பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், ஹிந்துகளின் கலாச்சார நம்பிக்கையின் தொல்லடையாளமாகவும் பொலிவுற்று விளங்கிய சோமநாதத்தை ரத்த சகதிகளுக்குள் தள்ளி, அதன் கருவறையை பெயர்த்து ஒப்புயர்வற்ற மூலலிங்கத்தை சிதைத்து, அதனை இருகூறாக்கி தங்களது நித்திய புழக்கத்தின் படிகற்களாக அமைக்கும் அளவிற்கு அந்த வெறி அடியாழத்தில் இருந்த ஒரு மூர்க்கப்படை, இந்த நாட்டின் ஜீவஒளியை அணைக்க முயன்று இன்றுடன் ஆயிரமாண்டு நிறைவடைந்துள்ளது..
துருக்கிய படையெடுப்பாளனும், சிலையழிப்பானுமான கஜினி முகமதுவின் கொடூரமான தாக்குதல் பாரதத்தின் பல்லாயிரமாண்டு தர்மத்தை, தேசத்தின் பொருளியலை வீழ்த்துவதாகவும், அது அவர்களுடைய மதக்கடமை என்று நம்புகிற கோஷமாகவும் இருந்தது.
கிட்டத்தட்ட 2000 பிராமணர்கள், 500 நடன மாந்தர்கள், 300 இசைக்கலைஞர்கள், 300 நாவிதர்கள் நித்தியமாக சோமநாதர் கோவிலில் பணிபுரிந்ததாக தரவுகள் சொல்கின்றன.10000 கிராமங்கள் சோமநாதர் கோவிலுக்கு உரிமையுடையதாக இருந்துள்ளது.பல நூற்றாண்டுகளாக தாங்கள் சேர்த்த செல்வங்களையும், மதிப்பையும் மக்கள் சோமநாதத்தின் காலடியில் வைத்திருந்தனர்.கத்தியவாரின் கடல்புறத்தில் ஒலிக்கும் பேரலை சிந்துவெளி நாகரிகத்தின் ஆதார ஒளியாக பிரகாசித்தது சோமநாதர் ஆலயத்தில்..
ஈவு இரக்கமில்லாமல் பொயு 1001 ல் தொடங்கி பொயு 1027 வரை தொடர்ச்சியாக பெஷாவர் முதல் மதுரா வரை இந்துக்களின் செல்வத்தை சூறையாடுவது, அவர்களின் புனித பிம்பங்களை அழிப்பது, கோவில்களை இடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த ஒரு நாசகார சக்தியின் பயங்கரவாதத்திற்கு எதிராக, நெஞ்சுரத்துடன் நின்று, நம்மை மூழ்கடித்துவிடாமல் நெருப்பு வட்டமொன்றை இட்டு வைத்து நாமெழுந்த ஆயிரமாவது வருடத்தை, குஜராத் சோமநாதர் கோவிலில் ஜனவரி 11, 2026 அன்று “சோமநாத் ஸ்வாபிமான் பர்வ – சௌர்ய யாத்ரா” என பிரமாண்ட விழாவாக நடத்தி முடித்துள்ளனர்.இதன் பொருள், “சோமநாதத்தின் சுயமரியாதைத் திருவிழா – அஞ்சாமையின் திருப்பயணம்” என்பதாகும்.
இந்த யாத்திரையில் 108 குதிரைகளுடனும், பரிவாரங்களுடனும், வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் ஒலிக்க, விண்ணை முட்ட இறைநாமம் ஒலிக்க மக்களின் வெற்றிக் களிப்புடன் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும்.அங்கே அவர் ஆற்றிய உரை மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது..
இந்தியா முழுக்க மன்னர்களுக்குள் மோதல் போக்கு, அதிகார வெறி இருந்தது, தீரா காழ்ப்பு இருந்தது.ஆனால் அனைவருக்குமே இமயமும், கங்கையும் இங்குள்ள கோவில்களும், புண்ணிய நதிகளும் புனிதமாகவே இருந்தது.இந்த தர்மத்துக்கு மாறாக யாரும் செயல்படவில்லை.ஆனால், கோவில்களையும், இந்த பண்பாட்டையும் அழிக்கும் நோக்கத்துடன் வந்த கஜினி போன்ற மதவெறி மூர்க்கமேறியவர்களின் கொடூரத்தை வெள்ளையடித்த வரலாற்றாய்வாளர்கள், அதற்கு தடவிக்கொடுத்த கீழ்த்தர அரசியலை எல்லாம் பிரதமர் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்..
கஜினியின் தாக்குதலுக்கு பிறகும் சோமநாதம் எழுந்தது.பொயு 12 ம் நூற்றாண்டில் மன்னர் குமாரபாலர் பிரமாண்ட கோவிலை இறைவனுக்கு உருவாக்கினார்.அது மீண்டும் பொயு 13 ல் அலாவுதின் கில்ஜியால் தாக்குதலுக்கு உள்ளானது.பொயு 14 ல் முசாபர் கான், பொயு 15 ல் அகமது ஷா அவனது பேரன் முகமது பெகடா வரை தொடர்ச்சியாக சோமநாதத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் முகமது பெகடா அதை ஒரு மசூதியாக மாற்றப் பார்த்த கொடூரம் வரை பிரதமர் மோடி அவர்கள் தெளிவாக தனது உரையில் பதிவு செய்துள்ளார்.இறுதியாக பொயு 17 – 18 ஆம் நூற்றாண்டில் ஔரங்கசிப் தாக்குதல் நடத்தி அதை மசூதியாக மாற்றப் பார்த்ததையும் அதை அகல்யாபாய் ஹோல்கர் முறியடித்ததையும் பதிவு செய்துள்ளார்..
‘ம்ருத்யுஞ்ஜய‘ என போற்றப்படும் சிவபெருமானை போலவே அவரது பூலோக இல்லமான சோமநாதர் ஆலயமும், ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான மத பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பிறகும் காலத்தால் அழிக்க முடியாததாக உள்ளது. அதன் கொடி விண்ணை முட்டி பறக்கிறது, இதை அழிக்க முற்பட்டவர்கள் வரலாற்றின் சில பக்கங்களில் முடங்கிக் கிடக்கின்றனர் என பிரதமர் புகழ்ந்துரைத்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சோமநாதர் ஆலயத்தை மறுநிர்மாணம் செய்வது பாரதத்தின் வரலாறு – பண்பாடு – தேசிய உணர்ச்சியின் அடையாளத் தேவையாக இருந்தது.அதை உணர்ந்து திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்தின் மறுநிர்மாணத்தை 1947 ல் துவங்கினார் அந்த பணி 1951 ல் முடிக்கப்பட்டு குடியரத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.ஆனால், அன்றைய பிரதமர் நேரு அதை விரும்பாமல் எழுதிய கடிதங்கள் உள்ளன.இந்தியா அடக்குமுறைகளில் இருந்து மீண்டாலும், அதன் சதிச்சுவடுகள் இங்கே ஆழமாக பதிந்துள்ளன என்பதை காட்டிய நிகழ்வுகள் இவை.
சோமநாதர் ஆலயம் மறுநிர்மாணம் செய்யப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழாவும், தாக்குதலில் இருந்து மீண்டெழுந்த 1000 வது ஆண்டு விழாவும் ஒன்றாக 2026 ம் வருடம் ஒன்றாக, அதுவும் பிரதமர் நரேந்திர மோடி பிரதமாக இருக்கும் காலத்தில் வந்தது வரலாற்று சிறப்புமிக்கது.
கஜினி தொடங்கி, தொடர்ச்சியாக சோமநாதர் ஆலயத்தின் மீதான தாக்குதலை எதிர்த்து நின்று இன்னுயிர் நீத்த வீரபுத்திரர்களை நினைவுகூர மறந்த ஒரு சமூகம், இந்த தாக்குதல்களை தங்கள் கீழ்த்தர அரசியலின் மூலம் வெள்ளையடிக்க பார்ப்பது கேவலத்தின் உச்சம். அன்று வாள் கொண்டும், இன்று பல்வேறு சதிகளின் வழியேயும் இந்த பண்பாட்டை சீர்குலைக்க பார்க்கும் சக்திகளை நாம் ஒருங்கிணைந்து நின்று விரட்டியடிக்க வேண்டுமென அறைகூவல் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.
இந்தியாவின் ஆத்மாவை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது.அதை அழிக்க நினைப்பவர்கள் வீழ்வார்களே ஒழிய ஒரு போதும் நமக்கு வீழ்ச்சியில்லை.சோமநாதர் ஆலயத்தின் எழுச்சி மத அரசியல் இல்லை, இது நாகரிக சமூகம் தமது அடையாளத்தை காக்கும் புரட்சி.வரலாற்றில் நமது வலிகளையும், வெற்றிகளையும் ஒரு போதும் மறைக்கக் கூடாது.நாம் பலவீனமானவர்கள் இல்லை; மீண்டெழும் சக்தி படைத்தவர்கள்.ஆன்மீகமும், வளர்ச்சியும் இணை கோடுகளாக சென்றால்தான் நவீன இந்தியாவை உருவாக்க முடியும்.இதில் எதிர்கால இந்தியாவிற்கு வழிகாட்டியாக கடந்தகால நினைவுகளையும், எதிர்கால தன்னம்பிக்கையும் ஒருங்கே பெற்றது சோமநாதர் ஆலயம் என்பது மட்டுமே நிஜம்.
ஹர ஹர மகாதேவ்!![]()
ஜெய் ஹிந்த்!
(சுந்தர்ராஜ சோழன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
