தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-1

இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, சுற்றியுள்ள பல விஷயங்கள் மனதுக்கு உவப்பாயில்லை என்று சொல்வது, பயந்து சொல்லும் மிதமான வார்த்தைகளாகப் படுகின்றன. உண்மையில். அவை கோரமானவை, கசப்பானவை. வாழ்க்கை மதிப்புகள் மிகப் பயங்கரமாக சரிந்துள்ளன. பொதுவாகச் சொல்வார்கள்: எக்காலத்திலும் மூத்த தலைமுறையினர், இளைய தலைமுறையைப் பார்த்து அலுத்துச் சொல்லும் வார்த்தைகள்தான் இவை என்று. அதுவும் உண்மைதான். எந்தச் சரிவையும் இப்படி நியாயப்படுத்தும் மனங்களுக்கு, நானேகூட ப்ளேட்டோவின் உரையாடல்களிலிருந்து மேற்கோள்களைச் சான்றாகத் தரலாம், நமக்குத் தெரிந்து 2500 வருஷங்களாக இதே கதைதான் என்று சொல்ல. அதுவும் சரிதான்.

உண்மையில் இதெல்லாம் சரிதானா? 70 வருடங்களுக்கு முன், ‘பணம், பணம், நிறையப் பணம்’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைக் கழித்த ஒரு பெரிய மனிதர், சாதனையாளர், பத்திரிகாசிரியராகவும் இருந்தார். அதிலும் வெற்றி பெற்றார். அவரிடம் ஒரு கட்டத்தில் ஒரு யோசனை முன்வைக்கப் பட்டபோது, “பத்திரிகை நடத்துவதிலும் சில தர்மங்கள் உண்டு. அதை எந்த லாபத்திற்காகவும் மீறக்கூடாது,” என்று சொல்லி அந்த யோசனையை மறுத்தார் என்று சொல்லப்பட்டது. வியாபார வெற்றியே குறிக்கோளாகக் கொண்டிருந்த அவரிடத்தும் சில தர்மங்கள் வழிகாட்டின. அது ஒரு காலம். எந்நிலையிலும் தர்மங்கள் கைவிடப்படக்கூடாது என்று நினைத்த காலம்.

இன்று புகழிலும், பண சம்பாத்தியத்திலும் வெற்றியின் உச்சியில் இருக்கும் ஒரு எழுத்தாளர், அவரது ரசனைக்கும் கலை உணர்வுகளுக்கும் விரோதமாக, வெகுஜனக் கவர்ச்சியில் மூழ்கிப் பணமும் பிராபல்யமும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவரது மனைவிக்கே அது பிடிக்கவில்லை என்று ஒரு கட்டத்தில் தெரிந்தது. எனினும் அவர் அப்பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார். தன் ரசனைக்கே விரோதமான இப்பாதையின் முதல் காலடி வைப்பின் போது, ‘ஏன் இப்படி?’ என்ற கேள்விக்கு, ‘நான் பிழைக்க வேண்டாமா?’ என்பது அவர் பதிலாக இருந்தது. அவர் என் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே இதில் நாம் காண்பது இரண்டு தலைமுறைகளுக்கிடையே தோன்றிவிட்ட வாழ்க்கை முரண்களை அல்ல. மதிப்புகளின் பயங்கரச் சரிவை.

ஒரு காலகட்டத்தில், அவர் பிராபல்யம் அடையாத ஆரம்ப வருடங்களில், இந்தப் பாமரத்தனங்களையும் ஆபாசங்களையும் கேலி செய்தவர் என்பது சொல்லப்பட வேண்டும். அந்தக் கேலிகளின்போது நான் உடனிருந்தவன். அன்று கேலி செய்த விஷங்களே இன்று அவரது வாழ்க்கையின் வெற்றிக்கான லட்சியங்களாகி விட்டன. பணத்துக்காக அவர் பாமரத்தனத்தை மட்டுமல்ல, ஆபாசத்தையும் கைக்கொள்ளும் நிலைக்கு அவர் தன் மனத்தைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவர் பெயரை நான் சொல்லவில்லை. அவரைக் காப்பாற்ற அல்ல. அவரைத் தனித்துச் சாடுவது நியாயமல்ல. இன்னும் நூறு ஆயிரம் அவர் போன்ற வெற்றிகள், சிறிதும் பெரிதுமாகத் தமிழ் நாட்டில் பெருமிதத்தோடு உலவுகின்றனர். அவர்களையெல்லாம் பெயர் சொல்லாமல் தப்பிக்க விட்டு, இவரை மாத்திரம் சாடுவானேன்?

நம் கண்முன் எல்லோரும் அறிய, எல்லோரும் அதற்கு ஆளாகி அவதிப்பட நடந்தேறியுள்ள ஒரு அராஜகத்தை இல்லையெனச் சாதிக்கும் அதிகார பீடங்கள், அது நடக்காதது போலத் தலையங்கங்கள் எழுதும் முன்னணிப் பத்திரிகைகளை இன்று நாம் காண்கிறோம். இந்தப் பத்திரிகைகளில் ஒன்று, அதன் ராஜகம்பீர தோரணைக்காக முப்பது நாற்பதுகளில் இந்தியத் தலைவர்களால் புகழப்பட்டது. இன்று அது சில கட்சிகளின் ஃபாஸிஸ எதிர்வினைகளுக்கு பயந்து, தான் பார்க்காதது போல் பாவனை செய்கிறது. சில ஃபாஸிஸ நடப்புகளை நியாயப்படுத்தவும் செய்கிறது. தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் எல்லாமே இதே குணத்தைத்தான் கொண்டுள்ளன. மாறுவது சிறிய அளவில்தான். குணத்தில் அல்ல.

பத்திரிகை, இலக்கியம் என்று மாத்திரம் இல்லை. வாழ்க்கை முழுதிலுமே மதிப்புகள் சரிந்துள்ளன. ஒரு கலாச்சாரச் சீரழிவு தொடர்ந்து நடந்தே வந்துள்ளது. என் சிறு வயதில் என் வீட்டுக்கு எதிரில் குடி இருந்தவர் ஒரு தாசில்தார். ஒரு நாள் தாசிலதாரை சந்தோஷப்படுத்தித் தனக்குச் சாதகமாக காரியம் செய்துகொள்ள, தன் தோட்டத்தில் விளைந்த காய் கறிகளுடன் அவர் வீட்டு முன் நின்றவனிடம் தாசில்தார் சத்தம் போட்டது கேட்டது. ” நீ ஏன் இங்கே வந்தே? சட்டப்படி உன் பக்கம்தான் நியாயம் இருக்கு. அது நடக்கும். என்னை வந்து நீ பாக்கவும் வேண்டாம், இதெல்லாமும் வேண்டாம். எடுத்துண்டு போ முதல்லே.” இந்த வார்த்தைகளை இன்று எங்கும் கேட்க முடியாது. ஒரு பஞ்சாயத்து யூனியன் அடிமட்ட எழுத்தர் தொடங்கி, உச்ச அதிகார பீடம்வரை. எந்தத் துறையிலும், எந்த மட்டத்திலும். இலக்கியம் கலை எல்லாம் இந்தச் சமூகத்திலிருந்து எழுபவைதான். இந்தச் சமூகத்தின் காற்றை சுவாசித்து வாழ்பவைதான்.

அரசியலிலிருந்தும் சினிமாவிலிருந்தும் ஆரம்பித்து, இன்று எல்லாத் துறைகளிலும் இது புற்றுநோயாகப் பீடித்துள்ளது. ஆனால் எல்லோரும் சுவாசிக்கும் காற்று, வாழும் சமூகம் ஒன்றே என்றாலும், வாழும் மனிதர்கள் எல்லோரும் ஒன்றல்ல. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், சுதந்திர ஜீவன்களாக வாழ்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் இங்கு இருந்திருக்கிறார்கள். இன்றைய தமிழ் இலக்கியத்தின் தொடக்கமே, அன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குஎதிராக குரல் எழுப்ப வந்த ஒரு பத்திரிகையில்தான் நிகழ்ந்தது. தமிழ்க் கவிதையின் புதிய சகாப்தமும் அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பிய கவிஞனுடன்தான் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்குப் பின்னும், ஏதோ ஒரு அதிகார பீடத்தின் வாசலில் பல்லிளித்து நின்று காத்திருந்து எவ்வித வற்புறுத்தலும் இன்றி தாமே வலிந்து தம் எழுத்தையும் சிந்தையையும் அந்தப் பீடத்தின் பாதங்களில் சமர்ப்பிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இன்று நம்மைச் சுற்றிலும் நிறைய.

ஐம்பது வருடங்களுக்கு முன் சிம்மமாக கர்ஜித்த ஒரு எழுத்தாளன் இன்று தானே வலியச் சென்று அதிகாரத்திற்கு தன் அடிபணிந்து மகிழ்ச்சியுடன் அதுபற்றிப் பெருமையும் பட்டுக் கொள்கிறான். தான் அன்றாடம் வதைபடும் வறுமையின் கொடுமையிலும், ‘என்னை மதியாதவன் வீட்டுக்கு நான் ஏன் போகவேண்டும்?’ என்று தன் சுய கௌரவ வலியுறுத்தலை வெகு சாதாரணமாக, இயல்பாக அமைதியுடன் வெளியிட்ட எழுத்தாளர்களை நான் அறிவேன். எத்தகைய வீராவேச உரத்த அறைகூவல் ஏதுமன்றியே அவரது சுயகௌரவம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. அத்தைகைய தன் சுயத்துவத்தின் கௌரவத்தைக் கட்டிக் காப்பாற்றிய மனிதரின் செயல்பாட்டில்தான் (சி.சு. செல்லப்பா) தமிழ் தன் கவித்வத்தையும் விமர்சன பிரக்ஞையையும் திரும்பப் பெற்றது கடந்த நூற்றாண்டின் பின் பாதியில்.

இன்று பல திறனுள்ள எழுத்தாளர்கள், அரசியல் அதிகாரங்களை, சினிமா பிரபலங்களை, பத்திரிகை அதிபர்களை, நாடி அவர்தம் குடைக்கீழ் தம்மை பிரஜைகளாக்கிக் கொள்வதில் ஆசை காட்டுகிறார்கள். பிரஜைகளாகி விட்டதில் பெருமை கொள்கிறார்கள். எந்தக் கலைஞனும், தான் செயல்படும் எதிலும் தன் ஆளுமையை, தாக்கத்தை, பாதிப்பை பதிக்க இயலவில்லை என்றால், மாறாக ஒரு அதிகாரத்தின், பணபலத்தின் நிழலாகத் தன்னை ஆக்கிக் கொள்கிறான் என்றால் அவன் ஒரு சேவகனே, கலைஞன் இல்லை. என் நண்பர் ஒருவர், வெகு தொலைவில் இருப்பவர், தான் செல்லும் பாதையில் கண்ட ஒரு வாசகத்தைச் சொன்னார். ‘எது ஒன்றிற்காவது நீ தலை நிமிர்ந்து நிற்கவில்லை யென்றால், பின் எதற்குமே நீ தலை குனிந்து கொண்டுதான் இருப்பாய், கடைசிவரை’ (If you don’t stand up for something in life, then you end up falling for anything).

காலம் மாறிவிட்டது. நம் வசதிகள் பெருகி இருக்கின்றன. நம் வெளியீட்டுக் கருவிகள் எளிமைப்படுத்தப்பட்டு விட்டன. அன்று சிறுபத்திரிகைகள் தான் கதி என்று இருந்த நிலை போய் இடைநிலைப் பத்திரிகைகள் நிறையத் தோன்றியுள்ளன. இருப்பினும் அவை தாமே தேர்ந்து கொண்ட ஏதோ ஒரு வகையில் குழுமனப்பான்மையோடு தான் செயல்படுகின்றன. தன் குழுவைச் சேராதவனை ஒழிக்க நினைக்கும் அல்லது நிராகரிக்கும். வெகுஜனப் பத்திரிகைகள் சிலருக்கு இடம் அளிப்பது போல் தோன்றினாலும் அவை ஒரு தனக்குத் தகுதியில்லாத ஒரு உயர்ந்த பிம்பத்தை கொடுத்துக்கொள்ளவே அந்த ஒரு சிலரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவை எதுவும் அதிகாரத்திற்கும் ஆசைகளுக்கும் அடிபணியாதவை அல்ல. ஒரு லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும், அதிகார பீடங்களின் புன்முறுவல் கிடைத்தால் போதும். அங்கு இட்டுச் செல்பவர்களுக்கு ப்ரீதியாக நடந்துகொள்வார்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனி ஜமீன்கள். ஆனால் அதிகாரத்திற்கு சலாம் போடும் ஜமீன்கள்.

இது கணினிகளின் காலமாகி விட்டது. இணைய தளங்களும் கட்டுப்பாடற்ற வெளியீட்டுச் சாதனங்களாகி உள்ளன. இணைய தளங்களில் எழுதியே தம் பெயரை தமிழ்பேசும் உலகம் பூராவும் தெரியச் செய்துள்ளவர்களும் உள்ளனர். பத்திரிகைகள் சார்ந்தே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லாது போயுள்ளது. இது இன்றைய நிகழ்வுகளில் ஒன்று. இணையதளங்கள் நிறைய சுதந்திரம் தருகின்றன. பத்திரிகைகள் ஏற்க மறுப்பவற்றை இணைய தளங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இவற்றின் தாக்கம் விரிந்ததும், அதே சமயம் குறுகியதும் கூட.

இவை போக ஒவ்வொருவரும் தனக்கென ஒரு வலைப்பதிவை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறது. ஆனால் இந்த வலைப்பதிவுகளின் உட்சென்று பார்த்தால், அவற்றின் பதிவாளர்களில் பலர் தம் அந்தரங்க ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ளும் போது, எவ்வளவு அநாகரீக, ஆபாசம் நிறைந்த ஆளுமைகள் அவை என்று காணக் கஷ்டமாக இருக்கிறது. ‘நிர்வாணமாக தெருவில் நடக்க வெட்கப்படும் ஒருவன் தன்னை ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவதில்லை” என்று புதுமைப்பித்தன் அன்று சீற்றத்தில் சொன்னதை இன்று இப்பதிவாளர்களின் இயல்பென அலட்டிக்கொள்ளாமல் சொல்லலாம். இதைத்தான் மதிப்புகளின் சரிவு என்றேன். தொழில் நுட்பங்களும், வசதிகளும் மனித ஆளுமையை உருவாக்குவதில்லை. மனித ஆளுமைதான் அதன் குணத்தில் தொழில் நுட்பத்தையும் வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கலாச்சார சீரழிவு காலத்தில், தொழில்நுட்பத் தேர்ச்சி மதிப்புகளின் சரிவோடு வந்து சேர்ந்துள்ளது. சுதந்திரமும் வசதிகளும் ஒருவனின் அதம குணத்தை வெளிப்படுத்தவே வழிசெய்கிறது.

நான் தடித்த கரிய வண்ணத்தில் சித்திரம் தீட்டுவதாகத் தோன்றக் கூடும். இவையெல்லாம் உண்மைதான் என்ற போதிலும், அன்று அந்நிய ஆதிக்கத்தின் அடக்குமுறையையும் மீறிச் சுதந்திரக் குரல்கள் எழுந்தது போல, என்றும் எதுவும் முழுதுமாக இருள் படிந்ததாக இருந்ததுமில்லை. மின்னும் தாரகைகள் எப்போதும் எந்நிலையிலும் காட்சி தரும். கொஞ்சம் பழகிவிட்டால் இருளிலும் கண்கள் பார்வை இழப்பதில்லை. முன்னர் வெகுஜன சாம்ராட்டுகளாக இருந்தவர்களின் எழுத்தை, இன்று இருபது வயதேயான ஓர் இளம் எழுத்தாளன் கூட, எழுத்து என்று மதிக்க மாட்டான். அந்த சாம்ராட்டுகளுக்கு இல்லாத தேர்ச்சியும் எழுத்து வன்மையும் இன்று முதல்காலடி எடுத்து வைப்பவனுக்குக்கூட இருப்பதைக் காண்கிறோம். அன்று சிறுகதையோ, நாவலோ அதன் மொழியும் உருவமும் எழுதும் திறனும் நம் முன்னோடிகள் பயிற்சியினால் பெற்றது இன்றைய எழுத்தாளனுக்கு பிதிரார்ஜிதமாக வந்தடைந்துள்ளது. இதன் சிறந்த பங்களிப்புகள் நிறைய பேரிடமிருந்து வந்துள்ளன. யூமா வாசுகி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், உமா மகேஸ்வரி, இமையம், பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன், சோ.தருமன் என இப்படி நிறைய அவரவர் மொழியோடு, உலகங்களோடு, பார்வையோடு தமிழுக்கு வந்துள்ளனர். கடந்த இருபதாண்டுகளின் தமிழ்ச் சிறுகதையில் இருபது பேரைத் தொகுக்க நான் கேட்கப் பட்டபோது, இருபதுக்குள் அத்தொகுப்பை அடக்குவது எனக்கு சிரமமாக இருந்தது.

(இக்கட்டுரை 05-03-2009 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)

7 Replies to “தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள்-1”

  1. வெ.சா ஐயா, இலக்கியவாதிகளைப் பற்றிய இந்தக்கட்டுரைத் தொடர் மிகவும் சிறப்பான ஒன்று. இப்படிப்பட்ட தரமான கட்டுரைகளை வெளியிடும் தமிழ்ஹிந்துவுக்கு நன்றி.

  2. வெங்கட் சாமிநாதன் அய்யாவின் இந்த அருமையான கட்டுரை இன்றைய‌ எழுத்தாள‌ர்க‌ளாக‌ த‌ங்க‌ளை நினைத்துக்கொள்வோரும், ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும், ப‌திப்பாள‌ர்க‌ளும் ப‌டிக்க‌ வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் ம‌ன‌சாட்சியுள்ள‌ ஒவ்வொரு எழுத்தாள‌னையும், ப‌திப்ப‌க‌த்தானையும், ப‌த்திரிக்கையையும் ச‌ட்டையைப் பிடித்து உலுக்கும். வெ.சா அய்ய‌வின் க‌ட்டுரையில் குறிப்பிட்டுள்ள‌ சில‌ நிமிர்ந்த‌ த‌லைக‌ள் ந‌ம்பிக்கையூட்டுகின்ற‌ன‌ர்.

    அருமையான‌ க‌ட்டுரை..

  3. இத்தனை அனுபவம் உள்ளவரால்தான் இவ்வளவு சிறு கட்டுரையில் அவ்வளவு தகவலையும் அடக்கி, மதிப்பீடுகளின் கரைப்பையும் அதைக் கரைத்து அரிக்கும் கரையான்களையும் பற்றித் தெளிவாகச் சுட்ட முடியும். என் தலைமுறைக்கு இதே கருத்துகளைப் படிப்பினை போலச் சொல்லிக் கொடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் அவற்றை விலக்கி மாற்று வழிகளில் எம்மில் பலர் போய்ச் சேர்ந்தனர். அவ்வழிகள் உதவாதவை என்று தெரிய காலம் ஆகியது. அதற்குள் அடுத்தடுத்த தலைமுறைகள் இதே போலக் கிளை பிரிந்த பல பாதைகளில் போய் தமிழகப் பண்பாட்டு சூழல் முன்னெப்போதையும் விட சந்தையில் சீரழிந்து நிற்கிறது. சந்தை மட்டும் சீரழிக்கவில்லை, மொந்தையும் தன் பங்கைச் செய்கிறது. இவற்றோடு பாரத சமூகத்தை அழிக்கும் குரோதத் தீயும் தமிழகத்தில் எங்கும் பற்றி இருக்கிறது. சில முனைப் போராட்டமாக எம் தலைமுறையின் இளம் பிராயத்தில் இருந்த சூழல் இன்று பலமுனைப் போராக மாறி இருக்கிறது.
    எங்களை நற்பாதையில் செலுத்துவதில் அன்று அதிகம் வெற்றி பெறாது போன திரு.வெங்கட் சாமிநாதன், அதனால் சலிக்காமல் இன்னமும் அடுத்தடுத்த தலைமுறைகளின் அறிவில் தர்ம விளக்கை ஏற்ற முயல்வது வியப்பான நிகழ்வு. அதுவே ந்மக்கு நம்பிக்கையையும் தர வேண்டிய ஒன்று. செயல் திறனையும் நமக்கு அவரால் கொடுத்து விட முடியாது‍ அது நம்முள்ளே பிறந்து வளர வேண்டிய ஒன்று. ஆனால் செயலூக்கத்தை அவருடைய சலியா பலன் எதிர்பாராத முயற்சியில் இருந்து நாம் பெற முடியும். தமிழ் இந்து தளத்துக்கு இவர் எழுத்து அருமையான அணிகலன்.
    தலைமுறைகளுக்குத் தம் கருத்துலகின் விளைச்சலைக் கைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரு.வெ.சா. அதே நேரம் தம்மளவிலும் நிரம்பக் கற்ற வண்ணம் இருக்கிறார் என்பது அவர் கொடுக்கும் எழுத்தாளர் பட்டியலில் எத்தனை இளைஞர்களின் பெயர்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்தாலே தெரியும். தொடர்ந்து ஊறி வரும் எழுத்துத் திறமைகளை இனம் கண்டு கொள்வதிலும், அவர்களை ஊக்குவிப்பதிலும் திரு. வெ.சா. அன்று போலவே இன்றும் முன்னணியிலேயே இருக்கிறார்.
    தொடர்ந்து எழுதுவாரென்று எதிர்பார்க்கிறேன்.
    மைத்ரேயா

  4. மூன்று பேர் மறுமொழி தந்துள்ளார்கள். இதுவே என் விஷயத்தில் அதிகம். அதிலும் மைத்ரேயன் (இதுகாறும் நான் அறியாத பெயர்) ஆரம்ப காலத்திலிருந்தே என் எழுத்துக்களுடன் தொடர்பு கொண்டவர் என்று தெரிகிறது. நான் தளர்ந்து விடாமல், சோர்வடைந்து விடாது தொடர்ந்து எழுதிவருவதைப் பாராட்டியுள்ளார். மாறாக அவர் என் எழுத்துக்களைக் கண்டு தளர்வடையாது, சோர்ந்து விடாது தொடர்ந்து வருவது தமிழ் நாட்டில் ஆச்சர்யம் தரும் ஒன்று. நான் ஆச்சரியப் படுகிறேன். இன்னும் ஒன்று, சலித்துப்போய் நான் வேறு என்ன செய்யமுடியும்? வேறு எப்படியும் மாற முடியாததால் இப்படி இருக்கிறேன். புத்திசாலிகள் தம்மை மாற்றிக்கொண்டு வெற்றி யடைந்துள்ளார்கள்.

    இது மூன்று ப‌குதிக‌ளாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டு முத‌ல் ப‌குதி இப்போது வெளிவ‌ந்துள்ள‌து. மிகுதியும் வ‌ரும்.
    இக்க‌ட்டுரை ஒரு மாத‌ப் ப‌த்திரிகையின் தீபாவ‌ளி ம‌ல‌ருக்காக் என்னை எழுதச் சொல்லிக் கேட்டு வாங்கிய‌வ‌ர் த‌ன் வேலையை அந்த‌ ப‌த்திரிகையில் இழ‌ந்த‌தால் இதுவும் அதில் வெளிவ‌ர‌வில்லை. கொஞ்ச‌ கால‌ம் பொறுத்திருங்க‌ள் என்றார் அவ‌ர். இதுகாறும் அவ‌ரால் ஏதும் செய்ய‌ முடிய‌வில்லை. வேலையில் இருக்கிறாரோ அல்ல‌து தெருவில் நிற்கிறாரோ தெரியாது. இந்த‌ விவ‌ர‌ம் இக்க‌ட்டுரையில் சொல்ல‌ப்ப‌ட்ட‌வைக்கு ஒரு அடிக்குறிப்பாக‌ எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட‌லாம்.

    ‍வெ.சா.

  5. //மூன்று பேர் மறுமொழி தந்துள்ளார்கள். இதுவே என் விஷயத்தில் அதிகம்//

    ம்கூம்? சார்! நீங்கள்ளாம் இப்படிச் சொன்னா நாங்கள்ளாம் எங்க போறதாம்! மஹாபாரத உரையாடல்கள் ஒவ்வொரு பகுதியும் ஆயிரம் பேருக்குமேல் பார்த்திருக்கிறார்கள். (ஜாக்கிரதையாக ‘பார்த்திருக்கிறார்கள்’ என்றேன்; ‘படித்திருக்கிறார்கள்’ என்று சொல்லவில்லை.) மறுமொழிகளின் எண்ணிக்கையைப் பாருங்கள்! படிக்கிறார்கள்; ரசிக்கிறார்கள். மறுமொழி இடுவதற்கு என்னவோ ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

    இதோ நான் இல்லையா! உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு அப்படியே போயிருந்திருப்பேன். உங்களுடைய பதில்மொழியைப் பார்த்திருக்காவிட்டால்.:‍))

  6. வீட்டில் உள்ள குப்பைகளை தெருவில் கொட்டினால் வீடு சுத்தமாகிவிடும்
    அதே நேரத்தில் தெரு குப்பையாகிவிடும்
    அதுபோல்தான் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் உள்ள குப்பைகளான காமம்,குரோதம்,லோபம்,மதம், மாச்சர்யம் போன்றவைகள் வெளியே தள்ளப்படவேண்டும் .அதற்க்கு பலவிதமான வாய்ப்புக்களை தேடி ஒவ்வொரு மனிதனும் அலைகின்றான். சிலர் எழுதி தீர்த்துக்கொள்ளுகிறார்கள். சிலர் திரைப்படங்கள் எடுக்கிறார்கள்,சிலர் கவிதையாய் வெளியே தள்ளுகிறார்கள்.சிலர் பேச்சின் மூலம் வெளியேற்றுகிறார்கள்.இதில் எதை செய்தாலும் எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும்
    அதை எதிர்க்க திறனற்று இருப்பவர்கள் மனதில் போட்டு வெம்பி போய் மன நோயாளிகளாய் ஆகிவிடுகிறார்கள். சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டு தங்கள் வாழ்வை நாசமாக்கி கொள்ளுகிறார்கள்.
    தற்போது இணையத்தளம் மூலம் விமரிசனங்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்களுக்கு தங்கள் மனதில் உள்ளவைகளை வெளிபடுத்திகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இணையத்தளம் முழுவதும் பிதற்றல்களும்,துர்நாற்றமும் அடிக்க தொடங்கிவிட்டது. இணையத்தளம் காற்று போன்றது. எதனாலும் மாசுபடாது. மலர் வனத்தின் மீது வீசும் போது மலர்களின் மணத்தை அது கொண்டுசெல்லும்.மலத்தின் மீது செல்லும்போது அதன் நாற்றத்தை கொண்டு செல்லும்.
    அதுபோல்தான் இந்த மாற்றமும். பல்பொருள் அங்காடியில் எல்லா பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் நமக்கு தேவையானவற்றை நாம் தேர்ந்தெடுத்து வாங்குவதைபோல் தேவையற்ற குப்பைகளை நாம் தள்ளிவிட்டு நமக்கு வேண்டியவற்றை தேர்ந்தேடுத்துகொள்வது நம் கையில்தான் உள்ளது.

  7. காலத்தின் கோலம் என்று உண்டு. அது செய்யும் ஆட்டம் இருக்கிறதே கோபுரத்தைக் குப்பை மேடு ஆக்கிறது. குப்பைமேட்டைக் கோவில் கருவறையாக்கி விளையாடுகிறது. திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் அங்கலாய்ப்பு சரியானதே. அந்த எழுத்தாளரின் “கம்பீரம்” எங்கே போனது ? அவரா இப்படி ! என்று அவரின் எழுத்துக்களின் அபிமானிகள் நெஞ்சம் குமைகிறார்கள். ”வாலி”ன் ஆட்டம் நாய்களுக்குத்தான் லக்ஷணம். வெற்றிபெற்றவர்களுக்கு தேவையில்லை. காந்தம் இரும்பை இழுப்பது சரி ஆனால்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *