இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.
தொடர்ச்சி..
மயிலாடுதுறையில் சைவ வேளாளர் சார்பில் மகேசுவர பூஜை விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் தலைமையேற்க இளையவர் அழைக்கப்படுகிறார். விழா சிறப்பாக நடக்கிறது. விழா முடிவில் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது சமபந்தி விருந்து அல்ல. சைவ வேளாளர்களுக்குத் தனி பந்தியும் பிறருக்கு தனி பந்தியுமாக இருக்கிறது. அதைப் பார்த்ததும் இளையவருக்கு வருத்தமும் கோபமும் வருகிறது.
அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைக்கும்படி விழா அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். அவர்கள் மறுத்து விடவே, இளையவர் அந்த நிமிடமே அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். விழா பந்தலில் தனித்தனி இடத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கியவர்கள் இளையவர் தன்னந் தனியாக சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்து செல்வதைப் பார்த்ததும் விழுந்தடித்து ஓடி அவரைத் திரும்பி வரச் சொல் கிறார்கள். அனைவருக்கும் ஒரே பந்தி பரிமாறப்பட்டால் வருகிறேன். இல்லையென்றால் இனி இந்த ஊருக்கே வர மாட்டேன் என்கிறார். விழா அமைப்பாளர்கள் தமது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார்கள். இளையவர் விளம்ப அனைவரும் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.
பெரிய புராணத்தில் சாதிகள் இல்லை. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கலப்புத் திருமணம் செய்து வைக்கிறார் சிவபெருமான். வேடர் கண்ணப்பருக்கும் சிவ ஆச்சாரியாருக்கும் இடையிலான சண்டையில் இறைவன் வேடருக்கே ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதையெல்லாம் பகிர்ந்துகொண்ட இளையவர் தனது பக்தர்களிடம் ஒவ்வொருவரும் ஒரு தலித் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அதோடு கோவிலைத் தழுவிய குடிகள்… குடிகளைத் தழுவிய கோவில் என்ற தன் திட்டத்தை முன்னெடுக்கிறார்.
மக்களிடையே இருக்கும் ஜாதி உணர்வானது சில நேரங்களில் ஜாதி வெறியாக மாறுவதைப் பார்த்து வேதனையுறும் இளையவர் தமக்கு சந்நியாஸ ஆஸ்ரமத்தில் வைக்கப்படும் பெயரை ஜாதி நல்லிணக்கத்துக்கும் சமத்துவத்துக்கும் பொருத்தமானதாக வைத்துக்கொள்ள விரும்புகிறார். சமத்துவானந்தா, அன்பானந்தா என்பதுபோன்ற பெயர்களை மடாலயத்தில் பரிந்துரைக்கிறார்கள். இளையவரோ இன்னும் வலுவான பெயர் வேண்டுமென்று விரும்புகிறார். நவீன காலகட்டத்தில் ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றின் சிறந்த உதாரணமாக இருக்கும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் மீது மிகுந்த மரியாதை கொண்ட இளையவர் அவர் மட்டும் அரசியல் களத்தில் இருக்காமல் ஆன்மிகத் தளத்தில் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று ஒருவரிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கையில் ஏன் நீங்களே அப்படி இருந்துகாட்டுங்களேன் என்று சொல்கிறார். அந்த செய்தியை அழுத்தமாகக் காட்டும் பொருட்டு உங்கள் பெயரையும் சுவாமி அம்பேதகர் என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்கிறார். இளையவருக்கு அந்த ஆலோசனை பெரிதும் பிடித்துப் போகவே தன் பெயரை சுவாமி அம்பேத்கர் என்று சூட்டிக்கொள்கிறார்.
*
ஆன்மிகம், இறை நம்பிக்கை, சமத்துவம் போன்றவற்றை வெறும் சொற்பொழிவுக்கான கருப்பொருட்களாக மட்டுமே பார்க்காமல் நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்கிறார். பொதுவாக அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், செல்வந்தர்கள் எனச் செல்வாக்கு மிகுந்தவர்கள் மடங்களுக்கு வரும்போது அவர்களுக்கு தடபுடலாக வரவேற்பு விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. அதே நேரம் தினமும் நடக்கும் அன்னதானத்துக்கு வரும் எளிய மனிதர்களை மடத்து பணியாளர்கள் சற்று அலட்சியமாகவே நடத்துவார்கள். இது தவறு என்று அவர்களுக்குப் புரியவைக்க சுவாமி அம்பேத்கர் விரும்புகிறார்.
ஒரு நாள் மன்னர் பரம்பரையில் சிலர் மடத்துக்கு வரப்போகிறர்கள் என்று பணியாளர்களிடம் சொல்கிறார். அவர்களும் தடபுடலாக விருந்து தயாரித்து விழாபோல் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அன்று அன்னதானத்துக்கு வந்த எளிய மக்கள் யாரோ பெரிய மனிதர்கள் வரப்போகிறார்கள் போலிருக்கிறது என்று ஓரமாக நிற்கிறார்கள். உள்ளே அறைக்குள் இருந்து அவர்கள் வந்ததைப் பார்த்ததும் சுவாமி அம்பேத்கர் வேகமாக ஓடிவருகிறார். பணியாளர்கள் மன்னர் வந்துவிட்டார் போலிருக்கிறது என்று பூர்ண கும்பத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். வாசலில் வந்து பார்த்தால் யாரையும் காணும். சுவாமி அம்பேத்கரோ மங்கல வாத்தியங்களை முழங்கச் சொல்கிறார். அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். யாரும் வராமல் எதற்காக வாசிக்கச் சொல்கிறார் என்று குழம்புகிறார்கள்.
சுவாமி அம்பேத்கரோ ஓரமாக நிற்கும் எளிய மக்களை நோக்கிச் செல்கிறார். பணியாளர்களை அழைத்து பூர்ண கும்பத்தை கையில் வாங்கி எளிய மக்களை வரவேற்கிறார். இவர்கள் தான் மன்னர்கள்…. என்று கம்பீரமாக அவர்களை அழைத்துச் செல்கிறார். எல்லாரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வாய் வார்த்தையாகச் சொன்னால் பணியாளர்களுக்குப் புரியாதென்பதால் அதை அப்படி நாடகீயமாக நடத்திக் காட்டியிருக்கிறார். அன்றிலிருந்து மடத்துக்கு அன்னதானத்துக்கு வரும் எளிய மக்களைப் பணியாளர்கள் கண்ணியமாக நடத்த ஆரம்பிக்கின்றனர்.
*
ஒருமுறை ஒரு குக்கிராமத்தில் ஒரு புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டப்படுகிறது. அங்கு மருத்துவமனை வர அனைத்து முயற்சிகளையும் செய்தது சுவாமி அம்பேத்கர்தான். ஆனால், அந்த ஊர் எம்.எல்.ஏ. அந்தப் பெருமையைத் தானே தட்டிக்கொண்டு செல்ல விரும்புகிறார்.
அந்த ஆரம்ப சுகாதார மையத்தின் திறப்பு விழாவுக்கு சுவாமி அம்பேத்கரை அழைக்காமல் எம்.எல்.ஏ.வே வந்து திறந்துவைக்க முடிவெடுக்கிறார். ஆனால், திறப்பு விழா அன்று ஒட்டு மொத்த கிராமமும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து நிற்கிறது. சுவாமி அம்பேத்கர்தான் வந்து திறக்கவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். எம்.எல்.ஏ. அதற்கு மறுப்பு தெரிவித்ததும் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அந்த விழாவைப் புறக்கணிக்கின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு பெருத்த அவமானமாகப் போகிறது. கடைசியில் சுவாமி அம்பேத்கருக்குச் சொல்லி அனுப்ப வேண்டிவருகிறது. மக்கள் ஆதரவுடன் வந்து சேரும் சுவாமி அம்பேத்கர் தனக்குத் தரப்பட்ட பூர்ண கும்ப மரியாதையை எம்.எல்.ஏ.வுக்கும் தரச் செய்து அவரை வைத்தே சுகாதார மையத்தை திறக்கவும் செய்கிறார்.
*
இன்னொரு குக்கிராமம். அங்கு இரவில் குடிசைகள் திடீர் திடீரென்று தீப்பிடிக்கின்றன. என்ன காரணம்… யார் காரணம் என்பதைக் கண்டே பிடிக்க முடியவில்லை. மந்திர பூஜைகள் செய்தும் குடிசைகள் தீப்பிடித்து எரிவது நிற்கவில்லை. அருகில் இருக்கும் விஞ்ஞான மையத்துக்கு எரிந்த சாம்பலைக் கொண்டு சென்று தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இரவுக் காவல் போட்டும் குடிசைகள் எரிவது நிற்கவில்லை. சுவாமி அம்பேத்கர் யோசிக்கிறார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தேங்காயை மந்திரித்து தருகிறார். தீ வைப்பவன் வீட்டில் தேங்காய் வெடிக்கும். மரணம் நிகழும் என்று சொல்லி அனைத்து வீட்டுக்கும் கொடுக்கிறார். என்ன ஆச்சரியம். அன்றிலிருந்து தீப்பிடித்து எரிவது நிற்கிறது!
*
கோவில் கட்டமைப்பை நவீனப்படுத்துவதை தன் லட்சியமாக எடுத்துக்கொள்கிறார் சுவாமி அம்பேத்கர். கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிக்கலாமா… கோவிலில் அசைவ படையல் கொடுக்கலாமா… கோவில் பணத்தை யார் நிர்வகிக்கவேண்டும் என்பதுபோல் அவர் கொண்டுவர விரும்பும் சீர்திருத்தம் குறித்து ஒவ்வொரு மாதமும் பக்தர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துகிறார். அந்தக் கூட்டத்துக்கு முன்பாக அந்த விஷயம் தொடர்பாக ஒரு பட்டிமன்றம் நடத்துகிறார். பக்தர்களுக்கு அந்த விஷயம் குறித்து சாதக பாதக அம்சங்கள் முழுமையாக முன்வைக்கப்படுகின்றன. பக்தர்கள் அந்த விஷயம் தொடர்பாக முன்வைக்கும் தீர்ப்பை அமல்படுத்துகிறார். அப்படியாக அந்த கோவில் என்பது பக்தர்களால் பக்தர்களுக்காக நடத்தப்படும் மையமாகச் செயல்படுகிறது.
முதல் முதலாக கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிப்பது தேவையா என்று ஒரு பட்டிமன்றத்தை நடத்துகிறார். விஞ்ஞானப் பார்வை கொண்டவர்கள், நாத்திகர்கள், பிற மத பேச்சாளர்கள் என பலரும் அந்தப் பட்டிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.
கோவில் என்பது ஏதேனும் ஒரு தெய்வத்தை மையமாகக்கொண்டு எழுப்பப்படும் கட்டுமானம்.
அது அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றி வாழும் மக்களின் ஆன்மிகம், பொருளாதாரம், அரசியல், அறிவு, கலை, கலாசாரம், பேரிடர் கால மேலாண்மை என ஒட்டுமொத்த, சமூக வாழ்க்கையின் ஆதாரப் புள்ளியாக அது இருக்கும்.
கோவிலில் இருந்து எவ்வளவு தொலைவில் ஒருவருடைய வசிப்பிடம் இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து பழங்காலத்தில் அவருடைய சமூக அந்தஸ்து தீர்மானிக்கப் பட்டது. அதற்கேற்பவே அந்தப் பிரிவு மக்களின் வாழ்க்கை நிலையும் இருந்தது. கோவிலைச் சுற்றி வசித்த பிராமணர்கள் சமூக அந்தஸ்திலும் வாழ்க்கை நிலையிலும் உயர்ந்தவர்களாக இருந்தார்கள். கோவிலில் இருந்து தொலைவில் வசித்த கடைநிலை சாதியினருடைய வாழ்க்கை அந்தஸ்து கடைநிலையிலும் வாழ்க்கை வசதிகள் அதற்கேற்ப வும் இருந்தன. அப்படியாக சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு கோவில் என்பது ஓர் அங்கீகாரத்தைத் தந்ததாகவும் இருந்திருக்கிறது.
கோவில் என்பது கூட்டம் குழுமும் இடமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை அந்த சமூகத்து அடையாளங்கள், மதிப்பீடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவைக்கவும் செய்கிறது.
நவீன காலக் கோவில்கள் என்பவை பாரம்பரியக் கோவில்களின் நல்ல அம்சங்களைக் கொண்டவையாகவும் அதில் இருக்கும் தீமைகளைக் களைந்தவையாகவும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நவீனக் கோவில் = பாரம்பரியக் கோவில் மைனஸ் சாதி ஏற்றத் தாழ்வு என்று இருக்கவேண்டும். எனவே, கோவிலில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியவேண்டும் என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள்.
திருப்பதி, சபரிமலை, பழனி எனப் பெரும் கூட்டம் கூடும் கோவில்களில் ஆரம்பித்து பிராமண பூஜை நடக்கும் கிராமப்புற சிறிய கோவில்கள் வரை பெரும்பாலான கோவில்கள் இன்று சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளில் இருந்து பெருமளவுக்கு வெளியேறிவிட்டிருக்கின்றன. இன்றும் சில பிராமணக் கோவிலிலும் கருவறைக்குள் பிற சாதியினர் யாரும் நுழைய அனுமதி இல்லை என்றபோதிலும் அது சாதி சார்ந்த ஒடுக்குதல் அல்ல. ஏனென்றால் பூஜை செய்யும் பிராமணர் நீங்கலாக பிற பிராமணர்களுக்குக்கூட அந்தக் கோவில்களின் கருவறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. நம்பூதிரிகள், ஐயர்கள், ஐயங்கார்கள், மாத்வர்கள், போத்தி என பிராமணர்களில் இருக்கும் பல்வேறு பிரிவினர் வேறொரு பிரிவைச் சேர்ந்த கோவிலுக்கு அர்ச்சகராக முடியாது. எனவே, எல்லா பிராமணரும் எல்லா பிராமண கோவில் கருவறைக்குள்ளும் நுழைய முடியாது என்ற விதியை அந்தந்தக் கோவில்களின் நிர்வாகம் சார்ந்த, ஆகம விதிகள் சார்ந்த ஒரு வழிமுறையாக மட்டுமே பார்க்கவேண்டும். இது சாதி சார்ந்த பிரச்னை அல்ல.
ஒரு இஸ்லாமியர் சர்ச் ஒன்றில் ஒருநாளும் பாதிரியாக முடியாது. ஒரு கிறிஸ்தவர் ஒருநாளும் இமாம் ஆக முடியாது. இங்கு இருப்பது சமத்துவ மறுப்பு அல்ல… மாறுபட்ட வாழ்க்கைப் பார்வைகளுக்கான அங்கீகாரம் மற்றும் விலகி நிற்கும் தன்மை. இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிப் பிரிவுக்கும் சாதி உட்பிரிவுக்கும் அப்படியான ஒரு தனித்தன்மை இருப்பதால் அதை அனுசரித்துச் செல்வதையே மக்கள் தமது வழிமுறையாக எந்தவித உறுத்தலும் இல்லாமல் பின்பற்றிவந்திருக்கிறார்கள். ஒரு தேவர் ஜாதி பூசாரி இருக்கும் கருவறைக்குள் வேறு சாதியினர் செல்ல முடியாது. ஒரு பறையர் பூஜை செய்யும் கருவறைக்குள் வேறு ஜாதியினர் செல்வதில்லை. ஐயர் பூஜை செய்யும் கருவறைக்குள் ஐயங்கார் செல்வதில்லை. எனவே, பாரம்பரியக் கோவில்களின் இந்த நடைமுறையை சமத்துவ மறுப்பாகப் பார்க்கவேண்டாம் என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள்.
நவீன கோவில் என்பது யார் வேண்டுமானாலும் எந்தக் கோவிலின் கருவறைக்குள் வேண்டுமானாலும் போகமுடியும் படியாக இருக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக முடியும்படியாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த இடத்தில் பாரம்பரிய வழிமுறையை எந்த அளவுக்குத் தக்கவைத்துக்கொண்டு நவீனமாக முடியும் என்று பார்க்கவேண்டும் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார்.
ஆரிய சமாஜத்தில் ஆரம்பித்து பாரதியார் வரை பிராமணரல்லாத சாதியினருக்குப் பூணூல் அணிவித்து அனைவரையும் பிராமணர் ஆக்கியிருக்கிறார்கள். ஆரிய சமாஜத்தினர் அதை இன்றும் செய்துவருகிறார்கள். அம்பேத்கர்கூடத் தன் வாழ்நாளில் அப்படியான ஒரு பூணல் வைபவத்துக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். ராமானுஜர் தான் கற்ற தெய்வ ரகசியத்தை ஊருக்குச் சொன்னால் நரகம் கிடைக்கும் என்று சொன்னபோது என் ஒருவனுக்கு நகரம் கிடைத்தால் பரவாயில்லை…. அதைக் கேட்கும் நபர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள் என்றால் அதை நான் மனமுவந்து ஏற்பேனென்று சொல்லி கோவிலின் உச்சியில் ஏறி அதை முழங்கியிருக்கிறார். அவர் திருக்குலத்து அதாவது தலித் சாதியினரை வைணவத்துக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்.
இந்து தர்மத்தின் ஆரம்ப காலகட்டமான வேத காலம் பிறப்பின் அடிப்படையிலான ஜாதிகளை ஏற்கவில்லை. குணத்தின் அடிப்படையிலான வர்ணத்தையே ஏற்கிறது. அந்தவகையில் சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவர் தனது நடத்தை மூலம் பிராமணராக முடியும். எனவே, நவீன கோவிலில் இந்த பிராமண வாழ்க்கை முறையை ஏற்க முன்வரும் யாரையும் அர்ச்சகராக அனுமதிக்கலாம். ஒரு பிராமணர் பிராமண வாழ்க்கை முறையில் வாழவில்லையென்றால் பிராமணர்களுக்குப் பிறந்தார் என்ற ஒரு காரணத்துக்காகவே அவருக்குத் தரப்படும் சலுகையைப் பறித்தும்விடலாம். ஆக, கருவறைக்குள் நுழையும் அதிகாரத்தை பிராமணராக வாழ உறுதியெடுக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம் என்று முன்வைக்க வேண்டும். இதை கோவில்களை நவீனப்படுத்தும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி என்று சொல்ல விரும்புபவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்ளலாம். ஆக பிராமண ஜாதியை பிராமண வர்ணமாக மாற்றுவதே முதலில் செய்யவேண்டிய சீர்திருத்தம் என்று ஒருவர் சொல்கிறார்.
இந்த வாத பிரதிவாதங்களைக் கேட்ட பக்தர்கள் கடைசியில் கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம். ஆனால், அங்கு நுழையும் முன் பூணூல் போட்டுக்கொண்டுபோக வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.
அதன்படி கோவிலில் கருவறைக்குள் சென்று வழிபடவேண்டும் என்று விரும்புபவர்கள் முன்கூட்டியே தமது பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் நாளில் காலையில் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் குளித்து சிறிய யாகம் செய்து சமஷ்டி பூணுல் அணிந்துகொண்டு கருவறைக்குள் நுழைந்து இறைவனைக் கும்பிடலாம். இந்த பூணூல் வைபவம் நடத்த நபர் ஒன்றுக்கு 108 ரூபாய் கட்டணம் பூஜாரிக்குக் கொடுத்துவிடவேண்டும். சில பிராமண பூஜாரிகள் இதை உற்சகத்துடன் வரவேற்கிறார்கள். வேறு சிலரோ காலகாலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையை மாற்றக்கூடாதென்று சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் முற்காலத்தில் ஒவ்வொரு ஜாதியும் தத்தமது குல தெய்வங்களை மட்டுமே வழிபட்டுவந்தன. அனைத்து ஜாதியினரும் வந்து வணங்கும்படி ஆலயப் பிரவேச போராட்டங்கள் நடந்ததுகூட தவறென்று ஆகும். பிராமணக் கோவில்களுக்கு பிராமண பக்தர்கள் மட்டுமே வரவேண்டும் என்று இன்று சொல்லமுடியுமா என்று சுவாமி அம்பேத்கர் கேட்கிறார். தீட்சிதர்கள் அது சாத்தியமில்லைதான் என்கிறார்கள். அந்த ஆகமவிதியை மீறியிருப்பதுபோல் கருவறை நுழைவுக்கும் புதிய விதியை வகுத்துக்கொள்ளுங்கள். அல்லது இறுக்கமான ஆகம விதிப்படி ஒரு கோவில் கட்டிக்கொண்டு அதில் அனைத்து விதிகளையும் முறையாகப் பின்பற்றுங்கள் என்று சொல்கிறார். அது சாத்தியமில்லை என்பது தெரிந்ததும் தீட்சிதர்கள் வழிவிட்டுக் கொடுக்கிறார்கள். அனைத்து சாதி பக்தர்களுக்கும் கோவிலில் நடத்தப்படும் பூணூல் வைபவமும் கருவறை நுழைவு அனுமதியும் மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
*
அடுத்ததாக, இப்போது கர்ப்பகிரஹத்தில் சிலைகள் மிகவும் சிறியதாக இருக்கின்றன. கர்ப்ப கிரஹ வாசலும் மிகவும் சிறியதாக இருக்கிறது. விக்கிரகத்துக்கு நேர் எதிரில் இரு மருங்கும் நிற்கும் 30-40 பேர் மட்டுமே நல்ல முறையில் அபிஷேகம், தீபாராதனை போன்றவற்றைப் பார்க்க முடிகிறது. திருப்பதி, சபரிமலை, பழனி போன்ற பெரும் கூட்டக் கோவில்களில் இதனால் இறைவனைப் பார்க்க பத்து விநாடிகள் மட்டுமே ஒதுக்கமுடிகிறது. இப்படியாக சிரமப்பட்டுப் பெறவேண்டியதாக, மிகக் குறைவான நேரமே கிடைக்கூடியதாக அந்த தரிசனத்தை வைத்திருப்பது ஒருவகையில் பக்தருக்கு கூடுதல் தெய்வ அனுபவத்தைத் தரத்தான் செய்கிறது. ஒருவேளை திருப்பதி அல்லது சபரி மலை கோவிலில் அரை மணி நேரம் உட்கார்ந்து கும்பிடலாம் என்று ஏற்பாடு செய்தால் அந்த தெய்வ அனுபவத்தின் வீரியம் பக்தர் மனதில் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்தக் கோவில்களில் தரிசனம் சார்ந்து எந்த மாற்றமும் இப்போதைக்கு எடுக்கவேண்டாம். ஆனால், பிற அன்றாட, அருகமை வழிபாட்டு மையங்களில் இப்படி இருப்பது சரியல்ல என்கிறார்.
பொதுவாகவே முன்பெல்லாம் ஒவ்வொரு ஜாதியினரும் தத்தமது கோவில்களில் மட்டுமே வழிபாடு செய்து வந்ததால் பக்தர்கள் கூட்டம் இவ்வளவு கிடையாது. எனவே சிறிய கர்ப்பகிரஹமும் சிறிய சிலையும் போதுமானதாக இருந்தது. ஆனால், இன்று எல்லா ஜாதியினரும் எல்லா கோவில்களுக்கும் வந்துபோகத் தொடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் குறைந்தது 100-200 பேர் தரிசிக்க முடியும்வகையில் கர்ப்பகிரஹத்தையும் சிலையையும் மாற்றி அமைக்கவேண்டும். அதற்கு பக்தர்கள் தமது யோசனைகளைச் சொல்லலாம் என்கிறார் சுவாமி அம்பேத்கர்.
இன்றைய கர்ப்ப கிரஹமானது பக்தர்கள் நின்று வணங்கும் இடத்தில் இருந்து சுமார் இரண்டு மூன்றடி உயரத்தில் இருக்கிறது. பத்திருபது படி உயரத்தில் இருந்தால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பார்க்க முடியும். அதுபோல் கர்ப்ப கிரஹ வாசல் கதவை அகலமாக்கி அல்லது மூல விக்கிரகத்தைப் பெரிதாக்கினால் அதிகம் பேர் பார்க்க வழி பிறக்கும் என்று ஒருவர் சொல்கிறார்.
இப்போதும் நங்கநல்லூர், சுசீந்திரம் போன்ற ஊர்களில் ஆஞ்சநேயர் உருவச்சிலை பிரமாண்டமாக இருக்கிறது. கருவறையும் கிடையாது. ஒரே நேரத்தில் 300-400 பேர் நல்ல முறையில் அனைத்து அபிஷேக ஆராதனைகளைப் பார்க்க முடியும் என்கிறார் இன்னொருவர்.
இப்போது எல்லா கோவில் தெய்வங்களும் கிழக்கு பார்த்த நிலையிலேயே இருக்கின்றன. எனவே, ஒரு பக்கத்து வாசல் வழியாக மட்டுமே இறைவனைக் கும்பிட முடிகிறது. இதற்கு பதிலாக கருவறையில் நான்கு பக்கமும் பார்க்கும்படியாக நான்கு வாசல்களை வைத்து நான்கு சிலைகளையும் அதற்கேற்ப வைத்து இறைவனைக் கும்பிட வழி செய்யலாம் என்கிறார் ஒருவர்.
ஆனால், கிழக்குதான் புனிதமான திசை. வேறு திசைகளைப் பார்ப்பதுபோல் சிலைகளை அமைப்பது சரியல்ல என்கிறார் இன்னொருவர்.
கிழக்கு புனிதமான திசைதான். ஆனால், பிற திசைகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. ஒரு துறவி கோவிலுக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் படுத்துக்கொண்டிருந்தார். தலையை மேற்குப் பக்கமாக வைத்து காலை கிழக்குப் பக்கமாக அதாவது கோவிலுக்கும் சாமிக்கும் நேராக கால் நீட்டிக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்தில் இருந்தவர் இப்படி சாமிக்கு நேராக காலை நீட்டிக்கொண்டு படுப்பது தவறு அல்லவா என்று கேட்டபோது, இறைவன் இல்லாத இடத்தைச் சொல். அந்த திசை நோக்கிக் காலை நீட்டிக் கொள்கிறேன் என்றாராம். எனவே இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் நிலையில் எல்லா திசைகளுமே புனிதமானவைதானே என்கிறார் சுவாமி அம்பேத்கர்.
பக்தர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான்கு திசைகளில் சிலையை வைக்கலாம் அல்லது ஒரே தெய்வச் சிலையை சுழல் மேடையில் அமைத்து 360 டிகிரி சுற்றுவதுபோல் செய்தால் அனைத்து பக்கத்தில் அமரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் வழிபட வழி பிறக்கும் (கிரிக்கெட் மைதானத்தை சுற்றி அமர்ந்து ரசிகர்கள் பார்ப்பதுபோல்) என்று முடிவு செய்கிறார்கள்.
இது போன்ற ஆலோசனைகளை அனைத்து கோவில்களுக்கும் அனுப்பி அந்தந்த ஊரில் எப்படி விரும்புகிறார்களோ அதற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்.
*
பூ, பழம், அர்ச்சனை, மாலை, அபிஷேகங்கள், தீப ஆராதனை, பிரசாதம், விபூதி, குங்குமம், சடாரி, துளசி, புற்று மண் என பாரம்பரியக் கோவிலில் இருப்பவை அனைத்தும் அப்படியே தொடரலாம் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். பாரம்பரியக் கோவில்களில் வெண்ணிற டியூப் லைட்களே கூடாது… அகல் விளக்கின் பொன்னிற ஒளி அல்லது தீப்பந்தங்களின் மஞ்சள்-ஆரஞ்சு நிற ஒளி மட்டுமே இருக்கவேண்டும். அதுபோல் கோபுரத்துக்கு வெண்ணிறச் சுண்ணாம்பு அடிக்கவே கூடாது. இரவின் இருளில் பொன்னிறத்தில் அது ஜொலிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார். எல்லா பாரம்பரியக் கோவிலின் கருவறையானது கடந்த காலத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்வகையில் அகல் விளக்கு அல்லது மங்கலான குழல் விளக்கின் ஒளியில் மட்டுமே ஒளிரவேண்டும். முன்பிறவிகளின் கனவு போல் ஆழ் மனதில் உறைந்திருக்கும் ஓவியம் போல் அது இருள் நதியில் பௌர்ணமியின் மஞ்சள் ஒளியில் மிதக்கும் படகுவீடுபோல் கருவறை இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.
*
அடுத்ததாக அர்ச்சனை மொழி பற்றிய கேள்வி வருகிறது.
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்கிறார். ஆனால், சமஸ்கிருதம் கூடாது என்று சொல்லவில்லை. மடாலயக் கோவிலில் தமிழில் அர்ச்சனை முடிந்த பிறகு சமஸ்கிருதத்திலும் வேத மந்திரங்கள் முழங்கச் செய்கிறார். மொழிப்பற்றை அவர் மொழிப் பெருமிதமாகவும் மொழி உரிமையாகவும் மட்டுமே முன்னெடுக்கிறார். மொழி வெறியாக அல்ல.
அக்கம் பக்கத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடக்க வழி செய்கிறார். அதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் அந்த விஷயம் கவனம் பெறுகிறது. சில மடாதிபதிகள் தமிழில் அர்ச்சனை கூடாது என்கிறார்கள். முதலமைச்சரும் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று கேட்பவர்கள் பண்பாடு அற்றவர்கள் என்று பொதுவெளியில் விமர்சிக்கிறார். இதைக் கண்டு மனம் வேதனையுறும் சுவாமி அம்பேத்கர் 63 தமிழறிஞர்களை அழைத்துகொண்டு முதலமைச்சரைச் சென்று சந்திக்கிறார்.
அப்பர் அடிகளே வடமொழியும் தென் தமிழும் மறை நான்கும் ஆனவன் காண் என்று பாடியிருப்பதை எடுத்துச் சொல்கிறார். வைணவக் கோவில்களில் ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்கள் காலகாலமாக முழங்கிவருகின்றன. தமிழ் அர்ச்சனையை ஆரம்பித்துவைத்ததே சிவனும் திருமாலும்தான். அவர்களைப் பற்றிப் பாடப்பட்டிருக்கும் பாடல்கள் எல்லாமே அர்ச்சனை மந்திரங்களே என்றெல்லாம் எடுத்துச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிறார். சிதம்பரம் கோவிலில் முதலமைச்சர் உடனிருக்க சுவாமி அம்பேத்கர் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
தாய்மொழி, சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் அர்ச்சனை, பிற மந்திரங்கள் சொல்லப்படவேண்டும். ஒரு நாள் தாய்மொழி, மறு நாள் சம்ஸ்கிருதம் என்றோ காலையில் தாய் மொழி, மாலையில் சமஸ்கிருதம் என்றோ ஒவ்வொரு கோவிலும் இதை தமது பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடத்திக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.
அதுபோல் வீடுகளில் நடத்தப்படும் கணபதி ஹோமம், திருமணம் என அனைத்து சுப காரியங்களுக்கும் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களின் பொருளை அச்சிட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். அந்தந்த விசேஷங்களைச் செய்பவர்கள் அதை முன்கூட்டியே படித்துக்கொண்டு மந்திரங்களை பொருள் புரிந்து சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
ஒவ்வொரு கோவிலிலும் ருத்ரம், சமகம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்கள் மூலமாக சமஸ்கிருத வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
(தொடரும்)
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.
அருமையான சிந்தனை.கருத்து.அனைத்து இந்துக்களும் இந்து இயக்கங்களின் தலைவா்களும் படிக்க வேண்டிய ஞானதீபம்.
கதை சூப்பர்