பழந்தமிழ் இலக்கியங்களில் மகாலக்ஷ்மியைப் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள் தொடங்கி ஏராளமாக உள்ளன. வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாக, ஶ்ரீ என்ற மந்திரத்தை நேரடியாகக் குறிக்கும் ‘திரு‘ என்ற இனிய சொல் தமிழில் உள்ளது. ஆயினும், திருமகளை நேரடியாக விளித்துப் போற்றக் கூடிய துதிப்பாடல்கள் எனக்குத் தெரிந்து எதுவும் பழைய நூல்களில் இல்லை.
பராசக்தியைக் குறித்து அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் போன்ற சில உண்டு. கலைமகளைக் குறித்து சரசுவதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை மற்றும் பல காவிய நூல்களின் தொடக்கத்தில் விநாயகர் துதிக்கு அடுத்து கலைமகள் துதி உண்டு. தேவி வழிபாடு தமிழ் நாடெங்கிலும் பல வடிவங்களில் மிகப் பரவலாக இருந்தாலும் சைவம், வைணவம் என்ற இருபெரும் மரபுகளைச் சார்ந்தே அது இயங்கியது. சாக்தம் என்ற சமயநெறி ஒப்பீட்டில் குறைவு என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்தக் குறையைத் தீர்ப்பதற்கென்றே சரஸ்வதியின் பெயர் பூண்ட நமது மகாகவி சில அழகிய பாடல்களை எழுதியிருக்கிறார். சரஸ்வதியைக் குறித்து பாரதியார் பாடிய ‘வெள்ளைத் தாமரை’ பாடல் மிகவும் பிரபலம். ஆனால் அதே போன்று லக்ஷ்மியைக் குறித்துப் பாடிய “லக்ஷ்மி தேவி – சரண் புகுதல்” என்ற கீழ்க்காணும் அருமையான பாடல் ஏனோ பிரபலமாகவில்லை.
வறுமையும் உள்ளச்சோர்வும் சோம்பலும் முயற்சியின்மையும் கவிஞரைப் பீடித்திருந்த தருணத்தில் அவற்றை அகற்றி நல்லொளி தரவேண்டும் என்று திருமகளை இறைஞ்சும் பாடல் இது.
புனிதமான வேதப் பிரார்த்தனையான ஸ்ரீசூக்தத்தில் உள்ள ‘அலக்ஷ்மீம் நாஶயாம்யஹம்’ ‘ஹிரண்யவர்ணாம் ஹரிணீம்’ ‘தாம் பத்மினீமீம் ஶரணமஹம் ப்ரபத்யே’ ‘கீர்த்திஶ்ச மணினா ஸஹ’ போன்ற மந்திரங்களின் அர்த்தங்களை எல்லாம் இதில் கொண்டுவந்திருக்கிறார்.
திருமகள் வாசம் செய்யும் இடங்கள் என்று நமது மரபிலும் பண்பாட்டிலும் போற்றும் விஷயங்களையெல்லாம் குறிப்பிடுவதோடு, ‘பாரதி சிரத்தினிலும்’ என்று அற்புதமாகத் தனது பெயர் முத்திரையையும் பதித்திருக்கிறார்.
இன்று ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம். இந்தத் திருநாளை பக்தியுடன் கொண்டாடும் அனைத்து இந்துப் பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் வாழ்த்துக்கள்.
லக்ஷ்மி தேவி – சரண் புகுதல்
மாதவன் சக்தியினைச் — செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதுமிவ் வறுமையெலாம் — எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை — அன்னை
மாமக ளடியிணை சரண்புகுவோம். 1
(செய்ய – சிவந்த; சோர்மதி – சோர்வடையும் அறிவு)
கீழ்களின் அவமதிப்பும் — தொழில்
கெட்டவரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப்போல் — செய்யும்
முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்
ஏழ்கட லோடியுமோர் — பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக் கொடு நோய்தான் — வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ! 2
பாற்கட லிடைப் பிறந்தாள் — அது
பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்
ஏற்குமோர் தாமரைப்பூ — அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்
நாற்கரந் தானுடையாள் — அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்
வேற்கரு விழியுடையாள் — செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3
நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தரிலும் — பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தந் தோளினிலும் — உடல்
வெயர்த்திட வுழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் — ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 4
(வெயர்த்திட – வியர்த்திட)
பொன்னிலும் மணிகளிலும் — நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் — செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் — மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி — அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம். 5
(பன்னி – பேசி)
மண்ணினுட் கனிகளிலும் — மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் — உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் — நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை — எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6
(பாவை – சிற்பம்)
வெற்றிகொள் படையினிலும் — பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் — நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை — நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் — அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.
(விநயங்கள் – பணிவுகள்; நற்றவ நடை – நல்ல தவமுடைய ஒழுக்கம்; தேமொழி – இனிய மொழி)
