கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)

நாட்டுப் படலம் (56-61) Canto of the Country (56-61)

விழாவும் வேள்வியும் – Festivities and Sacrifices

கூறு பாடலும், குழலின் பாடலும்,

வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,

ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்என,

சாறும் வேள்வியும் தலைமயங்குமே. 56

சொற்பொருள்: கூறு பாடல் மிடற்றுக் கருவியால் இசைக்கப்படும் பாடல். மிடறு என்றால் தொண்டை என்று பொருள்படும். ஆகவே இங்கே சொல்லப்படுவது வாய்ப் பாட்டு. சாறு திருவிழா

மக்கள் பாடும் வாய்ப்பாட்டு இசையும், புல்லாங்குழலில் இசைக்கப்படும் இசையும் தனித்தனியாக ஒலிக்கும் வீதிகளில், திருவிழாவுக்காக வருகின்ற மக்கள் வெள்ளமும், வேள்விகளில் பங்கேற்க வரும் மக்களின் வெள்ளமும், ‘நதியும் நதியும் கலந்தது என்று சொல்வதைப் போல ஒன்று கலக்கும்.

ஒருபுறம் வாய்ப்பாட்டும் இன்னொரு புறம் குழலிசையும் ஒரே சமயத்தில் ஒலித்தாலும், இரண்டும் தனித்தனியாக அடையாளம் காணப்படுவதைப் போல, நதியோடு நதி கலப்பதை ஒத்துக் கலக்கும் மக்கள் வெள்ளம், திருவிழாக் கூட்டம் எது, வேள்வியில் பங்குபெறும் குழு எது என்பதை அடையாளம் காணும்விதமாகவே கலந்திருந்தது என்று உவமையின் மூலம் உணரலாம்.

Translation: In the streets over which separate strains of vocal music and that of the flute wafted across, crowds that gathered to witness festivities and the masses that came to partake in sacrifices confluenced, like one river mixing with the other.

Elucidation: Music, instrumental and vocal, issuing forth from different houses filled the air on the streets. Though they both were heard and suffused the atmosphere at the same time, they were distinct and different. Men, gathering for two different occasions moved about on the very same streets like the different strains of music, confluencing in one stream, and at the same time different and distinct by their purpose.

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்

தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை

வீக்கின் தாக்குறும் விளியும், மள்ளர்தம்

வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே. 57

சொற்பொருள்: மூக்கில் மூச்சுக் காற்றினால். மூரி வலிய. நந்து சங்கு. தாக்கின் மேளங்களை அடிக்கும் குச்சி, குணில். தண்ணுமை மிருதங்கத்தைப் போன்ற, கைகளால் வாசிக்கப்படும் தோற் கருவிகள். மள்ளர் உழவர்கள்.

மூச்சுக் காற்றைச் செலுத்தி (பேரொலியுடன்) ஊதப்படும் சங்கின் ஒலியும், மேளக் குச்சிகளைக் கொண்டு அடிக்கப்படும் பறைபோன்ற தோற்கருவிகளின் ஒலியும், கைகளால் தட்டப்பட்டு வாசிக்கப்படும் தோற்கருவிகளின் ஒலியும், எல்லாமும், உழவர்கள் தங்களுடைய மாடுகளை நிலத்தில் (உழுவதற்காக) விரட்டி அதட்டும் ஓசையில் அடங்கிவிடுகின்றன.

இவ்வளவு ஓசையையும் ‘ஹேய்‘ என்று எழுப்பப்படும் ஒலியில் ஒடுங்கி ஒலி்க்கிறது என்பதன் மூலம், உழுதொழிலில் ஈடுபட்டுள்ள உழவர்களின் எண்ணிக்கை சுட்டப்படுகிறது.

Translation: The blaring noise of conch-shells blown, with men holding their breath hard; the rhythmic beats on drums—the tabour—beaten with drumsticks, and those percussion instruments played on with fingers, (all of them put together) were silenced by noise of ploughmen shooing the bulls on the fileds, to quicken the movement of the ploughshare on the land.

Elucidation: If this simple noise could outshout the collective resonance of the wind and percussion instruments, think of the number of ploughmen engaged in their work.

குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்

தாலி ஐம்படை தழுவு மார்பிடை

மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்

பாலின் ஊட்டுவார் செங்கை, பங்கயம்

வால்நிலா உறக் குவிவ மானுமே. 58

சொற்பொருள்: ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் சங்கிலி அல்லது கயிறு. திருமாலின் ஐந்து படைகளையும் பொன்னால் செய்து, கோத்து, கழுத்தில் அணிவிக்கப்படுவது. வால் வெள்ளை. வால்நிலா அல்லது வானிலா என்றால் வெண்ணிலவு. (வானிலா என்பது வால்நிலா என்று பிரியும்.)

திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி – கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் பால்சோற்றை ஊட்டக் குவிகின்ற இளம் தாய்மார்களின் கைகள், வானத்தில் வெண்ணிலா வந்ததும் குவிகின்ற தாமரைப் பூக்களைப் போலக் குவிந்து காணப்படும்.

Translation: Babies had the protective chain with pendants of ‘panchayudha’ hanging from. Young mothers fed them with rice soaked in milk. When they did so, their fingers closed in with rice in hand, resembling the petals of lotus that close with the rising of moon in the skies.

Elucidation: People used to adorn their children with a chain onto which was attached the five weapons of Lord Vishnu, namely, Sudharsana (the Chakra), Panchajanya (the Conch), Koumodhaki (the Mace), Sarnga (the Bow) and Nandhaka (the Sword), in gold. This ‘thaali’ is a trusted protection, a ward-off of all that is evil.

மக்களின் ஒழுக்கத்தால் அறம் நிலைபெறுதல்

பொற்பின் நின்றன, பொலிவு; பொய்இலா

நிற்பின், நின்றன, நீதி; மாதரார்

அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர்

கற்பின் நின்றன, கால மாரியே. 59

சொற்பொருள்: பொற்பு நற்பண்பு. அற்பு அன்பு (வலித்தல் விகாரம்).

மக்களுடைய உயர்ந்த நற்பண்புகளின் காரணமாக அவர்களுடைய தோற்றப் பொலிவு உயர்வானதாக இருந்தது. ஒருநாளும் பொய் பேசாத அவர்களுடைய நிலைப்பாட்டின் உறுதியால் நீதி நிலைத்து விளங்கியது. பெண்களுடைய அன்பு பெருகுவதன் காரணமாக, அறங்கள் தழைத்து ஓங்கின. அவர்களுடைய கற்பின் தன்மையால் பருவமழை தவறாது பெய்தது.

Translation: The beauty of appearance stemmed from people’s inner-grace, excellence. Their steadfast adherence to Truthfulness was the element that supported Justice. And from the love abundant of their women did all Dharma flourish, and it was their unfailing loyalty that brought about the seasonal rains, without fail.

Elucidation:–

சோலை மாநிலம் துருவி, யாவரே

வேலை கண்டுதாம் மீள வல்லவர்?

சாலும் வார்புனல் சரயு வும்,பல

காலின் ஓடியும் கண்டது இல்லையே! 60

சொற்பொருள்: துருவி தேடி. வேலை எல்லை. கால் கிளைகள்

ஏராளமான சோலைகளால் சூழப்பட்ட, மிகப்பெரியதான அந்த நாட்டின் எல்லைகள் எங்கே இருக்கின்றன என்று யாரால்தான் தேடிக் கண்டு அறிய முடியும்! மிகுந்த நீர்ப்பெருக்கை உடைய சரயு நதிகூட, எத்தனையோ கிளைநதிகளாகப் பிரிந்து ஓடியபோதிலும் அந்த நாட்டின் எல்லை எதுவென்று அறிந்தது இல்லையே!

அவ்வளவு கால்களை உடைய சரயுவால் அடைய முடியாத எல்லையை, இரண்டு கால்களால் அளந்து அறிந்துவிட முடியுமா என்ற மெல்லிய சிலேடையும் அமைந்துள்ளது.

Translation: Who is there that can ever find or identify the frontiers of that vast country, surrounded by lush growth of greenery! Even the very Sarayu river, branching off into so many rivulets is unable to reach the end of this land!

Elucidation:

வீடு சேர,நீர் வேலை,கால் மடுத்து

ஊடு பேரினும், உலைவுஇலா நலம்

கூடு கோசலம் என்னும் கோது இலா

நாடு கூறினாம்; நகரம் கூறுவாம். 61

சொற்பொருள்: வீடு – பூமி. வேலை – கடல். கால் – காற்று. உலைவு – அழிவு. கோது – குற்றம்.

கடுமையான காற்றால் மோதுண்டு, பூமி முழுவதையும் அழித்துவிடுதைப் போல் கடல் பொங்கி, நிலப்பரப்பின் ஊடெல்லாம் பரவினாலும் அழியாமல் நிற்கக்கூடியதாகிய, குற்றமற்ற கோசலம் என்ற நாட்டைப் பற்றி இதுவரை சொன்னேன். இனி நகரத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

Translation: I sung thus far of the country unstained, which would remain well protected and untouched even on that day when the very oceans, whipped by violent winds, cross the shores and spread all over the globe, destroying all over. (Kosala would remain protected even on the day of deluge.) Now let me tell you about the city.

Elucidation:–

நாட்டுப் படலம் நிறைவுற்றது – End of Canto of the Country

முந்தைய பகுதி

அடுத்த பகுதி

4 Replies to “கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)”

  1. அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பு. கம்பரின் சோழநாட்டுப் பற்றும் இந்தப் பாடல்களின் மூலம் நன்கு விளங்குகின்றது. அறியத் தந்தமைக்கு நன்றி. திருமதி சீதாலட்சுமி அம்மாவின் மூலம் உங்கள் எழுத்து பற்றி அறிய முடிந்தது. அவர்களுக்கு நீங்கள் இப்போது மீண்டும் எழுதுவது தெரியாது என நினைக்கின்றேன். அவர்களுக்கும் தெரியப் படுத்துகின்றேன்.

  2. நன்றி திருமதி கீதா சாம்பசிவம். திருமதி சீதாலட்சுமி அம்மையார் இதற்கு முன்னால் நான் சென்னைஆன்லைனில் எழுதியபோது படித்துக் கொண்டிருந்தார்களோ?

  3. ஆம், சென்னை ஆன்லைனில் தான் படித்ததாய்ச் சொல்லி இருக்கின்றார்கள். மிகவும் பெருமையாகவும், சந்தோஷத்துடனும் சொல்லுவார்கள், பாதியில் நின்று போனதைக் குறிந்து வருந்தவும் வருந்தினார்கள். தற்சமயம் இந்தியாவில் இருக்கின்றார்களா, யு.எஸ். சென்றுவிட்டார்களா தெரியவில்லை. மெயில் கொடுத்திருக்கேன், பார்க்கச் சொல்லி.

  4. மிக அருமையான வர்ணனை. நாட்டுவளம் எப்படி இருந்தது – சிறார்களுக்கு உணவு ஊட்டும் போது பெண்களின் கை குவிவதை கம்பர் கூறிய அளவு சிறிதும் குறைவு படாமல் தாங்கள் விளக்கி இருக்கிறீர்கள். ஆங்கில மொழிபெயப்பும் மிக அருமை. அமெரிக்காவில் நான் தமிழ் அறியாத என் நண்பர்களுக்கு படித்துக் கட்டினேன். சொல் வளம் பற்றி அவர்களுக்கு புரியாவிட்டாலும் சொல் அதிர்வை மிகவும் ரசித்தார்கள். கருத்தை மிகமிக ரசித்தார்கள். மிக்க நன்றி. – ம. ச. அமர்நாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *