தொடர்ச்சி..
14.1 தீதும் நன்றும் பிறர் தர வாரா
சீதையை அபகரித்துக் கொண்டுபோகாமல் இருக்கும்படி தான் கேட்டதற்கு மறுத்த ராவணனை ஜடாயு போருக்கு இழுத்து, அவனை ஆசனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டது. அப்போது அவனது வில்லையும் அது உடைத்துவிட்டதால், ராவணன் கீழே குதித்து சீதையையும் இழுத்துக்கொண்டு ஓடப் பார்த்தான். உடனே ஜடாயு மேலும் தாக்கவே ராவணன் ஆவேசமாக சண்டை போட்டு தனது வாளால் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டிவிட்டான். இறக்கைகளை இழந்த ஜடாயு குற்றுயிரும் குலைஉயிருமாக மயக்கத்தில் கீழே விழுந்தது. உடனே ராவணன் சீதையின் கூந்தலைப் பிடித்து உள்ளே இழுத்து, ஜடாயுவால் தடைப்பட்ட விமானப் பயணத்தை மீண்டும் தொடர்ந்தான்.
ராம-லக்ஷ்மணர்களை மாய மானால் தங்கள் இடத்திலிருந்து விரட்டிவிட்டு, அவர்கள் இல்லாத சமயம் பாதுகாப்பில்லாமல் இருந்த தன்னை அபகரித்துச் செல்லும் நீ ஒரு கோழையே; பெரிதாக உன்னைப்பற்றி வீரன் என்று சொல்லிக் கொள்கிறாயே அதற்கு சிறிதும் அருகதையில்லாத தொடைநடுங்கி என்றெல்லாம் ராவணனை வசைபாடிக்கொண்டே சீதை அப்போது கதறுகிறாள். இன்னும் சில வினாடிகள் மட்டும் அங்கு தாமதம் ஆகியிருந்தால், இராமரின் அம்பினால் வரும் அடியும், வலியும் எப்படிப்பட்டது என்பதை ராவணன் அனுபவித்திருப்பான்; ஆனால் அதற்கு முன் புறமுதுகு காட்டி ஓடுகிறவன் என்றும் இரைந்தாள். கடைசியாக, இப்போதும் தன்னை திருப்பிக் கொண்டுபோய் விட்டுவிட்டால், அவன் தன்னை அதிலிருந்து காத்துக்கொள்ள முடியும்; இவ்வளவு சொல்லியும் தன்னை இழுத்துக்கொண்டு போனால், அவன் மட்டும் அல்லாது அனைத்து அரக்கர்களுமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தாள்.
ம்ருʼத்யுகாலே யதா² மர்த்யோ விபரீதானி ஸேவதே|
முமூர்ஷூணாம்ʼ ஹி ஸர்வேஷாம்ʼ யத்பத்²யம்ʼ தன்ன ரோசதே|| 3.53.17||
மர்த்யோ = a mortal, அழியப்போகிறவர்கள்
ம்ருʼத்யுகாலே = at the time of death, இறக்கும் சமயம்
யதா² = as, போல
விபரீதானி = very differently opposite deeds, முற்றிலும் மாறுபட்ட செயல்கள்
ஸேவதே = he will resort to, செய்வான்
முமூர்ஷூணாம்ʼ = for those who are desiring to die, இறக்க விரும்புவர்களுக்கு
ஸர்வேஷாம்ʼ = for all of them, அவர்களுக்கெல்லாம்
யத் = what, எது
பத்²யம் = is beneficial, நல்லது
தத் = that, அது
ந ரோசதே = not like, பிடிப்பதில்லை.
தனக்கு இறுதி காலம் வந்துவிட்டது என்கிறபோது மனிதர்களின் குணமே மாறிவிடுகிறது. தங்களுக்கு எது நல்லதோ அதை விட்டுவிட்டு அதற்கு மாறாகவே செயல்படுகிறார்கள்; எது நல்லதோ அது பிடிப்பதில்லை.
தவறான பாதையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடைய மரணம் நேரும் சூழ்நிலைகளைக் கவனிக்கும்போது, அவர்கள் திருந்துவதற்கும் நேரமும், வாய்ப்பும் கிடைத்தன என்றாலும், அவர்கள் தாங்களாகவே அழிவுப் பாதையையே தேர்ந்தெடுத்துப் போகிறார்கள் என்று புரியும். இதையே “விநாச காலே விபரீத புத்தி” என்றும் சொல்வார்கள். அழியப்போகிறவர்களை ஆபத்தும், சாவும் தானே தேடி வருவதைப் போலத்தான் இது இருக்கிறது.
14.2 தினை விதைத்தால் தினை விளையும்
இராம-லக்ஷ்மணர்கள் திரும்பி வருவதற்குள் பஞ்சவடியை விட்டு ராவணன் கிளம்பிவிட்டான். அவன் பறந்துகொண்டே அடர்ந்த காடுகளையும், நீண்ட மலைத்தொடர்களையும், இறுதியாக இலங்கையைத் தனித்தே பிரித்திருக்கும் கடலையும் தாண்டிவிட்டான். எந்த ஆபத்தும் இன்றி இலங்கையை அடைந்தவுடன், மிகவும் பெருமையுடன் தான் அடைந்திருக்கும் செல்வத்தைப் பகட்டாகக் காட்டும் எண்ணத்துடன் அவன் சீதைக்குத் தன் அரண்மனை முழுதும் சுற்றிக் காண்பித்தான். ராமனோ லக்ஷ்மணனோ கடலைத் தாண்டி அங்கு வந்து அவளைக் காப்பாற்ற முடியாது என்றும் சொல்லி, திரும்பத்திரும்ப சீதை அவனை மணம் செய்து கொள்வது ஒன்றே அவளுக்கு இருக்கும் வழி என்று சொன்னான்.
தவறாக எடை போட்டுக்கொண்டு இராமரின் பலத்தை அறியாமல் பிதற்றுகிறாய், தன்னந்தனியனாய் அவர் ஜனஸ்தானில் கராவையும் கொன்று அவனது பதினான்காயிரம் ஆட்கள் கொண்ட சேனையையும் நிர்மூலமாக்கினார் என்று உனக்கு தெரியாதா என்று பதிலுக்கு சீதை ராவணனைச் சீண்டினாள். உன் ஆட்களின் எண்ணிக்கையையும், அவர்களது ஆயுத வலிமையையும் வைத்துக்கொண்டு உன் பலத்தைப் பெரிதாக நினைத்துத் தவறு செய்கிறாய்; இராமர் உன்னை மட்டுமில்லை, உன் அரக்கர் குலத்தையே அடியோடு நாசமாக்கி விடுவார் என்றாள். வெற்றியும், மகிழ்ச்சியும் நீதி, நேர்மை வழிகளை பின்பற்றுவர்களுக்குத்தான் நிலையாகக் கிடைக்கும்; மாற்றான் மனைவியை அடைய நினைக்கும் உனது பாவச் செயல்கள் இறுதியில் உனக்கு வெற்றியும் தராது, மகிழ்ச்சியும் கொடுக்காது என்றும் சொல்கிறாள்.
ந தே பாபமித³ம்ʼ கர்ம ஸு²கோ²த³ர்கம்ʼ ப⁴விஷ்யதி| ……|| 3.56.13||
தே = you, உனக்கு
இத³ம் = this, இந்த
பாப = sin, பாவம்
கர்ம = deed, செயல்கள்
ஸு²கோ²த³ர்கம் = of good, நல்லவைகள்
ந பவிஷ்யதி = will not be, கிடையாது.இந்தச் பாவச் செயல்கள் உனக்கு நல்ல பலன்களைப் பெற்றுத் தராது.
மனிதர்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி மனிதர்களின் வாழ்வையும், அவர்கள் பெறும் இன்ப துன்பங்களையும் கொடுக்கிறது. அதைத்தான் நீதி தேவதை என்கிறோம். இதனை மதிக்காது தனது மனித சக்தியே பெரிதென்று நினைத்து அராஜகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அதில் வரும் இன்பத்தையே விரும்புகின்றனர். அது தவறு என்பதை அவர்கள் தங்கள் வாழ்வின் பின்னாட்களில் உணரும்படி நிகழ்ச்சிகள் அமைந்தால் அதுவும் அவர்களது பாக்கியமே என்றுதான் சொல்லமுடியும்.
14.3 கோபம் கண்ணை மறைக்கும்
பஞ்சவடிக் குடிலுக்குத் திரும்பிய இராம-லக்ஷ்மணர்களுக்கு சீதை அங்கு இல்லாதது கவலை அளித்தது. சீதை எங்கும் போகாதவள் என்பதாலும், மாய மான் நிகழ்வாலும் அவர்களுக்கு அரக்கர்கள்தான் சூழ்ச்சி செய்து தங்களை அங்கிருந்து அகற்றி, சீதையைத் தனிமைப்படுத்தி இருக்கவேண்டும் என்று புரிந்து விட்டது. ஆனாலும் சீதை எங்கே போயிருக்க முடியும்? அவளுக்கு என்ன ஆயிருக்கும்? அவளை அரக்கர்கள் பிடித்துக் கொன்று தின்று விட்டார்களா? என்ற கேள்விகள் எல்லாம் அவர்கள் மனத்தை குடைந்து எடுத்தன. சீதையை அவர்கள் குடிலுக்கு அருகிலேயே இங்கும் அங்குமாக முதலில் தேடிவிட்டு, அப்புறமாக சற்றுத் தள்ளி கோதாவரி நதிக்கரை, இன்னமும் தள்ளிப்போய் ஜனஸ்தனா காடு என்று எங்கு தேடியும் அவள் காணவில்லை. சீதை அடிக்கடி விளையாடிக் கொண்டிருக்கும் மிருகங்கள் மற்றும் பறவைகள் எல்லாவற்றிடமும் அவளைப் பற்றி விசாரித்தபோது அவைகள் எல்லாம் மௌனமாக, அந்தப் பக்கம்தான் போனாள் என்று காட்டுவதுபோல், அனைத்தும் தெற்கு நோக்கித் திரும்பி நின்றன. இராமருக்கு அலுத்துத் திரிந்து சீதையைப் பற்றி ஏதும் தெரியாத நிலையில் களைப்பும் மிகுந்து, சீதை கிடைப்பாள் என்ற நம்பிக்கையும் இழந்தார். அதனால் அவருக்கு அடக்கமுடியாத கோபம் வந்ததில், சீதை கிடைக்கவில்லை என்றால் உலகையே ஒரேயடியாய் அழித்துவிடுவதாக உறுதியாகச் சொன்னார். கூட இருந்த லக்ஷ்மணன் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில், ஒரு அரசனாக அவர் தவறு செய்தவர்களைத்தான் தண்டிக்கலாமே தவிர சம்பந்தம் எதுவுமே இல்லாதவர்களையும் சேர்த்து எல்லோரையும் பாதிக்கும்படி எதுவும் செய்யக்கூடாது என்றான். அது தவிர அரசனாக அவர்தான் எல்லோருடைய கடைசிப் புகலிடமாக இருப்பதால் அவர்களைப் பாதுகாக்கும் கடமையும் அவருக்கு இருக்கிறது என்றான்.
யுக்தத³ண்டா³ ஹி ம்ருʼத³வ: ப்ரஸா²ந்தா வஸுதா⁴தி⁴பா:|
ஸதா³ த்வம்ʼ ஸர்வபூ⁴தானாம்ʼ ஸ²ரண்ய: பரமா க³தி:|| 3.65.10||
வஸுதாதிபா: = lords of the earth, உலகத்திற்கே முதல்வன்
யுக்தத³ண்டா³ = are proper administrators, பொறுப்பான அதிகாரியாக இருக்கிறார்கள்
ம்ருʼத³வ: = gentle, மென்மையாக प्रशान्ताः peaceful, அமைதியாக
த்வம் = you, நீ
ஸர்வபூதானாம் = by all beings, எல்லோருக்கும்
ஸதா³ = always, எப்போதும்
ஸ²ரண்ய: = a refuge, புகலிடம்
பரமா க³தி: = ultimate abode, இறுதிக் கட்ட
அரசர்களுக்கு ஏகபோக உரிமை இருப்பதால் அவர்கள் அணுகுவதற்கு எளிதாகவும், அமைதியாகவும் இருந்து, குற்றம் செய்தவர்களை மட்டும் செய்த குற்றத்திற்கு ஏற்ப அளவாகத் தண்டிக்க வேண்டும். அரசனாக நீ எல்லோருக்கும் கடைசிப் புகலிடமாய் இருக்கிறாய்.
தன்னுடன் நெருங்கிய ஒருவர் இறந்துவிட்டால் அது அவரை வெகுவாகப் பாதிப்பதைப் பார்த்திருக்கிறோம். அப்போது கண்ணில் கண்டதெல்லாம் உடைத்து எறியும் அளவுக்கு அவருக்குக் கோபம் கண்மண் தெரியாது வரலாம். சாதாரணமாகவே அரசன் ஒருவனுக்கு எதை வேண்டுமானாலும் அழிக்கவும், மாற்றவும் சர்வ உரிமை இருக்கிறது. அப்படி இருந்தும் அவன் தவறு செய்தவர்களை மட்டும்தான் தண்டிக்கவேண்டும்; அதுவும் தவறுக்கு ஏற்றபடி கூடுதலோ குறைவோ இல்லாது தண்டனை அமையவேண்டும். அவனிடம் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதற்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நியாயம் அல்ல. அரசன் மட்டுமல்ல, இந்த நீதி சமூகத்தில் எந்த விதமான உரிமைகளும் இல்லாதவர்களுக்கும் உள்ளதுதான். பிராமணர்கள் தினப்படி செய்யவேண்டிய சந்தியா வந்தனத்திலும், “சூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதஸ்ச மன்யுக்ருதேப்யஹ பாபேப்யோ ரக்ஷந்தாம்” என்று கோபத்தினால் வரும் பாவச் செயல்களைச் செய்யாமல் தவிர்க்கக் கடவுளை வேண்டுவதாக வருகிறது. ஆக எல்லோருக்கும் இந்த நியதி பொதுவானதே.
14.4 சீவராசிகள் எல்லாம் ஒன்றே
சீதையைக் காட்டில் தேடி அலையும்போது வழியில் பிரம்மாண்டமான பறவை ஒன்று கீழே கிடப்பதை அவர்கள் பார்த்தார்கள். ஓர் அரக்கன்தான் ஒருவேளை அந்த வடிவில் வந்து, சீதையைக் கொன்று சாப்பிட்டிருப்பானோ என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்தது. உண்மை அதுவல்ல, அதுதான் நாம் முன்னே பார்த்த ஜடாயு. அது அவர்கள் தந்தையிடம் நெருக்கமாக இருந்த பறவை என்பது அப்புறமாக அவர்களுக்கு ஞாபகம் வந்தது. எங்கோ அடிபட்டு இறக்கைகள் இழந்து அது மூச்சு வாங்கிக்கொண்டு தவித்ததை பார்த்த அவர்களுக்கு இரக்கம் வந்தது. அந்த நிலையிலேயே, ஜடாயுவும் ராவணன்தான் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும், அப்போது அவனைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும் சொல்லிற்று. அவனுடன் நடந்த சண்டையில் தனது இறக்கைககளை அவன் வெட்டிவிட்டதாகவும், அவன் சீதையைத் தூக்கிக்கொண்டு தெற்குப் பக்கம் பறந்து போனதாகவும் சொல்லியது. அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அது ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்ததனால், மேற்கொண்டு இராமர் சீதையைப் பற்றிக் கேட்டறியும் முன்பாகவே அதன் உயிர் போய்விட்டது. இராமரும் மேற்கொண்டு எதுவும் அறிந்துகொள்ள முடியாத தன் துரதிருஷ்டத்தை நினைத்து நொந்துகொண்டார். அதே சமயம் பறவைகளும், மிருகங்களும் மற்றவர்களுடைய துக்கத்தைப் பகிர்ந்துகொண்டு தன்னால் முடிந்ததைச் செய்வதை லக்ஷ்மணனிடம் சொல்லி நெகிழ்ந்து போனார்.
ஸர்வத்ர க²லு த்³ருʼஸ்²யந்தே ஸாத⁴வோ த⁴ர்மசாரிண:|| 3.68.24||
ஸூ²ராஸ்²ஸ²ரண்யாஸ்ஸௌமித்ரே திர்யக்³யோனிக³தேஷ்வபி|
ஸௌமித்ரே = Lakshmana, லக்ஷ்மணா
ஸூ²ரா: = heroes, வீரர்கள்
ஸ²ரண்யா: = protectors, பாதுகாப்பு அளிப்பவர்கள்
தர்மசாரிண = righteous people, தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள்
ஸாதவோ = good people, நல்லவர்கள்
ஸர்வத்ர = all over, எங்கும்
திர்யக்³யோனிக³தேஷ்வபி = even among animals and birds, மிருகங்கள், பறவைகள் நடுவிலும்
த்³ருʼஸ்²யந்தே க²லு = are seen, காணப்படுகிறார்கள்.
லக்ஷ்மணா! நல்லவர்கள், வீரர்கள் , பாதுகாப்பு அளிப்பவர்கள் , தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எங்கேயும், மிருகங்கள் பறவைகள் நடுவிலும் இருக்கிறார்கள்.
மனிதர்கள் தாங்கள் மட்டுமே ஜீவராசிகளுள் உயர்ந்த ராசி என்று நினைத்து அகம்பாவம் கொள்கின்றனர். ஆனால் மனிதர்கள் இடையே மட்டுமல்லாது பறவைகள், மிருகங்களிடம் கூட நல்ல குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அனைத்தும் பிரம்மம் என்கிறபோது அது சகல சீவராசிகளையுமே உள்ளடக்கியதுதான். இந்திய தாவர விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸும் இதைத் தாவர ராசிகள் விஷயத்தில் அவைகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்று உறுதிபடுத்தியிருக்கிறார். இங்கங்கு நாம் கேள்விப்படும் முந்தைய பிறவி பற்றிய ஆய்வுகளிலும் இது நன்கு தெளிவாகிறது. ஞானிகள் பலரும் இதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லியிருக்கின்றனர். இங்கு இராமரும் ஜடாயு செய்த தியாகம் பற்றிய விஷயத்தில் அதைச் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது.
14.5 ஊக்கமது கைவிடேல்
பறவைகள் காட்டியபடியும், ஜடாயு சொல்லியபடியும் ராம-லக்ஷ்மணர்கள் சீதையைத் தேடிக்கொண்டு தெற்கு நோக்கிப் போகும் வழியில் கிரௌஞ்ச என்னும் மிக அடர்ந்த காட்டின் உள்ளே நுழைந்தார்கள். அந்தக் காட்டை ஆளும் கபந்தன் என்னும் அரக்கன் அவர்களைப் பிடித்துக்கொண்ட போது, அவனுடைய கைகளை அவர்கள் வெட்டிவிட்டார்கள். ஒரு முனிவருக்குத் தொந்திரவு கொடுத்ததால் அரக்கனாக ஆகும்படி சாபம் பெற்ற கபந்தன் அவரிடம் மன்னிக்கக் கோரியபோது, அவரும் மனம் இளகி இராமர் இந்தப் பக்கம் வரும்போது அவனுக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அவன் அதைச் சொல்லி, தனது ராக்ஷச உடலை அவர்களையே எரிக்கச் சொல்கிறான். அப்படி எரிக்கப்பட்டபோது, அவன் தனது சாபத்திற்கு முன்னிருந்த உடலிலேயே உயிர்பெற்று எழுந்தான்.
சாப விமோசனம் பெற்ற அவன் அவர்களுக்கு மிக விசுவாசமாகி, வாலி எனும் வானர அரசனிடம் பயந்துகொண்டு அவனது தம்பியான சுக்ரீவன் இருக்கும் ரிஷியமுக மலைத்தொடருக்கு போகும் வழியைச் சொல்லி, சுக்ரீவன் அவர்களுக்கு சீதையைத் தேடித் தருவதில் உதவுவான் என்றும் சொல்கிறான்.
அவன் காட்டிய வழியில் சென்று அந்த மலைக்குப் பக்கத்தில் இருக்கும் பம்பா ஏரிக்கரைக்கு அவர்கள் இருவரும் வருகிறார்கள். அதுவரை அலைந்த அலைச்சலில் மிகவும் தளர்ந்துபோன இராமர் மறுபடியும் நம்பிக்கை இழந்து தான் எங்கே சீதையை கண்டுபிடிக்க முடியும் என்றும், ராவணனிடமிருந்து எப்படி அவளை மீட்க முடியும் என்றும் கவலைப்படுகிறார். அப்படிப் பேசும் இராமரை அவர் மேலும் துயரத்துக்குள் மூழ்காதவாறு பார்த்துக்கொள்ள லக்ஷ்மணன் அவருக்கு ஊக்க வார்த்தைகள் சொல்லி தேற்றுகிறான்.
உத்ஸாஹோ ப³லவானார்ய! நாஸ்த்யுத்ஸாஹாத்பரம்ʼ ப³லம்|
ஸோத்ஸாஹஸ்யாஸ்தி லோகே(அ)ஸ்மின் ந கிஞ்சித³பி து³ர்லப⁴ம்|| 4.1.121||
ஆர்ய = O revered one, மதிப்புக்குரியவரே
உத்ஸாஹோ = enthusiasm, உற்சாகம்
ப³லவான் = is a strong one, பலம்
உத்ஸாஹாத் = compared to enthusiasm, உற்சாகத்தோடு ஒப்பிட்டால்
பரம் = supreme, மேலான
ப³லம் = strength, பலம்
நாஸ்தி = is not there, கிடையாது
ஸோத்ஸாஹஸ்ய = for one who is enthused, உற்சாகம் இருப்பவனுக்கு
லோகே(அ)ஸ்மின் = in the worlds, உலகங்களில்
கிஞ்சித³பி = even a little also, சிறிது இருந்தாலும்
து³ர்லப⁴ம் = impossible, முடியாதது
நாஸ்தி = not there, கிடையாது.
மதிப்புக்குரியவரே! எதிலும் எப்போதும் உற்சாகம் என்று இருந்தால் அதுதான் ஒருவனுக்கு பலம். உற்சாகத்துக்கு மேலாக எந்தவித ஊக்குவிக்கும் சக்தியும் கிடையாது. உற்சாகம் ஒருவனுக்கு சிறிது இருந்தாலும் அவனால் உலகில் சாதிக்கமுடியாதது என்று எதுவும் கிடையாது.
ஒருவனுக்குப் பலம் என்று பார்க்கும்போது அது உடலளவிலும் இருக்கும், மனத்தளவிலும் இருக்கும். இவ்விரண்டில் மனோபலமே மிக முக்கியமானது. அது இருக்கும்போது ஒருவன் எது வேண்டுமானாலும் செய்யத் துணிவான். அவனுக்கு வெற்றியும் நிச்சயம் உண்டு.
(தொடரும்..)
” மனிதர்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி மனிதர்களின் வாழ்வையும், அவர்கள் பெறும் இன்ப துன்பங்களையும் கொடுக்கிறது.”-
நாம் வெறும் கருவியே என்ற உணர்வுடன் எதைசெய்தாலும் கர்மவினை நம்மை ஒட்டாது. நான்தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்யும் கர்மவினை மட்டுமே உடலை சேரும். ஆன்மாவுக்கோ தளைகள் எதுவும் கிடையாது என்பதை அற்புதமாக வெளிப்படுத்தயுள்ளமைக்கு நன்றி.