இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.
சக்தி
இன்பம்-துன்பம், அறிவு-அறியாமை போன்ற இருமைகள் போல, இருப்பு-இல்லாமை என்றவோர் இருமை கிடையாது என்று கூறி, அதைப் பின்பு அலசுவோம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். அதை இப்போது பார்ப்போம். உண்மையில் இருமைகள் என்று மேலே கூறப்பட்டவைகளும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கும் என்றாலும், இருப்பு என்பது மற்றவைகளை விடத் தனித்தன்மை கொண்டது. ஏனென்றால் ஒன்று இல்லை என்பது எப்படித் தெரிகிறது? அதைக் கூறுவதற்கு ஒருவன் இருந்தாகவேண்டும் அல்லவா? அதாவது இல்லை என்று கூறுவதற்கு ஓர் இருப்பு அவசியம் என்றால், இருப்புக்குத் தானே முதலிடம் கொடுத்தாக வேண்டும்? இருக்கும் ஒன்று நிச்சயம் தன்னை இல்லை என்று மறுக்க முடியாது. ஆகவே இருப்பது ஒன்றே உண்மை என்றாகிறது. அதுவே ‘சத்’ என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் ஒன்று, மற்றது என்றும், உலகம் என்றும் தன்னைச் சுற்றி இருப்பவைகளைக் காண்பதன் அடிப்படையில்தான் வேதமே உருவாகியிருக்கிறது. அவை அனைத்தும் ஒரே சக்தியின் பல உருவங்கள் என்பதையே கவிஞர் பாரதிதாசனின் “எங்கெங்கு காணினும் சக்தியடா” என்ற வரியும் பிரதிபலிக்கிறது.
இந்த ரிக் வேதத் தொடரில் இதுவரை நாம் பல இயற்கை வடிவங்களையும், அவைகளின் தெய்வீக உருவகங்களையும் கண்டோம்; அவைகளின் பின்னணியில் இருக்கும் தத்துவங்களையும் அறிந்துகொண்டோம். எவ்வாறு உடலுக்கு சுவாசம் எனும் மூச்சு நம் உயிர் இருப்பதைக் காட்டுகிறதோ, அதேபோல அனைத்து சீவராசிகளின் இயக்கத்திற்குப் பின்னாலும் ஒரு பராசக்தி இருக்கவேண்டும் என்ற கருத்து இயல்பானதே. அத்தகைய பராசக்தியை பெண்ணுருவாக நினைத்தது, இயற்கையில் உருவாகும் அனைத்தும் பெண்கள் கருகாத்து, வளர்த்து ஈன்றவைகள் என்பதே முதற் காரணம். அவ்வாறான சக்தியின் கருணை இல்லாமல் வேறெந்தக் கடவுளும் தன் ஆதிக்கத்தை எவரிடமும் காட்ட இயலாது என்பது ஆன்மிக வழிக்கும் பொருந்தும்.
ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, அந்தச் சக்தி வெளிப்புறம் நோக்கி இயங்கும் ஒருவனது இந்திரியங்கள் உட்புறம் நோக்கித் திரும்புவதற்குண்டான பல வசதிகளையும் ஏற்படுத்தித் தரும். இதைத் தனது தனிப்பட்ட முயற்சியால் ஒருவன் சாதிக்க முடியாது. ஏனென்றால் முயற்சி என்பது ஒருவனது எண்ணங்கள் சார்ந்த மனத்தினால் தொடங்கி நடைபெறுவது. அது உலகியலுக்குப் பொருந்தும்; இறையியலுக்குப் பொருந்தாது. ஏனென்றால் இறையியலின் முதல் அடியே எண்ணங்கள், மனம் அற்று இருக்கும் நிலையாகும். அதற்கு தன்னைத் தனித்துக் காட்டும் எதையும் தவிர்த்து, தனது என்றிருக்கும் எல்லாவற்றையும் அனைத்துக்கும் மூலமான பராசக்தியிடம் அர்ப்பணித்தல் தேவை. தான் இயங்குகிறேன் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு இதுவொன்றே வழி.
இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம். ஆற்றின் நீர்ப்பெருக்கு எவ்வளவு இருந்தாலும், எத்தனை ஆறுகள் கடலில் கலந்தாலும் கடல் எப்போதும் போல் கலங்காது இருப்பதால், நதிகளைத் தனித்து இருக்கும் சீவன்கள் போல எண்ணி, பரந்து இருக்கும் கடலைக் கடவுள் போல உருவகித்து வழிபட்டனர். அதனால் நீரும் அவர்கள் வழிபாட்டில் ஓர் அங்கம் ஆயிற்று. வேத காலத்து நாகரீகமும் நதி தீரங்களில் செழித்து வளர்ந்தது. இவ்வாறாக ரிக் வேதம் மட்டுமே குறிப்பிடும் சரஸ்வதிக்கு வருகிறோம்.
இருக்கும் பிரம்மம் ஒன்றே என்று கூறிவிட்டு, இயற்கையில் காணப்படும் பலவற்றையும் உருவகப்படுத்தி அக்னி, இந்திரன், சூர்யன், சோமன் என்ற நான்கும் அதன் முகங்கள் என்றதைப் போல, அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்.
தெலுங்கானா-மஹாராஷ்டிரா எல்லையில், கோதாவரி நதிக் கரையில் ‘பாஸர்’ என்ற சிற்றூரில் சரஸ்வதி கோவில் ஒன்று இருக்கிறது. முனிவர் வசிஷ்டர் அங்கு ஒரு வருடம் தங்கியதால் அந்த ஊருக்கு பாஸர் என்ற பெயர் வந்ததாம். வசிஷ்டர் நதியில் குளித்துவிட்டு வரும்போது தினமும் ஒரு கைப்பிடி மண்ணைக் கொண்டுவந்து ஒரே இடத்தில் சேர்ப்பிக்க, அந்த உருவத்தையே சரஸ்வதி என்று வணங்குகிறார்கள். இப்படித்தான் அந்தக் கோவில் உருவாயிற்று. மண்ணால் ஆன அந்த உருவத்திற்கும் ஓவியர் ரவி வர்மாவின் சரஸ்வதி வடிவத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் கல்வி தொடர்பான எந்தப் பிரார்த்தனைக்கும் அங்கு கூட்டம் அலை மோதும். அதுதான் சரஸ்வதிக்கும் அறிவுக்குமான தொடர்பு என்பதை நாம் வேத காலத்தில் இருந்து இன்று வரை காணவேண்டிய அம்சம். மேலும், எவ்வாறு அறிவு ஒருவரிடம் மறைந்து இருக்கும் திறனோ, அதேபோல சரஸ்வதிக்கும் கோவில் என்று பரவலாக நாட்டில் கிடையாது.
வேத காலத்தில் அவர்களது கல்விச்சாலைகள் நதிக் கரையிலும், அங்கு ஓங்கி வளர்ந்திருந்த மரத்தடியிலும் இயற்கையோடு ஒட்டி நடந்துகொண்டிருந்தன. அதனால் அந்த நதியையும் அதே பெயரிட்டு அவர்கள் அழைத்தனர். அந்த நதியின் நீரும் அவர்களது உலக வாழ்வை வளம்பெறச் செய்தது. சரஸ்வதியும் அறிவை வழங்கி மேலும் வளம்பெறச் செய்தாள். அதனால் அவர்கள் நதியையே தெய்வமாகத் தொழுதார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் படர்ந்து வளர்ந்த ஆலமரங்கள் தங்கள் விழுதுகள் மூலம், கல்வியின் கிளைகளும் வேர் போலப் படர்ந்து தொடர்ந்து வளரும் என்பதைக் காட்டிக்கொண்டிருந்தன. அதாவது அறிவுக்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை என்பதற்குச் சாட்சி போல நின்றுகொண்டிருந்தன.
புலன்கள் வெளிப்புறம் நோக்கி உலக விஷயங்களைப் பற்றி இருந்தால் பொது அறிவும், உட்புறம் நோக்கி தன்னைப் பற்றி இருந்தால் பேரறிவும் பெற முடியும் என்பதை அறிந்தார்கள். எதுவாக இருந்தாலும் சரஸ்வதியின் அருளால் அது நடைபெறுகிறது என்பதை உணர்ந்து, தனக்கு வழி காட்ட வேண்டினார்கள். சரஸ்வதி நதி தீரத்தில் கற்றறிந்த ரிஷிகள் தாங்கள் அவ்விடத்தை விட்டு அகலாமல் இருப்பதற்கும், நதி வற்றாது இருந்து தங்களைக் காப்பதற்கும் வேண்டிக்கொண்டார்கள். ஆனால் காலப்போக்கில் அவ்விரண்டுமே நடந்து, நதியின் ஓட்டமும் திசை மாறியது; அவர்களும் கங்கை நதி தீரத்திற்குப் புலம் பெயர்ந்தனர்.
நான், எனது என்ற எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, பேரருளின் துணையை நாடுவதற்கான மனநிலையைப் பெறுவதற்கே ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறோம்; அதுவே வாழ்வின் குறிக்கோள் என்றும் அவர்கள் தெளிந்தனர். அதுவே நம் தினசரி நடவடிக்கைகளை நிர்ணயிக்கவேண்டும் என்று கருதினார்கள். இவ்வாறாகத் தன்னையும், தனது எண்ணங்களையும் தியாகம் செய்வதன் உருவகமாகத்தான் அடுத்த பெண் தெய்வமான சீதா தேவிக்கு நாம் அறிமுகம் ஆகிறோம்.
“அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு” என்பார் ரமணர். அது பேரறிவாகும். நம் எண்ணங்களின்படி செயல்பட்டு, நம் செய்கைகளால் அறியப்படும் அனைத்தும் உலக வாழ்க்கைக்கு உகந்த சிற்றறிவு எனப்படும். எங்கு எண்ணம், மனம் இவை எல்லாம் அடங்குகிறதோ, அங்கு எதிர்பார்ப்புகளும் இருக்காது; வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், அறிவு-அறியாமை, நான்-நீ என்ற எந்த இருமைகளும் இருக்காது. உள்ளதை உள்ளபடி உணரும் நிலை அது என்பதால், தன் உண்மை இயல்பு அப்போது தானாக வெளிப்படும். அதை உணரும் வரை, நாம் காண்பதெல்லாம் நம் மனக் கண்ணாடி மூலம் நாம் காண்பது மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது நாம் சேகரித்து வைத்துள்ள வாசனைகளைப் பொறுத்து அவை அமையும். ஆக மனமும், எண்ணமும் ஒழிவதற்கு நமக்குத் தேவையானது இறை அருள். அதைப் பெறுவதற்கு நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். அதுவரை நம் முயற்சிகள் தொடரவேண்டும். இவ்வாறாகப் பண்பட்ட மனம் நன்கு உழப்பட்ட நிலத்தைப் போன்றது.
அவ்வாறான உழு நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சீதையைப் போலவே, பண்பட்ட மனத்திற்கு உண்மை புலப்படும். அது நம்முடைய உச்ச நிலை என்றால், அதற்கு முன் நாம் ஆழமாக உழுது மனதைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்கு நம் அகங்காரத்தை அடியோடு கைவிட்டிருக்க வேண்டும். எதற்கும் அடி பணிந்து, அனைத்தையும் தியாகம் செய்யும் மனோநிலையில் உள்ள சீதா தேவி போல இருக்க வேண்டும். இது வேத காலத்து சீதா.
அவரது மனப் பக்குவத்தால் அவர் அடையும் ஞானத்தையே, சூர்யன் அவரை அடைவதாகக் கூறப்படுகிறது. அதாவது அவருக்கு ஒளி பிறக்கிறது. எப்போது ஒருவன் சீதையின் நல்ல குணங்களான அடக்க, ஒடுக்கத்தை இழக்கிறானோ, அப்போது அவனை ராக்ஷச குணங்கள் கைப்பற்றுகின்றன. பின் அவனுக்கு ஞானம் பிறக்கும்போதுதான் அந்த கெட்ட காலத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது. பிற்காலத்தில் வந்த இராமாயண சீதாவின் கதையும் இதேபோலத் தொடர்வதைப் பார்க்கலாம். ஆக மன அழிவு ஏற்படுவதற்கு முதல் தகுதி தியாக மனப்பான்மையே என்பதை வேத காலச் சீதாவின் குணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இறுதியாக வரும் பெண் தெய்வம் ரோதஸி என்பவர் ஆவார். இவர் இடி-மின்னல் ஆகிய இயற்கை நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டவர். ரோதஸி என்றால் ஆகாயம்-பூமி என்று அர்த்தம்; அதாவது இடி, மின்னல் போல அவ்விரண்டையும் இணைப்பவர் என்று கூறலாம். வேத காலத்துக் குடியிருப்பு நிலைமைகளைக் கவனத்தில் கொண்டால் இவரைப் பற்றிக் கூறுவதை எளிதில் புரிந்துகொள்ளலாம். ரோதஸி மிகவும் சக்தி வாய்ந்தவர், சூரியன் மறைந்ததும் அதே ரதத்தில் ஏறி தலைவிரி கோலமாகப் பவனம் வருபவர், கண்ணைப் பறிக்கும் ஒளி மிக்கவர், அவர் வருகையால் இயற்கை வளங்கள் செழிக்க உதவுபவர் என்று வேதம் கூறும் விளக்கங்கள் எல்லாம் புரிந்துகொள்ளக்கூடியதே.
இவ்வாறாக இயல்பானவைகளச் சுட்டிக்காட்டி, அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த தத்துவங்களை எடுத்துக்காட்டியது ரிக் வேதம். எழுத்து வடிவத்தில் உலகத்தோருக்குக் கிடைத்த முதல் நூல் என்ற பழம் பெருமைக்கு உரியது என்பதோடு, அதன் ஸ்லோகங்கள் அன்று உச்சரிக்கப்பட்டவாறே தற்காலத்திலும் உச்சரிக்கப்படுகின்றன என்ற பெருமையையும் கொண்டது என்பதைக் கேட்கும்போது, ஒவ்வொரு பாரதக் குடிமகனும் வேதம் கூறும் தெய்வங்களுக்கு முதலில் நன்றி கூறவேண்டும்.
ஓம் தத் சத்.
(முற்றும்)
எஸ்.ராமன் Ji – thank you for giving the readers like me a glimpse of the divine nectar; I am stunned and speechless;