எழுமின் விழிமின் – 36

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

 ***

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

நீங்களே ரிஷிகள் ஆகிவிட வேண்டும்!

Rishisரிஷிகள் உபதேசித்ததை மட்டும் நீங்கள் கற்றிருந்தால் போதாது.  அந்த ரிஷிகள் மறைந்து விட்டார்கள். அவர்களது அபிப்பிராயங்களும் அவர்களுடன் மறைந்துவிட்டன.  நீங்களே ரிஷிகளாக வேண்டும்.  இதுவரை பிறந்துள்ள மிகப் பெரிய மனிதர்களைப் போல நமது அவதார புருஷர்களுக்கு இணையாக நீங்களும் மனிதர்கள் தாம்.

வெறும் ஏட்டுப் படிப்பினால் என்ன விளைந்துவிடும்?  தியாகத்தினால் கூட எதைத் தான் சாதித்துவிட முடியும்? மந்திர தந்திரங்களால் ஆவது என்ன?  நீங்கள் உங்கள் கால்களிலேயே நிற்க வேண்டும்.

உண்மையான மனிதன்:

ஆண்மை வீர்யமுள்ளவர்களைத் தயாரிக்க இந்தப் புதிய வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.  உண்மையான மனிதன் சக்தியின் வடிவமாக இருக்க வேண்டும்.  அத்துடன் பெண்மையுள்ளமும் படைத்திருக்க வேண்டும்.  உங்களைச் சுற்றி வாழும் லட்சக் கணக்கான ஜீவன்களைப் பற்றி  நீங்கள் கவலைப்பட வேண்டும்.  இருப்பினும் உறுதியுடன் வளைக்க முடியாமல் நீங்களிருக்க வேண்டும்.  அத்துடன் கீழ்ப்படிகிற குணமும் உங்களுக்கு இருக்க வேண்டும். வெளிப் பார்வைக்குச் சற்று முரண்பட்ட குணங்களாக இவை தோன்றினாலும் கூட, இந்த நற்குணங்கள் உங்களுக்கிருக்க வேண்டும்.

உங்களுக்கு மேலுள்ள அதிகாரி உங்களை ஆற்றில் குதித்து முதலையைப் பிடிக்க வேண்டுமென்று கட்டளையிட்டால், முதலில்  நீங்கள் கீழ்ப்படிந்துவிட்டுப் பிறகு காரணம் கேட்க வேண்டும்.  கட்டளை தவறாக வந்தாலும் முதலில் கீழ்ப்படிந்து விட்டுப் பிறகு அதை மறுத்துப் பேசுங்கள்.

நாம் பல சம்பிரதாய, கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.  அதிலிருக்கிற தீமையென்னவெனில், ஒருவனுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனே அவன் புதிய ஒரு சம்பிரதாயத்தை ஆரம்பிக்கிறான்.  காத்திருப்பதற்கு அவனிடம் பொறுமையில்லை.  ஆகவே உங்கள் சங்கத்திடம் உங்களுக்கு ஆழ்ந்த மதிப்பு இருக்க வேண்டும்.  அதில் கீழ்ப்படியாமைக்கு இடமே இல்லை…..

நமது பாசறையில் துரோகிகளுக்கு இடமில்லை.  காற்றைப் போல நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்.  அத்துடன் இந்தச் செடியைப் போலவும் நாயைப் போலவும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

இந்தக் காலத்திற்குத் தேவையானவர்கள் சந்நியாசிகள்:

விவேகானந்தர்களே தேவை....
விவேகானந்தர்களே தேவை….

சில பேர்  வாழ்க்கையிலிருந்து வெளிவந்து, கடவுளுக்காக மாத்திரமே வாழ்ந்து உலக நன்மைக்காகச் சமயத்தைப் பாதுகாக்க வேண்டும்… துறந்தால், அத்துறவில் உறுதியாக நில்லுங்கள்.  போரில் நூறுபேர் வீழ்ந்தால் அவர்கள் கையிலுள்ள கொடியை நீங்கள் தாங்கிப் பிடித்து முன்னே கொண்டு செல்லுங்கள்.  கடவுள் சத்திய வடிவம்.  யார் தோற்றாலும் பரவாயில்லை.  கீழே விழுகிறவன், மற்றொருவனிடம் கொடியைக் கொடுத்து விடட்டும்.  அவன் அதை கொண்டு முன்னேறட்டும்.  கொடி ஒருபோதும் கீழே விழாது.

…எளியவர்களான கிருகஸ்தர்கள் என்ன பண்ணுவார்கள்,  பாவம்! அவர்களுக்குச் சிறிய ஒரு வாழ்க்கை உள்ளது.  துறவிகள், சிவனின் பூத கணங்கள் தான் இதைச் செய்ய வேண்டும்.  ‘ஹர! ஹர! சம்போ!’ என்ற முழக்கத்தால் வானத்தைக் கிழிக்க வேண்டியவர்கள் சந்நியாசிகளே.

…வருங்காலத்தைப் பற்றி எனது நம்பிக்கை இளைஞர்களைப் பொறுத்துத் தான் இருக்கிறது.  ஒழுக்கமுள்ள, புத்திசாலிகளான, பிறருக்குத் தொண்டு புரிவதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுகிற, கீழ்ப்படிதலுள்ள இளைஞர்கள் வேண்டும். எனது கருத்துக்களை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்காகத் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்து அதன்மூலம் நமக்கும், பொதுவாக நமது நாட்டுக்கும் நன்மை உண்டாக்க வேண்டும்.

மற்றபடி, சாதாரணத் தரத்திலுள்ள பையன்கள் கோஷ்டி கோஷ்டியாக வந்து  கொண்டிருக்கிறார்கள்; வந்து கொண்டுதானிருப்பார்கள்.  அவர்கள் முகத்தில் மந்த சுபாவமானது எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது.  அவர்களது உடல் வேலைக்குப் பயனின்றி பலவீனமாக உள்ளது; மனத்தில் தைரியம் இல்லை.  அவர்களைக் கொண்டு எதைத் தான் சாதிக்க முடியும்?

யமனை  வென்ற நசிகேதஸ்
யமனை வென்ற நசிகேதன்

நசிகேதனின் நம்பிக்கையுடன் பன்னிரண்டு சிறுவர்கள் கிடைத்தால் இந்த நாட்டின் சிந்தனையையும், அபிலாஷை நாட்டங்களையும் புதியதொரு பாதையில் என்னால் திருப்பி விட்டுவிட முடியும்.

நல்ல திறமைசாலிகளாக் எனக்குத் தோன்றுகிறவர்களில் சிலர் திருமணத்தளையால் தம்மை விலங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  சிலர் உலகரீதியான பெயர், புகழ் அல்லது செல்வத்தைத் திரட்டுவதற்காகத் தம்மையே விற்றுக்கொண்டு விட்டார்கள்.  மீதியிருக்கிற பெரும்பான்மை மக்கள், எந்த ஒரு உயர்ந்த கருத்தையும் வாங்கிக் கொள்ளத் தகுதி, திறமையற்றவர்களாக உள்ளனர்.

ஆயினும் கூட நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடவில்லை என்பது உண்மை தான்.  ஏனெனில் இறைவன் திருவுள்ளப்படி இந்தச் சாதாரணப் பையன்களிடமிருந்தே காலப்போக்கில், பணியிலும் ஆத்மிகத்திலும் சிறந்த மகாவீரர்கள் உதித்து, வருங்காலத்தில் எனது கருத்துக்களை நடைமுறையில் நடத்திக் காட்டுவார்கள்.

படித்த இளைஞர்களை ஒன்றுதிரட்டி இணைக்க வேண்டும்:

படித்த இளைஞர்களிடையே பணிபுரியுங்கள்.  அவர்களை ஒன்றுதிரட்டி இணையுங்கள்.  மகத்தான செயல்களை, மகத்தான தியாகங்களின் மூலமாகவே தான் நிறைவேற்ற முடியும்.

…வேலை செய்யுங்கள்; கற்பனையுள்ள கருத்தை, திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.  எனது வீரமிக்க, உயர்ந்த நல்ல ஆத்மாக்களே! சக்கரத்தில் உங்களது தோளைக் கொடுத்துத் தள்ளுங்கள். பெயர், புகழ் அல்லது வேறு எந்தப் பொருளற்ற விஷயத்தையும் எதிர்பார்த்துத் திரும்பிப் பாராதீர்கள்;  நில்லாதீர்கள்.  பரிபூரணமாக சமர்ப்பணமாகி வேலை செய்யுங்கள்.  ‘புல்லைக்கூடக் கயிறாகத் திரித்துப் பின்னி இணைத்தால் அதைக் கொண்டு மத யானையையும் கட்டிப் போட்டுவிட முடியும்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் எனது பிரார்த்தனை:

Ramakrishna Pramahamsarஉலக குருவாகி, உலகமெல்லாம் ஒன்று தான் என்ற இணைப்புச் செய்தியைப் பிரசாரம் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் உங்களது இதயக் கமலத்தில் வாசம் செய்ய வேண்டும்; அதன்மூலம் உங்களது விருப்பங்களெல்லாம் ஈடேறிய பின்னர், கலங்காத உள்ளத்துடன், மோகமென்னும் பயங்கரமான பெருங்கடலிலிருந்து மற்ற மக்களை மீட்க முழு ஆற்றலுடன் நீங்கள் முயல வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும்.  வீரன் தான் முக்தியை எளிதில் எட்டிப் பிடித்து எய்த முடியும்; கோழை அல்ல.  வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள்.  மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது.  ‘மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்’ என்பது உண்மை தான்; சந்தேகமில்லை.  இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும்.

மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் க்டக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்ப்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள்.

‘அச்சமற்றிரு’ என்று வேதாந்தக் கொள்கை முரசடித்து உணர்த்துகிறது பாருங்கள்! கம்பீரமான அவ்வொலி உலகில் வாழ்கிற எல்லா மக்களுடைய உள்ளங்களிலுமுள்ள முடிச்சுச் செடுக்குகளை அவிழ்த்து விடட்டும்!

ஹிந்துக்களே! மயக்கந்தெளிந்து எழுங்கள்:

‘உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத’ – “எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நில்லாதே” என்று ஒவ்வொரு ஆத்மாவையும் அறைகூவி அழைப்போம்.

Bharat mataஎழுங்கள்! பலவீனமாகிற இந்த மனமயக்கத்திலிருந்து எழுந்திருங்கள்.  உண்மையில் எவனுமே பலவீனன் அல்லன்.  ஆத்மா முடிவில்லாதது; சர்வசக்தி தான், எல்லாம் உணர்ந்ததாகும்.  எழுந்து நில்லுங்கள்.  உங்கள் சுயசக்தியை வற்புறுத்துங்கள்:  உங்களுக்குள் உறைகிற தெய்வத்தைப் பிரகடனம் பண்ணுங்கள்!  அவரை மறக்காதீர்கள்.  அளவுக்கு மீறிய செயலின்மை, வரம்பு கடந்த பலவீனம் மிதமிஞ்கிய மோகன மயக்கம்- இவை நமது இனத்தவரிடையே சூழ்ந்திருந்தது;  இன்றும் சூழ்ந்துள்ளது.

இன்றைய ஹிந்துக்களே! தாமாகவே மயக்கம் தெளிந்து எழுந்திருங்கள்.  அதற்கான வழி உங்கள் புனித நூல்களில் காட்டப்பட்டுள்ளது.  உங்களது உண்மையான ஸ்வரூபத்தை நீங்களே கற்றுணருங்கள்; ஒவ்வொருவருக்கும் அவரவர்களது ஸ்வரூபத்தைக் கற்பியுங்கள்.  உறங்குகிற ஆத்மாவை அறைகூவி அழையுங்கள்.  எப்படித் தான் அது விழித்தெழுகிறது பாருங்கள்!

உறங்குகிற இந்த ஆத்மா விழித்தெழுந்து வேலை செய்யத் தொடங்கினால், சக்தி வரும்; புகழ் ஓங்கும்; நல்ல குணங்களெல்லாம் தோன்றும்; மிகச் சிறந்தவையெல்லாமே வந்தெய்தும்.

மீண்டும் இளமைத் துடிப்புப் பெற்ற, புகழ் ஓங்கிய பாரதம்:

வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை.  அதில் எனக்கு அக்கறையுமில்லை.  ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத்தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன்.  புராதனமான அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள்.  தனது அரியணையில் அமர்ந்திருக்கிறாள்.  மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள்.  சாந்தியும், அருளும் கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்.

(நிறைவு)

***************************************

கடந்த பிப்ரவரி 2012 ல் துவங்கிய இந்தத் தொடர், சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது. இந்தப் பகுதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது.

இந்நூலை தொகுத்த மானனீய ஸ்ரீ ஏகநாத் ரானடே, தமிழாக்கம் செய்த திரு. ஆர்.கோபாலன், வெளியிட்ட விவேகானந்த கேந்திரம் ஆகியோருக்கு தமிழ்  ஹிந்துவின் பணிவான வணக்கங்கள்.

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை தேசமெங்கும் பரப்புவோம்! நமது நாட்டை சுவாமிஜி கனவு கண்ட புகழோங்கிய பாரதமாக்க சபதம் ஏற்போம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *