சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
***
தொடர்ச்சி…
நல்லொழுக்கத்தை எப்படி நிலைநாட்டுவது?
…..மனிதனானவன் ஒரு மையப்புள்ளியைப் போல விளங்குகிறான். உலகிலுள்ள எல்லாச் சக்திகளையும் தன்னை நோக்கி இழுக்கிறான். தனது கேந்திரத்தில் எல்லாவற்றையும் உருக்கி ஒரு பெரிய சக்திச் சுழலாக வெளியில் மீண்டும் அனுப்புகிறான்……
…..நல்லது – தீயது, இன்ப – துன்பம் இவையெல்லாம் அவனை நோக்கி ஓடுகின்றன. அவனைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒழுக்கப் பண்புவெளியில் அதனை வீசுகிறான். எதை வேண்டுமானாலும் உறிஞ்சி இழுத்துக்கொள்ள அவனுக்குச் சக்தி இருப்பது போல அதனை வெளியில் எடுத்து வீசவும் அவனுக்குச் சக்தி உண்டு.
…தொடர்ந்தாற்போல ஒரு மனிதன் தீய சொற்களைக் கேட்டு, தீயனவற்றையே சிந்தித்து, தீயனவற்றையே செய்து வந்தால், அவனுடைய மனம் தீய பதிவுகளால் நிரம்பிக் கிடக்கும். அவை அவனது சிந்தனையையும் வேலையையும் பாதித்து விடும். அப்படிப் பாதிப்பதால் தீய பதிவுகள் எப்பொழுதுமே வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றின் விளைவு தீயதாகவே இருந்து தீரும். அந்த மனிதன் தீயவனாகவே இருப்பான். அவனால் அதைத் தவிர்க்க முடியாது. அவனிடமுள்ள மனப் பதிவுகளின் மொத்தத் தொகுப்பானது. தீய காரியங்களைச் செய்வதற்கான பலமான உந்து சக்தியாக, தூண்டுகோலாக அமைகிறது. அவன் தன்னுடைய மனப் பதிவுகளின் கையில் இயந்திரம் போல, அவை அவனை தீயவை செய்யக் கட்டாயப்படுத்தும்.
அதுபோலவே ஒரு மனிதன் நல்ல கருத்துக்களையே நினைத்து நல்லனவற்றையே செய்து வந்தால், இந்த மனப்பதிவுகளின் மொத்தத் தொகுப்பும் நல்லதாகவே இருக்கும். முன் கூறியதைப் போலவே அவன் விரும்பாவிட்டாலும் கூட அவனை நல்லதையே செய்ய அது கட்டாயப்படும்.
ஒரு மனிதன் இவ்வளவு தூரம் நல்ல காரியங்களைச் செய்து, இத்தனை நல்ல சிந்தனைகளைச் சிந்தித்தும் வந்ததால் நல்லனவே செய்வதற்கான மனப்போக்கு அவனுக்குத் தடுக்க முடியாததாக ஆகிவிடுகிறது. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனது இயல்பான போக்குகளின் மொத்தத் தொகுதியாக உள்ள அவனது மனமானது அவனைத் தவறிழைக்க விடாது. அவனது சுபாவங்கள் அவனைத் திருப்பி விட்டுவிடும். அவன் பூரணமாகவே நல்ல வாசனைகளின் ஆளுகையின் கீழ் வாழ்வான். நிலைமை இப்படி ஆகும்போது ஒருமனிதனின் நல்லொழுக்கமானது ஸ்திரப்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.
…..ஒரு மனிதன் வீணையில் ஒரு ராகத்தை வாசிக்கும் போது ஸ்வரப்படியில் ஒவ்வொரு இடத்திலும் கவனமான சுய நினைவுடன் ஒவ்வொரு விரலையும் வைப்பான். விரல்களின் அசைவு பழக்கமாக ஆகிறவரை அவன் இந்தச் செயலைத் திரும்பச் திரும்பச் செய்வான். பிறகு நாளடையில் ஒவ்வொரு தனி ஸ்வரத்தையும் பற்றிக் குறிப்பாகக் கவனம் செலுத்தத் தேவையின்றியே அவன் ராகங்களை வாசித்து விடுவான். அதுபோலவே நமது இயல்புகளெல்லாம், மனப்போக்கெல்லாம் முற்காலத்தில் நல்ல ஞாபகத்துடன் வேண்டுமென்றே நாம் செய்த செய்கைகளின் விளைவு தான் என்பது தெரிகிறது.
புலனடக்கத்தால் விளையும் ஆற்றல்:
நமது உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்து விடும்போது, ஏராளமான சக்தியை விரயம் செய்கிறோம். நமது வரம்புகளைச் சிதற அடிக்கிறோம். மனத்தை அமைதி குலையச் செய்கிறோம். அந்நிலையில் மிகக் குறைந்த அளவில் தான் வேலை நடக்கிறது. வேலையின் வடிவத்தில் வெளிச் செல்ல வேண்டிய சக்தி வெறும் உணர்ச்சியாகச் செலவாகி விடுகிறது. அதனால் எவ்விதப் பயனுமில்லை. மனமானது மிகை அமைதியாக, குளிர்ந்த நிலையில் இருக்கும் பொழுது அதன் முழுச் சக்தியும் நல்ல காரியங்களைச் செய்வதில் செலவாகிறது.
உலகில் தோன்றியுள்ள மகத்தான ஊழியர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படித்துப் பார்த்தால், அவர்கள் அபார அமைதி வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்ற தெரிந்து கொள்வீர்கள். அவர்களது மனத்தின் சம நிலையை எதுவும் குலைக்காதுபோல் தோன்றும். அதனால் தான் கோபமடைகிற மனிதனால் பெரிய அளவில் வேலை செய்ய முடியாமற்போகிறது. எந்த ஒரு மனிதனை எதுவுமே கோபமூட்டாதோ, அவன் பெரும் காரியங்களைச் செய்கிறான்.
கோபம், வெறுப்பு அல்லது வேறு ஏதேனும் ஒரு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கிறவனால் வேலை செய்ய முடியாது. தன்னையே துண்டு துண்டாக உடைத்துக் கொள்ளுவதைத் தவிர அவனால் நடைமுறையில் எதுவும் செய்ய முடிவதில்லை. சாந்தமான, மன்னிக்கிற, சமசித்தமுள்ள, அமைதியில் ஸ்திரப்பட்ட உள்ளம் தான் பெருத்த அளவில் வேலை செய்கிறது.
மனதில் ஏற்படுகிற வெறி உணர்ச்சியின் ஒவ்வொரு அலையையும் நீ கட்டுப்படுத்துவது உன்னுடைய சேமிப்பு நிதிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. ஆகையால் ஒருவர் கோபித்தால் அவரிடம் திருப்பிக் கோபிக்காமல் இருப்பது நல்ல கொள்கையாகும். எல்லா நெறியொழுக்கத்துக்கும் இது பொருந்தும். “கெட்ட தன்மைகளைத் தடுக்காதே” என்று கிறிஸ்து சொன்னார். அது நீதிநெறிப்படி நல்லது தான் என்பதை மட்டுமன்றி அது நாம் கடைபிடிக்கக் கூடிய மிக உத்தமமான கொள்கையாகும் என்பதை நாமே கண்டுபிடிக்கிற வரையில் நமக்குப் புரிவதில்லை. ஏனெனில் கோபத்தை வெளிக்காட்டுகிற மனிதனுடைய சக்தி நஷ்டமாகிறது. கோபமும் வெறுப்பும் கலந்த நிலைக்கு உனது மனம் செல்லுவதற்கு நீ அனுமதிக்கக் கூடாது.
…..நான்கு குதிரைகள் பூட்டிய ‘கோச்சு’ வண்டியொன்று எவ்விதத் தங்குதடையுமின்றி மலைச்சரிவில் பாய்ந்து வரலாம்! அல்லது கோச்சு வண்டிக்காரன் அக்குதிரைகளைக் கட்டுப்படுத்திச் சரியானபடி ஓட்டலாம். இந்த இரண்டில் எதில் சக்தி தெரிகிறது? அவற்றை ஓட விடுவதிலா? பிடித்து நிறுத்துவதிலா?
வானத்தில் பறந்து செல்லுகிற ஒரு பீரங்கிக் குண்டானது நெடுந்தூரம் பிரயாணம் செய்துவிட்டுப் பிறகு கீழே விழுகிறது. மற்றொன்று ஒரு சுவரின் மீது தாக்க, அதன் பிரயாணம் நின்று போய் விடுகிறது. குண்டு சுவரின் மீது மோதுவதாலும் கடுமையான உஷ்ணம் உருவாகிறது. கட்டுப்படுத்தித் தடுப்பதால் சக்தி உருவாகிறது. சுயநல நோக்கத்தைப் பின்தொடர்ந்து செல்கிற எல்லாச் சக்தியும் விரயமாகி விடுகிறது. உன்னிடம் திரும்பி வருவதற்கான சக்தியை அது உண்டாக்காது. ஆயின் அதனைக் கட்டுப்படுத்தினால் அது நமது வளர்ச்சிக்குப் பயன்படும்.
இந்தப் புலனடக்கம் தன்னடக்கமானது. பலம் மிக்க மனோ சக்தியை உண்டாக்கவும், கிறிஸ்துவை அல்லது புத்தரை உருவாக்கிய ஒழுக்கப் பண்பை உண்டாக்கவும் துணை செய்யும்…..
…..பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்கவேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிட,ம் கடுங்கோபமாக இருக்கிறாள். அந்நிலையில் அவள் இருக்கும்பொழு து உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப்போய் புதிய அலை எழுகிறது. அது தான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது.
கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி நினைக்க வேண்டும். யாரிடமிருந்தாவது பரிசாக எதையாவது பெறவேண்டுமென்ற எண்ணம் எழுந்தால் அதற்கு எதிப்பான எண்ணத்தால் எண்ணத்தை மாற்றிவிட வேண்டும்.
…..மிக ஆழ்ந்த மௌனமாக இருக்கும்போது, தனிமை நிலையில் மூழ்கி இருக்கும்போது அந்த நேரத்தில் தீவிரமான நடவடிக்கையைக் கண்டுபிடித்துச் செய்யக்கூடியவன் லட்சிய மனிதனாவான். அவன் மிகத் தீவிரமான நடவடிக்கைகளுக்கிடையே பாலைவனத்திலுள்ளது போன்ற அமைதியையும் தனிமையையும் அனுபவிப்பான்.
அந்த மனிதன் புலனடக்கத்தின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டு தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டுள்ளான். பெரிய நகரத்தினூடே அதில் காணப்படும் போக்குவரத்துக் குழப்பக் கூக்குரலிடையே அவன் போகிறான். போகும்போது ஒரு ஒலியும் எட்ட முடியாத குகையில் இருப்பது போல அவனது மனம் மிகுந்த அமைதியுடனிருக்கிறது. ஆனால் அதனிடையேயும் அவனது மனமானது எப்பொழுதுமே தீவிரமாக வேலை செய்கிறது. கர்மயோகத்தின் லட்சியம் இது தான். இந்நிலையை நீங்கள் எய்துவிட்டால் வேலையின் ரகசியத்தை உண்மையிலேயே கற்றுக்கொண்டுவிட்டீர்கள் எனலாம்.
***
உண்மையான எண்ணங்களின் ஆற்றல்:
…..கௌதம புத்தர், தாம் இருபத்தைந்தாவது புத்தரென அடிக்கடிக் கூறிக்கொள்வதை அவரது வாழ்வில் நாம் படித்திருக்கிறோம். வரலாறு கண்ட புத்தர் தமக்கு முன் சென்றவர்கள் அமைத்த அஸ்திவாரத்தின் மீது தான் தமது அமைப்பை நிறுவியிருக்க வேண்டும் என்றாலும், அவருக்கு முன்னால் வந்துபோன இருபத்துநான்கு பேர்களையும் வரலாறு அறியாது.
உத்தமமான உயர்ந்த புருஷர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், வெளிக்குத் தெரியாமலும் இருப்பார்கள். சிந்தனையின் சக்தியை உண்மையில் அவர்களே தான் அறிவார்கள். அவர்களுக்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரியும். அதாவது அவர்கள் ஒரு குகைக்குள் சென்று, கதவுகளை அடைத்துவிட்டு ஐந்து உண்மையான கருத்துக்களை வெறுமனே நினைத்துவிட்டு, மடிந்து போய்விட்டாலும் இந்த ஐந்து எண்ணங்களும் சாசுவதமாக இருக்கும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியும்.
அத்தகைய எண்ணங்கள் மலைகளைக் குடைந்துகொண்டு, கடல்களைக் கடந்து கொண்டு, உலகமெங்கும் பிரயாணம் செய்யும். மனித இதயங்களில் அவை ஆழமாகப் புகுந்து அந்தக் கருத்துக்களை மனித வாழ்க்கையில் நடைமுறையில் வாழ்ந்து காட்டக் கூடிய ஆண்களையும், பெண்களையும் நிர்மாணித்து உயர்த்தும்.
(தொடரும்)
அருமை. ஒவ்வொரு எழுத்தும் உள்வாங்க வேண்டியது.
பணிவார்ந்த வணக்கங்கள்.