார் என்றால், அவருக்கு முன்னவரைவிட எப்போது, எங்கு கடையைத் திறக்கலாம் என்பதும், அதற்கு வரவேண்டிய பொருள்களை எப்படி, எவரிடமிருந்து, எப்போது பெறலாம் என்றதான விவரங்களும் அவரது வியாபாரத்துக்கு எவ்வளவு பலன் அளிக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வியாபாரம் என்றாலே போட்டிதான், அதிலும் இத்தகைய முன்விவரங்கள் சிலருக்கு மட்டும் இருந்தால் அதை எப்படி நேர்மையான போட்டி என்று சொல்ல முடியும்? 

இப்படியான விளைவுகளை உருவாக்கக்கூடிய அரசின் தன்னிச்சையான கொள்கை அறிவிப்புகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து யோசனை சொல்வதற்காக ஐக்கிய முன்னணியின் ஒருங்கிணைப்புத் தலைவியான சோனியா காந்தி ஒரு அமைச்சர் குழுவிடம் பரிந்துரைத்தார். ஆனாலும் எந்த அரசுக்கும் சிறிதாவது தன்னிச்சை அதிகாரம் இல்லாது ஆட்சி செய்வது என்பது கடினமே. அது எவ்வளவு இருக்கலாம் என்பதுதான் ஒரு பெரிய பிரச்சினை. ஒருவரிடம் ஒரு பொறுப்பை அளிக்கும்போதோ, ஒரு புதிய புரட்சிகரமான கொள்கையை அறிவிக்கும்போதோ, புதிய அமைப்புக்கு உதவும் முகமாக பழைய வழிகளைக் களைய முனையும்போதோ தன்னிச்சை அதிகாரம் செலுத்தப்படுகிறது என்பது உண்மையே. அமெரிக்க அரசைப் போல ஒரு ஊழலற்ற அரசின் வழிமுறைகளிலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, மற்றும் பொருளாதாரம் தொடர்பான முடிவுகளில், அதன் குடியரசுத் தலைவரின் தன்னிச்சைச் செயல்களை பெரும்பாலும் நம்பி இருக்கிறது என்பது எவருக்கும் கண்கூடு. அப்படிப் பார்க்கும்போது சோனியா காந்தி சொன்னதால் ஆராய்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் குழுவின் வேலை ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

uuzhal-1  

இதற்குள்ளாக லஞ்ச ஊழலோ புற்றுநோயைப் போலப் பரவி, சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் தீயமுறையில் வெகுவாகப் பயன்படுவதுபோலவே சென்றடைந்திருக்கிறது. மும்பை மாநகரில் அவ்வளவாக ஜனரஞ்சகம் இல்லாத அந்தேரி போன்ற இடங்களிலேயே 1000 சதுர அடி அளவிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள்  இப்போதெல்லாம் 1.2 கோடி ரூபாய்க்குக் குறைந்து கிடைப்பதில்லை. அது மாதிரியான குடியிருப்புளைப் பற்றி தினசரிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால் அவைகளை வாங்கும் பணபலம் நிறைய பேர்களுக்கு இருக்கிறது என்று நன்கு தெரிகிறது. 

uuzhal-2அத்தகைய பணபலம் சில பேருக்கு இருக்கலாம். ஆனால் அவைகளை வாங்க விரும்பும் வரிசையில் நிற்போர்களைப் பார்த்தால் மற்றோருக்கெல்லாம் தீய வழியில் ஊழல் பணம் வந்தடைந்திருப்பது தெரிகிறது. இதுபோன்று இந்த ஊழல் நோய் பல மக்களைப் பீடித்திருக்கிறது.  இன்னுமொரு உதாரணமாக, பல நகரங்களில் தனியார் கல்விப் பயிற்சி நிலையங்களை நடத்தும் சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர்கள், தேர்வுகளில் வரவிருக்கும் கேள்விகள் பற்றித் துப்புக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு, அளவுக்கும் அதிகமாக சம்பாதித்து படகுக் காரில் பவனி வருவதும், பெரிய பங்களாக்களில் வாழ்வதும் வேறெதைத்தான் காட்டுகிறது? இதைப் போன்று வருமானம் ஈட்டியவர்கள் எத்தனை பேர் என்று தெரியவேண்டும் என்றால், அமெரிக்காவில் மட்டும் படிக்கும் இந்திய மாணவர்கள் தற்போது பத்து லட்சத்தை தாண்டிருக்கிறது என்பதை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம். 

அமெரிக்கப் பொருளாதாரம் 2008-ம் வருடம் முதல் பின்னடைவைச் சந்தித்ததால், பல மாணவர்களுக்கு முன்பெல்லாம் கிடைத்த உதவித் தொகை நிறுத்தப்பட்ட பின்பும், சுமார் பத்து லட்சம் குடும்பங்கள் வருடம் ஒன்றுக்கு 15 லட்ச ரூபாய் ஒரு மாணவனுக்குச் செலவு செய்யமுடியும் என்றால் ஊழல் பணம் பல நபர்கள் மூலம் பாதாளம் வரை பாய்ந்து வருகிறது என்பது கண்கூடு. இதனால் எவரும் சுகமாக, வசதியுடன் வாழக்கூடாது என்று சொல்வதாக நினைக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்களில் எத்தனை பேரிடம் நேர்மையான வழியில் சம்பாத்தித்த பணம் இருக்கிறது என்பதுதான் நாம் கேட்கும் கேள்வி. 

சரி, இப்போது நாம் முதலில் ஆரம்பித்த ஊழலின் பரிமாண விரிவு பற்றிய கேள்விக்கு வருவோம். ஊழல் என்பது ஒரு சிகரத்தைத் தொட்டது போல் தெரிகிறதா? அது உண்மை என்றால் அதன் காரணம் என்ன?  நியூயார்க்கில் நடந்த கொலை, கொள்ளை குற்றங்கள் எப்படி 1990-ன் மைய வருடங்கள் வரை கட்டுக்கடங்காது வளர்ந்து அதன் பின்னர் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது என்பதை Malcom Gladwell ஆராய்ந்தபோது, அவர்  கண்டறிந்ததை குற்றவியல் ஆய்வாளர்களான ஜேம்ஸ் வில்சன் மற்றும் ஜார்ஜ் கெல்லிங் என்ற இருவரது “உடைந்த சாளரங்கள்” என்ற தத்துவத்தைக் கொண்டு விளக்கினார். அதன்படி குற்றத்தின் மூல காரணமே ஒழுங்கின்மைதான். ஒரு சாளரத்தின் கண்ணாடி உடைந்திருந்து, அது சரி செய்யப்படாமல் இருந்தால், அதைக் காக்க எவரும் இல்லை, எவருக்கும் அதைப் பற்றி அக்கறையும் இல்லை என்றே வழிப்போக்கர்கள் நினைப்பார்கள். அதனால் அந்த சுற்று வட்டாரத்தில் இன்னும் பல சாளரங்களின் கண்ணாடிகள் உடைபடும். ஏனென்றால், காப்பாற்றத்தான் யாரும் இல்லையே? அந்த அராஜகமே குறிப்பிட்ட வட்டாரத்தில் இருந்து மேலும் அந்த ஊர் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது என்று அவர்கள் சொன்னார்கள்.  உண்மைதானே? 

இப்போது இந்தியாவில் நடைபெறும் ஊழல் விவகாரங்களும் அப்படித்தானே இருக்கின்றன? தொலைபேசி அலைக்கற்றை ஒரு அமைச்சர் முறையற்ற வழியில் ஏதேதோ காரணங்களுக்காக ஒருசில நிறுவனங்களுக்கு என்று ஒதுக்கீடு செய்கிறார். அவரின் மேலதிபரான பிரதம மந்திரியோ அது நடக்கும் போது ஒன்றும் செய்யாதிருந்துவிட்டு, பின்பு அதில் “சில தவறுகள்” நேர்ந்து விட்டன என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதி காக்கிறார். வேறொரு விஷயத்தில் ஒரு அமைச்சரும், ஆட்சி செய்யும் குடும்பத்தின் அடிவருடி ஒருவரும் மைய அரசைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சியைச் சார்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரிய வருகிறது. அதைப் பற்றி தீர விசாரித்து உண்மையை அறிய முயற்சி செய்யாமல், அரசோ தனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறது. இவை எல்லாமே மேலே சொன்னபடி “உடைந்த சாளரங்கள்”தான். அவைகளால் மேலும் பல சாளரங்கள் உடையத்தான் காத்திருக்கின்றன என்பதை நல்லவர்கள் அறிந்தால் நாட்டுக்கு நன்மையே பயக்கும்.

4 Replies to “ஊழலின் சிகரம்”

  1. Pingback: Indli.com
  2. ஊழலோ ஊழல் – சுனாமி போல் விரிந்து பரவி நாட்டை இன்று சீர்அழித்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பல் ஏறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் அன்னிய தீயசக்திகளின் ஊடுறுவல் கேட்பார் இல்லாமல் பெருகிவருவதே. இதை பாலூட்டி சீராட்டி வளர்த்து வருபவர் சந்தேகத்திற்கிடமின்றி அன்னியரான இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவி சோனியா தான். நாட்டை பீடித்த இந்த சனியனை நாட்டைவிட்டு துரத்தியடிகாதவரையில் இந்தியர்களுக்கு விடி விமோசனம் என்பது கிடையாது.

    இன்று 80000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை 2ஜி ஊழல் முறைகேடுகள் பற்றி தயாரித்துள்ளதாக சி.பி.ஐ. செய்தி கூறுகிறது. காங்கிரஸா கொக்கா ! உச்சநீதிமன்றமே தலையிட்டால் என்ன ! எல்லொருக்கும் பேபேதான். இன்று இந்த பேபே காண்பிப்பது எப்படி என்று பல்கலைகழக அளவில் ஒரு தனிபாடமாகவே நடத்துகிறார்கள். இதை பயின்று பட்டம் பெற்றவர்கள் இன்று எல்லா அரசு துறையிலும் ஊடகங்களிலும் நீதி துறையிலும் ஊடுருவியுள்ளார்கள். நீதியின்முன் ஒரு குற்றவாளி தப்பித்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கபடகூடாது என்று பல சட்ட நுணுக்கங்களை நீதி துறை ஏற்படுத்தியுள்ளது. இன்று இதுவே தவறாக ஊபயோகித்து ஒரு நிரபராதி தண்டனை பெற்றாலும் பரவாயில்லை ஆனால் ஒரு குற்றவாளிளை கட்டாயம் காப்பாற்றபடவேண்டும் என்பதில் காங்கிரஸ் என்றுமே செயல்பட்டுவருகிறது ஒரு சாபகேடே.

  3. இது ஒரு சாபக்கேடே அல்ல. ஏனெனில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி ” கடவுள் தாயம் ஆடவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டபடி தான் எல்லாமே நடக்கிறது ” என்றார். எனவே நடப்பது எல்லாம் அவன் செயலே என்ற உண்மையை எப்போதும் மனதில் கொள்வோம். நம்மால் இயன்றதை செய்து கொண்டே இருப்போம்.மனத்தளர்ச்சி அடைவதால் ஒரு பயனும் இல்லை.

    மேலும் இயற்கை விதிகள் மாற்றம் செய்யப்பட முடியாதவை அல்ல. அதை மாற்றும் திறன் மிகப்பெரிய யோகிகளுக்கு மாத்திரமே இயலும். நாம் பலரும் பெரிய யோகிகளாக மாறும் நாளில் அதை சாதிக்க முடியும். நாம் விரும்புவதை சாதிக்க , கடும் உழைப்பு தேவை. உழைக்க முடியாதவர்கலெல்லாம் கூட பிரார்த்தனையின் மூலம் பல காரியங்களை சாதிக்க முடியும். ஆனால் தமிழகத்தில் பிரார்த்தனைகளை கூட கேலி செய்யும் , கருணா மற்றும் வீரமணி போன்ற மஞ்சள் துண்டுகள் உள்ளனர். இதுவும் இறைவன் கொடுத்த வரமே என கொள்ளுவோம். மாற்றத்துக்கான விதைகளை ஊன்றுவோம். நிச்சயம் ஒரு நாள் விடை கிடைக்கும், அதுவும் நல்லவிடையாக.

    ஒன்று :- வாழ்க்கையில் எல்லா உயிர்களையும் ஒன்று போல கருதுபவர்கள் பெரிய சாதனைகளை புரிகின்றனர்.

    இரண்டு:- உயர்வு, தாழ்வு என்று பிரித்து சமுதாயத்தில் மக்களிடையே வெறுப்பையும், வருத்தத்தையும் வளர்ப்பவர்கள் வாழ்நாளின் இறுதியில் பாடம் கற்கின்றனர். இளமையில் கல்லாமல் , முதுமையில் கற்கும் பாடங்கள் பயன்படுத்த முடியாமல் போகின்றன.

    மூன்று:- இந்த பிரபஞ்சம் முழுவதும் பஞ்ச பூதங்களின் கலவையே, நேர்மின்னணு( புரோட்டான்) எதிர்மின்னணு( எலெக்டிரான்), நியூட்ரான் மற்றும் வெற்றிடம் இவற்றின் சேர்க்கையே வெவ்வேறு விதமாக மாறி மாறி காட்சி அளிக்கிறது. ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும் என்று விஞ்ஞானம் சொல்கிறது. நம் வேதங்களின் வழி வந்த ஞானமும் அதையே சொல்கிறது.

    பிரதி பலனை எதிர்பாராமல் கடமையை செய்வோம். இறைஅருள் கை கூடும்.

  4. லஞ்ச ஊழல்களை பற்றி எழுதியதை வரவேற்கிறேன். பொது மக்கள் இது தெரிந்திருக்கவேண்டும். அடுத்த தடவை தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று யோசித்து செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *