இந்து மகத்துவக் கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.

மனம் உயர்ந்திட வாழ்வுயரும் – தனி
மனிதன் உயர்ந்திடக் குலம் உயரும்
இனம் உயர்ந்திட நாடுயரும் – இனி
என்றும் உயர்வென்று கும்மியடி.

வீரனவன் வாஞ்சி நாதனுடன் – வெற்றி
வில்வித்தை தேர்ந்தவன் துரோணகுரு
தீர விவேகானந்தன் உதித்த மதம் – இதை
தினந்தினம் போற்றியே கும்மியடி.

பார்புகழ்நோபல் பரிசுவென்ற – ராமன்,
பாடரிய மேன்மைச் சந்திரசேகர்
ஓர்தனி மேதை இராமானுஜம் – இவர்க்(கு)
உறவினர் நாமென்று கும்மியடி.

முத்துராம லிங்கத் தேவருடன் – அய்யா
வைகுண்டர், ரெட்டியா பட்டியாரும்
தத்துவச் செம்மல்கள் பற்பலரும் – வந்த
தனிமதம் இதுவெனக் இம்மியடி.

இசைக்குயில் எம்எஸ்சும் ரவிவர்மாவும் – கொடி
ஏந்தற் குயிர்தந்த குமரனுமே
வசையறு வ.உ.சிதம்பரனார் – இந்து
மாமக்கள் என்று நீ கும்மியடி.

தொழுநோய் கொண்டான் தொழத்தக்கவன் – தூயோன்
சுப்பிர மணிய சிவாவுடனே
வழுவிலா பரலி.சு. நெல்லையப்பர் – வந்த
மகத்துவம் பாடியே கும்மியடி.

பட்டி தொட்டிகள் மடாலயங்கள் – சுற்றிப்
பழந்தமிழ்க் காவியம் பிழைக்கவைத்தே
எட்டாப் புகழ்கொண்ட தமிழ்த்தாத்தா – அவன்
இந்துதான் என்றுநீ கும்மியடி.

ஆயிரமாண்டுகட் கோர்முறையே – வரும்
அற்புதனாம், பொங்கும் அனல்குழம்பைத்
தோய்த்துக் கவிசெய்த பாரதியும் – எங்கள்
தொல் மதத்தோனென்று கும்மியடி.

எவர்க்கும் இளைத்தவர் நாமில்லையே – இங்கு
எவரையும் இழிப்பது நாமில்லையே
தவறாத மானுட நேயத்தினால் – இந்து
தரணிவெல்வான் எனக் கும்மியடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *