ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 2

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர்

மதுரபாரதி

விலங்குகளை எதிர்கொள்

தனக்குள் உணர்ந்த தத்துவம்

“ஒரு தத்துவத்தைப் பரப்பப் பயின்றவர்கள் அதைத் தமக்குள்ளே உணர்வதே இல்லை, ஏனென்றால் அவர்கள் சமயத்தை அறியமாட்டார்கள். ஆனால் யார் உலகின் பின்னே அலையாமல் கடவுளை அறிவதில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு பெயரும், புகழும் தமது தூய்மையை விலையாய்க் கொடுத்து வாங்கியது என்பது புரியும். முழுமையான தன்னலமின்மையும், மொத்தமாகவே இலாபத்தை விலக்குதலும் ஆகிய இலட்சியங்களிலிருந்து அவர்களை (பெயரும், புகழும்) வெகுதூரம் வெளியே கொண்டுபோய்விடுகிறது.”

–விவேகானந்தர், திருமதி ஹேல் அம்மையாருக்கு எழுதிய கடிதத்தில் (ஆகஸ்ட் 23, 1894)

ஆண்டு 1891. விவேகானந்தர் இன்னும் அமெரிக்காவுக்குச் சென்று உலகத்தின் பார்வையைத் தன்வசம் கவராத நேரம். தனியனாக பாரதத்தைச் சுற்றி வந்து இங்கிருக்கும் மக்களை, அவர்கள் நிலைமையை நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று புறப்பட்டிருக்கிறார். குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்கள் (தன் தோழர்கள்) யாரும் தன்னைத் தொடரக்கூடாது என்று பணித்துவிட்டார். கையாலே காசைத் தொடுவதில்லை என்று உறுதிபூண்டு விட்டார். யாரேனும் இரயில் சீட்டு வாங்கிக்கொடுத்தால் போவார். இல்லையென்றால் நடராஜா சர்வீஸ்தான். அந்த வேளைக்கு உணவு தரலாம். கையில் கட்டி எடுத்துச் செல்லமாட்டார். (இதனால் தொடர்ந்து ஐந்து நாட்கள்கூடச் சாப்பிடாமல் இருந்ததுண்டு அவர் சொல்லியிருக்கிறார்.)

பரிவிராஜகராய் பரமன்கையில் ஊன்றுகோல், கமண்டலம். துணியில் கட்டிய கீதை. இவ்வளவுதான் அவரது உடைமைகள். ஆங்கிலம், வங்காளம், வடமொழி, உருது இவற்றில் பிளந்துகட்டிவிடுவார். கவிதையா, தத்துவமா, மதமா, சமூகவியலா – எதைப்பற்றியும் பேசலாம். சொந்தக் கருத்துக்களும், மேற்கோள்களும் மழையாகக் கொட்டும்.

ஒருமுறை காசி(வாரணாசி)யில் காளி மாதாவைத் தரிசித்தபின் ஒரு புறம் பெரிய குளமும், மறுபுறம் உயர்ந்த மதிலும் கொண்ட பாதை வழியே செல்ல நேர்ந்தது. ஒரு குரங்குப் பட்டாளம் இவரைச் சூழ்ந்துகொண்டது. அவரை அவ்வழியே போகவிடாமல் வழிமறைக்கின்றன. நடந்து செல்லும்போது காலைப் பிடிக்க முயன்று கிறீச்சிட்டு மிரட்டுகின்றன.

எதிரிகளை எதிர்கொள்ளும் எம்பிரான்

குரங்குகள் அருகில் நெருங்க அவர் நகர்ந்தார். இன்னும் நெருங்கவும் ஓட முயன்றார். ஓடினால் அவரைக் கடிக்கின்றன. தப்பமுடியாது என்கிற நிலையில் ஒரு சன்னியாசியின் குரல் கேட்டது: “மிருகங்களை எதிர்கொள்!”. இந்த வார்த்தைகள் அவரைத் தெளியச் செய்தன.

கோபங்கொண்ட குரங்குகளைத் துணிச்சலோடு திரும்பிப் பார்த்தார். அவர் இப்படிச் செய்ததும் அவை பின்வாங்கின. ஓடிப் போயின. அவர் குரல் கொடுத்த சன்னியாசியை வணங்கினார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் நியூயார்க் நகரச் சொற்பொழிவில் இதை நினைவு கூர்ந்து அவர் சொன்னார்: “வாழ்க்கை முழுமைக்கும் இது ஒரு பாடம். நாம் ஓடுவதை நிறுத்தினால், அந்தக் குரங்குகளைப் போலவே துன்பங்களும் பின்வாங்கிவிடுகின்றன. சுதந்திரம் பெறுவதென்பது, இயற்கையை வெல்வதன்மூலம்தான், ஓடி ஒளிவதன்மூலம் அல்ல. கோழைகளுக்கு வெற்றி கிடையாது. அச்சத்தையும், துன்பத்தையும், அறியாமையையும் ஓடவைக்கப் போரிட்டே ஆகவேண்டும்”

இடும்பைக்(கு) இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

மேலும் வரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *