கம்பராமாயணம் – 8 (Kamba Ramayana – 8)

நாட்டுப் படலம் (21-25) Canto of the Country (21-25)

மள்ளர் எடுக்கும் விளைபொருள் The produce collected by MaLLars

கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,
மதுவளம் மலரில்கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார். 21

சுரைக்கொடிசொற்பொருள்: கடி – நறுமணம்; முதிரை – பயறு வகைகள்; புறவு – புன்செய் நிலம்; பதிபடு – வீட்டிலேயே (கொல்லைப் புறத்தில்) இருக்கும்; படி – நிலம்.

நன்செய் வயலில் கதிர்விட்டு நிற்கும் பயிர்களில் இருக்கும் தானியங்களையும்; மணம் மிகுந்த பொய்கைகளில் பூத்து நிற்கும் மலர்களையும்; மரங்களிலேயே முதிர்ந்து நிற்கும் கனி வகைகளையும்; புன்செய் நிலத்தில் விளையும் பயறு வகைகளையும்; வீட்டில் கொல்லையில் உள்ள கொடிகளில் காய்த்த(பூசணி, பீர்க்கு முதலிய)வற்றையும்; நிலத்தில் குழிகளில் விளையும் (இஞ்சி, சேம்பு போன்ற) கிழங்குகளையும், ஒவ்வொரு மலராகச் சென்று எடுத்துக் கொள்ளும் தேனீக்களைப் போல, மள்ளர்கள் ஆங்காங்கே சென்று சேகரித்து வருவர்.

Translation: Verily like a bee that goes from flower to flower in order to collect honey, the Mallars (agricultural community) go from place to place to collect their produce: to wetlands where they collect paddy from ripe plants, to fragrant pools to collect flowers, to forests to collect ripe fruits from trees, to dryland to collect pulses from leguminous plants; to their own backyard to collect vegetables (like ash gourd and bottle gourd) from creepers; to dig out tubers (like ginger and colacasia.

Elucidation: A bee travels several miles a day to collect the nectar. So also, farmers travel to different types of land to collect a variety of produce.

விருந்துண்ணலும் அளித்தலும் Feasting and hosting

முந்து முக்கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின்,
செந்தயிர்க் கண்டம், கண்டம், இடைஇடை செறிந்த சோற்றின்,
தம்தம் இல் இருந்து, தாமும், விருந்தோடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி அயிலுறும் அமலைத்து எங்கும். 22

சொற்பொருள்: தமர் – தம்முடையவர், உறவினர்; அயிலுறும் – உண்ணுகின்ற; அமலை – ஆரவாரம், பேரொலி;

மா, பலா, வாழை என்ற முக்கனிகள், பல்வகைப் பயறுகள் (அவற்றிலிருந்து பெறப்படும் பருப்பு வகைகள்), முழுமையான நெய், கட்டித் தயிர், கண்ட சர்க்கரை ஆகியவை விரவிய சோற்றினை, விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து, தாம் தமது குடும்பத்தாரோடும், விருந்தினரோடும் அருந்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் அந்தணர்களுக்கும் உணவு வழங்குவதால் ஏற்படும் பேரொலி கோசல நாடெங்கும் கேட்டுக் கொண்டிருக்கும்.

Translation: Farmers in their own residences feast on rice that is mixed with three major fruits (mango, jack and plantain), a variety of pulses, wholesome ghee (clarified butter), well-set curds and jaggery (brown sugar). They feast, with their own family and kinsmen. They also offer feast to Brahmins. The country of Kosala is full of this noise of feasting everywhere.

Elucidation: The brahmins of yore were prescribed a life poverty and penance in order that they spend all their time seeking the Eternal Truth. Though, generally, begging was looked down upon by the Sastras, it was allowed for brahmins and sanyasis. The six tasks assigned to a brahmin: learning/chanting Vedas, teaching, accepting alms, giving alms, performing Yagnas and enabling others to perform Yagnas. And hence it was enjoined upon the rest of the society which was allowed to earn and save, to provide for the brahmins.

செல்வச் செழிப்பு Opulence

பருவ மங்கையர் பங்கய வாள்முகத்து
உருவ உண் கணை, ‘ஒண் பெடை ஆம்’ எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ. 23

சொற்பொருள்: வாள்முகம் – ஒளிபொருந்திய முகம்; உருவ – வடிவான; உண்கண் – மை தீட்டிய கண்; பெடை – பெண்வண்டு; அரோ – அசைச்சொல்.

இளம்பெண்களின் ஒளிபொருந்திய முகத்தில் அமைந்துள்ள வடிவான, மையிட்ட கண்ணை நோக்கி, ‘இது ஒளிமிக்க பெண்வண்டு’ என்று நினைத்த வண்டுகள், அதன்மீது மையலும் அன்பும் கொண்டு, மருதநிலப் பகுதியிலேயே தங்கிவிட்டன.

Translation: Black beetles mistaking the eye (in the radiant face) of a maiden, beautified with collyrium, for their mates and, with love and passion, settle in the agricultural lands for good.

Elucidation: A black beetle is fairly large sized and has a shiny black exterior. Hence the comparison to the large, collyriumed eye of a maiden.

வேளை வென்ற முகத்தியர் வெம்முலை
ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர் பால்;
பாளை தந்த மதுப் பருகி பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம். 24

சொற்பொருள்: வேள் – காமவேள், மன்மதன்; வாளை – ஒருவகை மீன்.

காமனையும் வெல்லும் அழகிய முகமுடைய மங்கையர், ஒருபுறம் பணியாளர்களைக் கோபத்துடன் (தமது முலைகள் வெப்பமேற) விரட்டி வேலைவாங்குவர். சுற்றி எல்லாப் புறங்களிலும், பாளையிலிருந்து வடியும் மதுவை உண்டு கொழுத்த வாளை மீன்கள் மதர்த்துத் திரியும்.

Translation: Maiden, who with their pretty faces could have won over even the cupid himself, (with their breasts steaming) drive hard the work force with angry words. Stout scabbard fish, drunk with toddy dripping from palm trees, flourish all around.

ஈரநீர் படிந்து, இந்நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட; மென்முலை
தாரைகொள்ள, தழைப்பன சாலியே. 25

சொற்பொருள்: கார் – கருமேகம்; மேதி – எருமை; தாரை கொள்ள – பால் பீய்ச்சி அடிக்க; சாலி – நெற்பயிர்.

நிலத்தின் மீது இறங்கி வந்துவிட்ட சில கருமேகங்களைப் போல ஈர உடலோடு எருமைகள் நடந்துவரும். அவை, தாம் ஊருக்குள் விட்டு வந்துவிட்ட தமது கன்றுக்குட்டிகளை நினைத்துக்கொள்வதால் அவற்றின் மடியிலிருந்து வயலில் பீய்ச்சியடிக்கும் பாலின் காரணமாக நெற்பயிர் செழித்து வளரும்.

Translation: Like some stray clouds that have descended on the earth, wet buffaloes walk around. While they think of their young ones left behind in the homestead, milk seeps from their udders irrigating the lush paddy fields.

Elucidation: The bufflaoes are like clouds walking upon the earth, while their spontaneously seeping milk is like the rains that feed the paddy crop.

முந்தைய பகுதி… அடுத்த பகுதி…

One Reply to “கம்பராமாயணம் – 8 (Kamba Ramayana – 8)”

  1. நாட்டு வளம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கற்பனை மிக அபாரம. அதை தாங்கள் விளக்கி இருக்கும் விதமும் ஆங்கில மொழிபெயர்ப்பும் மிகமிக அற்புதம். படித்தேன். சுவைத்தேன். தேன் போல இனிக்கிறது. ஆனால் தெவிட்டவில்லை.
    தமிழ் கூறும் நல்உலகத்திற்கு தாங்கள் பணி ஒரு கலங்கரைவிளக்கம். தங்களை கரம் கூப்பி வணங்குகிறேன்.
    ம.ச.அமர்நாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *