கம்பராமாயணம் 11 (Kamba Ramayanam – 11)

நாட்டுப் படலம் (36-40) Canto of the Country (36-40)

ஈகையும் விருந்தும் – Charity and Hospitality

பெருந்தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,

வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,

விருந்தும், அன்றி, விளைவன யாவையே? 36

சொற்பொருள்: பொருந்து செல்வம் நிலைபெற்ற, எப்போதும் நீங்காத செல்வம். பூத்தலால் உண்டானதால். வைகல் அன்றாடம், தினந்தோறும். விளைவன நிகழ்வன, நேரும் செயல்கள்.

பெரிய கண்களையும் இளம்பிறையைப் போன்ற நெற்றியையும் உடைய பெண்களுக்கு எல்லாம், நிலைபெற்ற செல்வமும், கல்வியும் கிடைக்கப் பெற்றிருந்த காரணத்தால், வாட்டத்துடன் தமது இல்லங்களுக்கு வருவார்களுக்கு ஈதலும், விருந்து பரிமாறலும் தினந்தோறும் நிகழ்ந்தது என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல! அங்கே இதைத் தவிர வேறு என்ன நிகழலாகும்!

மிக முக்கியமான குறிப்பு ஒன்றைக் கவி இங்கே பேசுகிறான். பெண்களுக்கு முழுமையான கல்வி இருந்தது என்பதும், ‘பொருந்து செல்வம்என்று அவன் அழுத்தந் திருத்தமாக அடிக்கோடிட்டுச் சொல்வதைப்போல், பெண்களுக்கென்று தனிப்பட்ட செல்வவளம் இருந்தது; அதன் காரணமாக அவர்களால் தம் இல்லத்தை நாடி வரும் வறியவர்களுக்கு ஈவதும், விருந்தினரை உபசரிப்பதும் தொடர்ந்து தினந்தோறும் நடைபெற்றது என்பதும் சிந்திக்கத் தக்கவை.

பெண்களுக்குக் கல்வியும், செல்வத்தின்மேல் அதிகாரமும் இருந்தது என்பதனை உறுதிபட எடுத்துச் சொல்கிறது கவியின் வாக்கு. ‘பிறை நுதலார்க்கு எலாம் என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டிருப்பதால், இது எல்லாப் பெண்களுக்கும் பொதுவாக நிலவிவந்த ஒன்று என்பதும் தெளிவாகிறது. இடைக்காலத்தில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், கம்பனை ஆழ்ந்து கற்ற பாரதி, பெண்களுக்குக் கல்வியும் சொத்தில் பங்கும் இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினான் என்றால், அவனுக்கு ஆதார காரணன் கம்பன் என்பது வெளிப்படை.

இனி, ஈகை என்பது ஏதும் அற்ற, வறுமையின் காரணமாகப் பிறருடைய உதவியை நாடுகிற மக்களுக்கு அளிப்பதை மட்டுமே குறிக்கும். வறியார்க்கொன் றீவதே ஈகை என்றார் வள்ளுவரும். விருந்து என்பதோ, அவ்வாறு அன்று. விருந்து என்ற சொல்லுக்கே புதிய, அறிமுகமற்றஎன்பதே முதற் பொருள். உணவு விடுதிகள் இல்லாத காலமாதலால், நெடும்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்கள் இல்லத்தின் திண்ணையில் களைத்து அமர்வார்களானால் அவர்களை வரவேற்று உபசரித்து உணவளித்துப் போற்றுதலே விருந்துபசாரம் எனப்படுகிறது. இதனைத்தான் செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் குறள் பேசுகிறது.

பெண்களுக்குக் கல்வியும் செல்வத்தின்மேல் நிலைத்த உரிமையும் ஏற்பட்டால் நாட்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதன் மிகச்சிறிய சித்திரத்தைத் தீட்டியிருக்கிறான். ஆயினும், ஒன்று மறுபடியும் உறுதிப்படுகிறது. இந்த நாட்டில் பெண்களுக்குக் கல்வியறிவும், செல்வத்தின் மீது உரிமையும் மறுக்கப்பட்டிருந்தன என்ற கூற்றை மேற்கண்ட வாக்கு பொய்யாக்குகிறது.

Translation: All the ladies, with foreheads resembling the crescent moon, were well-educated and they had rights over the wealth (of their household). And it is because of this fact, giving alms and hosting aditis (guest unknown) was an everyday happening. What else could take place (when women are educated and have rights and access to wealth)!

Elucidation: That provides a very important, an irrefutable evidence—if evidence were neded!—that our womenfolk of yore were ALL (note the word ‘elaarkkum’ used by the poet, which means, ‘to everyone’) were educated and that they had their share, rights and access to wealth. He qualifies the word ‘selvam’ with the adjective ‘porundhu’. The Online Tamil Lexicon defines the word (inter alia) as “to succeed; to come to a prosperous issue”. That adjective confirms that women had a right over property, and did succeed to their share, as a matter of course.

Not just that. This verse drives the last nail on the coffin of the ageold indoctrination that the Indian women of ‘those days’ were illiterate and had no say whatsoever over matters of property. That said, and reconciling to the situation that prevailed in the past three to five hundred years, one is reminded of Bharati who was one among the frontline torchbeares who was tirelessly writing on the importance of empowering women with education and rights to property. Obviously, Bharati who had mastered Kamba Ramayana in his early teens, was inspired by Kamban, the role of Sister Nivedita not to be overlooked though, in this direction.

To the non-Tamil reader the allusion ‘crescent like forehead’ may sound somewhat strange. It is a traditional expression, that is part of a total imagery where the thick locks of hair are likened to dark clouds, forehead to the cresent (face to full moon) surrounded by ‘clouds’.

அன்ன சாலைகள்

பிறைமுகத் தலை பெட்பின் இரும்பு போழ்,

குறைகறித் திரள் குப்பை, பருப்பொடு,

நிறைவெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,

உறைவ கோட்டமில் ஊட்டிடம் தோறுமே. 37

சொற்பொருள்: பிறைமுகத் தலை இரும்பு பிறை நிலவைப் போல வளைந்த அரிவாள். கறி வெட்டப்பட்ட துண்டு. துண்டுதுண்டாக வெட்டப்படுவன அனைத்துமே கறிதான்காய்களாக இருப்பினும் சரி; புலாலாக இருப்பினும் சரி. ‘கறிக்கப்பட்டது கறி. குப்பை குவியல். கோட்டம் வஞ்சனை; கோணல். ஊட்டிடம் ஊட்டும் இடம், அன்ன சாலை.

வந்த எல்லோருக்கும் வேற்றுமையின்றி ஒன்றேபோல் உணவளித்துப் போற்றவேண்டும் என்ற நினைவோடு செயல்படும், வஞ்சனை இல்லாத, அன்னசாலைகளைச் சுற்றிலும் வளைந்த அரிவாளால் (வருபவருக்கு விருந்திட வேண்டும் என்ற) விருப்பத்துடன் அரிந்து துண்டாக்கப்பட்ட காய்கறிகளும், பருப்புவகைகளும், முத்துகளைப் போன்ற அரிசியும் குவியல் குவியலாகக் கிடக்கும்.

Translation: Dharmashalas (choultries or inns) that fed a large number of pilgrims and others on the move, as also the poor and the needy, and that served one and all alike, were a beehive of activity. All that one could see in every inn was heaps of white-as-pearl rice, sliced pieces of vegetables and pulses.

Elucidation:–

மக்களின் நலன் சுரக்கும் இடங்கள் Spots from where welfare sprouted

கலம் சுரக்கும், நிதியம் கணக்குஇலா;

நிலம் சுரக்கும், நிறைவளம்; நல்மணி

பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரியதம்

குலம் சுரக்கும், ஒழுக்கம் குடிக்குஎலாம். 38

சொற்பொருள்: சுரத்தல் ஊறுதல்; இடைவிடாது அளித்தல். பிலம் தரையில் அமைந்திருக்கும் நீண்ட குகைகள் என்று சொல்வது வழக்கம். என்றபோதிலும், ‘நல்மணி பிலம்சுரக்கும்‘ விலைமதிப்புள்ள மணிக்கற்கள் பிலங்களில் கிடைக்கும் என்பதை நோக்கும்போது, இது சுரங்கங்களைக் குறிக்கிறது என்று பொருள்காண இடமிருக்கிறது.

அந்நாட்டின் குடிமக்களுக்கு அளவில்லாத, கணக்கில் அடங்காத, நிதியைக் கப்பல்கள் சுரந்தன (அவர்களுடைய கடல் வாணிகம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது). நிலம் வளம் நிறைந்ததாக இருந்து பெரிய அளவில் விளைச்சலைத் தந்தது. மக்களிடையே நிலவி வந்ததான ஒழுக்கநெறி எங்கிருந்து சுரந்ததோ என்றால், அது அவரவர் குலத்தினின்றும். நல்லொழுக்த்தில் நிலைத்து நி்ற்கும் தொடர்ச்சியான தலைமுறைகள் தோன்றிய, கிடைப்பதற்கு அரிதான குலங்களில் பிறப்பது அந்த நாட்டு மக்கள் எல்லோருக்குமே கிடைத்திருந்தது.

கடல் வாணிகத்தால் நிதி கிடைத்தது; நிலத்திலிருந்து நல்ல விளைச்சல் கிடைத்தது; சுரங்கங்களிலிருந்து வைர வைடூரியங்கள் கிடைத்தன. மக்கள் எல்லோரும் ஒன்றுபோல ஒழுக்கநெறியில் நிலைத்தவர்களாக இருக்கிறார்களே, இது இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்றால், ‘கிடைப்பதற்கு அரிதான அவர்களுடைய குலத்திலிருந்து‘ என்று முடிக்கிறான் கவி. தலைமுறை தலைமுறையாக நாட்டு மக்கள் அனைவரும் நல்லொழுக்கத்தில் நிலைத்தவர்கள் என்பது குறிப்பு.

Translation: Ships yielded loads of wealth (overseas trade was flourishing); land yielded bountiful (agrarian) produce; mines yielded rich and rare diamonds. What yield this conduct, this rectitude, this uprightness that prevails among people! It is their rare lienage.

Elucidation: If people obtained wealth from trade, produce from land and gems from mines, they obtained their good conduct from their ancestors. It is an unbroken line of virtuous ancestors, which is not easy to see everywhere, that every citizen belonged. People of Kosala were leading a life of virtue for generations together.

இல்லாதவை What people lacked

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;

சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;

ஆற்ற நல்அறம் அல்லது இலாமையால்,

ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே. 39

சொற்பொருள்: கூற்றம் அகால மரணம். (காலத்தினால், அல்லது, வயது முதிர்ந்ததன்பின் வருபவன் காலன்; குற்றங்கள் மிகுவதனால் வருவது கூற்றம்.)

அந்த நாட்டில் குற்றம் ஏதும் நடைபெறாத காரணத்தால் கூற்றம் வருவதில்லை. மக்கள் வயது முதிர்வதற்கு முன்னால் மரிப்பதாகிய அகால மரணம் நிகழ்வதில்லை. மக்களுடைய சிந்தை எப்போதும் செம்மையாக இருக்கின்ற காரணத்தால் அவர்களிடத்தில் சினம் தோன்றுவதில்லை. செய்வதற்கு நற்செயல்களைத் தவிர மற்ற எந்தச் செயல்களும் இல்லை. ஆகவே, அங்கே ஏற்றம் மட்டுமே காணப்படுகிறதே அன்றி தீநெறி இல்லவே இல்லை.

இல்லாமையைப் பாடும் இந்த உத்தியை வால்மீகியடமிருந்தே கம்பன் எடுத்து ஆண்டிருக்கிறான். வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், சர்க்கம் 6 அயோத்தி மக்களைப் பற்றிப் பேசுகையில், அங்கே மக்களிடத்தில் இல்லாதவை என்று கவி ஒரு பட்டியல் தருகிறார். ந அல்ப ஸந்நிச்சய: கஸ்சிதாசித் தஸ்மின் புரோத்தமே (ஸ்லோகம் 6) என்று தொடங்கி, அங்குள்ள இல்லாமைகளை 12ம் ஸ்லோகம் வரையில் சொல்கிறார். ‘குறைந்த நிதியம் படைத்தவர் யாரும் இல்லை; சொந்த உழைப்பில் பெறாத செல்வத்தையோ, பசுக்களையோ, குதிரைகளையோ, பணத்தையோ, தானியங்களையோ வைத்திருக்கும் இல்லறத்தார் யாரும் இல்லைஎன்று தொடங்கும் இந்த வருணனையின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கம்பன் பெரிதும் அப்படியே எடுத்தாண்டிருப்பது நோக்கத்தக்கது.

Translation: (In that country of Ayodhya) There is no premature death, because there is no lawlessness (the State is well administered). There is no show of anger because all the people are firm in their pursuit of rectitude. There is no deed other than good ones to perform (for the people).

Elucidation: Even to this day we see failure of administration where premature deaths occur. In a well-administered State, people lead a physically and mentally healthy life. A testimony to the King, indeed.

Kamban has adopted the style, and to an extent content, of a parallel scene (Balakanda, Canto 6) where Valmiki employs the same technique ‘praising the absent’ in 7 Slokas, commencing from

na alpa sa.nnichayaH kashchid aasiit tasmin purottame |
kuTu.mbii yo hi asiddharthaH agavaa ashva dhana dhaanyavaan ||

(Sloka 6)

Kamban has followed Valmiki in style and content, here and in the following few verses.

கடந்ததும் அழிந்ததும் எவை That which went out of bounds

நெறி கடந்து பரந்தன, நீத்தமே;

குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;

சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;

வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே. 40

சொற்பொருள்: நீத்தம் – வெள்ளம். குறி – வடிவம், தன்மை. வெறிய – நறுமணம் வீசுபவை (அல்லது) வெறிகொண்டவை.

அங்கே அளவுகடந்து பொங்கியது வெள்ளம் மட்டும்தான். மக்கள் எல்லோரும் அவரவர் அளவு அறிந்து அதற்குள் நிற்பவராய் இருந்தனர். தங்களுடைய வடிவத்தையும் தன்மையையும் இழந்தவை மங்கையருடைய தோள்களில் தீற்றப்பட்டிருந்த குங்குமக் குழம்பு மட்டும்தான். (கணவனுடன் நிகழும் கலவியால் குங்கும, சந்தனக் குழம்புகள் நிலைகெடும்; அழியும்.) மற்ற எல்லாம் தத்தம் தன்மை கெடாமல், அழியாமல் நின்றன. சிறியது என்று ஏதேனும் உண்டென்றால் அது நங்கையிரின் இடை மட்டும்தான். மற்ற எங்கேயும் சிறுமை என்பதே இருக்கவில்லை. வெறி (மணம்) கொண்டது ஏதேனும் உண்டு என்றால் அது பெண்களுடைய மலர் சூடிய கூந்தல்தான். மற்ற எங்கிலும் வெறி (அடங்காமல் பொங்கும் உணர்ச்சிகள்) என்பது காணப்படவில்லை.

Translation: That which crossed the bounds was nothing but the floods. Everything else stayed within limits. That which got spoilt was none other than the paste of red turmeric powder, that the women had smeared on their shoulders. (Denoting the moments of intimacy); every other (product and people) remained in tact, unspoiled and unblemished. Slender was only the waists of women. Nothing other than that (from resources to attitude) was slender, thin and found in want.

Elucidation:–

முந்தைய பகுதி

அடுத்த பகுதி

2 Replies to “கம்பராமாயணம் 11 (Kamba Ramayanam – 11)”

  1. ஒரு நாடு என்றால் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை கம்பர் நினைக்கிறார். தங்களோ மிக அழகாக எடுத்துக் காட்டிவிட்டீர்கல்
    . நன்றி உங்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறது. தங்கள் பணி தொடரட்டும்
    -ம.ச.அமர்நாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *